ரக்பர் கான் தந்தை சுலைமானின் கைகளை என் கைகளில் நீண்ட நேரம் பிடித்திருந்தேன். அவரது முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. அவரது கண்கள் அடிக்கடி குளமாயின. கானின் விதவை மனைவி அருகில், கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். கடுமையான வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் அவர் தலையில் சிவப்பு துப்பாட்டாவைச் சுற்றியிருந்தார். அவரைச் சுற்றி நின்றிருந்த கிராமப் பெண்கள், அக்கறை மிகுந்த குரலில் கிசுகிசுத்தனர். “வேதனையில் இவளுக்குப் பித்துப் பிடித்துவிட்டது” என்றார் ஒருவர். “திடீரென எழுந்து நின்று சிரிக்கிறாள்”. சற்று முன்னர் அவர் பேசியபோது இப்போதுதான் முதல் வார்த்தையைப் பேசியுள்ள கடைசிப் பையன் உள்ளிட்ட ஏழு பிள்ளைகளைத் தனியே வளர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகப் புலம்பியிருந்தார். பெரும்பாலும் பழுப்பு நிறக் கண்களைக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகள் எங்களையும், அவர்கள் வீட்டுக்கு வெளியே கூடியிருந்த கிராமத்தினரையும் புதிராகவும் சற்றே பதற்றத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் தந்தை கொல்லப்பட்டது ஏன் என்றோ அல்லது ஏன் இத்தனை பேர் அங்கு கூடியிருக்கின்றனர் என்றோ அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவரது கிராமமான ஹரியானாவின் நூ மாவட்டத்தில் உள்ள அவரது கோல்கோன் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில், ஜூலை 21ஆம் தேதி இரவு, எழுதப் படிக்கத் தெரியாத ஏழை விவசாயியான, 28 வயதான ரக்பர் கான் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான சூழ்நிலை குறித்து சில விஷயங்கள் தெளிவாகியுள்ளன. மற்ற தகவல்கள் இன்னும் சர்ச்சைக்குரியவையாக இருக்கின்றன அல்லது திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. ரக்பர் கான், தனது நண்பர் அஸ்லம் கானுடன், இருளான சூழலில், ராஜஸ்தானில் வாங்கிய இரண்டு கறவைப் பசு மாடுகளை ஓட்டியபடி கால்நடையாக வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, பசுப் பாதுகாவலர்கள் (கோ ரக்ஷா) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுபவர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது, சர்ச்சைக்கு இடமில்லாமல் தெளிவாகும் தகவலாக இருக்கிறது. அஸ்லம் கான் எப்படியோ தப்பிவிட்டார். ஆனால், பாவம் ரக்பர் கான் சிக்கிக்கொண்டார்.
பதின் பருவத்தில் ரக்பர் கான், ஆரவல்லி மலையைச் சுற்றியுள்ள மணல் மற்றும் கல் குவாரிகளில் வேலை பார்த்திருக்கிறார். சுரங்கப் பணிகள் நிறுத்தப்பட்ட பிறகு, அவர் தன் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரே தொழிலான பால் விற்பனையில் இறங்கினார். இடையிடையே விவசாயக் கூலி வேலை செய்துவந்தார். அவருடைய சிறிய வீட்டிற்கு வெளியே இரண்டு கறவைப் பசுக்கள் கட்டப்பட்டுள்ளன. அவரது தந்தைக்கு வயதாகிவிட்டது, ரக்பர் கானால் தனது பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்காக மாதம் ரூ.5,000 கொண்டுவர முடிந்தது. குடும்ப வருமானத்தை அதிகரிக்க ஒரே வழி மேலும் இரண்டு கறவைப் பசு மாடுகளை வாங்குவதுதான் என அவர் நினைத்தார். உள்ளூரில் இவை மணமான பசுக்கள் (பியாஹி பசுக்கள்) எனச் சொல்லப்படுகின்றன. அவரது மாமனார் பசுக்கள் வாங்க ரூ.50,000 கடன் அளித்திருந்தார். இந்த மாடுகள் தன் வாழ்க்கையை மாற்றும் என ரக்பர் கான் நினைத்தார். ஆனால் நடந்தது என்ன என்றால், இன்று நூ மாவட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிம் விவசாயியும் நினைத்து நடுங்கிக்கொண்டிருப்பதுதான்.
நாட்டில் தற்போதைய ஆட்சிகளின் கீழ், ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவி\ல், பசுக்களை வாங்கி அழைத்துச்செல்வது என்பது மிகவும் ஆபத்தான செயல் என்பதை அவர்களில் ஒவ்வொருவரும் அறிந்திருக்கின்றனர். கடந்த கோடையில் பேலு கன்வாஸ், பியாஹி பசுக்கள், கன்றுகளை வாங்கி, ஒரு டிரக்கில் ஏற்றி வந்ததற்காக அடித்துக் கொல்லப்பட்டதிலிருந்து, விவசாயிகள் பசுக்களுடன் தாங்கள் காணப்படும் அபாயத்தை நினைத்து நடுங்குகின்றனர். இப்போது எருமை மாடுகளுடன் நிற்கக்கூட அஞ்சுகின்றனர். பசுவதையைத்தான் சட்டம் தடை செய்கிறது, பசுக்களைக் கறவைக்காகக் கொண்டுசெல்வதை அல்ல. ஆனால், ஆவேசமான கூட்டத்திற்கு இதை எடுத்துச்சொல்வது யார்? ஏன், மாநில உள்துறை அமைச்சர் அல்லது காவல் துறை அதிகாரிகளுக்குக்கூட இதை யார் எடுத்துச்சொல்வது. இவர்கள் இன்னமும் பேலு கான், ரக்பர் கானை, பசு கடத்தல்காரர்கள் எனக் கூறிவருகின்றனர். இதன் மூலம் கும்பலின் வன்முறைச் செயலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆளும் கட்சி மற்றும் காவல் துறையால் வெளிப்படையாக ஆதரிக்கப்படும் பசுப் பாதுகாப்புக் குழுக்கள் கோலோச்சுகின்றன. பசு மாடுகளைக் கொண்டுசெல்பவர்கள் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் இலக்காவது வழக்கமாகியிருக்கிறது. ஹரியானா காவல் துறை, சீருடை அணிந்தவர்களைக் கொண்ட பசுப் பாதுகாப்புப் படையை அமைத்து, பசுப் பாதுகாப்பிற்கு அதிகார அந்தஸ்து அளிக்கும் செயல் இதை இன்னும் மோசமாக்கியிருக்கிறது. விவசாயிகள் நினைத்து நடுங்கும் பசுப் பாதுகாப்புக் காவல் நிலையங்கள்கூட இருக்கின்றன.
பசு மாடு வாங்கும் சிக்கலில் இறங்குவதற்கு முன் ரக்பர் கான் இந்த அபாயங்களை எல்லாம் நினைத்துப்பார்க்காமல் இல்லை. இரண்டு பசுக்கள் அவரது மாத வருமான ரூ.5,000 ஐ இரு மடங்காக்கி, பெற்றோரை நன்றாகச் சாப்பிட வைத்து, பிள்ளைகள் மேலும் அதிகமாகப் பால் குடிக்க வழி செய்து, பள்ளிக்குச் செல்லவும் வைத்திருக்கும். ஒரு வாகனம் அமர்த்திக்கொள்ள வசதி இல்லாததால், அவர் பசு மாடுகளை நடந்தே ஓட்டிக்கொண்டு வந்தார். நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து, இருளில் வயல்வெளி வழியே நடந்து செல்லத் தீர்மானித்தார்.
நூ, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகும். முஸ்லிம் விவசாயிகள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் இங்கு நிகழ்வதில்லை என்பதைக் கவனிக்க முடிகிறது. மாறாக முஸ்லிம்கள் குறைவாக உள்ள ராஜஸ்தானின் அல்வாரில் நிகழ்கின்றன. ரக்பர் கான் மற்றும் அஸ்லம் கான், தங்கள் மாவட்ட எல்லைக்குச் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது, சில விவசாயிகள் பசுக் கண்காணிப்புக் குழுக்களுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் இருவரையும் விரட்டிச் சென்றனர். திகைத்துப்போன ரக்பர் கான், இரண்டு மாடுகளையும் விட்டுவிட்டுத் தப்பி ஓட முயன்றிருக்கிறார், ஆனால் கூட்டம் அவரை பிடித்துவிட்டது. அஸ்லம் கான் எப்படியோ தப்பி ஓடிவிட்டார். விடியற்காலையில் அவர் வீடு வந்து சேர்ந்தார். அவரது ஆடைகள் சேறும் சகதியுமாக இருந்தன. அந்தக் கூட்டம் தன்னை பார்த்துவிடப்போகிறதே எனும் அச்சத்தில் அவர் நடுக்கத்துடன் வயல் வெளிகளில் ஊர்ந்தபடி வந்து சேர்ந்திருக்கிறார்.
ரக்பர் கான் குடும்பத்தைச் சந்திப்பதற்காக எங்கள் கர்வான் இ மொகாபத் குழு, கோல்கன் கிராமம் சென்றபோது அஸ்லம் கானைச் சந்திக்க முடியவில்லை. தப்பித்து வந்த பிறகு, அவர் தனது நண்பரை நிர்க்கதியாக விட்டுவிட்டு ஓடி வந்த குற்ற உணர்வுக்கு உள்ளாகி, கிராமத்தை விட்டுச் சென்றுவிட்டதாக கிராமத்தினர் கூறினர்.
ரக்பர் கானைக் கொன்றது யார்?
அன்று இரவு நடைபெற்ற நிகழ்வுகளில், பாஜக எம்.எல்.ஏ. கியான் தேவ் அகுஜாவின் ஆதரவு பெற்றதாகக் கூறிக்கொள்ளும் கூட்டத்தினர் ரக்பர் கானை எந்த அளவு மோசமாகத் தாக்கினர் எனும் விவரம்தான் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. கூட்டத்தினர் தாங்கள் ரக்பர் கானை அறைந்து, பின்னர் அவருக்குப் பாடம் கற்பிக்க அடித்ததாகக் கூறியுள்ளனர். அடி வாங்கிய பிறகும் ரக்பர் கான், எழுந்து உட்கார்ந்துகொண்டிருந்ததை அவர்கள் தொலைக்காட்சி நிருபர்களிடம் சாட்சிகள் மூலம் தெரிவித்துள்ளனர். அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் முன் அழைத்துசெல்லப்பட்ட காவல் நிலையத்தில்தான் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சிங் கத்தாரியாவும், இது பசுவுக்காக நிகழ்த்தப்பட்ட கொலை அல்ல, விசாரணை மரணம் எனக் கூறியுள்ளார். முஸ்லிம்களை அடித்துக் கொல்லும் கட்சிக்காரர்களுக்குப் பதிலாக, தனது கட்டுப்பாட்டின் கீழ் வரும் சீருடைப் பணியாளர்களை அவர் பலியாக்க விரும்புவதாகத் தெரிகிறது.
ரக்பர் கான் கிராமத்திற்குச் சென்ற கர்வான் குழுவிடம், உள்ளூர் மக்கள், கூட்டத்தினர்தான் அவரை அடித்துக் கொன்றனர், காவலர்கள் அல்ல என உறுதியாகக் கூறினர். தங்களைக் தற்காத்துக்கொள்வதற்காகத்தான் காவல் துறை மீது அவர்கள் பழி போடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதன் மூலம் கொலை வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். அப்படியே குற்றம் நிருபிக்கப்பட்டாலும் சில ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு நாயகர்களாகத் திரும்பிவிடுவார்கள். காவலர்கள் என்றால் அதிகபட்சம் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். பொதுமக்கள் மறந்ததும் விடுவிக்கப்படுவார்கள்.
கூட்டத்தினர் தாக்கியதில்தான் ரக்பர் கான் மோசமாக பாதிக்கப்பட்டார் என்னும் கிராம மக்களின் வாதத்தை போஸ்ட்மார்ட்டம் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. தாக்குதலுக்கு உள்ளானதில், மனிக்கட்டு முறிவு, தொடைப்பகுதியில் இன்னொரு முறிவு, காயங்கள், கீறல்கள் உள்ளிட்ட 13 வகையான காயங்களுக்கு உள்ளானதாகவும், உடல் மீதான காயங்களால் ஏற்பட்ட பாதிப்பின் அதிர்ச்சியால் இறந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டதற்கு 12 மணி நேரம் முன் காயங்கள் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22இல் நண்பகல் 12.44 மணிக்கு போஸ்ட்மார்டம் செய்யப்பட்டதால், ரக்பர் கான் மீதான தாக்குதல், அவர் கூட்டத்திடம் சிக்கிய நள்ளிரவில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
தார்மிகத் தவறு
ரக்பர் கான், கூட்டத்தின் தாக்குதலால்தான் இறந்திருக்க வேண்டும் என்றாலும், காவல் துறை மீது எந்தத் தவறும் இல்லை என சொல்ல முடியாது. ரக்பர் கான் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவரது உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்திருந்தால், 4 கிமீ தொலைவில் இருந்த மருத்துவனைக்கு உடனே கொண்டு சென்றிருந்தால் அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், அவர்கள் நான்கு மணி நேரம் எடுத்துக்கொண்டது இப்போது தெரியவந்துள்ளது. இடைப்பட்ட நேரத்தில், அவர்கள் (அல்லது கூட்டத்தினர்) அவரது உடலைக் கழுவி, ஆடைகளை மாற்றி, (சாட்சியங்களை அழிக்கும் குற்றம்) அவரது பசுக்களை கோசாலையில் ஒப்படைத்துவிட்டு, இடையே டீ குடித்துவிட்டு பின்னர்தான் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் காவல் துறை அதிகாரிகள், தங்கள் காவலர்களின் செயல், முடிவெடுப்பதில் நிகழ்ந்த தவறு எனக் கூறியுள்ளனர். ஆனால், இந்தத் தவறு ஒரு அப்பாவியின் உயிரைப் பறிக்கக் காரணமாகிவிட்டது என்பதால் அது ஒரு குற்றம் என்பதை உணர மறுக்கின்றனர். ஆட்சியில் உள்ள மேலிடத்தில் இருந்து வரும் தெளிவான சமிக்ஞைகளால்தான் காவலர்கள் இவ்வாறு நடந்துகொள்ள நிர்பந்திக்கப்படுகின்றனர் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஜஸ்வந்த் யாதவ், முஸ்லிம்கள் பசுக்களைக் கடத்திச் சென்றதாகக் கூறி இந்த வன்முறையை நியாயப்படுத்த முயற்சித்துள்ளார். மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வல், கூட்டத்தின் வன்முறை அதிகரிப்பது பிரதமர் மோடியின் செல்வாக்கு வளர்வதைக் குறிப்பதாகத் தெரிவித்துள்ளார். பேலு கான் கொல்லப்பட்ட சம்பவத்திலும், ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானவர்களை பசுக் கட்டத்தல்காரர்கள் என கூறியுள்ளனர். மேலும் அவரது மகன் மற்றும் மருமகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவரது மரண வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் ஒன்று, கைது செய்யப்படவில்லை; அல்லது ஜாமீனில் வெளியே இருக்கின்றனர்.
இதன் மூலம், ராஜஸ்தான் மற்றும் நாட்டின் மற்ற பகுதியில், காவல் துறை இளநிலை அதிகாரிகள் தங்கள் மேலிடத்திலிருந்து பெறும் செய்தி, பசுக்களைப் பாதுகாக்க (அல்லது பெண்களின் மானம் காக்க) முஸ்லிம்கள் மீது கூட்டத்தினர் அல்லது காவல் துறையினர் நிகழ்த்தும் தாக்குதல்கள், தங்கள் மதம்,பசு, மற்றும் தேசத்தை (முஸ்லிம்களுக்கு மாறாக) நேசிக்கும் இந்துக்கள் தூண்டப்படுவதால் நிகழும் செயலாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதாக இருக்கிறது. எப்படி இருந்தாலும், இன்று முஸ்லிம்கள், தலித்களுக்கு எதிராக மத துவேஷம் அதிகரித்திருக்கும் சமூகத்தை சேர்ந்தவர்களாகத்தான் காவல் துறையினர் இருக்கின்றனர். விசாரணை நடத்த ஊக்குவிக்கவோ, அதைவிட மோசமாக மத மற்றும் சாதிய உணர்வுகளைக் கைவிட அவர்களது பயிற்சியிலோ தலைமையின் வழிகாட்டலிலோ எதுவும் இல்லை. அவர்கள் வெளிப்படையான துவேஷப் பேச்சையும் துவேஷ வன்முறையையும் ஊக்குவிக்கும் சமிக்ஞையை மேலிடத்திலிருந்து பெறும் நிலையில், சட்டத்தை மதிக்காமல் இருப்பது, துவேஷ வன்முறையிலிருந்து முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் உயிரைக் காக்கத் தவறுவது ஆகியவற்றுக்காக இலநிலை காவல் துறை அதிகாரிகளைக் குற்றம் சொல்ல முடியாது.

வறுமையில் உள்ள தன் குடும்பத்தினரின் நலனுக்காக, இரண்டு கறவை மாடுகளை வாங்கித் தந்திருந்தார் ரக்பர் கான்.
சொல்லப்படாத சேதி
அண்மைக் காலங்களில் நான் பங்கேற்ற (பார்த்த) ஒவ்வொரு தொலைக்காட்சி விவாதங்களிலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரதிநிதிகள், கூட்டத்தினர் அடித்துக் கொல்வதை வெளிப்படையாக நியாயப்படுத்திப் பேசியதை ஆய்வுசெய்து நிறைவு செய்கிறேன். முஸ்லிம்கள் இந்து உணர்வுகளை மதிக்காமல் தொடர்ந்து பசுக்களைச் சட்ட விரோதமாகக் கொல்வதால், இந்துக்களின் இந்தக் கோபம் புரிந்துகொள்ளக்கூடியது என்பதாக அவர்கள் வாதம் அமைகிறது. கூட்டத்தின் வன்முறையை நியாயப்படுத்தும் கருத்திற்கு உதாரணமாக ராஜஸ்தான் அமைச்சர் ஜெயந்த் யாதவ் கருத்துக்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பசுக்கள் கடத்தலைக் கைவிட்டு இந்துக்களின் உணர்வுகளை மதிக்குமாறு அவர் முஸ்லிம்களைக் கேட்டுக்கொண்டார். “கடத்தல்காரர்கள் 50 பசுக்களை டிரக்குகளில் அடைத்துவைத்து அவற்றின் மீது ஆசிட் தெளிக்கின்றனர்” என அவர் ஆஜ் தக் தொலைக்காட்சியில் கூறினார். “இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதால் பசுக் கடத்தலில் ஈடுபட வேண்டாம் என முஸ்லிம்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்பது அவர் கூற்று. இந்தச் செயல் இந்துக்களின் ரத்தத்தைக் கொதிக்கச்செய்வதால் கும்பல் வன்முறை நிகழ்கிறது என்கிறார் அவர்.
கும்பல் வன்முறையை நியாயப்படுத்தக் கூறப்படும் இந்த வகைக் காரணங்களில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. முஸ்லிம்கள் பசுக்களைக் கடத்துவது உண்மை என்றும் இந்துக்கள் அனைவருமே பசு வதையை எதிர்ப்பதாகவும் வைத்துக்கொண்டாலும்கூட, பசுக்களைக் கொண்டு செல்லும் முஸ்லிம் (அல்லது யார் ஒருவர் மீதும்) கை உயர்த்துவதை நியாயப்படுத்த முடியாது. அவரது குற்றம் அல்லது குற்றமற்ற தன்மை சட்டத்தின் மூலமே நிரூபிக்கப்பட வேண்டும்.
அது மட்டும் அல்லாமல், பசுவதை தொடர்பான இந்து – முஸ்லிம் இடையிலான பிரிவினை என்பது, ஆபத்தானது, பொய்யானது, மதவாத நோக்கில் கட்டமைக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் நூ மாவட்ட விவசாயிகள் மீதான கும்பல் வன்முறை அதிகரித்த பிறகு, பேலு கான், ரக்பர் கான் சமூகத்தினரை நான் நெருங்கி அறிமுகம் செய்துகொண்டுள்ளேன். இந்து விவசாயிக்குக் குறைவில்லாமல் அவர்கள் பசுக்களை நேசிக்கின்றனர். பேலு கான், ரக்பர் கான் ஆகிய இருவருமே, பால் கறக்க வாங்கிய மாடுகளைக் கொண்டு சென்றபோது அடித்துக் கொல்லப்பட்டனர். இருவருமே கடன் வாங்கி ரூ.25,000 முதல் 30,000 வரை பசுவுக்காகச் செலவிட்டுள்ளனர். பசுவைக் கொலைக்களத்திற்கு அனுப்புவதன் மூலம் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.5,000 – ரூ.8,000 கிடைக்கலாம். எனவே அவர்கள் பசுவை வாங்கிய உண்மையான விவசாயிகள் எனப் புரிந்துகொள்ளலாம். அவர்கள் கடத்தல்காரர்கள் இல்லை. இதை மீறி, மூத்த அமைச்சர்கள், பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காவல் துறையினர் அவர்களைப் பசுக் கடத்தல்காரர்கள் என்கின்றனர்.
மறுபக்கத்தில் இந்துக்களில் பலர் பசு மாமிசம் சாப்பிடுகின்றனர். பாஜக, தலித்கள் இந்துக்களா எனத் தெளிவுபடுத்த வேண்டும். ஆம் எனில், எப்படி பசு வதையை இந்துக்கள் அனைவரும் எதிர்பதாகக் கூற முடியும்? அசாம் மற்றும் கேரளாவில் வசிக்கும் இந்துக்கள் நிலை என்ன? அதோடு இந்துவோ, முஸ்லிமோ, பசுவை நேசிப்பவர்கள், அதன் பால் வற்றி வயதாகும்போது அதை வைத்துப் பராமரிக்க முடியாத நிலையை அடையும்போது என்ன செய்வது?
உத்தரப் பிரதேச மாநில முதல்வரான ஆதித்யநாத், மனிதர்கள் காக்கப்பட வேண்டும், அதேபோல பசுக்களும் காக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். “பரஸ்பரம் உணர்வுகளை மதிப்பது ஒவ்வொருவரின், ஒவ்வொரு சமூகத்தின், மதத்தின் கடமை” என்று ரக்பர் கான் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு அவர் கூறியுள்ளார். அவர் சொல்லாமல் சொன்ன செய்தி என்னவெனில், முஸ்லிம்கள் இந்துக்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும்; ஆனால், இது இந்துக்களுக்குப் பொருந்தாது.
வேறு விதமாக சொல்வதானால், கும்பல் வன்முறையைத் தடுக்கும் பொறுப்பை அதனால் பாதிக்கப்படும் முஸ்லிம்கள் மீதே பாஜக சுமத்துகிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மீதான கும்பல் வன்முறைக்கு முஸ்லிம்களேதான் காரணமாம்.
ஹர்ஷ் மந்தர்
நன்றி; தி ஸ்கிரால்
https://scroll.in/article/888454/alwar-lynching-shows-the-government-has-put-the-burden-of-ending-mob-killings-on-victims-themselves
Top exporter of Beef is India. BJP Govt doesn’t stop that first.
http://time.com/3833931/india-beef-exports-rise-ban-buffalo-meat/