ஏபீபி சேனலில் இருந்து வெளியேற நேர்ந்த சூழல் மற்றும் அதற்கு முந்தைய அரசு கட்டளைகள் பற்றி, சேனலின்முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளர் புண்ய பிரசூன் பாஜ்பாய், தி வயர் இந்திப் பதிப்பிற்கு எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது.
ஆங்கில வடிவத்தை தி வயர் ஆங்கிலப் பதிப்பு வெளியிட்டுள்ளது.
ஜூலை 14ஆம் தேதி, ஆனந்த பஜார் பத்திரிகா குழுமத்தால் நடத்தப்படும் ஏபீபி தேசிய செய்தி சேனலின் உரிமையாளர் மற்றும் தலைமை எடிட்டரான, என்னுடன் கீழ்க்கண்டவாறு உரையாடினார்:
உரிமையாளர்: “(உங்கள் நிகழ்ச்சியில்) பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் தவிர்க்க முடியுமா? அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிடுங்கள் பரவாயில்லை. அரசு கொள்கையில் ஏதேனும் குளறுபடி என்றால் சுட்டிக்காட்டுங்கள். தொடர்புடைய அமைச்சகத்தின் அமைச்சர் பெயரைக்கூடக் குறிப்பிடுங்கள். எந்த இடத்திலும் பிரதமர் பெயரை குறிப்பிட வேண்டாம்.”
என் பதில்: ஆனால் பிரதமர் மோடி, எல்லா அரசு திட்டங்களையும் தானே அறிவிக்கும்போது, ஒவ்வொரு அமைச்சகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்போது, ஒவ்வொரு அமைச்சரும் அரசுத் திட்டம் அல்லது கொள்கை பற்றிப் பேசும்போதெல்லாம் பிரதமர் பெயரைக் குறிப்பிடும்போது, மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் இருப்பது எப்படி சாத்தியம்?
உரிமையாளர்: நான் சொல்கிறேன். தொடர்ந்து பிடிவாதம் பிடிக்காதீர்கள். சில நாட்கள் எப்படிப் போகிறது எனப் பாருங்கள். நீங்கள் சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் இப்போது வேண்டாம் விட்டுவிடுங்கள்.
இந்த ஆணை அல்லது உத்தரவைத் தொடர்ந்து, செய்திகளை வழங்கும் முறை, அதன் தாக்கம், சேனல் பற்றி மாறிவரும் அபிப்ராயம், அதன் பயன்கள் பற்றி நீண்ட உரையாடல் நிகழ்ந்தது. என்னுடைய நிகழ்ச்சியான மாஸ்டர் ஸ்ட்ரோக் சேனலின் மதிப்பை உயர்த்தியிருப்பதாக உரிமையாளர் ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், களத்திலிருந்து செய்தி வழங்கப்படும் தன்மை, அரசு கொள்கைகள் அலசி ஆராயப்படும் விதம், நிகழ்ச்சியில் இடம்பெறும் கிராபிக்ஸின் தரம், நிகழ்ச்சிக்கான எழுத்துப் பிரதி ஆகியவை சேனல் வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராத வகையில் அமைந்திருப்பதாக அவர் பாராட்டினார்.
சேனலில் செய்தி வழங்கப்படும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து உரிமையாளர், தலைமை எடிட்டர் ஆகியோர் உற்சாகமாகவே இருந்தார்கள். ஆனால், இவை எல்லாமே இப்படியே தொடரும் நிலையில், பிரதமரின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இருப்பதால் ஏதாவது மாற்றம் வந்துவிடுமா எனக் கேட்டுக்கொண்டிருந்தார் உரிமையாளர்.
இந்த நீண்ட உரையாடலைத் தொடர்ந்து திரையில் பிரதமர் பெயரை உச்சரிக்கக் கூடாது எனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது நிலவும் அரசியல் சூழலில், இந்த உத்தரவைப் பின்பற்றுவது மிகவும் கடினமான செயலாகும். உதாரணத்திற்கு, திறன் வளர்ச்சித் திட்டம் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாக அரசின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் வெற்றி பற்றிப் பிரதமர் தெரிவிக்கும் கருத்துக்களைப் பற்றிச் சிறிதும் பேசாமல் எப்படிக் கள நிலவரத்தைக் காட்ட முடியும்?
இன்னொரு பக்கம் பார்த்தால், திறன் வளர்ச்சித் திட்டம் மூலம் 2022 வாக்கில் 40 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், உண்மை என்னவெனில், 2018இல் இதுவரை பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தொடவில்லை. மேலும், திறன் வளர்ச்சி மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில், 10இல் எட்டு மையங்கள் செயல்படாமல் இருப்பதாகக் கள நிலவரம் தெரிவிக்கிறது. மாஸ்டர் ஸ்ட்ரோக் குழுவைப் பொருத்தவரை, மேலிட உத்தரவு காரணமாக, களத்தில் உள்ள நிலவரத்தை, பிரதமர் மோடி பெயரைக் குறிப்பிடாமல் உணர்த்தியாக வேண்டும்.
விமர்சனங்களில் பிரதமர் படத்தைக் காட்டத் தடை
இந்த உத்தரவில் இன்னொரு சிக்கலும் இருந்தது. நாம், நாளிதழ் பற்றி அல்லாமல் தொலைக்காட்சி செய்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். எழுத்து வடிவில் பிரதமர் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்க்கலாம். எனினும், அரசு என்பது மோடியுடன் மட்டுமே தொடர்புகொண்டிருக்கும் நிலையில், அரசு தொடர்பான எந்தக் குறிப்பு என்றாலும், வீடியோ நூலகத்தில் மோடியைத் தவிர வேறு எந்தக் காட்சியும் இருக்காது. 2014 ,மே 26 முதல், ஜூலை 26, 2018 வரை மோடி அரசு தொடர்பான செய்தி அல்லது மோடி அரசு திட்டம் தொடர்பான செய்தி என்றாலும், எடிட்டிங் இயந்திரத்தில், 80 சதவீதக் காட்சி மோடி தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, தற்போதைய அரசு எனும் வார்த்தைகளை எடிட்டர் பார்த்த உடன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் மட்டும்தான் நினைவுக்கு வரும். எனவே மாஸ்டர் ஸ்ட்ரோக் போன்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், திரையில் அவரது உருவம் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது.
அடுத்த 100 மணி நேரத்தில், மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில், மோடியின் படம்கூட வரக் கூடாது எனும் உத்தரவு வரக்கூடும் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், அத்தகைய உத்தரவுதான் வந்தது.
இந்த முறை, உரிமையாளர் ஒரு கேள்வியுடன் உரையாடலை துவக்கினார்: “இன்றைய அரசு என்றால் மோடிதானா? பிரதமரின் படத்தைக் காண்பிக்காமல் ஒரு செய்தியை அளிக்க முடியாதா?
இந்த கேள்விக்கு நான் ஒரு கேள்வியுடன் பதில் அளித்தேன். நான்கு ஆண்டுகளில் மோடி அரசு 106 திட்டங்களை அறிவித்துள்ளது. விஷயம் என்னவெனில், எல்லாத் திட்டங்களும் பிரதமராலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்தையும் முன்னிறுத்தும் பொறுப்பு வேண்டுமானால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடையதாக இருக்கலாமே தவிர, ஒவ்வொரு திட்டத்தின் விளம்பரத்திலும் பிரதமர் மோடி பெயர்தான் பெரிதாக இருக்கிறது. எனவே, ஒரு திட்டத்தின் வெற்றி அல்லது தோல்வி குறித்த கள நிலவரத்தில் பிரதமர் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும்கூட, அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் விவசாயி, அல்லது கர்ப்பிணி அல்லது வேலையில்லாதவர்,வர்த்தகர் என யாராக இருந்தாலும் மோடி பெயரைத்தான் குறிப்பிடுவார்.
பயிர் காப்பீடு திட்டம் அல்லது முத்ரா திட்டம் அல்லது ஜிஎஸ்டி என எதைப் பற்றிக் கேட்டாலும், இந்த திட்டங்களின் வரையறைக்குள் வருபவர்கள் பிரதமர் மோடித் பெயரை தவறாமல் குறிப்பிடுவார்கள். அதே நேரத்தில் இந்தத் திட்டங்களால் தாங்கள் பயன் பெறவில்லை என்றும் கூறுவார்கள். எனில் அவர்கள் கருத்துக்களை எடிட் செய்வது எப்படி?
இதற்குக் கிடைத்த ஒரே பதில், என்னவாக இருந்தாலும், நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறக் கூடாது என்பதுதான்.
இருந்தாலும், பிரதமர் மோடியைக் காட்டாமல் வேறு என்ன காட்சிகளைக் காட்டுவது அல்லது அவரது பெயரைச் சொல்லும்போது என்ன செய்வது என்பது எனக்குப் புரியாத புதிராக இருந்தது. இதற்கான எளிய காரணம், 2014இல் ஆட்சிக்கு வந்த பாஜகவைப் பொருத்தவரை அரசு என்றால் நரேந்திர மோடிதான். பாஜகவுக்குத் தேர்தல் பிரச்சாரத்திலும் பிரதமர் மோடிதான் நிகரில்லாத தலைவராக இருந்தார். ஆர்எஸ்எஸ்ஸின் முகமும்கூட முன்னாள் ஸ்வயம்சேவகரான நரேந்திர மோடியாகத்தான் இருந்தது. உலகம் முழுவதும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரே ஒரு தூதர்தான் – அது நரேந்திர மோடி. நாட்டினுள்ளும் ஒவ்வொரு கொள்கை முடிவின் மையம் மோடிதான். அப்படிப்பட்ட நிலையில் அவர் இருக்க, ஏபீபியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் ஸ்ட்ரோக் போன்ற ஒரு மணி நேர நிகழ்ச்சி, அரசை இந்த அளவு அதிருப்திக்குள்ளாக்குவது ஏன்?
இத்தனைக்கும் ஒரு டஜன் இந்தி தேசிய சேனல்களில் இது ஆறாவது இடத்தில்தான் உள்ளது.
மோடியின் குழப்பம்
இதை வேறு விதமாகச் சொல்வதானால், திரையில் இருந்து பிரதமர் மோடி பெயர் மற்றும் படத்தை காண்பிக்காமல் இருக்கும் படி ஏபீபி நியூஸ் உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்குத் தள்ளிய விஷயம் என்ன? மோடி அரசின் கீழான நான்கு ஆண்டு ஆட்சியில், செய்தி சேனல்கள் மற்றவர்களைத் தவிர்த்து அவரை மட்டுமே முன்னிறுத்தியதில், பிரதமரின் உருவம், அவரது பேச்சுகள், கருத்துகள் ஆகியவை நேயர்களுக்கு மிகவும் பரிச்சயமாகி, அதுவே ஒரு மோகம்போல ஆகிவிட்டது. சேனல்களின் டிஆர்பிக்கு மோடி முக்கியம் எனும் அளவுக்கு இதன் தாக்கம் தீவிரமாக இருக்கிறது.
நாட்டின் உரையாடல் ‘அச்சீ தின்’ (நல்ல நாள்) எனும் கோஷத்தை நோக்கி முன்னேறியபோது, இது சேனல்களுக்கும் தவிர்க்க இயலாததாக ஆனது. இந்த உச்சம் சரிந்துவிடாமல் இருக்க, மோடி அரசு 200 உறுப்பினர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்தது. அமைச்சகத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரலின் கீழ் இக்குழு இயங்க, அவர் அமைச்சரிடம் நேரடியாகத் தகவல் அளித்தார்.
200 பேர் கொண்ட இந்தக் கண்காணிப்புக் குழு மூன்று மட்டங்களைக் கொண்டிருந்தது; 150 பேர் சேனல்களை மட்டும் கண்காணித்தனர். 25 பேர் அவற்றுக்கு அரசு விரும்பிய வடிவத்தை அளித்தனர். எஞ்சிய 25 பேர், உள்ளடக்கத்தைக் கவனித்தனர். துணைச் செயலாளர் மட்டத்திலான மூன்று அதிகாரிகள் அறிக்கை தயாரித்துத் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் அளிப்பார். அங்கிருந்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் உத்தரவு பெற்று, சேனல்களின் எடிட்டர்களுக்கு என்ன செய்ய வேண்டும் செய்யக் கூடாது என அறிவுறுத்துவார்கள்.
எடிட்டர் செய்தி அடிப்படையில் மட்டுமே இயங்குவேன் எனக் கூறினால். அமைச்சக அதிகாரி அல்லது, பிரதமர் அலுவலகம் சம்பந்தப்பட்ட உரிமையாளரைத் தொடர்புகொள்ளும். ஊடகத்தின் மீதான நெருக்கடியைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக, கண்காணிப்பு அறிக்கையுடன் ஒரு கோப்பை அனுப்பி, 2014 தேர்தல் வாக்குறுதிகள் முதற்கொண்டு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, எல்லையில் சர்ஜிகல் தாக்குதல், ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவை குறித்த பிரதமரின் அறிக்கைகள் எப்படிக் காண்பிக்கப்பட வேண்டும் என உணர்த்தப்படும். அல்லது தற்போதைய திட்டம் தொடர்பான செய்தியில் பிரதமரின் பழைய அறிக்கையை எப்படிச் சேர்க்கலாம் என உணர்த்தப்படும். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு டஜன் அதிகாரிகள் முதல் மட்டத்தில் செயல்பட்டு, மோடி அரசின் சாதனைகள் எல்லா விதங்களிலும் முன்னிறுத்தப்படுவதை உறுதிசெய்கின்றன. அதன் பிறகு, தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரின் ஆலோசனை வருகிறது. இது கிட்டத்தட்ட ஆணையைப் போன்றது. மூன்றாவது மட்டத்தில், பாஜகவின் குரல் பல வித தொனிகளில் இருக்கும்.
செய்தித் தொடர்பாளர்களின் புறக்கணிப்பு
ஒரு சேனல் எல்லா நேரங்களிலும் மோடி அரசைப் பற்றி நல்ல விதமாகச் செய்தி வெளியிடாமல் இருந்து, சில நேரங்களில் எதிர்மறை அல்லது தகவல் அடிப்படையில், மோடி அரசின் கருத்தைப் பொய் எனச் செய்தி வெளியிடுவதாக வைத்துக்கொள்வோம். உடனே, பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இந்த சேனலில் தோன்றக் கூடாது எனத் தெரிவிக்கப்படும். அதாவது அந்த சேனலின் அரசியல் விவாத நிகழ்ச்சிகள் எதிலும் அவர்கள் பங்கேற்கக் கூடாது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஏபீபி நியூஸ் சேனலுக்கு இது நிகழ்ந்தது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இந்த சேனலின் விவாதங்களில் பங்கேற்பதை நிறுத்தினர். சில நாட்களில் பாஜக தலைவர்களும் இந்த சேனலுக்குப் பேட்டி அளிப்பதை நிறுத்திக்கொண்டனர். பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி தொடர்பான் உண்மை மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் வெளியான அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் இந்த சேனலின் விவாதங்களிலோ பிற நிகழ்ச்சிகளிலோ பங்கேற்க வேண்டாம் எனக் கூறப்பட்டனர்.
மன் கி பாத் தொடர்பான உண்மைகள் மற்றும் அதையடுத்து நிகழ்ந்தவற்றை
உள்வாங்கிக்கொள்வதற்கு முன், பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் எந்த அளவுக்கு மோடி அரசை சார்ந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வது முக்கியம். 2018, ஜூலை 9ஆம் தேதி, ஏபீபி தொலைக்காட்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் மாலை 4 மணி விவாதத்தில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியிலிருந்து உடனே வெளியேறுமாறு அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலை தெரியவந்தது. அந்த மனிதர் உடனே எழுந்து நின்று, நேரலையாக ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தொலைபேசி அழைப்பு வந்ததுமே அவரது முகம், ஏதோ பெரிய குற்றத்தைச் செய்து பிடிபட்டவர்போல மாறியது. அவரது வெளிறிய முகத்திலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
ஆனால், இது போன்ற எல்லாச் செயல்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்பதே உண்மை. ஏனெனில் இந்த சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் டிஆர்பியில் முன்னேற்றம் கண்டுவந்தன. சேனலில் பாஜக தலைவர்கள் பங்கேற்காதது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்தச் சூழ்நிலையில் தான், ஜுலை 5, 12 ஆகிய தேதிகளில் வெளியான டிஆர்பி ரேட்டிங், நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தி தொலைக்காட்சி சேனல்களில் ஏபீபி இரண்டாவது இடத்தில் இருப்பதைத் தெரிவித்தன.
இந்தக் காலத்தில்தான், மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் ஜார்க்கண்டின் கோட்டாவில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பான பிரத்யேக நிகழ்ச்சியை வெளியிட்டோம். அதானி குழுமத்தின் இந்தத் திட்டம் விதிகள் மற்றும் நெறிமுறைகளின் மீறலாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக, இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இன்னல்கள் வெளிக்கொணரப்பட்டன. அதானி பிரதமருக்கு நெருக்கமானவராக இருப்பதால், எப்படி ஜார்க்கண்ட் மாநில அரசு தனது விதிகளை மாற்றிக்கொள்ள நேர்ந்தது, இந்த மின் திட்டத்திற்காக நிலம் வழங்க மறுத்த விவசாயிகள் எப்படி மிரட்டப்பட்டனர் என நிகழ்ச்சி உணர்த்தியது. விவசாயி ஒருவர் காமிரா முன் இவ்வாறு கூறினார்: “அதானி குழும அதிகாரி ஒருவர், நிலம் வழங்காவிட்டால் உயிருடன் எரித்துவிடுவோம் என மிரட்டல் விடுத்தார். காவல் துறையிடம் புகார் செய்தபோது, இது பயனில்லாத புகார் என்றனர். அவர்கள் பிரதமருக்கு நெருக்கமானவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் எனக் கூறினர்.”
விவசாயியுடன் இருந்த அவர் மனைவியின் முகம் மிகுந்த துயரத்தை வெளிப்படுத்தியது.
அந்த நிகழ்ச்சிக்கான டிஆர்பி வழக்கத்தைவிட ஐந்து புள்ளிகள் கூடுதலாக இருந்தது. வழக்கமாக 12 புள்ளிகள் பெறும் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சி, அதானி குழுமம் தொடர்பான பிரத்யேக நிகழ்ச்சியின்போது 17 புள்ளிகளைத் தொட்டது. இதில் முரண் என்னவெனில், ஆகஸ்ட் 3ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, மீடியா மீதான கட்டுப்பாடுகளைக் குறிப்பிட்டு, ஏபீபி சேனல் மிரட்டப்பட்டு, அதன் பத்திரிகையாளர்கள் வெளியேற காரணமாக இருந்தது பற்றிப் பேசியபோது, தகவல் ஒளிபரபரப்புத் துறை அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்: “மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சி டீஆர்பிக்கு உதவாததால் யாரும் அதைப் பார்ப்பதில்லை. சேனலே அதை நிறுத்திவிடும்.”
புதிதாக உருவாகியிருக்கும் சூழலுக்கான உண்மையான விளக்கம், சேனலின் அதிகரிக்கும் டீஆர்பி ரேட்டிங்கில் இருக்கிறது. ஏபீபியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சி பிரபலமாகிவருவதோடு, முதல் நான்கு மாதத்திலேயே டீஆர்பி மீதான அதன் தாக்கம் தெரிந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த செய்திகள் மூலம், தெரிய வந்த மோடி அரசு கூறிக்கொள்ளும் சாதனைகள் குறித்து சோதித்துப்பார்ப்பதே இந்த நிகழ்ச்சிகளின் தன்மையாக இருந்தது. அரசு சொல்லிக்கொள்ளும் சாதனைகள் உண்மையில் வெற்று வேட்டுக்கள் அல்ல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து தெரியவந்தது.
இதையடுத்து வரக்கூடிய பிரச்சினையை அரசு புரிந்துகொண்டது; அதன் கூற்று தவறு என உணர்த்தும் செய்திகளை மக்கள் பாராட்டத் துவங்கியுள்ளனர். அப்படிக் கூறும் சேனலின் டிஆர்பி ரேட்டிங் உயர்கிறது. எனில், வரும் நாட்களில் மற்ற சேனல்கள் என்ன செய்யக்கூடும்? இந்தியாவில் நியூஸ் சேனல்களுக்கு விளம்பரமே மிகப் பெரிய வருவாயாக இருக்கிறது. டிஆர்பி அடிப்படையிலேயே விளம்பரங்கள் அளிக்கப்படுகின்றன. மோடி அரசின் கூற்றுக்கள் ஒன்றுமில்லாதவை என நிருபிக்கும் நிகழ்ச்சி மக்களால் விரும்பப்படுகிறது என்றால், அரசின் சாதனைகளைத் தொடர்ந்து புகழ் பாடும் சேனல்கள் நம்பகத்தன்மை இழக்கும். நம்பகத்தன்மை இழந்தால் விளம்பரம் குறையும். அதனால் வருவாய் இழப்பு ஏற்படும். இந்நிலையில் மற்ற சேனல்களும் அரசின் திட்டங்களை விமர்சனபூர்வமாக அணுகத் தொடங்கக்கூடும்.
இந்தப் பின்னணியில்தான், இது போன்ற நிகழ்ச்சியை மவுனமாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோதாவில் இறங்கிய அரசு
சேனல் மீதான நெருக்கடியை அதிகமாக்க பாஜக மிகவும் புத்திசாலித்தனமாக இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதல் நடவடிக்கை சேனலைப் புறக்கணிப்பது. இரண்டாவதாக, ஏபீபியின் ஆண்டு பொது நிகழ்வை குறி வைப்பது. இந்த நிகழ்ச்சி சேனலின் பெருமைக்குரியதாக இருப்பதுடன் அதற்கான விளம்பர வருவாயைப் பெருக்கவும் உதவுகிறது. ஆட்சியில் உள்ளவர்களும் எதிர்கட்சியினரும் சேனலின் இந்தப் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் தலைவர்கள் பதில் அளிப்பார்கள். இந்த முறை பாஜகவைச் சேர்ந்தவர்கள், மோடி அரசைச் சேர்ந்தவர்கள் என இரு தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்தனர். இதன் பொருள் அமைச்சர்கள் யாரும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் பங்கேற்காதபோது, எதிர்கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி நிகழ்ச்சியை நடத்துவது?
ஒவ்வொரு செய்தி சேனலுக்குமான செய்தி தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது; எங்களுக்கு எதிராகச் செயல்பட்டால் உங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும். இன்னொரு விதத்தில், அதிகாரம் என்பதே ஒரு வகை வர்த்தகம்தான், அது இல்லாமல் சேனல்களால் செயல்பட முடியாது என்பதையும் உணர்த்தியது. ஏபீபி சேனலைக் கட்டுப்படுத்தவும் பிற சேனல்கள் மோடி அரசைப் புகழ்வதை நிறுத்தாமல் இருக்கவும் கள நிலவரத்தை ஆராய்ந்து அதைச் செய்தியாக்காமல் இருக்கவுமான நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டது. ஜனநாயகத்தின் நண்பன் எனும் போர்வையில் அதன் குரல்வலையை நெரிப்பதற்கான மாபெரும் திட்டத்தில் ஈடுபட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இது நிகழ்ந்தது.
அவசர நிலை காலத்தில், அரசியல் சாசன வழிகளை நாட வழியில்லை என்பது மீடியாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அவசர நிலைக் காலத்தில் அடக்குமுறை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால், இன்றோ ஜனநாயகம் என்னும் கீதம் உரத்த குரலில் இசைக்கப்படுகிறது. அதாவது, ஜனநாயகத்தின் பெயராலேயே இவை எல்லாம் நடக்கின்றன.
ஜூன் 20 அன்று, பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் வீடியோ உரையாடல் மூலம் பேசினார். அவரது முன்னிலையில் சத்தீஸ்கரின் கன்ஹரி கிராமத்தைச் சேர்ந்த சந்திரமணி கவுசி இருந்தார். பிரதமர் அவருடைய வருமானம் பற்றிக் கேட்டபோது அது இரு மடங்கானதாக மட்டும் சந்திரமணி குறிப்பிட்டார். வருமானம் இரு மடங்கானது குறித்துக் கேட்ட பிரதமர் மகிழ்ச்சி அடைந்தார். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரு மடங்காக வேண்டும் என்பதை இந்த அரசு இலக்காகக் கொண்டிருப்பதால் இதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். நேரலை நிகழ்ச்சி ஒன்றில், விவசாயி ஒருவர் இரு மடங்கு வருமானம் பற்றிப் பேசினால், அது பிரதமர் இதயத்தைக் குளிரவே செய்யும்.
ஆனால், செய்தியாளர்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது எளிதாக ஜீரணிக்கக்கூடியது அல்ல. சத்தீஸ்கர் மாநிலம் நாட்டின் மிகவும் பின்தங்கிய மாநிலம். அதன் கான்கேர் மாவட்டம் இன்னும் பின்தங்கியது. மாநில அரசின் இணையதளத் தகவலின்படி, அது உலகின் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள பெண் விவசாயி ஒருவர் தன்னுடைய வருமானம் இரு மடங்கானது என கூறினால், அந்தக் கூற்றைச் சரிபார்க்க வேண்டும் என ஒரு செய்தியாளருக்குத் தோன்றுவது இயல்பானதுதான்.
14 நாட்கள் கழித்து, ஜூலை 6இல் சேனலில் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியில் இந்த விவகாரம் அலசப்பட்டது. தில்லியிலிருந்து வந்த அதிகாரிகள், பிரதமரிடம் என்ன பேச வேண்டும் என்று இந்தப் பெண்மணிக்குப் பயிற்சி அளித்தார்கள் என்பதையும், இரு மடங்கு வருமானம் பற்றிக் கூற வேண்டும் என்று அவரிடம் சொன்னதையும் சேனலின் நிகழ்ச்சி உணர்த்தியது. இந்தச் செய்தி சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தேர்தலை மனதில் கொண்டு அந்தப் பெண்மணி இவ்வாறு சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார் எனப் பலரும் பேசினார்கள். ஐந்து மாதங்களில் இந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தச் செய்தி மூன்று கேள்விகளை எழுப்பியது: அதிகாரிகள் பிரதமரைத் திருப்திப்படுத்துவதற்காக இதைச் செய்கின்றனரா? பிரதமர் பாராட்டைத் தவிர வேறு எதையும் கேட்க விரும்பவில்லை என்பதால் அதிகாரிகள் இப்படிப் பயிற்சி அளித்தார்களா? விளம்பரம் மற்றும் பிரச்சாரத்தில் மட்டும்தான் தேர்தல் வெற்றி தீர்மானிக்கப்படுகிறதா?
இந்தக் கேள்விகளுக்கான பதில் என்னவாக இருந்தாலும் சரி, இந்தச் செய்தி ஒளிபரப்பிற்குப் பிறகு, வேண்டுமென்றே பொய்யான செய்திகளை ஒளிபரப்புவதாகக் கூறி ஏபீபி சேனல் மீது மோடி அரசு தாக்குதல் தொடுத்தது. தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட மூன்று மத்திய அமைச்சர்கள், சேனலின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரே மாதிரியான குறும்பதிவுகளை வெளியிட்டனர்.
இது நெருக்கடி இல்லாமல் வேறு என்ன? இது எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தது. ஆக, நிருபர் ஞானேந்திர திவாரி மீண்டும் ஒரு முறை செய்தி சேகரிக்கச் சென்றபோது கிராமமே வேறு விதமாக இருந்தது. காவல் துறையினர் அதிக அளவில் இருந்தனர். அந்த நிருபர் சந்திரமணி கவுசிக்கைச் சந்திக்காமல் இருக்க மாநில மூத்த அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். நிருபரின் புத்திசாலித்தனமா அல்லது, காவல் துறையின் ஒழுங்கின்மையா எனத் தெரியவில்லை, அதே இடத்தில் இருந்திருக்க வேண்டிய அதிகாரிகள் பகலிலேயே கிராமத்தை விட்டுச் சென்றுவிட்டனர். இரவுக்குள், சந்திரமணி கவுசிக் உள்ளிட்ட சுய உதவி குழுவைச் சேர்ந்த 12 பெண்கள் தங்கள் இன்னல்களைக் கொட்டித்தீர்த்தனர்.
இந்தச் செய்தி ஜூலை 9 அன்று ஒளிபரப்பானதை அடுத்து, அரசின் வழக்கத்திற்கு விரோதமான மவுனம் ஏதேனும் நடவடிக்கை இருக்கும் என்பதை உணர்த்தியது. அன்றைய தினம் இரவே, சேனலைக் கண்காணிக்கும் குழு உறுப்பினர் ஒருவர், மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியின் சமீபத்திய செய்தி, அரசில் மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். தகவல் ஒளிபரப்பு அமைச்சர், மாநில ஏடிஜியை வறுத்தெடுத்துவிட்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. “அமைச்சர்கள் குறும்பதிவை மீறி சேனல் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் என்று உங்களுக்குத் தெரியாதா? … எங்களுக்குத் தெரிந்திருந்தால், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன் அதை எங்களிடம் காண்பிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருப்போம்” என்று மாநில ஏடிஜியிடம் அமைச்சர் சொன்னதாகத் தெரிகிறது.
குழப்பமான இடையூறுகள்
இந்தத் தகவல் கண்காணிப்புக் குழுவின் மூத்த உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலை அளிப்பதால அவரது வேலைக்கு ஆபத்து வராதா என நான் கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில்: பிராட்காஸ்ட் இஞ்ஜினியரிங் கார்ப்பரேஷன் இந்தியாவில் நாங்கள் 200 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளோம். எத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தாலும் நாங்கள் ஆறு மாத கால ஒப்பந்தத்தில் தொடர்கிறோம். விடுமுறைக்கு வழி இல்லை. முதல் கட்டக் கண்காணிப்பில் உள்ளவர்கள் ரூ. 28,635 பெறுகின்றனர். மூத்த உறுப்பினர்கள் ரூ.37,350 பெறுகின்றனர். உள்ளடக்கத்தைக் கவனிப்பவர்களுக்கு ரூ. 49, 500 சம்பளம். இந்த வேலை இருந்தால் என்ன, போனால் என்ன? பிரைம் டைம் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள், பிரதமரை நல்ல முறையில் காண்பிக்கும் நிகழ்ச்சி அளவை அறிக்கையாகத் தர வேண்டும். அதிக நேரம் கொண்ட அறிக்கை தருபவர்கள் சிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
பின்னர் அவர் இப்படிக் கூறினார்: “உங்கள் நிகழ்ச்சிக்காகத் தனி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 9) நிகழ்ச்சியில் நீங்கள் காண்பித்த செய்திகளுக்குப் பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள்.”
அரசின் 3 கட்டத் தாக்குதல்கள்
இதைச் சொன்ன பின் போனை வைத்துவிட்டார். இது என்னை யோசிக்க வைத்தது. சேனலில் அவர் சொல்லியது குறித்து ஆலோசித்தோம். ஆனால் அதன் பிறகு நிகழ்த்தப்பட்ட 3 அடுக்கு நடவடிக்கைகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகத்தின் பெயரால், ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட, ஜனநாயகத்தைத் திகைக்க வைக்கும் நடவடிக்கைகளாக அவை அமைந்தன.
இதற்கான அறிகுறியாக, அதன் பிறகு ஏபீபியின் செயற்கைகோள் இணைப்பு மக்கர் செய்யத் துவங்கியது. இந்தப் பிரச்சினை ஒரு மணி நேரம் நீடித்தது. நேயர்கள் மாஸ்டர் ஸ்ட்ரோக் நிகழ்ச்சியை காண முடியாத வகையில் இது நிகழ்ந்தது. இரவு 10 மணிக்குப் பிறகே செயற்கைகோள் இணைப்பு வந்தது.
ஏபீபியை நடத்துபவர்களுக்கு நிச்சயம் இது அடிதான். உரிமையாளர் மற்றும் எடிட்டர் இன் சீப், இதற்கான காரணத்தைக் கண்டறியுமாறு தொழில்நுட்பக் குழுவிடம் கூறினார். ஆனால் பலன் இல்லை. டெலிப்போர்ட் மற்றும் செயற்கைக்கோள் இடையிலான இணைப்பு நொடியில் முறிந்தது.
சராசரியாக, செயற்கைகோள் இணைப்பில் 30 முதல் 40 இடையூறுகள் இருக்கும். மூன்றாவது நாள், நேயர்களுக்கு இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் எனும் கருத்து உண்டானது. ஜூலை 19 அன்று காலை முதல் சேனலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது: “கடந்த சில நாட்களாக பிரைம்டைம் ஒளிபரப்பில் சிக்னலில் சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இந்த திடீர் பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிய முயன்றுவருகிறோம். இதைச் சரி செய்யவும் தீவிரமாக முயன்றுவருகிறோம். அது வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
இந்தத் தகவல் முக்கியத் தகவல் தொடர்பாகக் கருதப்பட்டது. ஆனால், இரண்டு மணி நேரத்தில் இது நீக்கப்பட்டது. இது நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட முடிவாக அமைந்தது. பிரைம்டைம் ஒளிபரப்பு தடைப்பட்டதோடு, அந்தத் தகவலை சொல்லவும் முடியாத நிலை என இரட்டை நெருக்கடி அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் சில விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரங்களை விலக்கிக்கொண்டனர். வெளிநாட்டு பிராண்ட்களை சுதேசி ஆற்றலுடன் எதிர்கொள்வதாகப் பெருமைபட்டுக்கொள்ளும் மிகப் பெரிய விளம்பரதாரர் நிறுவனம் ஏபீபியிலிருந்து விலகிக்கொண்டது.
அடுத்ததாகப் சேனலுக்கு விளம்பரம் கொடுப்பதை நிறுத்துமாறு பல விளம்பர நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரியவந்தது. செயற்கைக்கோள் இணைப்பு பாதிக்கப்பட்ட 15 நாட்களில், பாதிக்கப்புக்குள்ளான சேனல் இது மட்டும் அல்ல மேலும் நான்கு மாநில மொழிச் சேனல்களும் பாதிக்கப்பட்டன.
மக்களால் உங்கள் சேனலை இரவு 9 மணி முதல் 10 மணி வரை பார்க்க முடியவில்லை எனில், அதிக எண்ணிக்கையில் மக்கள் பார்க்கும் நேரத்தில் உங்கள் சேனல் பார்க்கப்படவில்லை என்று பொருள். இதனால் டிஆர்பி குறையும் என்பதைத் தானாக முடிவு செய்துகொள்ளலாம். அரசு புகழ் பாடிக்கொண்டிருக்கும் சேனல்களுக்கு இது ஆசுவாசம் அளித்தது. ஏனெனில் இதே நிலை தொடரும் வரை அவர்கள் டிஆர்பி பாதிக்கப்படாது.
மக்களைப் பொறுத்தவரை, அதிகாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்க விரும்பிய செய்தி என்னவெனில், எப்போதும் வெற்றிகரமாக இருக்கும் மோடியே மக்கள் பார்க்க விரும்பும் மோடியாகும். மோடியைக் கேள்வி கேட்பவர்களைப் பார்ப்பதில் மக்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்ற செய்தியை அதிகாரத்தில் உள்ளோர் தெரிவிக்க விரும்புகிறார்கள். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரும் இந்த ஆட்டத்தை அறிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் டிஆர்பியைச் சுட்டிக்காட்டி பதில் அளித்தார். ஆனால், முடக்கத்திற்குப் பிறகு சேனலின் டிஆர்பி ஏறியது ஏன் என்பது குறித்து மட்டும் அவர் மவுனம் காத்தார்.
இந்தச் செயல்முறை முழுவதும் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏபீபி பல்வேறு மட்டத்திலான பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் எனப் பலவிதக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பிரைம் டைமில் நிகழ்ச்சி தடைப்பட்டால், பின்னர் அல்லது காலையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அதிகாரத்தை எதிர்க்கலாமா, வேண்டாமா எனும் மையக் கேள்வியையே எல்லாம் சார்ந்திருந்தது. மவுனமே இந்தக் ஒவ்வொரு கேள்விகளுக்கான பதிலாக அமைந்தது.
என் ராஜினாமாவுக்குப் பின் எல்லாம் நின்றது.
இந்த நீண்ட படலத்தின் முடிவும் சுவாரஸ்யமாகவே அமைந்தது. உரிமையாளர் மற்றும் எடிட்டர் இன் சீஃப், உங்கள் முன் கைகட்டி நின்றபடி என்ன செய்யலாம் என்று கேட்கிறார். இந்தச் சூழலில் என்ன செய்ய முடியும்? விடுமுறையில் செல்லலாம் அல்லது ராஜினாமா செய்யலாம். அதிசயத்திலும் அதிசயமாக நான் ராஜினாமா செய்த உடனே பதஞ்சலி விளம்பரம் மீண்டும் வந்தது. 3 நிமிடங்களாகச் சுருங்கிய 15 நிமிட விளம்பர இடைவெளி, 20 நிமிடங்களாக அதிகரித்தது. நான் ஆகஸ்ட் 2 அன்று ராஜினாமா செய்தேன். அன்று இரவே செயற்கைகோள் இணைப்பு திரும்பி நிலையானது.
விடாது துரத்தும் அதிகாரம்
நான் ஏபீபியில் பணியில் இருந்தபோது, நாடாளுமன்ற மைய அரங்கில், ஏபீபிக்குப் பாடம் புகட்டப்படும் என்றும், புண்ய பிரசூன் தன்னை யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறார் என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கு இரு நாட்களுக்கு முன்பும் அதன் பிறகும் ராஞ்சி, பட்னாவில் ஆகிய இடங்களில் உள்ள பாஜக சமூக ஊடகப் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் நபர்களிடன் பாஜக தலைவர், பிரசூனை விடாமல் சமூக ஊடகங்களில் குறி வையுங்கள் எனக் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூரில் பாஜகவின் சமூக ஊடகத்தைக் கவனிப்பவர்களிடமும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் அச்சம் அல்லது பணம் மற்றும் ஆற்றலுக்காக அதிகாரத்தில் உள்ளவர்களோடு கைகோர்க்கலாம். ஆனால், அவர்களால் அதிகாரத்தில் உள்ளவர்களின் வார்ப்பில் முழுவதுமாகக் கலந்துவிட முடிவதில்லை. எனவே, ராஞ்சி, பட்னா மற்றும் ஜெய்ப்பூரில் பாஜகவின் சமூக ஊடகக் கணக்கை பராமரிப்பவர்கள், என் மீதான சமூக ஊடகத் தாக்குதல் அதிகரிக்கும் என்னும் தகவலை என்னிடம் தெரிவித்துள்ளனர்.
அதிகாரத்தின் ஆட்டம் இத்தனை வெளிப்படையாக நிகழ்த்தப்படும்போது, பத்திரிகையாளர் அமைப்பான எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பிற்குத்தான் எழுத வேண்டும் என நீங்கள் நினைப்பீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் போல யோசிப்பதில் பயனில்லை, குறைந்தபட்சம் உங்கள் குறைகளை ஒளிபரப்புங்கள், அதன் பிறகு போராடுவோம் என்ற பதில் வந்தது. எடிட்டர்ஸ் கில்டிடம் அல்ல, அரசாங்கத் தலைமைச் செயலகத்திடம் பேசுவதுபோல இருக்கிறது. அங்கே இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள் அல்ல, அரசு அதிகாரிகள்!
இறுதியில் நான் சொல்ல விரும்புவது இதுதான்: அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்க்க வேண்டாம். ஆனால், கண்ணெதிரில் உண்மை தோன்றும்போது, கண்களை மூடிக்கொள்ளாமலாவது இருங்கள்.
புன்யா பிரசூன் பாஜ்பாய்
https://thewire.in/media/punya-prasun-bajpai-abp-news-narendra-modi/amp/
நன்றி: தி வயர்
அனைத்து ஊடகங்களும் விலைபோய் விட்ட நிலையில் பிரசுன் பாஜ்பாய் போன்றவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் இந்த சனநாயக விரோத மோடி அரசை மக்களிடம் அம்பலபடுத்த வேண்டும்.இனிவரும் நாட்களில் அச்சு ஊடகத்திலும்,காட்சி ஊடகத்திலும் பலமான மோடி ஆதரவு ஜால்ரா சத்தம் காதை கிழிக்கும்.தினத்தந்தி இன்று ஆரம்பித்துவிட்டது.
தின தந்தி மட்டுமல்ல தோழர்… அனைத்து ஊடகங்களுமே தான்… அரசின் செயல்பாட்டை நிர்வகிக்க குழு அமைக்க வக்கில்லாமல் வெட்கமில்லாமல் ஊடகங்களை உளவு பார்க்க ஒரு அமைப்பு.. உடனுக்குடன் கேட்க ஒரு பிரதமர்??? யாருக்கும வெட்கமேயில்லை.