ரஃபேல் போர் விமானத்துக்கான அளிப்பாணை (order) திடீரென்று மாற்றப்பட்ட விதம், கட்டாய நடைமுறைகள் மீறப்பட்டிருப்பது, உண்மைகளை மறைப்பதற்கான அரசின் முயற்சிகள், முன்னுக்குப் பின் முரணான பாதுகாப்பு அமைச்சர்களின் கூற்றுக்கள், தங்களுக்குச் சாதகமான ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்யைப் பரப்பி, முக்கியமான உண்மைகளையும் கேள்விகளையும் கிணற்றில் மூழ்கடிப்பது, ஒப்பந்தத்தில் இல்லவே இல்லாத ரகசியப் பாதுகாப்பு ஷரத்துக்களைக் காரணம் காட்டுவது, விமான உருவாக்கத்தில் பல ஆண்டு அனுபவம் உள்ள பொதுத் துறை நிறுவனம் ஹெச்.ஏ.எல். எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) என்ற அரசு நிறுவனத்தை இந்தத் திட்டத்திலிருந்து நீக்கியது, இந்தத் துறையில் அனுபவமே இல்லாத அதே நேரத்தில் பெரிய திட்டங்கள் பலவற்றில் தோல்வியை சந்தித்து கடனில் மூழ்கியுள்ள தனியார் நிறுவனத்தை சேர்த்திருப்பது…
இந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் இந்த ஒப்பந்தத்தின் பெயரில் ஒரு மாபெரும் ஊழலும் மோசமான அதிகார துஷ்பிரயோகமும் பிரம்மாண்டமான குற்றமும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை எங்களுக்கு உணர்த்துகின்றன. இது ஒரு சாதாரண ஊழலோ குற்றமோ அல்ல. தேசத்தின் பாதுகாப்புக்கு உலை வைப்பதும் ஏற்கனவே வலுவற்றிருக்கும் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டுக்குத் தீவிர அழுத்தம் கொடுப்பதும் ஆகும். மேலும் இது இந்த நாடு இதுவரை எதிர்கொண்டதிலேயே ஆகப் பெரிய ஊழலாகவும் இருக்கக்கூடும்.
நாங்கள் வலியுறுத்துபவை:
• இந்த ஒப்பந்தம் குறித்த அனைத்து உண்மைகள், குறிப்பாக இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவு குறித்த தகவல்கள் அனைத்தையும் அரசு வெளியிட வேண்டும்.
• நிதி விவகாரங்களுக்கு அப்பால் இந்த அரசு வேண்டுமென்றே சில நிறுவனங்களைக் கடந்து சென்றிருப்பதன் மூலம் தேசப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நடைமுறைகளையும் மீறியுள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் அரசுக்கு அயராமல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
• அரசு கஷ்டப்பட்டு மறைத்துக்கொண்டிருக்கும் உண்மைகளைத் தோண்டியெடுத்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமையை ஊடகங்கள் செய்ய வேண்டும்.
உண்மைகளும் கேள்விகளும்
• இந்திய விமானப் படை நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆகஸ்ட் 28, 2007 அன்று 126 நடுத்தர பல்பயன்பாட்டு போர் விமானங்களுக்கான (எம்.எம்.ஆர்.சி.ஏ) முன்மொழிவுக் கோரிக்கைகளை (ஆர்.எஃப்.பி) வெளியிட்டது. இந்த முன்மொழிவுக் கோரிக்கை, நிறுவனங்கள் நிறுவனங்களின் கேட்பு விலை, தொடக்கக் கொள்முதல், தொழில்நுட்பப் பகிர்வு, தயாரிப்புக்கான உரிமம் உள்ளிட்ட அனைத்துக்குமான விலைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. சாய்வெழுத்தாக அச்சடிப்பட்டுள்ள பகுதியைப் பார்த்தால், கூடுதலாகச் சேர்க்கப்பட்ட விஷயங்களுக்காத்தான் டஸால்ட் நிறுவனத்துக்கு அதிக விலை கொடுக்கப்படுகிறது என்ற அரசின் விளக்கம் பொய்யானது என்பது தெரியவரும்.
• டஸால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், போயிங், சாப், யூரோஃபைட்டர் ஜிஎம்பிஹெச், ரஷ்யன் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆகிய ஆறு நிறுவனங்கள் கேட்பு விலையை முன்வைத்தன. விமானங்களின் சோதனை ஓட்டம், தொழில்நுட்ப மதிப்பீடு ஆகியவற்றுக்குப் பிறகு, டஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல் மற்றும் யூரோஃபைட்டர் ஜிஎம்பிஹெச் நிறுவனத்தின் டைஃபூன் போர் விமானங்கள் தனது நோக்கங்களை நிறைவேற்றுவதாக இந்திய விமானப் படை 2011இல் அறிவித்தது. 2012இல் டஸால்ட் நிறுவனம்தான் மிகக் குறைந்த விலை கேட்டதாகத் தெரியவந்ததால் டஸால்ட்டுக்கும் இந்திய அரசுக்குமான பேரப் பேச்சு வார்த்தைகள் தொடங்கின.
• தீவிரமான பேரங்கள் நடந்தன. இறுதிக் கட்டத்துக்கு முந்தைய கட்டத்தை அடைந்தார்கள். மே 25, 2015 அன்று டஸால்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் ஊடகங்களை சந்தித்தபோது கூறியது:
”முன்மொழிவுக் கோரிக்கையில் (ஆர்.எஃப்.பி.) உள்ளவற்றையும் இந்தப் போட்டியின் விதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவதாகவும் எங்களுடன் பொறுப்புகளைப் பகிரவும் தயார் என்று ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் சார்மன் சொல்வதைக் கேட்டபோது நான் எவ்வளவு திருப்தியடைந்திருப்பேன் என்று கற்பனை செய்துபாருங்கள். விரைவில் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு கையெழுத்தாகிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன்”
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஒன்றோடொன்று தொடர்புடைய மூன்று நோக்கங்களுக்காக பேரத்தை முன்னெடுத்தது. முதலில் விமானப் படைக்கு உடனடியாகச் சில விமானங்கள் தேவைப்பட்டது. ஏனென்றால் எம்ஐஜி-21, எம்ஐஜி-27 விமானங்கள் காலாவதியாகியிருந்தன. இரண்டாவதாக இந்தியாவின் விமானவெளித் துறையை மேம்படுத்த வேண்டியிருந்தது. இது நடக்க வேண்டுமென்றால் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நம் நாட்டில் கிடைக்க வேண்டும். 126 போர் விமானங்கள் வாங்குவதற்கான இதுபோன்ற மிகப் பெரிய ஒப்பந்தம், அவற்றை விற்கும் வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் பெறும் வகையில் மதிப்புக் கூட்டப்பட வேண்டும். மூன்றாவதாக, விமான வடிவமைப்பில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டே ஒரு இந்திய நிறுவனமான ஹெச்.ஏ.எல்., இந்தியாவுக்குள்ளேயே போர் விமானங்களைத் தயாரிக்க வழிவகை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அதனால் ரஃபேல் விமானங்களின் ஆயுட்காலம் (30-40 ஆண்டுகள்) முழுவதும் அவற்றைப் பராமரித்து, பழுதுபார்த்து, தேவைப்பட்டால் முற்றிலும் மாற்றியமைக்க முடியும். இந்த நடைமுறையில் ஹெ.ஏ.எல் நிறுவனம் மேம்பட்ட உற்பத்தி திறன்களைப் பெற்று அதிநவீனப் போர் விமானங்கள் தயாரிப்பில் சுயசார்பை அடைய முடியும்.
இதன்படி 126-விமானங்களுக்கான இந்த ஒப்பந்தத்தில் முதல் 18 விமானங்கள் முழுவதும் வெளிநாட்டிலேயே அதாவது விற்பனையாளராலேயே தயாரிக்கப்பட்டு ‘பறப்பதற்குத் தயாரான நிலையில்” தரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மீதமுள்ள 108 விமானங்கள், தொழில்நுட்பப் பகிர்வு ஒப்பந்தத்தின் பயனாய், ஹெ.ஏ.எல் நிறுவனத்தால் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். 2007-ல் முன்மொழிவுக் கோரிக்கை வெளியிட்டப்பட்டபோது, 126 நடுத்தர பல்பயன்பாட்டுப் போர் விமானங்களுக்கான மொத்த செலவு ரூ.42,000 கோடி என்று அரசு கணக்கிட்டது. பேரத்தின்போது பேசப்பட்ட இறுதித் தொகை பொதுவெளியில் வைக்கப்படவில்லை.
• ஆனால் ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திட்ட சில நாட்களில், ஏப்ரல் 13 2015 அன்று தூர்தர்ஷனில் ஒளிபரப்பான பேட்டியில் அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், 126 விமானங்களின் விலை ரூ.90,000 கோடிக்கு மேல் ஆகும் என்று கூறியிருக்கிறார். “ரஃபேல், உயர்தரப் பல்பயன்பாட்டுப் போர் விமானம்… அதன் விலை அதிகம். 126 விமானங்கள் என்றால் அந்தக் கொள்முதலுக்கான மொத்தச் செலவும் ரூ.90,000 கோடிக்கு மேல் போய்விடும்” என்றார் அவர். அப்படி என்றால் ஒரு விமானத்தின் விலை ரூ.715 கோடி. பாரிக்கரின் கூற்றுப்படி எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் இந்த விலை.
• நடுத்தரப் பல்பயன்பாட்டுப் போர் விமானங்கள் வாங்குவதற்கான இப்போது கைவிடப்பட்டுவிட்ட ஒப்பந்தத்தில் முதல் 18 விமானங்களை வெளிநாட்டில் தயாரிப்பதற்கான செலவு எவ்வளவு ஆகியிருக்கும்? இப்போது புதிய ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாட்டில் 36 விமானங்களை தயாரிப்பதற்கான செலவு எவ்வளவு ஆகப் போகிறது? இந்தச் செலவுகளைத்தான் நாம் ஒப்பிட வேண்டும்.
• முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு வாங்கப்படும் ரஃபேல் விமானங்களை விட ஹெச்.ஏ.எல்.. நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப் போகும் விமானங்களுக்கு அதிக செலவாகும். ஏனென்றால் இந்தியாவில் தயாரிக்க, அதற்குத் தேவைப்படும் தொழிற்கூடம், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை உருவாக்குவது, அளிப்புச் சங்கிலியை நிறுவுதல், விற்பனையாளர்களைக் கண்டறிதல் ஆகியவற்றுக்குக் கூடுதல் செலவாகும். விற்பனையாளர், தொழில்நுட்பப் பகிர்வுக்கும் ஒரு பெரும் கட்டணத்தை வாங்கியிருப்பார். எனவே ஃபிரான்ஸில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் தொழில்கூடத்தில் தயாரிக்கப்படும் ரஃபேல் போர் விமானத்தின் விலை ரூ.715 கோடியைவிட மிகக் குறைவாகவே இருக்கும்.
• 2015, ஏப்ரல் 8 அன்று வெளியுறவுச் செயலர் எஸ்.ஜெயசங்கர், பிரதமரின் ஃபிரான்ஸ் பயணத் திட்டத்தை ஊடகத்தினருக்கு விவரித்தார். அப்போது அவர் சொன்னவை:
ரஃபேல் போர் விமானங்களைப் பொறுத்தவரை ஃபிரெஞ்சு நிறுவனம், பாதுகாப்பு அமைச்சகம், இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஹெச்.ஏ.எல். இடையே பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தெரிகிறது. விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இவை தொழில்நுட்பம் சார்ந்த, விரிவான விவாதங்கள். பேச்சுவார்த்தை அளவில் இருக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களின் ஆழமான விவரங்கள் தேசத் தலைவர்களின் பயணங்களின்போது விவாதிக்கப்படுவதில்லை. இது முற்றிலும் வேறு தளத்தில் நடைபெறுகிறது. பாதுகாப்புத் துறையில்கூடப் பெரிய விவகாரங்களை கவனிக்க மட்டுமே தேசத் தலைவர்களின் சுற்றுப் பயணங்கள் நடக்கும்.
பிரதமரின் அறிவிப்புக்கு இரண்டு நாட்கள் முன்பு வெளியுறவுச் செயலர் சொன்னவற்றிலிருந்து நான்கு உண்மைகள் புலப்படுகின்றன.
1. ரஃபேல் விமானம் தொடர்பான பேரம் அப்போது நடந்துகொண்டிருந்தது.
2. இவை தொடக்கத்தில் அரசு வெளியிட்ட முன்மொழிவுக் கோரிக்கைகளின் அடிப்படையில் நடைபெற்றன.
3. பேரத்தில் ஈடுபட்டிருந்த ஹெச்.ஏ.எல். நிறுவனம் இந்த திட்டத்திலும் முக்கிய அங்கம் வகித்தது.
4. இந்தியப் பிரதமரும் ஃபிரான்ஸ் அதிபரும், தங்களது பேச்சுவார்த்தையில் “பாதுகாப்புத் துறையை பாதித்த பெரிய பரந்துபட்ட பிரச்சினைகளை” விவாதிக்க இருந்தனர்.
2015, ஏப்ரல் 8 அன்று வெளியுறவுச் செயலர் பத்திரிகையாளர்களிடம் சொன்னது இதுதான். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, முற்றிலும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்று பிரதமரே அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், முற்றிலும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு பறக்கத் தயாரான நிலையில் இருக்கும் 36 விமானங்களை இந்தியா வாங்கப்போவதாகக் கூறினார்.
2015, ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்ட இந்தியா – ஃபிரான்ஸ் கூட்டறிக்கை இப்படிச் சொல்கிறது: “விமான விற்பனைக்கான இரண்டு அரசுகளுக்கு இட்டையிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஏற்கெனவே தனியாக நடைமுறையில் இருக்கும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைவிட மேம்பட்ட ஒப்பந்தம் இது. இந்த விமானங்கள் இந்திய விமானப் படையின் செயல்பாட்டுத் தேவைக்குத் தோதான கால அளவுக்குள் வழங்கப்படும். விமானங்கள் அவற்றின் துணை அமைப்புகள், ஆயுதங்கள் அனைத்தும் இந்திய விமானப் படையால் சோதிக்கப்பட்ட அதே வடிவமைப்பில் வழங்கப்படும். இவற்றின் பராமரிக்கும் பொறுப்பை ஃபிரான்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டிய கால அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டறிக்கையின் மூலம் இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன:
1. 36 ரஃபேல் விமானங்களின் விலை ஏற்கனவே பேரம் பேசப்படுவதைவிடக் குறைவானதாக இருக்கும். ஏனென்றால் அவை பறக்கத் தயாரான நிலையில் விற்கப்படுகின்றன. எனவே அவை நடுத்தரப் பல்பயன்பாட்டுப் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் 18 ரஃபேல் விமானங்களுக்கு டஸால்ட் நிறுவனம் கோரியிருந்த விலையைவிடக் குறைவாகத்தான் இருக்க வேண்டும்.
2. விமானமும் அதன் அமைப்புகளும் “எம்.எம்.ஆர்.சி.ஏ. மதிப்பாய்வின் போது இந்தியா விமானப் படை சோதித்து இறுதிசெய்த அதே வடிவமைப்பில்” இருக்க வேண்டும். கூட்டறிக்கையில் இருக்கும் இந்தத் தெளிவான, வலுவான உறுதிமொழி அதற்குப் பின் பரப்பப்பட்ட ஒரு பொய்யை அம்பலப்படுத்துகிறது. புதிய ஒப்பந்தத்தின்படி வாங்கப்பட இருக்கும் 36 விமானங்களில் சில புதுமையான ‘இந்தியாவுக்கேயுரிய மேம்படுத்தல்கள்’ மேற்கொள்ளப்பட இருப்பதால்தான் அவற்றின் விலை அதிகம் என்று அரசு சொல்லும் பொய்தான் அது.
இந்த அறிவிப்பு நிகழ்ந்தபோது அன்றைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியவை அனைத்தும் அவரைக் கலந்தாலோசிக்கமலேயே இந்தத் திட்டத்தில் இவ்வளவு பெரிய அளவில் மாற்றப்பட்டுள்ளது என்பதை சந்தேகத்துக்கிடமின்றித் தெளிவாக்குகின்றன. மோடி -ஹோலாந்தே அறிவுப்புக்குப் பின் அவர் இத்தகு மாற்றம் குறித்த முடிவிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக்கொண்டார். “மோடிஜிதான் முடிவெடுத்தார். நான் அதை ஆதரிக்கிறேன்” என்று 2015, ஏப்ரல் 13 அன்று தூர்தர்ஷனில் தெரிவித்தார். என்டிடிவி தொலைக்காட்சியில் இதை மேலும் விளக்கிப் பேசுகையில் இந்த முடிவு “(இந்திய) பிரதமருக்கும் பிரான்ஸ் அதிபருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விளைவு” என்றார்.
இந்த முடிவு தொடர்பாக மேலும் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் இருக்கின்றன:
1. 36 விமானங்கள் வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்த எந்த விளக்கமும் இல்லை.
2. ஒப்பந்தத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படவிருக்கும் விமானங்கள் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.
3. விற்பனையாளர், தொழில்நுட்பப் பகிர்வு செய்ய வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
4. 126 போர் விமானங்களுக்கு பதிலாக இப்போது இந்திய விமானப் படைக்கு 36 போர் விமானங்கள்தாம் கிடைக்கப்போகின்றன. மற்றவை பற்றி எதுவும் பேசப்படவில்லை.
“விமானப் படைக்கு உடனடியாக விமானங்கள் தேவைப்படுகின்றன, இந்த 36 விமானங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்குக் கிடைத்துவிடும்” என்பதே இவற்றுக்கெல்லாம் அரசு முன்வைக்கும் ஒரே நியாயம். மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் ஒரு விமானம்கூடக் கிடைத்தபாடில்லை. முதல் ரஃபேல் போர் விமானங்கள் 2019 செப்டம்பர் மாதம்தான் கிடைக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது (பிரதமரின் முதல் அறிவிப்புக்கும் இதற்குமான இடைவெளி நான்கரை ஆண்டுகள்). மொத்தமாக 36 விமானங்களும் கிடைப்பதற்குள் 2022இன் இடைப்பகுதி வந்துவிடும்.
முதன்முதலில் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுக் கோரிக்கையை அரசு பின்பற்றியிருந்தால் 18 விமானங்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும். மூன்று ஆண்டுகளுக்குள் டஸால்ட் நிறுவனம் தயாரிப்பைத் தொடங்கியிருக்க வேண்டும் என்பதால் மற்ற விமானங்களும் 2022இன் இடைப்பகுதியில் இந்திய விமானப் படைக்குக் கிடைத்திருக்கும். அரசு இப்போது அவசரம் கருதி இதற்கு முன்னுரிமை கொடுத்து துரிதப்படுத்தியிருப்பதாகக் கூறியிருப்பதைவிட விரைவாக அனைத்து விமானங்களும் கிடைத்திருக்கும். மேலும் அந்நிய நிறுவனத்தால் பகிரப்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்களும் நம் நாட்டுக்குக் கிடைத்திருக்கும்.
இதில் பல கேள்விகள் எழுகின்றன:
• இந்திய விமானப் படை, தன் அனைத்து முக்கியமான பலதரப்பட்ட நோக்கங்களுக்கான முதல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு 36 விமானங்களை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் வேண்டும் என்று வலியுறுத்தியதா? 126 விமானங்கள் அத்தியாவசியத் தேவை என்று விமானப் படை ஆய்வு செய்து கூறிய கணக்கு தூக்கி எறியப்பட்டது எப்படி?
• 2015, ஏப்ரலில் இந்தப் புதிய ஒப்பந்தத்தைப் பிரதமர் அறிவித்தபோதும் இந்திய – ஃபிரான்ஸ் கூட்டறிக்கையில் அதைச் சேர்த்தபோதும் பாதுகாப்புத் துறையின் கேபினட் கமிட்டியிடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதா?
• இது முற்றிலும் புதிய ஒப்பந்தம் என்பதால் புதிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கு ஏன் அழைப்புவிடுக்கப்படவில்லை? குறிப்பாக யூரோஃபைட்டர் ஜிஎம்பிஹெச் நிறுவனம், ஜூலை 4, 2014 அன்று அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லிக்கு முறைப்படி கடிதம் அனுப்பி யூரோஃபைட்டர் டைஃபூன் போர் விமானங்களுக்கான விலையை 20% குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்த பிறகும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படாதது ஏன்?
ஹெச்.ஏ.எல். வெளியேற்றப்பட்டு அனில் அம்பானி குழுமம் நுழைகிறது
• 2014 மார்ச்சில் டஸாலட் ஏவியேஷன், ஹெச்.ஏ.எல். நிறுவனங்களிடையே ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் தயாரிக்கப்பட இருந்த 108 விமானங்களுக்கான 70% பணிகள் ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் பொறுப்பு என்றும் மீதமுள்ள பணிகளை டஸால்ட் நிறுவனம் முடித்துத் தர வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் இரண்டு நிறுவனங்கள் சேர்க்கப்படுகின்றன: அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜீஸ் லிமிடெட், மார்ச் 25, 2015 (பின்னிணைப்பு 5), ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட், மார்ச் 28, 2015 (பின்னிணைப்பு 6)
• இந்த இரண்டு நிறுவனங்கள் சேர்க்கப்பட்ட சில நாட்களுக்குள் அதாவது 2015, ஏப்ரல் 10 அன்று பறக்கத் தயாரான நிலையில் இருக்கும் 36 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கப் போகிறது என்று பிரதமர் அறிவிக்கிறார். இந்த அறிவிப்பில் நான்கு அதிர்ச்சிகரமான அம்சங்கள் உள்ளன:
1. முதன்முதலில் வெளியிடப்பட்ட முன்மொழிவுக் கோரிக்கை என்ன ஆனது என்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற நீண்ட, விரிவான பேரங்களுக்கும் என்ன ஆயிற்று என்றும் யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
2. ஹெச்.ஏ.எல். நிறுவனமும் அதனுடன் இணைக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” (இந்தியாவில் உற்பத்தி செய்க) பெருமிதமும் வெளியேற்றப்பட்டன.
3. மேக் இன் இந்தியா கூச்சல்கள் ஒருபுறம் அரங்கேறிக்கொண்டிருக்க, தொழில்நுட்பப் பகிர்வு பற்றிய பேச்சையே காணவில்லை.
4. மிகக் குறுகிய காலத்தில் அனில் அம்பானியும் (2015 ஏப்ரலில் பிரதமருடன் ஃபிரான்ஸுக்குச் சென்றவர்) ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் என்ற அவரது புதிய நிறுவனமும் ரஃபேல் கொள்முதலின் மூலம் கிடைக்கப்போகும் பல நூறு கோடி ரூபாய் லாபத்தைப் பெறுவதற்காகவே இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்று தெரிந்துவிட்டது.
• முறைப்படி ஒப்பந்தம் கையெழுத்தானபின், ரிலையன்ஸ், டஸால்ட் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இணந்து புதிய கூட்டுத் தொழில் நிறுவனத்தை உருவாக்கின. அனில் அம்பானி இதன் தலைமை நிர்வாக அதிகாரி. இந்த நிறுவனத்தின் 51% பங்குகள் ரிலையன்ஸிடமும் 49% பங்குகள் டஸால்ட் இடமும் இருக்கும். இந்தப் புதிய நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தத்தின் 70% ஆஃப்ஸெட் பயன்கள் (Offset benefits) ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதாவது மொத்த ஆஃப்ஸெட் பொறுப்பான (Offset liabilities) ரூ.30,000 கோடியில் ரூ.21,000 கோடிக்கான ஆர்டர்கள்.
• 2016 ஏப்ரல் 1 முதல் அரசால் அமல்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆஃப்ஸட் வழிகாட்டுதல்களின் ஷரத்து 8.6, “அனைத்து ஆஃப்ஸெட் முன்மொழிவுகளும் அவற்றின் மதிப்பு என்னவாக இருந்தாலும் கையகப்படுத்தல் மேலாளரால் தயாரிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சரால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்” (பின்னிணைப்பு 7).
இவ்வாறாக ஆஃப்ஸெட் முன்மொழிவு நடைமுறைக்குப் பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதல் கட்டாயமாகிறது. அரசு இந்தக் கடமையிலிருந்து தவறிவிட்டது. இப்போது இந்த விஷயத்தில் தனக்குத் தொடர்பில்லை என்கிறது. தனது ஆஃப்ஸெட் கூட்டாளியைத் தேர்ந்தெடுப்பது டஸால்ட் நிறுவனத்தின் உரிமை என்கிறது. தனக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல். நிறுவனம் எந்த அடிப்படையில் இதிலிருந்து நீக்கப்பட்டது என்பதை அரசுதான் விளக்க முடியும். ஆஃப்ஸெட் பணிகளை மேற்கொள்ள இந்தப் புதிய கூட்டாளி ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட்டுக்கு இருக்கும் அனுபவம், உள்கட்டமைப்பு மற்றும் நிதி வசதிகள் என்னென்ன என்பதையும் அரசுதான் விளக்க வேண்டும். டஸால்ட் போன்ற ஒரு அனுபவம் மிக்க உற்பத்தி நிறுவனம், அண்மையில் தொடங்கப்பட்ட, விமான தயாரிப்பில் துளிக்கூட அனுபவமற்ற ஒரு நிறுவனத்தை, அரசின் அங்கீகாரத்தைக்கூடப் பெறாத நிறுவனத்தை, தனது கூட்டாளியாகத் தேர்ந்தெடுக்குமா? மேலும் அந்த நேரத்தில், ஒரு ஆண்டை நிறைவுசெய்திருந்த ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ரூ.8,000 கோடி கடனில் இருந்ததுடன், ரூ.1300 கோடி ஒட்டுமொத்த நஷ்டமும் அடைந்திருந்தது. சொல்லப் போனால் அனில் அம்பானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் கடும் கடனில் மூழ்கியிருந்தன. எடுத்துக்கொண்ட திட்டங்களை முடிக்கத் திணறிக்கொண்டிருந்தன.
(பின்னணைப்பு 8).
ரிலையன்ஸ் டிஃபென்ஸும் சரி அதன் துணை நிறுவனங்களும் சரி விமான வெளி, பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதில் எந்த அனுபவமும் பெற்றிராதவை. அதன் பிபாவ் கப்பல் கட்டும் துறை, இந்தியக் கப்பற்படைக்குக் கட்டிக்கொடுக்க வேண்டிய ரோந்துக் கப்பல்களைக் கட்டி முடிப்பதில் தீவிரமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இந்த நீண்ட தாமதம் கப்பற்படையின் செயல்பாட்டுத் திறனை பாதித்துள்ளது. அதே நேரம் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு விமானத் தயாரிப்பில் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவம் உள்ளது. 2014இல் டஸால்ட் நிறுவனத்துடன் ரஃபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான பணிப் பகிர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. மார்ச் 25, 2015 அன்றைய ஊடக சந்திப்பில் எரிக் ட்ராப்பியர் கூறியது:
“2012இல் கடும் போட்டிக்குப் பிறகே ரஃபேல் இறுதித் தெரிவாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ரஃபேல்தான் அடுத்த தர்க்கபூர்வ நடவடிக்கையாக இருக்க முடியும். கடும் உழைப்பு மற்றும் சில விவாதங்களுக்குப் பின், இதைக் கேட்கும்போது நான் அடைந்த திருப்தியை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். ஒருபுறம் இந்திய விமானப் படைத் தலைவர், தங்களுக்குப் போர் விமானம் வேண்டும் என்றும் அது ரஃபேலாக இருக்கலாம் என்றும் சொல்கிறார். நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுதான் தர்க்கபூர்வமாக இதன் அடுத்த நகர்வு. இன்னொரு புறம். ஹெச்.ஏ.எல். தலைவர், இந்தப் போட்டியின் விதிகளுக்கு ஏற்றபடி அரசின் ஆர்.எஃப்.பி.யில் (முன்மொழிவுக் கோரிக்கை) உள்ளவற்றை நாங்கள் சரியாக நிறைவேற்றுவதால் எங்களுடன் இணைந்து பணியாற்றவும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் தயார் என்று சொல்கிறார். விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுக் கையெழுத்தாகிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
ரகசியக் காப்பு ஷரத்து: அடிப்படையற்றது, பொய்யானது
பிரான்ஸ் அரசுடனான ரகசியக் காப்பு உடன்படிக்கையின் காரணமாக விமானங்களின் விலையை வெளியே சொல்ல முடியாது என்று கூறிவருகிறது இந்திய அரசு. இந்தக் கூற்று அடிப்படையற்றதும் பொய்யானதும் ஆகும்.
2016, நவம்பர் 8 அன்று போர் விமானங்கள் வாங்குவது பற்றி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாதுகாப்புத் துறையின் இணை அமைச்சர் பின்வருமாறு கூறினார்:
”23.09.2016 அன்று 36 ரஃபேல் விமானங்களை அவற்றை இயக்கத் தேவையான உபகரணங்கள், சேவைகள், ஆயுதங்களுடன் சேர்ந்து வாங்குவதற்கு ஃபிரான்ஸ் குடியரசுடன் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒரு ரஃபேல் விமானத்தின் விலை தோராயமாக ரூ.670 கோடி. 36 விமானங்களும் ஏப்ரல் 2022க்குள் நமக்கு அனுப்பப்பட்டுவிடும்” (பின்னிணைப்பு 9).
இதிலிருந்து தெரியவருவது:
1. அரசே விமானங்களின் விலையை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டது.
2. ஒரு விமானத்தின் விலை ரூ.670 கோடி.
3. இந்த விலை “தேவைப்படும் உபகரணங்கள், சேவைகள், ஆயுதங்கள்” ஆகியவற்றுக்கான செலவையும் உள்ளடக்கியது என்பதை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.
இப்படி விலையைத் தெரிவித்திருப்பது வெளிப்படைத்தன்மையில் ஏற்பட்ட திடீர் பாய்ச்சல் ஒன்றும் இல்லை. பாதுகாப்பு, வான்வெளி உபகரணங்கள் வாங்குவதற்கான செலவு நாடாளுமன்றத்திலும் மக்களுக்கும் தெரிவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உண்டு. உதாரணமாக 2012, மார்ச் 26 அன்று “மிராஜ் விமானத்தை மேம்படுத்தல்” தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
“இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிராஜ் 2000 விமானங்களை மேம்படுத்தும் பணிகளுக்காக ஃபிரான்ஸைச் சேர்ந்த தளேஸ், டஸால்ட் ஏவியேஷன் மற்றும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் (ஹெச்.ஏ.எல்.) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிராஜ் 2000 விமானங்களில் ஒரு விமானத்திலிருந்து இன்னொரு விமானத்துக்கு செலுத்தப்படும் ஏவுகணைகளை வாங்க ஃபிரான்ஸின் எம்.பி.டி.ஏ. நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
”மிராஜ் 2000 விமானத்தை மேம்படுத்துவதற்கு தளேஸ், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மொத்த விலை 1470 மில்லியன் யூரோக்கள். ஹெச்.ஏ.எல் உடனான ஒப்பந்தத்தின் மொத்த விலை ரூ.2020 கோடி. எம்.பி.டி.ஏ. நிறுவனத்திடமிருந்து ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தத்தின் மொத்த விலை 958,980,822.44 யூரோக்கள்.
“மிராஜ் விமானத்தின் ஒட்டுமொத்த மேம்படுத்தல் பணியை 2021க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எம்.ஐ.சி.ஏ. ஏவுகணைகள் 2015இலிருந்து 2019க்குள் நம் நாட்டுக்குக் கிடைக்குமாறு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.”
“மக்களவையில் இன்று முனைவர் பத்மசின்ஹா பாஜிராவ் படேல், திரு ராஜையா சிரிசிலா ஆகியோருக்கு (அப்போதைய) பாதுகாப்பு அமைச்சர் திரு.ஏ.கே.அந்தோணி அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது”
ஒப்பந்தத்தில் உள்ள ரகசிய காப்பு ஷரத்து, விமானங்களின் தொழில்நுட்ப விவரங்கள், செயல்பாட்டுத் திறன் ஆகியவை பற்றியும் வெளியே சொல்லக் கூடாது என்ற கட்டுப்பாட்டையே இந்தியாவுக்கு விதிக்கிறது. விலையை ரகசியமாக வைக்கச் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ‘இந்தியா டுடே’வுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் அளித்த பேட்டியில் இதில் எவற்றையெல்லாம் வெளியே சொல்லலாம் என்பதை முடிவுசெய்வது இந்திய அரசுதான் என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
• இறக்குமதி செய்யப்படும் விமானங்கள், விமானங்களின் பாகங்கள், ஏவுகணைகள், ஏவுகணைகளின் பாகங்கள் அனைத்தையும் பற்றிய தகவல்களை யார் வேண்டுமானாலும் இந்திய அரசு அதிகாரபூர்வமாக வெளியிடும் தரவுகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் என்பதுதான் உண்மை.
• 36 விமானங்களின் உண்மையான விலை, டஸால்ட், ரிலையன்ஸ் டிஃபென்ஸ் இணைந்து வெளியிட்ட ஊடகக் குறிப்பிலும் (பின்னணைப்பு 1: 2017 பிப்ரவரி 16 தேதியிட்ட ஊடக வெளியீடு) டஸால்ட் நிறுவனத்தின் 2016-ம் ஆண்டின் நிதி சார்ந்த ஊடக வெளியீட்டு அறிக்கையிலும் (பின்னிணைப்பு 12) வெளியாகிவிட்டது. இரண்டு ஆவணங்களும் இந்த ஒப்பந்த்தத்தின்படி 36 விமானங்களுக்கான மொத்த விலை ரூ.60,000 கோடி (8.139 பில்லியன் யூரோக்கள்) என்று கூறுகின்றன. அப்படிப் பார்த்தால் ஒரு விமானத்தின் விலை சுமார் ரூ.1,600 கோடி. இது 126 நடுத்தர பல்பயன்பாட்டுப் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஒரு விமானத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த விலையின் இரண்டு மடங்கு. அதோடு 2016 நவம்பர் 18 அன்று அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு விமானத்தின் விலையைவிட சுமார் ஆயிரம் கோடி அதிகம்.
• முதலில் வெளியிடப்பட்ட முன்மொழிவுக் கோரிக்கை, விமானத்துக்கான மொத்த செலவு என்பது நேரடிக் கையகப்படுத்தலுக்கான செலவோடு ஆயுதங்கள், ஏவுகணைகள், இரண்டு ஆண்டுகளுக்கான உத்திரவாதச் சீட்டு (வாரண்டி), இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமம் ஆகியவற்றுக்கான செலவையும் உள்ளடக்கியது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே விலை இந்த அளவு அதிகரித்திருப்பதற்குச் சொல்லப்படும் ஏவுகணை, தலைக்கவசம் போன்ற “இந்தியவுக்கேயுரிய கூடுதல் சேர்க்கை” என்ற சாக்கு பின்யோசனையின் விளைவான பொய் என்பது தெளிவாகிறது. 2015, ஏப்ரலில் வெளியிடப்பட்ட இந்தியா – ஃபிரான்ஸ் கூட்டறிக்கை “விமானமும் அதன் துணை அமைப்புகளும் ஆயுதங்களும் இந்திய விமானப் படையால் சோதனைக்குப் பின் இறுதிசெய்யப்பட்ட அதே வடிவத்தில் வழங்கப்படும்” என்று 126 நடுத்தரப் பல்பயன்பாட்டுப் போர் விமானங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியில் வெளிப்படையாகச் சொல்வதிலிருந்தும் இந்த விஷயத்தில் அரசு பொய் சொல்வது அம்பலமாகிறது.
• இதை உறுதி செய்யும் இன்னொரு தகவலும் உள்ளது. 2015, பிப்ரவரி 19 அன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் எரிக் ட்ராப்பியர் இதைக் கூறியிருக்கிறார்: “விலை விவகாரம் மிகவும் தெளிவாக உள்ளது. எல்1 (Lowest bidder-மிகக் குறைந்த விலைகேட்டவர்) ஆக நாங்கள் ஏற்கப்பட்ட முதல் நாளில் என்ன விலையோ அதில் எந்த மாற்றமும் இல்லை.” அவர் மேலும் சொன்னது: “ஆர்.எஃப்.பி.க்கு (முன்மொழிவுக் கோரிக்கை) நாங்கள் அளித்த பதிலில் உள்ளவற்றைத்தான் பின்பற்றுகிறோம். இந்த பதில்தான் இந்திய அரசு ரஃபேலை எல்1ஐத் தேர்ந்தெடுக்க வைத்தது. முழுக்க முழுக்க ஆர்.எஃப்.பி. உடன் ஒத்துப்போகும் அந்த விலைக்கு எங்கள் சேவையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்போம்” (பின்னிணைப்பு 14).
• இறுதியாக ரஃபேல் ஒப்பந்தத்தின் விலையையும் இதர தகவல்களையும் ரகசியக் காப்பு உடன்படிக்கையைக் காரணம் காட்டி இந்திய அரசு சொல்ல மறுப்பது போஃபர்ஸ் ஒப்பந்தம் குறித்த தகவல்களை வழங்க மறுத்த அன்றைய அரசு சொன்ன காரணங்களை வேறு வார்த்தைகளில் சொல்வதே ஆகும். அன்றைய அரசு ரகசியக் காப்பின் பெயரில் உண்மைகளை மறைப்பதைக் கடுமையாக விமர்சித்தது பாஜக தலைவர்கள்தான். போஃபர்ஸின்போது என்ன நடந்ததோ அதுதான் இப்போதும் நடக்கிறது. அரசு மக்கள் வரிப் பணத்தை எதற்காக வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம். வெளிநாட்டு அரசுடனான ரகசியக் காப்பு உடன்படிக்கையைக் காரணம் காட்டி அந்தச் செலவுகள் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்திலும் மக்களுக்கும் சொல்லாமல் தவிர்க்கலாம் என்றுதான் இரண்டு நிகழ்வுகளிலும் அரசு சொல்கிறது. இந்த வாதம் ஜனநாயக நாட்டின் வெளிப்படைத்தன்மை, பதில் கூறும் பொறுப்பு ஆகிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது.
• வெளிநாட்டு அரசுடனான ஒப்பந்தம் என்பது நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் அதன் வழியாக தேசப் பாதுகாப்புக்கு நேரடித் தொடர்புடைய உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் மக்களின் உரிமைக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியுமா?
• வெளிநாடு அரசுடனான ஒப்பந்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (கடமைகள், அதிகாரங்கள். சேவை நிபந்தனைகள்) சட்டம் உள்ளிட்ட உள்நாட்டுச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாமா?
• இந்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றால் இந்த ரகசியமான விலை பற்றிய தகவல்கள் மற்றும் இந்தியாவுக்கே உரிய மேம்படுத்தல்கள் ஆகியவை பற்றிய தகவல்களை அரசுத் தரப்பிடமிருந்தே பெற்றிருப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றனவே அது எப்படி?
தேசப் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்
126 போர் விமானங்கள் வாங்குவதற்கான திட்டத்தை தகர்க்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் நிகர விளைவுகள் இவை:
• தேசப் பாதுகாப்புக்குப் பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது.
• அரசு கஜானாவுக்கு மிகப் பெரிய கூடுதல் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
• இந்தியாவில் விமானத் தயாரிப்பில் பல்லாண்டு அனுபவம் கொண்ட ஒரே நிறுவனமான ஹெச்.ஏ.எல். இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது.
• வான்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு தனியார் நிறுவனத்துக்கு மிகப் பெரிய நிதி ஆதாயம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒட்டுமொத்தப் பரிவர்த்தனை, குற்றவியல் ஒழுக்கப் பிறழ்வு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேச நலன், தேசப் பாதுகாப்பு ஆகியவற்றை விலையாகக் கொடுத்து தனிநபர்களை செழிப்படையச் செய்வதற்கான மிகப் பொருத்தமான உதாரணம் இது.
முதலில் அறிவிக்கப்பட்ட திட்டம் ஏன் கைவிடப்பட்டது எந்த விதமான புத்திசாலித்தனமும் இல்லாத ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது தொடர்பான அனைத்து உண்மைகளையும் தோண்டியெடுக்க வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பைக் கண்காணித்தல், ஊழலைத் தடுப்பது, அரசு பதில் கூறும் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்வது ஆகிய கடமைகளைக் கொண்ட நாடளுமன்றமும் இதர நிறுவனங்களும் ஊடகங்களும் அதைச் செய்ய வேண்டும்.
(அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் பாஜக அரசில் அங்கம் வகித்த முன்னாள் மத்திய அமைச்சர்கள். பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர், செயற்பாட்டாளர், ஸ்வராஜ் அபியான் என்ற அமைப்பின் தலைவர்.)
பின்னிணைப்பு 1: பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடக வெளியீடு, ஆகஸ்ட் 28, 2007 தேதியிட்டது.
பின்னிணைப்பு 2: ஏப்ரல் 10, 2015 அன்று வெளியிடப்பட்ட இந்தியா – ஃபிரான்ஸ் கூட்டறிக்கை.
பின்னிணைப்பு 3: யூரோஃபைட்டர் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லிக்கு ஜூலை 4, 2014 அன்று அனுப்பிய கடிதம்.
பின்னிணைப்பு 4: ஃபிரான்ஸுடனான இந்தியாவின் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒரு பெரும் பாய்ச்சல், மார்ச் 3, 2014.
பின்னிணைப்பு 5: அதானி டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் அண்ட் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி.
https://scroll.in/article/889602/yashwant-sinha-arun-shourie-prashant-bhushan-rafale-defence-scandal-is-larger-than-any-thus-far
நன்றி: தி ஸ்க்ரோல்.இன்
yes reliance defense no experience for making fourth generation fighter jet. i think your view is “no one can experience to operate that fighter. so please don’t give to them”. Please mention that HAL infrastructure is better than Reli Def. Dassault Aviation is a private company…
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த அனைத்து உண்மைகள், குறிப்பாக இதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவு குறித்த தகவல்கள் அனைத்தையும் அரசு வெளியிட வேண்டும்.
மோடி :நாங்க என்ன முட்டாள்களா நாங்கள் பண்ணிய தப்பை வெளிப்படையாக சொல்லுவதற்கு
நானும் துன்னமாட்டேன் யாரையும் துன்னவுடவும் மாட்டேன். அதாவது, என்னைச் சேராத யாரையும் துன்னவுட மாட்டேன். நாங்கள் மட்டும் தான் கூட்டுகொள்ளை அடிப்போம். எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது.
அது நாட்டு பாதுகாப்புக்கு பங்கமன்றோ…?
நாங்கள் மட்டும் தான் தேசப்பற்று உள்ளவர்கள். எங்களுக்கு மட்டும் தான் கொள்ளையடிக்க உரிமையுள்ளது. எங்களை யாரும் கேட்டால் அவர்கள் தேச துரோகிகள்.
இம்சை அரசனின் ஆயுத பேர ஊழலை மறைக்க தேச பாதுகாப்புக்கு ஆபத்து !என்ற கூச்சல் !
நான் ஏழை தாயின் மகன்
Good Job savukku