மாநிலங்களவைத் தேர்தலுக்கான பிரமாணப் பத்திரத்தில் பாஜக தலைவர் அமித் ஷா தன் மகனுடைய நிறுவனம் குறித்த பல தகவல்களைக் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இது தவறு. சொல்லப்படாத அந்தத் தகவல்கள் பாஜக தலைவரைப் பற்றிய பல உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன.
அமித் ஷா, தனது மகன் ஜே ஷாவின் வர்த்தக நிறுவனமான குசும் ஃபின்சர்வ் எல்.எல்.பி.க்காகத் தனது இரண்டு சொத்துகளை அடமானம் வைத்தார். இந்நிறுவனம் மோசமான நிதிச் செயல்பாடுகளை மீறி அண்மைக் காலத்தில் பெறும் கடன் வசதி கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் பாஜக தலைவரின் இந்தக் கடன் பொறுப்பு, 2017 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெறவில்லை. பொதுவெளியில் உள்ள ஆவணங்கள், 2016இல் அமித் ஷாவின் இரண்டு சொத்துகள், குசும் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு ரூ,.25 கோடி கடன் பெறுவதற்காக குஜராத்தின் மிகப் பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான கலுப்பூர் வர்த்தக கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டன. தி கேரவனுக்குப் பார்க்க கிடைத்த புதிய ஆவணங்கள், 2016க்குப் பிறகு குசும் ஃபின்சர்வ் ரூ.97.35 கடன் வசதியை பெற்றுள்ளது. இவை முறையே ரூ.10.35 கோடி, ரூ.25 கோடி ,ரூ.15 கோடி, ரூ. 30 கோடி மற்றும் ரூ.17 கோடி என பல கட்டங்களாக இரண்டு வங்கிகள் மற்றும் ஒரு அரசு சார் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன. சமீபத்திய லாப நஷ்டக் கணக்கு அறிக்கையின்படி, நிகர மதிப்பு ரூ.5.83 கோடி என்றபோதிலும், குசும் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடன் கடந்த ஆண்டு மட்டும் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜே ஷா நிறுவனத்திற்கான கடன் வசதியின் ஒரு பகுதி, அகமதபாத்தில் உள்ள மூன்று சொத்துகள் மீது வழங்கப்பட்டுள்ளது. அவை: ஷைலஜ் கிராமத்தில் உள்ள 3,838 சதுர மீ மற்றும் 459 சதுர மீ நிலம் மற்றும் பொடக்டேவில் உள்ள சார்திக்-2 வர்த்தக கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள 186 சதுர அடி அலுவலக இடம்.
ஷைலஜ் நிலங்கள் அமித் ஷாவுக்கு சொந்தமானவை. கலுப்பூர் வங்கி மற்றும் குசும் ஃபின்சர்வ் இடையில், 2016 மே மாதம் செய்யப்பட்ட அடமான ஒப்பந்தத்தில் அவர் 2 வது அடமானம் வைப்பவர் மற்றும் சொத்தின் முழு உரிமையாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜே ஷா, தனது தந்தையின் அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்கான பவர் ஆப் ஆட்டர்னி பெற்றிருப்பவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களைப் பார்த்த நிதி வல்லுனர் ஒருவர், ஒருவர் தன சொத்தைக் கடன் பெற அடமானம் வைக்கும்போது, அவர் உத்தரவாதம் அளிப்பவராகிறார். அவருக்கு லாபத்தில் பங்கு இல்லாவிட்டாலும்கூட, வர்த்தகத்தில் பங்கு இருக்கிறது எனக் கூறினார்.
அமித் ஷா, மாநிலங்களவை உறுப்பினர். மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி, சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரமாணப் பத்திரத்தில் சொத்துகள் மற்றும் கடன் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தவறான தகவல்களை பிரமாணப் பத்திரத்தில் அளித்தால், இந்த சட்டத்தின்படி, தேர்தல் மனு தள்ளுபடி செய்யப்படலாம்.
என்று வேட்பாளர் ஒருவர் பிரமாணப் பத்திரத்தில் கடன் பொறுப்புகளை குறிப்பிடத் தவறினால் என்ன ஆகும் எனும் தி கேரவன் கேள்விக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அளித்த பதில் இது:
“தேர்தல் பிரமாணப் பத்திரம் என்பது முழு உண்மையைக் கொண்டிருக்க வேண்டும். உண்மையைத் தவிர வேறு இருக்கக் கூடாது. இதில் குளறுபடி தொடர்பான முகாந்திரம் இருந்தால், அந்த உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கலாம். இத்தகைய அரசியல்வாதிகளுக்கு எந்த அளவு கடுமையான தண்டனை வழங்குவது என்பதுதான் இங்குள்ள கேள்வி”
இதே நோக்கில், தி கேரவன் தொடர்புகொண்டு கருத்து கேட்ட, இரண்டாவது முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் கமிஷனிடம் சமர்பிக்கப்படும் பிரமாணப் பத்திரங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் மனு தாக்கலின்போது இவற்றை முழுவதும் சரி பார்ப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். “பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் தெரிவிக்கும் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் சட்டத்தின் கீழ் அவர் மீது தனியே நடவடிக்கை எடுக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவின் ஒரு அங்கமாக, பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும். அதில் தங்கள் குற்ற மற்றும் கல்விப் பின்னணியைத் தெரிவிப்பதோடு, வாழ்க்கை துணை மற்றும் தங்களைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட தங்கள் சொத்து மற்றும் கடன் பொறுப்புகள் பட்டியலைச் சமர்பிக்க வேண்டும் என்று தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாகச் செயல்பட்டுவரும் என்.ஜி.ஒ.வான ஜனநாயக சீர்திருதங்களுக்கான சங்கத்தின் நிறுவன உறுப்பினரான ஜகதீப் சொக்கர் சொல்கிறார். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள வடிவத்தில் இந்தத் தகவல்களை அளிக்க வேண்டும் என்கிறார் அவர்.
“தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் யார் ஒருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதிவி இழக்க நேரிடலாம். இந்திய தண்டனைச் சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளின் கீழ் குற்றவியல் விசாரணையையும் எதிர்கொள்ள வேண்டும். உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரும் புகாரை சாதாரண குடிமகன் தேர்தல் ஆணையத்திடம் வழங்கலாம்” என்கிறார் அவர்.
குசும் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு கலுப்பூர் கூட்டுறவு வங்கி ரூ.25 கோடி கடன் மற்றும் பொதுத் துறை அமைப்பு ஒன்று ரூ.10.35 கோடி கடன் வழங்கியதாகப் பொதுவெளியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் பின் பகுதியில், செய்தி இணைதளமான தி வயர் செய்தி வெளியிட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடன் வழங்கல் மும்மடங்காக உயர்ந்துள்ளது. கலுப்பூர் வங்கி மற்றும் தனியார் வங்கியான கோடக் மகிந்திரா வங்கி இந்நிறுவனத்திற்குக் கடன் வழங்கியுள்ளன. இவை முறையே ரூ.40 கோடி மற்றும் ரூ.47 கோடி அளவில் அமைந்துள்ளன. லாப நஷ்டக் கணக்கு அறிக்கைகளின்படி, 2012 – 12 முதல் 2015 – 16 வரையான காலத்தில் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் நஷ்டத்தை சந்தித்திருப்பதோடு, எதிர்மறைச் செயல்பாட்டு மூலதனத்தைப் பெற்றுள்ளது.
2017 ஜூலை மாதம் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அமித் ஷா, ஷைலஜ் சொத்தில் பெரிய நிலத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதன் மதிப்பு ரூ.5 கோடி என தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சந்தைய விலைப்படி சிறிய நிலம் ரூ.55 லட்சம் மதிப்பிலானது. அலுவலக இடம் ரூ. 2 கோடி மதிப்புடையது. குசும் ஃபின்சர்வ் நிறுவனம் இந்த சொத்துகள் தவிர, பங்குகள் மற்றும் புத்தக கடன் அடமானம் மூலம் கலுப்பூர் வர்த்தக கூட்டுறவு வங்கியிடம் இருந்து 2016 மே மாதம் ரூ.25 கோடி கடன் பெற்றுள்ளது. 2017 செப்டம்பரில் இதே வங்கி மேலும் ரூ.15 கோடி வழங்கியது. அதே மாதம், சரக்குகள் மற்றும் புத்தகக் கடனுக்கு எதிராக நிறுவனம் தனியார் வங்கியிடம் இருந்து மேலும் ரூ.30 கோடி கடன் பெற்றது. 2017 ஜூலையில், சனந்த தொழிற் பேட்டையில் உள்ள 15,754.83 சதுர அடி நிலம் நிறுவனத்திற்கு குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகத்தால் (ஜி.ஐ.டி.சி..) குத்தகைக்கு அளிக்கப்பட்டது. இந்தக் குத்தகை கையெழுத்தான பிறகு நிறுவனம் 2018 ஏப்ரலில் தனியார் வங்கியிடமிருந்து ரூ.17 கோடி கடனாகப் பெற்றது. இப்போது இந்த அடமான நிலத்தில் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது.
ஜே ஷாவுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பான செய்திகள், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் ஆகியவற்றை மீறி, குசும் ஃபின்சர்வ், கெடு முடிந்து 9 மாதங்கள் ஆன நிலையிலும், 2016-17ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. எல்.எல்.பி. நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கணக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், இல்லை எனில் நடவடிக்கைக்குள் உள்ளாகலாம். லிமிடெட் லயபிலிட்டி பாட்னர்ஷிப் சட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். 2016 நிதியாண்டிற்கான அறிக்கையைத் தாக்கல் செய்யாததால், நிறுவனத்தின் கடன் சுமை ரூ.97.35 கோடிக்கும் அதிகமானதா என்பதை கேரவனால் உறுதி செய்துகொள்ள முடியவில்லை.
தி கேரவன் அனுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷாவும் கூட்டுறவு வங்கியும் இன்னமும் பதில் அளிக்கவில்லை. ஜே ஷா தனது மேலாளர் மூலம் இவ்வாறு பதில் அளித்துள்ளார்: “சட்டபூர்வமான வர்த்தகத்தைச் சட்டபூர்வமான வழியில் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எங்கள் வர்த்தகத்தின் ஒவ்வொரு பரிவர்த்தனையும் சரியாகக் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு வரி அதிகாரிகள் முன் வைக்கப்படுகிறது. எங்கள் வர்த்தக விவரங்கள் இதழியல் நோக்கில் தேவையானது என நினைக்கவில்லை. இது பொது விவாதம் அல்லது வெளியீட்டிற்கு உரியது அல்ல என்றும் நினைக்கிறோம்.”
சட்ட ஆலோசனை பெற்று பதில் அளிக்க ஏழு நாட்கள் அவகாசமும் கேட்டிருக்கிறார். கூடுதல் பதில் கிடைத்ததும் அதை வெளியிடுவோம்.
“கடன் வழங்குவதில் வங்கி தீவிர நெறிமுறைகள் மற்றும் சரி பார்த்தலைக் கடைபிடிக்கிறது. வாடிக்கையாளர் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பிடம் பகிர்ந்துகொள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதிக்கவிலை” என கோடக் வங்கி பதில் அளித்துள்ளது.
கலுப்பூர் வங்கி மற்றும் குசும் ஃபின்சர்வ் நிறுவனம் இடையிலான அடமான ஒப்பந்தத்தில், நிறுவனத்தின் கையிருப்பு, கடன், சரக்குகள் தன்மை, இயந்திரம் தொடர்பான கட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமலே இருக்கின்றன. சரக்கு கையிருப்பு, பொருட்களின் தன்மை, இதன் மதிப்பு ஆகிய பகுதிகள் வெறுமையாக இருக்கின்றன. தனியார் வங்கியின் அனுமதி கடிதத்தில், அடிப்படை மூலதனம் மற்றும் நிலுவையில் உள்ள கடன்பொறுப்பு ஆகியவை தொடர்பான கணக்குகள் குறிப்பிடப்படவில்லை. ஒரு நிறுவனத்தின் ஆரோக்கியத்தை உணர்த்தும் அம்சங்களாக இவை அமைகின்றன.
1970இல் நிறுவப்பட்ட கலுப்பூர் கூட்டுறவு வங்கி அண்மை ஆண்டுகளில் குஜராத்தின் கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக உருவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியியான அறிக்கையில், குஜராத் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் கூட்டமைப்பு கலுப்பூர் வங்கியை மாநிலத்தின் முன்னணி வங்கியாக அறிவித்துளது. இது 55 கிளைகளுடன் ரூ.6,249 கோடி டெபாசிட் மற்றும் ரூ.4,221 கோடி கடன் வழங்கலைப் பெற்றுள்ளது.
குஜராத்தில் கூட்டுறவு வங்கிகள் கிராமப்புறங்களில் வலுவாகவும் துடிப்பாகவும் இருக்கின்றன. இவை பல நேரங்களில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பாத்திரத்தைப் பூர்த்தி செய்கின்றன. கூட்டுறவு வங்கி வலைப்பின்னல் நேரடியாக அல்லது மறைமுகமாக குஜராத் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியைச் சென்றடைகின்றன. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் அவற்றைக் கட்டுப்படுத்த விழைகின்றன. குஜராத்தில் அதிகார சக்தி பாஜகவின் கையில் இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 18 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் 16 மாவட்ட வங்கிகளைக் கட்சி கட்டுப்படுத்துகிறது. நகர்புறக் கூட்டுறவு வங்கியான கலுப்பூர் வங்கியும் இதற்கும் விதிவிலக்கல்ல.
நிர்மா கல்வி மற்றும் ஆய்வு அறக்கடலையின் தலைவரான அம்புபாய் மகன்பாய் பட்டேல், இந்த வங்கியின் கவுரவத் தலைவராக இருக்கிறார். 2017 தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி குஜராத் துணை முதல்வர் நிதின்பாய் பட்டேல், அவர் மனைவி இந்த வங்கியின் பங்குதாரர்கள்.
கலுப்பூர் வங்கி இரண்டாவது கட்டக் கடனுக்கு அனுமதி அளித்ததுமே செப்டம்பர் 27இல் தனியார் வங்கி ரூ.30 கோடிக்கான அனுமதிக் கடிதத்தை வழங்குகிறது. கே.எம்.பி.எல். வசம் உள்ள கடன் தாரரின் தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் அனைத்து வரக்கூடியவை / நடப்பு சொத்துக்கள் / அசையும், அசையாச் சொத்துக்கள் மீதான அடமானத்தின் மீது பாரிபாசு முறையில் தனியார் வங்கி இந்த கடனை வழங்க முன்வந்தது. நிறுவன புத்தக கடன், கையிருப்பு மற்றும் இயந்திரங்கள் இதில் அடங்கும். ஜே ஷா வங்கியிடம் தனிப்பட்ட உறுதிப் பத்திரமும் அளித்திருந்தார்.
பாரி பாசு முறை என்பது இரண்டு வங்கிகள் அல்லது வங்கிகள் கூட்டமைப்பு ஒரே சொத்தின் மீது கட்டுப்பாடு கொண்டிருப்பதாகும். பைசல் செய்வது என்று வரும்போது, வங்கிகள் கடன் வழங்கிய விகிதத்திற்கு ஏற்ப சொத்து பிரித்துக்கொள்ளப்படும். அதாவது குசும் ஃபின்சர்வ் கடனை திரும்பி செலுத்த முடியாவிட்டால், கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கி தாங்கள் கடன் கொடுத்த ஒரே சொத்துக்காக அடித்துக்கொள்ளும் நிலை உருவாகும்.
தி வயர் வெளியிட்ட கட்டுரை, ஜே ஷாவுக்கு சொந்தமான இன்னொரு நிறுவனமான டெம்பிள் எண்டர்பிரஸ் பிரைவெட் லிட் நிறுவனத்தின் நிதி அம்சங்களில் கவனம் செலுத்தியது. இந்நிறுவன விற்றுமுதல் 16,000 மடங்கு அதிகரித்தது. சில ஆண்டுகள் சொற்ப நஷ்டம் அல்லது லாபத்தை காட்டிய பிறகு 2014-15இல் நிறுவனம் ரூ.50,000 வருமானத்தை காட்டியது. அடுத்த ஆண்டு அதன் விற்றுமுதல் ரூ.80.5 கோடியாக இருந்தது. இருப்பினும் 2016 அட்க்ரோபரில், நிறுவனம் வர்த்தகத்தை முழுவதுமாக நிறுத்திக்கொண்டு அதன் இயக்குனர் அறிக்கையில் நிறுவன நிகர மதிப்பு முழுவதும் இழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தி கேரவன் நடத்திய புலணாய்வு, ஜே ஷாவின் வர்த்தகம், டெம்பிள் என்டர்பிரைஸ் நிறுவனத்திலிருந்து குசும் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக அறிய முடிகிறது.
தி வயர் கட்டுரை வெளியான ஐந்து நாட்கள் கழித்து அமித் ஷா, இந்தியா டுடே குழுமம் நடத்திய மாநாட்டில் பேசினார். அப்போது அவர், தனது மகனின் டெம்பிள் என்டர்பிரைசஸ் அரசுடன் ஒரு ரூபாய்க்குக்கூட வர்த்தகம் செய்யவில்லை என்றும், ஒரு ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தைக்கூட வாங்கவில்லை என்றும், ஒரு ரூபாய் மத்திப்பிலான அரசு ஒப்பந்தம்கூடப் பெறவில்லை என்றும் தெரிவித்தார். பாஜக தலைவர் சொல்வது சரிதான். டெம்பிள் என்டர்பிரைஸ் இந்த மூன்றில் எதையுமே செய்யவில்லை. ஆனால் அவர் சொன்ன அனைத்தும் அவரது மகனின் இன்னொரு வர்த்தகமான குசும் ஃபின்சர்வ் மூலம் நடைபெற்றுள்ளது. நிறுவனம் பொதுத் துறை நிறுவனமான ஐ.ஆர்.எ.டி.ஏவிடம் இருந்து கடம் பெற்றது. ஜி.ஐ.சி.சி. மூலம் 15,000 சதுர அடி நிலம் பெற்று அதனுடன் ஒப்பந்தமும் செய்துகொண்டது.
மாநிலத்திற்குச் சொந்தமான, ஜி.ஐ.டி.சி.. குஜராத்தில் தொழில்பேட்டைகளை உருவாக்கிவருகிறது. 2010இல் டாடா மோட்டார்ஸ் சனந்தில் தனது டாடா நேனோ ஆலையைத் துவக்கியது. அதன் பிறகு ஜி.ஐ.டி.சி.. இந்தப் பகுதியைத் தொழில் பகுதியாக உருவாக்கியது டாடாவுக்குப் பின் போர்டு நிறுவனம் வந்தது. இன்று இந்தப் பகுதியில், கோகோகோலா, நெஸ்லே, பாஷ், ஹிட்டாச்சி மற்றும் கோல்கேட் பாமாலிவ் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.
குசும் ஃபின்சர்வ் – இதன் பெயர் அமித் ஷாவின் தாய் குசும்பென் ஷாவை ஒத்திருக்கிறது – 2017 மே மாதம் ஜி.ஐ.டி.சி..யிடம் இடம் கேட்டு மனு செய்தது. இரண்டு மாதங்கள் கழித்து 15,754.83 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. 2017, ஜூலை மாதத்தில் அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ அனுமதிக் கடிதத்தில் இதன் மதிப்பு ரூ.6.33 கோடி என கணக்கிடப்பட்டிருந்தது.
எட்டு மாதங்கள் கழித்து, 2018, மார்ச்சில் ஜி.ஐ.டி.சி.. குசும் ஃபின்சர்வ் நிறுவனத்துடன் குத்தகை ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒரு மாதம் கழித்து, தனியார் வங்கி இந்த நிலம் மற்றும் அடமான பங்குகளுக்கு எதிராக ரூ.17 கோடி வழங்கி மொத்தக் கடனை ரூ.47 கோடியாக்கியது.
ஜி.ஐ.டி.சி.. இணையதளம் நில ஒதுக்கீட்டிற்கான நெறிமுறை பற்றி குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 100க்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த நெறிமுறைப்படி தொழில் துவங்குவதற்கான நிதி அடிப்படைக்கு 20 மதிப்பெண்கள். ஜி.ஐ.டி.சி. மதிப்பீட்டில் குசும் ஃபின்சர்வ் எப்படி இருந்தது என்பதை கேரவனால உறுதி செய்ய முடியவில்லை என்றாலும், 2015-16 ல் மோசமாக இருந்த லாப நஷ்டக் கணக்கு, ஜி.ஐ.டி.சி. பெரிய நிலம் வழங்கியது தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது.
குசும் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு நிலம் வழங்கப்பட்டது தொடர்பான ஆவணத்தை பெறுவதற்கான கேரவனின் முயற்சி பலன் தரவில்லை. ஜி.ஐ.டி.சி.யின் சனாந்தில் உள்ள பிராந்திய மேலாளர் தீப்தி மராத்தா ஆவணம் வழங்க மறுத்துவிட்டார். கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும் என கூறிவிட்டார்.
சனாந்தின் போல் கிராமத்தில் உள்ள ஜி.ஐ.டி.சி. அலுவலகத்திற்கு இந்த நில ஒதுக்கீடு பற்றி விசாரிக்க சென்ற போது, நில துறையை சேர்ந்த அதிகாரி, மற்றொரு அதிகாரி வர வேண்டும் என்று கூறினார். குசும் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எண் 55,56,57 ஆகிய பிளாட்கள் பற்றித் தகவல் கேட்க வந்திருக்கிறீர்களா என அங்கிருந்தவர் கேட்டார். ஆம் என்றேன்.
“இந்த பிளாட்கலின் உரிமையாலர் யார் எனத் தெரியுமா?” என்று கேட்டார்.
“தெரியும்,” என்றேன்.
இரண்டாவது நபர் மவுலில் சுக்காடியா. இதற்கு முன்னர் குசும் ஃபின்சர்வ் நிறுவனத்தில் வேலை செய்தார். ஜி.ஐ.டி.சி. நிலத்திற்கான தனியார் வங்கி அடமான ஒப்பந்தத்தில் இவர் சாட்சிக் கையெழுத்திட்டுள்ளார். என் கேள்விகளுக்கு இருவருமே பதில் அளிக்கவில்லை. மேற்கொண்டு கேள்வி கேட்பதை ஊக்குவிக்கவும் இல்லை.
இந்த நிலத்தை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. சனாந்த் வாளகத்தில் அதைக் கண்டுபிடிக்க இரண்டு மணி நேரம் ஆனது. தொழிற்சாலை பெயரை உணர்த்தப் பெயர்ப் பலகை எதுவும் இல்லை. நிலத்தில் தொழிற்சாலை பெரிதாக இருந்தது. காவலாளி என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. வங்கி ஆவணங்கள்படி, தொழிற்சாலை பிபி, எச்டிபி.இ ஜம்போ பைகளைத் தயாரிக்கிறது. தொழிற்சாலையில் என்ன உற்பத்தி செய்யபடுகிறது என்பதை அங்கே அறிய முடியவில்லை.
குசும் ஃபின்சர்வ் 14 நிறுவனங்களின் பங்குகளை அடமானம் வைத்துத் தனியார் வங்கியிடமிருந்து ரூ.17 கோடி கடன் பெற்றுள்ளது. இந்தப் பங்குகளின் மதிப்பு இந்த ஆண்டு மே மாதக் கணக்குப்படி ரூ.13.62 கோடி என வங்கி ஆவணம் தெரிவிக்கிறது.
வங்கிக் கடன் தவிர, குசும் ஃபின்சர்வ், கே.ஐ.எப்.எஸ். எனும் நிறுவனத்திடமிருந்து ஈடு செய்யப்படாத கடன் பெற்றுள்ளது. இதன் புரமோட்டர் ராஜேஷ் கண்ட்வாலா எப்ன்பவர். 2014 மற்றும் 2015 நிதியாண்டுகளில் நிறுவனம் குசும் ஃபின்சர்விற்குக் கடன் வழங்கியுள்ளது. ஆனால் அடுத்து வந்த ஆண்டுகளுக்கான ஈடுசெய்யப்படாத கடனுக்கான விவரம் வெளியிடப்படவில்லை. கண்ட்வாலா மாநிலங்களவை உறுப்பினர் பரிமள் நத்வானியின் உறவினர். இவர் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் குழும தலைவர். கண்ட்வாலாவின் மகள் நத்வானியின் மகனை மணந்துகொண்டுள்ளார். தி வயர் அனுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த ஜே ஷாவின் வழக்கறிஞர், கண்ட்வாலாவைப் பல ஆண்டுகளாக ஷா குடும்பத்தின் பங்கு தரகராக இருப்பவர் எனக் குறிப்பிடுகிறது.
வடிவங்கள் மாறியது ஜே ஷா நிறுவனங்களுக்கு நல்ல பலன் அளித்துள்ளது. டெம்பில் என்டர்பிரைஸ் ஓராண்டில் 16,000 மடங்கு விற்றுமுதல் உயர்வு கண்டு, அதன் பிறகு திடீரென மூடப்பட்ட நிலையில், குசும் ஃபின்சர்வ் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு வர்த்தகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
பொது ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளின்படி பார்த்தால், குசும் ஃபின்சர்வ், பங்கு பரிவர்த்தனை, ஆலோசனை, கோக் மற்றும் நிலக்கரி வர்த்தகம்,. சிமெண்ட் பை உற்பத்தி எனப் பலவிதத் தொழில்களில் ஈடுபட்டுள்ளது. பொது ஆவணங்களின்படி, ஜே ஷாவுக்கு 60 சதவீதப் பங்கு உள்ளது. அவரது மனைவி ரிஷிதா ஷாவுக்கு 39 சதவீதப் பங்கு உள்ளது. ஒரு சதவீதப் பங்கு பிரதீப்பாய் கனித்லால் ஷாவிடம் உள்ளது.
“பங்குகள் பரிவர்த்தனை, ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கை மற்றும் விநியோகம், ஆலோசனை சேவைகள் ஆகியவற்றில்” குசும் ஃபின்சர்வ் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தி வயர் இதழுக்கான பதிலில், ஜே ஷாவின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். 2014-15ஆம் ஆண்டுக்கான நிறுவன அறிக்கை, விவசாயப் பண்டக வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதையும் உணர்த்துகிறது. ஆலோசனைச் சேவைகள் 60 சதவீத விற்றுமுதலுக்கும், பண்டக வர்த்தகம் 29 சதவீதத்திற்கும் குறைவாகப் பங்களிப்பு செலுத்தியுள்ளன. கலுப்பூர் வங்கிக் கடன் வசதி தொடர்பான ஆவணம், கோக் மற்றும் நிலக்கரி வர்த்தக நடவடிக்கை பற்றிக் குறிப்பிடுகிறது. நிறுவனம் 2012இல் குசும் ஃபின்சர்வ் பிரைவட் லிட்டாக நிறுவப்பட்டாலும், 2014-15ஆம் ஆன்ண்டிலிருந்துதான் பல்வேறு வர்த்தகங்களுக்கான விற்றுமுதலை காண்பிக்கத் தொடங்கியது. 2015, ஜூலையில் பிரைவட் லிட்டில் இருந்து எல்.எல்.பி.யாக மாறியது.
2016, மார்ச்சில் பொதுத் துறை நிறுவனமான இந்திய மறுசுழற்சி எரிசக்திக் கழகத்திடமிருந்து (ஐ.ஆர்.இ.டி.ஏ.) நிறுவனம் ரூ.10.35 கோடி கடன் பெற்றது. மத்தியப் பிரதேசத்தின் ராட்லம் மாவட்டத்தில், 2.1 மெகாவாட் காற்றாலை அமைக்க இந்த கடன் பெறப்பட்டது. நிறுவனத்திற்குக் காற்றாலைத் துறையில் அனுபவம் இல்லாத நிலையில் இந்தக் கடன் அளிக்கபப்ட்டது. மேலும் இந்த அக்டன், இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் நெறிமுறைகளுக்கு விரோதமாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு மெகாவாட் ஆலைக்கு மற்றும் 70 சதவீதத் திட்டச் செலவுக்கு மட்டுமே கடன் வழங்க முடியும் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு மெகாவாட் காற்றாலை அமைக்க ரூ. 4 முதல் ரூ.7 கோடி ஆகலாம். அதிக செலவு மிக்க ஆலை என்றால்கூட, 70 சதவீதத் திட்டச் செலவு என்பது ரூ.4.9 கோடிதான். குசும் ஃபின்சர்விற்கு இதற்கு இரு மடங்கு தொகை அளிக்கப்பட்டுள்ளது. 2017 அக்டோபரில் தி வயர் இதழில், அந்த ஆண்டு ஜூன் வரை வெளியே உள்ள கடன் ரூ.8.52 கோடி என ஜே ஷாவின் வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். எனினும் இது எம்.சி.ஏ. இணையதளத்தின் நிறுவனத் தகவலில் இடம்பெறவில்லை.
2015-16ஆம் ஆண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்பதால், குசும் ஃபின்சர்வ் நிறுவனத்தின் தற்போதையை நிலை குறித்து மேலும் அறிய முடியவில்லை. நிறுவனம் 2016-17க்கான ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்திருந்தாலும், அதன் விவகாரங்கள் தொடர்பான நிதி நிலை விவரங்கள் இடம்பெறவில்லை. எல்.எல்.பி.யின் வர்த்தகம் ரூ.5 கோடிக்கு மேல் என்று மட்டுமே குறிப்பிடுகிறது.
இப்போது இந்நிறுவனம் பிளாஸ்டிக் பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரத்தக விவகாரத்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் இது தொடர்பான எந்த முன் அனுபவத்தையும் தெரிவிக்கவில்லை.
கலுப்பூர் வங்கி மற்றும் குசும் ஃபின்சர்வ் இடையிலான அடமான ஒப்பந்தத்தில், பங்கு, புத்தக கடன் மற்றும் இயந்திரங்கள் தொடர்பான பகுதி பூர்த்தி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: தி கேரவனுக்கு, ஜகதீப் கொக்கர் தெரிவித்த கருத்துக்களின் பத்தி, மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின் கீழான தேவைகள் குறித்த புரிதலுக்காகக் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
தி கேரவனுக்குக் கிடைத்துள்ள புதிய ஆவணங்கள், 2016க்குப் பிறகு ஜே ஷாவின் குசும் ஃபின்சர்வ் ரூ.97.35 கோடி கடன் வசதி பெற்றிருப்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இது 300 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமித் ஷா 2017இல் மாநிலங்களவைத் தேர்தலுக்காக மனு தாக்கல் செய்கிறார். மக்கள் பிரதிநித்துவச் சட்டத்தின்படி, சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகள் அனைத்தையும் பட்டியலிட வேண்டும்.
அகமதாபாத்தில், கடனுக்காக அடமானம் வைக்கப்பட்டுள்ள அமித் ஷாவுக்குச் சொந்தமான நிலங்களை குறிக்கும் ஷைலஜ் கிராம வரைபடம்.
குசும் ஃபின்சர்வ் நிறுவனத்திற்கான நிலத்தில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது.
கவுஷல் கிஷோர்
http://www.caravanmagazine.in/politics/amit-shah-jay-liability-election-affidavit-credit-kusum-finserve
நன்றி: தி கேரவன்
Dear Savukku, please write article about corruption with evidence of present government or ruling party. we expect 2g leaks, real estate, jaki, sand mofiya, mannarkudi mafiaya etc.. not translate or copy from others. i want your words. we trust…you know media much expose last government…