இடைத் தேர்தல் என்பது பள்ளிகளில் நடத்தப்படும் மாதாந்தரத் தேர்வைப் போன்றது. அதில் பெறப்படும் மதிப்பெண்கள் (வாக்குகள்) இறுதித் தேர்வில் எந்தப் பயனும் அளிப்பதில்லை அண்மையில் நடந்து முடிந்த இன்னொரு சுற்று இடைத் தேர்தல்களில் பாஜகவின் தோல்வியை எதிர்க்கட்சிகள் கொண்டாடத் தொடங்கியிருப்பது பருவம் வருவதற்கு முன்பே பயிர் செய்வதைப் போன்றது. இதை வைத்து 2019 பொதுத் தேர்தலில் வென்றுவிட முடியும் என்று இந்தியாவின் பிரதான கட்சி நினைத்துவிடக் கூடாது.
இது அதிக ஒற்றுமை மிக்க எதிர்க்கட்சிகளின் சவால் என்பதைப் பற்றியது மட்டுமல்ல. உண்மையில் உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கைரானாவீல் இருந்து மகாராஷ்டிரத்தின் பந்தாரா – கொண்டியாவை வரை பாஜகவின் வாக்கு சதவீதம் குறையத் தொடங்கியிருக்கிறது. அரசுக்கெதிரான வாக்காளர் மனநிலை பரவிவருவதன் முதல் வலுவான சமிஞை இது. இந்த தேர்தல் பின்னடைவு வடக்கு, மேற்கு மாநிலங்களிலிருந்து வந்திருப்பது அதற்கான முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. ‘வடக்கு – மேற்கு’ இந்திய அலைதான் பாஜகவின் 2014 வெற்றிக்கு பெரும்பங்களித்தது.
மோடி பிரச்சாரம் செய்யவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த இடைத் தேர்தல்களில் அடைந்த தோல்வியை பாஜக எளிதாகக் கடந்துவிட முடியாது. ஏனென்றால் கைரானாவில் வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள், அருகில் உள்ள பாக்பத் மாவட்டத்தில் பிரதமர் ஒரு புதிய விரைவுச் சாலைத் திட்டத்தை தொடங்கிவைத்து அந்தப் பிராந்தியத்துக்கு “அச்சே தின்” (நல்ல நாள்) வரும் என்று இன்னொரு முறை உறுதி அளித்தார். மேலும் பாஜகவின் உத்தரப் பிரதேச இந்துத்துவ முகமான முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்கும் நிறைந்திருந்தார். பல பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினார். பிரச்சாரத்தின்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஜின்னாவின் புகைப்படத்தை நீக்குதல் என்ற மதப்பிளவைத் தூண்டும் விஷயத்தையும் கையிலெடுத்தார்.
மே 2018, மே 2014ஐப் போல் இல்லை. அப்போது முஸாபர் நகர் கலவரங்கள் நடந்து முடிந்த கொடூரச் சூழலில் மதப் பிளவை ஏற்படுத்தி மேற்கு உபியின் அனைத்துத் தொகுதிகளையும் பாஜக வென்றது. தற்போது தங்கள் நிலுவைத் தொகையைக் கேட்கும் கரும்பு விவசாயிகளின் போராட்டத்தில் வெளிப்பட்ட அன்றாட நடைமுறை சார்ந்த பிரச்சினையால் ‘கன்னா’, ஜின்னாவைப் பயன்படுத்திப் பின்னப்பட்ட பிளவு அரசியலை வெற்றிகொண்டது. அப்படியென்றால், தொலைக்காட்சி விவாதங்களில் பிரதானப்படுத்தப்படும் ‘தேசிய’ விவகாரங்களை விட உள்ளூர் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய அரசியல் கதையாடல் 2019 பொதுத் தேர்தலில் முன்னிறுத்தப்படுமா? ஆமாம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம்.
உள்ளூர் பிரச்சினைகள் தேர்தலில் நேரத்தில் முக்கியத்துவம் பெறுவது உண்மைதான். குறிப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கூட்டணிகளின் பிரச்சாரம் வாயிலாக அவை மக்களுக்கு எடுத்துச் செல்லப்படும்போது அவற்றின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். கைரானாவில் இதுதான் நடந்தது. பிஜேபிக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ராஷ்ட்ரிய லோக் தள வேட்பாளரை ஆதரித்தன. இதனால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையின் பயனால் வாக்கு எண்ணிக்கை பலம் கிடைத்தது. ’கன்னா’ பிரச்சினையை முன்வைத்து தன்னம்பிக்கையுடன் களம் காண முடிந்தது. ஆனால் இந்த ‘உள்ளூருக்கு ஏற்ற செயல்பாடு” என்ற செய்தியை பொதுத் தேர்தலின்போது 29 மாநிலங்களில் பரவியுள்ள 543 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது மிகப் பெரிய சவால்தான்.
அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள போட்டி மனப்பான்மையைத் தாண்டி இடைத் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு இடமளிக்க முன்வருவதுபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இடைத் தேர்தலின்போது செய்ததைப் போல் பொதுத் தேர்தலிலும் தான் போட்டியிட விரும்பும் உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகளை விட்டுக்கொடுக்க முன்வருமா? தன் மாநிலத்தில் காங்கிரஸுடன் போர் புரிந்துகொண்டிருக்கும் மமதா பானர்ஜி பொதுத் தேர்தலில் அக்கட்சிக்குத் தன் மாநிலத்தில் தொகுதிகளை எப்படி ஒதுக்குவார்?
வாக்காளர்கள் பார்வையில் 2019 தேர்தலை ‘மோடியும் அவரை எதிர்ப்பவருக்குமான போட்டி’யாக, ஒரு தொலைக்காட்சிப் போட்டி நிகழ்ச்சியைப் போல மாற்ற பாஜக தீவிரமாக முயலும். ஒற்றைத் தலைமை என்ற வலையில் எதிர்க்கட்சிகள் சிக்கிக்கொண்டால் ஒரே ஒரு வெற்றியாளர்தான் இருக்க முடியும். நெடுநீள ஓட்டப் பந்தயங்களில் கடைசி 100 மீட்டர்களில் வேகமெடுத்து வெற்றிபெறும் தடகள வீரரைப் போல ஒவ்வொரு தேர்தலிலும் மோடி தனது தளராத ஆற்றல், ஆளுமைக் கவர்ச்சி ஆகியவற்றால் இறுதிக் கட்டத்தில் பாஜகவை வெல்ல வைக்கும் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தவிர, இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு குறைவாகவே இருக்கும். ஆனால் பொதுத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் – பாஜக தேர்தல் இயந்திரத்தின் பிரம்மாண்ட அளவும் வளங்களும் ’மதில் மேல் பூனை’ மனநிலையில் இருக்கும் வாக்காளர்கள் மோடி பிம்பத்தால் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள் என்ற தன்னம்பிக்கையை சங் பரிவாரத்துக்கு வழங்கிவிடும்.
அதே நேரம் கர்நாடகாவும் கைரானாவும். அரசியலில் தோற்கடிக்கவே முடியாத தன்மை என்பதும் கற்பனைக் கதைகளில் மட்டுமே சாத்தியம் என்பதையும் நிரூபித்திருக்கின்றன. மோடியும் அவரது தலைமைத் தளபதி அமித் ஷாவும் தாங்கள் தகர்க்கப்பட முடியாதவர்கள் என்று எதிர்க்கட்சிகளை நம்பவைத்துவிட்டதன் மூலம் தங்களுக்கு ஒரு மிகை யதார்த்த பிம்பத்தை ஏற்படுத்திக்கொள்வதில் வெற்றிகண்டுவிட்டனர்.
கிரிக்கெட் உலகிலிருந்து இதுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஸ்டீவ் வா தலைமையிலான ஆஸ்திரேலிய அணியையும் கிளைவ் லாய்ட் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணியையும் போல. இந்த இரு அணிகளும் டாஸ் போடுவதற்கு முன்னரே வெற்றியை உணரத் தொடங்கிவிட்டனர். ஏனென்றால் எதிரணிகள் அவர்களைத் தோற்கடிப்பது பற்றி கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் 1983இல் மேற்கு இந்தியத் தீவுகளை வென்று இந்தியா உலகக் கோப்பையைக் கைப்பற்றியதும் 2001இல் கொல்கத்தாவில் இந்திய – ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் நடந்த அசாத்தியமான திருப்பமும் போதுமான தன்னம்பிக்கை இருந்தால் வெல்லப்பட முடியாதவர்களாகத் தோன்றுபவர்களையும் வென்றுவிட முடியும் என்பதைக் காட்டின.
கடந்த நான்கு ஆண்டுகளில் எல்லா நிலைகளிலும் நிராகரிக்கப்பட்டு தோல்வியைப் பெற்ற எதிர்க்கட்சிகள் இப்போது ஆளும் கட்சிக்குச் சவால் விடும் வலுவான எதிரியாக வளர்ந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளின் நீடிப்பதற்கான உள்ளுணர்வு என்ற அரசியல் ஆயுதம்தான் இதற்கு முக்கியக் காரணம். கர்நாடகாவில் அரசமைக்காமல் ஹெச்.டி.குமாரசாமிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்ததையும் பழையவற்றை மறந்து விட்டு பிரதான எதிரியை வெல்லும் ஒரே நோக்குடன் மாயாவதி, பிடிவாத அரசியலைக் கைவிட்டு எதிரிகளுடன் இணக்கம் காண முயல்வதையும் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஆதிக்கம் செலுத்தும் கட்சி எதிர்க்கட்சிகளின் முன்னேற்றத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லைதான். இடைத் தேர்தல்களில் தோல்வி அடைந்து சில நாட்களுக்குள் மோடி – ஷா ஜோடி திருத்த நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. சர்க்கரை உற்பத்தித் துறைக்கு ஒரு மிகப் பெரிய திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தாமதமான நடவடிக்கைதான் என்றாலும் கைரானாவுக்குப் பிறகாவது கன்னா விவசாயிக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்க வேண்டும் என்று அரசுக்குத் தோன்றியிருக்கிறது.
பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற பல சலுகைகளை எதிர்பார்க்கலாம். மோடி அரசு, பெட்ரோல் வரியால் நிரம்பியுள்ள பணப்பெட்டியிலிருந்து ரொக்கத்தை அள்ளி அதைச் சாமானிய மக்களுக்கு வழங்கக்கூடும். ஷா தற்போதே கூட்டணித் தலைவர்களைச் சந்திக்கவும் கபில் தேவ் முதல் முன்னாள் ராணுவத் தலைவர் வரை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் தொடங்கிவிட்டது அண்மைய வருங்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான மற்றொரு குறியீடு. 2019 தேர்தல் நெருங்குகையில் நண்பர்களைப் பெறும் கலையை, மக்கள் மனங்களில் செல்வாக்கு செலுத்தும் கலையை மீண்டும் பயில வேண்டியிருக்கும்.
‘ஏக் லா சலோ ரே’ புத்துணர்ச்சி அளிக்கும் பாடல்தான். ஆனால் அது நல்ல அரசியலுக்கு மட்டுமே பயன்படும் என்று சொல்லிவிட முடியாது.
ராஜ்தீப் சர்தேசாய்
நன்றி: https://www.thenewsminute.com/article/lessons-bye-polls-and-assembly-elections-run-2019-86490
ஏம்ப்பா சவுக்கு நீயும் ராஜ்தீப் சர்தேசாயும் ராவுல் வின்சி தங்கியிருக்கிற ரிசார்ட்டியில் சென்று பாடம் எடுக்காலேமே
????
bjp will win in 2019..donot woory