லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, தமிழகத்தில் இருக்கும் துறைகளிலேயே மாறுபட்ட ஒரு துறை. 1991 முதல் 2008 வரை அங்கே பணியாற்றிதால் எனக்கு இத்துறையைப் பற்றி முழுமையாக தெரியும். இதர அரசுத் துறைகளைப் போல அல்லாமல், இத்துறையில் உள்ளவர்கள், நட்புணர்வோடு பழகுவார்கள். இதர அலுவலகங்களில் உள்ள சிறு சிறு பூசல்கள் இங்கேயும் உண்டு என்றாலும், மற்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்ச லாவண்யங்களில் திளைப்பது போல, இத்துறையில் பெரிய அளவில் ஊழல் இல்லை.
இத்துறையில் பணியாற்றிய அதிகாரிகளில் சிலர், ரகசிய நிதியினை கொள்ளையடித்துள்ளனர். காலப்போக்கில் 2001ம் ஆண்டுக்கு பிறகு, ரகசிய நிதியினை கொள்ளையடிப்பது ஒரு தவறே இல்லை என்ற நிலை உருவாகியது. அப்படி ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்கள் வந்திருந்தாலும், இது வரை, தனக்குக் கீழ் பணியாற்றிய பெண் ஊழியர்களிடம் ஆண் அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொண்டனர் என்ற புகார் எழுந்தது கிடையாது.
இப்போது முதல் முறையாக ஒரு பெரும் புகார் எழுந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி தனக்குக் கீழ் பணியாற்றிய ஒரு பெண் எஸ்பியிடம் முறைகேடாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்பதே அந்த புகார். அப் புகாருக்கு உள்ளானவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் இணை இயக்குநர் முருகன் ஐபிஎஸ்.
முருகன் மீது இது வரை பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது இல்லை. பெண் விவகாரம் குறித்தும் புகார்கள் எழுந்தது இல்லை.
அதனால் அவர் ஊழல் பேர்வழி அல்ல என்றோ, பெண் விவகாரத்தில் ஒழுக்கமானவர் என்றோ சொல்ல முடியாது என்பதை மிக சமீபமாகத்தான் புரிந்து கொண்டேன்.
ஆகஸ்ட் 5 அன்றுதான், முதன் முதலாக முருகன் ஒரு பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. அதற்குப் பிறகே முருகன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தொடங்கினேன். முருகன் விழுப்புரம் டிஐஜியாக இருந்தபோதே அவர், நெய்வேலி, மற்றும் பண்ருட்டியில் பணிபுரிந்த இரண்டு க்ரூப் 1 பெண் டிஎஸ்பிக்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார் என்ற தகவல் கிடைத்தது . பிறகு விசாரித்தால், லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கூடுதல் எஸ்பியாக இருந்த ஒரு பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்ற தகவலும் கிடைத்தது.
சிபிஐயில் இவர் பணியாற்றியபோது, இவரது மனைவி, முருகனுக்கு மற்றொரு பெண்ணோடு தொடர்பு உள்ளது என்ற புகாரோடு, அப்போதைய சிபிஐ இணை இயக்குநர் அஷோக் குமாரிடம் புகார் செய்தார். அஷோக் குமார் முருகனை அழைத்து நேரடியாக கண்டித்தார் . அதன் பிறகு, சிபிஐயில் முருகன் எந்த சேட்டையும் செய்யவில்லை.
தற்போது நடந்துள்ள விவகாரம் மிகவும் அருவருக்கத்தக்க ஒரு நிகழ்வு. சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியின் புகாரில் சில முக்கிய புகார்களை மட்டும் பார்ப்போம்.
“மிகுந்த வேதனையோடு இந்த புகாரை நான் எழுதுகிறேன். லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக முருகன் 14 ஜுலை 2017ல் பணியாற்றத் தொடங்கியது முதல் நான் அவரிடம் பணி செய்து வருகிறேன்.
பணியில் சேர்ந்த நாள் முதலாக, முருகன் அவர்களின் நடத்தை, ஒரு உயர் அதிகாரியினுடையது போல இருந்தது இல்லை
பல சமயங்களில் முருகன் என்றை நள்ளிரவில் தொலைபேசியில் அழைப்பார். அவர் என் மேலதிகாரி என்பதால், நான் அவர் அழைப்புக்கு தவறாமல் பதில் கூறுவேன். நாளாக நாளாக, இரவு நேரங்களில் அவரின் தொலைபேசி அழைப்புகள் அலுவல் ரீதியானவை அல்ல என்பதை உணர்ந்தேன். பல நேரங்களில் அவர், என்னை தொலைபேசியில் அழைத்து, எனது தனிப்பட்ட வாழ்க்கை, மற்றும் என்னைப் பற்றிய உரையாடல்களாக இருப்பதை அறிந்து, நான் அவரின் இரவு நேர அழைப்புகளை ஏற்காமல் விட்டேன். அலுவல் தொடர்பான பணிகள் குறித்து, நான் அவருக்கு வாட்ஸப்பில் செய்தியாக அனுப்பத் தொடங்கினேன்.
இதன் பிறகு, முருகன் என்னை அவரது அறைக்கு அடிக்கடி அழைக்கத் தொடங்கினார். பல கோப்புகளில் விவாதிக்க வேண்டும் என்று குறிப்பிடுவார். சில மணித் துளிகள் அலுவல் பணி குறித்து பேசி விட்டு, பிறகு, நான் உடுத்தும் உடை, என் சிகையலங்காரம், என் தோற்றம் ஆகியவை குறித்து பேசத் தொடங்குவார். பல நேரங்களில், இரட்டை அர்த்த வசனங்களோடு பேசுவார். நான் சங்கடத்தில் நெளிந்தாலும் அது குறித்து கவலைப்படமாட்டார்.
ஒரு கட்டத்தில் நான் பொறுமை இழந்து, “சார் நீங்கள் என் உயர் அதிகாரி. அதனால்தான் நான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். அலுவல் ரீதியாக பேச எதுவும் இல்லையென்றால், நான் வெளியேறுகிறேன்.” என்று கூறி விட்டு பல முறை வெளியேறியுள்ளேன். இதற்கு பிறகும் அவர் அறைக்கு விவாத்தத்துக்கு செல்கையில், அவர் தனது செல்போனில் என்னை புகைப்படம் எடுப்பார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், இதை என் மனையிடம் காட்டுவதற்காக எடுக்கிறேன் என்பார் (ஆண்டவா, இதை முருகனின் மனைவி படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்).
ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து கொண்டு இப்படி புகாரளித்தால், என்ன நிகழும் என்பது எனக்கு தெரியும். அதனால் நீங்கள் செய்வது தவறு என்று பல முறை அவரிடமே நேரடியாக புகார் அளித்துள்ளேன்.
இதன் பிறகு முருகன் என் மீது கோபம் கொள்ளத் தொடங்கினார். தொலைபேசியிலும், நேரிலும் அவர் வேண்டிய விளக்கங்களை அளித்தாலும், தொடர்ந்து என்னை திட்டுவார்.
ஒரு கட்டத்தில் எனது ஆண்டு ரகசிய அறிக்கையில் (Annual Confidential Report) நான் சரியாக வேலை செய்யாதவள் என்று எழுதி விட்டால், எனக்கு ஐபிஎஸ் கிடைக்காது என்பதை நேரடியாக கூறினார். இப்படி என்னிடம் கூறியதன் மூலம் அவர் எனக்கு உணர்த்த விரும்பியது. “எனக்கு பணியாவிட்டால், பதவி உயர்வு இல்லாமல்” செய்து விடுவேன் என்பதே.
அதன் பிறகு தொடர்ந்து, வாட்ஸப்பில் ஒரு நாளைக்கு 20-25 முறை வாட்ஸப்பில் தொடர்பு கொள்வார். இரவு நேரங்களில் அழைப்பார்.
ஆனால் அவர் மே மற்றும் ஜுன் 2018ல், ஐதராபாத் தேசிய காவல்துறை அகாடமிக்கு பயிற்சிக்கு சென்ற பிறகு, இந்த தொல்லைகள் அதிகமாகின. அதன் பிறகு அவர் என்னை வாட்ஸப்பில் அழைத்து, எங்கே இருக்கிறேன். என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது போன்ற கேள்விகள் அதிகமாகின. அவர் உயர் அதிகாரி என்பதால் என்னால் அவர் அழைப்புகளை தவிர்க்க முடியவில்லை.
அவர் பயிற்சி முடிந்து பணிக்கு திரும்பியதும் அவர் மதியம் உணவருந்தி விட்டு ஓய்வில் இருக்கும் நேரங்களில் அழைக்கத் தொடங்கினார். அவர் மதிய உணவு முடிந்த ஓய்வு நேரத்தில் யாரையுமே பார்க்க மாட்டார்.
பிறகு ஒரு நாள் என்னை அழைத்து, “உன்னை எதற்கு அழைத்தேன் தெரியுமா ? எந்த காரணமும் இல்லை. உன்னை பார்த்தால் போதும். அதற்காகத்தான் அழைத்தேன் ” என்று கூறினார்.
முருகன் பேசிய பல வார்த்தைகளை என்னால் இந்த புகாரில் கூற முடியவில்லை. அவ்வளவு ஆபாசமாக இருந்தன. அலுவல் பணியில் நாகரீகமாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பது எனது அடிப்படை கொள்கையாக இருந்ததால் நான் இதை வெளியில் சொல்ல தயங்கினேன். மேலும், இப்படி ஒரு புகாரை ஒரு பெண் கூறினால், சமூகம் அவள் மீது எப்படி சேற்றை வாரிப் பூசும் என்பதை நான் அறிந்தே அமைதியாக இருந்தேன்.
இந்த சித்திரவதையில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக டிஜிபி டிகே ராஜேந்திரன் அவர்களுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன். அவர் அதை சட்டை கூட செய்யவில்லை. இந்த சர்ச்சை வெளிப்படையாக தெரியாமல், இருக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகிளையும் எடுத்தேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
1 ஆகஸ்ட் 2018 அன்று, மதியம் 1.30 முதல் 2 மணிக்குள், முருகன் அவர் அறைக்கு என்னை அழைத்தார். உள்ளே நுழைந்ததுமே தனிப்பட்ட விவகாரங்களை பேசத் தொடங்கிய அவர், எழுந்து நடந்தவாறே, கதவை உட்புறமாக தாழிட்டு விட்டு, என்னை கட்டிப் பிடிக்க முயற்சி செய்தார்.
உடனடியாக நான் கதவை திறந்து கொண்டு வெளியேறினேன்.
இதன் பிறகுதான் இனியும் இதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன்.
ஐபிஎஸ் அதிகாரி வித்யா குல்கர்ணியை சந்தித்து, நடந்தவற்றை கூறினேன். அவர் என்னை உடனடியாக அழைத்துக் கொண்டு, டிஜிபி டிகே.ராஜேந்திரனை சந்திக்க அழைத்துச் சென்றார். பின்னர் உளவுத் துறை ஐஜி சத்யமூர்த்தியையும் சந்தித்து, நடந்தவற்றை கூறினேன்.
முருகன் இது போல நடந்து கொள்வது முதல் முறை அல்ல என்பதை புரிந்து கொண்டேன். அவரின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தே இந்த புகாரை அளிக்கிறேன்.
இனியும் என்னால் இந்த சித்திரவதையை தாங்க முடியாது என்பதாலேயே மருத்துவ விடுப்பில் சென்றேன்.”
இதுதான் அந்த பெண் அதிகாரியின் புகாரின் சாரம்.
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு. அப்படித்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம். நமக்கு பிடித்த பெண்ணிடம் தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதும் இயல்பே. எப்போது அந்தப் பெண் விருப்பமில்லை என்று தெரிவிக்கிறாளோ, அப்போதே ஒதுங்கி விடுவதுதான் நயத்தகு நாகரீகம் படைத்தவர்களுக்கு அழகு. அதுவே ஆண்மை.
தன் அதிகாரத்தை பயன்படுத்தி, ஒரு பெண்ணை மிரட்டி, அதன் மூலமாக என்ன சுகம் கிடைத்து விடும் என்பது எனக்கு நிச்சயம் புரியவில்லை.
மனநல மருத்துவர் ஷாலினியிடம் இது குறித்து பேசியபோது, “இது போன்ற பாலியல் தொல்லைகளை ஒரு ஆண், தனது செக்ஸ் தேவைக்காக செய்வதில்லை. அவர்களுக்கு, போர் தொடுத்து வெற்றி பெறுவது போன்ற உணர்வு இது. தானாக வரும் பெண்களை இது போன்ற நபர்கள் விரும்புவதில்லை. மிரட்டி அடிபணிய வைப்பது மட்டுமே இவர்களுக்கு சுகம். இது ஒரு வகையான சாடிஸ்ட் மனநிலை என்றும் சொல்லலாம்” என்றார்.
தியாகராய நகர் துணை ஆணையராக பணியாற்றியபோதே, முருகன் தனது மாமூல் வாழ்க்கையை தொடங்கி விட்டார். அப்போது இவருக்கு ஏற்பட்ட லலிதா ஜுவல்லரியுடனான நட்பு இன்றும் தொடர்கிறது. இந்த லலிதா நகைக்கடையின் தொடர்புகளை வைத்துக் கொண்டு, சென்னை, மற்றும் இதர மாவட்டங்களில் பல வேலைகளை முடித்துக் கொண்டு வருகிறார் முருகன்.
லஞ்ச ஒழிப்புத் துறையில் குட்கா ஊழல் விசாரிக்கப்ட்ட வரை, குட்கா வழக்கில் நியாயமே கிடைக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். குட்கா ஊழலில் சாட்சிகள் என்ன கூறுகிறார்களோ அவை அத்தனையும் முருகன் எடுத்துச் சென்று, இவ்வழக்கின் முதல் குற்றவாளியான டிகே.ராஜேந்திரனை சந்தித்து அத்தனை விபரங்களையும் பகிர்ந்து கொண்டார் என்பது எனக்கு அப்போதே தெரியும். லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவு செய்யப்படும் அத்தனை வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஆனால் குட்கா வழக்கின் எப்ஐஆர் கடைசி வரை பதிவு செய்யப்படவே இல்லை.
டிகே ராஜேந்திரனை காப்பாற்றுவதற்காகத்தான், முருகன் எப்ஐஆரை மறைத்தார் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் சொல்ல முடியும் ?
இப்படி டிஜிபியின் ஆதரவு, முதல்வரின் ஆதரவு, தலைமைச் செயலாளரின் ஆதரவு என்று அனைத்து முக்கிய அதிகாரிகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஐஜி முருகனிடம் மோதி யார்தான் வெற்றி பெற முடியும் ?
முருகனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த பெண் அதிகாரி நேரில் சென்று, உளவுத் துறை ஐஜி, டிஜிபி மற்றும், தலைமைச் செயலாளரை சந்தித்த பிறகும், இவருக்கு எந்த நியாயமும் வழங்கப்படவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாகா கமிட்டி கூட இல்லை என்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.
ஒரு பெண் அதிகாரி, ஒரு உயர் அதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் என்று குற்றம் சுமத்திய பிறகு கூட தமிழக அரசு, விசாகா கமிட்டியை அமைக்காமல் தவிர்த்து வந்தது. திமுக மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழி, தமிழக காவல்துறையில் ஏன் விசாகா கமிட்டி இல்லை என்று கேள்வி எழுப்பிய பிறகே, விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
கனிமொழி 13 ஆகஸ்ட் 2018 அன்று விசாகா கமிட்டி இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார். 17 ஆகஸ்ட் 2018 அன்றுதான் கமிட்டி அமைக்கப்படுகிறது. கனிமொழி இது குறித்து கருத்து தெரிவித்திராவிட்டால், இந்த புகார் முழுமையாக மூடி மறைக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
காவல்துறையில் பணியாற்றும் ஒரு எஸ்பி அந்தஸ்துள்ள அதிகாரிக்கே இந்நிலை என்றால் பெண் காவலர், பெண் உதவி ஆய்வாளர், பெண் ஆய்வாளர்களின் கதி என்ன ? இதே புகாரை ஒரு பெண் காவலர் தெரிவித்தால், நாமே அதை நம்பியிருக்க மாட்டோம் என்பது உண்மைதானே ?
தற்போது வந்துள்ள புகார்களைப் போல, ஆயிரக்கணக்கான புகார் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கான உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கவலை, உள்துறை அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமிக்கும் இல்லை, டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கும் இல்லை. இருவரின் அக்கறை லஞ்சம் வாங்கிக் குவிப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.
இருந்தால், குற்றமிழைத்தவரை மயிலிறகால் வருடி விடுவார்களா ?
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேச முயற்சித்தபோது அவர் மறுத்து விட்டார். அவர் நண்பர் ஒருவரிடம் பேசியபோது, பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி சார்பாக பேசினார். “தமிழகத்தில் உள்ள பெண் காவல்துறையினரின் பிரதிநிதியாகவே பாதிக்கப்பட்ட அந்த அதிகாரி தன்னைப் பார்க்கிறார். இனியும் இது போன்றதொரு கொடுமை வேறொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது. அவருக்கு இப்படிப்பட்ட தொல்லைகள் உள்ளன என்பதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும்போதே, மாறுதல் உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தால், இந்த அளவுக்கு சிக்கல் வந்திருக்காது. பிரச்சினையை இத்தோடு முடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது எண்ணம். ஆனால் தொடக்கத்திலேயே பிரச்சினையை முடிக்க வேண்டிய அதிகாரிகள், மவுனம் காத்தனர்.“ என்றார் அந்த பெண் அதிகாரியின் நண்பர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் எதற்காக பயப்பட வேண்டும். அவர்கள் பதவியோடு ஒப்பிடுகையில், முருகன் ஒரு சாதாரண ஐஜிதானே ? காரணம் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மீதும், எடப்பாடி பழனிச்சாமி மீதும் திமுக அளித்த புகார்கள் இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அவற்றை விசாரிக்கும் பொறுப்பு, முருகனிடமே உள்ளது. அப்படி இருக்கையில் முருகனை மயிலிறகால் வருடி விடுவது இயல்புதானே ?
தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டி விதிகளின்படி, சரியான கமிட்டியா என்று மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் பேசியபோது, “விசாகா கமிட்டி எப்படி அமைக்க வேண்டும் என்பதை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்கும் சட்டத்திலும் தெளிவாக உள்ளது. ஒரு உறுப்பினர் வெளியில் இருந்து வர வேண்டும். ஆனால் அரசு ஊழியர் அல்லாத ஒரு நபரை நியமிக்கையில், பெண்கள் அமைப்புகளில் இருந்தோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்தோ நியமிக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான சரஸ்வதியை நியமித்துள்ளனர். சரஸ்வதி மீது நான் குற்றம் சுமத்தவில்லை. ஆனால் வெளிப் பார்வைக்கு, இது சட்டத்தின்படி நியமிக்கப்பட்டுள்ள கமிட்டி என்பதை தெரியப்படுத்த வேண்டும். Justice should not only be done, but also seems to be done.
நாளை இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர் நீதிமன்றத்தை அணுகி, இந்த கமிட்டி சட்டபூர்வமாக அமைக்கப்படவில்லை என்று இந்த கமிட்டிக்கே தடையுத்தரவு பெறுவதற்கும் வழிவகை உள்ளது. ஆகையால் எத்தகைய குற்றசாட்டுகளுக்கும் இந்த கமிட்டி இடம் தரக் கூடாத வகையில், காவல்துறையை சாராத ஒரு நபர் நியமிக்கப்பட வேண்டும்” என்றார்.
ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதியைப் பற்றி எனக்குத் தெரியும். 2008ல், அவர் நான் பணியாற்றிய அலுவலகத்தில்தான் டிஎஸ்பியாக இருந்தார். நான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, என் நண்பர்களை துன்புறுத்துவதை முழுநேர பணியாக அப்போதைய உளவுத் துறை அதிகாரி ஜாபர் சேட் செயல்பட்டார். அப்போது என்னோடு பணியாற்றிய என் நண்பர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவர் மீது விசாரணை உத்தரவிடப்பட்டது. அந்த விசாரணையில் சாட்சிகள் அனைவரும் பொய்க் குற்றசாட்டு என்று சொன்னபோதும், அங்கே விசாரணை அதிகாரியாக இருந்த சரஸ்வதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டன என்று அறிக்கை அளித்தார்.
இப்படிப்பட்ட ஒரு அதிகாரி இந்த விஷாகா கமிட்டி விசாரணையில் நேர்மையாக நடந்து கொள்வார் என்று எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ?
உரிய அனுபவம் உள்ள, பெண் வழக்கறிஞர்களின் பெயர்கள் முதலில் பரிசீலிக்கப்பட்டு, அவை அத்தனையும் நிராகரிக்கப்பட்டு, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்பியான சரஸ்வதியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூத்த பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன் இது குறித்து பேசுகையில் “தற்போது வந்துள்ள புகார் மற்றும் அது தொடர்பான விவகாரங்களால், காவல்துறையின் மானம் கப்பல் ஏறியுள்ளது. காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளின் பிறழ் மனப்பான்மை இதனால் வெளிவந்துள்ளது.
இதில் வேதனையடக் கூடிய விஷயம் என்னவென்றால், தமிழக டிஜிபியும், அரசும், பாதிக்கப்பட்ட, பெண்ணுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட அதிகாரியை அதே பதவியில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர். நேற்று மாறுதல் உத்தரவு வந்த அந்த 18 பேரில் ஐஜி முருகன் இல்லாதது மேலும் வேதனையளிக்கிறது.
காவல்துறையில்தான் நிலைமை இப்படியென்றால், ஊடகத் துறையில் இது படு மோசம். பல ஊடக நிறுவனங்கள் விசாகா கமிட்டியை அமைக்காமல்தான் செயல்பட்டு வருகின்றன. தன் உயர் அதிகாரி மீது பாலியல் குற்றம் சாட்டும் ஒரு பெண் நிம்மதியாக நடக்கவே முடியாது. அவள் அவமானப்பட்டு, வேதனைப்பட்டு, இனி எந்த ஊடக நிறுவனத்திலும் பணிக்கு சேர முடியாத நிலைக்கு தள்ளப்படுவாள். இதுதான் வேதனையான ஒரு சோகம்” என்றார் லட்சுமி சுப்ரமணியன்.
ஊரில் உள்ளவர்கள் பாலியல் தொல்லைக் கொடுத்தால் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கே, பாதுகாப்பு இல்லாத நிலை என்றால், எங்கே முறையிடுவது ?
அன்பார்ந்த திரு.முருகன் ஐபிஎஸ் அவர்களே. உங்களைப் பற்றி இன்னும் ஏராளமான தரவுகள் எழுத உள்ளன. கட்டுரையின் நீளம் கருதியே அவை தவிர்க்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு இந்த குறளை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.
The lady officer has suffered a lot. It is a pity that the DGP and the CM has not taken steps to transfer the person and protecting him.
saraswathi filed counter affivadvit ( case filed by mr. c.selvaraj, fact india) supporting 3 personal guards to karuanidhi, for purchasing tnhb plot in mogappiar chennai
நன்றி சவுக்கு..தொடர்ந்து அதிகார வர்க்கத்தை அம்பலப் படுத்துங்கள்..