பாஜக தலைமையிலான மாநில அரசு, நாட்டின் மிகப் பெரிய ஒயின் மது உற்பத்தியாளர்களின் ரூ.118.30 கோடி வரி பாக்கியை ரத்து செய்ய உள்ளது. இந்த பாக்கித் தொகை, 2006க்குப் பிறகு சேர்ந்த கலால் வரியின் நிலுவைத் தொகையாகும். மாநில வரலாற்றின் வரலாற்றிலேயே முதல்முறையாக வரி அசலைத் தள்ளுபடி செய்யப் பரிசீலிக்கப்படுவதாக மாநில நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உள்ளூர் ஒயின் ஊபத்தியில் 65 சதவீத பங்கு வகிக்கும் சுலா ஒயின்யார்ட்ஸ் லிட், அதிக அளவில் பயன்பெறும். மாநில கலால் வரித் துறை, இந்நிறுவனம் மட்டுமே ரூ.115.89 கோடி அளவு வரி பாக்கி செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கிறது. மற்ற ஐந்து நடுத்தர ஒயின் மது உற்பத்தி நிறுவனங்கள் குட் டிராப் ஒயின் செல்லர்ஸ் லிட் (ரூ.1.32 கோடி), செவன் பீக்ஸ் வைனரிஸ் லிட் (ரூ.78.25 லட்சம்), வின்லாண்ட் ஒயின்ஸ் கம்பெனி லிட் (ரூ.11.87 லட்சம்), ஏடி ஒயின்ஸ் (ரூ.9,65 லட்சம்) மற்றும் நோபில் ஒயின்ஸ் (ரூ.2.67 லட்சம்) ஆகிய நாசிக் நிறுவனங்களும் பெரிய அளவில் பயன் பெற உள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பார்வைக்குக் கிடைத்த ஆவணங்கள், தள்ளுபடிக்கான திட்டத்தை தயார் செய்யுமாறு மாநில கலால் துறைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளின் தாக்குதல் மற்றும் விமர்சனத்திற்கு அரசை உள்ளாக்கலாம் என உத்தேசித்து, இந்தத் தள்ளுபடிக்கு ஆதரவு அளித்த தலைமைச் செயலர் தினேஷ் குமார் ஜெயின் தலைமையிலான அரசுக் குழு, மாநில சட்டமன்றத்தின் அனுமதியைக் கோருமாறு கூறியிருக்கிறது.
முன்னதாக மே 8ஆம் தேதி, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இத்தகைய சலுகையைக் கோரிய இந்திய ஒயின் மது உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை அடுத்து ஜெயின் தலைமையிலான குழுவை நியமித்தார். இந்தக் குழு தனது அறிக்கையை ஜூலை நான்காம் தேதி அளித்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதை அரசு இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. முரண் என்னவெனில், 2018, மே 17ஆம் தேதி, மாநில கலால் துறை இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசை அணுகியதை ஆவணங்கள் உணர்த்துகின்றன.
வரி பாக்கி சலுகை அளிப்பதற்கான அதிகாரம் சட்டமன்றத்திற்கு உள்ளதா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத மாநில சட்டமன்ற மூத்த அதிகாரி ஒருவர், “இது அரசின் அதிகாரப் பிரிவின் பணி. சட்டமன்றப் பிரிவுக்கு இந்த அதிகாரம் இல்லை” என்று கூறினார்.
இந்தியாவின் முன்னணி ஒயின் மது உற்பத்தியாளராக விளங்கும் மகாராஷ்டிரா, 2001 முதல் இத்துறைக்கான ஊக்கக் கொள்கையை கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, மாநிலத்திற்குள் உற்பத்தி செய்யப்படும் ஒயின் மதுவுக்குச் சொந்த பிராண்ட் எனும் அடிப்படையில் கலால் வரியை 2004 ஜூனில் செலுத்தியுள்ளது. ஆனால், 2006 மார்ச் 31இல் வெளியான உத்தரவு, இந்தஅ சலுகை முதல் விற்பனை முனையில் மட்டும்தான் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, ஒயின் மது உற்பத்தியாளர்கள் மாநிலத்திற்குள் அல்லது வெளியிலிருந்து, திராட்சைத் தோட்டம் அல்லது இதர உரிமையாளர்களிடமிருந்து வைனை வாங்கி பிளன்ட் செய்வதற்கு இந்தச் சலுகை பொருந்தாது எனப் பொருள். ரூ.450 கோடி மதிப்பிலான துறையில், சுலா ஒயின்யார்ட்ஸ், பிராடெல்லி ஒயின்ஸ் மற்றும் குரோவர் ஒயின்யார்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டும் 90 சதவீதச் சந்தைப் பங்கினைப் பெற்றிருக்கும் நிலையில், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் வைனரிகளிலிருந்து மொத்தமாக மதுவை வானங்குவது அதிகரித்துள்ளது.
2006 அறிவிக்கையின்படி, பிளன்ட் செய்யும் ஒயின் மீது 199 சதவீத வரி பொருந்தும். 2011இல், இந்த வரி வசூலிக்கப்படவில்லை எனத் தணிக்கையில் தெரியவந்ததை அடுத்து, அரசு தரப்பில் வரி பாக்கியைச் செலுத்தக் கோரப்பட்டது. ஆனால், பலமுறை நினைவூட்டல் அனுப்பியும், இதுநாள் வரை வரி பாக்கி வசூலாகவில்லை எனக் கூறுகின்றனர்.
மாநிலத்தில் இதற்கு முன்னர் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆட்சியின்போதுகூட, ஒயின் மது உற்பத்தியாளர்கள் தள்ளுபடிக்கு முயற்சித்துள்ளனர். இந்த ஆண்டு ஜூலை 26இல், பட்னாவிஸ் அரசு முதல் சலுகையை அறிவித்தது. ஜெயின் குழு அறிக்கையின் அடிப்படையில், மகராஷ்டிராவுக்குள் உள்ள பிற வைனரிகள் அல்லது திராட்சைத் தோட்டங்களிலிருந்து தருவிக்கப்பட்ட மது அல்லது திராட்சை ரகம் கொண்டு பிளன்ட் செய்யப்படும் ஒயின் மதுவுக்குக்கூட வரிச் சலுகை பொருந்தும். ஆனால், இதைப் பின் தேதியிட்டு அமல்படுத்த முடியாது எனக் குழு கூறியிருப்பதால் இதைப் பொருத்தமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், செல்வாக்கு மிக்க பாஜக அமைச்சர் ஒருவர் முன்னதாக செலுத்த வேண்டிய வரிக்கும் இது பொருந்தும் என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுவதால், குழு, 2006 மார்ச் 31 அறிவிக்கையில் மாற்றம் செய்து, 2006 முதல் சேர்ந்த வரி பாக்கிக்கு முன்னதாகப் பொருந்தச்செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது. இது ஒரு சர்ச்சையாக ஆவதைத் தவிர்க்க, சட்டமன்ற அனுமதியைக் கோர யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வரி பாக்கி வசூலிக்கும்போது, 80 சதவீத நிறுவனங்கள் பாதிக்கப்படும். திராட்சைப் பயிர் செய்பவர்களால் நடத்தப்படும் சிறிய நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே சங்கம் தள்ளுபடி கோரிக்கைய முன்வைத்தது” என்று ஒயின் மது உற்பத்தியாளர் நிறுவன சங்கத் தலைவர் ஹதின் பாட்டீல் நாம் தொடர்புகொண்டபோது கூறினார். “பெரும்பாலான சிறிய நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் செய்யத் தேவையான வசதி இல்லை. போட்டியைச் சமாளிக்க அவை பெரிய ஒயின் மது நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. அவை பிளன்ட் செய்து தங்கள் சொந்த பிராண்டாக விற்கின்றன. 2011இல் கலால் வரித் துறை விசாரிக்கத் துவங்கிய பின்னர்தான், மாநிலத்திலிருந்து தருவிக்கப்பட்டு பிளன்ட் செய்யப்படும் மதுவுக்குச் சலுகை பொருந்தது எனத் தெரியவந்தது” என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.
“விலை நிர்ணயிக்கும்போது இது கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த வரி வசூலிக்கப்பட்டால் பல சிறிய நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியாது” என்று அவர் மேலும் கூறுகிறார். வரித் தள்ளுபடிக்குக் கலால் ஆணையகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும், ஜெயின் குழுவிடமும் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சுலா ஒயின்யார்ட்ஸ் துணைத் தலைவர் (பொது விவகாரங்கள்). சஞ்சீவ் பைந்தன்கர், “2006 அறிவிக்கை, மாநிலத்திலிருந்து தருவிக்கப்பட்டு பிளன்ட் செய்யப்படும் மது மற்றும் வெளிமாநிலங்களில் தருவிக்கப்படும் மது இடையே வேறுபாடு கண்டிருக்க வேண்டும். இது திராட்சை விவசாயிகளை பாதிக்கிறது. மேலும் மாநில அரசின் ஒயின் மது ஊக்கக் கொள்கைக்கு எதிராக அமைகிறது” என்று கூறுகிறார். கலால் ஆணையம் தெரிவித்த எதிர்ப்பை மீறி, ஜெயின் குழு இந்தச் சலுகைக்கு ஆதரவாக பரிந்துரை செய்துள்ளது. மகாராஷ்டிரா ஆண்டுக்கு 1.8 கோடி லிட்டர் ஒயின் உற்பத்தி செய்கிறது. இத்துறையின் மதிப்பு ரூ.450 கோடியாகும். –
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/cities/mumbai/maharashtra-plans-to-write-off-rs-118-crore-tax-arrears-for-big-winemakers-5309078/