புனே காவல் துறை செவ்வாய்க்கிழமை அன்று நாடு முழுவதும், 10 செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களில் ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தாலும், சோதனை தொடர்பான தேடல் உத்தரவு, ஜனவரி 1ஆம் தேதி புனே அருகே உள்ள பீமா கோரேகானில் நடைபெற்றஃ வன்முறை தொடர்பான விசாரணை என உணர்த்துகின்றன.
ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று, லட்சக்கணக்கான தலித்கள், 1818இல் ஆங்கிலேயப் படையில் இருந்த மகர் பிரிவினர் (தாழ்த்தப்பட்டவர்கள்) அடங்கிய படை, மராத்திய பேஷ்வா படைக்கு எதிராகப் பெற்ற வெற்றியை கொண்டாட கோரேகானில் திரள்வது வழக்கம். இந்த நிகழ்வின் 200ஆவது ஆண்டான இந்த முறை கொண்டாட்டத்தின்போது சாதிக் கலவரம் உண்டானது.
ஜூன் மாதம் ஐந்து செயல்பாட்டாளர்கள், பீமா கோரேகான் சம்பவத்தில் வன்முறையைத் தூண்டியதாகக் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், சர்ச்சைக்குரிய சட்ட விரோதச் செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டவர்களும் இதே பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவருமே பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அறியப்படுபவர்கள்.
செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் பற்றிய அறிமுகம்:
சுதா பரத்வாஜ்
மனித உரிமை வழக்கறிஞர், கைது
57 வயதான சுதா பரத்வாஜ் சத்திஸ்கரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான வழக்குகளில் வாதாடிவருகிறார். மாவோயிஸ்ட்கள் என முத்திரை குத்தப்படும் ஆதிவாசிகள் சார்பாகப் பலமுறை வாதாடியிருக்கிறார். கான்பூர், ஐஐடி முன்னாள் மாணவரான இவர், 1980களில் சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவில் சங்கர் குஹா நியோகியுடன் இணைந்து பணியாற்றியபோது செயற்பாட்டாளராக உருவானார். ,
மிண்ட் இதழுக்கு 2015இல் அளித்த பேட்டியில், “புதிய சத்தீஸ்கருக்காக நாங்கள் போராடுகிறோம்… மாநிலத்திற்காகப் பாடுபடுபவர்களுக்கான சத்தீஸ்கர். அது அபிரிமிதமான தண்ணீர், காடு மற்றும் நிலத்தை பெற்றுள்ளது. இருந்தாலும் அதன் மக்கள் ஏழைகளாக உள்ளனர். மாநிலம் சமமில்லாத வளர்ச்சியைக் கண்டுவருகிறது. பலன்கள் எல்லோருக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. நான் விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடுகிறேன் என்றால், அவர்களை சுரண்டும், ஊழல் அரசியல்வாதிகள், வன இலாக்கா அதிகாரிகள், மற்றும் போதிய கூலி மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தராத நிறுவனங்களை எதிர்த்துப் போராடுவதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினார்..”
பி.வரவர ராவ்
புரட்சி எழுத்தாளர், கவிஞர், கைது
வரவர ராவ் (77) புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞர் மற்றும் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கத்தின் நிறுவனர். 1966இல் இவர் நவீன தெலுங்கு இலக்கியத்திற்கான பத்திரிகையைத் துவக்கினார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, நக்சலைட்களின் ஆயுத போராட்டத்துடன் இணைந்து கொண்ட இலக்கியக் குழுவான கலகக்கார கவிஞர்கள் குழுவின் முக்கிய உந்துசக்தியாக இருந்தார்.
வரவர ராவ் 15 கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார். ஆந்திராவில் மாவோயிஸ இயக்கம் மற்றும் தனித் தெலங்கானா மாவட்டத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்திற்கான போராட்டத்தின்போது தற்போதைய முதல்வர் சந்திர சேகர் ராவுடன் மேடையில் ஒன்றாகத் தோன்றினாலும், மாநில அரசுக்கு எதிராக அவர் போராட்டம் நடத்தத் துவங்கிய பிறகு இருவரின் உறவும் பாதிக்கப்பட்டது.
வெர்னான் கோசல்வஸ்
முன்னாள் கல்லூரி பேராசிரியர், கைது
வெர்னான் கோன்சாலஸ் மற்றும் சூசன் ஆப்ரகாம்
பாம்பே பல்கலைகழக்கத்தில் எம்காம் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்ற வெர்னான் கோன்சஸ்வஸ், எச்.ஆர் கல்லூரி, டிஜி ரூபரல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சீமென்ஸ் நிறுவனத்தில் நிர்வாக பயிற்சியாளராக இருந்தவர் பின்னர், மகராஷ்டிராவின் சந்தர்பூர் பகுதியில் சமூக சேவகராக செயல்படத்துவங்கினார். 2007இல், நக்சல் இயக்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் என காவல்துறை குற்றம்சாட்டி அவர் மீது 20 வழக்குகள் பதிவு செய்தன. இவற்றில் 19இல் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
கோன்சல்வஸ் மற்றும் அவரது மனைவி சூசன் ஆபிரகாம், 2017 டிசம்பர் 31ஆம் தேதி 260 அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து நடத்திய எல்கர் பரிஷத் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பீமா கோரேகானில் சாதி கலவரம் நடப்பதற்கு முன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலித் செயற்பாட்டாளர்கள் நிகழ்த்திய உரை தான் வன்முறையை தூண்டிவிட்டதாக காவல் துறை கூறுகிறது. பீமா கோரேகான் சம்பவம் தொடர்பாக ஜூனில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் சார்பாக சூசன் வாதாடிவருகிறார்.
அருண் பெரேரா
அரசியல் செயற்பாட்டாளர், வழக்கறிஞர், கைது
வழக்கறிஞர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான அருண் பெரேரா மும்பை புனித சேவியர் கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் இருந்தபோது மிகுந்த சமூக விழிப்புணர்வு பெற்றவர் காண்டீன் தொழிலாளர்களின் மேம்பட்ட நிலைக்கான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு அவர் விதர்பாவில் சமூக ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
2007இல் பெரேரா மீது நக்சல் என குற்றம் சுமத்தப்பட்டது. அம்பேத்கர் புத்த மத்திற்கு மாறிய நாக்பூரின் தீக்ஷா பூமியைத் தகர்க்கச் சதி செய்தார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. 2014இல் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு தனது சிறை வாழ்க்கை பற்றி அவர் எழுதிய புத்தகம் பரவலாகப் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகு அவர் வழக்கறிஞரானார். ஜூன் மாதம் கைதான செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காகப் பாடுபட்டுவரும் வழக்கறிஞர்கள் குழுவில் அங்கம் வகிக்கிறார்.
ஜூன் கைதுகளுக்கு பிறகு, பெரேரா, கோன்சல்வ்ஸ், டெய்லிஓ இதழில் எழுதிய கட்டுரையில், மோடியை நக்சல்கள் கொலைசெய்யத் திட்டமிட்டிருப்பதாக மீடியாவிடம் காவல் துறை காண்பித்த கடிதம் ஒரு கேலிக்கூத்து எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கவுதம் நவ்லகா
மனித உரிமை செயற்பாட்டாளர், இதழாளர், கைது
தில்லியைச் சேர்ந்த கவுதம் நவ்லகா, மனித உரிமைச் செயற்பாட்டாளர், பத்திரிகையாளர், ஜனநாயக உரிமைகளுக்கான மக்களின் சங்கம் என்னும் அமைப்பின் நிறுவனர். எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியின் ஆலோசனை ஆசிரியராகவும் இருந்துவருகிறார். காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் மனித உரிமைப் போராட்டங்களில் பல ஆண்டுகளாகப் பங்கேற்றுவருகிறார். ஜூன் மாதம் அவர் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார். இப்போது அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை புனேவுக்குக் கொண்டு செல்லக்கூடிய உத்தரவை செவ்வாய்க்கிழமை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. புனே காவல் துறை அளித்த ஆவணங்களில் போதுமான தகவல்கள் இல்லை என நீதிமன்றம் கருதியது. புதன்கிழமை காலை இந்த வழக்கை விசாரிப்பதாகக் கூறியது.
காவல் துறை ஐந்து செயற்பாட்டாளர்கள் வீடுகளிலும் செவ்வாய்கிழமை சோதனை நடத்தியது.
ஸ்டான் சாமி
கத்தோலிக்கப் பாதிரியார், மனித உரிமைச் செயற்பாட்டாளர்
ஸ்டாம் சாமி (83), சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஜார்க்கண்டில் பல ஆண்டுகளாக மனித உரிமைகளுக்காகப் போராடிவருகிறார். ஆதிவாசிகள், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் இடம்பெயர்வதை எதிர்த்துப் போராடிவரும் பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைப்பதற்கான அகில இந்திய மேடையாக விளங்கும் விஸ்தாபன் விரோதி ஜன் விகாஸ் அண்டோலன் எனும் அமைப்பின் நிறுவன உறுப்பினர்.
குந்தி மாவட்டத்தை மையமாக கொண்ட பதல்காடி இயக்கத்தின் ஆதரவாளர். கிராம சபை, கிராமக் குழுக்களை ஆதிவாசிகள் பகுதியில் அனுமதிக்கும் இந்திய அரசியல் சாசன ஷரத்துகளைப் பாரம்பரியக் கல்பலகையில் பதிய வைக்கும் இயக்கமாக இது அமைகிறது. ராஞ்சியில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
கே.சத்யநாராயணா
பேராசிரியர், தலித் ஆய்வு
ஐதராபாதில் உள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் பல்கலைக்கழக்கத்தில் கலாச்சார ஆய்வுகள் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தலித் அறிவுஜீவியான இவர், சாதி, இலக்கிய வரலாறு, விமர்சனக் கோட்பாடு ஆகியவை பற்றி விரிவாக எழுதிவருகிறார். தென்னிந்திய தலித் எழுத்துக்களின் தொகுப்புகள் இவர் எழுதிய புத்தகங்களில் அடங்கும். சாதி ஒழிப்பிற்கான அமைப்பான குல நிர்மூலன பூரத சமிதியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். வரவர ராவின் மகள் பவனவை மணந்துகொண்டிருக்கிறார். இவர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கேவி குர்மானத்
இதழாளர்
ஐதராபாதில் வசிக்கும் குர்மானத், 20 ஆண்டுகளுக்கு மேல் இதழாளராக இருக்கிறார். ஆந்திரப் பல்கலையில் இதழியல் துறையில் முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார். இந்து பிசினஸ்லைன் இதழின் துணை ஆசிரியராக இருக்கிறார். தொழில்நுட்பம், விவசாயம், ஸ்டார்ட் அப்கள் பற்றி எழுதிவருகிறார். தெலுங்கில், கதைகள், கவிதைகள் எழுதுகிறார். வரவர ராவின் இன்னொரு மகளான அனலாவை மணந்துகொண்டிருக்கிறார். இவர்களின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கிரந்தி தெகுலா
நாளிதழ் புகைப்படக் கலைஞர்
ஐதராபாதில் வசிக்கிறார். முதலில் இவரும் கைதானதாக தகவல் வெளியானாலும், பின்னர் வரவர ராவ் மட்டும்தான் கைதானார் தெகுலா இல்லை என புனே இணை கமிஷனர் சிவாஜி போட்கே தெளிவுபடுத்தினார்.
ஆனந்த் தெல்தும்டே
மூத்த பேராசியர், எழுத்தாளர்
கோவா இன்ஸ்டிடீயூட் ஆப் மேனெஜ்மெட்ண்டில் மூத்த பேராசிரியராக இருக்கிறார். பயிற்சி பெற்ற பொறியாளரான இவர், அகமதாபாத் ஐஐஎம்மில் முதுகலை டிப்ளமா பெற்றுள்ளார். நிர்வாகம் -சைபர்நட்டிக்சில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவில் சிவில் உரிமை செயற்பாட்டாளராக இருக்கிறார். பர்சிஸ்டன்ஸ் ஆப் கேஸ்ட், ரிபப்ளிக் ஆப் கேஸ்ட் அண்ட் மஹத்; தி மேக்கிங் ஆப் பர்ஸ்ட் தலித் ரிவோல்ட் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
காவல் துறை சோதனையிட வந்தபோது இவர் வீட்டில் இல்லை என்றும், காவலர்கள் பாதுகாவலரிடமிருந்து சாவிகளை வாங்கிச் சோதனை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மிருதுலா சாரி
நன்றி: தி ஸ்க்ரோல்
https://scroll.in/article/892284/among-those-raided-in-bhima-koregaon-case-a-poet-a-management-professor-a-business-journalist