யார் இந்த கண்ணாயிரம் ? இந்த கண்ணாயிரம் யார் என்பதை வாசகர்கள் கமிஷனர் கண்ணாயிரம் என்ற கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். சரி இவர் எப்படி காதாயிரம் ஆனார் ?
இன்று இவரை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து, அரசாணை வெளியிட்டிருக்கிறது ஜெயலலிதா அரசு. ஜாபர் சேட், சட்ட விரோதமாக தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டது சவுக்கு வாசகர்கள் உட்பட, அனைவரும் அறிந்ததே. கண்ணாயிரம் இந்தப் பதவியில் நியமிக்கப் பட்டதன் மூலம், இந்த சட்டவிரோத ஒட்டுக் கேட்பை இவரும் தொடர்வார் என்றே காவல்துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது போல ஒட்டுக் கேட்பைத் தொடர்வதால், இவரை ஏன் காதாயிரம் என்று அழைக்கக் கூடாது ?
இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநகர கமிஷனராக இருந்த, கண்ணாயிரம், அதிமுக அரசிலும் செல்வாக்காக இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். இவர் தன்னை முக்குலத்தோர் என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால் உண்மையில் இவர் வல்லம்பர் சாதி. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரைச் சேர்ந்தவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற இடத்தில் தொடக்க காலத்தில் இருந்தவர்கள், பின்னாளில் இடம் பெயர்ந்து சிவகங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். இவர்கள் தங்களை நாட்டார் என்று அழைத்துக் கொள்கின்றனர். 18ம் நூற்றாண்டில், மருது சகோதரர்களோடு சேர்ந்து போர் புரிகிறார்கள் வல்லம்பர்கள். இதனால், சிவகங்கை மன்னர், காரைக்குடி நகரத்தை ஆளும் பொறுப்பை வல்லம்பர்களுக்குத் தருகிறார். அதன் பின், வல்லம்பர்களுக்கு அம்பலம் என்ற பட்டம் வருகிறது.
கள்ளர், மறவர், தேவர் ஆகிய முக்குலத்தோர் சாதியோடு, பெண் கொடுத்து, பெண் எடுக்கும் பழக்கம் இச்சமூகத்தில் ஏற்பட்டதால், வல்லம்பர்கள் ஏறக்குறைய முக்குலத்தோர் என்றே அழைக்கப் படுகிறார்கள். ஆனால், கண்ணாயிரம் ஒரு படி மேலே போய், தன்னை சசிகலாவின் உறவினர் என்று அழைத்துக் கொள்வார்.
இந்தக் கண்ணாயிரம், திமுக ஆட்சியில் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இவரை இந்தப் பதவிக்கு கொண்டு வந்ததே ஜாபர் சேட் தான். அதனால் ஜாபர் சேட்டுக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தார் கண்ணாயிரம்.
கண்ணாயிரத்தின் பெருமைகளை சொல்ல வார்த்தைகள் போதாது என்றாலும், ஒன்றிரண்டு சம்பவங்களைச் சொல்வது, இவர் பெருமைகளை எடுத்துக் கூற உதவும்.
நித்யானந்தாவின் வீடியோவை, கருமம் பிடித்த காமராஜும், கேடி சகோதரர்களின் சன் டிவியும், ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில், படுக்கையறையில் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்த காட்சிகளை காண்பித்ததை நாம் அறிவோம். அது ஸ்டிங் ஆபரேஷனா இல்லையா என்ற விவாதம் வேண்டாம். சன் செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கையில், வீட்டில் உள்ள உங்கள் குழந்தைகளோடு அதைப் பார்க்க முடியுமா ? இது போல ஆபாச காட்சிகளை செய்தி அல்லது ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் பதிப்பிப்பதையும், ஒளிபரப்புவதையும் பார்க்க முடியுமா ? அது சட்டப் படி தவறு இல்லையா ?
கல்யாணி என்ற வழக்கறிஞர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணாயிரத்துக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அந்தப் புகாரில், பெண்களை தவறாக சித்தரித்தல், ஆபாச படங்களை ஒளிபரப்புதல் உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளின் கீழ், நக்கீரன் இதழும், சன் டிவியும் குற்றங்களை செய்திருக்கின்றன என்றும், அவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு புகார் அனுப்பப் பட்டது. கண்ணாயிரத்தின் நேரடி பார்வைக்காக பேக்ஸ் மூலமாகவும் அந்தப் புகார் அனுப்பப் பட்டது. அந்தப் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்தார் கண்ணாயிரம். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் சன் டிவியையும், நக்கீரனையும் காப்பாற்றினார்.
குமுதம் சிநேகிதி என்ற இதழின் ஆசிரியராக பணி புரிபவர் லோகநாயகி. குமுதம் இதழில் தலைமை நிருபராக பணியாற்றி வந்தவர் திருட்டு சரவணன், மன்னிக்கவும், திருவேங்கிமலை சரவணன். இந்த திருவேங்கிமலை சரவணனுக்கு பெண்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதே பிரதான வேலை. மகளிர் கல்லூரிகளுக்குச் சென்று, அந்தப் பெண்களோடு பழகி, குமுதம் இதழில் அவர்களின் படங்களைப் போட்டு, அதன் மூலம் அந்தப் பெண்களுக்கு வலை விரிப்பவர். இது போல, அலுவலகத்தில் தன்னோடு பணியாற்றிய ஜனனி, சாந்தி என்ற பெண்களைப் பற்றி தரக்குறைவாக பேசியதை, சிநேகிதி இதழின் லோகநாயகி கண்டித்தார். உடனே, லோகநாயகியைப் பற்றி, மிக மிகக் கேவலமாக பேசத் தொடங்கினார் திருட்டு சரவணன். இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத லோகநாயகி, உடனடியாக நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து விட்டு, சென்னை மாநகர காவல் ஆணையாளர் கண்ணாயிரத்திடம் நேரடியாக எழுத்து பூர்வமான புகார் அளிக்கிறார்.
பெண்களுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் பெண் பத்திரிக்கையாளருக்கே பிரச்சினை என்றால் ? ஆனால் கண்ணாயிரம் அந்தப் புகாரை வாங்கி, சரக்கடித்து விட்டு டிஷ்யூ பேப்பர் என்று நினைத்து கையை துடைத்து விட்டாரோ என்னவோ ….. ? இறுதி வரை திருட்டு சரவணன் போன்றதொரு பொறுக்கியின் மீது சிறிய விசாரணை கூட நடத்தவில்லை. இதுதான் கண்ணாயிரத்தின் லட்சணம்.
ஒரு சில நாட்களிலேயே கண்ணாயிரத்துக்கு ஒரு ரகசிய உத்தரவு வருகிறது. குமுதம் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இடையே பிரச்சினை. அந்தப் பிரச்சினையில் தலையிட்டு, குரங்கு ஆப்பத்தை பங்கு வைத்த கதையாக தனக்கு என்ன லாபம் பார்க்கலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார். அதற்கு யாராவது ஒரு பார்ட்னரை மிரட்டினால் தானே சரிப்படும் ? டாக்டர்.ஜவஹர் பழனியப்பனோடு சேர்ந்து அதில் ஒரு பங்குதாரரான வரதராஜனை கைது செய்து பொய் வழக்கு போடலாம் என திட்டமிடுகிறார் கருணாநிதி. அதைச் செய்து முடிக்க அடியாள் வேண்டுமல்லவா ? வேறு எதற்கு இருக்கிறார் கண்ணாயிரம் ? கண்ணாயிரத்திடம் இந்தத் தகவல் சொல்லப் பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார். கண்ணாயிரத்தின் உத்தரவுப் படி, கைது செய்யப் பட்ட வரதராஜனை அழைத்துக் கொண்டு போலீசார், எப்படியாவது அவர் வீட்டில் சோதனை ஒன்றை நடத்தி துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியதாக ஒரு வழக்கு போட்டு, Arms Act வழக்கு போட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அதற்கு வீட்டில் சோதனை நடத்தி துப்பாக்கியை எடுத்தது போல செட்டப் பண்ண வேண்டுமல்லவா ? வரதராஜனை அழைத்துக் கொண்டு, காரில், 4 மணி நேரம் சுற்றுகிறார்கள் சென்னை போலீசார். செல்போனில், கண்ணாயிரத்திடமிருந்து உத்தரவுகள் பறந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், குமுதம் நிறுவனத்தின் இரண்டு முக்கியமான ஊழியர்கள் வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு, பைக்கில் அந்த காரை பின் தொடர்ந்தனர். என்னென்னவோ செய்து பார்த்தும் அவர்களை தவிர்த்து வரதராஜனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதால், வேறு வழியின்றி, சென்னை ம்யூசியத்தின் உள்ளே உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். பிறகு கமிஷனர் அலுவலகம் அழைத்துச் சென்று, Arms Act கேஸ் போட முடியாது என்றதும், ஜவஹர் பழனியப்பனை அழைத்து அவரிடம், வரதராஜன் நிதி மோசடியில் ஈடுபட்டார் என்று ஒரு புகாரை வாங்கினார்கள். இதற்குள், வரதராஜன் கைது செய்யப் பட்ட செய்தி தீயைப் போலப் பரவியதால், கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களும், வழக்கறிஞர்களும் குழுமினர். வேறு வழியின்றி, வரதராஜன் அன்று இரவு 10 மணிக்கு ஜாமீனில் விடப்பட்டார். இதற்குப் பிறகு, கருணாநிதி, நான் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிப்பவன், குமுதம் இதழின் பங்குதாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க ஒரு கமிட்டியை அமைக்கிறேன் என்று முதலைக் கண்ணீர் வடித்தார். ஆடு நனைகிறதே என்று அழுத ஓநாயின் குரல் கேட்கவில்லை ? இதைச் செயல்படுத்தியதும் கண்ணாயிரம் தான்.
தினமலர் நாளிதழ், ஒரு மிக மிக மோசமான செய்தியை வெளியிட்டது. என்ன செய்தி என்றால், முன்னாள் நடிகைகள் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று செய்தி வெளியிடப் பட்டது. எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத அயோக்கியத்தனமான செய்தி அது. இது போல ஒருவரைப் பற்றி அவதூறான செய்தி வெளியிட்டால், அது தொடர்பாக சம்பந்தப் பட்ட நபர் அவதூறு வழக்கு தொடர்வதுதான் சட்ட ரீதியான வழி. ஆனால், தினமலர் நாளிதழ் மீது பெண்கள் மீது கொடுமை இழைத்ததான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதைக் கூட சவுக்கு தவறு என்று சொல்லவில்லை. ஒரு பத்திரிக்கையில் வரும் செய்திக்கு, சட்டத்தின் படி, பிரின்டர் மற்றும் பப்ளிஷர் தானே பொறுப்பாக முடியும் ? செய்தி ஆசிரியர் எப்படி பொறுப்பாக முடியும். ஆனால், இந்தக் கண்ணாயிரம், தினமலரின் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்தார். எத்தனை பெரிய அயோக்கியத்தனம் இது ?
மதுரையில் அழகிரியின் அல்லக்கை பொட்டு சுரேஷ் என்பவரைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். இந்த பொட்டு பற்றி, ஜுனியர் விகடனில் ஒரு செய்தி வந்தது. இந்தச் செய்தி பொட்டு சுரேஷை கடும் கோபம் கொள்ளச் செய்தது. கடும் கோபடைந்த பொட்டு, உடனடியாக தினமலர் நாளேட்டில் ஒரு விளம்பரம் கொடுத்தார். அந்த விளம்பரம் என்னவென்றால், விகடன் அலுவலகம் முன்பாக நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறேன். இதற்கு மறைமுகமான அர்த்தம் என்னவென்றால், அடித்து நொறுக்கப் போகிறேன் என்பதுதான். இந்த விளம்பரத்தை அனுமதித்து, முழுப்பக்க விளம்பரமாக வெளியிட்ட தினமலரின் அயோக்கியத்தனத்தைப் பாருங்கள். பத்திரிக்கையாளர்கள் கொதித்து எழுந்தனர். விகடன் நிறுவனமும், ஆரம்பத்தில் கொதித்தது. பிறகு பொட்டு சுரேஷிடம் சரணடைந்தது வேறு கதை.
தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பாக எத்தனையோ ஆர்ப்பாட்டங்களை மெமொரியல் ஹால் முன்பு நடத்த அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருக்கிறோம். ஆனால், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு, ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் மாலை 7 மணிக்கு, அனுமதி மறுப்பு என்று கண்ணாயிரம் கடிதம் கொடுப்பார். ஏனெனில், அப்போதுதான் உடனடியாக நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதால்.
ஆனால், இந்த பொட்டு சுரேஷ் ஆர்ப்பாட்டத்திற்கு, விகடன் அலுவலகம் முன்பாக தடுப்புகளை போட்டு ஏற்பாடுகளை செய்தார் கண்ணாயிரம் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா ? மவுன்ட் ரோடில், டிவிஎஸ் எதிரில், 300 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தாங்குமா ? மேலும், பத்திரிக்கை அலுவலகத்தை தாக்கும் நோக்கத்தோடே ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்கும் ஒரு நபருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகத்தில் எந்த முட்டாளாவது செய்வானா ? இப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய கண்ணாயிரத்திற்கு என்ன திமிர் இருக்க வேண்டும் ?
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி, வழக்கு பதியப் பட்டது. சீமான் கைது செய்யப் படப் போகிறார் என்றதும், சீமானுக்கு ஒரே விருப்பம், கைது செய்யப் படும் முன்பு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக பத்திரிக்கையாளர்களை சந்திக்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு சீமான் வருகை தந்த போது, காவல்துறையினரை விட்டு, பத்திரிக்கையாளர்களை தாக்கியவர்தான் இந்த கண்ணாயிரம். கடைசி வரை சீமானை பத்திரிக்கையாளர்களோடு பேச விடாமல் தடுத்தார்.
சென்னை கமிஷனர் அலுவலக வளாகத்தின் உள்ளேயே, பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிலரால், தாக்கப் பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து வெகுண்டெழுந்த பத்திரிக்கையாளர்கள், கண்ணாயிரம் அலுவலகத்தின் உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். உரிய முறையில் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று கண்ணாயிரம் உறுதி அளித்தார். தாக்கிய நபர்கள் கமிஷனர் அலுவலகத்திலிருந்து தப்ப வைக்கப் பட்டனர். கண்ணாயிரம் அடுத்து என்ன செய்தார் தெரியுமா ? புகார் கொடுத்த பத்திரிக்கையாளர் பணி புரியும் நிறுவனத்தின் முதலாளியிடம் சொல்லி, புகார் கொடுத்தவருக்கு நெருக்கடி கொடுத்து, புகாரை வாபஸ் பெறச் செய்தார். இதுதான் கண்ணாயிரம்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் போது, சில வழக்கறிஞர்கள், கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டினர். அப்போது, திமுக ரவுடிகள், வி.எஸ்.பாபுவின் தலைமையில் கறுப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்கள் மில்டன், பார்த்தசாரதி, சுரேஷ், தியாகு, சாலமன் மற்றும் முனீஸ்வரன் ஆகியோரை அடித்து நொறுக்கினர். இதை படமெடுத்த ஜெயா டிவியின் கேமராமேன் மற்றும் என்டிடிவி ஹின்டுவின் கேமரா மேன் தேவராஜன் மற்றும் லைவ் இந்தியா டிவியின் கேமராமேன் ஆகியோர் மிருகத்தனமாக தாக்கப் பட்டனர். இது கண்ணாயிரம் அந்த இடத்தில் இருக்கும் போதே நடந்தது.
கண்ணாயிரம் என்ன செய்தார் சொல்லுங்கள் பார்ப்போம் ? தாக்கப் பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்தார். அவர்கள் ஜாமீன் கோர மாட்டோம், சிறை செல்கிறோம் என்று சொன்னதும், நாங்கள் அவர்களை அவ்வாறு செய்யாதீர்கள் என்று சொன்னதால் ஜாமீன் தாக்கல் செய்தார்கள். பாதிக்கப் பட்ட பத்திரிக்கையாளர்கள், எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் மதியம் ஒரு மணிக்கு காவல் நிலையம் சென்றார்கள். மாலை 5 மணி வரை அவர்கள் புகார் காவல் நிலையத்தில் வாங்கப் படவே இல்லை. உள் துறை செயலாளர் மாலதியிடம், பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசிய பிறகே புகார் வாங்கப் பட்டது.
இன்று வரை, தாக்குதலுக்கு காரணமான ஒருவர் கூட கைது செய்யப் படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
திமுகவின் ராஜ்ய சபா எம்பி வசந்தி ஸ்டான்லி தன் மீது மோசடி வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த மோசடி வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் வசந்தி. இதற்காக வசந்திக்கு மூன்று நபர்கள் ஜாமீன் (ஷ்யூரிட்டி) கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.
வசந்திக்கு ஜாமீன் தாரர்கள் மூன்று பேர். முதலாமவர் கே.ராமதாஸ். தந்தை பெயர் கண்ணன். முகவரி 25/38, கோவிந்த சிங் தெரு, புளியந்தோப்பு, சென்னை 12.
அடுத்த ஜாமீன்தாரர் கே.ராதாகிருஷ்ணன். தந்தை பெயர் கண்ணன். முகவரி எண் 2/421, முதல் குறுக்குத் தெரு, ராஜீவ் காந்தி நகர், மேடவாக்கம், சென்னை.
மூன்றாவது ஜாமீன் தாரர் எம்.புஷ்பராஜ், தந்தை பெயர் முனுசாமி. எண் 99, போக்குவரத்து சந்து தெரு, புதுப்பேட்டை, சென்னை.2
இதில் முதல் ஜாமீன்தாரர் ராமதாஸ் செங்கல்பட்டு மாவட்டம், சைதாபேட்டை தாலுகா, 135, சேலையூர் கிராமம், விவேகானந்தர் தெரு, கதவு எண் 198ல், சர்வே எண் 212/பி ல் உள்ள பிளாட் எண் 4561 விஸ்தீரணம் 2400 சதுர அடியில் உள்ள வீடும் காலி மனையும் அடங்கிய சொத்துப் பத்திரத்தை வசந்திக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். இவருக்கு இந்த அளவுக்கு சொத்து உள்ளது என்று தாம்பரம் தாசில்தார், ஒரு சொத்துச் சான்றிதழையும் வழங்குகிறார்.
இரண்டாவது நபர் ராதாகிருஷ்ணன், தனக்கு எண் 28, அம்மன் கோயில் தெரு, ஈஞ்சம்பாக்கம் கிராமம், தாம்பரம் தாலுகா என்ற முகவரியில் நான்கு செண்ட் மதிப்பில் ஒரு ஓட்டு வீடும் காலி மனையும் இருப்பதாக காட்டி, தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒரு சொத்துச் சான்றிதழை தாக்கல் செய்திருக்கிறார்.
மூன்றாவது நபர், புஷ்பராஜ், அவருக்கு சென்னை தாம்பரம் தாலுகா, சேலையூர் கிராமம், திருவள்ளுவர் தெருவில், நான்கு சென்ட் இடத்தில் ஒரு ஓட்டு வீடும், ஒரு காலி மனையும் இருப்பதாக காட்டியிருக்கிறார். இதற்கும் தாம்பரம் தாசில்தார் சான்று அளித்துள்ளார்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில், வசந்தி ஸ்டான்லி, கைது செய்யப் படாமல் முன்பிணை பெறுகிறார்.
இப்போது விஷயத்துக்கு வருவோம். ராமதாஸ் தனக்கு சொந்தமானது தாக்கல் செய்துள்ள 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள வீட்டிற்கு சென்றால், அப்படி ஒரு வீடே அங்கு இல்லை. ராமதாஸ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று பார்த்தால், அங்கு உள்ள ராமதாஸ் மாதம் 350 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு கூலித் தொழிலாளி. ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டையும் காலி செய்து விட்டு சென்று விட்டார். அந்த பத்திரத்தின் எண் 2856. தாம்பரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விசாரித்துப் பார்த்தால், அந்தப் பத்திரம் வேங்கை வாசல் கிராமத்தில் இருக்கும் ருக்குமணி என்பவரின் சொத்து. ராமதாசுக்கும் இந்த சொத்துக்கும் சம்பந்தமே இல்லை.
அடுத்த நபர் ராதாகிருஷ்ணன். அதுவும் கே.ராதாகிருஷ்ணன். இவர் தனது சொத்து என்று குறிப்பிட்டுள்ள, எண் 28, அம்மன் கோயில் தெரு, ஈஞ்சம் பாக்கம் என்ற முகவரியே போலி. அப்படி ஒரு சொத்து இல்லை. இந்த ராதாகிருஷ்ணன் கொடுத்த வீட்டு முகவரியும் போலி.
மூன்றாவது நபரான புஷ்பராஜ் தனக்கு சேலையூரில் சொத்து இருப்பதாக ஆவணம் தாக்கல் செய்துள்ளார். அந்த முகவரியில் அப்படி ஒரு வீடே இல்லை என்பது தெரிய வந்தது. சரி இந்த நபரின் புதுப்பேட்டை முகவரியாவது சரியாக இருக்குமா என்று பார்த்தால், அந்த தெருவில் இரண்டு புஷ்பராஜுகள் இருந்தனர். ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர், அவரது வீட்டை 1999ம் ஆண்டு விற்று விட்டு சென்று விட்டார்.
சரி. தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் சொத்துச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களே… அது எப்படி வழங்கப் பட்டது என்று விசாரித்தால், இதை விட பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
எஸ்.கோவிந்தராஜன், வட்டாட்சியர், (பொறுப்பு), தாம்பரம், தனது கடித எண் ந.க.459/2009 பி2 என்ற 22.04.2009 நாளிட்ட கடிதத்தில் இந்த மூன்று சொத்துச் சான்றிதழ்களும் பரிசீலிக்கப் பட்டது. அந்த சான்றுகளில் தாம்பரம் வட்டாட்சியர் வி.ராமனாதன் என்று கையொப்பமிடப் பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில், திரு.ராமனாதன் என்ற பெயர் கொண்ட வட்டாட்சியர் எவரும் இவ்வட்டத்தில் பணிபுரிய வில்லை. எனவே இந்தச் சான்றுகள் இந்த அலுவலகத்தில் வழங்கப் படவில்லை என்றும், மேலும் தாங்கள் தாக்கல் செய்துள்ள பட்டாக்களில் வட்டாட்சியர் கையொப்பம் இடப்பட்டுள்ளது. தனி நபர் பெயர்களில் வழங்கப் படும் பட்டாக்களில் வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்கப் படுவதில்லை. துணை வட்டாட்சியர் நிலையில்தான் பட்டாக்களில் கையொப்பமிடுதல் வழக்கம். மேலும் அதில் உள்ள கோபுர முத்திரையை ஆய்வு செய்ததில் அம்முத்தியும் இவ்வலுவலக முத்திரை கிடையாது. ஏனெனில் வட்டாட்சியர் அலுவலகம் என்று இவ்வலுவலக முத்திரை இருக்கும். ஆனால் தாங்கள் தாக்கல் செய்துள்ளவற்றில் வட்டாட்சியர் அலுவலர் என்று உள்ளது. எனவே மேற்படி சான்றுகள் இவ்வலுவலகத்தில் வழங்கப் படவில்லை என்றும், மெய்த்தன்மையற்றது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் இவ்வலுவலகத்தில் பயன்படுத்தப் படும் வட்டாட்சியர் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையையும், கோபுர முத்திரையையும் வெள்ளைத்தாளில் இட்டு இணைத்து அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.”
இந்த விபரங்களையெல்லாம் குறிப்பிட்டு, வசந்தி ஸ்டான்லி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான ஆவணங்களை இணைத்து, சென்னை மாநகர ஆணையாளர் கண்ணாயிரத்துக்கு, வழக்கறிஞர் புகழேந்தி கடந்த அக்டோபர் 2010ல் ஒரு புகாரை கொடுக்கிறார்.
இந்தப் புகாரின் மீது, நடவடிக்கை எடுக்க இதற்கு பொறுப்பாக இருந்த கூடுதல் ஆணையாளர் சஞ்சய் அரோரா முயன்ற போது, அவரை கண்ணாயிரம் தடுத்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. வசந்தி சமர்ப்பித்த போலி ஆவணங்கள், இன்று வரை நீதிமன்றத்தில் இருக்கின்றன. என்ன செய்தார் கண்ணாயிரம் ?
விளக்கமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் ?
மோசமான, திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டு பிடித்த ஜெயலலிதா, எப்படி கண்ணாயிரம் விஷயத்தில் ஏமாந்தார் என்று தெரியவில்லை. தவறு செய்வது சகஜம். அதை திருத்திக் கொள்வதே, நல்ல ஆட்சியாளர்களுக்கு அழகு. ஜெயலலிதா செய்வார் என்று நம்புவோம்.
முடிப்பதற்கு முன்பு ஒரு கொசுறு செய்தி. பணம் கொடுத்து செய்தி போடுவது (Paid news) என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். இதற்கு அருமையான உதாரணம், இன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் வந்துள்ள செய்தி. கண்ணாயிரம் பாரபட்சம் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பாராம். பாரபட்சம் இல்லாமல் சரக்கடிப்பார். அப்புறம் க்ளீம் இமேஜாம். அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளைக் கேட்டுப் பாருங்கள். காறித் துப்புவார்கள்.
இந்தச் செய்தியை எழுதியுள்ளவர் குஹாம்பிகா என்ற பத்திரிக்கையாளர். இவரை கண்ணாயிரத்தின் தொண்டர் அடிப்பொடி என்றால் அது மிகையாகாது. கடந்த முறை “கமிஷனர் கண்ணாயிரம்” என்ற கட்டுரையை எழுதிய பிறகு, குஹாம்பிகாவை சந்திக்க நேர்ந்தது. “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனதில். இஷ்டத்துக்கு எழுதுவீர்களா ? நல்ல அதிகாரிகளைப் பற்றி இப்படித்தான் எழுதுவீர்களா ? யார் கொடுத்தது உங்களுக்கு இந்த தகவல்களை ?” வேண்டுமென்றால் கண்ணாயிரத்தை மறுப்பு கொடுக்கச் சொல்லுங்கள் சவுக்கில் பதிப்பிக்க தயாராக இருக்கிறோம் என்றே பதில் அளிக்கப் பட்டது. அந்தக் கட்டுரையில், கண்ணாயிரத்துக்கு இரண்டு மனைவிகள் என்று நேரடியாக குற்றம் சாட்டப் பட்டிருந்தது. இந்தக் குற்றச் சாட்டு பொய்யாக இருந்திருந்தால், கண்ணாயிரம் சவுக்கை சும்மாவா விட்டு வைத்திருப்பார் ? இதற்கு குஹாம்பிகாதான் பதில் சொல்ல வேண்டும். இந்தச் செய்தியை அனுமதித்த பாபு ஜெயக்குமார் அவர்களும் இதற்கு பதில் சொல்லட்டும். அதிகாரிகளுக்கு ஜால்ரா போடுவது தவறல்ல ? சகாயம் போன்ற நல்ல அதிகாரிகளுக்கு போடுங்கள் பாபு ஜெயக்குமார். கண்ணாயிரம் போன்ற கயவர்களுக்குப் போடாதீர்கள்.