உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர், பிரதமர் மோடியை கொல்ல சதி, என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்கள்.
அந்த வழக்கில்தான், கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனு, ஒரு முக்கிய ஆவணம். அதன் முக்கியத்துவம் கருதி, அந்த மனுவை அப்படியே தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.
ரொமிலா தாப்பர் உள்ளிட்டோரின் மனு முழு விவரம்
நாடு தழுவிய நடவடிக்கையில், செவ்வாய்க்கிழமை அன்று புனே காவல் துறை, கவுதம் நவலகா, சுதா பர்தவாஜ், வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னான் கோன்சல்வஸ் ஆகிய ஐந்து செயற்பாட்டாளர்கள், ஜனவரியில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற பீமா கோரேகான் வன்முறையைத் தூண்டியது தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர்.
இதனிடையே, புதன்கிழமை அன்று வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட ஐந்து முன்னணி அறிஞர்கள் இந்தக் கைது நடவடிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியும் இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் நோக்கிலான மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க மகாராஷ்டிரா காவல் துறைக்கு உத்தரவிடவும் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடிவரும், எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்கான முயற்சியாக இந்தக் கைது அமைவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவின் முழு விவரம் வருமாறு:
இந்திய உச்ச நீதிமன்றம் கிரிமினல் விசாரணை மூல ரிட் மனு
- ரொமிலா தாப்பர்
- தேவகி ஜெயின்
- பிரபா பட்னாயக்
- சதீஷ் தேஷ்பாண்டே
- மஜா தாருவாலா
இந்திய அரசியல் சாசனத்தின் 14ஆவது, 21ஆவது பிரிவுகள் வழங்கும் அடிப்படை உரிமைகளை முற்றிலுமாக மீறும் வகையில், சோதனை செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரும் பொது நலன் நோக்கிலான மனு
மதிப்பிற்குறிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் அவரது சக நீதிபதிகள்,
மனுதாரர்கள் பணிவுடன் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றனர்:
- இந்த மனு, பரந்த பொது நலனை முன்னெடுக்கவும், ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மாண்புகளை காக்கும் வகையில் நேர்மையான எதிர்ப்பு நசுக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்துடனும் தாக்கல் செய்யப்படுகிறது. சுதந்திரமான குரல்கள் மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான கொள்கைகளை நசுக்க, ஏன் அழிக்கவும் முற்படும் வகையில் அரசியல் அதிகாரம் பெரிய அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பதிவு செய்வதும் இந்த மனுவின் நோக்கமாக இருக்கிறது. புனே காவல் துறையின் நேர்மைக்கு விரோதமான நடவடிக்கை, போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லாத நிலையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட செயல் மூலம் கருத்துச் சுதந்திரம் மற்றும் மக்களின் சுதந்திரம் மீதான மிகப் பெரிய தாக்குதலாக அமைந்துள்ளது. எதிர்ப்பை மவுனிக்கவைப்பது, நாடு முழுவதும் விளிம்பு நிலை, ஏழை மக்களுக்கு உதவுவதைத் தடுப்பது மற்றும் மக்கள் மனதில் அச்சத்தை விதைப்பதாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நேரம் பல கேள்விகளை எழுப்பி, உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பும் நோக்கம் கொண்டதோ என சந்தேகிக்க வைக்கிறது. ஜனநாயகப் பண்புகள் தேய்ந்துவருவதால் மிகவும் கவலைக்குள்ளாகியுள்ள மனுதாரர்கள், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை நிறுத்தக் கோரவில்லை, ஆனால், இந்த மேதகு நீதிமன்றம் பொருத்தமானது என கருதும் சரியான நபர்கள் கீழ் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்யக் கோருகின்றனர். இதைத் தவிர மற்ற எந்த நடவடிக்கையும் இந்த தேசத்தின் ஆதாரமான இழையைப் பாதிக்கும்.
தில்லி, பாரிதாபாத், மும்பை , தானே மற்றும் ஐதராபாத்தைச்சேர்ந்த ஐந்து செயற்பாட்டாளர்கள், 2018, ஆகஸ்ட் 28 அன்று அவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோதமான செயல்கள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ.) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பார்க்கும்போது, அவை கண்மூடித்தனமானதாக, தேவையற்றதாக, மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை, சுதந்திரமான பத்திரிகையாளர்களை, எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை, அரசு மற்றும் அதன் கொள்கைகளை விமர்சிக்காமல் இருக்க அச்சுறுத்துவது மற்றும் எதிர்ப்பை நசுக்குவதற்கான திட்டமிட்ட செயலின் அங்கமாக இருப்பதாகத் தோன்றுகிறது.
கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் மத்தியில் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் மக்கள் உரிமைகள் சார்ந்த இயக்கங்களை நடத்தி வருபவர்கள். இத்தகைய நபர்கள் மீது, இவர்கள் வன்முறை செயலை செய்ததற்கான எந்த வித ஆதாரமும் இல்லாதபோது, தீவிரமான, மோசமான வன்முறைச் செயல்களுக்கான யு.ஏ.பி.ஏ. சட்டத்தைப் பிரயோகித்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது, மாண்பு மிக்க நீதிமன்றத்தின் அவசர தலையீட்டையும் கோருகிறது.
1 அ. மனுதாரர்கள் அனைவரும் கல்வியாளர்கள். இந்த நாட்டின் ஜனநாயகத் தன்மையை காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.
மனுதாரர் எண். 1 இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வரலாற்றாசிரியர். இவர் ஜே.என்.யூ.வில் தனது பங்களிப்பிற்காகக் கவுரவிக்கப்பட்ட ஓய்வு பெற்ற பேராசிரியர். தனது வாழ்நாளில் பெரும்பகுதி இங்கு பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இரண்டு முறை பத்ம பூஷண் விருதை நிராகரித்துள்ளார். பிரிட்டிஷ் அகாடமி மற்றும் அமெரிக்கன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மில்லியன் டாலர் மதிப்புள்ள குலுஜ் விருதை இணைந்து பெற்றுள்ளார். ஆக்ஸ்போர்டு மற்றும் சிக்காகோ பல்கலை உள்ளிட்ட பல பல்கலைகளில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
மனுதாரர் எண். 2 பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்தியாவின் முன்னணி பெண்ணியப் பொருளாதார வல்லுனர். திட்டக் கமிஷன், பெண்களுக்கான தேசியக் கமிஷன் மற்றும் சர்வதேச அமைப்புகளில் பங்களித்திருக்கிறார். பெண்கள் ஆய்வுக்கான இந்தியச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிறுவன உறுப்பினர்.
மனுதாரர் எண். 3 முன்னாள் ரோட்ஸ் அறிஞர், ஜே,என்.யூ.வில் 30 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராக இருந்திருக்கிறார். கேரள மாநில திட்ட வாரியத்தின் துணை தலைவராக இருந்திருக்கிறார். உலக பொருளாதார அமைப்புக்கான குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார். சோஷியல் சயின்டிஸ்ட் இதழின் ஆசிரியர்.
மனுதராரர் எண். 4 நன்கறிந்த சமூக விஞ்ஞானி, தில்லி பல்கலைப் பேராசிரியர். வளர்ச்சி ஆய்வுகளுக்கான பங்களிப்பிற்காக மேல்கம் ஆதிசேஷையா விருது வென்றுள்ளார். உத்தேசிக்கப்பட்டுள்ள சம வாய்ப்பு குழுவுக்கான அரசு குழுவில் இடம்பெற்றுள்ளார். வெளிநாட்டுப் பல்கலைகளில் வருகைதரு பேராசிரியர்.
மனுதாரர் எண். 5 வாரிய உறுப்பினர், மூத்த ஆலோசகர் காமன்வெல்த் மனித உரிமைகள் திட்டம்.
- 2018, ஆகஸ்ட் 28 அன்று, வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு கீழ்கண்ட செயற்பாட்டாளர்கள் கைதாகி உள்ளதாக அறிகிறோம்.
- கவுதம் நவலகா (மனித உரிமைச் செயற்பாட்டாளர் , புதுதில்லியில் பத்திரிகையாளர்). ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் எக்கனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லியுடன் தொடர்பு உடையவர். நடப்பு விவகாரங்கள் குறித்த கருத்துக்களை பதிவு செய்பவர். சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களை மீட்க அரசு இவர் உதவியை நாடியது.
- சுதா பரத்வாஜ் (வழக்கறிஞர், பிலாஸ்பூர் உயர்நீதிமன்றம், பாரிதாபாத்தில் வசிக்கிறார்) பிலாஸ்பூர் உயர்நீதிமன்றத்தின் நன்கறியப்பட்ட வழக்கறிஞர். சத்தீஸ்கரில் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக வாதாடியிருக்கிறார். பியுசிஎல் தேசியச் செயலாளர். 2017 முதல் தில்லி சட்டப் பல்கலையில் பேராசிரியராக இருக்கிறார். மக்கள் வழக்கறிஞர்களுக்கான இந்தியச் சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில், சுரேந்திர காட்லிங் போன்ற வழக்கறிஞர்கள் கைதுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
iii. வரவர ராவ் (வயது 79, ஐதராபாதில் வசிப்பவர், அரசியல் ஊழியர், விமர்சகர், புகழ்பெற்ற கவிஞர்). ஆங்கிலம் மற்றும் தெலுங்கு இலக்கியப் பேராசிரியர்.
- அருண் பெரேரா (மும்பை) 2015 முதல் வழக்கறிஞர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.
- வெர்னான் கோன்சல்வஸ் (மும்பை), பாம்பே பல்கலையில் வணிகவியலில் தங்க பதக்கம் பெற்றவர். சீமென்ஸ் நிறுவனத்தில் தணிக்கை அதிகாரி, மகராஷ்டிரா கல்லூரியில் பேராசிரியராக இருந்திருக்கிறார். எழுத்தாளர், பத்தியாளர்.
2அ. இதே நேரத்தில், புனே காவல் துறை, ஆதிவாசிகள் நலனுக்காக போராடும் ராஞ்சி மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சாமி, கோவா எழுத்தாளர் ஆனந்த் டெல்தும்பே, சிவில் உரிமைகள் வழக்கறிஞர் சூசன் ஆப்ரகாம் ஆகியோர் வீடுகள் அல்லது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டன..
- புனே காவல் துறை, 2018, ஜனவரி 8ஆம் தேதி, கோரேகான் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தலித்கள் மற்றும் தலித் செயற்பாட்டாளர்கள் மாநாடான எல்கர் பரிஷத்திற்கு பிறகு நடைபெற்ற பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக எப்.ஐ.ஆர் 4/2018 பதிவு செய்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி, சவந்த் மற்றும் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோல்சே பட்டேல் எல்கர் பரிஷத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும், இந்த எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்படவில்லை அல்லது எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
- 2018, ஜனவரி 4 அன்று, காவல் துறை, தலித் மாநாட்டிற்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாக சாட்சிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்துத்வா தலைவர்கள் மிலிந்த் எக்போட்டே, மற்றும் ஷாம்பாஜி ரான் பின்டே மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னணியில் இருந்து தாக்குதலை தூண்டிய பிண்டே மற்றும் எக்போட்டே மீது மாநில அரசு மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
- இதற்கு மாறாக காவல் துறையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை உள்நோக்கத்துடன் கைது செய்யத் துவங்கினர். இவர்கள் அனைவரும், நலிவுற்றவர்கள், விளிம்பு நிலை மக்கள், குறிப்பாக தலித்கள், பெண்கள், ஆதிவாசிகள் , நிலமற்ற தொழிலாளர்கள் ஆகியோரின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள்.
- அதன் பிறகு 2018 ஜுனில், நாக்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷோமா சென், நன்கறியப்பட்ட மனித உரிமைகள் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், பத்திரிகை ஆசிரியர் சுதிர் தவாலே, அரசியல் கைதிகள் பாதுகாப்பிற்கான குழு உறுப்பினர் ரோனா வில்சன் மற்றும் இடப்பெயர்வுக்கு எதிரான செயற்பாட்டாளர் மகேஷ் ராவத் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், வன்முறை மற்றும் சமூக விரோதத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டனர்.
- இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, செயற்பாட்டாளர் ரோனா வில்சன் கம்ப்யூட்டரில் ஆர் எனக் கையெழுத்திடப்பட்டு, காம்ரே பிரகாஷுக்கு எழுதப்பட்ட கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மூத்த தோழர்கள் மோடி காலத்தை முடிவுக்கு கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகவும், ராஜீவ் காந்தி கொலை பாணியில் பிரதமரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பது பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. பீமா கோரேகான் வன்முறையை விசாரிக்கும் காவல் துறை, கைது செய்யப்பட்டவர்கள் மீதான பொதுமக்கள் கருத்தை விரோதமானதாக மாற்றும் வகையில் தேர்ந்தெடுத்த ஊடகங்கள் மூலம், ஆதாரமில்லாத, சரி பார்க்கப்படாத, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளைக் கூறும் திட்டமிட்ட உத்தியைக் கடைபிடித்துவருகிறது. நீதிபதிகள் கோல்சே மற்றும் பி.பி.சாவந்த், எல்கர் பரிஷத் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நீதிமன்றத்தில் சாட்சியாக வைக்கப்படாத இந்த கடிதம் போலியானது எனக் கூறியுள்ளனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக மற்றும் மதவாத சக்திகளை எதிர்க்கவும் மக்களைத் திரளச் செய்ததால் அரசு எல்கர் பரிஷத்தை அச்சுறுத்தலாகப் பார்த்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் எல்கர் பரிஷத்தை நடத்தியதாக காவல் துறை தெரிவித்தது. ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தாங்கள்தான் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
8.இந்தச் சோதனைக்குப் பிறகான தேடல் ஆணைகளில் குற்றம் காணக்கூடிய வகையில் எதுவும் இல்லை. கலாச்சார நிகழ்ச்சி தொடர்பான எப்.ஐ.ஆர் No.4/2018 (புனேவின், பி.எஸ்.விஸ்ராம் நகரில் பதிவானது PS) அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 28 கைது செய்யப்பட்ட எந்தச் செயற்பாட்டாளரும் அதில் பங்கேற்கவில்லை அல்லது எப்.ஐ.ஆரில் குறிப்பிடவில்லை அல்லது எல்கர் பரிஷத் நடைபெற்றபோது பீமா கோரேகானில் இருக்கவில்லை அல்லது வன்முறை நடைபெற்றபோது இருக்கவில்லை எனத் தெரிகிறது. அவர்கள் தரப்பில் குற்றச் செயலுக்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 2018, ஆகஸ்ட், 28 அன்று நாடு முழுவதும், வழக்கறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வீடுகளில் புதிதாகச் சோதனை நடத்தப்பட்டன. சோதனை நடத்தப்பட்டவர்களின் பொதுவான அம்சம் என்னவெனில் அவர்கள் ஒவ்வொருவரும், ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், ஆதிவாசிகள் மற்றும் தலித்கள் போன்ற பாதிப்புக்குள்ளாககூடிய சமூகங்களின் நலனுக்காகப் பாடுபட்டு வருபவர்கள்; இத்தகைய செயல்பாடுகளின் விளைவாக அரசு, காவல் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட சக்தி வாய்ந்தவர்களின் அதிருப்திக்கு இலக்கானவர்கள். ஆக்ஸ்ட் 28இல் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது சோதனைக்கு உள்ளானவர்கள் யாரும், 2017 டிசம்பர் 31இல் நடைபெற்ற எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது தெளிவு. மேலும், இவர்களில் யாரும் எப்.ஐ.ஆர். 4இல், நேரடியாக அல்லது வேறு எந்த வகையிலும் குறிப்பிடப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. காவல் துறை எப்.ஐ.ஆரை விசாரணைக்காகப் பயன்படுத்தாமல் மனித உரிமைக்காகப் போராடுபவர்களைச் சிக்க வைப்பதற்கான பொறியாகப் பயன்படுத்தியுள்ளனர்.
- 2018 ,ஆகஸ்ட் 28 அன்று கைது செய்யப்பட்ட எல்லோருமே, சமூகத்தில் முக்கியமானவர்கள். தங்கள் தொழில்முறைத் திறன்கள் மூலம் சமூகத்திற்குப் பங்களிப்பு செய்பவர்கள். சமூகத்தில் ஆழமான வேர் கொண்ட இந்த மனிதர்களைக் கைது செய்வதற்கான எந்தக் காரணமும் இல்லை. மேலும் இவர்கள் தப்பிச் சென்றுவிடுவார்கள் அல்லது வழக்கு விசாரணையில் தலையிடுவார்கள் என அஞ்சவும் எந்தக் காரணமும் இல்லை. கண்மூடித்தனமான, உள்நோக்கம் கொண்ட இந்தக் கைதுகளுக்கான ஒரே காரணம், எதிர்ப்புக் குரலை நசுக்குவதுதான். அதிலும் குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கான குரலை நசுக்குவது.
இந்தக் கைது, மனித உரிமைக் காப்பாளர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் செயற்பாட்டாளர்களை மோசமாகச் சித்திரிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட, அவர்கள் முன்னிறுத்தும் கொள்கைகள் மற்றும் எண்ணங்களையும் களங்கப்படுத்தும் செயலாகும். இது, பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் எனச் சுதந்திர எண்ணம் கொண்ட அனைவரது மத்தியிலும் கிலியை ஏற்படுத்தும் முயற்சியாகும். அரசு, அதன் கொள்கைகள் ஆகியவற்றை அவர்கள் விமர்சிக்காமல் இருப்பதற்கான ஏற்பாடு இது. புலனாய்வு அமைப்பு, தேர்ந்தெடுத்த ஊடகங்களுடன் இணைந்து, மனித உரிமை ஆதரவாளர்களுக்கு எதிராக, ஆதாரமில்லாத, பொய்யான, உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளைப் பரப்பியுள்ளது.
2018 ஜூலையில், ரிபப்ளிக் டிவி வெளியிட்ட பயங்கரக் கடிதம், வழக்கறிஞர் சுதா பரத்வாஜைத் தொடர்புபடுத்தியது. இந்தக் கடிதத்தில் அவருக்கு மாவோயிஸ்ட் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு இந்த சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. காவல் துறை மற்றும் ஊடகங்கள் சிலவற்றில் நகர்புற நக்சல் எனும் சொல், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகிறது.
- இந்தக் கைதுகளின் தான்தோன்றித்தனமான, சட்ட விரோதமான மற்றும் பொறுப்பில்லாத தன்மையையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. கைது செய்யப்பட்டவர்கள் அல்லது சோதனை செய்யப்பட்டவர்கள் மற்றும் எப்.ஐ.ஆர் இடையே எந்த தொடர்புக்கான ஆதாரத்தையும் வழங்காமலே எப்.ஐ.ஆர். 4/2018 ஐப் பயன்படுத்தி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை எல்லாம் கைது செய்துள்ளனர். கவுதம் நவலகா மற்றும் சுதா பரத்வாஜ் ஆகிய இருவரின் கைது குறிப்புகளிலும், புனே காவல் துறை, சுதந்திரமான மற்றும் மதிப்பு மிக்க மனிதர்கள் எனக் கொண்டு வந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தது. சோதனைக் குறிப்புகள் மராத்தியில் எழுதப்பட்டு, புனே காவல் துறையால் கொண்டுவரப்பட்டவர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைக்கு அடிப்படையான மேலே சொன்ன எப்.ஐ.ஆரும் மராத்தியில் உள்ளது. கைதானவர்களுக்கு எந்த மொழிபெயர்ப்பும் அளிக்கப்படவில்லை. கவுதம் நவலகா அல்லது சுதா பரவத்வாஜ் இருவருமே மராத்தியில் பேசக்கூடியவர்கள் அல்ல.
- இந்த விஷயத்தில், தில்லி உயர் நீதிமன்றம், ஆட்கொணர்வு மனு [Writ Petition (Cri.) 2559/2018] அடிப்படையில், 28-8-2018 தேதியிலான முதன்மை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட்டின் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ரிமாண்ட் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இந்த மனு, நீதிமன்றம் முன், 29ஆம் தேதி மாலை 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
- வேறு இடம் கொண்டு செல்வதற்கான உத்தரவு பிறப்பிக்கும்போது நீதிமன்றம், அந்த உத்தரவானது, சட்டத்திற்கு உட்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும், சுதா பரத்வாஜ், உள்ளூர் காவல் நிலைய மேற்பார்வையில் அதுவரை வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு மேதகு நீதிமன்றம் முன் 30ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த உத்தரவை மீறி, புனே காவல் துறையால் சுதா பரதவாஜை நகரை விட்டு அழைத்துச்செல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு விசாரணையில் பாரிதாபாத் தலைமை நீதிபதி, “நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இல்லத்தில் சுதா பரத்வாஜ் மேற்பார்வையின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என எஸ்.எஹ்.ஓ சூரஜ்கிரனுக்கு உத்தரவிட்ட நிலையில், 30ஆம் தேதி விசாரணையில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறது என்பதை அறிந்து அதுவரையிலும் காத்திருப்பதுதான் பொருத்தமானது என்றும் தெரிவித்தது.
- முன்னர் குறிப்பிடப்பட்டதுபோல, கைது செய்யப்பட்டவர்களில் பலர், அரசால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அரசியல் சாசன உரிமைக்காக வாதாடியுள்ளனர். இவர்களில் பலர் தேவையான நேரங்களில் அரசு சார்பில் மத்தியஸ்தர்களாக இருந்துள்ளனர். ஆனால் தற்போதைய அரசு இவர்களுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகிறது. ஆகஸ்ட் 28இல் கைதானவர்கள் அனைவரும் நன்கறியப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். அவர்கள் எழுத்துக்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான செயல்கள், நாட்டில் சிவில் உரிமைகளுக்கான போராட்டங்கள் அனைத்துமே சுயநலமில்லாதவை. அவர்கள் திட்டமிட்டுக் குறிவைத்து, பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
- இவர்களைப் பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்ததை அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கண்டித்துள்ளனர். இந்திய எழுத்தாளர்கள் மன்றம் வெளியிட்ட கண்டன அறிக்கையில்,. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அருந்ததி ராய், ரொமிலா தாப்பர், பெஸ்வடா வில்சன் உள்ளுட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். கைது நிகழ்ந்த அன்று இந்த அறிக்கை வெளியானது. நிஜமான சதியிலிருந்து மக்களை திசைதிருப்பப் பொய்யான சதியைக் கண்டிப்பதாகக் கூறியிருந்தனர். மக்கள் நலனுக்காகப் போராடும் நபர்களுக்குத் துணை நிற்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
- முன்னதாக, ஆம்ன்ஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச், தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசியல் நோக்குடன் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியது. தலித் மற்றும் ஆதிவாசிகள் உரிமைகளுக்கான செய்ற்பாட்டாளர்கள் கைது அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்திருந்தது.
- தீவிரவாதிகளுக்காக உருவாக்கப்பட்ட கொடூரமான சட்டங்கள் வாயிலாகக் கைது செய்து, எதிர்ப்புக் குரல்களை நசுக்கினால், அரசியல் அமைப்பு மற்றும் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை இழை தாக்குப்பிடிக்காது. இவை எல்லாம் கிரிமினல் வழக்குகள். எனவே மனு மூலம் தலையிட முடியாது எனும் வழக்கமான வாதம் பொருந்தாது எனப் பணிவுடன் கருதுகிறோம், ஏனெனில் இங்கு யு.ஏ.பி.ஏ. சட்டம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகத் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
- மேலும், இத்தகைய மனிதர்கள் பழைய மற்றும் நிலுவையில் உள்ள எப்.ஐ.ஆருடன் தொடர்புபடுத்திக் கைது செய்யப்படுவார்கள் எனில், ஒவ்வொரு குடிமகனின் சுதந்திரமும் தாக்குதலுக்கு உள்ளாகும். எனவே இந்த நீதிமன்றத்தின் தலையீடு கோரப்படுகிறது.
- இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மனுதாரர்கள் வேறு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை.
காரணங்கள்
- அ. ஏனெனில், நன்கறியப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்ப்பு குரல்கள், அவர்கள் தொடர்பில்லாத மற்றும் பங்கேற்காத பீமா கோரேகான் சம்பவ அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது மற்றும் நாட்டில் எதிர்ப்புக் குரலை நசுக்கும் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டுகளை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாகும். இந்தக் கைது மற்றும் சோதனைகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14 மற்றும் 21 பிரிவின் கீழ் வழங்கப்படும் சட்டத்திற்கு உட்பட்ட குடிமகன்களுக்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
- ஆ. ஏனெனில், எந்த வித வன்முறையிலோ அல்லது வன்முறையைத் தூண்டுவதிலோ ஈடுபடாத, அமைதியை விரும்பும் செயற்பாட்டாளர்கள் மீது, கொடூரமான யு.ஏ.பி.ஏ. சட்டப் பிரிவைப் பயன்படுத்தியிருப்பது உள்நோக்கம் கொண்டது; அவர்களையும் அவர்களைப் போன்றவர்களையும் அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் முயற்சி. சட்ட வழிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் மற்றும் கொள்கை எதிர்ப்பாளர்களைக் குறி வைத்து விசாரணைக்கு உள்ளாக்குவது நம்முடைய சமூகத்தை இயக்கும் சட்டத்தின் ஆட்சிக்கு விரோதமானதாகும். அரசு, அரசியல் நோக்கில் மற்றும் கொள்கை ரீதியாகச் செயல்பட்டு விசாரணை செய்வது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தனிநபர்களின் உரிமையை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. மேலும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், இந்தியா 1976இல் ஏற்றுக்கொண்ட சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சர்வதேச நெறிமுறைகளுக்கும் இது எதிரானதாகும்.
- இ. ஏனெனில், கண்மூடித்தனமாகவும் திட்டமிட்ட வகையிலும் வரம்பு மீறிய முறையில், சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை, கருத்துரிமையை, எதிர்ப்பை, அரசியல் வெளிப்பாட்டை நசுக்க பயன்படுத்துவது கைது செய்யப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைகிறது. இதுபோன்ற நடவடிக்கை, குடிமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும். தங்கள் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின் மீதான அச்சத்தால் அவர்களால் 19 மற்றும் 21 பிரிவுகளின் உரிமையை முழுவதும் அனுபவிக்க முடியாத நிலை உண்டாகும்.
- ஈ. ஏனெனில், எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் வேறுபாடு கொள்வது உள்ளிட்ட கருத்துரிமை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையைப் பயன்படுத்தியதற்காக அரசால் விசாரணைக்கு உள்ளாவது, அரசியல் சாசனத்தின் 19ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும்.
- உ. ஏனெனில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம், 32ஆம் ஷரத்தின் நீதி பரிபாலனம் தொடர்பான மையத்தைக் கடந்த ஆண்டுகளில் விரிவுபடுத்தியுள்ளது. ஜனதா தளம் எதிர் எச்.எஸ்.சவுத்ரி (1992) 4 SCC 305 வழக்கில் இது விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மனுதாரர்கள் இந்த மனுவைப் பொதுநலன் நோக்கில், மற்றும் 32ஆம் ஷரத்தின் கீழ் வரும் பகுதிகளின்படி தாக்கல் செய்கிறார்கள்.
- ஊ. ஏனெனில், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களில் அரசியல் செயல், கிரிமினல் செயல்களுக்கு எதிரான சட்டச் செயல்கள் எனும் போர்வையில், அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதியைப் பாதிக்க அனுமதிக்க கூடாது. அரசியல் நோக்கிலான நடவடிக்கை மற்றும் பழிவாங்கும் செயல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சட்ட விரோதமான திரையைக் கிழித்து உண்மையான நோக்கம் மற்றும் அரசின் இத்தகைய மனம் போன்ற போக்கிலான செயல்களின் பின்னே உள்ள நோக்கத்தை வெளிக் கொண்டுவர வேண்டும்.
- எ. ஏனெனில், கைது செய்யப்பட்டவர்கள், எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்படவும் இல்லை, அல்லது தொடர்புகொண்டிருக்கவும் இல்லை என்பது தெளிவானது. மேலும் இவர்களில் யாரும், பீமா கோரேகானில் நடைபெற்ற நிகழ்வில் அங்கம் வகிக்கவில்லை, கோரேகான் சம்பவத்தோடு தொடர்புபடுத்தித்தான் இவர்கள் சட்டத்தின் வழிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தி இஷ்டம் போல கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஏ. ஏனெனில், எப்படிப் பார்த்தாலும், கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரும் மதிப்புக்குரியவர்கள் மற்றும் சமூகத்தில் ஆழமான தொடர்பு கொண்டவர்கள். அவர்களைக் காவலில் வைத்திருப்பதற்கான அவசியம் இல்லை. கைது என்பது கடைசிபட்சமாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும், அரசியல் சாசனத்தின் 21ஆவது பிரிவின் கீழ் வழங்கப்படும் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கு பங்கம் வரும் வகையில் இஷ்டம் போல மேற்கொள்ளப்படக் கூடாது என்பதும் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கிறது.
- ஐ. ஏனெனில் “தனிப்பட்ட சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாகும், ஒரு வழக்கின் குறிப்பிட்ட சூழல் மற்றும் தகவல்கள் அடிப்படையில் தவிர்க்க இயலாதது எனக் கருதும்போது மட்டுமே இது குறைக்கப்படலாம்.”
- ஒ. ஏனெனில், இந்த மாண்புமிகு நீதிமன்றம் கடந்த காலங்களில், நம் சமூகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள சூழல் குறித்து குறிப்பிட்டுள்ளது. தற்போதைய நடவடிக்கை சமூக சட்டம் ஒழுங்கின்மைக்கான உதாரணமாக அமைகிறது. இதில் அரசின் செயலே, கண்மூடித்தனமானதாக உள்நோக்கம் கொண்டதாக, சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளது.
- ஓ.ஏனெனில், 32 பிரிவிவின் கீழ் சட்ட நிவாரணம் பெறும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சிலர் தொடர்பாகச் சில நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள், 32 பிரிவின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்படுவதற்குத் தடையாக இருக்காது.
கோரிக்கைகள்:
எனவே, மேதகு நீதிமன்றம் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்:
- I பொருத்தமான ஆணை அல்லது உத்தரவை பிறப்பித்து, பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக 2018, ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக சுதந்திரமான மற்றும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
- பொருத்தமான ஆணை அல்லது உத்தரவைப் பிறப்பித்து, மகாராஷ்டிரா மாநில அரசை இந்தக் கண்மூடித்தனமான கைதுகளுக்கு விளக்கம் அளிக்கச்செய்ய வேண்டும்.
- பொருத்தமான ஆணை அல்லது உத்தரவைப் பிறப்பித்து, பீமா கோரேகான் வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். இந்தச் சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படும் வகையில் மேற்கொண்டு கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும். இவற்றில் பொருத்தமான ஆணையைப் பிறப்பிக்க வேண்டும்.
மனுதாரர் வழக்கறிஞர்:
(பிரசாந்த் பூஷண்)
மனுதாரர் வழக்கறிஞர்
பதிவு: 29 ஆகஸ்ட் 2018
புதுதில்லி
ஏண்டா நாதாரி மவனே இந்த கம்யுனிஸ்ட் நாய்ங்க
பச்சய சுப்ரிம் கோர்ட்ல போய் முல்லை பெரியார்ல தண்ணீர்
திறந்து விட்டதானலதான் நாங்க முங்கி கிடக்கிறோம் அப்ப்டினு புளுகிராங்களே
அதப்பத்தி எழுத மாட்டிய