இன்றைய காலை நாளிதழ்கள் நாம் நீண்டநாட்களாக விவாதித்துவந்த சில விஷயங்களுக்குத் தெளிவான விடை அளிக்கின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கச் செய்தி ஒன்று “கைது செய்யப்பட்டவர்கள், அரசைத் தூக்கி எறிய சதித் திட்டம் தீட்டிய ஃபாசிசத்துக்கு எதிரானவர்கள் குழுவில் அங்க வகித்தவர்கள்.” அரசின் போலீஸே இதை ஃபாசிஸ அரசு என்று சொல்லும் ஒரு ஆட்சியை எதிர்த்து நாம் போரிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்கும். இன்றைய இந்தியாவில், சிறுபான்மையினராக இருப்பது குற்றம். கொல்லப்பட்டவராக இருப்பது குற்றம், ஏழையாக இருப்பது குற்றம். ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது, அரசை தூக்கி எறிவதற்கான சதியில் ஈடுபட்ட குற்றம்.
நாடறிந்த செயற்பாட்டாளர்கள், கவிஞர்கள், மற்றும் வழக்கறிஞர்கள் வீடுகளில் புனே காவல் துறை சோதனை நடத்துவதும், இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட குடிமை உரிமைகளைப் பாதுகாக்கப் போராடும் ஐவரையும் அபத்தமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போதிய ஆவணங்கள்கூட இல்லாமல் கைது செய்வதும் கிளர்ச்சியைத் தூண்டும் என்பது இந்த அரசுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. நாம் அனைவரும் நிகழ்த்திய ஊடகச் சந்திப்புகள்,போராட்டங்கள் உட்பட நம் அனைவரது எதிர்வினைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும். அப்படி என்றால் இது ஏன் நடந்தது?
கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கைகள்
வாக்களர் தரவுகள் தொடர்பான அண்மைக்கால ஆய்வுகளும் ‘தேசத்தின் மனநிலை’ குறித்து லோக்-நீதி-சிஎஸ்டிஎஸ்-ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பும் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு வேகமாகச் சரிந்துவருவதாகச் சொல்கின்றன. இது (அவர்களுக்கு) ஒரு எச்சரிக்கை மணி.
செல்வாக்குச் சரிவுக்கான காரணங்களிலிருந்து நம் கவனத்தை திசைதிருப்பவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்கவும் தொடர்ந்து கருணையற்ற நடவடிக்கைகள் ஏவப்படும். இப்போதிலிருந்து தேர்தல் வரை, கைதுகள், கொலைகள், திட்டமிட்ட படுகொலைகள், கும்பல் வன்முறைக் கொலைகள், வெடிகுண்டு தாக்குதல்கள், கலவரங்கள், வேறொருவர் பெயரில் ஏவப்படும் தாக்குதல்கள் ஆகியவை தொடர்ந்து அரங்கேறிக்கொண்டே இருக்கும். நாம் தேர்தல் காலத்தை அனைத்து விதமான வன்முறைகள் ஏவிவிடப்படும் காலம் என்று புரிந்துகொள்ளப் பழகிவிட்டோம். பிரித்து ஆள்வது மட்டுமல்ல திசைதிருப்பி ஆள்வதும் இந்த அரசுக்குத் தெரியும். இப்போதுலிருந்து தேர்தல் வரை எப்போது எங்கிருந்து எவ்வாறு என்ன மாதிரியான தீப்பந்துகள் நம்மீது வந்துவிழும் என்று நமக்குத் தெரியாது. எனவே இந்த வழக்கறிஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கைது பற்றிப் பேசுவதற்கு முன், நம்மீது எவ்வளவு விசித்திரமான தாக்குதல்கள் ஏவப்பட்டாலும். நெருப்பு மழையே பொழிந்தாலும் நாம் நம் கவனத்தை திசைதிருப்பிடக் கூடாது. ஐந்து விஷயங்களை இங்கே பட்டியிலிடுகிறேன்.
பொருளாதாரப் பிரச்சினைகள்
- பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டின் 80% கரன்சி நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்யும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்து ஒரு ஆண்டும் ஒன்பது மாதங்களும் ஆகிவிட்டன. இந்த அறிவிப்பு அவரது அமைச்சரைவையையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுபோல் தெரிந்தது. இப்போது மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட செலாவணியில் 99% வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் தி கார்டியன் இதழ், இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் 1% ஜிடிபியைத் துடைத்தெறிந்திருக்கக்கூடும் என்றும் அதனால் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாகவும் சொல்கிறது. அதோடு, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு, அரசு பல்லாயிரம் கோடிகளைச் செலவழித்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தத்தளித்துக்கொண்டிருந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி வரி அமைப்பு இறுதிசெய்யப்பட்ட விதமே இதற்குக் காரணம்.
இந்த நடவடிக்கைகளால்சிறு தொழில்முனைவோரும் வியாபாரிகளும் ஏழை மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்க, பாஜகவுக்கு நெருக்கமான பல பெரு நிறுவனங்கள் இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் செல்வத்தைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டுள்ளன. விஜய் மல்லையா போன்ற பெரும்பணக்காரத் தொழிலதிபர்கள் பல்லாயிரம் கோடி பொதுப் பணத்தைத் கடனாகப் பெற்றுத் திரும்பித் தராமல் வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்ல இந்த அரசு அனுமதித்துள்ளது.
இதற்கெல்லாம் இந்த அரசு ஏதாவது பதில்கூறுமா? பொறுப்பேற்குமா? ஒன்றுமில்லைதானே?
இவை போதாது என்று, 2019 தேர்தலுக்குத் தயாராகிவரும் பாஜக இப்போது இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரக் கட்சியாக உருவெடுத்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்று யாருக்கும் தெரியாமல் இருக்க வழிவகை செய்துள்ளன.
மாபெரும் ஊழல்
- 2016இல் திரு மோடி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சியில் நடந்த கேலிக்கூத்தை நாம் அறிவோம். பண்பாட்டுத் திருவிழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த முக்கியக் கூடாரம் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. ஆனால் மேக் இன் இந்தியாவின் உண்மையான தீப்பந்துத் திட்டம், பாதுகாப்பு அமைச்சருக்குக்கூட தெரியாமல், பிரதமரால் பாரிஸில் அறிவிக்கப்பட்ட ரஃபேல் போர்விமானம் வாங்குவதற்கான திட்டம்தான். இது நாம் அறிந்த அனைத்து அரசு விதிமுறைகளுக்கும் முரணானது.
2012இல் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ ஆட்சிக் காலத்திலேயே போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதை நாம் அறிவோம். ஆனால், அந்நிய நாட்டிடமிருந்து வாங்கப்படும் அந்த விமானங்கள் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் கட்டமைக்கப்படும் என்பதே பழைய ஏற்பாடு. காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்பட்ட இந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது அல்லது அதன் வடிவம் முற்றிலும் மாற்றப்பட்டது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் ஒப்பந்தத்திலிருந்து தூக்கியெறியப்பட்டுவிட்டது. ரிலையன்ஸ் டிஃபன்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் புதிய ஒப்பந்தத்தை அலசி ஆராய்ந்து கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன. இதுவரை ஒரு விமானத்தைக்கூடத் தயாரித்திராத ரிலையன்ஸ் டிஃபன்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டிருப்பது பற்றிக் கேள்வியெழுப்பியுள்ளன. இது பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிவருகின்றன. நாம் அந்தக் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாமா? அல்லது மற்ற பல விஷயங்களைப் போல இந்த விமானங்களையும் விழுங்கி ஏப்பம்கூட விடாமல் அமைதிகாக்க வேண்டுமா?
பெரும் வன்முறைக்கான சதித்திட்டம்
- பத்திரிகையாளர், செயற்பாட்டாளர் கெளரி லங்கேஷ் கொலை குறித்த காவல் துறை விசாரணையில் பலர் கைதாகியுள்ளனர். இதன் மூலம் சனாதன் சன்ஸ்தா போன்ற பல்வேறு வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன. கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியல், பதுங்கும் இடம் மற்றும் பாதுகாப்பான வீடுகள், ஆயுதங்கள், வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் கொலைச் சதித்திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான தீவிரவாத வலைப்பின்னலாகப் பல்வேறு அமைப்புகள் ரகசியமாக இயங்கிவருவது தெரியவந்துள்ளது. இவற்றில் எத்தனை அமைப்புகளை நாம் அறிவோம்? எத்தனை அமைப்புகள் ரகசியமாக இயங்கிவருகின்றன? அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் காவல் துறையினரின் ஆசியுடன் இவர்கள் எத்தனை தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்? எவை, எங்கு, எப்போது நடக்கப் போகின்றன? காஷ்மீரிலா? அயோத்தியிலா? கும்பமேளாவிலா?
பெரிய ஊடகங்களும் அரசின் அன்பைப் பெற்ற ஊடகங்களும் பல சிறிய தாக்குதல்களைப் பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. அந்த இரைச்சலில் இதுபோன்ற தாக்குதல்கள் மறைந்துவிடுகின்றன. அவர்கள் எளிதாக எல்லாவற்றையும் தடம்புரள வைத்துவிடுகிறார்கள். இந்த அசலான ஆபத்திலிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தக் கைதுகள் நடத்தப்பட்டுள்ளன.
சீரழியும் கல்வித் துறை
- இன்னொரு பக்கம், கல்வி நிறுவனங்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன. இருப்பதிலேயே அதிக வருத்தத்துக்குரிய விஷயம் இதுதான் என்று சொல்லலாம். சிறந்த மாணவர்களை உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் அழிவைச் சந்திக்கின்றன. காகிதத்தில் மட்டும் இருக்கும் பல்கலைக்கழகங்கள் உயரங்களை எட்டுகின்றன. ஜவஹர்லால நேரு பல்கலைக்கழகம் நம் கண் முன்னால் சீரழிக்கப்படுகிறது. அதன் மாணவர்களும் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் தொடர் தாக்குதலுக்கு ஆளாகிவருகின்றனர். இந்த மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பொய்களையும் போலிக் காணொளிகளையும் பரப்பும் பணியில் பல்வேறு தொலைக்காட்சி சானல்கள் ஈடுபடுகின்றன. இந்தப் பொய்ப் பரப்புரைகளின் விளைவாக ஜேஎன்யு மாணவர் உமர் கலித் மீது பட்டப்பகலில் கொலை முயற்சி நடத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய பல்வேறு அவதூறுகளைப் பரப்பி அவரது பெயருக்குக் களங்கம் விளைவிப்பதில் இந்த ஊடகங்கள் பங்காற்றியுள்ளன. இது தவிர வரலாற்றைத் திரிப்பதும் பாடத்திட்டத்தில் புதிய நாயகர்களைப் புகுத்துவதும் நடந்துகொண்டிருக்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில் கல்வியில் தனியார்மயம் பரவிவிடும். இடஒதுக்கீட்டால் விளைந்துள்ள மிகச் சில நன்மைகளைக்கூட இது இல்லாமல் ஆக்கிவிடும். கல்வி மீண்டும் பிராமணமயமாக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த முறை கார்ப்பரேட் உடைகளுடன் அது நடத்தப்படுகிறது. தலித், ஆதிவாசி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் மீண்டும் கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். இது ஏற்கெனவே நடக்கத் தொடங்கிவிட்டது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
- விவசாயத் துறையில் மிகப் பெரிய வீழ்ச்சி, விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக்கொண்டே இருப்பது, இஸ்லாமியர்கள் கும்பல் கொலை செய்யப்படுவது, தலித்துகள் மீதான ஓயாத தாக்குதல்கள், பொது இடங்களில் நடக்கும் தனிநபர்கள் மீதான தாக்குதல்கள். உயர் சாதியினரை எதிர்த்து நிற்கத் துணிந்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாதின் கைது, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி எனப் பல பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கின்றன.
இவ்வளவு சொல்லிவிட்டதை அடுத்து அண்மைய கைதுகளைப் பற்றிப் பேசத் தொடங்குகிறேன்.
கைதுகளின் பின்னணி
வெர்னான் கோன்ஸ்லேவ்ஸ், அருண் ஃபெரீரா, சுதா பரத்வாஜ், வரவர ராவ், கெளதம் நவ்லகா எனக் கைதுசெய்யப்பட்ட ஐவரில் யாரும் டிசம்பர் 31, 2017 அன்று நடந்த எல்கர் பரிஷத் பேரணியிலோ அதற்கு அடுத்த நாள் பீமா-கோரகான் வெற்றியின் 200ஆவது ஆண்டை நினைவுகூர்வதற்குப் பெரும்பாலும் தலித்துகளாகச் சுமார் 3 லட்சம் பேர் கூடிய பேரணியிலோ கலந்துகொண்டவர்கள் அல்ல. (பீமா-கோரகான் என்பது தலித்துகள், ஆங்கிலேயப் படைகளுடன் இணைந்து சாதி ஆதிக்கம் மிக்க பெஷவா அரசை வென்ற நிகழ்வாகும். தலித் மக்கள் பெருமையுடன் கொண்டாடத்தக்க மிகச் சில வெற்றிகளில் இதுவும் ஒன்று.) ஓய்வுபெற்ற நீதிபதிகளான நீதியரசர் சாவந்த், நீதியரசர் கோல்ஸே பாட்டில் ஆகிய இருவரும்தான் எல்கர் பரிஷத்தை ஒருங்கிணைத்தனர்.
அதற்கு அடுத்த நாள் நிகழ்ந்த பேரணியில் இந்துத்துவ வெறியர்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினர். இதனால் உருவான கலவரம் மேலும் சில நாட்களுக்குத் தொடர்ந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்களான மிலிந்த் ஏக்போக்தே மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.
அவர்களது ஆதரவாளர்களில் ஒருவரது புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த புனே காவல் துறை 2018 ஜூன் மாதம் ரோணா வில்சன், சுதில் தாவ்லே, ஷோமா சென், மிஹிர் ராவத், வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங் ஆகிய ஐவரைக் கைது செய்தது. அவர்கள் ஐவர் மீதும் பேரணியில் வன்முறை நிகழச் சதி செய்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Acts) என்ற மிகக் கடுமையான சட்டத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்பிழைத்திருக்கிறார்கள். இதே குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்ட இஷ்ராத் ஜஹான், ஷொராபுதின், கெளசர் பி ஆகியோரைப் போல் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளமலேயே இறந்துவிடவில்லை.
குறிவைக்கப்படும் தலித்துகள்
காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசுக்கும் பாஜக அரசுக்கும் ஆதிவாசிகள் மீதான தாக்குதலையும், தற்போது தலித்துகள் மீது நடக்கும் தாக்குதலையும் ‘மாவோயிஸ்ட்கள்’ அல்லது ‘நக்ஸல்கள்’ மீதான தாக்குதல் என்ற போர்வையில் மறைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் கணக்குகளிலிருந்து கிட்டத்தட்ட நீக்கப்பட்டுவிட்ட இஸ்லாமியர்களைப் போல் அல்லாமல் தலித்துகளையும் ஆதிவாசிகளையும் அரசியல் கட்சிகள் வாக்கு வங்கிகளாகப் பார்க்கின்றன. செயற்பாட்டாளர்களை ‘மாவோயிஸ்ட்கள்’ என்ற முத்திரையிட்டுக் கைதுசெய்வதன் மூலம் தலித்மக்களின் லட்சியங்களுக்கு வேறு பெயர் கொடுத்து இழிவுபடுத்தித் தகர்ப்பதோடு அல்லாமல் ’தலித் பிரச்சினைகள்’ மீது அக்கறை செலுத்துவதாகவும் அரசால் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முடிகிறது.
இப்போது நாம் இதைப் பேசிக்கொண்டிருக்கையில் பல்லாயிரம் ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் வீட்டுக்காகவும் நிலத்துக்காகவும் கண்ணியமாக நடத்தப்படுவதற்காகவும் போராடியதற்காக தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு நாடெங்கிலும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையைக்கூட எதிர்கொள்ளாமல் சிறைகளில் வாடிவருகிறார்கள்.
கைதுகள் உணர்த்தும் செய்தி
மூன்று வழக்கறிஞர்களையும் நாடறிந்த ஏழு செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கிய இந்தப் பத்துப் பேரின் கைது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அனைவரும், தங்களுக்கு நீதியும் பிரதிநிதித்துவமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை கைவிடச் செய்வதற்கான முயற்சியே. ஏனென்றால் இவர்கள் அந்த மக்களின் பிரதிநிதிகள்.
சில ஆண்டுகளுக்கு முன், சால்வா ஜுடும் என்ற ராணுவப் படை பாஸ்டரில் மக்களைக் கொலைசெய்தும் கிராமங்களை எரித்தும் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தபோது மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளரான, சத்தீஸ்கரைச் சேர்ந்த மருத்துவர் விநாயக் சென், அந்த மக்களுக்காக வெகுண்டெழுந்தார். விநாயக் சென் சிறையில் அடைக்கப்பட்ட பின், வழக்கறிஞரும் தொழிற்சங்கத் தலைவரும் அந்தப் பகுதியில் பல ஆண்டுகள் களப்பணி ஆற்றியவருமான சுதா பரத்வாஜ் அவரது இடத்தை எடுத்துக்கொண்டார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் பாஸ்டரில் நடத்தப்பட்ட தாக்குதல்களை எதிர்த்த பேராசிரியர் சாய்பாபா விநாயக் சென்னுக்கு ஆதரவாகக் குரலெழுப்பினார். சாய்பாபா கைதுசெய்யப்பட்டதை அடுத்து ரோணா வில்சன் அவருக்கு ஆதரவாகக் களம் புகுந்தார். சுரேந்திர கட்லிங், சாய்பாபாவின் வழக்கறிஞர். ரோணா வில்சனும் சுரேந்திர கட்லிங்கும் கைதுசெய்யப்பட்டபோது சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா உள்ளிட்டோர் அவர்களுக்காக களத்தில் இறங்கிப் போராடினர். இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
பாதிப்புக்கப்படக்கூடிய மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள், அவர்களது குரல்கள் நசுக்கப்படுகின்றன. தீவிரமாகக் குரலெழுப்புபவர்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.
நாம் நம் தேசத்தைத் திரும்பப் பெறக் கடவுள்தான் உதவிபுரிய வேண்டும்.
அருந்ததி ராய்
ஆகஸ்ட் 31, 2018