நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் தீட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சதிகள் தொடர்பான சூழல்கள் அனைத்துமே விசித்திரமாக உள்ளன. ஏனெனில் சதி தீட்டியதாகச் சொல்லப்படும் நபர்களின் பின்னணி, இந்த திட்டம் வெளியிடப்பட்ட அரசியல் சூழல், இவற்றை வெளியிட்ட ஊடகங்கள் என எல்லாமே விசித்திரமாக இருப்பதை உணரலாம்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி, புனே காவல் துறையினர் தொழிற்சங்கவாதி மற்றும் வழக்கறிஞரான சுதா பரத்வாஜ், எழுத்தாளர்கள் கவுதம் நவலகா மற்றும் வரவர ராவ், வழக்கறிஞர்கள் அருண் பெரேரா மற்றும் வெர்னான் கோசால்வஸ் ஆகிய ஐந்து செயற்பாட்டாளர்களை கைது செய்ததோடு, வேறு பலரது வீடுகளில் சோதனை நடத்தினர். காவல் துறை இந்த கைதுகளுக்காக வேறு வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் பீமா கோரேகானில் வெடித்த வன்முறை தொடர்புடையது என்று, அவரை கவிழ்ப்பதற்கான சதி தொடர்பு என்று மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்வதற்கான மற்றொரு சதியுடனான தொடர்பு என்று எல்லாம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. குஜராத் முதல்வராக இருந்தபோது, 2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மற்றும் நாட்டின் பிரதமராக தற்போது பதவி வகிக்கும் காலத்தில் என மோடி, அவரை கொலைசெய்வதற்கான சதி என சொல்லப்படும் பல்வேறு முயற்சிகளில் இருந்து தப்பித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இதேபோல பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் புனே காவல் துறை, பீமா கோரேகான் வன்முறையைத் தூண்டியதாக, முன்னணி நகர்புற மாவோயிஸ்ட்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஐந்து பேரைக் கைது செய்தது. இந்த கைதுகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முன்னணி செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் வீட்டில் இருந்து, ராஜீவ் காந்தி கொலை பாணியில் மோடியைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பான கடிதத்தைக் கைப்பற்றியதாக காவல் துறை தெரிவித்தது. இந்தக் கைதுகள் தொடர்பான விவரங்களை அளிப்பதற்கான, ஆகஸ்ட் 31 செய்தியாளர் சந்திப்பில் மகாராஷ்டிரா காவல் துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் பரம்பீர் சிங், வில்சன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆவணங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வலுவான ஆதாரம் இருப்பதாக தெரிவித்தார்.
எனினும், ஆகஸ்ட்டில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் பிரதமரைக் கொலை செய்வதற்காக தீட்டப்பட்ட சதியில் தொடர்பு கொண்டிருப்பதைக் குறிக்க என்ன ஆதாரம் இருக்கிறது என காவல் துறை தெரிவிக்கவில்லை. நரேந்திர மோடியை கொலை செய்வதற்குத் தீட்டப்பட்டதாக சொல்லப்படும் சதிகள் தொடர்பான சூழல்கள் அனைத்துமே விசித்திரமாக உள்ளன. ஏனெனில் சதி தீட்டியதாகச் சொல்லப்படும் நபர்களின் பின்னணி முதல், இந்த திட்டம் வெளியிடப்பட்ட அரசியல் சூழல் முதல், இவற்றை வெளியிட்ட ஊடகங்கள் வரை எல்லாமே விசித்திரமாக இருப்பதை உணரலாம். பீமா கோரேகான் கைது நடவடிக்கையை அடுத்து வெளியான கொலை சதித் திட்டம் தொடர்பான செய்திகளை மோடியின் அரசியல் எதிர்ப்பாளர்கள் புறந்தள்ளியுள்ளனர். மோடி உயிருக்கு ஆபத்து என்பது புனையப்பட்ட செய்தி என ராஷ்டிரிய ஜனதா தளம் கூறியது. மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இவ்வாறு செய்யப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சர்த் பவார் கூறினார். இது பழைய உத்தி என காங்கிரஸ் அலட்சியம் செய்தது. இந்த கொலை சதித் திட்டத்தின் தீவிரம் மற்றும் எதிர்கட்சிகளின் எதிர்வினையைப் பார்க்கும்போது, மோடியைக் கொலை செய்வதற்காக தீட்டப்பட்டதாக சொல்லப்படும் சதித் திட்டங்கள் மற்றும் அவற்றின் சூழலை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது அவசியமாகிறது. மோடியை கொலை செய்வதற்காகத் தீட்டப்பட்டதாக சொல்லப்படும் 8 சம்பவங்கள் பற்றிய விவரம் வருமாறு: .
இஸ்ரத் ஜஹான் (2004)
2002 ஜூன் 15இல், அகமதாபாத் அருகே, குஜராத் குற்றப்பிரிவு காவல் துறை யை சேர்ந்த அதிகாரிகள், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய நான்கு பேரை சுட்டுக்கொன்றனர். இஷரத் ஜஹான், ஜாவேத் குலாம், அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோகர் ஆகியோர், அப்போதைய முதல்வரான மோடியை, 2002 ல் மாநிலத்தில் மதக் கலவரங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகக் கொலை செய்ய சதித் திட்டம் திட்டியதாக காவல் துறை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
2009 செப்டம்பரில், அகமதாபாத் பெருநகர் மாஜிஸ்திரேட் எஸ்.பி. தமங் இந்த சம்பவத்தைப் போலி என்கவுண்டர் எனத் தெரிவித்தார். தமங் தனது 243 பக்க அறிக்கையில், காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டவர்களை, 2014, ஜூன் 12இல் மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு கொண்டு வந்து, ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு திட்டமிட்டு கொலை செய்து, அவர்களை குற்றம்சாட்டும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை வைத்ததாக தமங் தெரிவித்திருந்தார். 2013இல், இந்த போலி என்கவுண்டர் தொடர்பாக ஏழு காவல் துறை அதிகாரிகள் மீது சிபிஐ அகமதாபாத்தின் மிர்சாபூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2016, பிப்ரவரி, தி கேரவன் இதழில் வெளியான கட்டுரையில், 2008 முதல் ஜஹான் குடும்பத்திற்காக வாதாடி வரும் வழக்கறிஞரான விரிந்தா குரோவர், இந்த என்கவுண்டர் அரசியல் அனுமதி கொண்டது என்பதை நிருபிக்க சிபிஐ குற்றப்பத்திரிகையில் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார். “தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் இது பற்றி அறிந்திருந்தனர். ஆனால் இந்த தடம் சிபிஐயால் விசாரிக்கப்படவில்லை”.
2004, ஜூன் 13இல், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, ஜீ டிவிக்கு அளித்த பேட்டியில், 2002 குஜராத் கலவரத்திற்கு பிறகு மோடியை தன்னால் நீக்க முடியாதது அடுத்த பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான அரசு தோற்க முக்கிய காரணங்களில் ஒன்று என கூறியிருந்தார். பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா தனது ‘ மோடி அண்ட் கோத்ரா; தி பிக்ஷன் ஆப் பேக்ட் பைண்டிங்’ புத்தகத்தில், “வாஜ்பாயியின் தாக்குதலில் இருந்து மோடியை காப்பாற்றுவதற்கான இந்தத் தலையீடு மிகவும் முக்கியமானது; மோடியை கொலை செய்யும் நோக்கம் கொண்டிருந்த கிரேட்டர் மும்பை பகுதியைச்சேர்ந்த 19 வயது மாணவி இஷரத் ஜஹான் மற்றும் மூன்று பேரை குஜராத் காவல் துறை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது”. “வாஜ்பாயி அவர் மீது கடும் தாக்குதல் தொடுத்த இரண்டு நாட்களுக்கு ப்பிறகு ஜூன் 15இல் இந்த கொலையாளிகளாக இருந்தவர்கள் கொல்லப்பட்டது மோடிக்கு அருமையான நேரத்தில் அமைந்தது” என்றும் அவர் மேலும் எழுதுகிறார்.
குஜராத் அரசு ஏற்க மறுத்த, 2013 செப்டம்பர் 1ஆம் தேதியிட்ட ராஜினாமா கடிதத்தில், மாநில குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரியான டிஜி.வன்சரா, “நாங்கள் களத்தில் உள்ள அதிகாரிகள் என்ற முறையில், எங்கள் செயல்களை மிக நெருக்கமாக, ஊக்கத்துடன், வழிகாட்டியபடி பார்த்துக்கொண்டிருந்த அரசின் கொள்கைகளை செயல்படுத்திக்கொண்டிருந்தோம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இஷரத் ஜஹான் என்கவுண்டர் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் வன்சரா. இந்த ஆண்டு ஆகஸ்ட் துவக்கத்தில், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ நீதிமன்றம், வன்சரா மற்றும் அவர் கீழ் பணியாற்றிய என்.எகே.அமீன் ஆகியோர் விடுவிப்பை ஏற்க முடியாது என தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.
சோராபுதீன் ஷேக் (2005)
2005 நவம்பர் 22ஆம் தேதி, குஜராத் காவல் துறை மற்றும் ராஜஸ்தான் காவல் துறை அதிகாரிகள் ஐதராபாத்தில், தாதா சோரபுதின் ஷேக் மற்றும் அவரது மனைவி கவுசர் பி பயணித்ததாக சொல்லப்படும் பஸ்ஸை இடைமறித்து, அவர்களை அகமதாபாத் அருகே உள்ள பண்ணை வீட்டிற்குக் கொண்டுசென்றனர். நான்கு நாட்களுக்குப் பிறகு, போலி என்கவுண்டரில் சோரபுதின் குஜராத் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்த வழக்கு தொடர்பான சிபிஐ குற்றப் பத்திரிகை தெரிவிக்கிறது. இரண்டு நாட்களில் கழித்து, காவல் துறை கவுசரி பியைச் சுட்டுக் கொன்று, டிசம்பரில் சோரபுதின் கூட்டாளி துளசிராம் பிரஜாபதியையும் சுட்டுக் கொன்றனர்.
குஜராத் காவல் துறை பின்னர், சோராபுதீனும் மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய லஷ்கர் தீவிரவாதி எனக் கூறியது. எனினும் அவரது சகோதரர் ரூபாபுதின் தாக்கல் செய்த மனுவை அடுத்து உச்ச நீதிமன்றத் தலையீட்டால் இந்த வழக்கு, 2010 ஜனவரியில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டு ஜூலை மாதம், புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையில், டி.ஜி.வன்ஸாரா, என்.கே.அமீன், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது குற்றம்சாட்டியது. இந்த நால்வர் மற்றும் தொடர்புடைய மற்றவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சையது சோராபுதீன் என்கவுண்டரை ராஜஸ்தான் மற்றும் அகமாதாபாத் காவல் துறை யினர் அகமதாபாத்தில் திட்டமிட்டு மேற்கொண்டதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. முன்னணி அரசியல் தலைவர் ஒருவரைக் கொலை செய்வதற்காக சோராபுதீன் அகமதாபாத் வந்ததுபோல அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த என்கவுண்டர் கொலைகளுக்குப் பின்னர் இருக்கும் நோக்கம் பற்றி வேறுவேறு கதைகள் சொல்லப்படுகின்றன. “சோராபுதீன் கொலை, குற்றம்சாட்டப்பட்டவர்களால், வர்த்தக புள்ளிகள் மற்றும் பிறரிடம் இருந்து மிரட்டி பணம் பறிக்கப் பயன்படுத்தப்பட்டதாக குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. ஆனால் ராஜினாமா கடிதம் அளித்த பிறகு நடைபெற்ற விசாரணையில், அதிகாரி வன்ரசா, 2003இல் அகமதாபாத்தில் நடைபெற்ற முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலையில் சோராபுதீனுக்கு தொடர்பு இருப்பது பற்றிக் கூறியதாகத் தெரிகிறது.
சோராபுதீன் கொலை தொடர்பான வழக்கு மும்பையில் சிபிஐ கோர்ட்டில் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. இதுவரை 65 சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.
பொதுத் தேர்தல் பிரச்சாரம் (2013)
2013, அக்டோபர் 27இல், பட்னா காந்தி மைதானம் மற்றும் ரெயில் நிலையத்தில், அப்போதைய பிரதமர் வேட்பாளரான மோடி பேச இருந்த பேரணி நடைபெறுவதற்கு முன் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டனர். 89 பேர் காயமடைந்தனர். இந்த இடத்தில் வெடிக்காத இரண்டு குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. தேசியப் புலனாய்வு அமைப்பு 2014 ஆகஸ்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை, அதன் பிறகு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகை ஆகியவற்றில், தடை செய்யப்பட்ட அமைப்பான இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் இந்த குண்டுவெடிப்பைத் திட்டமிட்டதாகத் தெரிவித்தது.
குஜராத்தில் கோத்ரா சம்பவத்திற்குப் பின் நடைபெற்ற கலவரங்களுக்குத் திரு. நரேந்திர மோடியே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருதியதாகத் துணை குற்றப்பத்திரிகை தெரிவித்தது. பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக அவரை ஆயுதம் கொண்டு தாக்க முடியாது என அவர்கள் தீர்மானித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாறாக, பேரணியில் குண்டு வைத்துத் தாக்கி, பலரை கொன்று அதனால் ஏற்படும் தள்ளுமுள்ளைவைப் பயன்படுத்தி, மோடியைக் கொலை செய்யலாம் எனச் சதி தீட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2017 அக்டோபரில், இந்த வழக்கில் பதின்பருவ நபர் குற்றம்சாட்டப்பட்டு, சிறார் இல்லத்தில் 3 ஆண்டு சிறைவைக்கப்பட்டார். இந்த வழக்கு இன்னமும் நடைபெற்று வருகிறது.
வாட்ஸ் அப் கொலை (2015)
2015 மே மாதம், மத்தியில் பாஜக அரசின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மதுராவில் நடைபெற்ற பேரணியில் உரை நிகழ்த்த இருந்தார். பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக, பிரதமருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வாட்ஸ் அப் அழைப்பு ஒன்று, மாநில காவல் துறை , பத்திரிகையாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை அனுப்பியது ராம்வீர் மற்றும் அவரது சகோதரர் லட்சுமன் சிங் எனத் தெரிய்வந்ததாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. ராம்வீர் இதற்கு முன்னரும்கூட இதே போன்ற செய்திகளை அனுப்பியதாகவும், அவர் மீது பொருத்தமான வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் மாஜிஸ்திரேட் ராஜேஷ் குமார் கூறியதாகச் செய்தி வந்தது. இது தொடர்பான பிடிஐ செய்தி அடிப்படையிலேயே பத்திரிகை செய்திகள் வெளியாயின. ராம்வீர் எங்கே கைதானார் அல்லது மோடியைக் கொலை செய்யும் சதியில் குற்றம்சாட்டப்பட்டாரா என்பது பற்றிய செய்திகள் இல்லை.
பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு (2016)
2016 நவம்பர் மாதம், மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்த 10 நாட்களுக்குப் பிறகு, பிரதமரைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பான அழைப்பு தில்லி காவல் துறைக்கு வந்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்தது. இந்த அழைப்பை விசாரித்தபோது, தொடர்புடைய எண்ணைக் கொண்ட நபர் சிம் கார்டை உறவினரிடம் கொடுத்ததாகக் கூறினார். அவர் அறிமுகம் இல்லாத நபர் தன்னிடமிருந்து அதை வாங்கியதாகத் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சதி பற்றிச் சில ஊடகங்களே செய்தி வெளியிட்டன. அவற்றில் எந்த ஊடகமும் அதன் பின் நடந்தவை பற்றிச் செய்தி வெளியிடவில்லை. சிறப்புப் பிரிவு விசாரிக்கிறது என்று மட்டும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவித்தது.
உத்தரப் பிரதேசத் தேர்தல் பேரணி (2017)
2017 பிப்ரவரியில், உத்தரப் பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மாவுவில் நடைபெற இருந்த மோடியின் பேரணிக்கு முன்னதாக, பிரதமர் மீதான கொலைச் சதிக்கான தகவல் கிடைத்திருப்பதாகக் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். ஹரேன் பாண்ட்யா கொலை வழக்கில் தொடர்புடைய ரசூல் பட்டி என்பவர் இதற்குக் காரணம் எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. மோடி பேரணி மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டதாக சிங் தெரிவித்தார். பேரணியில் எந்தத் தாக்குதலும் நடைபெறவில்லை. பொய் அழைப்பு தொடர்பாக தில்லி பல்கலை மாணவர் கைது செய்யப்பட்டதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டது.
ஐஎஸ்.ஐ.எஸ். கொலை சதி (2018, மே)
மே 10, கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன், மோடியைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் பற்றி டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது. ஜீ நியூசும் இதே போல் செய்தி வெளியிட்டது. பிரதமரைக் கொலை செய்வதற்கான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் சதி பற்றிய குஜராத் தீவிரவாதத் தடுப்புக் காவல் துறையின் குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு இந்தச் செய்தி வெளியானது. இந்த இரண்டு செய்திகளும் வாட்ஸ் அப்பில் வந்த ஒரு வரியைத் தெரிவித்தன. மோடி இந்தச் சதியில் இருந்து தப்பினாலும், தேர்தலில் பாஜக தோற்றது.
பீமா கோரேகான் கைதுகள் (2018 ஜூன்)
பீமா கோரேகான் வன்முறை தொடர்பாகக் கைதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரோனா வில்சனிடமிருந்து புனே காவல் துறை கைப்பற்றியதாகச் சொல்லப்படும் கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியிலான சம்பவம் பற்றி” யோசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பல அம்சங்கள் இந்த கடிதத்தின் நம்பகத்தன்மை பற்றிக் கேள்விகள் எழுப்பின.
இந்த கைதுகள் தொடர்பாக நியூஸ்லாண்டரி (Newslaundry) என்னும் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஏப்ரல் மாதம் நடைபெற்ற சோதனையில் இந்தக் கடிதம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் இது மீடியாவில் வெளியிடப்பட்டது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது. செயற்பாட்டாளர்களைக் காவலில் எடுப்பதற்கான காவல் துறை மனுவில் இந்தச் சதி பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பது இன்னும் விநோதம். மேலும், மாவோயிஸச் செயல்பாடுகள் குறித்து அறிந்துள்ள புலனாய்வு அமைப்புக்கு அவர்களுடைய செயல்முறைகள் நன்கு தெர்ந்திருக்கும். மாவோயிஸ அமைப்பினர் தங்கள் கடிதங்களில் எந்தப் பெயரையும் குறிப்பிடுவதில்லை என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் கடிதத்தில், அருண், வெர்னான் உள்ளிட்ட பலரது பெயர்கள் இருந்தன. இவர்கள் ஆகஸ்ட்டில் கைதானார்கள்.
பிரதமரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியவர்கள் அதை மறைக்க ஏன் தீவிர முயற்சி செய்யவில்லை என்பதும் விநோதமானது. மோடியைக் கொல்வதற்கான முந்தைய சதித் திட்டங்கள், பொய் அழைப்புகள், மீடியாவுக்கான தகவல், காவல் துறையின் ஜோடனைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நிலையில் இதில் வியபதற்கு ஒன்றுமில்லை.
நன்றி; தி கேரவன்
http://www.caravanmagazine.in/politics/many-plots-to-assassinate-narendra-modi