’பயனுள்ள முட்டாள்கள்’எனும் பதத்தைக் கண்டுபிடித்தது யார் என்பது ஒருவருக்கும் தெரியாது. தனது ஆபத்தில்லாத செய்தித் தொடர்பாளர்களாக மாறிய கம்யூனிஸ்ட் அல்லாத தாராளவாதிகளை குறிக்க லெனின் இதை பயன்படுத்தியதாக பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் லெனின்தான் சொன்னார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் சபைர் கூறியுள்ளார். கன்பியூசிஸ், கவுடில்யா அல்லது சன் சு சொன்னதாக கருதப்படும் புத்திசாலித்தனமான வாசகங்கள் போலவே இதுவும் தாக்குப்பிடித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக, இந்துத்துவப் பிரச்சாரத்தை ஆதரிக்கும் அறிவுஜீவிகளால், இடதுசாரியான, தாராளவாத, நகர்ப்புற அறிவுஜீவிகளைக் குறிக்க இது பயன்படுகிறது. போட்டி ஹாஷ்டேகுகள் தூள் பறந்தாலும், இந்தப் பதத்தை ‘நகர்ப்புற நக்ஸல்’ எனும் பதத்தால் பதிலீடு செய்வதற்கான முயற்சி ஓரளவே வெற்றி பெற்றுள்ளது.
இதை நான் சொல்லும்போது இரண்டு முகாம்களில் இருப்பவர்களுக்கும் குழப்பம் ஏற்படலாம். ஆனால் நகர்புற நக்சல்களோ இல்லையோ, பாஜக / ஆர்எஸ்எஸ் அமைப்பு இவர்களைப் பயனுள்ள முட்டாள்கள் என கூறுவது சரியானதுதான். ஆனால், இதில் ஒரு முக்கியத் திருப்பம் இருக்கிறது. இவர்கள் ‘மகத்தான இந்தியப் புரட்சியின்’ விளைவு அல்ல. இந்தப் புரட்சியைச் சார்ந்த சிலர் ஒரு சில மத்தியப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிகின்றனர். வேறு சிலர் பஸ்தார் போன்ற சிறிய ஆதிவாசி பகுதிகளிலும் இருக்கின்றனர். இவர்களில்தான் பாஜக தங்களுக்கான பயனுள்ள முட்டாள்களைக் கண்டுகொண்டிருக்கிறது.
நகர்புற அல்லது கிராமப்புற நக்ஸல் என்று யாருமில்லை. நக்ஸல் என்றால் நக்ஸல். அவர் மாவோயிஸ்டும்கூட. இரண்டுமாக இருப்பது குற்றம் அல்ல. எந்தச் சட்டமும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான UAPAவால்கூட, எந்த இந்தியரையும் அவரது நம்பிக்கைக்காக, அதை வெளிப்படுத்துவதற்காக, சிறையில் தள்ள முடியாது. காஷ்மீரைச் சட்ட விரோதமாக இந்தியா பிடித்துவைத்திருப்பதாக நான் நம்புகிறேன் என்றோ நம் ஜனநாயகம் கேலிக்கூத்து என்றோ பொதுவெளியில் சொல்லலாம். இதற்காக அரசு உங்களைச் சிறையில் போட முடியுமா? முடியாது!
பாஜகவின் பிரச்சினை வேறு விதமானது. அதன் கூற்று என்னவாக இருந்தாலும் சரி, வாக்குறுதி அளிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் செழுமையில் அதன் செயல்பாடு, சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதை அது அறிந்திருக்கிறது. அது, “யாரேனும் ஒருவருக்கு” எதிராக, மிகவும் ஆபத்தான ஒருவருக்கு எதிராக வாக்குக் கேட்டாக வேண்டும். அப்போதுதான் மக்கள் நிராசையாகிப்போன தங்கள் எதிர்பார்ப்புகளை மறந்து, “தேசிய நலனுக்காக” வாக்களிப்பார்கள். 1984இல் காலிஸ்தான் உருவாவதைத் தடுக்க வேண்டுமென்றால் ராஜீவ் காந்திக்கு வாக்களியுங்கள் என எழுப்பப்பட்ட கோஷம் போலத்தான் இதுவும்.
முஸ்லிம் எதிரி எனும் ஆதாரமான முழக்கம் கொஞ்சம் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. முஸ்லிம் என்றால், பாகிஸ்தான்; பாகிஸ்தான் என்றால் காஷ்மீர் தீவிரவாதி; காஷ்மீர் தீவிரவாதி என்றால் லஷ்கர், அல்கொயிதா / ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி என்ற சமன்பாடு நிலைபெற்றால்தான் முஸ்லிம்களைப் பொது எதிரியாக முன்னிறுத்த முடியும். அப்படி நடப்பதாகத் தெரியவில்லை. இந்திய முஸ்லிம்கள் அமைதியாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இரண்டாவதாக, எல்லா இந்தியர்களுமே, சாதி போன்ற தங்கள் அடையாளங்களை விட்டுவிடுமளவுக்கு முஸ்லிம்கள் மீது அச்சம் கொள்ளவில்லை. மூன்றாவதாக, பதற்றத்தைத் தக்க வைக்க, எல்லைப் பகுதியில் தொடர்ந்து வாண வேடிக்கை தேவை. இதன் கிளைமாக்ஸாக சர்ஜிகல் தாக்குதல் இருக்க வேண்டும். ஆனால், தங்கள் வலுவான தோழன் பாகிஸ்தான் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று சீனா தெளிவுபடுத்திவிட்டது. மேலும் ட்ரம்பின் அமெரிக்காவையும் இனியும் யாரும் நம்ப முடியாது.
ஆக, நீங்கள் இந்தியாவின் இருப்புக்கான இன்னொரு எதிரியைக் கண்டுபிடித்தாக வேண்டும். மாவோயிசமாக அது இருக்கலாம். அதை இஸ்லாமியத்துடன் இணைக்க முடிந்தால் இன்னும் நல்லது. எல்லாத் தீய சக்திகளும், உள்ளூர் மற்றும் உலக சக்திகள் இந்தியாவை அழிக்கச் சதித் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வேலைவாய்ப்பு பற்றியா பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் தேசப்பற்று எங்கே போனது என்று மக்களைப் பார்த்துக் கேட்கலாம்.
இதை எந்த இஸம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். நடப்பது அப்பட்டமான அரசியல். 1980களில் ராஜீவ் காந்தியின் சரிவு துவங்கிய பிறகு, ஒரு கேள்விதான் இந்தியாவை ஆள்பவர்களைத் தீர்மானித்துள்ளது. சாதியால் பிரிந்த இந்தியாவை மதத்தால் ஒன்றிணைக்க பாஜக / ஆர்எஸ்எஸ்ஸால், முடியுமா என்பதுதான் அது. அத்வானி அதை அயோத்தியில் நிருபித்தார். 2004இல் அது செல்லுபடியாகவில்லை. நரேந்திர மோடி இன்னும் சற்று சிறப்பாக செயல்பட்டார். அவரது தனிப்பட்ட ஆளுமையும் செயல்பாடுகளும் இந்து வாக்காளர்களைக் காந்தம் போல ஈர்த்தன. வலுவான அரசு, வளர்ச்சி ஆகிய கோஷங்களை முன்வைத்து வெற்றிபெற்றார். இந்த வாக்காளர்களை மோசமான மதிப்பெண் அட்டையோடு அவர் இழக்க விரும்பவில்லை.
மீண்டும் வெல்ல வேண்டுமென்றால் அவர்கள் இன்னொரு எதிரியைக் கண்டுபிடித்தாக வேண்டும். மாவோயிஸ்ட்களுடன் முஸ்லிம்களைச் சேர்க்க முடிந்தால் நன்றாக முடிச்சு போடலாம். 2019 கோடைக்குள் தேசம் பெரிய ஆபத்தில் இருக்கிறது என்னும் கதையைத் தயார் செய்துவிடலாம்.
மாவோயிஸ்ட் எனும் வார்த்தை போதிய அச்சத்தை விளைவிப்பதில்லை. நம்மில் பலர் கல்லூரிகளில் மாவோயிஸ்ட்களாக எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்திருக்கிறோம். ஆயுதம் ஏந்தியதால் நக்ஸல் என்றால் அச்சம் அதிகம். ஆனால் அவர்கள் கண்ணில் படுவதேயில்லை. நாம் மறந்துவிட்டோம். நம்முடைய டிவி அல்லது ட்விட்டரில் அவர்கள் வருவதில்லை. அவர்கள் பெயர் சொல்லி மகாராஷ்டிரா அல்லது மத்தியப் பிரதேசத்தில் வாக்காளர்களை மிரள வைக்க முடியாது. இந்த நிலையில்தான் நகர்புற நக்சல்கள் என்னும் முத்திரை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் படத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். இந்தக் கதை முதலில் ஜே.என்.யூவில் தொடங்கியது. காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்தது. “அஞ்சலகம் இல்லாத நாடு’ எனும் தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடானது. இந்தத் தலைப்பு கொண்ட கவிதையை எழுதியவர் ஆகா சாகித் அலி எனும் அருமையான உருதுக் கவிஞர். இடதுசாரிகள் இவரை மிகவும் கொண்டாடுகிறார்கள். காஷ்மீரின் சுதந்திரம் பற்றி விவாதிப்பதற்கான கூட்டம் இது எனத் துண்டறிக்கைகள் வெளியாயின. ”பாரத் தேரே துக்டே ஹோங்கே இன்ஷா அல்லா, இன்ஷா அல்லா” (பாரதம் துண்டு துண்டாகச் சிதறும்) என்னும் கோஷத்தை ஒலிக்கும் வீடியோ வெளியானது. இது தொடர்பாக, இரண்டு தீவிரமான இடதுசாரி மாணவர்களும் ஒரு முஸ்லிம் மாணவரும் ஜோடிக்கப்பட்ட தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் சிக்கிக்கொண்டனர்.
மேலும் வீடியோக்கள் வெளியாயின. ஜே.என்.யு சதுக்கத்தில் கைத்தட்டும் மாணவர்கள் முன், பேராசிரியர் ஒருவர் காஷ்மீர மக்கள் சுதந்திரம் கோருவது சரி என்றும், இந்தியா சட்ட விரோதமாகக் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதை ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்திருக்கிறது என்றும் பேசுகிறார். அவ்வளவுதான். புதிய திரைக்கதை தயார்: முற்போக்கான, அறிவுஜீவி இடதுசாரிகள், இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்காக தேச விரோத முஸ்லிம்களுடன் கைகோர்த்துள்ளனர். காஷ்மீர், பஸ்தார். தில்லி, மும்பை, புனே என எங்கும், நகர்புற நக்சல்கள் மற்றும் பிரிவினைவாத முஸ்லிம்களுடன் கைகோர்த்துள்ளனர். ஜே,.என்.யுதான் இதில் பிரதான வில்லன.
முற்போக்கு அறிவுஜீவி இடதுசாரிகள், காஷ்மீரத்துப் பிரிவினைவாத வாகனத்தில் ஏறியதால் பாதி வேலை முடிந்தது. இனி நரேந்திர மோடி, அமீத் ஷாவுக்கு நட்பான டிவி சேனல்களை மீதியைப் பார்த்துக்கொள்ளும்.
ஒரு தேசம் ஆபத்தில் இருக்கிறது என்னும் பொய் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த தேசம் பீங்கானில் செய்யப்பட்ட குடம் அல்ல. சில கோஷங்கள், கட்டுரைகள், கவிதைகள், ஆதிவாசிகள் பகுதி மற்றும் காஷ்மீரில் துப்பாக்கி ஏந்திய சிலர் ஆகியவற்றால் இதை உடைக்க முடியாது. ஆனால், இரு பக்கமும் சேராத வாக்களர்களுக்கு இது சுவாரஸ்யமானது. வாக்காளர்கள் இரு கூறாகப் பிளந்திருக்கும் தேர்தல் களத்தில் ஒரு சில சதவீத வாக்காளர்கள் இடம் மாறினால் அந்தத் தரப்பு வெற்றியை அள்ளிக்கொள்ளலாம். எனவே, அந்தச் சிலரது மனமாற்றம் முக்கியமானது. அவர்களைக் குறிவைத்தே தேசம் ஆபத்தில் இருக்கிறது என்னும் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது.
ஆயுதம் ஏந்திய நக்ஸல் போராட்டத்தை ஆதரிக்கும் அல்லது காஷ்மிரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனும் கோரிக்கையை ஆதரிக்கும் இடதுசாரி அறிவுஜீவிகளின் உரிமையை ஆதரிப்பது என்பது வேறு விஷயம். நீங்கள் துப்பாக்கி தூக்காத வரை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதன் பிறகு நிலைமை சிக்கலாகிறது. ஏனெனில் நீங்கள் ஆதரிப்பவர்கள் துப்பாக்கி ஏந்தி, கொலை செய்கின்றனர். சுடப்பட்டு மடிந்துபோகின்றனர். நீங்கள் பாகிஸ்தானி – காஷ்மீரி – ஐஎஸ்.ஐ. ஆசாமியின் (குலாம் நபி ஃபாய்) விருந்தோம்பலை ஏற்கிறீர்கள். ஐஎஸ்.ஐ. சார்பான நடவடிக்கைகாக இவர் அமெரிக்காவில் சிறையில் தள்ளப்படுகிறார். ஆனால், நீங்கள் அவரைக் காஷ்மீரி தேசப்பற்றாளர் என்கிறீர்கள். இது ஒவ்வொரு காஷ்மீர் மக்களையும் துரோகி எனச் சொல்ல அரசுக்கு உதவுகிறது. அல்லது நீங்கள் நினைப்பது போல 20 ஜெலட்டின் குச்சிகளில் புரட்சியைக் கொண்டு வர முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
உலக இடதுசாரிகள் மத்தியில் தற்போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் உள்ளிட்ட சோவியத் யூனியன் வெல்லத் தவறிய தீமைகளைத் தீவிரவாத முஸ்லிம்கள் வெல்வார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது. இந்த உணர்வு இந்தியாவிலும் பிரதிபலிக்கிறது. ஆனால், அவர்கள் யாருக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்கிறார்களோ அந்தக் காஷ்மீர மக்கள், பஸ்தார் ஆதிவாசிகள் ஆகியோர் போற்றப்படாமல், துக்கம் அனுஷ்டிக்கப்படாமல், பாதுகாக்கப்படாமல், தோட்டாக்களுக்கு இரையாகி மடிந்துகொண்டிருக்கின்றனர். நீங்கள் ஆயுதம் ஏந்தியதுமே அரசுக்கு உங்களை கொல்வதற்கான நியாயம் கிடைத்துவிடுகிறது. அதுவே வெற்றி பெறும். அது வலிமையனாது என்பதால் மட்டும் அல்ல. இந்தப் போரில் பொதுக் கருத்து அதற்கு ஆதரவாக இருக்கும் என்பதால்தான். இந்தியாவுடன் போர் தொடுக்க விரும்புபவர்களின் நியாயம் என்ன என்பதன் மூல காரணத்தை ஒரு சில அறிவுஜீவிகள் மட்டுமே ஆராய்வார்கள். மிகப் பெரும்பான்மையினர் அரசையே ஆதரிப்பார்கள். ஆயுதம் ஏந்தியவர்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் ஆசுவாசம் கிடைக்கும். இந்த சுற்றில் சட்டரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் மோடி அரசு தோற்கும். ஆனால் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். இது மட்டுமே அவர்களுடைய ‘செம்படையினரை ஒடுக்கும் நடவடிக்கை’யின் (Operation Red Hunt) நோக்கம் அல்ல.
உங்கள் லட்சியவாதப் புரட்சிகரச் செயல்பாடுகளால், தாற்காலிகமாக நீங்கள் பெறும் புகழினால் யாருக்கு நன்மை என என யோசித்துப்பாருங்கள். அவர் அல்லது அவர்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் பயனுள்ள முட்டாள்கள். உங்களால் இடதுசாரிகளுக்கு அல்ல. இந்தப் பதத்தை லெனின் கண்டுபிடித்திருந்தால் என்றால் அதை நினைத்து அவர் வருந்துவார்.
சேகர் குப்தா
நன்றி; தி பிரிண்ட்
https://theprint.in/national-interest/urban-naxal-is-the-new-enemy-useful-idiot-bjp-needs-for-2019/109689/