இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வரலாற்றில் பணமதிப்பு நீக்கத்தைப் போன்ற ஒரு நியாயப்படுத்தவே முடியாத பிரிதொரு நடவடிக்கையைக் காண்பது மிகவும் கடினம். எந்தப் பொருளாதார நடவடிக்கையும் இந்த அளவுக்கு முன்யோசனையற்றதாக இருக்க முடியாது. நம்மை உலக வரைபடத்தில் இடம்பெற வைப்பதாக நரேந்திர மோடி வாக்களித்தார். அவர் அதைச் செய்துவிட்டார் ஆனால், நாம் எதிர்பார்த்த வகையில் இல்லை. எந்த ஒரு மோசமான பொருளாதாரக் கொள்கையும் பெரும்பாலான நேரம் ஏதாவது ஒரு விதத்தில் “வெற்றியடைந்துவிடும்”. அந்த நடவடிக்கை மிக அதிக விலை கொடுத்தாவது அதன் சில நோக்கங்களை நிறைவேற்றிவிடும். எல்லா அளவுகோல்களிலும் தோல்வியடைந்த, முடிவெடுத்த பின் கற்பனையாகக் கண்டுபிடித்துக் கூறப்பட்ட நோக்கங்கள் உட்பட எதையும் நிறைவேற்றாத ஒரு கொள்கை நடவடிக்கையைக் காண்பது மிக அரிது.
ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை இந்த அசாத்தியமான சாதனையை நிகழ்த்திவிட்டதாகவே தெரிகிறது. கறுப்புப் பணத்தை இல்லாமல் ஆக்கவில்லை. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட செலாவணியில் 99.3% வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துவிட்டது. மக்கள் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணத்தைத் திருப்பித் தர முன்வராததால் அரசுக்கு லாப மழை எதுவும் கொட்டிவிடவில்லை. கெளதம் அதானியோ அனில் அம்பானியோ தங்கள் அன்றாட செலவுக்கான பணத்தை எடுக்க ஏடிஎம் வாயில்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருக்கவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அமைப்புரீதியான நீடித்த அதிகரிப்பு எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. காஷ்மீரில் இன்னும் மக்கள் கற்களை எறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தார்மிக அடிப்படையில் நவம்பர் 8, 2016இல் இருந்ததைவிட நம் தேசத்தின் நேர்மை பெரிய அளவில் அதிகரித்துவிட்டதோ என்று எனக்குத் தோன்றுகிறது.
அருண் ஜேட்லியும் மற்றவர்களும் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்வதுபோல் நேரடி வரி வருவாய் கணிசமாக அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால், அவர்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் தேஜகூவின் மிக மோசமான செயல்பாட்டுடன் இதை ஒப்பிடுகிறார்கள். மேலும் பின்னோக்கிச் சென்று 2013-14 உடனோ 2010-11 உடனோ அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் அதிகரித்திருப்பதில் அசாதாரணமாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரதின் ராய் “2014-17 காலகட்டத்தில் நேரடி வரி வருவாயின் அதிகரிப்பு, புத்தாயிரத்தின் எந்த துணைக் காலத்தையும்விடக் குறைவானதே” என்று சொல்லியிருக்கிறார். அரசு தனது நடவடிக்கை வெற்றியடைந்துவிட்டது என்று முழங்குவதற்குத் தோதாக ஆண்டுகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்கிறது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.
இந்த முன்யோசனையற்ற நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கான பரிதாபகரமான வாதங்களை அசைபோட்டுப் பாருங்கள். எந்த ஒரு நடவடிக்கையிலும் தங்களால் ஒரு நல்விளைவைக் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் அது நடந்துவிடும் என்று உளப்பூர்வமாக ஏற்றுப் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்த பத்தி எழுத்தாளர்கள், பொருளியல் நிபுணர்கள், பட்டயக் கணக்காளர்கள், பல்துறை வித்தகர்கள் ஆகியோருக்காகக் கொஞ்சம் பரிதாபப்படுங்கள். இது எந்த ஒரு நன்மையையும் விளைவிக்கத் திராணியில்லாத ஒரு சிறப்புக் கொள்கை நடவடிக்கை என்பதை அவர்களால் எப்படி ஊகித்திருக்க முடியும்?
அவர்களில் நானும் ஒருவன் என்பதை ஒப்புக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். பணமதிப்பு நீக்கம் ஒரு மோசமான நடவடிக்கை என்று தொடக்கத்திலேயே எனக்குத் தோன்றினாலும். அதனால் மக்கள் அதிகப் பணத்தை வங்கிகளில் செலுத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் மக்கள் வீடுகளில் வைத்திருக்கும் பணத்தின் அளவு கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை என்று ஆர்பிஐ சொல்லிவிட்டது. சொல்லப்போனால் ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்புகூட இவ்வளவு அதிகமான ரொக்கப் பணம் அவர்களிடம் இல்லை. எனவே நான் இதிலும் ஏமாந்துவிட்டேன். மக்களிடம் உள்ள ரொக்கத்தின் மதிப்பை நீக்கும் நடவடிக்கைக்குப் பின் அவர்கள் அதிக ரொக்கத்தைக் கையில் வைத்திருக்க விரும்ப மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் இந்த நடவடிக்கைக்குப் பிறகு மக்கள் வங்கிகள் மீது வைத்த நம்பிக்கைதான் அடிவாங்கியிருக்கிறது. ரஜினிகாந்த் பட டிக்கெட்டுக்கு நிற்பதைப்போல் நீண்ட வரிசையில் காத்திருந்தால்தான் உங்கள் வங்கிக் கணக்கில் பணம்போட்டு எடுக்க முடியும் என்று சொன்னால் அதுதானே நடக்கும்.
இப்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவாக எஞ்சியிருக்கும் ஒரே வாதம் இதுவரை நடந்திராத, நடக்காமலே போவதற்குக்கூட வாய்ப்பிருக்கும் சில விஷயங்களைச் சார்ந்திருக்கிறது. வங்கிகளுக்கு வந்து சேர்ந்திருக்கும் பணம் எந்தெந்தக் கணக்குகளில் வந்திருக்கிறது என்று அரசால் தெரிந்துகொள்ள முடியும் அதன் மூலம் கணக்கில் வராத பெரும் பணத்தை வைதிருந்தவர்கள் யார் யார் என்று கண்டுபிடித்து அவரளை தண்டிக்க முடியும் என்பதே அந்த வாதம். முதலில் இப்படிப்பட்ட சோதனை நடவடிக்கை எந்தப் பயனும் தரப்போவதில்லை.
யோசித்துப் பாருங்கள், இவ்வளவு பெரிய நடவடிக்கைக்குப் பிறகும் தாங்கள் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த பணத்தை வங்களில் செலுத்திவிடும் அளவுக்கு புத்திசாலித்தனம் கொண்டவர்கள், அதை தங்கள் பெயரில் உள்ள கணக்குகளில் செலுத்தினால் பிடிபடுவோம் என்று தெரியாமலா இருந்திருப்பார்கள்? இரண்டாவதாக, இப்படி ரொக்கப் பணத்தைத் துரத்திக்கொண்டு போகும் நடவடிக்கை பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே பாஜகவின் வாட்ஸஅப் பொருளியல் நிபுணர்களிடம் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவாகச் சொல்லத்தக்க ஒரே வாதம் இதன் மூலம பல இடங்களில் வரி ஏய்ப்பு சோதனைகளை நடத்த முடியும் என்பதுதான். எல்லா வகைகளிலும் வரி செலுத்துவோரைத் துன்புறுத்தி வளர்ச்சியைக் குறைத்தவர் இந்திரா காந்திதான் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர்கூட இப்படி ஒரு புத்திசாலித்தனமான பொருளாதாரக் கொள்கையை உருவாக்கியிருக்க முடியாது.
எனவே இந்த வரலாறு காணாத மோசமான கொள்கை முடிவுக்கு பொறுப்பேற்று பதில் கூறப்போவது யார்? செலாவணி விவகாரம் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துக்குட்பட்டது என்றாலும் பணம்திப்பு நீக்க நடவடிக்கைக்கு எந்தப் பொறுப்பையும் அது ஏற்கவில்லை. இந்த நடவடிக்கையினால் விளைந்துள்ள சேதத்தின் அளவைத் தெளிவாக அறிவித்திருப்பதன் மூலம் தன்னுடைய நிலையை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் காப்பாற்றிக்கொண்டுவிட்டார். நிதி அமைச்சருக்கு இந்த நடவடிக்கைத் திட்டமிடலில் பங்கு இல்லாமல்கூட இருந்திருக்கலாம். அவரும் பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவான கோபம் கொப்பளிக்கும் வலைப் பதிவுகளை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த அதிபுத்திசாலித்தனமான திட்டத்துக்குப் பின்னால இருந்த மாபெரும் அறிவுஜீவியான எஸ்.குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி வாரிய உறுப்பினராக அண்மையில் நியமித்திருக்கிறது அரசு. எனவே அவரிடமும் அந்தப் பொறுப்பை எதிர்பார்க்க முடியாது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றித் தான் அளித்த வாக்குகள் பொய்யானால் தன்னை தூக்கிலிடவோ தீயிட்டுக் கொல்லவோ சொன்ன பிரதமர் இதைப் பற்றிப் பேசுவதே இல்லை.
இதைப் பற்றி மட்டுமா? சீனாவிடம் கண்டிப்பு காட்டுவது, மேக் இன் இந்தியா, கங்கையைத் தூய்மைப்படுத்துதல், வெளிநாட்டு வங்கிகளில் பதுங்கியிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுத் தருதல் என அவர் அளித்துவிட்டு நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளின் பட்டியல் பெரிது. அவற்றில் எதைப் பற்றியும் அவர் பேசுவதாகத் தெரியவில்லை.
எனவே நான் மீண்டும் கேட்கிறேன். பதில்கூறும் பொறுப்பை நாம் யாரிடம் எதிர்பார்க்கலாம்? இந்த அசாதாரணமான தடங்கலுக்கும் தாறுமாறான முடிவுக்கும் யார் மீது குற்றம் சுமத்தலாம்?
நாம் இன்னும் சில ஆண்டுகள் காத்திருந்துவிட்டு பிறகு இந்த எல்லாத் தீங்குகளுக்கும் காரணம் நேரு என்று சொல்லிவிடலாம்.
மிஹிர் ஸ்வரூப் ஷர்மா
நன்றி: என்டிடிவி.காம்
https://www.ndtv.com/opinion/well-blame-demonetisation-on-nehru-i-guess-1909001
The problem is is not about the announcement but it is about how it was dealt with.
It would have been a huge success if it was properly planned and executed with Zero tolerance policy.
1. They shouldn’t have introduced Rs. 2000/- notes at all
2. They should have started printing more 100’s and kept it ready for circulation
3. Exchange should have been allowed only via bank (not petrol bunk, jewellery, etc)
4. They should have introduced/popularized online (paytm) payment system like any other scheme (clean India, clean Ganga etc) at about 3 months prior to this announcement.
People like Guru moorthy advising government is pathetic and Govt. should give importance to highly educated.
A larger number of bad loans originated in the period 2006-2008 when economic growth was strong, and previous infrastructure projects such as power plants had been completed on time and within budget, he noted. -RAGURAM RAJAN