சாமான்யர்களாகத் தோன்றும் மனிதர்களின் குழுக்கள் வன்முறையாளர்களாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வதை எப்படி ஆராய்ந்து எதிரிவினை ஆற்றுவது? இந்தியா இதுபோன்ற பல்வேறு கும்பல் வன்முறைத் தாக்குதல்களை அண்மைக் காலங்களில் தொடர்ந்து சந்தித்துவருகிறது. முதலில் “பசுப் பாதுகாலவர்கள்” என்று தங்களை அறிவித்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியக் கால்நடை விற்பனையாளர்களை குறிவைத்துக் கொன்றனர். பிறகு இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் “வெளியாட்கள்” கும்பல் தாக்குதலுக்கு ஆளாகினர். இந்த வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மீது அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்த வன்முறை அலை வெறும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினை மட்டும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
‘நோயியல் இயல்பாக்கம்’ (Pathological Normalcy) என்ற கருதுகோள் இந்த நடைமுறையைப் புரிந்துகொள்ளப் பொருத்தமான கண்ணாடியாக அமையும். சமூக உரையாடல்கள் எப்படித் தனிநபர்களின் மன நடத்தையையும் செயல்முறைகளையும் வடிவமைக்கின்றன என்பதைப் பற்றிய சமூக உளவியல் கல்வியின் ஒரு பகுதியாக உருவானதே இந்தக் கருதுகோள். அமெரிக்காவைச் சேர்ந்த பண்பாட்டு உளவியலாளர் கார்ல் ராட்னரும் சமூக உளவியலாளர் எரிக் ஃப்ராமும் இந்த நோயியல் இயல்பாக்கத்தை ஆராய்ந்தனர். அதாவது, பாதகமான உளவியல் நிலைகளும் நடத்தைகளும், சமூகங்களில் எப்படி இயல்பாக அவைதான் சரியான நடைமுறை என்பதைப் போல் இயங்குகின்றன என்பதை ஆராய்ந்தனர்.
நோயியல் சார்ந்த செயல்கள் சமூகத்தில் பரவலாகித் தமது தனிப்பட்ட குணத்தை இழந்து பொது நடைமுறையாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் மாறுவதன் மூலமாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். பகுத்தறிவற்ற வெறுப்பு, வன்முறைக்கான ஆதரவு போன்ற பாதகமான நடத்தைகள் மிகவும் பொதுவாகிவிடும் அதுபோன்ற நடத்தைகளைக் கொண்டிருக்கும் நபர்கள் தங்களைப் போல் பலரும் அதே மனநிலையில் இருப்பதைத் தெரிந்துகொள்வர். இதுபோன்ற மந்தை மனநிலைச் சூழலில் முழுமையான ஆரோக்கியமான மனநிலை கொண்டவர்கள் சிறுபான்மையினராகவும் தனித்துவிடப்பட்டவர்களாகவும் உணர்வார்கள்.
உதாரணமாக 1930களில் ஜெர்மன் மக்கள் தொகையில் மிகப் பெருவாரியானோர் யூதர்களுக்கு எதிரான தீவிரமான பாகுபாட்டை வெளிப்படுத்தினர். யூதர்களுக்கு எதிரான அரச வன்முறையை ஆதரித்தனர். மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மை. பொருளாதார மந்தநிலை, கடுமையான விலையேற்றம், முதல் உலகப் போரின் ஜெர்மனின் தோல்வியை ஒட்டிய புண்பட்ட மனநிலை, அதன் விளைவான பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவை அந்த மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட மனநிலையைப் பரவலாக்கியது.
கார்ல் ராட்னர், எரிக் ஃப்ராம் ஆகியோரின் ஆய்வுகள், இப்படிப்பட்ட நடத்தைகள் அன்றாட நடைமுறை என்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆகிவிடும் என்றாலும் இவை முற்றிலும் ஆரோக்கியமற்றவை என்பதை நிறுவுகின்றன. இது போன்ற சீர்குலைந்த உளவியல்-சமூக நிலைமைகள் கும்பல் வன்முறை போன்ற கொடுமையான சம்பவங்கள் நிகழத் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. எனவே இதுபோன்ற கொடும் நிகழ்வுகளை நோயியல் இயல்பாக்கத்துக்கு உதாரணமான சீர்குலைந்த மனநிலை என்ற சூழலோடு பொருத்திப் பார்க்காமல் நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
புதிய நோய்வாய்ப்பட்ட இயல்பாக்கம்
‘ஹெல்த் கேர் அண்டர் தி நைஃப்’ என்ற புத்தகத்தில் நோயியல் இயல்புத்தன்மையை கடந்துவருவதற்கான அத்தியாயத்தில் நோயியல் இயல்பாக்கமானது இயல்புக்கு மீறிய உளவியலைப் புதிய வார்த்தைகளில் விளக்குவதாக வாதிடுகிறார் ராட்னர். குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிரான பரவலாக்கப்பட்ட பாகுபாடு, வெறுப்பு, தர்க்கமற்ற ஆனால் வலுவான ஆத்திர உணர்வு, வன்முறை குறித்த சகிப்பின்மை உள்ளிட்ட நோயியலின் இயல்பான வடிவங்கள், கும்பல் வன்முறை போன்ற நோயியலின் இயல்பை மீறிய தீவிர வடிவங்களைச் சூழ்ந்துகொண்டும் அவற்றை விளைவிப்பவையாகவும் இருக்கின்றன. இயல்பை மீறிய நடத்தை என்பது ‘இயல்பான’ நடத்தை என்று கருதப்படுவதுடன் தொடர்ச்சியற்றது அல்ல. “தீவிரமான இயல்பை மீறிய வன்முறை என்பது இயல்பான வன்முறையின் நீட்சிதான்” என்கிறார் ராட்னர்
அண்மைக் காலங்களில் நடைபெற்ற கும்பல் வன்முறைக் கொலைச் சம்பவங்களின் பின்னால் சமூக-பொருளாதார, அரசியல் மற்றும் உளவியல் காரணிகள் இயங்குகின்றன. விவசாயத்தின் வீழ்ச்சி, தடுக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் கிராமப்புற மக்களின், குறிப்பாக இளைஞர்களிடையே மிகப் பெரிய அளவில் ஆழமான அதிருப்தியும் கோபமும் உருவாகியுள்ளன. இவை கும்பல் வன்முறைக்குப் பின்னால் உள்ள உளவியல் காரணிகளில் சில. இவை கிராமப்புறப் பகுதிகள் மற்றும் சிறுநகரங்களின் பெருவாரியான மக்கள் எதற்கும் தீவிரமாக அளவுக்கதிகமாக எதிர்வினை ஆற்றும் நிலைமையை உருவாக்கியுள்ளன. துயரங்களுக்குத் தீர்வு கிடைக்காததன் ஆற்றாமை வன்முறையாக வெளிப்படுகிறது என்று இதைப் புரிந்துகொள்ளலாம்.
இது போதாதென்று அரசியல் நலன்களுக்காக மதச் சிறுபான்மையினர், வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் ஆகியோர் மீது மோசமான சந்தேக உணர்வு விதைக்கப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்கள் வாயிலாக தீவிரமாகப் பிரச்சாரம் செய்யவுப்படுகிறது. இஸ்லாமியர்களைத் தாக்கும் குழுக்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காது என்ற நிலையைப் பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் உருவாக்கிவைத்திருப்பது அவர்களை மேலும் ஊக்குவிக்கிறது.
அரசு வழங்கும் பொதுச் சேவைகள், பொது மருத்துவம், கல்வி போன்ற மக்கள் நலத் திட்டங்கள் உரிமைகள் வலுவற்றதாக்கப்பட்டுவருகின்றன. மக்கள் நல அரசு என்னும் கருத்தாக்கம் மங்கிவருகிறது. இவையும் இத்தகைய உளவியல் உருவாவதற்கான காரணிகள். அரசு என்பது அந்நியமாக்கப்பட்ட ‘கண்காணிப்பு அரசு’ ஆகிவிட்டது. இந்த இரண்டு மாற்றங்களும் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழக்கச் செயது அரசு என்பது தேவையற்ற வெளியாள் என்ற பொதுக் கருத்தை உருவாக்கிவிட்டன. இதன் விளைவாகக் குழுக்கள் சட்டம் ஒழுங்கைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள். இத்தகு சூழலில் ‘இயல்பானவை’ என்று பரவலாகக் கருதப்படும் நடத்தைகள் ஆரோக்கியமாக இருப்பதில்லை. இந்த நோயியல் இயல்பாக்கமானது தொடர்ச்சியான பகுத்தறிவற்ற கும்பல் வன்முறைக்கான சூழலை உருவாக்குகிறது.
பொது உளவியலை மாற்றியமைத்தல்
நோயியல் இயல்புத்தன்மை என்பது சமூக உளவியலுடன் சுருங்கிவிடுவதில்லை. அரசியல் களத்திலும் வெளிப்படும். .
ராட்னர் சொல்வதுபோல், அதுபோன்ற சீர்குலைக்கப்பட்ட பரவலான பொது உளவியல் 1920கள், 30களில் ஜெர்மனியின் நாஜிக் கட்சிக்குக் கிடைத்த பெருந்திரளான ஆதரவில் வெளிப்பட்டது. ஒரு நோயியல் அரசியல் கட்டமைப்பான நாஜிசம், ஜெர்மன் சமூகத்தின் பல்வேறு அங்கத்தினரால் அங்கீகரிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கம், பெரும்பாலான தொழிலதிபர்கள், அடால்ஃப் ஹிட்லரை தனது கட்சியின் தலைவராக 1933இல் நியமித்த ஜெர்மானிய அதிபர் ஆகியோர் இதில் அடக்கம். நாஜிக் கட்சி மையநீரோட்டக் கட்சியாகவும் பிரபலமானதாகவும் இருந்தது. இந்தக் கட்சியை ஆதரிக்காத ஜெர்மானியார்கள் ஐரோப்பா எங்கும் இருந்த அறுபது லட்சம் யூதர்களைப் போல் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தனர்.
அப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற அதிகாரத்துக்கு எப்படிப் பல லட்சம் ஜெர்மானியர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக யோசனையின்றி விசுவாசமாக இருந்தார்கள் என்று இப்போது யோசித்து ஜெர்மானியர்கள் உட்பட உலகமே வியக்கிறது. இதுபோன்ற நடைமுறைகளே வில்ஹெம் ரீச், ‘தி மாஸ் சைக்காலஜி ஆஃப் ஃபாசிஸம்’ என்ற தனது நூலில் பின்வருமாறு எழுதவைத்தன:
சர்வாதிகார சக்தியும் உண்மையும் இணைந்திருக்க முடியாது. அவை இரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை தனித்தனியானவை. சமூக வாழ்க்கையில் அதிகாரத்துக்கும் பொய்களுக்கும் அளவுகள் உண்டு. மக்கள் எவ்வளவு உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்குக் கொடுங்கோன்மை குறைவாக இருக்கும். மாறாக, மக்களின் பகுத்தறிவற்ற மாயைகளை எவ்வளவு உள்வாங்கியிருக்கிறார்களோ அந்த அளவு தனிநபர் குழுகளின் கொடுங்கோன்மை மிருகத்தன்மை வாய்ந்ததாகவும் முழுமையானதாகவும் இருக்கும்.
ரிச் மேலும் சொல்கிறார்:
1930களின் ஜெர்மனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்றைய இந்தியாவுக்குப் பொருத்தமானவை. இந்தியாவில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற கும்பல் கொலைகள், இயல்பானவை என்று கருதப்படும் பல சமூக மனப்போக்குகள், ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் காட்டுகின்றன. இவற்றை விடத் தீவிரமான வன்முறை நிகழ்வுகளை விளைவிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. இன்று அதிகாரமிக்க சமூக-அரசியல் சக்திகள், சாமான்ய இந்தியர்களின் பொது உளவியலை மாற்றியமைத்துவருகின்றன. ‘மற்றவர்’ என்று கருதப்படுபவர்கள் மீது ஆழமான சந்தேகம் மற்றும் வெறுப்பை வளர்த்தல், அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதானதைப் போல் எதிர்க் குரலைச் சகிக்காத தீவிர தேசியவாத அடையாளத்தை உருவாக்குதல், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வன்முறைக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த உளவியலை மாற்றியமைக்கும் பணியைச் செய்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து கும்பலாகச் சேரும் மக்களிடம் நோயியல் வன்முறை நடத்தையை உருவாக்குகின்றன. இவையே பகுத்தறிவுக்குப் புறம்பான நிகழ்வுகளுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கின்றன.
இப்படி உருவாக்கப்பட்ட இந்த நோயியல் பொது உளவியல் சமூகத்திலும் அரசியலிலும் புதிய இயல்புத்தன்மையை வடிவமைக்கிறது. அதிர்ஷ்டவசமாக, இந்தியாவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்துடன் இருக்கும் வலுவான எதிர்ப்பு மனப்போக்குகள், மனிதம், நிதானமான சிந்தனை ஆகியவற்றின் குரல்கள் ஆகியவையும் நாடு முழுவதிலும் இருக்கின்றன. இந்த எதிர்ப்பு சக்திகளிடம் வலுவைப் பெற்று, நாம் இந்த மிகப் பெரிய ஆபத்தைக் கண்டுகொண்டு இது நம் நாகரிக சமூகத்தை விழுங்குவதற்கு முன் இதை எல்லாத் தளங்களிலும் தோற்கடிக்க வேண்டும்.
மருத்துவர் அபய் சுக்லா பொது சுகாதார மருத்துவர், சுகாதாரச் செயற்பாட்டாளர். ஜன் ஸ்வஸ்த்யா அப்யான் என்னும் அமைப்புடன் இணைந்து பணியாற்றுபவர்.
அபய் சுக்லா
நன்றி: தி ஸ்க்ரோல்.இன்
https://scroll.in/pulse/893010/lynchings-in-india-and-the-pathology-of-normalising-extreme-violence