மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் போட்டதற்காக, ஆய்வு மாணவி சோபியா செப்டம்பர் 3ஆம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். “பாசிஸ்ட்” என்ற வார்த்தையை அந்த மாணவி பயன்படுத்தியதற்காகவும் முஷ்டியை உயர்த்தி கோஷம் போட்டதற்காகவும் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கியிருக்கிறார். ஒரு பயங்கரவாதியை அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்று நான் நினைத்தேன் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
சென்னையிலிருந்து தூத்துக்குடி வரையிலான விமானப் பயணத்தில் பாஜக தலைவரும் அந்த மாணவியும் பயணம் செய்தபோது “பாஜக பாசிச அரசாங்கம் ஒழிக” என்று மாணவி கோஷம் போட்டிருக்கிறார்.
மக்களிடம் அறிமுகம் ஆகியிருக்கிற செயல்பாட்டாளர்களின் வீடுகள் அலுவலகங்களில் புகுந்து காவல் துறையினர் கடந்த வாரம் பல்வேறு மாநிலங்களில் பரிசோதனை செய்தனர். ஐந்து பேரைக் கைதும் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்காக “பாசிசத்துக்கு எதிரான முன்னணியை” உருவாக்கியிருந்தனர் என்று புனே நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை கூறுகிறது.
இந்த வழக்குகள் உங்களைப் பெரிதாக வேதனைப்படுத்தாமல்கூட இருக்கலாம். ஆனால் இந்த வழக்குகளில் காணப்படும் முரண்பாடும் அலட்சியமும் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.
பாஜகவின் ஆட்சியில் இந்தியாவில் மாற்றுக் கருத்துகள் கொண்டிருப்பவர்களுக்கான இடம் ரொம்பக் குறைவாக இருக்கிறது என்பதுதான் சோகம்.
செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நடிகர்கள், கலைஞர்கள் உள்பட யாராக இருந்தாலும் அரசாங்கத்தையோ அல்லது அவர்களின் பிரிவினைவாத சித்தாந்தத்தையோ விமர்சிப்பவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிற அபாயம் காத்திருக்கிறது.
செயல்பாட்டாளர்களுக்கு வருகிற நிதியை நிறுத்துவது, அவர்களின் செலவுகளைத் தணிக்கை செய்வது, அவர்களது இருப்பிடங்களைச் சோதனையிடுவது, அவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட காரியங்களுக்கு அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. அரசின் ஆதரவாளர்களான பாஜகவினர் வன்முறையான முறையில் மிரட்டுகிறார்கள். மாற்றுக் கருத்தாளர்களை உடல்ரீதியாகத் தாக்குகிறார்கள். ஒன்று அரசு தாக்குகிறது அல்லது அரசின் ஆதரவாளர்கள் தாக்குகிறார்கள். ஏதோ ஒன்று நடக்கிறது.
மதச்சார்பற்றவராக இருந்தால் தேச விரோதி என்று சொல்வார்கள். பாசிச எதிர்ப்பாளராக இருப்பவரை பயங்கரவாதி என்று முடிவுகட்டுவார்கள். இத்தகைய காட்டுத்தனமான குற்றச்சாட்டுகள் முடிவில்லாமல் குவிகின்றன.
இவையெல்லாம் ஏன் நடந்துகொண்டிருக்கின்றன?
மக்களிடம் புகழ்பெற்ற தலைவர்களுக்கு அதிகாரத்தின் மீது பெரிய காதல் இருக்கலாம். ஆனால், மக்களிடம் வெறுப்பு ஏற்படுத்தும் கருத்துகளைப் பரப்பி அவற்றை தொடர்ச்சியாக நிலைக்க வைத்திருப்பது கடினமானது.
மாற்றுக் கருத்துகள் உள்ளவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவியதற்கு ஆரம்பத்தில் நிறைய பாராட்டும் வந்தது. இந்து தேசிய உணர்வை மக்களிடம் அதிகரிப்பதற்குத் தேவையான மிக முக்கியமான செயல்பாடாக அது பார்க்கப்பட்டது.
மதரீதியான சிறுபான்மையினரை துரோகிகளாகக் குறிப்பிடுகிற ஒரு சூழலை பாஜகவின் அரசியல் பிரச்சாரம் உருவாக்கியிருக்கிறது. தலித்துகள், பழங்குடிகள் உள்ளிட்ட ஏழைகளும் விளிம்பு நிலை மக்களும் தங்களுக்கு மேலும் பாதுகாப்புகள் வேண்டும் என்று கோருவது வேண்டாவெறுப்போடு பார்க்கப்படுகிறது. மனித உரிமைகளை உயர்த்திப்பிடிக்கிற தனிநபர்களும் குழுக்களும் தேசபக்தி அற்றவர்கள் என்றும் வில்லன்கள் என்றும் சித்தரிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலை பாஜகவின் அரசியல் பிரச்சாரம் ஏற்படுத்தியிருக்கிறது.
வேலைவாய்ப்புகள் உருவாக்குவது தொடர்பாகவும் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவது தொடர்பாகவும் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் மக்களிடம் ஏற்பட்டிருக்கிற ஏமாற்றமும் நிறைவேறாத விருப்பங்களும் பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன. அருவருப்பான அரசியல் மீதான சங்கட உணர்வும் அதிகரித்துவருகிறது. பாஜக அரசாங்கத்துக்கான ஆதரவு தவிர்க்க முடியாத முறையில் குறைந்துவருகிறது. மாணவி சோபியா ஒரு தலைவருக்கு எதிராகப் போராடினார். மாணவர்கள் இன்னொரு சம்பவத்தில் இன்னொரு தலைவருக்கு எதிராகக் கறுப்புக் கொடிகளைக் காட்டினார்கள்.
இந்தியா இப்போது ஒரு விளையாட்டு மைதானம் போல உள்ளது. அதில் உள்ளூர் அணி தோல்வி முகத்தில் இருக்கிறது. அந்த அணியை ஆதரிப்பவர்களின் ஆரவாரம் மெல்ல மெல்லக் குறைகிறது. முகத்தில் வண்ணங்களை வரைந்துகொண்டிருக்கிற ரசிகர்களும் பாடிக்கொண்டும் பேனர்களை ஆட்டிக்கொண்டுமிருக்கிற ரசிகர்களும் மெதுவாக அமைதியாகிறார்கள். எதிர்த் தரப்பு வெற்றிபெறுவதற்கான சூழல்கள் தெரிகின்றன. உள்ளூர் அணிக்கு விசுவாசமான மகிழ்ச்சி ஆரவாரம் விரைவிலேயே தேய்ந்துவருகிறது. சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளாவார்கள். உண்மை நிலையை உணர்வார்கள்.
பாஜக 2014இல் ஆட்சிக்கு வந்தபோது ஆர்ப்பரித்துவந்த ஆதரவு அதன் யதேச்சதிகாரப் போக்கால் தற்போது சரிந்துவிட்டது.
இந்தியர்கள் விவாதத்தை விரும்புவார்கள். ஆனால், ஒருகாலத்தில் பெருமிதத்தோடு சுதந்திரமானதாக இருந்த ஊடகம் இன்று தனது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட முடியாமலிருக்கிறது. ஒரு சிலர் முஸ்லிம்கள் மீது நம்பிக்கையற்றவர்களாக இருக்கலாம். ஆனால், மாடு வளர்ப்பவர்கள் மாட்டு ரவுடிகளால் தாக்கப்படுவதும் குற்றம் சாட்டப்பவர்களைச் சட்டத்தின் விசாரணைக்கு ஆட்படுத்த விடாமல் தடுப்பதும் கவலை தரும் விஷயமாக மாறிவருகின்றன.
பல்வேறு கதைகள், கலைகள், திரைப்படங்கள் ஆகியவற்ரைத் தன் மரபுச் செல்வமாகக் கொண்ட நாடு, ஒரே மாதிரியாக ஒரு விஷயத்தை வெளிப்படுத்துவதைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டது. சிறுமி ஒருத்தி முஸ்லிம் என்பதாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்படுவதையும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக ஆதரிப்பதையும் ஏற்றுக்கொள்வது சிரமமானதாக இருக்கிறது. தலித்துகள் மீதான அடக்குமுறையும் தலித்துகள் தங்களை எந்த பெயரில் அழைத்துக்கொள்கிறார்கள் என்கிற உரிமையைக்கூட அவர்களுக்கு மறுப்பதும் அற்பத்தனமாகவும் கவலை தரக்கூடியதாகவும் இருக்கிறது.
நரேந்திர மோடி அரசாங்கம் மேலும் சிறிது கடுமையாக வேலை செய்ய வேண்டும். சீர்திருத்தங்களுக்கு விமர்சனம் தேவையானது என்பதையும் விமர்சனக் குரல்களை அடக்குவது பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும்.
விளையாட்டு உதாரணத்துக்கு மீண்டும் வருவோம். தேவையான கடும் நடவடிக்கைகள் என்று ஒரு சமயத்தில் கொண்டாடப்படுகிற சில நியாயமற்ற செயல்கள், அடிக்கடி மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்டால் அவை மதிப்பிழந்துவிடும். எதிரிகளைப் பந்தாடுகிற செயல்பாடுகள் ஒருமுறை அல்லது இருமுறை கொண்டாடப்படலாம். தொடர்ந்து அதிரடிப் போக்கில், சட்டாம்பிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிற அணி இதிலும் அம்பலப்பட்டுப்போகும். அந்த அணிக்கு நல்ல பயிற்சியும் இல்லை. திறனும் இல்லை என்றுதான் பெயர் வாங்கும்.
மீனாட்சி கங்குலி
(கட்டுரையாளர் மீனாட்சி கங்குலி, ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் எனும் அமைப்பின் தென்னாசிய இயக்குநர்.)
நன்றி: ஸ்க்ரோல் இணைய தளம், செப்டம்பர் 7, 2018
தமிழில் – த.நீதிராஜன்
I like the hashtag #packupmodi :-)) BJP deserves to be kicked out!!
Biased article..in the name of human rights activism support ING terrorism.
Me too!!!
what about the honor of a passengar …it should be punished
facist enpathu vimarsanam alla!abuse!