வங்கிகளில் கடன்களை வாங்கிவிட்டு 2016இல் இங்கிலாந்து நாட்டுக்கு ஓடிப்போவதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியைத் தொழிலதிபர் விஜய் மல்லையா சந்தித்தாரா? நிதியமைச்சரைச் சந்தித்து, தான் வாங்கிய சுமார் 9400 கோடி ரூபாய்கள் கடனைத் தீர்ப்பதில் வங்கிகளோடு ஒரு சமரசத்துக்கு வருவதற்கான திட்டத்தையும் அவரிடம் அளித்ததாகக் கடந்த வாரம் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
உடனடியாக இதனை அருண் ஜேட்லி மறுத்துள்ளார். “அவர் சொன்ன தகவல்கள் தவறானவை. அவற்றில் உண்மை இல்லை” என்று அவர் கூறியிருக்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினர் என்ற தனது பதவிக்கு உள்ள சிறப்புரிமையை அவர் தவறாக பயன்படுத்தினார் என்றும் அவரது கடன்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு திட்டத்தோடு தன்னை நாடாளுமன்றத்தில் முரட்டுத் தொனியோடு அவர் அணுகினார் என்றும் ஜேட்லி கூறியிருக்கிறார்.
தன்னோடு பேசுவதற்கு பதிலாக தனக்கு கடன் கொடுத்த வங்கிகளோடு பேசுங்கள் என்று விஜய் மல்லையாவைக் கேட்டுக்கொண்டதாக நிதியமைச்சர் சொல்கிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் தான் நிதியமைச்சரைச் சந்தித்ததாகவும் தான் லண்டனுக்கு போய்விடப் போகிறேன் என்று அவரிடம் தெரிவித்ததாகவும் விஜய் மல்லையா சொல்கிறார்.
இந்தியாவின் ஊடகங்களில் இந்த செய்தி வெளியானதும அரசியல் வட்டாரங்கள் பதற்றமாகிவிட்டன. காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்கட்சிகளும் பாஜகவை தாக்கத் தொடங்கிவிட்டன.
இந்த விவகாரம் ஆளும் கட்சிக்கு நல்லதல்ல என்றாலும் இதில் மையமான விஷயம் யார் யாரை சந்தித்தார்கள் என்பது அல்ல. அவ்வளவு கடன்களை வாங்கிவிட்ட மல்லையா எப்படி இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார் என்பதே.
விஷயங்கள் என்ன மாதிரி நடந்தன என்பதைப் பார்த்தால், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லண்டனுக்கு போய்விடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அவருக்கான தேடுதல் அறிவிப்பை நீர்த்துப்போகுமாறு செய்துவிட்டது என்பதைப் பார்க்கலாம்.
மல்லையா நாட்டைவிட்டு வெளியேறுகிறார் என்றால் அவர் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களை கண்காணிக்கிற துறையான குடிஅகல் (இமிக்ரேஷன்) பிரிவுக்கு இந்திய புலனாய்வு அமைப்பு சுற்றறிக்கையை 2015 அக்டோபர் 16 அன்று அனுப்பியது.
ஆனாலும் ஒரு மாதத்திலேயே மத்திய புலனாய்வு அமைப்பு தனது மனதை மாற்றிக்கொண்டுவிட்டது. அதற்குப் பதிலாக மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறுகிறாரா அல்லது இந்தியாவுக்குள்ளே வருகிறாரா என்று குடிஅகல் பிரிவு என்று தனக்கு தெரிவித்தால் மட்டும் போதும் என்று தெரிவித்துவிட்டது.
இந்த முடிவு எடுக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் மல்லையா தனது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தின் சேர்மன் பதவியிலிருந்து 75 மில்லியன் டாலர்களைப் பெற்றுக்கொண்டு விலகினார். தான் இங்கிலாந்து சென்று தனது குடும்பத்தோடு கூடுதல் நேரம் செலவிடப்போவதாக தனது பதவியைவிட்டு விலகும்போது அவர் சொன்னார்
தனது நிறுவனத்திலிருந்து மல்லையா பதவி விலகிய பிப்ரவரி 26 அன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னிடம் மல்லையா வாங்கியிருக்கிற 1600 கோடிகளுக்காக பெங்களூரில் உள்ள கடன்குறைதீர்ப்பு ஆணையத்தை அணுகியது. மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்படவேண்டும் என்றும் அது கோரியது.
அந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே மல்லையா மார்ச் 2 அன்று நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். மத்திய புலனாய்வு அமைப்புக்குத்தான் அவர் நன்றி சொல்லவேண்டும். நீர்த்துப்போன அறிவிப்பை அதுதான் செய்தது. அதனால்தான் அவர் டெல்லியை விட்டு வெளியேறும்போது எந்த சிரமமும் அவருக்கு இல்லை.
மல்லையா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு அந்த வங்கி கர்நாடக உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகியது. அதன் கடன்களைத் திரும்பப் பெறுவதற்கான வழிகளைத் தேடியது. ஆனால், மல்லையா இங்கிலாந்துக்குப் போய்விட்ட காரணத்தால் இரண்டு நீதிமன்றங்களுக்குமே அவர் மீது எந்த அதிகாரமும் இல்லாமல்போய்விட்டது.
2017 பிப்ரவரியில் மோடி அரசாங்கம் இங்கிலாந்து அரசிடம் மல்லையாவைப்பிடித்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தது. அந்த வேண்டுகோள் இன்னமும் விசாரிக்கப்பட்டுவருகிறது.
மத்தியப் புலனாய்வு அமைப்பு ஏன், எப்படி தனது தேடுதல் அறிவிப்பை நீர்த்துப்போகச் செய்தது என்கிற கேள்வி இரண்டு வருடங்களுக்கு மேலாக அந்தரத்தில் தொங்கியது.
மல்லையா தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்ட ஒரிஜினல் தேடுதல் அறிவிப்பில் தவறு நிகழ்ந்துவிட்டது என்று கடந்த வாரம் புதன்கிழமையன்று (செப்டம்பர் 12) ஊடகங்களிடம் தெரிவித்தன மத்தியப் புலனாய்வு அமைப்பில் உள்ள பெயர் சொல்ல விரும்பாத வட்டாரங்கள்.
ஒரு அதிகாரி தேடுதல் அறிவிப்புப் படிவத்தை நிரப்பும்போது “தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்ற கட்டத்தில் தவறுதலாக டிக் அடித்துவிட்டார். மல்லையா விசாரணைக்கு ஒத்துழைத்துக்கொண்டிருந்தபடியால், அவர் விமானப் பயணங்கள் மேற்கொள்பவர்களில் அபாயகரமானவர் என்று மத்தியப் புலனாய்வு அமைப்பு கருதவில்லை. அதனால் தவறுதலாக நிரப்பப்பட்ட அந்த விவரம் ஒரு மாத காலத்துக்கு பிறகு சரிசெய்யப்பட்டது என்கின்றன பெயர் சொல்ல விரும்பாத அந்த வட்டாரங்கள்.
மத்தியப் புலனாய்வு அமைப்பில் உள்ள பெயர் சொல்லவிரும்பாத வட்டாரங்கள் சொல்லும் விவரங்களை ஒரு வாதட்துக்கு அப்படியே எடுத்துக்கொண்டாலும் அந்த அமைப்பு செய்தது மிகப் பெரிய தவறு. விமானப் பயணம் செய்பவர்களில் மல்லையா அபாயகரமானவர்தான். மத்தியப் புலனாய்வு அமைப்பின் முடிவு பொதுமக்களின் 9400 கோடி ரூபாயை அபாயத்துக்குள்ளாக்கிய முடிவு.
இந்த முடிவை எடுத்த மத்தியப் புலனாய்வு அமைப்பு மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கூடக் குற்றம்சாட்டியிருக்கிறார். தேடுதல் அறிவிப்பை நீர்த்துப்போகச் செய்தது ஒரு சதிச்செயல். அது மல்லையாவை தப்பிக்கவைப்பதற்காகவே செய்யப்பட்டிருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
கோடிக்கணக்கான ரூபாய்களைக் கடன்களாக வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போய் தஞ்சம் அடைந்துவிடுகிற பெரும் பணக்காரரின் சம்பவம் இந்த ஒன்று மட்டுமல்ல. பிப்ரவரியில் நகைவியாபாரி நிரவ் மோடியும் அவரது மாமா மெகுல் சோக்சியும் பொதுத்துறை வங்கியின் 13000 கோடி ரூபாய்களை மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள்.
ஷோயப் டானியல்
நன்றி: ஸ்க்ரோல்.இன்
(https://scroll.in/article/894278/never-mind-who-mallya-met-why-did-the-modi-government-dilute-an-airport-lookout-notice-against-him)
தமிழில்: த.நீதிராஜன்
// மோடி ஏன் மல்லையாவை தப்பிக்க விட்டார் ? // ஆங் …54 பிரமாண்ட சைஸ் சூட் கேசுகளுடன் நம்மாளு எவ்வளவு சாமர்த்தியமா தப்பிக்கிறார் என்று பார்ப்பதற்கும் …நீங்கள்ளாம் இது பற்றி எழுதுவதற்கும் தான் …?
Modi oliga