தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் 32 வயதான எம்.ராம்குமார், நிதி சார்ந்த கணக்குகளைப் பதிவு செய்யும் பணியில் ஆழ்ந்திருந்தார். 45 நாள் சிறையில் இருந்துவிட்டுக் கடந்த மாதம்தான் வேலைக்குத் திரும்பியிருந்தார். அதனால் பறிபோன பணி நேரத்தை அவர் ஈடு செய்ய வேண்டியிருந்தது. நகரின் எல்லையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் காப்பர் ஆலையை விரிவாக்கம் செய்வதால் நகரத்தில் மாசின் அளவு மென்மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் பயந்ததால் திட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜூன் 14 அன்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார். 133 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் தொடர்பானவை.
ஒரு தனிநபர் மீது இத்தனை வழக்குகளைப் பதிந்த காவல் துறை நடவடிக்கை அபத்தமானதாகத் தோன்றலாம். ஆனால் மே 22 அன்று நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் வன்முறை வடிவம் எடுத்தது 13 பேர் காவல் துறையினரின் துப்பாக்கிகளுக்குப் பலியான பிறகு, தமிழக அரசு மக்களை இப்படித்தான் நடத்திக்கொண்டிருக்கிறது. பல வழக்குகளில் காவல் துறை ஒரே சம்பவத்துக்கு பல முதல் தகவல் அறிக்கைகளைப் (எஃப்ஐஆர்) பதிவு செய்து ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நபர்களின் பெயர்களை எழுதியது. இதன் விளைவாக சிலர் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் சட்டத்தை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
உதாரணமாக முருகேசன் நகரைச் சேர்ந்த 32 வயது எஸ். அருண். மீது வாகனங்களைச் சேதப்படுத்தியது தொடர்பான 72 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எஃப்ஐஆர்களின்படி இவர் மே 22 அன்று மதியம் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த 38 இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை சேதப்படுத்தி அல்லது தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார். அதேபோல் குமாரரெட்டியாபுரத்தில் இருக்கும் பி.எஸ்ரவேல் மீது 46 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
எஸ்.ஜிம்ராஜ் மில்டன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற லாபநோக்கற்ற அமைப்பின் சென்னைப் பிரிவின் செயலாளர். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்துக்காகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குச் சட்ட உதவி செய்துவரும் வழக்கறிஞர் குழுவில் ஒருவரான இவர் மே 22 போராட்டத்தன்று வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று கிட்டத்தட்ட 200 பேரைக் காவல் துறை கைதுசெய்திருப்பதாகச் சொல்கிறார். அவர்களில் 20க்கு மேற்பட்டோர் மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சிலரின் வழக்கறிஞர் பி.மணிகண்டன், தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர்கள் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் குறைந்தது ஏழு பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
65 வயதான ஃபாத்திமா 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிவருபவர்களில் ஒருவர். இவர் மீது குறைந்தது ஆறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. “என் மீது ஆறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதைவிட அதிகமான வழக்குகள்கூட இருக்கலாம். அண்மையில் என் மீது பதியப்பட்டுள்ள வழக்கு ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். அது வரை அப்படி ஒரு வழக்கு இருப்பதே எனக்குத் தெரியாது” என்கிறார்.
வழக்கறிஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் வழக்கறிஞர்களைக்கூடக் காவல் துறை விட்டுவைப்பதாயில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றும் வாஞ்சிநாதன் ஜூன் 20 அன்று கைதுசெய்யப்பட்டு 16 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் அவர். இவ்வமைப்பே இந்த ஆண்டு ஆலைக்கு எதிரான 99 நாள் போராட்டத்தை ஒருங்கிணைத்தது. “போராட்டத்துக்கு அனுமதி கேட்கும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றத்தில் வாதாடுவதெல்லாம் ஒரு குற்றமா?” என்று கேட்கிறார் வாஞ்சிநாதன்.
தனது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்காவிட்டால் தன் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் என்கிறார் வாஞ்சிநாதன். அவர் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டார். பிறகு மதுரையை விட்டு வெளியேறக் கூடாது, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக எந்த செயல்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட பொதுநல மனுவின்படி மே 22 போராட்டம் தொடர்பாகக் காவல் துறை 234 எஃப்ஐஆர்களைப் பதிவுசெய்துள்ளது. போராட்டக்காரர்களைக் கண்மூடித்தனமாகக் கைதுசெய்து அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்த இந்த மனுவைப் பெற்ற நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக்கச் சொல்லிக் காவல் துறைக்கு உத்தரவிட்டது.
போராட்டத்தின்போது காவல் துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
“போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்கச் சொன்ன நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு நிம்மதியளிக்கிறது” என்கிறார் 133 வழக்குகளை எதிர்கொண்டிருக்கும் மருத்துவமனை ஊழியர் ராஜ்குமார்
“குரலெழுப்பியதற்காக தண்டிக்கப்பட்டவர்கள்”
ராஜ்குமார் வசிக்கும் இடத்துக்கு அருகில் உள்ள தெற்கு வீரபாண்டியபுரத்தில்தான் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. ஆனால் இந்த ஆலையில் ஆற்றலை 8,00,000 ஆக இரட்டிப்பாக்குவதற்கான விரிவாக்க நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்கள் குமாரரெட்டியார்புரத்தில்தான் தொடங்கின. இந்த இரண்டு பகுதிகளும் சுமார் ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. தான் வசிக்கும் பகுதியில் தன் குடும்பத்தைத் தவிர கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு ஸ்டெர்லைட்டைச் சார்ந்திருப்பதாகச் சொல்கிறார் ராஜ்குமார். அவர்கள் ஒன்று ஸ்டெர்லைட்டில் பணியாற்றுவார்கள் அல்லது அந்த நிறுவனத்துக்கு வாகனங்களைக் குத்தகைக்கு விட்டிருப்பார்கள். அந்தப் பகுதியில் போராட்டம் தொடங்காததற்கு இதுவே காரணம் என்கிறார். குமாரரெட்டியார்புரத்தில் நடந்த போராட்டத்துக்கு ஸ்டெர்லைட் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஆதரவு தெரிவித்த முதல் குடும்பம் ராஜ்குமாருடையதுதான். ”இதனால்கூட எங்கள் மீது பல புனையப்பட்ட வழக்குகள் பதியப்பட்டிருக்கலாம்” என்று விரக்திப் புன்னகையுடன் சொல்கிறார் அவர்.
ஜூன் 14 அன்று நடுஜாமத்தில் தனது வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்டார் ராஜ்குமார். முதலில் அவர் மீது 63 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர் சிறையில் இருந்தபோது மேலும் 70 வழக்குகள் பதியப்பட்டன. 63 வழக்குகளில் பிணை வாங்கிய பிறகு ஜூலை 25 அன்று அவர் சிறையிலிருந்து வெளியேறினார்.
ராஜ்குமாரின் தம்பி எம்.மகேஷ்குமார் (30 வயது) ஜூன் 11 அன்று கைதுசெய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் 93 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவரை மீண்டும் பார்க்க அவரது மனைவியும் ஐந்து மாதக் குழந்தையும் 50 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. “என் சகோதரர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்ததற்கு வழக்கறிஞர்கள் கடுமையாக உழைத்ததே காரணம்” என்கிறார் ராஜ்குமார்.
தனது அண்ணன்கள் நடு ஜாமத்தில் கைதுசெய்யப்பட்டதைக் காவல் துறை தன்னைத் தேடியும் வரும் என்று அஞ்சிய எம்.ரவிகுமார் தலைமறைவாகிவிட்டார். அவரது குடும்பப் பெண்களும் குழந்தைகளும் குடும்பத் தலைவன் இன்றி ஒன்றரை மாதங்கள் துன்பப்பட்டனர். அவர் பணியாற்றிக்கொண்டிருந்த தனியார் ரசாயன நிறுவனம் மகேஷ் குமாரை ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டதற்குப் பணியாமல் அவர் ஏற்கெனவே தன் வேலையை ராஜினாமா செய்திருந்தார். அவர்களது கூட்டுக் குடும்பத்தின் செலவுகளை இப்போது ராஜ்குமார், ரவிகுமார்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.
ராஜ்குமாரின் தன் தந்தையைப் பறிகொடுத்தபோது அவருக்கு வயது 5. தந்தையின் மறைவுக்குப் பின் அவரது தாய் தெற்கு வீரபாண்டியபுரத்தில் இருந்த தனது தந்தை வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். தான் வசித்த கிராமத்துக்குத் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் மருந்துகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் அனுப்பியது அவருக்கு நினைவில் உள்ளது. “அந்த நிறுவனத்தின் மருத்துவப் பேருந்து வாரம் ஒருநாள் கிராமத்தைச் சுற்றி வரும். அதில் ஒரு மருத்துவரும் செவிலியும் இருப்பார்கள்” என்று நினைவுகூர்கிறார். ”இந்த நிறுவனம் எங்களுக்கு நோய்களையும் தந்து அதற்கான மருந்துகளையும் கொடுத்தது. இதுவே மக்களை சாதி வர்க்க வேறுபாடுகளைக் கடந்து இணைந்து போராடத் தூண்டியது” என்கிறார் ராஜ்குமார்.
தங்களது நிலத்தை நஞ்சாக்கி நீர்நிலைகளை நாசமாக்கி உடல்நலத்தைச் சீரழித்த நிறுவனத்துக்கு எதிராகக் குரலெழுப்பிய மக்கள் தண்டிக்கப்படுவதாக சீற்றத்துடன் சொல்கிறார் ராஜ்குமார்.
‘எதிர்க்குரல் மீதான தாக்குதல் விரிவடைகிறது’
இந்த கைது நடவடிக்கைகளுக்கான பழியை தமிழகத்தை ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசின் மீது மட்டும் சுமத்திவிட முடியாது என்று மனித உரிமைப் போராளிகள் கருதுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், தூத்துக்குடி காவல் துறையின் நடவடிக்கைகளை நாடெங்கும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளுடன் – குறிப்பாக மகராஷ்ட்ராவில் நடந்த பீமா-கோரேகான் வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் – இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மத்தியில் ஆளும் பாஜகவின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது என்ற பரவலான சந்தேகத்தை ஆமோதிக்கும் வகையில் “இது முழுமையான அதிமுக ஆட்சி அல்ல” என்றும் அவர் சொல்கிறார்.
வேறு சில செயற்பாட்டாளர்களும் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, நீதியரசர் ஹரிபரந்தாமனின் கருத்தையே எதிரொலிக்கின்றனர். குடியுரிமைப் போராளிக் குழுவான மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் (42 வயது), ஆகஸ்ட் 9 என்று பெங்களூரு விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். மே 22 அன்று தூத்துக்குடியில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டைப் பற்றி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் பேசிவிட்டுத் தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டார்.
நன்றி: ஸ்க்ரோல்.இன்
“போராட்டத்தின்போது காவல் துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” – 2011 பரமக்குடிப் படுகொலைக்கே இன்னமும் சி பி ஐ யால் விடை கொடுக்க முடியவில்லை… இதற்க்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ???