மல்லையாவைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என எழுத்துபூர்வமாக சிபிஐ தெரிவித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
விஜய் மல்லையா தொடர்பான தேடுதல் அறிவிப்பை வெளியிட்ட மத்தியப் புலனாய்வு அமைப்பு, அவரை இந்தியாவை விட்டு வெளியேறாமல் தடுக்க வேண்டும் என்பதை மாற்றி, அவர் நாட்டை விட்டுப் போகும்போதும் வரும்போதும் எங்களுக்குத் தெரிவித்தால் போதும் என்ற வகையில் தேடுதலின் தீவிரத்தைக் குறைத்தது. இது “நிலைமையைக் கணிப்பதில் ஏற்பட்ட தவறு” எனக் கடந்த வாரத்தில் மத்தியப் புலனாய்வு அமைப்பு விளக்கியதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஆனால், தான் முதலில் அனுப்பிய தேடுதல் அறிவிப்பு உண்மையில் ஒரு தவறு என்று மும்பை காவல் துறையிடம் எழுத்துபூர்வமாக மத்தியப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது என்கின்றன இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு கிடைத்துள்ள ரகசியத் தகவல் தொடர்பு விவரங்கள்.
மல்லையாவைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது “தேவையில்லை” என்பதை மத்தியப் புலனாய்வு அமைப்பு ஆதாரபூர்வமான ஆவணமாகவே வைத்திருக்கிறது.
2015 அக்டோபர் 16 தேதியிட்ட அதன் முதலாவது தேடுதல் அறிக்கையில் மத்தியப் புலனாய்வு அமைப்பு “நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்” என்ற கட்டத்தில் டிக் செய்திருக்கிறது.
இரண்டாவது தேடுதல் அறிக்கை 2015 நவம்பர் 24இல் வெளியானது. அன்று இரவுதான் மல்லையா டெல்லி வந்து சேர்ந்திருந்தார். நான்கு மாதங்களுக்குப் பிறகு மும்பை காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்குத் தனியாக ஒரு கடிதம் வைத்து அந்த இரண்டாம் தேடுதல் அறிவிப்பு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் “இந்தியாவுக்குள் வரும்போதும் போகும்போதும் தெரிவிக்க வேண்டும்” என்ற கட்டத்தில் டிக் அடிக்கப்பட்டிருந்தது.
நான்கு மாதங்களுக்கு பிறகு 2016 மார்ச் 2 அன்று மல்லையா நாட்டை விட்டு ஓடிவிட்டார். இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு அவரைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. மல்லையாவுக்குக் கடன் கொடுத்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு பிப்ரவரி 28 அன்று சட்ட ஆலோசனை தரப்பட்டது. அதன் பேரில் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
நவம்பர் 24 அன்று இரவு ஒரு வெளிநாட்டிலிருந்து நியூடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மல்லையா தரையிறங்குகிறார் என்று குடிஅகல் அதிகாரிகள் தாங்கள் செயல்படுத்தியிருக்கிற ‘பயணிகள் தொடர்பான தகவல்கள் பற்றிய நவீன முறை’ மூலமாக மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு 2015 நவம்பர் 23 காலையிலேயே எச்சரித்திருக்கின்றனர். அந்த எச்சரிப்புதான் இந்தப் பிரச்சினையின் அடிப்படையாக மாறியிருக்கிறது.
அதே நவம்பர் 24 அன்று மத்தியப் புலனாய்வு அமைப்பு ஒரு நீளமான கடிதத்தை மும்பை காவல் துறைக்கு அனுப்பியிருக்கிறது. அதோடு இணைக்கப்பட்ட முறையில் புதிய தேடுதல் அறிவிப்பும் இருந்திருக்கிறது. “இந்தக் கட்டத்தில் இந்த நபரைத் தடுத்துப் பிடித்துவைப்பது எங்களுக்குத் தேவைப்படவில்லை. எதிர்காலத்தில் அப்படி பிடித்துவைப்பது தேவைப்பட்டால் தனியாக உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். அதற்கேற்ற முறையில் இவர் தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கிற தேடுதல் அறிவிப்பும்கூட மாற்றியமைக்கப்படும்” என்று அந்த கடிதத்தில் இருந்துள்ளது.
பயணிகள் தொடர்பான தகவல்கள் நவீனப்படுத்தப்பட்டிருக்கின்றன. பயணிகளின் வருவது, போவது தொடர்பான எச்சரிக்கைக் குறிப்புகளை அனுப்பும் வகையில் அது செயல்படுகிறது என்பதை மத்தியப் புலனாய்வு அமைப்பு அறிந்திருக்கவில்லை என்பதை அந்தக் கடிதம் வெளிப்படுத்துகிறது. இத்தகைய நவீன முறை செயல்படுகிறது என்பதைத் தற்போது அறிந்துகொண்டதால் விஜய் மல்லையாவைத் தடுத்து நிறுத்திப் பிடித்துவைக்க வேண்டும் என்பது தேவையில்லை என்கிறது கடிதம்.
இந்தக் கடிதம் அப்போதைய மத்தியப் புலனாய்வு அமைப்பின் எஸ்பி பதவியில் இருந்த ஹர்ஷிடா அட்டாலுரி என்பவரால் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. மும்பை ஐபிஎஸ் அதிகாரி அஸ்வதி தோர்ஜே என்பவருக்கு அது அனுப்பப்பட்டிருக்கிறது.
“குடி அகல் அதிகாரிகளுக்கு ஒரு பயணி வெளிநாடுகளுக்கு போகும்போதும் இந்தியாவுக்குள் வரும்போதும் முன்னதாகவே தகவல்கள் வராது என்ற கருத்து எங்களுக்கு இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட பயணி இந்தியாவை விட்டுப் போகும்போதும் வரும்போதும் குடிஅகல் அதிகாரிகளின் மேஜை முன்பாக வரும்போது மட்டும்தான் எங்களுக்கு தகவல்கள் தரப்படும். அதனால் நாங்கள் ‘அந்த நபர் தடுத்துப்பிடித்து வைக்கப்பட வேண்டும்’ என்று அவர் தொடர்பான தேடுதல் அறிவிப்பிலும் அதோடு இணைக்கப்பட்டிருக்கிற கடிதத்திலும் குறிப்பிட்டோம்” என்கிறது அந்தக் கடிதம்.
ஐந்து வாரங்களுக்குள் தேடுதல் அறிவிப்பின் தீவிரத்தன்மை குறைக்கப்பட்டது. இதுபோல, முன்னெப்போதும் நடந்ததில்லை. இது பற்றிப் பேசுகிறபோது “ஒரு பயணி பற்றிய விவரங்கள் உங்களின் தரவுகளிலும் ஆவணங்களிலும் முன்னதாகவே கிடைக்கும் என்பது எங்களுக்குத் தற்போது தெரியவந்திருப்பதால் எங்களது தேடுதல் அறிவிப்பின் பிற்சேர்க்கையின் வாசகங்களை நாங்கள் மாற்றியமைத்திருக்கிறோம். தற்போதுள்ள நிலையில் எங்களுக்கு அந்தப் பயணியைத் தடுத்து நிறுத்திப் பிடித்துவைப்பது என்பது தேவைப்படவில்லை… ”
இது தொடர்பாகப் பேச சிபிஐ அதிகாரிகள் அட்டலூரி, அவருக்கு மேலதிகாரியான உதவி இயக்குநர் ஏ.கே. ஷர்மா ஆகியோரை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அவர்கள் அழைப்புகளுக்கோ குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிக்கவில்லை.
மத்தியப் புலனாய்வுத் துறை தனது தேடுதல் அறிவிப்பின் தீவிரத் தன்மையைக் குறைத்துக்கொண்டது என்பது நிலைமையை மதிப்பிடுவதில் ஏற்பட்ட தவறு என்று பிடிஐ மத்திய அரசின் செய்தி நிறுவனமான பிடிஐ செப்டம்பர் 13 அன்று தெரிவித்தது. அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மத்தியப் புலனாய்வு அமைப்பு ஒரு அறிக்கை விடுத்தது. அதில் “விஜய் மல்லையாவை தடுத்து நிறுத்திப் பிடித்து வைக்கவோ அல்லது கைது செய்யவோ தேவையான போதுமான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் மல்லையாவுக்கு எதிரான தேடுதல் அறிவிப்பில் மாற்றம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரிது சாரின்
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: த.நீதிராஜன்