ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் மூன்றாம் பகுதி இது.
எஸ்கியூஆர்கள் ஏற்கப்பட்ட பிறகும், வகைப்படுத்தல் குழு கொள்முதல் மேற்கொள்ளப்படுவதற்கான வழி அல்லது வகையைப் பரிந்துரைத்த பிறகும் பாதுகாப்புக் கொள்முதல் குழுவிடமிருந்து (டிஏசி) தேவைக்கான ஏற்பு (ஏஓஎன்) வழங்கப்படுகிறது. இந்த ஏஓஎன், அனுமதிக் குறிப்புகள், எண்ணிக்கை, மற்றும் கொள்முதலுக்கான வகைப்படுத்தல் ஆகியவற்றை உறுதியாகத் தெரிவிக்கிறது. ஏஓஎன் வழங்கப்பட்ட பிறகு அதில் உள்ள அம்சங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்பு பூஜ்ஜியமே. எண்ணிக்கையில் மாற்றம் தேவை எனில், புதிய எஸ்கியூஆர் மற்றும் ஏஓஎன் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். வகைப்படுத்தலில் மாற்றம் செய்ய வேண்டும் எனில் வகைப்படுத்தல் குழுவின் புதிய பரிந்துரை மற்றும் புதிய ஏஓஎன் மூலம் மட்டுமே சாத்தியம். சாதனங்கள் மீது இப்போது சொல்லப்படும் இந்தியா தொடர்பான குறிப்புகளை சேர்ப்பது என்றாலும் கூட அதை புதிய எஸ்கியூஆர் (சேவைகளின் தரம் சார்ந்த தேவைகள்) மற்றும் ஏஓஎன் (தேவைக்கான ஒப்புதல்) மூலமே மேற்கொள்ள முடியும்.
இத்தகைய கடினமான நெறிமுறைகள், உள்நோக்கம் கொண்டவர்கள், ஊழல் அதிகாரிகள், இடைத்தரகர்கள், அரசியல்வாதிகள், சேவைகள் தலைமை நிலையம் உரிய ஆலோசனை ,வழுமுறைகளுக்கு பின் வகுக்கும் தேவைகள் மற்றும் குறிப்புகளில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருப்பதற்காக தான். வெண்டர்கள் ஏதேனும் மேம்பாடுகளை புதிதாக வழங்கினால் ஐஏஎஃப் அதை பரிசீலித்து, பொருத்தமாக இருந்தால் எஸ்கியூஆர் மற்றும் ஏஓஎன் பெறப்பட வேண்டும். அதன் பிறகு மட்டுமே, ஏதேனும் இந்தியா தொடர்பான குறிப்புகளை கொள்முதல் செய்ய முடியும். புதிய ஒப்பந்ததிற்கான எஸ்கியூஆர் மற்றும் ஏஓஎன் பெறப்பட வேண்டும் என்பதால் ஏற்கனவே உள்ளவை பொருந்தாது. இதன் காரணமாக கீழ்கண்ட கேள்விகள் எழுகின்றன:
- புதிய ஒப்பந்தம் பற்றி ஐஏஎஃப் தலைவருக்கு எதுவும் தெரியாது என்பதால், 36 விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த முன்னெடுப்பு ஐஏஎஃப் சேவைகள் தலமை நிலையத்தில் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. எனில் இது எங்கிருந்து வந்தது? 36 விமானங்கள் தேவை என ஐஏஎஃப் குறிப்பிடும் எஸ்கியூஆர் இருக்கிறதா? இது, 36 விமானங்களை ஐஏஎஃப் வாங்க ஒப்புக்கொள்வதற்கு முன்னரா அல்லது பின்னர் அளிக்கப்பட்டதா?
- முந்தைய ஏஓஎன்னிலிருந்து எந்த விலகலுக்கும் புதிய ஏஓஎன் தேவை எனும் நிலையில், வாங்கி, எச்ஏஎல் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்வது எனும் வகைப்படுத்தலை, டசால்ட் ஏவியேஷனிடமிருந்து பறக்கும் நிலையில் 36 விமானங்களை வாங்குவதாக மாற்றி அமைத்த, இந்த அறிவிப்பிற்கு முன், பாதுகாப்புக் கொள்முதல் குழுவிடமிருந்து புதிய ஏஓஎன் பெறப்பட்டதா? இந்தப் புதிய ஒப்பந்த அறிவிப்புக்கு முன், வகைப்படுத்தல் குழுவின் பரிந்துரை என்ன? இத்தகைய புதிய ஏஓஎன் இருக்குமானால் அதன் தேதி என்ன? வகைப்படுத்தல் குழுவின் பரிந்துரை என்ன?
- எஸ்கியூஆர், வகைப்படுத்தல் குழு பரிந்துரை மற்றும் அதன் விளைவான ஏஓஎன்னில் சொல்லப்படும் இந்தியா தொடர்பான குறிப்புகள் கொள்முதல் தொடர்பாக இருக்கின்றனவா? மேலே சுட்டிக்காட்டியபடி, ஏதேனும் மேம்பாடுகள் உள்ளிட்ட அனைத்து மூலதனக் கொள்முதல்கள் எஸ்கியூஆர் மற்றும் ஏஓஎன் தேவை கொண்டவர் என டிபிபி தெரிவிக்கிறது. இந்தியா தொடர்பான குறிப்புகளுக்கான ஏஓஎன் (தேவைக்கான ஒப்புதல்) அளிக்கப்பட்ட தேதி என்ன?
அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பாக உள்ள உரிமை தொடர்பாக: அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பான அரசின் உரிமை என்பது போட்டி மிக்க அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதா அல்லது அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை நாடுவதா என தீர்மானிப்பது மட்டுமே ஆகும். அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம், வெண்டரைத் தேர்வு செய்யும் உரிமையை அரசுக்கு அளிக்கிறது. கொள்முதல் செய்யப்படும் எண்ணிக்கை அல்லது வகைப்படுத்தல் அல்லது எற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தேவையில் மேம்பாடு செய்வது ஆகியவை அரசின் உரிமை அல்ல. அரசால் காரணங்களை விளக்க முடியாத நிலையில், 2015 ஏப்ரல் 10ஆம் தேதி, பிரதமர் மோடி, அனைத்து வழிமுறைகளையும் அலட்சியம் செய்து ஐஏஎஃப் மற்றும் வகைப்படுத்தல் குழுவிடம் உள்ள அதிகாரத்தை மீறியுள்ளார்.
வாங்கப்பட வேண்டிய எண்ணிக்கையைக் குறிப்பிடுவது மற்றும் மேற்கொள்ள வேண்டிய வகைப்படுத்தலை, அதாவது மேக் இன் இந்தியா இல்லாமல் உலக அளவில் வாங்குவது எனும் வாய்ப்பைக் குறிப்பிட்டதன் மூலம், அவர் பல அமைப்புகளின் அதிகாரத்தை மீறி, அவை சட்ட விரோதமாக முன் தேதியிட்ட முடிவை பின்னர் எடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளார்.
ஜேட்லி தனது பேஸ்புக் அறிக்கையில், 2015 மே 13 அன்றுதான் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் (டிஏசி) ஒப்புதல் பெறப்பட்டது என்கிறார். அதாவது 2015, ஏப்ரல் 10ஆம் தேதி ஏற்கனவே கூட்டறிக்கை வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குள் இந்த முடிவு, ஏற்கனவே எண்னிக்கை, குறிப்புகள், மேம்பாடு மற்றும் வகைப்படுத்தல் தொடர்பான பல்வேறு அமைப்புகளின் அதிகாரத்தை மீறி, செயலற்றத்தாக்கிவிட்டதை விளக்கமாகப் பார்த்துள்ளோம். போட்டி மிக்க அணுகுமுறை அல்லது ஒப்பந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அரசு தீர்மானிப்பதற்கு முன், ஏஓஎன் முடிவு எடுக்கும் அதிகாரத்தின் மீதான தலையீடாகும் இது. 2015, மே 13க்குப் பிறகு, டிஏசியின் ஏஓஎன்னுக்குப் பிறகு ஒப்பந்த பேரக் குழு விலை பற்றிப் பேசியதாக ஜேட்லி தெரிவிக்கிறார். இந்தியா தொடர்பான மேம்பாடுகளுக்கான குறிப்புகளுக்கான இரண்டாவது அனுமதி பற்றி எந்தத் தகவலும் இல்லை.
2015, மே 13இல் ஏஓஎன்னில் ஏற்கனவே இந்தியா தொடர்பான மேம்பாட்டுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 2016இல் மக்களவையில் அரசு தாக்கல் செய்த அறிக்கையிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். இதில் விமானம் ஒன்றின் விலை ரூ.670 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது. சேவைகள், சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் உள்ளடக்கியது. இதை ஊடகச் செய்திகளும் உணர்த்துகின்றன.
IV
பணி ஒப்படைப்பு தொடர்பான பொய்கள்
ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி, மற்றும் ஜேட்லி, 2018 ஆகஸ்ட் 20 அன்று வெளியிட்ட அறிக்கையில் கீழ்கண்ட பொய்களைக் கூறியுள்ளனர்:
- வெளிப் பங்குதாரரைத் தேர்வு செய்வதில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. டசால்ட் தனது விருப்பபடி பங்குதாரரைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
- பணி ஒப்படைப்பு பங்குதாரர் தொடர்பான தேவை 2019 செப்டம்பரிலேயே எழும் என்பதால் இந்திய பணி ஒபப்டைப்பு பங்குதாரர் தொடர்பாக அரசுக்குத் தெரியாது. அந்தக் காலகட்டத்தில்தான், டசால்ட் பங்குதாரர் பற்றி அரசிடம் தெரிவிக்கும்.
- ரபேல் முழுவதும் பிரான்சில் தயாரிக்கப்படும் ஒரு ஸ்குருகூட இந்தியாவில் பொருத்தப்படாது என்பதால், பாதுகாப்பு உற்பத்தியில் ரிலையன்ஸ் அனுபவமின்மை எனும் கேள்வி எழவில்லை.
எங்களுக்கும் எதுவும் தெரியாது: 2019இல்தான் பங்குதாரர் தொடர்பான தகவல் வெளியிடப்பட வேண்டும் என்பதால், ரிலையன்ஸ் டிபெனஸ் இந்திய பணி ஒப்படைப்பு பங்குதாரராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பாதுகாப்பு அமைச்சகத்திற்குத் தெரியாது எனப்து முழுப் பொய்யாகும். பணி ஒப்படைப்பு தொடர்பான 7.2. ஷரத்து, பிரதான தொழில்நுட்ப மற்றும் வர்த்தகக் கொள்முதலுக்கான கோரிக்கை சமர்பிக்கப்பட்டதும், 12 வாரங்களுக்குள் தொழில்நுட்ப மற்றும் வர்த்தகப் பணி ஒப்பந்தக் கோரிக்கைகள் சமர்பிக்கப்பட வேண்டும் என்றும், தொழில்நுட்ப மற்றும் வர்த்தகப் பணி ஒப்படைப்புக் கோரிக்கைகள் இணைப்பு II, இணைப்பு III முதல் இணைப்பு டி வரை உள்ள வடிவத்தில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறது. இரண்டு வடிவங்கலும் இந்தியப் பணி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களுக்கான பணி விகிதம் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.
வரைமுறைகளின் 8.4ஆவது ஷரத்து “வர்த்தகப் பணி ஒப்பந்த வாய்ப்பானது, மொத்தப் பணி ஒப்பந்த அம்சத்தின் குறிப்பிட்ட தன்மைகளை, விவரங்கள், காலம், ஐஒபி (Indian Offset Partner – IOP) ஆகியவற்றோடு தெளிவாக குறிப்பிட்டிருக்கும். பாதுகாப்புப் பணி ஒப்பந்த நெறிமுறைகள் 2.4ஆவது ஷரத்து, “பிரதான ஒப்பந்ததுடனனே, பணி ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்” எனக் குறிப்பிடுகிறது.
இந்த மூன்று ஷரத்துகளையும் ஒன்றாகப் படித்தால், ஐஒபி பணி விகித விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை டசால்ட் பாதுகாப்பு அமைச்சகத்திற்குப் பணி ஒப்பந்த நிறைவேற்றக் காலத்தில் வழங்க வேண்டும் என்பது புரியும். பிரதான ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்போதே இதை மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவு. அரசும் அம்பானியும் இப்போது இது தங்களுக்குத் தெரியாது என கூறுவது தவறு; கட்டாய நெறிமுறைகளின் தேவைகளின் முன் இந்தக் கூற்று நிற்காது.
அரசு இந்தப் பொய்யைக் கூறிவருவதன் காரணம், பிரதமரே எடுத்த முடிவின் விளைவாக ரிலையன்ஸ் டிபன்ஸ் மோசடியான முறையில் இந்தியப் பணி ஒப்பந்தமாகத் தேர்வு செய்யப்பட்டு, அதன் விளைவாக எச்ஏஎல் வெளியேற்றப்பட்டதிலிருந்து திசை திருப்புவதற்குத்தான்.
ரிலையன்ஸ் டிபன்ஸ், பணி ஒப்பந்த நிறுவனமாக மோசடியான முறையில் தேர்வு செய்யப்பட்டதில் பிரதமரின் பொறுப்பை திசை திருப்புவதற்காக, ஜேட்லி, “எந்த ஓஇஎம்மும் எத்தனை இந்தியப் பங்குதாரர்களை வேண்டுமானால் தேர்வு செய்யலாம், இதற்கும் இந்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, எனவே ஏதோ ஒரு தனியார் நிறுவனம் அரசால் பலன் பெற்றதாகக் கூறுவது முழுப் பொய்” என்று கூறினார். நாம் முன்னர் சுட்டிக்காட்டியபடி, பணி ஒப்பந்த நெறிமுறைகள் தொடர்பான 8.6 ஷரத்து, “அனைத்துப் பணி ஒப்பந்தக் கோரிக்கைகளும் கொள்முதல் மேலாளரால் பரிசீலிக்கப்பட்டு மத்திய அமைச்சரால் ஏற்கப்படும்” என்று தெரிவிக்கிறது.
மேலும், ஷரத்து 8.11, “டிஓஎம்டபிள்யூ (டிபன்ஸ் ஆப்செட் மேனஜ்மெண்ட் விங்) பணி ஒப்பந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தேவை என நினைத்தால், பணி ஒப்பந்தப் பங்குதாரரை மாற்றவும் பரிந்துரைக்கலாம்” என வழி செய்கிறது. விமானங்கள் தயாரிப்பில் தனது குழுமத்திற்கு அனுபவம் இல்லை என அம்பானி ஒப்புக்கொண்டிருக்கிறது. அவர்கள் பாதுகாப்புத் தயாரிப்பில் நுழைந்த ஒரு திட்டமான, பிபாவாவ் ஷிப்யார்ட் திட்டம், தாமதத்தால் பாதிக்கப்பட்டு, கடற்படை ரோந்து வாகனங்களை அளிக்க முடியாமல் அந்நிறுவனம் திணறுகிறது. இந்நிறுவனத்தின் சுயேச்சை தணிக்கையாளர்கள் பதக் எச்டி அண்ட் அசோசியேட்ஸ் அனில் அம்பானி நிறுவனம் எதிர்காலத்தில் நிலைத்திருக்குமா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறியது. செபிக்கான தகவலில் நிறுவனம் இதைக் குறிப்பிட்டுள்ளது.
தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயம் முன் திவால் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் நீதிமன்றத்தின் முன், கடன் தொகை கோருபவர்களால், வைண்டிங் அப் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றையும், இந்நிறுவனம் முன்வைத்துள்ள தொடர் பொய்களையும் பார்க்கும்போது, ரிலையன்ஸ் எப்படி டசால்ட்டிற்குப் பொருத்தமான பணி ஒப்பந்தப் பங்குதாரராக இருக்கும் என்றும், எதன் அடிப்படையில் ரிலையன்ஸுக்கு ஐஓபி அந்தஸ்தை மத்திய அமைச்சர் வழங்கினார் என்பது குறித்தும், 8.11 ஷரத்தின் கீழ் ஐஓபி மாற்றத்தைக் கோரவில்லை என்பது தொடர்பாகவும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
2015, ஜூலை 24ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு குறித்து அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு நினைவுபடுத்துவதும் நல்லது. “பாதுகாப்புத் துறைக்கான வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அதன்படி, மொத்த வெளிநாட்டு முதலீடு 49 சதவீதம் அரசு வழி மூலம் (எப்ஐபிபி) அனுமதிக்கப்படும். 49 சதவீதத்திற்கு மேல் எனில் பாதுகாப்புக்கான கேபினட் குழு (சிசிஎஸ்), நாட்டுக்கு நவீன மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பெற வழிசெய்யும் எனும் நிலையில், ஒவ்வொரு நிகழ்வின் அடிப்படையில் அனுமதி அளிக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. . இதன் பொருள், நிதி அமைச்சராக ஜேட்லி, ரிலையன்ஸ் மற்றும் டசால்ட் இடையிலான கூட்டு நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பதாகும். ஜேட்லியும் அரசும் டசால்ட்டின் இந்தியப் பணி ஒப்பந்த பங்குதாரர் பற்றி அறிந்திருக்கவில்லை.
கூட்டறிக்கை தனது 2017 பிப்ரவரி செய்திக் குறிப்பில் பணி ஒப்பந்தம் மூலம் ஆயிரக்கணக்கான கோடி பலன் பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அது அனுமதி அளிக்கும் எப்ஐபிபி திட்டங்கள் குறித்து மற்றும் பாதுகாப்புத் துறை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையில் வெளிநாட்டு மூலதனத்தின் நோக்கம் குறித்து நிதி அமைச்சகத்திற்கு எதுவும் தெரியாதா எனும் கேள்வி எழுகிறது. மேலும், மேலே பார்த்தபடி, பணிப்பந்தம் 8.8 ஷரத்தின்படி, வெண்டர், – இந்த இடத்தில் டசால்ட், – “டிஓஎம்டபிள்யூவுக்கு ஆறு மாதாந்திர அறிக்கைகளைச் சமர்பிக்கும்”. இந்த அமைப்பு “இதன் நிறைவேற்றம் தொடர்பான நிலையை உறுதி செய்ய நியமன அதிகாரி அல்லது அமைப்பு மூலம் தணிக்கை நடத்தும்”. இந்த அறிக்கைகளை டசால்ட் சமர்பித்துள்ளதா? எனில் தேவையான தணிக்கையை மேற்கொள்ள அரசைத் தடுப்பது எது? மீண்டும், ஷரத்து 8.17, “கொள்முதல் பிரிவு ஆண்டுதோறும் ஜூன் மாதம், தனது ஆண்டு அறிக்கையை டிஏசியிடம் சமர்பிக்கும். இதில் முந்தைய ஆண்டில் கையெழுத்தான பணி ஒப்பந்தத்தின் விவரங்கள் மற்றும் அனைத்துப் பணி ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் நிலை குறித்துத் தகவல் அளிக்க வேண்டும்” என்கிறது.
இந்தியப் பணி ஒப்பந்தப் பங்குதாரர் குறித்து அரசுக்குத் தெரியாது என்பது, எச்ஏஎல்லை வெளியேற்றிய பிறகு, ரிலையன்ஸ் டிபன்சை டசால்ட் பங்குதாரராக மோசடியான முறையில் பரிந்துரைத்த பிரதமரின் தனிப்பட்ட பொறுப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பப் புனையப்பட்ட பொய்யே ஆகும்.
(தொடரும்)