ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் நான்காம் பகுதி இது.
அண்மையில், இந்தியாவில் ஏகே -103 உற்பத்திக்கான கூட்டு நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் முன்வைத்த அடானி நிறுவனத்தின் பெயரை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்ததையும், “அடானிதான் பங்குதாராகத் தேவை என வலியுறுத்தினால் டெண்டர் முறையில் வர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில், பணி ஒப்பந்தப் பங்குதாரர் தேர்வில், குறிப்பாக ரபேல் ஒப்பந்தத்தில் அரசு தன் கடமையைக் தட்டிக்கழித்தது வழக்கத்திற்கு விரோதமானது.
கருவூலத்தைச் சுரண்டுதல்: இந்தியாவில் உற்பத்தி செய்வது (அல்லது அப்படிச் செய்யாதது) தொடர்பாக 2018 செப்டம்பர் 5இல் ஜேட்லி, இந்தியாவில் ஒரு ஸ்கூருகூடப் பொருத்தப்படாது என்று கூறினார். . பழைய ஒப்பந்தத்தில் எச்ஏஏ இந்தியாவில் 108 விமானங்களைத் தயாரிக்கும் எனும் நிலைக்கு மாறாக, மோடியின் புதிய ஒப்பந்தத்தில் ஒரு ஸ்கூருகூட இந்தியாவில் பொருத்தப்படாது என அவரது நிதி அமைச்சர் பெருமிதம் கொள்வது மோடியின் பிரபலமான மேக் இன் இந்தியா திட்டத்தின் தனிச்சிறப்பாக அமைகிறது. அரசு மற்றும் அம்பானி மேற்கொண்டுள்ள இந்தப் புதிய வாதத்தில் உள்ள பொய், மிஹான் சிறப்புப் பொருளாதார மணடலத்தில் கூட்டு நிறுவனத்திற்கான துவக்க விழா தொடர்பாக ரிலையன்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அம்பலமாகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் கலந்துகொண்டனர். 2010 அக்டோபர் 10 அன்று ரிலையன்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு, “கூட்டு நிறுவனமான டிஏஆர்எல்லின் கீழ், இந்த ஆலை பிரான்சின் 36 ரபேல் விமானங்களுக்கான பணி ஒப்பந்த அம்சங்களின் கீழ் பல்வேறு பாகங்களைத் தயாரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், “வரும் ஆண்டுகளில் ரபேல் விமானங்களை அசம்பிள் செய்வதற்கான முதல் படிகளாக இது அமையும்”.
இப்போது வசமாகச் சிக்கிக்கொண்டதால் அனில் அம்பானி, 2018 ஆகஸ்ட் 20ஆம் தேதி, “ரபேல் 36 விமானங்களுக்காக ஒரு ரூபாய் மதிப்புள்ள ஒரு பாகம்கூட ரிலையன்சால் தயாரிக்கப்படவில்லை. அனுபவமின்மை தொடர்பான புகார்கள் அர்த்தமில்லாதவை” என்று கூறியுள்ளார்.
இது கேலிக்குரிய ஏய்ப்பாகும். “தகுதி உடைய பொருட்கள் மற்றும் தகுதி உடைய சேவைகள் தொடர்பாகப் பணி ஒப்பந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படலாம்” எனப் பணி ஒப்பந்த நெறிமுறைகள் ஷரத்து 2.2 தெரிவிக்கிறது. இந்தத் தகுதி உடைய சேவைகள் மற்றும் தகுதி உடைய பொருட்கள் பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறையின் இணைப்பு 6 முதல் அட்டவணை டி முதல் அத்தியாயம் 2 வரை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை எல்லாமே மிகவும் தொழில்நுட்பத்தன்மை மிக்க, சிக்கலான, பொருட்கள் மற்றும் சேவைகளாகும். இவற்றுக்கு அனுபவம் முக்கியம்.
அதாவது, இந்தப் பொருட்கள், ஹாவிட்சர்களாக, டோர்படோக்களாக, கவச வாகனங்களாக, போர் வாகனங்களாக, விமானங்கள், ஆயுத அமைப்புகளாக, சிவில் விமானப் பரப்புச் சேவைகளாக இருக்கின்றன. ரபேல் ஒப்பந்தம் மூலமான பணி ஒப்பந்தம் என்பது இந்திய வரலாற்றில் மிகப் பெரிய பணி ஒப்பந்தம். பாதுகாப்புத் துறையில் அனுபவம் உள்ள எச்ஏஎல் போன்ற சரியான நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டால், நம்முடைய பாதுகாப்பு உற்பத்தித் திறனை மேம்படுத்தக்கூடியதாக இது அமையும்.
இந்த மகத்தான வாய்ப்பு, கடனில் தவிக்கும் ஒரு நிறுவனத்திடம். திட்டங்களை முடிக்கும் செயல்பாடு இல்லாத, பாதுகாப்பு உற்பத்தியில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு நிறுவனத்திடம், தூக்கிக் கொடுக்கப்பட்டதன் மூலம் வீசி எறியப்பட்டுள்ளது. அம்பானிக்கு எந்த அனுபவமும் இல்லை எனில், அவர் ஒரு ஸ்கூருவைக்கூடப் பொருத்தப்போவதில்லை எனில், இந்நிறுவனம் ஏன் டசால்ட் பங்குதாரராகத் தேர்வு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான கோடிகள் பலன் பெற உள்ளது எனும் கேள்வி எழுகிறது. இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் கமிஷன் அன்றி வேறு என்ன?
V
அவசரம் தொடர்பான கட்டுக்கதை
அரசைக் காப்பாற்றுவதற்கான சமீபத்திய கட்டுக்கதை என்பது, அவசரச் சூழல் உண்டாகி, 2014இல் விமானப் படை 36 விமானங்களைக் கோரியது என்றும், பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறை அவசரத் தேவைகளின்போது, விரைவு நடவடிக்கைக்கு வழிவகுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் பொய், 2014, ஆகஸ்ட் 8ஆம் தேதி அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துக்கள் மூலம் அம்பலமாகிறது . ஜேட்லி கூறியதாவது:
“ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து 18 நேரடி பறக்கும் விமானங்கள் 3 முதல் 4 ஆண்டுகளில் வழங்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் எஞ்சிய 108 உரிம விமானங்கள் அடுத்த ஏழு ஆண்டுகளில் தயாராகும்”.
அவரது அறிக்கையிலிருந்து, அரசு முதல் ஒப்பந்தத்தை செயல்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. இரண்டாவதாக, சில மாதங்கள் கழித்து பாரீசில் பிரதமர் தானாகச் செயல்பட்டு ஒப்பந்தத்தை மாற்றும் நிலையை ஏற்படுத்திய அவசர நிலை தொடர்பான எந்த குறிப்பும் இல்லை.
மேலும், விரைவு நடவடிக்கை செயல்முறை இருக்கவே செய்கிறது. அதன் விவரம்:
“அவசரச் செயல்முறைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான எப்டிபி ஏற்பு, தொடர்புடைய எஸ்எச்யூக்கள் (Service Head Quarters – SHQ) கொண்டுவரும், அதன் தலைவர்கள் அனுமதி பெற்ற கோரிக்கைகள் அடிப்படையில் மத்திய அமைச்சர் தலைமையிலான சிறப்பு டிஏசி கூட்டத்தில் அங்கீகரிக்கப்படும். இந்தக் குழுவானது, முப்படை அமைப்பின் தலைவர்(கள்), பாதுகாப்புச் செயலர், செயலர் (பாதுகாப்பு உற்பத்தி), இயக்குனர் ஜெனரல், (கொள்முதல்), பாதுகாப்பு செயலர் (நிதி), செயலர் (ஆய்வு), எச்கியு ஐடிஎஸ் (சி.ஐ.எஸ்.சி) மற்றும் தேவை எனில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். சிறப்பு டிஏசிக்கான தலைமைச் செயலகம்போல் செயல்படக்கூடிய எச்கியூ ஐடிஎஸ் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்கும். கோரிக்கை நகல் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும். உத்தேசிக்கப்பட்ட தேவையானது, தவிர்க்க இயலாத செயல்முறை சூழல் அல்லது எச்சரிக்கை எதுவும் இல்லாத நெருக்கடி தொடர்புடையதாக இருக்க வேண்டும். தெரிவிக்கப்படும் கோரிக்கைகள், தேவைப்படும் பொருட்கள், அவற்றின் எண்ணிக்கை, கொள்முதல் வழி, செயல்முறை தேவைகள், சேவைக்கான தரம் சார்ந்த தேவைகள் (எஸ்கியுஆர்) மற்றும் காலத்தைக் குறிப்பிட வேண்டும்.”
இந்தத் தேவைக்கேற்ப, மூல முடிவை ரத்து செய்து, பறக்கத் தயாரான நிலையில் 36 விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை எதுவும் சமர்பிக்கப்படவில்லை. விரிவான ஆய்வு மற்றும் பரந்த விவாதங்களுக்குப் பின் முன்வைக்கப்பட்ட திட்டத்தைக் கைவிடுவதற்கான முடிவை மேற்கொள்ளப் பாதுகாப்புக் கொள்முதல் குழுவின் அவசரக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை.
மேலும், பாதுகாப்பு கொள்முதல் கொள்கை , “உத்தேசிக்கப்பட்ட தேவை, தவிர்க்க இயலாத செயல்முறைச் சூழல் அல்லது எச்சரிக்கை எதுவும் இல்லாமல் உருவான நெருக்கடி தொடர்புடையதாக இருக்க வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிடுகிறது. இத்தகைய எந்தச் சூழலும் உருவாகவில்லை.
இறுதியாக, இத்தகைய அசாதாரணமான கோரிக்கை, பல ஆண்டுகளாக வாங்கக்கூடிய 126 விமானங்களுக்கானது அல்ல. அவசர கால மோதல்களின்போது உருவாகக்கூடிய தேவைகளுக்கானது (உதிரி பாகங்கள், பிற பொருட்கள், செயல்முறை மூலதனம் போன்ற தேவைகள்).
முதல் ஒப்பந்தத்தில் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2017இல் பறப்பதற்குத் தயாரான 18 விமானங்கள் கிடைக்கும். தற்போதைய ஒப்பந்தத்தில், 2019க்கு முன் எந்த விமானமும் கிடைக்காது. எனவே, அவசரத் தேவை காரணமாக 36 விமானங்களை வாங்க முந்தைய ஒப்பந்தத்தை ரத்துசெய்தோம் என அரசு சொல்வது வசதியான புனைவாகும். விமானங்கள் இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட முடியாது என அரசுக்கு நிச்சயம் தெரியும். ஏனெனில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, 2014, ஆகஸ்ட் 8 அன்று நாடாளுமன்றத்தில், அனைத்து 18 விமானங்களையும் பறக்கும் நிலையில் வழங்க டசால்ட்டிற்கு 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் எனத் தெரிவித்தார். ஆக, பறக்கும் நிலையில் 18 விமானங்கள் வழங்க 4 ஆண்டுகள் ஆகும் எனில், 36 விமானங்களை எப்படி இரண்டு ஆண்டுகளில் வழங்க முடியும்? 36 விமானங்களை இரண்டு ஆண்டுகளில் வழங்க முடியும் எனும் வாதம் பொய்யாகும். இன்றுவரை ஒரு விமானம்கூட வழங்கப்படவில்லை என்பதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். முதல் விமானம் 2019 ஆண்டின் பிற்பகுதியில்தான் வழங்கப்படும். அதாவது 2015 ஏப்ரலில் மோடி அறிவித்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது நிகழும். மொத்த 36 விமானங்களும் வர 2022 ஆகிவிடும். 126 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்ந்திருந்தால் இதற்குள் விமானங்கள் வரத் துவங்கியிருக்கும் என்பதோடு, எச்ஏஎல் உற்பத்தியையும் துவங்கியிருக்கும்.
மேலும், ஒப்பந்தம் இறுதியாகக் கையெழுத்தான நிலையில் டசால்ட் நிறுவனம் பிரான்ஸுக்கும் பிற நாடுகளுக்கும் டெலிவரி செய்துவருகிறது. அவசரத் தேவை இருக்கிறது எனில், இந்தியாவுக்கு முதலில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியிருக்கலாமே?
முதல் ஒப்பந்தம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, 2019 செப்டம்பருக்கு முன்னதாக முதல் விமானம் வராது என்பது தற்போது தெரியவந்துள்ள நிலையில் 36 விமானங்களில் கடைசி விமானம் 2022இன் பிற்பகுதியில்தான் கிடைக்கும். இவை எல்லாமே, பழைய ஒப்பந்தத்தில் இருந்த மேம்பாடுகள் இல்லாதவை. சொல்லப்போனால் மேம்பாடுகள் 2022க்குப் பிறகுதான் பொருத்தப்படும். எனவே. அவசரத் தேவை என்பது மற்றொரு கட்டுக்கதை ஆகும்.
(தொடரும்)