தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அங்கிவ் பாய்சோயா தமிழகத்தின் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பலகலைக்கழகத்தில் 2013இலிருந்து 2016 வரை “பல்வேறு வகையான பாடப்பிரிவுகளைப்” படித்ததாகச் சொன்னார். ஆனால் அவரால் தன் இளநிலைப் பட்டப்படிப்பில் எந்தெந்தப் பாடப்பிரிவுகளைப் படித்தார் என்பதை மட்டுமல்லாமல் அவர் படித்தபோது, கல்லூரியில் துறைத் தலைவர்களாக இருந்த பேராசிரியர்கள் யாரேனும் ஒருவரின் பெயரைக்கூட நினைவுகூர முடியவில்லை.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் துணை அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினரான பாய்சோயாவுக்கு 23 வயது. இந்த ஆண்டு பெளத்தக் கல்வியில் முதுநிலைப் பட்டம் பயில்வதற்காக மாநிலப் பல்கலைக்கழகமான திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றதாகக் கூறப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களைக் கொடுத்து தில்லிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திடமிருந்து 2016இல் இளநிலைப் பட்டம்பெற்றதாகக் கூறுகிறார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தமிழகக் கிளையும் அதன் மாணவர்கள் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கமும் பாய்சோயா வெளியிட்ட ஆவணங்களை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பார்வைக்குக் கொண்டுசென்றனர். அந்தப் பல்கலையின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, பாய்சோயா அளித்த “சான்றிதழ் போலியானது” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் எதிர்க்கட்சியின் மாணவர் அமைப்பினரின் மோசடி வேலை என்கிறார் பாய்சோயா. “மாணவர் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக ஒரு சர்ச்சையைக் கிளப்ப முயன்றார்கள். ஆனால் அதில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. அதனால்தான் இப்போது என் பட்டப்படிப்பைப் பற்றி கேள்வி எழுப்புகிறர்கள். நான் அளித்த இந்த ஆவணங்களை சோதனைக்குட்படுத்தலாம். அதற்கு நான் முழுமையாக ஒத்துழைக்கத் தயார்” என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால்.என்.டி.டி.வி. ஊடகம் அங்கிவ் பாய்சோயா என்ற பெயரில் தங்கள் பலகலையில் யாருமே படித்ததில்லை என்று திருவள்ளுவர் பல்கலை அதிகாரிகள் கூறுவதாகச் சொல்கிறது.
இந்தச் சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தி அது போலியானவை என்று தெரிந்தால் அங்கிவ் பாய்சோயாவை கல்லூரியிலிருந்து நீக்குவது தில்லி பல்கலைக்கழகத்தின் கடமை என்கிறார் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் பொறுப்பாளரும் காங்கிரஸ் உறுப்பினருமான ருச்ஹி குப்தா. “(அவர் தில்லி மாணவர் சங்கத் தலைவர்) பதவியில் நீடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மாணவர் சங்கத்தினர் குறிப்பாக இடதுசாரிப் பின்புலம் கொண்டவர்கள் தில்லி பல்கலையிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி பெற்ற முதுநிலைப் பட்டத்தின் மீதும் இதேபோன்ற சந்தேகமும் சர்ச்சையும் தொங்கிக்கொண்டிருப்பதை குதூகலத்துடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால், மோடி விஷயத்தைப் போலவே இது பற்றியும் தில்லி பல்கலை அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. “ஊடகங்களிடமிருந்து பல அழைப்புகள் வந்துவிட்டன. ஆனால் பல்கலையிடமிருந்து ஒருவர்கூட என்னை அழைத்து நீங்கள் பெற்ற பட்ட போலியானது என்று சொல்லவில்லை” என்கிறார் பாய்சோயா.
தில்லி பல்கலைக்கழகத்தின் பெளத்தக் கல்வித் துறையில் பயில்பவர்கள் அதிகம் பேர் மாணவர் தலைவர்களாக உள்ளனர். இத்துறையின் தலைமைப் பேராசிரியர் கே.டி.எஸ். சரோ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசியது: “இதுவரை இது குறித்து எந்தப் புகாரும் வரவில்லை. புகார் அளிக்கப்பட்ட பிறகுதான் பட்டப்படிப்புச் சான்றுகளை சோதனைக்குட்ப்படுத்த முடியும். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்தச் சோதனை நடத்துவதற்கென்றே தனியாக ஒரு துறை உள்ளது.” ஆனால், புதன்கிழமை காலை, இந்திய தேசிய மாணவர் சங்கம் போலி பட்டப்படிப்புச் சான்றிதழ் கொடுத்ததற்காக பாய்சோயா மீது காவல் துறையிலும் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் புகார் அளிக்கப்போவதாக அறிவித்தது.
வேலூரில் வாழ்க்கை
பாய்சோயா வேலூரில் வாழ்ந்ததற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் வாயிலாக அவர் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் தில்லி பல்கலைக்கழகத்தின் நடந்த போராட்டங்களிலும் பிரச்சாரங்களிலும் பங்கேற்றிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் புகைப்பங்களில் அவரே பதிவேற்றியவை அல்லது மற்றவர்கள் பதிவேற்றி பாய்சோயாவின் பெயர் இணைக்க்ப்பட்டிருக்கிறது (டாக் செய்தல்).
உதாரணமாக 2014 அக்டோபர் 17 அன்று ஃபேஸ்புக்கில் அவர் ஒரு புகைப்படத்தில் டாக் செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் படம் தில்லி பல்கலைக்கழகத்தின் கலைக் கல்வி வளாகத்தில் நடந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தற்போதைய செயலாளர் பரத் கட்டனா, 2014 நவம்பர் 12 அன்று ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி அதில் பாய்சோயாவைத் டாக் செய்திருக்கிறார். ஆறு நாட்களுக்குப் பிறகு இன்னொரு புகைப்படம் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில் கட்டானாவையும் பாய்சோயாவையும் தெளிவாக அடையாளம் காண முடிகிறது. பாய்சோயா அப்போது ஒல்லியாக இருந்திருக்கிறார். இருவருமே பரிஷத் பெயர் கொண்ட அடையாளத்தைச் சுமக்கின்றனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் பல புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக 2016இல் மாணவர் தலைவர் பதவிக்கான பரிஷத்தின் வேட்பாளர் சதேந்த அவானாவின் பிரச்சாரத்தில் பங்கேற்று அவர் வெற்றிபெற பாய்சோயா உதவியதையும் அந்தப் புகைப்படங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
பாய்சோயா வேலூரில் இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை ஆனால் அவர் தில்லியில் நடந்த பிரச்சாரத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இருக்கின்றன. இது குறித்து கேள்வி எழுப்பியபோது “மேரா அப்-டவுன் ஹோதா ரேஹ்தா தா” (நான் வேலூரிலிருலிருந்து தில்லிக்கு அடிக்கடி வந்து சென்றுகொண்டிருந்தே) என்றார். ”பரீட்சைகளின்போதும் வகுப்புகள் இருக்கும்போதும் வேறு ஏதாவது முக்கியமான வேலை இருக்கும்போதும் மட்டுமே வேலூருக்குச் செல்வேன். மற்றபடி பெரும்பாலான நேரம் நான் தில்லியில்தான் இருந்தேன்” என்கிறார். அவர் வேலூர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி வழியாக பட்டப்படிப்பு படித்திருந்தால் அந்த நேரத்தில் அவர் தில்லியில் இருக்க நேர்ந்ததைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர் தான் முழுநேர வகுப்பில்தான் படித்ததாக வலியுறுத்திக் கூறுகிறார்.
வேலூரில் தனது மாணவர் பருவம் பற்றி அவருக்கு எதுவும் நினைவு இருப்பதாகத் தெரியவில்லை. என்னென்ன பாடப்பிரிவுகளைப் படித்தார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தைத் தவிர அவரால் எதைம் குறிப்பிட முடியவில்லை. “நான் ஆங்கிலத்திலும் திறன் அடிப்படையிலான பாடப் பிரிவுகளிலும் பல தேர்வுகளை எழுதினேன்” என்கிறார். வரலாறு அல்லது வேறெதாவது பாடப்பிரிவில் பட்டம் பெற்றாரா என்று குறிப்பிட்டுக் கேட்டபோது “நான் பல வகையான பாடப் பிரிவுகளைப் படித்தேன். திறன் அடிப்படையிலான பாடப் பிரிவுகள், பிரதானப் பாடங்கள், துணைப் பாடங்கள் என்றார். துறைத் தலைமைப் பேராசிரியர்கள் யாரையும் அவரால் நினைவுகூர முடியவில்லை.
இந்திய தேசிய மாணவர் சங்கத்தால் பகிரப்பட்ட அங்கிவ் போய்சாயாவின் மதிப்பெண் சான்றிதழ்கள் ஒன்றில் இந்த குழப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. அந்த மதிப்பெண் சான்றிதழ் மூன்றாவது பருவத்தில் (செமஸ்டர்) அவர் பெற்ற மதிப்பெண்களைப் பற்றியது. அதில் பாடப்பிரிவுகளுக்கு பதிலாக “கோர் தியரி, துணைப் பாடங்கள் 3, திறன் அடிப்படையிலான பாடப் பிரிவுகள்” என்ற வகுப்புகளின் பெயர்களே இடம்பெற்றுள்ளன. இந்த செமஸ்டர் 2014 மே மாதத்திலிருந்து 2015 ஜூன் வரை நடந்திருக்கிறது. கல்லூரிப் படிப்பில் ஒரு பருவம் ஒரு ஆண்டு காலம் நீடிக்க வாய்ப்பில்லை. அதையும் தவிர மூன்றாம் பருவம் முடியும் முன்பே அதாவது 2014 டிசம்பரிலேயே அதற்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தில் பாய்சோயாவின் பெற்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மதிப்பெண் சான்றிதழில் thiruvalluvaruniversity.ac.in என்ற இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பல்கலைக்கழகத்தின் சரியான இணையதள முகவரி www.tvu.edu.in. அதேபோல் சான்றிதழில் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ள பெயர்களில் பிழைகள் இருப்பதையும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தில்லி கல்லூரி
அதே நேரம் அந்தக் காலக்கட்டத்தில் பாய்சோயா தில்லி கல்லூரியுடன் தொடர்பில் இருந்ததாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் துப்புகள் கிடைக்கின்றன. செப்டம்பர் 2014இல் அவர் ஒரு பிரச்சாரப் புகைப்படத்தில் டாக் செய்யப்பட்டிருந்தார். அதில் அவரைத் தவிர அதில் டாக் செய்யப்பட்டிருந்தவர் வணிகவியல் மாணவரும் அப்போது தில்லி பல்கலைக்கழகத்தின் தொழிற்கல்விக் கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவருமான சுமித் யாதவ். 2015, 2016 ஆண்டுகளில் இந்தக் கல்லூரியின் பொருளியல் துறையின் மாணவர் பதிவேட்டில் அங்கிவ் பாய்சோயா என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. பிறகு இந்த ஆண்டு செப்டம்பர் 10 அன்று டியு பீட் என்ற பிரபலமான மாணவர் பத்திரிகை பரிஷத் குழுவைச் சேர்ந்த அனைவரைப் பற்றியும் தகவல்களைத் திரட்டி கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. அதில் பாய்சோயா தொழிற்கல்விக் கல்லூரியில் பொருளியல் பட்டம் பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், பரிஷத் அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருக்கிறது. இந்த சர்ச்சையை முடித்துவைப்பது தில்லி பல்கலைக்கழகத்தின் பொறுப்பு என்று கூறியுள்ளது. “அங்கிவ் பாய்சோயாவின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துவிட்டுத்தான் தில்லி பல்கலைக்கழகம் அவரை மாணவராகச் சேர்த்துக்கொண்டது. மேலும் எந்த ஒரு நபருக்கும் பட்டச் சான்றிதழ்கள் கொடுப்பது இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் வேலை அல்ல” என்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கிறார்.
ஷ்ரேயா ராய் சௌதுரி
நன்றி: ஸ்க்ரோல்.இன்
https://amp.scroll.in/article/894918/du-fake-degree-row-abvps-ankiv-baisoya-says-he-studied-several-types-of-subjects-in-vellore?__twitter_impression=true
Ha ha .. you had forgotten smrithi Irani … another fake certificate ,…. chaai vala modi another fake certificate ,…