அமெரிக்காவுக்கு 1950 களில் “ஆன்டி கம்யூனிஸ்ட் ஹிஸ்டீரியா” எனப்படும் மனக் குழப்ப நோய் பிடித்துக்கொண்டது. அதை மக்கார்த்தியிஸம் என்பார்கள். அரசாங்கத்தின் முதன்மைப் பிரச்சாரகராக ஜோசப் மக்கார்த்தி என்கிற செனட் உறுப்பினர் அப்போது இருந்தார்.
இடதுசாரிக் கருத்துகளின் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்று சந்தேகப்படுபவர்களைச் சிறையில் அடைத்தல், வேலைகளிலிருந்து பணிநீக்கம் செய்தல், அவர்களுக்கான கறுப்புப் பட்டியல்களை உருவாக்குதல், அவர்களைக் கொடுமைப்படுத்துவது, காவல் துறை புலனாய்வுகளுக்கும் நீதிமன்ற விசாரணைகளுக்கும் ஆட்படுத்துவது ஆகியவையே மெக்கார்த்திசம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளன.
எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடிய வாசகங்களைக் கொண்ட, தெளிவாக வரையறை செய்யாமல் உருவாக்கப்பட்ட சட்டங்களின் போர்வையில்தான் அத்தகைய நடவடிக்கைகள் நடந்தன.
பொதுமக்களின் மனப்போக்கைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாத நீதிபதிகளிடமிருந்துதான் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒப்புதல்கள் பெறப்பட்டன.
கடைசியில் மக்கார்த்தி அதிகாரத்தை இழந்தார். ஆனால் மக்கார்த்தியிசம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்களைக் கொடுமைப்படுத்துகிற தனிநபர்களையும் அரசை ஆதரிப்பவர்களைப் போல சிந்திக்காதவர்களைப் பார்த்தும், அரசுக்கு தீமை செய்யப்போகிறார்கள் அல்லது அரசை விமர்சிக்கப் போகிறார்கள் என்றும் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுகிற அரசுகளைக் குறிப்பிடுவதற்கான அடையாள வார்த்தையாகவும் அது மாறிவிட்டது.
நோய்க்கூறு அணுகுமுறை
சமகாலத்தில் ஜனநாயகம் நிலவுகிற நாடுகளில் இத்தகைய மக்கார்த்தியிஸப் போக்குகள் இன்னமும் தென்படுகின்றன.
அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கிற பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை குறித்த நோய்க்கூறு மனநிலை என்று இத்தகைய அரசுகளின் நடத்தை பற்றி அமெரிக்க சட்ட அறிஞர் வின்சென்ட் பிளாசி வரையறை செய்கிறார்.
பழமைவாத எதிர்ப்புக் கருத்துகள் சகிப்புத் தன்மை இல்லாமல் சமுதாயம் எங்கும் பரவியிருக்கிற வரலாற்றுத் தருணங்களில், எதிர்க் கருத்தை அமைப்புரீதியாக ஒடுக்குவதில் பெருமளவு சாதகமான நிலையிலும் அதைச் செய்யக்கூடிய நிலையிலும் அரசாங்கங்கள் இருக்கிறபோது,
நீதிமன்றங்கள் பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டும். அது சமூகத்துக்கு செய்கிற பெரிய சேவையாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் பிளாசி.
சட்டங்களும் அமலில் இருக்கிற சட்டங்களின் தொகுப்பும் அரசின் அமைப்புகளுக்கும் நீதிபதிகளுக்கும் விரிவான சிறப்பதிகாரத்தை அனுமதிக்கின்றன. நுணுக்கமான முறையில் சட்டத்துக்கு அவை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
குற்ற நடத்தைக்கும் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற நடத்தையின் அளவுக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டை நீதிமன்றக் கோட்பாடுகள் நிச்சயிக்கிறபோது அது குறிப்பானதாகவும் தெளிவானதாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அர்த்தம்.
இந்தப் பாதையின் வழியாக, சட்டத்தின் ஆட்சி என்பது தனிநபர் சுதந்திரத்தின் பாதுகாவலராக செயல்படும் என்று அவர் நம்பினார். அரசுக்கு எதிரான கருத்தை, தேச துரோகமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையால் அரசு அதிகாரம் தூண்டப்படுகிற இந்தக் காலத்தில் அரசின் மீதான கட்டுப்பாட்டு அழுத்தமாகவும் அது இருக்கும்.
சட்ட விரோதத் தடுப்புச் சட்டத்தின் (UAPA) விபரீதங்கள்
நக்சலிசத்துடன் தொடர்புள்ளவர்கள் என்ற அடிப்படையில் பல செயல்பாட்டாளர்களைக் கைது செய்திருப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிற வழக்கில், சட்டம் செயல்படுகிற போக்கை முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறது இந்த கருத்து.
பேராசிரியர் பிளாசியின் “நோய்க்கூறு அணுகுமுறை” என்ற விளக்கத்துக்கு ஏற்பவே இருக்கிறது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (UAPA).
இந்தச் சட்டத்தின் கொடூரமான பிரிவுகள் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஆறு மாதங்கள் வரை காவலில் வைத்திருப்பது, ஜாமீன் கிடைப்பதற்கு வழியே இல்லாமல் வைத்திருப்பது, இறுதியில் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை ஆனாலும் அதுவரை பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தாக வேண்டும் என்ற அளவில் தேவையற்ற முறையில் நீண்ட விசாரணைகளை ஆகியவை இந்தச் சட்டத்தில் உள்ளன.
ஒருவர் குற்றவாளி என்று அறியப்படுவதற்கு முன்பாகவே அவரது தனிநபர் சுதந்திரத்தை நீண்டகாலத்துக்கு முடக்கிவிடுவதற்குத் தேவையான அம்சங்கள் அந்தச் சட்டத்தில் இருக்கின்றன என்று மட்டும் சாதாரணமாக இந்தச் சட்டத்தை சொல்லிவிடமுடியாது. அதுதான் இந்தச் சட்டத்தின் பிரச்சினை. மேலும் கவலை தரக்கூடிய பல விவகாரங்கள் இந்தச் சட்டத்தில் உள்ளன. மிகவும் பொதுப்படையான, வெற்று வார்த்தைகள் அதில் உள்ளன. குற்றத்தையோ, குற்றம் செய்யாத நிலையையோ கண்டுபிடிப்பதில் அந்த வார்த்தைகளிடம் அசாதாரணமான அளவுக்குச் சிறப்பு அதிகாரம் குவிந்து கிடக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக வழக்கைக் கட்டியமைக்கிற அரசுத் தரப்பு வழக்கறிஞரிடமும் அந்த வழக்கைக் கேட்டு முடிவு செய்கிற விசாரணை நீதிபதியிடமும் இந்த சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பேராசிரியர் சாய்பாபா வழக்கு
நடைமுறையில் இது எப்படிச் செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள பேராசிரியர் ஜி.என். சாய்பாபா வழக்கை எடுத்துக்கொள்ளலாம். 2017 மார்ச்சில் அவரையும் அவரோடு மேலும் ஐந்து பேரையும் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கட்சிரோலி செசன்ஸ் நீதிபதி தண்டித்தார். பேராசிரியருக்கு ஆயுள்தண்டனை விதித்தார்.
அரசாங்கத்துக்கு எதிராகப் போர் தொடுத்தது, தடைசெய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சியிலும் அதன் முன்னணி அமைப்பான புரட்சிகர ஜனநாயக முன்னணியிலும் உறுப்பினராக இருந்தது, பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு பற்றிய விவாதங்களில் பங்கேற்றது, அரசாங்கத்தை விமர்சித்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்றது, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியது, அரசாங்கத்துக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு உதவுவதாகச் சொன்னவர்களில் ஒருவராக இருந்தது ஆகியவை அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. ஏற்கெனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற பல்வேறு துண்டறிக்கைகள் மற்றும் காணொளிக் காட்சிகளும் அவர் தடை செய்யப்பட்ட கட்சியில் உறுப்பினராக இருந்தார் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
கட்சிரோலி செஷன்ஸ் நீதிமன்றம் இத்தகைய ஆதாரங்களைத்தான் பேராசிரியர் சாய்பாபாவின் மாவோயிஸ்ட் இயக்கத் தொடர்புகளை நிரூபிப்பதற்கு பயன்படுத்தியது.
பேராசிரியர் சாய்பாபா பல்வேறு பெயர்களில் இயங்கினார் என்றது நீதிமன்றம். பிரகாஷ் எனும் மாற்றுத் திறனாளியின் கணினி ஹார்ட்டிஸ்க் இயங்காமல் போய்விட்டது என்று சில கடிதங்களில் ஒரு நக்சல் செயல்பாட்டாளர் குறிப்பிடுகிறார். சாய்பாபாவும் மாற்றுத் திறனாளி. அவரிடமிருந்து காவல் துறையினர் கைப்பற்றிய கணினியின் ஹார்ட் டிஸ்க்களில் ஒன்று இயங்கவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் பிரகாஷ் என்ற பெயரில் இயங்கியது சாய்பாபாதான் என்றது நீதிமன்றம்.
புரட்சிகர ஜனநாயக முன்னணியின் 2007 வருடத்திய கடிதத்தில் நாட்டின் சில பகுதிகளில் பேராசிரியர் சாய்பாபா செயல்பாட்டார் என்று உள்ளது. 2013 மாவோயிஸ்ட் ஆவணத்தில் சேட்டன் எனும் பெயரிலான ஒருவர் அந்தப் பகுதிகளில் பொறுப்பாகச் செயல்பட்டார் என்று உள்ளது. எனவே, சேட்டன் என்னும் பெயரில் செயல்பட்டது சாய்பாபாதான் என்றது நீதிமன்றம்.
செஷன்ஸ் நீதிமன்றம் ஆதாரங்களை ஆய்வுக்குட்படுத்திய முறையையும் அது வந்து சேர்ந்த முடிவையும் அதற்கு அடுத்த நீதிமன்றங்கள் பரிசோதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீதிபதி தன் முன்பு வைக்கப்பட்ட ஆதாரங்களை எவ்வாறு பரிசோதித்தார் என்பதல்ல முக்கியமான பிரச்சினை. நீதிபதிகள் ஆதாரங்களாக முன்வைப்பவற்றிலிருந்து ஒரேவீச்சில் முடிவுகளை எடுப்பதற்கு வசதியாகச் சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.
சட்டத்தின் மூன்று முக்கியமான சிக்கல்கள்
சாய்பாபா தீர்ப்பு பற்றி விமர்சிக்கிறபோது குற்றவியல் வழக்கறிஞர் அபினவ் சேக்ரி மூன்று விதங்களாக விளக்கினார்.
முதலாவதாக, “முன்னணி அமைப்பு” என்பதை சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்புச் சட்டம்) வரையறை செய்யவில்லை.
தடைசெய்யப்பட்ட ஒரு சட்ட விரோத அல்லது பயங்கரவாத இயக்கத்தின் “முன்னணி” என்று ஒரு அமைப்பை நிர்ணயிப்பது எப்படி என்பதை
இந்தச் சட்டம் வரையறுக்கவில்லை. அதில் உள்ள “தனிநபர்களின் எந்தக் குழுவாக” இருந்தாலும் என்னும் வரிகள் தெளிவற்றவை. இதை வைத்துக்கொண்டு எதையும் முறையாக வரையறுக்க முடியாது.
இரண்டாவதாக, அந்தச் சட்டத்தில் வேறுபட்ட பொருள்கள் தரும் பல சொற்கள் இருக்கின்றன.
சட்டப் பிரிவு 20, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர் ஆவதைக் குற்றம் ஆக்குகிறது. சட்டப்பிரிவு 38, இத்தகைய அமைப்புக்கு உதவி செய்வது அல்லது உதவுவதாக அறிவிப்பது ஆகியவற்றைக் குற்றம் ஆக்குகிறது.
ஆதரவையும் ஆதரவுக்காக அழைப்பு விடுப்பதும் ஆதரவு திரட்டுவதற்கான கூட்டத்தைக் கூட்டுவதும் குற்றங்கள் என்கிறது சட்டப் பிரிவு 39.
மூன்றாவதாக, சட்ட விரோதச் செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் ஆகிய இரண்டையும் இந்தச் சட்டம் தண்டிக்கிறது. ஆனால், வரையறைகள் இரண்டையும் கலக்கின்றன. பேராசிரியர் சாய்பாபா விவகாரத்தில் ஒரே நடத்தைக்கு இரண்டு வரையறைகள் மூலமாக தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நமது குற்றவியல் சட்ட முறைமையானது தனிநபர் பொறுப்பை அடித்தளமாக கொண்டிருக்கிறது. தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிற குற்றத்தைச் செய்திருப்பதால் நான் குற்றம் செய்தவன் ஆகிறேன். ஆனால், இந்தச் சட்டம் நம்மை மக்கார்த்தி காலத்துக்கு இட்டுச் செல்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்புகள், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் “முன்னணி” அமைப்புகள், “உறுப்பினர்”, “தொடர்பு”, “உதவுதல்”, “ஆதரவளிக்க வேண்டும் என அழைப்பது” என்பன உள்ளிட்ட குழப்பமான, புகைமூட்டமான சொல்லாடல்களை இது கொண்டிருக்கிறது. இது மக்கார்த்தி காலத்து அணுகுமுறை.
இந்தச் சொற்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். நீதிபதிகள் புனைப்பெயர்கள், சதிகள், ரகசிய குறியீடுகளை பார்ப்பதும், புத்தகங்கள், ஆவணங்களை எதிர்மறையானதாகப் பார்ப்பதும் ஆச்சரியமளிக்கிறது.
இத்தகைய தளர்வான மொழியையும், குழப்பமான சொற்களையும் வைத்துக்கொண்டு இந்தச் சட்டம் தனிநபர்கள் மற்றும் குற்றங்களைக் குழுக்கள் மற்றும் சித்தாந்தங்களாக அணுகும் சூழலை உண்டாக்குகிறது.
இத்தகைய சூழலை மாற்றக்கூடிய நீதித் துறை முயற்சிகள் சிலவும் நடந்திருக்கின்றன. செயலாற்றலோடு வன்முறையைத் தூண்டுவது என்பதையே உறுப்பினர் தன்மை என வரையறுக்க வேண்டும் (புத்தகங்களை வைத்திருப்பதோடும் கூட்டங்களில் பங்கேற்பதோடும் தொடர்புபடுத்தக் கூடாது) என்று உச்ச நீதிமன்றம் சொன்ன உதாரணமும் உண்டு. கபீர் கலா மஞ்ஞ் உறுப்பினர்களுக்கு ஜாமீன் தருவதற்கான தீர்ப்பின்போது மும்பை நீதிமன்றம் இத்தகைய நிலைபாட்டைக் கடைப்பிடித்தது. “சித்தாந்தம்” பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது என்னும் அரசுத் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இத்தகைய தீர்ப்புகள் குறைவாகவும் அரிதாகவும் வருகின்றன. தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரான அணுகுமுறையே வழக்கமானதாக இருக்கிறது. இது அடிப்படையில் மக்கார்த்தியிசத்தன்மை கொண்டது.
தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்பது பற்றிய விவாதத்தில் 1952இல் சியாமா பிரசாத் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். மிகவும் நெருக்கடியான சில சந்தர்ப்பங்களில் தடுப்புக் காவல் சட்டத்தை நியாயப்படுத்தலாம். ஆனால் இந்த நாட்டின் சட்டத்தின் சகஜமான ஒரு பகுதிபோல அதை மாற்றிக்கொண்டுவிட முடியாது என்றார் அவர்.
தற்போதைய அரசு, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் எதிர்க் கருத்தை நசுக்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த நிலைமையை மாற்றக் குடிமக்களும் நீதிமன்றங்களும் உறுதியேற்க வேண்டிய நேரம் இது. சட்ட விரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளை பேராசிரியர் பிளாசியின் “நோய்க்கூறு அணுகுமுறை” கோட்பாட்டின் வழியாக ஆய்வு செய்வது என்பது இதற்கான நல்ல ஆரம்பமாக இருக்கலாம்.
கவுதம் பாட்டியா
(கட்டுரையாசிரியர் கவுதம் பாட்டியா, டெல்லியில் வசிக்கும் ஒரு வழக்கறிஞர்)
நன்றி: தி இந்து
தமிழில்: த.நீதிராஜன்
https://www.thehindu.com/opinion/lead/guilt-by-association-and-insinuation/article24988742.ece
In Gujarat Ex IPS Officer Sanjiv Bhat Who is a vocal critic of BJP and Modi Govt. has been arrested in 22 years old case , when lower court refused police custody Gujarat HC gave 10 days police custody . After completion of 10 days when his lawyers tried to get signature for bail application they were not allowed to meet him . His wife has filed petition in SC stating the same SC has taken serious note of it and asked Guj. govt. to file its reply by Friday . Next Hearing is postponed to Oct 4th .