ஜனநாயக சமூகத்தில் ஏற்படுகிற மன அழுத்தத்தால் அந்த சமூகம் சிதறிவிடாமல் பாதுகாக்கிற வழிதான் எதிர்க்கருத்து என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நமக்கு நினைவூட்டியிருக்கிறார். ஆனால், எதிர்க்கருத்து என்பது அது மட்டுமே அல்ல. அர்த்தமுள்ள சமூக வாழ்க்கையின் அடித்தளமே எதிர்க்கருத்துதான்.
எல்லோருமே ஒரே கருத்துக்கு மாறிவிட்டாலோ அல்லது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறவை சரியானதா, இல்லையா என்று விமர்சிக்கப்படவில்லை என்றாலோ சமூகம் மந்தமாகி, உற்சாகத்தை இழந்துவிடும். பிழைகள் அதிகரிக்கும். சமூகம் அழுகத் தொடங்கும். சரியோ தவறோ, சந்தோஷமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் ஒன்றைப் பற்றிய பல்வேறு பார்வைகள் வெளிப்பட்டே ஆக வேண்டும். பழமைவாதங்களைச் சவாலுக்கு இழுத்தேயாக வேண்டும்.
பொருளாதார, அரசியல், சமூகக் குறைபாடுகளை வெளிப்படையாக அடையாளம் காண்பதும் அவற்றை அகற்றுவதும்தான் எதிர்க்கருத்தைக் காட்டுவதற்கான ஒரே வழி.
பேராசை பிடித்த பெருநிறுவனங்களால் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவற்ற ஆதிவாசிகளும் ஏழை விவசாயிகளும் அவர்களின் நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பது யாரும் அறியாத ரகசியம் அல்ல.
நியாயம் கிடைப்பதற்கான வழக்கமான வழிகள் கிடைக்காதபோது ஆதரவற்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுதங்களை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தயவு தாட்சண்ணியம் இல்லாமல் அப்பாவி விவசாயிகளைச் சுரண்டினார்கள்.அதனால் அவர்கள் பழிவாங்கும் கொள்ளையர்களாக எப்படி மாறினார்கள் என்பதை இந்திப் படங்கள் காட்டவில்லையா? ரொம்பப் பழைய காலத்தில் நடந்தவை அல்ல. கொஞ்ச காலத்துக்கு முன்னால் நடந்தவைதான்.
துரதிருஷ்டம் பிடித்த மக்கள் தங்களுக்குள் தனிமைப்படுகிற நிலைமை உருவாவதற்கு அரசால் ஏவப்படும் வன்முறை காரணமாகிறது. முடிவில்லாமல் அரசும் மக்களும் இருதரப்பிலும் வன்முறையில் ஈடுபடுகிற விஷவளையத்துக்குள் மக்களை மேலும் மேலும் பிடித்து தள்ளுவது அரசின் வன்முறைதான் என்பதை நாம் அறிகிறோமா?
மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்த அநீதிக்கு எதிராக பேச வேண்டியது கடமை இல்லையா? அரக்கத்தனமான அரசின் எதிரிகளாக அத்தகைய மக்களைக் காட்டுகிற அதிகாரபூர்வமான விவாதத்தை, தேவையானால் எதிர்க்கவேண்டாமா?
அமெரிக்க நீதிபதி ஒருவர் 50 வருடங்களுக்கு முன்னால் சொன்னார்“ ஒரு பேச்சாளர் விமர்சிக்கிற நிலைமைகளைச் சரி செய்வதற்குப் பதிலாக, விமர்சிப்பவரைக் கைது செய்வது என்னும் தூண்டுதலே அரசுக்கு எப்போதும் ஏற்படுகிறது.”
ஏழைகளுக்கான, ஓரங்கட்டப்பட்டிருக்கிற மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுகிற செயல்பாட்டாளர்கள் அனைவருக்கும் பொருந்துவதாக அந்த நீதிபதியின் கணிப்பு இருக்கிறது.
தேசத்துரோகம் என்னும் குற்றச்சாட்டு
அதிகாரம் மனிதர்களின் பார்வையைக் குறுக்கிவிடுகிறது. பணக்காரர்கள் அதிகம் நிறைந்த அமெரிக்க பெடரலிஸ்ட் கட்சி 1798இல் பிரச்சினைக்குரிய தேசத் துரோகச் சட்டத்தைச் செயல்படுத்தியது. அரசுக்கு எதிரான எந்த வகையான விமர்சனத்தையும் குற்றச்செயல் என்று வகைப்படுத்தியது அந்தச் சட்டம்.
பிரான்ஸ் – அமெரிக்கா இடையே அதிகரிக்கும் பதற்றங்களை முன்வைத்து அவர்கள் இதை நியாயப்படுத்தினார்கள். அந்தச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட அனைவரும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள். ஜனநாயகக் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள். குடியரசுக் கட்சியினர் அதிகாரத்துக்கு வருவதைத் தடுப்பதற்காகவே இந்த சட்டம் அறிமுகம் ஆனது என்பது தெளிவு.
“அதிகாரப் பசியும், எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டேயிருக்கவேண்டும் எனும் அளவற்ற ஆசையும், முட்டாள்தனமான புகழ்விருப்பமும் சுயநலப் பேராசையும் அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ்சை தின்றுகொண்டிருக்கின்றன” என்று விமர்சித்ததற்காகக் குடியரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
எதிர்பார்த்ததைப் போலவே, அரசின் யதேச்சாதிகார நடவடிக்கை அதற்கு எதிராகவே திரும்பியது. இந்தக் கைதுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சிறையில் அடைக்கப்பட்ட செனடர்தான் மக்களிடம் கதாநாயகர் ஆனார். 1801இல் அவரோடு இருந்த இன்னொரு குடியரசுக் கட்சிக்காரர் தாமஸ் ஜெப்பர்சன் அமெரிக்காவின் புதிய அதிபர் ஆனார்.
எதிர்க்கருத்து கொண்டிருப்பதைக் குற்றமாக ஆக்குகிற, குறுகிய மனம் படைத்த அரசாங்கங்கள் இறுதியாக அரசியல்ரீதியாகக் கடும் விளைவுகளைத் தாங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பார்க்கத் தவறுகின்றன.
எதிர்க்கருத்தின் சமூகரீதியான மதிப்பை நாம் உடனடியாக அடையாளம் காண முடியும். எதிர்க்கருத்து கொண்டிருப்பவர்கள் தங்களின் நம்பிக்கையைக் கைவிட்டவர்கள் அல்ல. தாங்கள் எடுத்துக்கொண்ட விவகாரத்தில் இறுதிவரை போராடாமல் பாதியிலேயே கைவிடுபவர்களும் அல்ல. அவர்கள் சமூகத்திலிருந்து தங்களை விலக்கிக்கொண்டவர்களும் அல்ல. அவர்கள் தங்கள் முன்பாக பரவிக்கிடக்கும் பழமைவாதங்களை எதிர்ப்பவர்கள். அவற்றுக்கு எதிரான விமர்சனங்களை இணைக்கிற பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.
தங்களுடைய சமூகத்துக்காக பணியாற்றுவதில் அவர்களுக்கு இருக்கிற உறுதியால் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக அதன் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.
எதிர்க்கருத்து கொண்டிருப்பது என்பது குடியுரிமையின் செயல்பாடுகளில் மிகவும் வீரமான செயல்பாடு. பெரும்பாலானோர் எதிர்க்காமல் அமைதி காக்கிற சூழலில் எதிர்க்கருத்தாளர்கள் விமர்சிக்கிறார்கள். பெரும்பாலான மற்றவர்கள் எதைப் பார்க்க விரும்பவில்லை என்பதை அவர்கள் காட்டுகிறார்கள். தாங்கள் சொல்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்படும், மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அவமதிப்பார்கள், விசுவாசம் இல்லாதவர்கள் என்று குற்றம்சாட்டுவார்கள் என்பது உள்ளிட்ட அபாயங்கள் இருக்கின்றன என்பதை எதிர்க்கருத்தாளர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் தங்களை எளிதில் மற்றவர்கள் அடையாளம் காணும்வகையில் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்.
மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் நாடு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டாத ஒரு நாட்டில் எதிர்க்கருத்தாளர் அரசுக்குத் துணையாக இருக்க மறுக்கிறார். அவர் அந்த நாட்டில் வசிக்கிறார். அந்த நாட்டில் தனக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக அவர் நம்புகிறார். அதற்கு உரிமையாக இருப்பதால் அவருக்கு பெருமை. ஆனால், மற்றவர்கள் நியாயமற்ற முறையில் துன்பப்படும்போது அதைப் பற்றி யாரும் பேசாதபோது அவர் சங்கடமாக உணர்கிறார்.
எதிர்க்கருத்தாளர்தான் மாபெரும் தேசபக்தர்.
இந்தியாவின் அரசியல்ரீதியான எதிர்க்கருத்தின் வரலாறு பற்றிய குறிப்புகள் என்னிடம் கிடையாது. ஆனால், இந்தியாவின் சமூகரீதியான, மதரீதியான எதிர்க்கருத்து தொடர்பான ஒளிவீசும் பாரம்பரியம் பற்றிய உணர்வு என்னிடம் உண்டு.
வேத காலச் சடங்குகளை எதிர்த்துக் கேள்விகள் எழுப்பிய உபநிடதச் சிந்தனையாளர்களும் புத்தரும் மதரீதியான – தத்துவரீதியான எதிர்க்கருத்தாளர்கள். தமிழகத்தின் சிவவாக்கியர் ஒரு எதிர்க்கருத்தாளர்தான். சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான கடும் விமர்சகர். மறுபிறவி எனும் கருத்தாக்கத்தை அவர் மறுத்தார். சங்கிலிருந்து புறப்பட்ட சப்தம் மீண்டும் சங்குக்குத் திரும்பாது, செத்துப்போன உடம்புக்கு மீண்டும் உயிர் வராது. மரத்திலிருந்து விழுந்த பழம் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளாது. செத்துப்போன எதுவும் மறுபடி பிறக்காது, பிறக்காது, பிறக்கவே பிறக்காது என்றார் அவர்.
கன்னடத்தில் 12ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் பசவண்ணா. அவர் பாடகர். தத்துவ ஞானியும்கூட. பாலினம் மற்றும் சாதி பாகுபாடுகளை அவர் நிராகரித்தார். வடஇந்தியாவில் பிறந்த கபீர், ரவிதாஸ், நானக் உள்ளிட்டோரும் தங்களது காலத்தில் எதிர்த்து நின்ற மதங்களோடுத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள மறுத்துவிட்டனர். விடுதலை உணர்வுக்கும் சுயபுரிதலுக்குமான புதிய பாதைகளுக்கு அவர்கள் அடித்தளங்களை உருவாக்கினர்.
மதரீதியாக வளர்க்கப்பட்ட ஆணாதிக்கத்தை எதிர்த்த தலித் பெண்களை 19ஆம் நூற்றாண்டு கண்டது. சாவித்திரி புலேயின் மாணவியான முக்தாபாய் பார்ப்பனியத் தத்துவத்தை தாக்கினார். “ஒரே ஒருவருக்கு மட்டும் சிறப்புரிமைகள் வழங்கி மற்றவர்களை நலிந்துபோக வைக்கிற மதம், இந்த பூமியிலிருந்து மறையட்டும். நமது மனங்களில் அத்தகைய மதம் ஒருபோதும் நுழையாமல் இருப்பதில் பெருமை கொள்வோம்” என்றார்.
தாராபாய் ஷிண்டே பெண்கள் மீதான ஒடுக்குமுறையைத் தாக்கினார். பெண்களைக் குற்றவாளியாக்கும் ஆண் மனப்போக்கை தோலுரித்தார். “எப்போதும் பெண்கள் மீதே குற்றம் சொல்கிறார்கள். மோசமானது எல்லாவற்றுக்கும் அவர்கள்தான் காரணம் என்கிறார்கள். பெண்களின் உடம்புகள்தான் எல்லா விதமான குறைபாடுகளுக்கும் காரணமா? பெண்களிடம் காணப்படுகிற அதே குறைபாடுகள் ஆண்களிடம் இல்லையா?” என்றார்அவர்.
அனைத்து எதிர்க்கருத்தாளர்களும் அறம்சார்ந்த கிளர்ச்சிக்காரர்கள். பொதுவாழ்வில் சமூகரீதியான, அறிவுரீதியான, ஆன்மிக ரீதியான கொந்தளிப்புகளை அவர்கள் உருவாக்கினார்கள்.
பழமைவாதத்திடமிருந்து எதிர்ப்பு கட்டாயம் வந்திருக்கத்தான் செய்யும். ஆனால், அவர்கள் சமூகத்தின் அடக்குமுறைக்கோ அரசியல் கொடுமைப்படுத்தல்களுக்கோ பயப்படாமல் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள்.
அன்றைய எதிர்க்கருத்தாளர்கள் இன்று இந்தியாவில் வாழ்ந்தால் கொடுமைப்படுத்தல்களையும் அவமதிப்புககளையும் சிறைவாசத்தையும் மீறித் தாக்குப்பிடித்திருப்பார்களா? சுவாமி தயானந்த சரஸ்வதி அவரது காலத்தில் மிகப் பெரிய எதிர்க்கருத்தாளர். அவர் இந்தக் காலத்தில் இருந்தால் தாக்குப்பிடித்திருப்பாரா? அல்லது தபோல்கரும் லங்கேஷும் அடைந்த கதியை அந்தக்காலத்து எதிர்க்கருத்தாளர்களும் இன்று அடைந்திருப்பார்களா?
அவர்களை விடவும் குறைந்த அளவிலேயே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் இன்றைய இந்தியாவில் இணையத்தில் இழிவுபடுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, கொல்லப்படுவது நாகரிக அளவுகோல்களின்படி தற்கொலைக்கு ஒப்பானதாக இருக்கிறது அல்லவா?
நன்றி: தி இந்து (https://www.thehindu.com/opinion/columns/the-social-value-of-religious-and-political-dissent/article24956490.ece)
தமிழில்: த.நீதிராஜன்