மூன்றாவது ராம்நாத் கோயங்கா நினைவு உரை: நீதிபதி ரஞ்சன் கோகாய்
ஒரு நிறுவனமாக வாழ்ந்து மறைந்த ராம்நாத் கோயங்கா அவர்கள் நினைவாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கான இந்த உரையை நிகழ்த்தும் வாய்ப்பை அளித்த தி எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு என இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கு இருக்கும் சிலரைப் போல், அவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருடைய பெருமைக்குரிய பாரம்பரியத்தால் நான் தீண்டப்பட்டிருக்கிறேன். சுதேசி நாளிதழ் தேவை எனும் காந்தியடிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அவரால் துவக்கப்பட்ட நாளிதழ் வாயிலாக அது மின்னிக்கொண்டிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்தபோது இதற்கு இரும்பு இதயமும் இரும்பு மனிதரும் தேவைப்பட்டனர். இளம் ராம்நாத் வடிவில் அது சாத்தியமானது. அவரது பெருமை செழுமையான பத்திரிகை சுதந்திரத்தின் வாயிலாகவும் மின்னிக்கொண்டிருக்கிறது. அவர் பெரும் பங்களிப்பு செலுத்தி உருவாக்கிய பத்திரிகை சுதந்திரத்தின் வாயிலாகவும் அவரது பாரம்பரியம் மின்னிக்கொண்டிருக்கிறது. பத்திரிகை சுதந்திரத்தை உருவாக்கும் பணிக்கு லட்சிய நோக்குடன் செயல்புரியும் ஒரு போராளி தேவைப்பட்டார். இக்காலத்தில் இவை மிகவும் அரிதானவை. ஆனால் ராம்நாத் வடிவில் இவையும் நமக்குக் கிடைத்தன. அவசர நிலை எனும் இருண்ட காலத்தில், நாம் இன்று நெருக்கமாக நினைக்கும் அடிப்படை உரிமைகளின் சமரசமில்லாத காவலராகத் திகழ்ந்தார். அதுவும் அவரது பெருமையாகத் திகழ்கிறது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அவரை ஒரு சிலர், நான்காம் எஸ்டேட்டின் செயல் வீரராகக் கருதலாம். இன்னும் சிலர் அவரை தீவிரமான, சமசரம் செய்து கொள்ளாத் எதிர்ப்பாளராக நினைவுகூரலாம். சிலர் அவரை ஒரு முன்னோடியாக, சிலர் அவரை அழகிய கிளர்ச்சியாளராக நினைவுகூரலாம். சில நேரங்களில் அவர் வருத்தம் இல்லாதவராக, சில நேரங்களில் தயக்கம் இல்லாதவராக, சில நேரங்களின் முரண்பட்டவராக இருந்திருக்கிறார். ஆனால் எப்போதுமே, தீவிரமாக, ஆவேசம் மிக்கவராக, அச்சமில்லாதவராக இருந்திருக்கிறார். தர்பங்காவிலிருந்து சென்னைக்கு; சென்னையிலிருந்து பம்பாய்க்கு, அரசியல் நிரணய சபையிலிருந்து செய்தி அறைக்கு, நீதிமன்ற அறைகளுக்கு, என அமையும் அவரது வாழ்க்கைப் பயணம் தனித்தன்மை வாய்ந்த, நம் வாழ்விலும், அமைப்புகளிலும் அதிகம் பயன்படுத்த வேண்டிய ஒரு மாதிரியாகும்.
சிறிது காலம் முன்பு, ஆச்சரியப்படும் வகையில், அமெரிக்காவில் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 புத்தகம் மீதான திடீர் ஆர்வம் – நன்றாக யோசித்தால், இதில் வியக்க ஒன்றுமில்லை – அதிகரித்துள்ளது பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன். இதன் காரணமாக, நானும் இந்த மகத்தான புத்தகத்தை மீண்டும் படிக்க ஆர்வம் கொண்டேன். அதிலிருந்து ஒன்றை நினைவுகூர விரும்புகிறேன். “சுதந்திரம் என்பது 2+2 = 4 என்பதைச் சொல்லும் சுதந்திரமாகும். அது சாத்தியமானால் மற்ற எல்லாம் வரும்”.
எளிமையாகச் சொல்வது என்றால், இதற்காகத்தான் ராம்நாத்ஜி பாடுபட்டார். 2+2=4 எனச் சொல்லும் சுதந்திரத்திற்காக! அப்படித்தான் அவரை நினைவுகூர்கிறேன். தான் நினைத்ததைத் தயங்காமல் கூறியவர் அவர். அதிகாரத்திடம் உண்மையைப் பேசியவர். அதற்காக விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் கவலைப்படாமல் பேசியவர். எதிர்த்து நின்று உடைந்துபோனாலும் சரி, வளைந்து கொடுக்க மாட்டேன் என்ற அவரது அணுகுமுறையைப் பிடிவாதம் எனச் சிலர் கருதலாம். மற்றவர்கள் இதை உறுதி என்பார்கள். இது அவரவர் பார்வை சார்ந்ததா? எனக்குத் தெரியவில்லை.
மற்றவர்களைப் பற்றி என்னால் சொல்ல முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை, நமக்கு நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: நம்மில் கோயங்கா எங்கே? அவரது குறிக்கோள்கள் எங்கே? அவரது விழுமியங்கள் எங்கே? இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மனிதரின் அசாதாரணமான ஆளுமை தன் பொருத்தத்தை இழக்கிறதா?
இந்த உரைக்கு நான் தேர்வு செய்துள்ள தலைப்புக்கு ஒரு பின்புலம் இருக்க வேண்டும் அல்லவா? இதுதான் அந்தப் பின்புலம். ஒரு சில சங்கடமான கேள்விகள் இருக்கின்றன. தினசரி வாழ்க்கையில் காணாமல் போய்விட முடியாத அளவுக்கு அவை முக்கியமானவை. அப்படிப்பட்ட கேள்விகள் குறித்துக் கொஞ்சமாவது சிந்திப்பதைவிட, நம்முடைய அரசியல் சாசனத்தின் தன்மையைப் பல விதங்களில் பிரதிபலித்த ஒரு மனிதருக்குச் சிறந்த அஞ்சலி வேறு என்ன இருந்துவிட முடியும்? ஒரு காலத்தில் நாடு சுதந்திரம் பெற உதவியவர் அவர். இன்னொரு காலத்தில் நாடு அரத்தமுள்ள ஜனநாயகமாக மாற உதவியவர். அவருடைய தொலைநோக்கை அடைய நாம் எந்த அளவுக்கு முயன்றிருக்கிறோம் என சிந்தித்துப்பார்ப்பது அவசியம்.
நீதியின் அடிப்படை
‘நீதிக்கான பார்வை’ என்பது பற்றிப் பேசும்போது நான் சொல்ல விரும்புவது என்ன என்பது குறித்து என் கருத்துக்களை விளக்கச் சில நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறேன். முதன்மை ஆசிரியர் ராஜ்கமல் ஜா சொன்னதை நான் கொஞ்சம் கடன் வாங்கிக்கொள்கிறேன். ஏனெனில் அது சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது. “தீவிர சுதந்திரம்” மற்றும் “அச்சமோ வேண்டியவர் என்னும் உணர்வோ இன்றி விசாரணை செய்யும் உணர்வு” ஆகிய இரண்டையும்தான் நீதிக்கான அடிப்படை என ராம்நாத் கருதியதாக, எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ராஜ்கமல் ஜா, சிந்தனையைத் தூண்டும் விதத்தில், சரியாகக் குறிப்பிட்டிருந்தார். இவை அப்படி இருப்பதை மறுக்கவும் முடியாது. வசதிக்காக இவற்றை அடிப்படைக் கொள்கைகள் என வைத்துக்கொள்வோம். இதை உடல்கூறு நோக்கில் பார்த்தால், இவை நீதியின் அடிப்படையாக அமைகின்றன என்று சொல்லலாம். எனில், இதன் மீது நிறகும் நீதியின் உடல் அல்லது உருவம் என்ன?
இந்த அடிப்படைக் கொள்கை குறித்து இப்போது அடிக்கடி பேசப்படுகிறது. ஒட்டுமொத்தச் சிந்தனையாளர்களும் இதில் கவனம் செலுத்திவருகின்றனர். இதைச் செய்யக் கூடாது என நான் சொல்ல வரவில்லை. இதைச் செய்ய வேண்டும். இது செய்யப்படுகிறது. கடைசியாக எப்போது ஒரு அரசின் நீதிப் பிரிவு இந்த அளவு செய்தியை உருவாக்கியது எனத் தெரியவில்லை. அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவரான ஹாமில்டன், அரசின் மூன்று பிரிவுகளில் மிகவும் ஆபத்திலாததாக நீதித்துறை இருப்பதாகக் கூறியதை இங்கு நினைவுகூர்கிறேன் இந்த உரையின் போக்கில் இவர் கருத்தை மீண்டும் குறிப்பிடுவேன். ஆனால், இன்று அவர் இருந்தால் இதே போல உணர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட 100 சக்தி வாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் நீதித்துறையைச் சேர்ந்த பலர் இருப்பதையும் பார்க்க வேண்டும். ஆனால், நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம். அதிலும், அரசியல் சாசன முறையை ஏற்றுக்கொண்ட பிறகு 70 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இது பொருத்தமான நேரமாகும். இதை நாம் விரிவாகவும் செய்தாக வேண்டும். விரிவாக என்றால், அடிப்படைக் கொள்கை, வடிவக் கொள்கை ஆகிய இரண்டையுமே நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த இரண்டும் சேர்ந்துதான் நீதியின் பார்வை இருப்பதாகப் புரிந்துகொள்கிறேன். இவை தொடர்பில்லாதவை அல்ல என்பது தெளிவு. அடுத்த அரை மணிநேரத்தில் நான் இரண்டையும் தொட்டுக்காட்ட விரும்புகிறேன்.
நான் வடிவக் கொள்கையிலிருந்து துவங்குகிறேன். என் கருத்தைச் சொல்ல, கொஞ்சம் நீதித்துறை மொழியில் பேச வேண்டியிருந்தால் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.
ரத்தம் சிந்திய மிகப் பெரிய பிரிவினை வலியின் பின்னணியில், ஆழமான ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில், எங்கும் நிறைந்த அநீதிகளுக்கு மத்தியில், நம்முடைய அரசியல் சாசனம், சீர்திருத்தம் என்று சொல்வதை விஞ்சக்கூடியதாக இருக்கக்கூடிய மகத்தான மாற்றம் பற்றி நம்பிக்கை கொள்ள வைத்தது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். சமூக, பொருளாதாரம், அரசியல் என எல்லாவற்றிலும், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும், அது முழு அறிவோடு, புரட்சிகரமானதாக இருந்தது. கடந்தவை எல்லாம் போகட்டும், இனி வரும் புதிய சமூகம் சமத்துவம் மிக்கதாக இருக்கட்டும் என அது தெரிவித்தது. நம்முடைய பன்மைத்தன்மை கொண்ட குணாதிசயத்தைத் தக்க வைத்துக்கொண்டே, நாம் ஜனநாயகத்தன்மையும் ஒற்றுமையும் கொண்டவர்களாக மாறினோம். அரசு மதத்தைச் சார்ந்திராததாக இருக்க வேண்டும், மக்கள் அனைவரும் சமமாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பினோம்.
யோசித்துப் பார்க்கும்போது இது, எந்த அளவுக்கு பாசங்கற்ற எண்ணமாக இருந்ததோ அந்த அளவு, பாசாங்கானதாக இருந்தது. ஆனால் அது எப்படி இருந்தாலும், பொது அமைப்புகள் (அவற்றில் ஒன்று நீதித்துறை) வரித்துக்கொள்ளப்பட்டு, தேவையானபோது சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, நீதித்துறையின் இந்தக் கட்டுமானத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதி என்பது என்ன?
நீதி என்று கூறும்போது, நீதிமன்றத்தால் பரிபாலனம் செய்யப்படும் நீதியை – அது முக்கியமாக அமைந்தாலும் – மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக நீதியை மேம்பட்ட ஒரு குறிக்கோளாக, அடிப்படையானதாக, ஆதார சக்தியாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எனவேதான் இது வியக்கத்தக்கது என்கிறேன்.
ஏனெனில், இது பல தத்துவங்களின் சங்கமமாக இருக்கிறது. உதாரணமாக, அரிஸ்டாட்டிலின் தத்துவத்தைப் பொறுத்தவரை அரசு என்பதன் சாரம்சமே, அவர் சமூகப் பண்பு எனக் கருதும் நீதியாக இருக்கிறது. அதாவது பிறருக்கு நன்மை செய்தல், சமத்துவம் பேணுதல், நேர்மை அகியவற்றின் சங்கமம். நம்முடைய வழிகாட்டு ஆவணமாக, அரசியல் சாசனத்திற்கான முன்னுரையை அணுகும்போது, இதே கொள்கையைத்தானே, “சமூக அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளில் சமத்துவம்” எனும் வார்த்தைகளில் காண்கிறோம். அல்லது ஜான் ஸ்டூவர்ட் மில்லின் பயன்பாட்டுத் தத்துவமா? அவர் நீதியை அதிக எணிக்கையிலானவர்களுக்கான அதிகபட்ச நல்லது என்று பார்க்கிறார். அரசியல் சாசன முன்னுரையில் “சோஷலிசம், சமத்துவம்” எனும் வார்த்தைகளில் இந்தக் கருத்து பிரதிபலிக்கிறது அல்லவா?
அல்லது கொஞ்சம் நவீனக் கொள்கையை எடுத்துகொள்வோம்: நியாயம் என்பது மிகவும் சமத்துவம் மிக்கது; அது தாராளவாதத்தின் அதிக வாய்ப்புள்ள வெளிப்பாடு எனும் ரால்சிய அணுகுமுறையை எடுத்துக்கொள்வோம் (ஜான் ரால்ஸ் என்பவர் தாராள மெய்யியல் மரபில் வந்த அமெரிக்க அரசியல் மெய்யியலாளர். இவரால் உருவாக்கப்பட்ட வெளிப்படையான நீதி என்ற கருத்தாக்கம் சுதந்திரமான சம உரிமை கொண்ட குடிமக்களை உள்ளடக்கிய பொருளாதார ரீதியான சமத்துவ சமுதாயத்தை முன்வைக்கிறது). ந்தப் பார்வை, நமது அரசியல் சாசனத்தின் முன்னுரையில், “எண்ணங்களை வெளியிடும் சுதந்திரம், கருத்து வெளிப்பாடு மற்றும் நம்பிக்கை” ஆகிய வார்த்தைகளில் வெளிப்படுகிறது அல்லவா?
ஆக, இந்திய அரசியல் சாசனத்தின் முன்னுரையைக் கட்டுடைத்தால் இந்தக் கொள்கைகளின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பாக இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். நீதி என்பது தனித்து நிற்கும் தத்துவம் அல்ல, மாறாக, சோஷலிசம், ஜனநாயகம், சமத்துவம், சகோரத்துவம் போன்ற எண்ணங்களின் சங்கமமாகும். இவற்றில் எந்த ஒன்றும் தனித்து இயங்கவில்லை, ஏனெனில் இவற்றின் ஆதார நோக்கம் அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் எனும் ஒட்டுமொத்த நீதியை அடைவதாகும். நீதியின் வடிவக் கொள்கை எனும் போது இதைத்தான் குறிப்பிட விரும்புகிறேன். நீதி எனும் மொத்த சங்கதியை, சட்டமன்றம், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவற்றின் மூலம் நாம் அடைய வேண்டும்.
இப்போது, இந்த விஷயத்தில் அதிகாரவர்க்கம் மற்றும் சட்டம் இயற்றும் மன்றம் எப்படிச் செயல்பட்டிருக்கின்றன என்னும் சர்ச்சைக்குரிய கதையைச் சேர்த்துக்கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் என்னுடைய உரையின் வரையெல்லை, இந்த விஷயத்தில் நீதித்துறை சார்ந்ததாக மட்டும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் அகமதாபாத்தில் நீதிபதி பி.டி.தேசாய் நினைவு உரை ஆற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு அரசியல் சாசன லட்சியவாதம் என்பது வானவில்லைத் துரத்திச் செல்வது அல்ல என்றும், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகள் மூலம் இதைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டேன். அரசியல் சாசன லட்சியவாதத்தை (அதாவது, நீதியின் பார்வை) அடைவது என்பது, மாயமானைத் துரத்திச் செல்வதுபோல் ஆகாது. ஆனால் நீதிமன்ற அறைகளில் மட்டும்தான் இந்த நிலை என்று நான் சொன்னால், அது இக்காலத்தின் அறிவார்ந்த தளத்தின் மீதான அவநம்பிக்கையாக அமையாது. ஏனெனில் களத்தில்தான் (நீதிமன்றத்துக்கு வெளியே உள்ள சமூக யதார்த்த நிலவரங்களில்) மாயமான்கள் இருக்கின்றன. அதாவது, நீதிமன்றங்களால் நீதியின் பார்வையை அடைவது என்னும் லட்சியவாதத்தை நடைமுறைப்படுத்த முடிகிறது. வெளியில் அது அந்த அளவுக்குச் சாத்தியமில்ல என்பதே யதார்த்தம்.
நீதியின் பார்வையும் கள யதார்த்தமும்
விஷயம் என்னவெனில், நீதி பரிபாலனம் மூலம் இந்த மகத்தான நீதிப் பார்வையை நீதிமன்றங்களில் பெற்ற விதம் மற்றும் களத்தில் அவை உருவாக்கப்பட்ட விதம் ஆகியவை இரு வேறு யதார்த்தங்களாகும். அரசியல் சாசனத்தின் விழைவு அம்சமும் அதன் செயல்பாட்டு அம்சமும் (விருப்பமும் நடைமுறையும்) இரு வேறு விதமாகத்தான் இருக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். விழைவு அம்சம் என்பது, உயர்ந்த லட்சியவாதம். இது தார்மிகத்தன்மையும் போதனைத் தன்மையும் கொண்டது. செயல்முறை அம்சம் என்பது, களத்தில் உள்ள விநோதமான உண்மைகளைச் சார்ந்தது. மிகவும் சவாலானது. இந்த இரண்டுக்கும் இடைவெளியை நிரப்புவதில் நாம் மெதுவாகச் செயல்பட்டாலும்கூட (வேகமாகத்தான் செயல்பட்டாக வேண்டும் என்ராலும்) இது பிற்போக்கானதாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் முக்கியமானது.
ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய அரசு (2015) வழக்கில் 2015இல் வழங்கப்பட்ட தீர்ப்பை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். கொண்டாடப்பட்ட இந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், பொதுமக்களின் அறிந்துகொள்ளும் உரிமை 66 ஏ பிரிவால் பாதிக்கப்படுகிறது எனக் கூறியது. இதை அறிவிக்கும்போது, உச்ச நீதிமன்றம், மற்ற தீர்ப்புகளோடு, ரொமேஷ் தாப்பர் எதிர் மெட்ராஸ் மாகாணம் (1950); பிரிஜ் பூஷன் எதிர் தில்லி மாகாணம் (1950); பென்னட் கோல்மன் & ஆம்ப் கோ எதிர் இந்திய அரசு (1973) ஆகிய தீர்ப்புகளால் ஊக்கம் பெற்றதைக் கவனிக்க வேண்டும்.
இவை எல்லாமே, சுதந்திர இந்தியாவின் கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் காப்பது தொடர்பான ஆரம்ப காலத் தீர்ப்புகள். இவை பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக வழங்கப்பட்டவை. இந்த தீர்ப்புகள், ஜனநாயகம் என்பது எண்ணங்களின் சந்தையாகும், அதில் மக்களுக்கு அறியும் உரிமை இருக்கிறது என்பதை நிறுவி, முந்தைய கட்டுப்பாடுகள் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதையும், கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்பவை ஜனநாயகத்தின் ஒளி விளக்கு என்பதையும் உணர்த்துகின்றன.
ஷ்ரேயா சிங்கால் இதை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச்சென்றார். ஏனெனில் அவர் அளித்த தீர்ப்பு, பத்திரிகை சுதந்திரத்தின் நீதி பரிபாலனம், அரசியல் சாசனம் அளிக்கும் பல வகை எண்ணங்களுக்கான சாத்தியம், மாறுபட்ட கருத்துகள், ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றை நவீன தொழில்நுட்ப யுகத்துக்கும் இணைய வெளிக்கும் பொருந்தச்செய்துள்ளது.
நீதியின் பார்வை நீதிமன்ற அறையில் பெறப்பட்டுள்ளது. ஒருமுறை அல்ல பலமுறை. ஆனால் இது நிஜத்தில் செயலாக்கம் பெற்றுள்ளதா? இந்த மகத்தான தீர்ப்புகளின் வெற்றிகள் களத்தை அடைந்துள்ளனவா? தகவல்கள் மூலம் பதில் பேச வைக்கிறேன். களத்தில் இது குழப்பமாக மாறியிருக்கிறது. நீங்கள் செய்தி கொண்டுவருபவர் மீது வழக்கு தொடுக்கும்போது, அல்லது செய்தி கொண்டுவருபவரைச் சுடும்போது, அல்லது செய்தி கொண்டுவருபவர் அச்சத்தின் காரணமாக அதை வெளிப்படுத்தாமல் இருக்கும்போது என எதுவாக இருந்தாலும் மோசமானதே.
ஜனநாயகத்தின் மரணம்?
ஜூன் 19இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ், “ஜனநாயகம் எப்படி இறக்கிறது?” எனும் தலைப்பில் (எக்கனாமிஸ்ட்டில் இருந்து தேர்வு) அருமையான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில், “…சுதந்திரமான நீதிபதிகளும் கூச்சல் எழுப்பும் பத்திரிகையாளர்களும்தான் முதல் வரிசை பாதுகாபு அரண்கள்… ஜனநாயகத்தின் மரணம் தொடர்பான தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை. ஆனால், இதுவரை உருவாக்கப்பட்ட அரசு அமைப்புகளில் மிகவும் குறைந்த மோசமான அம்சங்கள் கொண்ட இந்த மைப்பு சிக்கலில் இருக்கிறது. அதற்கு பாதுகாவலர்கள் தேவை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இன்றைய சூழலுக்கு ஏற்ப இதைக் கொஞ்சம் மாற்றம் செய்ய விரும்புகிறேன். சுதந்திரமான நீதிபதிகளும் கூச்சல் எழுப்பும் பத்திரிகையாளர்களும் மட்டும் அல்ல, சில நேரங்களில் சுதந்திரமான பத்திரிகையாளர்களும் கூச்சல் எழுப்பும் நீதிபதிகளும் தேவை. ஸ்ரேயா சிங்கால் தீர்ப்பு தன்னளவில் முக்கியத்துவம் பெற்றது என்பதோடு, என்.ஏ.எல்.எஸ்.ஏ எதிர் இந்திய அரசு வழக்கானது அரசின் சமத்துவக் கொள்கைக்குப் புத்துயிர் அளித்துள்ளது. பாலின / பாலியல் தேர்வு விஷயத்தில், பொதுவான கண்ணோட்டங்களுக்கு ஒத்துவராத போக்குகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகப் பாகுபாடுகள் காட்டப்படக் கூடாது என்பதே பாலினப் பாரபட்சத்திற்கு எதிரான அடிப்படை உரிமைகள் என்பதுதான் நம்முடைய அரசியல் சாசன மேதைகளின் பார்வை என்பதை நம்முடைய நீதிமன்றம் புரிந்துகொண்டுள்ளது. இந்தத் தீர்ப்பு நீதியின் உயிரோட்டத்தின் ஊற்றுக்கண்ணை நோக்கிச் சென்றுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு வருவதற்கு முன், பிஜாய் இமானுவல் எதிர் கேரள அரசு தொடர்பான 1986 தீர்ப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பள்ளியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, ஜெஹோவாஸ் விட்னஸ் கிறிஸ்துவ பிரிவைச்சேர்ந்த மூன்று பேர், தேசிய கீதம் இசைக்க மறுத்தனர் (அவகளுடைய கோட்பாடு அவர்களுக்கு அப்படிப்பட்ட உத்தரவை அளிக்கிறது). எனினும் அவர்கள் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்றார்கள். அவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது, இந்த நடவடிக்கையானது சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டிற்கு விரோதமானது எனக் கூறியது. “நாட்டின் அரசியல் சாசனத்தின் கீழ், சொற்பமான சிறுபானமையினர்கூடத் தங்கள் அடையாளத்தைக் கண்டுகொள்ள வழிசெய்வதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கான உரைகல்லாகும்” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றம் மேலும் ஒரு எண்ணத்தையும் வெளிப்படுத்தியது. தீர்ப்பின் கடைசி வரிக்கு முந்தைய வரியை மேற்கோள் காட்டுகிறேன்: “நம்முடைய பாரம்பரியம் சகிப்புத்தன்மையைக் கற்றுத்தருகிறது. நம்முடைய அரசியல் சாசனம் சகிப்புத்தன்மையைக் கற்றுத்தருகிறது. அதை நீர்த்துப்போகச் செய்துவிட வேண்டாம்.”
அண்மையில் ஆதி சைவ சிவாச்சாரிகள் நல சங்கம் தமிழக அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கில் மத நம்பிக்கை என்று வரும்போது, அரசியல் சாசன உரிமை என்பது முன்னரே உறுதி செய்யப்பட்டதாகக் கருதப்பட முடியாது என நீதிமன்றம் கூறியது. மேலும் ஷிருர் மட வழக்கில் (1954) நீதிபதி பி.கே. முகர்ஜி, ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படைச் செயல்முறைகள் எவை என்பதை, அரசு அல்லது மதம் சார்ந்த இந்தியர் தீர்மானிக்க முடியாது, அரசியல் சாசன நீதிமன்றமே தீர்மானிக்க முடியும் என்று கூறினார்.
நிலையற்ற நெறிகளும் நிலையான நெறிகளும்
இந்தத் தீர்ப்புகள் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டுள்ளன என உங்களில் சிலர் யோசிக்கலாம். அவை தொடர்புகொண்டிருக்கவில்லை. ஆனால், அவை தொடர்புகொண்டுள்ளன. இவற்றுக்கான வேறுபாடு என்பது, முதல் வழக்கு அந்தரங்க வாழ்க்கையின் தனிப்பட்ட தன்மை சார்ந்தது. மற்ற இரண்டு வழக்குகளும் எல்லோரும் கருத்துச் சொல்ல விரும்பும் மத நம்பிக்கை சார்ந்தது. இவற்றில் பெறக்கூடியவைதான் ஒற்றுமையாகும். இந்தத் தீர்ப்புகள் அவற்றின் வெறும் வார்த்தைகளை மீறி, சமூக நெறி என்பது நிலையற்றது, எனவே சமூக நெறி அல்ல, அரசியல் சாசன நெறியே வழிகாட்ட வேண்டும் எனக் கூறுகின்றன. இஸ்ரேல் நீதிபதி ஆரான் பாரக் கூறியது போல, காலத்தின் கடந்து போகும் தன்மை அல்ல, அடிப்படை நெறிகளே வழிகாட்டும் குரலாக இருக்க வேண்டும்.
அரசியல் சாசன நிர்ணய சபையில் ஆற்றிய தன் கடைசி உரையின்போது டாக்டர் அம்பேத்கர், நாம் அரசியல் ஜனநாயகமாக இருந்தால் மட்டும் போதாது, சமூக ஜனநாயகமாக இருக்க வேண்டும் என்றார். ஏனெனில், சமூக ஜனநாயகம் அடிப்படையாக இருந்தால் மட்டுமே அரசியல் ஜனநாயகம் தழைக்கும் என அவர் தெரிவித்தார். சமூக ஜனநாயகம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் ஆகியவற்றை ஒரு கொள்கையாக அங்கீகரிக்கும் வாழ்க்கை முறையாகும் என அவர் குறிப்பிட்டார். நாம் வெற்றிகரமான அரசியல் ஜனநாயகமா என்பது குறித்து ஆய்வு செய்ய விரும்பவில்லை, ஆனால் நாம் எல்லா விதங்களிலும் ஒரு சமூக ஜனநாயகம் என மனமார நம்புகிறேன்.
ஆனால், எல்லாமே நீதி பரிபாலனத்தைச் சார்ந்தது. இன்று இரு விதமான இந்தியாக்கள் பரஸ்பர மோதலில் இருக்கின்றன. ஒரு இந்தியா தானே புதிய ஆற்றல் என நினைக்கிறது. இன்னொரு இந்தியா – நீதியைப் பெறக்கூடிய இடத்தில் இருக்கிறதா என்பதை விடுங்கள் – கல்வி, மருத்துவம் இல்லாமல், தினக்கூலியில் கஷ்ட ஜீவனத்தில் வறுமை கோட்டுக்குக் கீழே இருக்கிறது. இந்த இரண்டும் கலந்த நிலை புதிராக இருக்கிறது. இதைத்தான் நடைமுறையில் உணரப்படாத உன்னத லட்சிய நெறிகள் எனக் குறிப்பிட விரும்புகிறேன். மேலே சொன்ன பார்வையில் உள்ள ஒரு இந்தியாவுக்கு ஒரு தொலைநோக்கு இருக்கிறது. நீதியின் பார்வையை அடைவதில் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறோம் என்பது நமது கண்ணோட்டம் சார்ந்தது. ஆனால் எல்லாவற்றையும் மீறி, வெளிப்படையாகத் தெரியக்கூடிய பெரும் வேறுபாடு இருக்கிறது. இதை நீக்குவதுதான் இனி வரும் காலங்களில் இந்திய நீதித்துறையின் குறிக்கோளாகும். இது நிகழ் வேண்டும் எனில், இந்தத் துறையில் அதற்கே உரிய அரசியல் சாசனத் தருணம் நிகழ்ந்தாக வேண்டும், இது நீண்ட நாளாக காத்திருக்கிறது என்றும் கூற விரும்புகிறேன்.
இந்த அமைப்பின் அரசியல் சாசன வரலாறு என்பது நீதிமன்ற அமைப்பின் (குறிப்பாக உச்ச நீதிமன்றட்தின்) பங்கானது சமூக அரசியல் நோக்கில் தொடர்ந்து மாற்றங்களைச் சந்தித்துவருவதை உணர்த்தும். 1970 – 1980 காலகட்டமானது, அடிப்படை அமைப்புக் கொள்கையில் கவனம் செலுத்துவதாக அமைந்தது. 1980கள் 21ஆம் பிரிவின் சாத்தியத்தை விரிவாக்குவதாக அமைந்தது. 1990கள், சட்டம் இயற்றும் மன்றம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றின் செயலின்மை தொடர்பான போதாமைகள் குறித்து கவனிக்க, அரசியல் சாசன சாத்தியங்களை ப் புதுமையான முறையில் விளங்கிக்கொண்டு தீர்ப்பளிப்பதன் மூலம் “நல்ல நிர்வாக நீதிமன்றமாக”ச் செயல்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகான முதல் 50 ஆண்டுகளில் நாம் அறுவடை செய்துகொள்ளக்கூடிய வலுவான நீதிபரிபாலனத்தை நீதிமன்றம் உருவாக்கியுள்ளது. இந்த வேகமே இன்னமும் உந்துசக்தியாக இருக்கிறது.
புரட்சி தேவை, சீர்திருத்தம் அல்ல
ஆனால், இப்போதுள்ள நிலையைப் பார்க்கும்போது, நீதிமன்றச் செயல்முறை என்பது விசாரணை துவங்குவதற்கு முன்பே நடக்கும் விசாரணையாக இருக்கிறது. இது எங்கள் தரப்பில் கூட்டுத் தோல்வியா என்பதை என்னால் கூற முடியாவிட்டாலும், சட்டத்தின் ஆட்சி நடக்கும் தேசத்தில், இந்த அளவுக்கு நாம் அனைவரையும் உள்ளக்கிய சமூகம் எனும் எண்ணத்தைப் புறக்கணிக்கிறோமா என்னும் கவலையை உண்டாக்குகிறது. களத்தில் உள்ள சவால்களைச் சந்திக்க, சாமானிய மக்களுக்குச் சேவை அளித்து, தேசத்திற்குப் பொருத்தமாக இந்த அமைப்பை வைத்திருக்க, சீர்திருத்தம் அல்ல ஒரு புரட்சி தேவை. தீர்ப்புகளின் பலன் தெரிய வேண்டும் எனில், நீதி வழங்கும் முறை மேலும் பலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதாவது செயலாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
“நிகழ்ந்துகொண்டிருக்கும் சீர்குலைவிற்குத் துணை அம்சமாக” நீதித்துறை ஆகிவிடவில்லையா என அருண் ஷோரி கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்றத்தின் நம்பிக்கையானது, அதன் தீர்ப்புக்குப் பிறகு செயலாக்கம் வரை செல்லவில்லை என்னும்போது இது முக்கியமான கேள்விதான். எனினும் முழு மனதுடன் இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனால் நீதித்துறை இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் எனச் சொல்வேன். எப்போதும் முன்னோக்கியே காலை வைத்திருக்க வேண்டும். அதன் ஆணைகளின் செயலாக்கம், அவை நிறைவேற்ற்ரப்படுதல் ஆகிய விஷயங்களில் ஒரு நிறுவனமாக அதன் பாத்திரம் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என இதைக் குறிப்பிடுவேன். ஆனால், இவை மீண்டும் அரசியல் சாசன நெறிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். சட்டத்தை விளங்கிக்கொள்வதில் இந்த நிறுவனம் எல்லாக் கட்டங்களிலும் மேலும் துடிப்புடன் இருக்க வேண்டும் என்றுகூடச் சொல்வேன். இதைத் தான் தனக்கான அரசியல் சாசனத் தருணம் என்று சொல்கிறேன். எனினும் இது பரந்த அளவிலும் நுண் அளவிலும் மிகவும் கடினமானது. ஏனெனில் இரண்டும் தனித்தன்மையான சவால்களைக் கொண்டிருக்கின்றன.
மறுபடியும் முதலிலிருந்தா?
நுண் அளவு எனும்போது, அன்றாட அடிப்படையிலான நீதி நிர்வாகத்தைக் குறிப்பிடுகிறேன். இங்கு “செயலற்ற தன்மை”, “மெதுவான நடைமுறை என்பவை வரலாற்று ரீதியான சவால்களாக உள்ளன. இதை எளிமையாக முன்வைக்கிறேன். இன்று நீதித்துறை என்பது கருவிகள் மீது பழி சொல்லும் மோசமான பணியாளராக இல்லை; மாறாக, கருவிகள் இல்லாத பணியாளராக இருக்கிறது. நிலுவை, பாக்கி மற்றும் நீதிபதிகள் எண்ணிக்கை தொடர்பாக தினந்தோறும் நாங்கள் எதிர்கொள்ளும் விவரங்களை உங்கள் மீது சுமத்தப்போவதில்லை, ஆனால் பிரெஞ்சு எழுத்தாளர் ஒருவர் ஒருமுறை சொன்னது போல, “எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது, ஆனால் ஒருவரும் கேட்கவில்லை, எனவே நாம் மீண்டும் துவங்க வேண்டும்.”
நாம் மீண்டும் முதலிருந்து தொடங்கக் கூடாது என்றால், இப்போதாவது காதுகொடுத்துக் கேட்கத் துவங்குங்கள் எனப் பொறுப்பில் உள்ளவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்ட சேவை செயல்முறையின் முடிவில்லா வரம்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். நம்முடைய பரந்த, ஏற்றத்தாழ்வு கொண்ட சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் அதிகாரம் பெறுவது வெளிப்படையாக கண்கூடாக உணரத்தக்க யதார்த்தமாக மாற வேண்டும்.
தனிநபர் சுதந்திரத்தைப் பொருத்தவரை திகைக்க வைக்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். சிறையில் இருப்பவர்களில் 67 சதவீதம் பேர் விசாரணையில் இருப்பவர்கள். பெரும்பாலும் அதிக வசதி இல்லாத பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 47 சதவீதத்தினர் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள். இதை 7 சதவீதமாக இருக்கும் இங்கிலாந்துடன் ஒப்பிடுங்கள். அதிக சிறைவாசிகள் கொண்ட அமெரிக்காவில் இது 22.7 சதவீதமாக இருக்கிறது. விசாரணையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் காவலில் இருக்கும் ஒரு ஆண்டுக் காலம் நிலைமையை எந்த விதத்திலும் மாற்றிவிடப்போவதில்லை. நம்முடைய மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர், நியாயப்படுத்த முடியாத வகையில், சிறு குற்றங்கள், திருட்டுகள் ஆகியவற்றுக்காகச் சிறையில் இருப்பதாகக் கூறுவது தவறாகுமா?
பரந்த அளவில், நீதித்துறை எனும் நிறுவனம் பாதையைத் திருத்துவதாக, சமன்படுத்துவதாக, ஜனநாயகத்தை நிறுவுவதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நாடு ஒரு பரிணாம மாற்றத்தின் விளிம்பில் இருப்பது நன்கு அறியப்பட்டதால், இந்த நிறுவனத்திற்கான தாக்கமும் அதே அளவு இயல்பாக இருக்கும். உரையின் துவக்கத்தில் ஹாமில்டனை மேற்கோள் காட்டியதை மீண்டும் நினைவுகூர விரும்புகிறேன். அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கியபோது, நீதித்துறைதான் மூன்று நிறுவனங்களில் மிகவும் பலவீனமானது, ஏனெனில் அதனிடம் அதிகாரவர்க்கத்தின் செயல்படுத்தும் அதிகாரமும் இல்லை, சட்டமன்றத்தின் முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லை, தீர்ப்பு மட்டும்தான் அதன் கையில் இருக்கிறது என்றார். அவர் கூறுவதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். சிக்கலான பார்வை இது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி அவர் எச்சரித்திருக்கிறார். சிவில் சுதந்திரம் நீதித்துறையிடம் அச்சப்பட எதுவுமில்லை என்றாலும், இரண்டு துறைகளில் ஏதேனும் ஒன்றுடன் நீதித்துறை இணையும்போது அச்சப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.
எனவேதான் “தீவிரமான சுதந்திரம்” நீதியின் அடிப்படை என்று ராம்நாத்ஜி கூறியதாக நான் நம்புகிறேன். ஆனால், சுதந்திரம் என்பது நிறுவப்பட்ட அரசியல் சாசன விழுமியங்களை மனதில் கொள்ளும் வகையில் பொறுப்பானதாகவும் இருக்க வேண்டும் எனக் கூற விரும்புகிறேன். இந்த நிறுவனம்தான் நம்பிக்கையின் கடைசிப் புகலிடமாக இருக்கிறது. என்ன ஆனாலும் தங்களுக்கு நீதி வழங்கும் அமைப்பு என சாமானிய மக்கள் நம்புவதாக இருக்கிறது. அப்படிச் செயல்படவும் செய்கிறது. நீதித்துறை, தனது கைகளில் சொற்பமாக இருப்பதை வைத்துக்கொண்டு, மகத்தான அரசியல் சாசனப் பார்வையின் பெருமைக்குரிய பாதுகாவலனாக இருக்கிறது. ஒரு நிறுவனமாக நீதித்துறை மிகப் பெரிய சமூக நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது என்பது என்னுள் பெருமித உணர்வை நிரப்புகிறது. இந்த ஒரு அம்சமே அதற்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது. நம்பகத்தன்மை சட்டபூர்வத் தன்மையை அளிக்கிறது. ஒரு நிறுவனத்திற்கு இது மிகவும் பெருமை தரக்கூடிய இடமாகும்.
இது தனது தார்மீக மற்றும் நிறுவன ஆற்றலைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனில், நச்சு கலக்காமல் இருக்க வேண்டும் என்பதை மட்டும் கூற விரும்புகிறேன். சுதந்திரமாக இருக்க வேண்டும். தீவிரமாக இருக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் இப்படி இருக்க வேண்டும். ஒரு சங்கிலி அதன் பலவீனமான இணைப்பிற்கு ஏற்பவே வலுவாக இருக்கும். அதாவது, ஒரு அமைப்பின் ஆக பலவீனமான பகுதியே அதன் இருப்பைத் தீர்மானிப்பதாக இருக்கும். ஒரு நிறுவனமும் அப்படித்தான். சுய பரிசோதனையில் நாம் துவங்க வேண்டும் எனில் இங்கிருந்து துவங்கலாம். சேருமிடம் அல்ல, செல்லும் வழியில் நாம் தவறு இழைக்காமல் இருப்பதே முக்கியம். அதுவே எதிர்காலத்தில் நம்மை அடையாளப்படுத்தும். தவறு இழைக்காமல் இருத்தல் என்பதே நமது முயற்சியாகவும் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். இதுதான் சிறந்த உலகிற்கான என் லட்சியக் கற்பனை.
இது பற்றி காரல் யூங் கூறியதை நான் அறிவேன். “எந்த வகையான போதையும் மோசமானதுதான் – அது மதுவோ, மார்பைனோ அல்லது லட்சியவாதமோ” என்று அவர் கூறியிருக்கிறார். மற்ற விஷயங்களில் அவர் சொல்வது சரியா என்று எனக்குத் தெரியாது, ஆனால், லட்சியவாதம் என்பதும் போதைதான். ஆனால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேருண்மையாகவே கருதி அதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
மிக்க நன்றி.
ஜெய்ஹிந்த்.
நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/india/justice-ranjan-gogoi-at-rng-lecture-independent-judges-and-noisy-journalists-are-democracys-first-line-of-defence-5257119/