சதத் ஹசன் மான்ட்டோ. இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானுக்கு குடியேறி மிக இளம் வயதிலேயே உயிரை விட்ட மாபெரும் கலைஞன். தன் வாழ்நாளில் அங்கீகரிக்கப்படாத பல மேதைகளைப் போலத்தான் மான்ட்டோவும் அவர் வாழ்ந்த காலத்தில் மதிக்கப்படவில்லை.
உருது மொழி எழுத்தாளரான சதத் ஹசன் மான்ட்டோ, அவர் வாழ்ந்த 42 வருடங்களுக்குள், 22 சிறுகதை தொகுப்புகள், ஒரு புதினம், ஐந்து வானொலி நாடகங்கள், மூன்று கட்டுரை தொகுப்புகளை படைத்தவர். சமுதாயத்தின் அழுக்குகளை, யாரும் பேசத் தவறும் விடயங்களை பேசியவர். விலை மகளிரைப் பற்றி வேதனைப் பட்டவர். அவர்களின் வலிகளை உணர்ந்தவர். அவர்களின் காயங்களை பதிவு செய்தவர்.
அவர் தன் வாழ்நாளில் 6 முறை, ஆபாசமாக கதைகள் எழுதியதற்காக வழக்கை சந்தித்தார். மூன்று முறை பிரிட்டிஷ் இந்தியாவில். மூன்று முறை பாகிஸ்தானில்.
இந்துக்களும், இஸ்லாமியர்களும், இவர் சமுதாயத்தின் அழுக்குகளை தோலுரிப்பதை விரும்பவில்லை. அவரை முடக்க முயற்சித்தார்கள் அவர்கள் எடுத்த இந்த முயற்சி, மான்ட்டோவின் ஆளுமையை கடுமையாக பாதித்தது. அவர் மனச்சிதைவுக்கு ஆளானாரா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், அவர் படைப்புகள் அவரின் மனச் சிக்கலால் மேலும் மேருகேறியது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.
மான்ட்டோ பற்றி நான் கேள்விப் பட்டபோது நான் புதினங்கள் மற்றும் இலக்கியத்தைப் பற்றி படிப்பதை நிறுத்தியிருந்தேன். போதும். இனி அரசியல் பற்றி மட்டுமே படிப்பது எழுதுவது என்று முடிவெடுத்திருந்த பிறகே மான்ட்டோ பற்றி அறிந்திருந்தேன். ஆனால், இலக்கியம், அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து என் மதிப்பீடு குறையவில்லை. ஆனால் 2014, குறிப்பாக மோடி பதவியேற்ற பிறகு, நான் எனது இலக்கிய வாசிப்பை ஏறக்குறைய ஓரங்கட்டிவிட்டேன் என்றே சொல்லலாம். மான்ட்டோ இடதுசாரிகளையும் விமர்சித்த காரணத்தாலேயே, இடதுசாரிகள், அவரை, இருட்டடிப்பு செய்தனர். இல்லையென்றால், நான் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தபோதே, இவர் படைப்புகளை படித்திருப்பேன்.
மார்க்சிஸ்ட் கட்சியில் ஒரு வழக்கம் இருக்கிறது. இடதுசாரி எழுத்தாளர்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு உவப்பானவர்களின் படைப்புகளை மட்டுமே படிப்பதை ஊக்குவிப்பார்கள். ஏன்ன காரணத்தாலோ, கவிஞர் ஜீவா, சிபிஐ கவிஞராக அறியப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு கூட்டத்தில் கூட, ஜீவாவின் கவிதை நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படமாட்டா. தற்போது நிலைமை மாறியிருக்கிறதா என்பதை தோழர்கள் விளக்க வேண்டும்.
நிற்க. ஒரு கட்சியில் சேர்பவன் வளர்ந்து தெளிவு பெற வேண்டுமானால், மாற்று முகாமை சேர்ந்தவனின் படைப்புகளை படித்து, அவனை விவாதிக்க வைக்க வேண்டும். அவன் சந்தேகங்களை விளக்க வேண்டும். அவனிடம் இடது சாரி சிந்தனைகள் ஏன் சிறந்தவை என்பதை புரியவைக்க வேண்டும். அதில் தெளிவு பெற்றவன், பின்னர் எந்த கட்சிக்கும் செல்ல மாட்டான். ஆனால் இதை எதையுமே மார்க்சிஸ்டுகள் செய்ய மாட்டார்கள். “அதையெல்லாம் படிக்காதீங்க தோழர். அது திரிபுவாதிகள் எழுதியது“ என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள்.
பெரியார் எடுத்தவுடன் கடவுள் மறுப்பை பேசவில்லை. ஒரு பாப்பாரப் பய ஒரு தலித்தை தெருவுல செருப்பு போட்டு நடக்காத, நீ பாத்தா தீட்டு, தொட்டா தீட்டுன்னு சொல்றான். அதையும் ஒரு மனுசன் ஏன் ஏத்துக்கறான் என்று பெரியாருக்கு வியப்பு. அதற்கான காரணமாக பார்ப்பனர்கள் சொல்வது, கடவுள் என்பதை புரிந்து கொண்டார். உடனடியாக கிளம்பி, காசி, வாரணாசி என்று புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே சென்று, பார்ப்பனர்கள் செய்யும் அட்டூழியங்களை நேரில் கண்டார் இந்த அத்தனை அட்டூழியங்களையும் இவர்கள் கடவுளின் பெயரால்தான் செய்கிறார்கள் என்பதை கண்டறிந்தார். ஆக, இவர்களின் பயத்தை போக்க வேண்டும். பார்ப்பனர்களின் சாதி வெறியால் பாதிக்கப்படும் தலித்துகள் உள்ளிட்ட பார்ப்பனரல்லாதோரை, கடவுளை காட்டி பயமுறுத்துவதில் இருந்து, அவர்களை மீட்க வேண்டும் என்றுதான் பெரியார் கடவுள் மறுப்பையே தொடங்கினார்.
கடவுளே இல்லை என்று தெரிந்த பெரியாருக்கு பிள்ளையார் சிலையை உடைப்பது ஒரு முட்டாள்த்தனம் என்று தெரியாதா ? கடவுளை நம்பிக்கொண்டு, பார்ப்பன ஆதிக்கத்தை மரியாதையோடு ஏற்றுக் கொள்பவர்களிடம் அடேய் கடவுள் இல்லடா. நான் பிள்ளையார் சிலையை உடைக்கிறேன். முடிஞ்சா தண்டிக்க சொல்லுடா என்று நிரூபிப்பதற்காக மட்டுமே பெரியார் அதை செய்தார்.
அது போல, அனைவற்றையும் ஒருவன் கற்று அறிந்தால் மட்டுமே, எது சரியான கொள்கை என்பதை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அதை செய்வதேயில்லை. இதர கட்சிகளைப் பற்றி பேசுவதில் பொருளில்லை.
இதன் காரணமாகத்தான் சிபிஎம் கட்சி மான்ட்டோவை கொண்டாடவில்லை. பெரியாரையே மிகச் சமீபத்தில்தானே ஏற்றுக் கொண்டார்கள்.
மீண்டும் மான்ட்டோவுக்கு வருவோம். மான்ட்டோவைப் போலவே, கொண்டாடப்பட தவறிய ஒரு கலைஞன்தான் கவிஞர் பாரதி. அவன் வாழ்ந்த காலத்தில் அவன் காவல்துறையால் வேட்டையாடப்பட்டான். அவன் தப்பி பாண்டிச்சேரி சென்றான். அவன் வாழ்ந்த காலத்தில் அவன் கொண்டாடப்பட்டிருந்தால் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து, மேலும் சில படைப்புகளை கொடுத்திருக்க கூடும்.
அது போல வாழ்ந்தவன்தான் மாண்ட்டோ.
அந்த மாண்ட்டேவைப் பற்றி, பேரழகி நந்திதா தாஸ் அவர் பயோபிக்கை திரைப்படமாக மாண்ட்டோ என்று திரைப்படமாக எடுத்திருக்கிறார்.
நான் மாண்ட்டோ போன்ற ஒரு பெரும் படைப்பாளி அல்ல. துடைப்பாளி என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அவனைப் போலவே, வழக்குகளை சந்தித்தவன். நீதிமன்றத்தில், அதிகாரிகள் பேசிய டேப்புகளை திருடியவன் என்று குற்றம் சாட்டப்பட்டவன். ஆனால் அத்திரைப்படத்தை பார்த்தபோது, பல இடங்களில் அழுதேன். கண்ணாடியை பார்ப்பது போல உணர்ந்தேன்.
குறிப்பாக நீதிமன்றத்தில் இருந்த அத்தனை பேரும் மாண்ட்டோவை கேவலமானவனாக பார்த்த காட்சியின்போது, நான் என்னையே உணர்ந்தேன். திரைப்படத்தில், மாண்ட்டோ, யார் பேச்சையும், யார் பார்வையையும் கண்டு கொள்ளாமல் அவன் நினைத்ததை பேசியதை நான் செய்திருக்கிறேன். துணிச்சலாக நீதிபதியை எதிர்த்து பேசியிருக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளை கண்டு அஞ்சாமல், என் எழுத்தை நிறுத்தாமல் எழுதியிருக்கிறேன். வழக்கு நிலுவையில் இருந்தபோதே, நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் விமர்சித்து எழுதியிருக்கிறேன். எழுதாதே, வழக்கில் இருந்து விடுவிக்கிறோம் என்ற சமாதான பேச்சுவார்த்தைகளை உதாசீனம் செய்துவிட்டு, மேலும் தீவிரமாக எழுதியிருக்கிறேன்.
மாண்ட்டோ, அவர் குடும்பத்தை கவனிக்காமல் சமூகத்தை உற்று நோக்கி காதலித்தைப் போலத்தான் நானும் இருந்திருக்கிறேன். இருந்து கொண்டிருக்கிறேன். இருப்பேன். இந்த வயதுக்கு பிறகு என்னை மாற்றிக் கொள்ள முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.
42 வயதுக்குள் மாண்ட்டோ உருவாக்கிய அற்புத படைப்புகளைப் போல நானும் உருவாக்க வேண்டும் என்று ஆவல் இருக்கிறதுதான். ஆனால் அவரைப் போன்ற திறமை எனக்கு வாய்க்கவில்லை.
இந்த திரைப்படம், என்னை அழ வைத்ததும், இப்படத்தை நான் காதலித்ததும், எப்போதும் காதலிக்கப் போவதற்குமான காரணம், நந்திதா தாஸ் என்ற பேரழகியின் திறமை அல்ல. நவாசுத்தின் சித்திக்கி என்ற பிறவிக் கலைஞனின் திறன். இந்த பாத்திரத்தை நவாசுத்தின் தவிர வேறு யாராவது செய்திருந்தால், மாண்ட்டோ படத்தை இப்படி சிலாகித்து உருகி கட்டுரை எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே.
மாண்ட்டோ என்ற திரைப்படத்தின் காட்சியமைப்பு, இசை, திரைக்கதை, ஒளி மற்றும் ஒலிப்பதிவு, வசனங்கள், போன்றவை குறித்து பேச, எனக்கு போதுமான திரைப்பட அறிவு இல்லை என்பதால் நான் அது குறித்து பேசப் போவதில்லை. இத்திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பை நான் பதிவு செய்து விட்டேன்.
நெஞ்சம் நிறைந்தது
நன்றி.