பாதுகாப்புக் களத்தில் பந்தயச் சூதாட்டம்
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விமானங்களின் விலை பற்றிய தகவலைக் கேட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நான் ஒரு மனு அனுப்பினேன். அதற்கு அமைச்சகத்திடமிருந்து, கேட்கப்பட்டுள்ள தகவல் “ரகசியத் தன்மை வாய்ந்தது” என்றும், அதை வெளியிடுவது “பாதுகாப்பிலும் போர்த்திறன் சார்ந்த நலனிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் பதில் வந்தது. இவ்வாண்டு மார்ச் மாதம், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மாக்ரான் தன்னிடம் ஒரு பேட்டியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது, “வெளிப்படுத்தக்கூடிய சில விவரங்களை” இந்திய அரசு எதிர்க்கட்சிகளோடும் நாடாளுமன்றத்திலும் பகிர்ந்துகொள்வதில் தனது நாட்டிற்கு மறுப்பேதும் இல்லை என்றார். அதே மாதத்தில், மோடி அரசு எதிர்பார்க்காத திருப்பமாக, டசால்ட் நிறுவனமே தனது 2017ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கையில், இந்தியாவுடனான ரஃபேல் ஒப்பந்தத்தில் மொத்த விலை 55,000 கோடி ரூபாய் அல்லது 7.4 பில்லியன் டாலர் என்று வெளிப்படுத்தியது.
விசாரணைக் கோரிக்கை
பாஜக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, முன்னணி வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் இந்த ஆகஸ்ட் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடுமையான சொற்களில் பேசிய அவர்கள், இது தொடர்பாக விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும் என்றார்கள். நடந்திருப்பது “ஒரு மிகப் பெரிய ஊழல், அப்பட்டமான அதிகார மீறல், மாபெரும் குற்றச் செயல்,” என்று கூறினார்கள். அசாதாரணமான முறைகேடு என்று குறிப்பிட்ட அவர்கள், உண்மையில் இதுதான் “நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடியது,” என்று எச்சரித்தார்கள்.
விலை வேறுபாடுகள், நிபந்தனை மாற்றங்கள் குறித்த தெளிவான சித்திரம் இனிமேல்தான் கிடைக்க வேண்டும். ஆனால் தீவிர விசாரணை தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது. முந்தைய பேச்சுவார்த்தைகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பாக, கொள்முதல் ஆணை தரப்பட இருந்த 126 விமானங்களில் 18 விமானங்களை மட்டுமே டசால்ட் நிறுவனம் நேரடியாக அனுப்பி வைப்பது, மீதியுள்ள 108 விமானங்களை இந்தியாவில் டசால்ட் கண்காணிப்பில் எச்ஏஎல் நிறுவனம் தயாரிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. இதன் மூலம் மதிப்புமிக்க தொழில்நுட்ப அறிவு இந்தியாவுக்கு கிடைத்திருக்கும். புதிய ஒப்பந்தத்தில், இந்தியாவில் மறு முதலீடு செய்ய டசால்ட் நிறுவனம் கடமைப்பட்டுள்ளது என்றாலும், இந்தியா வாங்க உள்ள 36 ரஃபேல் விமானங்களும் பிரான்சில்தான் தயாரிக்கப்படும். அங்கிருந்து இங்கே தொழில்நுட்பப் பரிமாற்றம் செய்யப்படுவது பற்றி புதிய ஒப்பந்தம் எதுவும் பேசவில்லை.
பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிப்பில் இந்தியாவின் சொந்தத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு அருமையான வாய்ப்பை அரசு தவறவிட்டிருப்பது வியப்புக்குரியது. அதுவும் மோடி ஆட்சியில் இப்படி நடந்திருப்பது மேலும் வியப்பளிக்கிறது. இந்த அரசுதான் தனது மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாகப் பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது குறித்துதான் சொல்லிவந்தது. உள்நாட்டுத் தயாரிப்பு ஊக்குவிக்கப்படும், வெளிநாட்டுக் கூட்டு ஏற்படுத்திக் கொள்ளப்படும், மற்ற நாடுகளிலிருந்து முதலீடுகள் கொண்டுவரப்படும் அதற்காகவே மேக் இன் இந்தியா திட்டம் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் உயரதிகாரிகளே குழம்பிப்போய் சொன்னதை வைத்துப் பார்க்கிறபோது, அநேகமாக வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு தளவாடத் தயாரிப்புக்கான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனத்திற்குக் கிடைக்கவிருந்த பெரும் வாய்ப்பை மோடியே தனது நடவடிக்கையால் தட்டிப் பறித்திருக்கிறார். அந்த வாய்ப்பு ஒரு தனியார் நிறுவனத்திற்கு மடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் சாதனை
அந்தத் தனியார் நிறுவனம் எப்படிப்பட்டது என்பதுதான், அரசின் இந்த முடிவு பாதுகாப்புக்கு உகந்ததுதானா என்று யோசிக்க வேண்டிய நிலையை நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் குரூப் நிறுவனம் அனில் அம்பானிக்கு அவருடைய தந்தையின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் பிரிக்கப்பட்டதால் வந்து சேர்ந்ததாகும். இந்தக் குழுமத்தை அவர் நிறுவிய இரண்டு ஆண்டுகளில், 2008ல் அவருடைய சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலர் (சுமார் 3,034 கோடி ரூபாய்) என்ற அளவை எட்டியது. அன்று இந்திய அரசின் வருடாந்திர பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட ஒன்றரை மடங்கு அதிகம். ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் அனில் அம்பானி. 2018இல் அவரது சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலர் (சுமார் 173 கோடி ரூபாய்) அளவுக்குச் சுருங்கியது. அது ரஃபேல் ஒப்பந்தத் தொகையில் மூன்றிலொரு பங்கை விடவும் குறைவு.
அனில் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குரூப் குழுமம் எப்படிக் குப்புற விழுந்திருக்கிறது என்பதற்கான அறிகுறி இது. தற்போதைய நிதியறிக்கைகளின்படி அவரது குழுமத்திற்கு உட்பட்ட மையமான நான்கு நிறுவனங்களாகிய ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டெட், ரிலையன்ஸ் கேப்பிடல் லிமிட்டெட், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் லிமிட்டெட், ரிலையன்ஸ் பவர் லிமிட்டெட் ஆகியவற்றின் கடன் அளவு 1 லட்சம் கோடி ரூபாய் (சுமார் 15 பில்லியன் டாலர்) என்ற உச்சத்துக்குப் போயிருக்கிறது.
இந்நிலையில்தான் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் புதிய நம்பிக்கையாய் வந்தது ரஃபேல் ஒப்பந்தம். பாதுகாப்புத் தளவாட வணிகத்தின் மூலமாக இந்நிறுவனத்திற்கு மிகப் பெரிய நிதி கிடைக்க வழி செய்யப்பட்டிருக்கிறது. ஒப்பந்தத்தின்படி சுமார் 30,000 கோடி ரூபாய் இந்தியத் தொழில்துறையில் மறுபடியும் பாய்ச்சப்பட வேண்டும். டசால்ட் நிறுவனம் மறுமுதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக, தனது முதன்மை இந்தியக் கூட்டாளியாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிட்டெட் குழுமத்தைச் சேர்த்துக்கொண்டுள்ளது. சென்ற ஆண்டு ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்திற்கு இந்த பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து 21,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாண்டு ஜூலையில் டசால்ட் நிர்வாகம் தனது மறுமுதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், ரிலையன்ஸ்சுடனான கூட்டு வணிகப் பங்காகவும் 100 மில்லியன் யூரோ (சுமார் 850 கோடி ரூபாய்) முதலீட்டை அறிவித்துள்ளது. டசால்ட் தொழிற்சாலைக்கு ரஃபேல் விமானத்திற்கான பல்வேறு துணைப் பொருள்களை விற்பனை செய்கிற வேறு சில நிறுவனங்களும், தங்களுக்குக் கிடைக்கும் விலையில் பாதியை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதால் ரிலையன்ஸ் குழுமத்தின் ராணுவத் தளவாடப் பிரிவுடன் கூட்டு ஒப்பந்தங்களையோ புரிந்துணர்வு ஒப்பந்தங்களையோ செய்துகொண்டுள்ளன.
பாதுகாப்புத் துறைக்காக இந்தியா செலவிடுவதில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குப் பந்தயப் பணம் போல் கிடைத்திருக்கும் மிகப் பெரிய தொகையின் ஒரு பகுதிதான் இது. ராணுவக் கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட வேறு சில பாதுகாப்புத் துறை சார்ந்த தயாரிப்புத் தொழில்களில் நுழைய அம்பானி நிறுவனம் அதிரடி முனைப்புடன் அடியெடுத்து வைத்திருக்கிறது. அடுத்த பதினைந்து ஆண்டுகளில் “பாதுகாப்புத் துறை சந்தையில் தனியார் துறைக்கு 15 லட்சம் கோடி ரூபாய் வணிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்று 2016ல் கூறினார் அம்பானி.
பெரிய வணிக ஒப்பந்தங்கள் என்று வருகிறபோது நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, மிகக் குறைவாகவே நிறைவேற்றுவது என்ற வரலாறு ரிலையன்ஸ் குழுமத்துக்கு உண்டு. உதாரணமாக, மூன்று பெரிய மின் திட்டங்களில் இரண்டு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் ரிலையன்ஸ்சுக்குக் கிடைத்தும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை. அதே போல் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு தடத்தை இயக்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தும் பின்வாங்கியது. ரிலையன்ஸ் குழுமத்தின் இப்படிப்பட்ட கடந்தகாலத் தோல்விகளால் பொதுநலனுக்கும் அரசாங்கக் கருவூலத்திற்கும் மோசமான பாதிப்பு ஏற்படவே செய்தது. ஆனாலும் அந்தப் பாதிப்புகள் அந்தந்த வட்டார அளவில் முடிந்துவிட்டன. ஆனால், இப்படிப்பட்ட செயல்திறனோடு பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்களில் அந்த நிறுவனம் ஈடுபடுகிறது என்றால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நாடுதழுவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் கடந்தகாலச் சாதனைகளையும் தற்போதைய அதன் நிதி நிலவரத்தையும் வைத்துப் பார்க்கிறபோது, ரிலையன்ஸ் நிறுவனத்தை நம்பி ஒப்படைப்பது என்பது இந்தியாவின் தற்காப்பு வலிமையைப் பிணையாக வைத்துச் சூதாடுவதைப் போன்றதுதான்.
ஆஃப்செட் திருத்தம்
ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் குரூப் ஊடுருவ அனுமதித்தது யார்? இது ஒரு சிக்கலான கேள்வி. மத்திய அரசு தனக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறது. கொள்முதல் ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்ட பிறகு, மறுமுதலீட்டு ஏற்பாடுகளின்படி இந்தியாவில் தனது கூட்டாளிகள் (அதிகார வட்டார மொழியில் சொல்வதானால் “ஆஃப்செட்” கூட்டாளிகள்) யார் என்று முடிவு செய்கிற அதிகாரம் டசால்ட் நிர்வாகத்திற்கு இருக்கிறது என்றும் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. 2018 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அமைச்சக அறிக்கை ஒன்றில், டசால்ட் நிறுவனம் இந்தியாவில் யாருடன் இணைந்து செயல்படப்போகிறது என்பதே அமைச்சகத்துக்குத் தெரியாது என்று கூறப்பட்டிருந்தது. ஒப்பந்தப்படி டசால்ட் நிறுவனம் தனது ஆஃப்செட் கூட்டாளி யார் என்பதைப் பின்னொரு நாளில், கூட்டுக் கடன் நிதிக்காக விண்ணப்பிக்கிறபோது, தெரிவித்தால் போதும். அல்லது, ஆப்செட் கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதற்கு ஓராண்டு முன்பாகத் தெரிவித்தால் போதும்.
ஒப்பந்தத்தில் இப்படிக் கூட்டாளி நிறுவனம் பற்றி தாமதமாகத் தெரிவிக்க வழி செய்யப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அமைச்சசம் சொல்லாமல் விட்டது என்னவென்றால், பாதுகாப்புத் துறை சார்ந்த வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்கள் தொடர்பாக ஏற்கெனவே இருந்துவந்த நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்ட பிறகுதான் இவ்வாறு வழி செய்யப்பட்டது என்பதைத்தான். ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி, ஒரு வெளிநாட்டு நிறுவனம் இறுதி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு முன்பாக, தனது இந்தியக் கூட்டாளி யார் என்பதைத் தெரிவித்துவிட வேண்டும். அதன் பிறகுதான் இந்திய அரசு அதைப் பரிசீலித்து தனது ஒப்புதலை வழங்கும். இந்த நடைமுறை, 2015 ஆகஸ்ட்டில், டசால்ட் நிறுவனத்துடனான முந்தைய ஒப்பந்தம் தள்ளுபடி செய்யப்பட்ட ஐந்தாவது நாளில், திருத்தப்பட்டது.
மோடி அரசின் நடவடிக்கைகளும் அம்பானி நிறுவனத்தின் வணிக நலன்களும் எப்படித் தற்செயலாக ஒத்துப்போகின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. பாதுகாப்புத்துறைத் தளவாட வணிகக் களத்தில் அம்பானி கால்வைத்துள்ள பின்னணியில் மேலும் பல எடுத்துக்காட்டுகள் கிடைக்கும்.
சாகர்
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/business/india-gambles-defence-interests-reliance-group
தமிழில்: அ. குமரேசன்