பாதுகாப்புக் கொள்முதலில் குளறுபடிகள்
விடுதலையடைந்தபோது இந்தியாவுக்குக் கிடைத்த ராணுவத் தளவாடங்களும் உள்கட்டுமானங்களும் பிரிட்டிஷ் அரசு விட்டுச் சென்றவைதான். இவற்றை வலுப்படுத்திக்கொள்வதில் புதிய இந்தியா பெரிதும் சார்ந்திருந்தது அரசுத் துறை தொழில்மய நடவடிக்கைகளைத்தான். அன்றைக்கு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே இப்படித்தான் கட்டமைக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்திகள் அதிகரித்தன என்றாலும் கூட, காலங்கடந்த தொழில்நுட்பங்களுடன் போராட வேண்டியிருந்தது. முன்னேறிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களைப் பெற, அதிகச் செலவில் இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த இறக்குமதி ஒப்பந்தங்களில் இடைத்தரகர்களின் தலையீடு சர்வசாதாரணமாக நடந்தது. 1980களில் ராஜிவ் காந்தி அரசைக் கீழிறக்கிய போஃபோர்ஸ் பீரங்கி கமிஷன் விவகாரம் இதற்கொரு சான்று.
2001க்குப் பிறகு பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்திகளில் தனியார் துறையினர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது என்றாலும் இந்த நடைமுறைகள் இன்னும் மாறவில்லை. இன்று இந்தியா, 9 அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட ஒரு மிகப் பெரிய ராணுவத் தளவாடத் தொழில் தளத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தாமதமான உற்பத்தி, மிதமிஞ்சிய நிதி ஒதுக்கீடு, தரம் குறைந்த தயாரிப்பு போன்ற பிரச்சினைகளால் பீடிக்கப்பட்டுள்ளன.
தனியார் துறையிலும் தேவையான அடிப்படை வசதிகளையும் அனுபவங்களையும் பெற்றிருப்பவை ஒரு சில நிறுவனங்கள்தான். ஆகவே இடைத்தரகர்கள் தலையீடு இப்போதும் தொடர்கிறது. இன்று உலகிலேயே மிக அதிக அளவுக்கு ஆயுதங்களை இறக்குமதி செய்கிற நாடுகளில் ஒன்று இந்தியா. உலக அளவிலான இறக்குமதிகளில் இந்தியாவின் பங்கு 12 சதவீதம். தற்போதைய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 2.95 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உலக ஆயுதச் சந்தையில் இந்தியா ஒரு பெரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், நாட்டின் சொந்த பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் திறன் சுருங்கிவருகிறது.
ராணுவத் தளவாடங்கள் இறக்குமதிகள் மிகப் பெரிய அளவுக்கு நடந்துகொண்டிருந்தாலும் இந்தியாவின் தேவைகள் அதைவிடப் பெரிய அளவுக்கு இருக்கின்றன. படைகளுக்கான ஆயுதத் தேவைகளில் பெரும் இடைவெளிகள் இருக்கின்றன. இருப்பவையோ கிட்டத்தட்டப் பழைய நிலைமையில் இருக்கின்றன அல்லது ஏற்கெனவே முற்றிலுமாகப் பழசாகிவிட்டன. தற்போதுள்ள கொள்முதல் நடைமுறைகள் ஒரு பக்கம் கடுமையானவையாக இருக்கின்றன. இன்னொரு பக்கம் மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன. முடிவுகள் எடுப்பதற்கு அசாதாரணமான முறையில் தாமதமாகிறது. ஆசியக் கண்டத்தில் இந்தியாவிற்கு முக்கியப் போட்டியாளராகக் கருதப்படும் சீனா தனது படைகளை வேகமாக நவீனப்படுத்தி வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது. போர் விமானத் தயாரிப்பில் ஏற்கெனவே இறங்கிவிட்ட சீனா, இப்போது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்யவும் தொடங்கிவிட்டது.
ராணுவ வலிமையை நவீனமாக்கும் திட்டம்
மத்திய ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடனேயே மோடி இந்தியாவின் ராணுவ வலிமையை நவீனமாக்குவதற்கான லட்சியத் திட்டங்களை அறிவித்தார். இந்தியாவுக்குள்ளேயே பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை வளர்ப்பதற்கான பெரியதொரு வாய்ப்பாக இது அமையும் என்று மக்கள் பலரும் நினைத்தனர். அவருடைய “மேக் இன் இந்தியா” ஆரவாரமும் சேர்ந்துகொள்ள, சிக்கல்கள் சரிப்படுத்தப்படும், பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புக் களத்தின் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. தயாரிப்பு உரிமங்களை வழங்குவதில் உள்ள கடும் விதிகள் தளர்த்தப்படும், கொள்முதல் நடைமுறைகள் எளிதாக்கப்படும், நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும், இவற்றின் விளைவாக அரசுத் துறை தனியார் துறை இரண்டிலுமே தளவாட உற்பத்தித் திறன் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கிவிட்டது போலவும் தோன்றியது. தளவாடக் கொள்முதலில் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கொள்முதல் நடைமுறை விதிகளில் “உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட” என்ற புதிய வகைப்பாடு 2016இல் சேர்க்கப்பட்டது. வெளிநாட்டு நேரடி முதலீகளை அதிகரிப்பது போன்ற கொள்கை நடவடிக்கைகளோடு, இந்தியாவில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை மேம்படுத்துவதில் ஈடுபடும் சிறு தொழில்கள் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு 90 சதவீத நிதியளிக்கப்படும் என்றும் மோடி அரசு வாக்குறுதி அளித்தது. தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கான உரிமக் காலம் 3 ஆண்டுகளிலிருந்து 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்கிற ‘ஆஃப்செட்’ கொள்கையில் ‘சேவைகள்’ என்ற பிரிவு மறுபடியும் சேர்க்கப்பட்டது. அது ஆப்ஃசெட் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான ஒரு வாசலாக இருக்கும் என்று கூறப்பட்டது.
எதுவும் இங்கே மாறவில்லை
இப்படியான சில கொள்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும்கூட, நான் சந்தித்த பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்பாளர்களும், வல்லுநர்களும், முன்னாள் ராணுவ அதிகாரிகளும் அடிப்படை நிலவரம் எதுவும் மாறவில்லை என்றே கூறினர். நாடு தனது ராணுவத் தளவாடத் தேவைகளுக்குத் தொடர்ந்து இறக்குமதிகளையே நாட வேண்டியிருக்கிறது என்றனர். பெங்களூருவில் விமானங்களுக்கான ஆன்ட்டெனா தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநரான ரவி நாயுடு, “எல்லாத் தொழில்நுட்பங்களும் இப்போது வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்துதான் கொண்டுவரப்படுகின்றன. எங்களுடைய தொழிற்சாலைகள் அவர்களுடைய பணிமனையாகிவிட்டன,” என்று கூறினார். இந்தியப் பாதுகாப்புத் துறைத் தொழில் வட்டாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விரிவான இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த இடங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய தளவாடங்களின் பாகங்களை இணைக்கிற வேலைகளுக்குத்தான் பயன்படுத்துகின்றனவேயன்றி, இந்தியாவின் சொந்தத் தயாரிப்புத் திறனை மேம்படுத்த அல்ல என்றும் அவர் கூறினார். அதிகாரக் கட்டமைப்புகள் காரணமாக அவருடைய தொழிற்சாலையைப் போன்ற சிறுதொழில் நிறுவனங்களால் அரசாங்கத்தை நேரடியாக அணுக முடிவதில்லை, நேரடியாகத் தொழில் ஒப்பந்தம் எதையும் பெற முடிவதுமில்லை.
கொள்முதல் நடைமுறைகளில் ‘செலவுக்குப் பணமுமில்லை கொள்முதல் உத்தரவாதமுமில்லை’ (நோ காஸ்ட், நோ கமிட்மென்ட்) என்ற ஒரு விதி இருக்கிறது. அதன்படி, நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு நடைமுறைகளுக்கான தொகைகளைத் தங்களது சொந்த நிதி ஏற்பாடுகளிலிருந்துதான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும், அந்தத் தயாரிப்புகள் வாங்கிக்கொள்ளப்படும் என்ற உத்தரவாதமும் இல்லை. “நீங்கள் முதலீட்டுக்குப் பணம் தர வேண்டாம், சரி. ஆனால் என் சொந்தப் பணத்தைப் போட்டுத் தயாரித்த பிறகு அதை வாங்கிக்கொள்வதற்காவது உத்தரவாதம் அளிக்க வேண்டுமல்லவா,” என்று கேட்கிறார் நாயுடு.
அவருடைய ஏமாற்ற உணர்வு புரிந்துகொள்ளத்தக்கதுதான். அரசு அறிவித்த சில நடவடிக்கைகள், பாதுகாப்புத்துறை சார்ந்த தயாரிப்புகளில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவருடைய தொழிற்சாலையைப் போன்ற சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. நடந்தது என்னவென்றால், அவர் எதிர்பார்த்தது போல சிறு நிறுவனங்களுக்குப் புத்தூக்கம் கிடைக்கவில்லை, மாறாக அரசு நடவடிக்கைளால் பெரும் ஆதாயம் அடைந்தவை, இதில் முன்னனுபவமே இல்லாத பெரிய தனியார் நிறுவனங்கள்தான். வெளிப்படத்தன்மையோ ஆரோக்கியமான போட்டிச் சூழலோ வளரவில்லை.
மாறாக, கூட்டுக் கொள்ளைகள் பற்றிய பழைய சந்தேகங்களையும் திட்டமிட்ட முறையில் செய்யப்படும் சிக்கல்களையும்தான் மோடி திட்டங்கள் திரும்பவும் கொண்டுவந்திருக்கின்றன. ரஃபேல் ஒப்பந்தம் இதற்குக் கச்சிதமான முன்மாதிரியாகியிருக்கிறது. புதிய மாற்றங்கள் வருவதற்கு முன், ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக முதலில் எட்டப்பட்டிருந்த உடன்பாடு, அதில் பல குறைகள் இருந்தபோதிலும் கூட, இந்தியாவின் பாதுகாப்புத் துறை எதிர்கொண்டுள்ள சிக்கல்களுக்கு ஓரளவு தீர்வளிப்பதாக இருந்ததென்னவோ உண்மை.
கார்கில் என்னும் திருப்புமுனை
புதிய போர் விமானங்கள் தேவை என்பது 1990ஆம் ஆண்டுகளில் வெளிப்படையாகத் தெரியவந்தது. பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மிக இறுக்கமாக இருந்தன என்பதால், பழங்கால விமானங்களை மேம்படுத்துவதிலும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய விமானங்களைச் சேர்ப்பதிலும் நாடு பின்தங்கியிருக்கிற நிலைமையை அது ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தானுடனான கார்கில் போர் மூண்ட பின்னணியில், 2000ஆவது ஆண்டில் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையில், விமானப் படையில் உள்ள தாக்குதல் நடவடிக்கை, போக்குவரத்து ஆகிய இரண்டு நோக்கங்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ள 40 சதவீத விமானங்கள் விரைவில் வேலைக்காகாதவையாகிவிடும் என்று சுட்டிக்காட்டியது.
பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் களத்திலும், அதன் ராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் எவ்வாறு வாங்கப்படுகின்றன என்பதிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது கார்கில் போர். பாதுகாப்புத் துறைக்கான தயாரிப்புகளில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்குக் கதவுகள் திறக்கப்பட்டன. 26 சதவீதம் வரையில் வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. தளவாடக் கொள்முதல்களை முறைப்படுத்த ஒரு புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவற்றை விரிவாகக் கூறுகிற, சம்பந்தப்பட்டவர்களைக் கட்டுப்படுத்துகிற, பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறைகள் என்ற ஆவணம் ஒன்று 2002ல் உருவாக்கப்பட்டது.
முன்பு, இந்தியாவின் சொந்தப் போர் விமானம் ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கு தேஜஸ் என்ற பெயரும் சூட்டப்பட்டது. அதைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதமும் இந்தப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டதுதான். அந்தத் திட்டம் தொடங்கிப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. அதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் நிதிக்கு மேல் பெருந்தொகை செலவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இன்னமும் அந்த விமானத்திற்கு இறக்கை முளைக்கவில்லை. தேஜஸ் விமானத்தால் விமானப்படையில் எந்த இடைவெறி நீங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அந்த இடைவெளி இன்னமும் தொடர்கிறது. விமானப் படை அந்த இடைவெளியைப் பழைய விமானங்களை வைத்தே, குறிப்பாக சோவியத் யூனியனிடமிருந்து வாங்கப்பட்ட மிக்-21 விமானங்களை வைத்தே, நிரப்பிக்கொண்டிருக்கிறது.
தற்போதுள்ள போர் விமானங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்றை உருவாக்குமாறு அரசுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்தது. அரசு அதனை ஏற்றுக்கொண்டது. நீண்டகாலத் தீர்வாகப் புதிய விமானங்களை விரைவாக வாங்குமாறும் நிலைக் குழு பரிந்துரைத்தது. இந்திய விமானப் படை தனது இருப்புகளையும் தேவைகளையும் மதிப்பீடு செய்து, 126 பன்னோக்குப் போர் விமானங்களை, அதாவது சண்டைக்கும் குண்டு போடுவதற்குமான விமானங்களை, வாங்குவதற்கான அவசரத் தேவை இருக்கிறது என்று அறிக்கை அளித்தது.
இடைத்தரகர்களின் பங்கு
இந்த அவசரத் தேவைக்காக வாங்குவதற்கு முதலில் ஆர்வம் காட்டப்பட்டது ‘மிராஜ்-2000’ என்ற விமானங்களுக்குத்தான். அதுவும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தயாரிப்பே. கார்கில் போரின்போது சிறப்பாக செயல்பட்டவை அந்த விமானங்கள். போரில் இழந்த பழைய பத்து விமானங்களை ஈடுகட்ட 10 புதிய மிராஜ்-2000 விமானங்களை வாங்க அன்றைய பாஜக கூட்டணி அரசு முடிவு செய்தது. மேலும் கூடுதலாக அந்த விமானங்கள் வாங்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்திருந்த நிலையில், டஸ்ஸால்ட் நிறுவனம் இடைத்தரகர்களைப் பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது.
பனாமா நாட்டைச் சேர்ந்த கெய்சர் இன்கார்ப்பரேட்டட் என்ற நிறுவனம், பிரான்ஸ் நீதிமன்றத்தில் டஸ்ஸால்ட் மீது ஒரு வழக்குத் தொடுத்தது. இந்தியாவுக்கு மிராஜ் விமானங்களை விற்றதில் தனக்குத் தர வேண்டிய தரகுப் பணத்தைத் தரவில்லை என்பதுதான் வழக்கு. அந்த வழக்கு மிகப் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. ஏனென்றால் போஃபார்ஸ் ஊழலுக்குப் பிறகு, இடைத்தரகர்களைப் பயன்படுத்துகிற நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவுக்கு விமானங்களை விற்பனை செய்ததில் கெய்சர் ஒரு வேலையும் செய்யவில்லை என்று டஸ்ஸால்ட் நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதாடியது. இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒப்பந்த உறவு 1998 முடிவில் காலாவதியாகிவிட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் தடை விதிக்கப்படாமல் டஸ்ஸால்ட் தப்பித்தது.
அதைத் தொடர்ந்து இந்திய அரசு 126 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை வெளிப்படையான போட்டிக்கு உட்படுத்த முடிவு செய்தது. 2004இல் புதிதாக ஆட்சிக்கு வந்திருந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், பொருத்தமான விமானங்கள் குறித்த தகவல்களை அனுப்புமாறு போர் விமானத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்தது. இதற்காக 42 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தது. சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட கொள்முதல்களிலேயே மிகப் பெரியதாகும். டஸ்ஸால்ட் நிறுவனம் தனது மிராஜ்-2000 விமானங்களை இந்தியாவுக்கு விற்க முயன்றது.
சாகர்
தமிழில்: அ.குமரேசன்
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/business/india-gambles-defence-interests-reliance-group