பாதுகாப்புக் கொள்முதலில் கொள்கை மாற்றங்கள்
2005இல் ‘புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் நடைமுறை’ ஆவணம் ஒன்றை அரசு வெளியிட்டது. இதன் மூலம், பெரிய அளவிலான கொள்முதல்களுக்கான ஒப்பந்த விலைகளில் ஒரு பகுதியை இந்தியாவில் மறு முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதி முதல்முறையாகக் கொண்டுவரப்பட்டது. அந்த விதியிலும் 2016ஆம் ஆண்டில் ஒரு புதிய திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி ஒட்டுமொத்த விலையில் குறைந்தது 30 சதவீதம் இந்தியாவில் மறு முதலீடு செய்யப்பட வேண்டும், தேவைப்பட்டால் கூடுதலாக முதலீடு செய்யவும் அரசு வலியுறுத்தலாம்.
2006இல், இந்திய அரசு 126 விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்த நிலையில், டஸ்ஸால்ட் நிறுவனம் தனது மிராஜ்-2000 விமானங்களைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொண்டது. நடைமுறைத் தாமதத்தின் காரணமாக, அந்தக் குறிப்பிட்ட விமானங்களுக்கான தயாரிப்பு அமைப்பைத் தன்னால் தொடர்ந்து பராமரிக்க இயலாது என்று டஸ்ஸால்ட் நிர்வாகம் கூறியது. அந்த விமானத்தை வாங்க வேறு நாடுகள் முன்வரவில்லை என்பதும் ஒரு காரணம். மிராஜ் விமானத்திற்கு பதிலாக தனது புதிய தயாரிப்பான ரஃபேல் ரக விமானத்தை வழங்கத் தயாராக இருப்பதாக டஸ்ஸால்ட் கூறியது. அதற்காக “ஒற்றை வழி பேரம்” என்ற ஏற்பாட்டைச் செய்துகொள்ளலாம் என்று டஸ்ஸால்ட் தலைமைச் செயல் அலுவலர் கூறினார். போட்டிகள் இல்லாமல் நேருக்கு நேராகப் பேசி முடிவு செய்துகொள்வது என்பதுதான் இதன் பொருள்.
2007ஆம் ஆண்டு வாக்கில் இந்திய விமானப் படையிடம் 32 போர் விமானக் குழுக்கள் இருந்தன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட குழுக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் 7 குறைவு. சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் 126 விமானங்களுக்கான முறையான விண்ணப்பங்களை வரவேற்பதாக இறுதியாக அரசு இறுதியாக அறிவித்தது. 6 வகையான தயாரிப்புகள் போட்டிக்கு வந்தன. ரஃபேல், ஈரோ ஃபைட்டர் டைபூன், மிக்-35, கிரிப்பன், எஃப்-26, எஃப்/ஏ-18 ஆகியவையே அந்த 6 விமானங்கள்.
கொள்முதலில் பின்பற்றப்படவுள்ள நடைமுறை விவரத்தையும் அரசு வெளியிட்டது. போட்டிக்கு வந்த விமானங்கள் எந்த அளவிற்கு விமானப் படைக்கான செயல்பாட்டுத் தேவைகளையும், இதர நிபந்தனைகளையும் ஈடு செய்கின்றன என்பதைத் தொழில்சார் வல்லுநர் குழு ஒன்று முதலில் மதிப்பீடு செய்யும். அதற்காகத் தீவிரமான சோதனைகள் மேற்கொள்ளப்படும். மதிப்பீடுகளும் சோதனைகளும் முடிந்த பின் வாங்கத்தக்க விமானங்களின் பட்டியல் இறுதிப்படுத்தப்படும். அந்தப் பட்டியலிலிருந்து தயாரிப்பு நிறுவனங்களின் வணிகம்சார் முன்மொழிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஒப்பீடு செய்யப்படும் என்று அந்த ஆவணம் கூறியது. இந்த நடைமுறைக்கான வழிகாட்டல் கொள்கையையும் அரசு அறிவித்தது. “தேர்வு நடைமுறைகள் போட்டித் திறனுடன், வெளிப்படைத்தன்மை வாய்ந்தவையாக, விலையாகத் தரப்படும் பணத்திற்கு உரிய மதிப்பு கிடைக்கச் செய்பவையாக இருக்க வேண்டும்” என்று அது கூறியது. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட நிறுவனங்கள் “உலக அளவில் வளர்வதற்கான வாய்ப்பை பெற” உதவுவதாக இருக்க வேண்டும் என்றும் அது கூறியது.
வாக்குறுதியில் போட்டி
ஒப்பந்தத்தைப் பெறும் நிறுவனம் பாதித் தொகையை இந்தியாவில் மறு முதலீடு செய்ய வேண்டும் என அமைச்சரவை திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியது. போட்டிக்கு வந்த ஒவ்வொரு நிறுவனமும் தனக்கு ஒப்பந்தம் கிடைத்தால் இந்தியாவுக்கு என்னென்ன செய்து கொடுக்கப்படும் என்று வாக்குறுதியளிப்பதில் ஒன்றை ஒன்று விஞ்ச முயன்றன. எப்/ஏ-18 விமானத்தின் தயாரிப்பாளர்களான போயிங் நிறுவனம் இந்தியாவின் பத்துக்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களுடன் பாதுகாப்புத் தளவாட நிறுவனங்களுடனும் இதர பல நிறுவனங்களுடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகக் கூறியது. அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்டின் நிறுவனம் தனது எப்-16 விமானங்களுக்கான முழுத் தொழிற்சாலைகளை அமெரிக்காவைத் தாண்டி வேறு பல நாடுகளிலும் ஏற்கெனவே நிறுவியுள்ளதாகத் தெரிவித்தது. யூரோ ஃபைட்டர் டைஃபூன் விமான தயாரிப்பாளர்களான ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு அந்த விமானத்தின் எதிர்காலத் திட்டங்களில் இந்தியாவை ஒரு பங்காளியாகச் சேர்த்துக்கொள்வதாக உறுதி அளித்தது.
இதனிடையே டஸ்ஸால்ட் நிறுவனம் ரஃபேல் ஒப்பந்தத்தின் கீழ் முக்கியமான தொழில்நுட்பக் கூறுகளை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள பிரெஞ்சு அரசு அனுமதியளித்துவிட்டது என்று தெரிவித்தது. “தொழில்நுட்பப் பகிர்வு பற்றி நாங்கள் சொல்கிறோம் என்றால் அது முழுமையான தொழில்நுட்பம்தானே அன்றி, இதிலே கொஞ்சம் அதிலே கொஞ்சம் என்பதாக அல்ல,” என்று டஸ்ஸால்ட் உயரதிகாரி ஒருவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
2009 ஏப்ரலில் பல்வேறு இந்தியப் பத்திரிகைகளில் வந்த செய்திகள், தொழில்நுட்பக் கூறுகள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லாததால் போட்டியிலிருந்து டஸ்ஸால்ட் நிறுவனம் விலகக் கூடும் என்று தெரிவித்தன. அடுத்து நடைபெற இருந்த பல சோதனைகளிலிருந்து ரஃபேல் விமானம் ஒதுக்கி வைக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு டஸ்ஸால்ட் மறுபடியும் போட்டிக் களத்திற்கு வந்தது. அதன் பின்னணியில் பிரான்ஸ் அரசாங்கத்தின் அரசுறவு முறையிலான தலையீடுகள் இருந்தன என்று கூறப்படுகிறது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு தளவாடக் கொள்முதல் குழு, ரஃபேல் விமானங்களைத் தள்ளுபடி செய்வது என்ற முந்தைய முடிவைக் கைவிட்டுவிட்டது என்று தன் பெயரை வெளியிட விரும்பாத பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “முந்தைய முடிவு வெறும் ஆவணங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான், தற்போது டஸ்ஸால்ட் நிறுவனம் தேவையான பதில்களை முழுமையாகத் தெரிவித்துவிட்டது” என்றும் அவர் கூறினார்.
இந்திய விமானப் படைக்கான இரண்டு முக்கியமான சோதனைத் தளங்களில் ஒன்று ராஜஸ்தான் பாலைவனம், இன்னொன்று மிக உயரத்தில் உள்ள மலைப்பகுதியான லடாக். போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து விமானங்களும் இந்த இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அந்தச் சோதனைகள் பற்றிய செய்திகள் விரிவாக வெளிவந்தன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டும், தங்களது அரசாங்கங்கள் மூலமாகவும் தங்களுக்கே ஒப்பந்தம் கிடைப்பதற்கு ‘லாபி’ செய்துகொண்டிருந்தன. புதிய அரசு இவற்றைக் கையாண்டுகொண்டிருந்த நிலையில், டஸ்ஸால்ட் நிறுவனத்தின் இந்திய மேலாளர் பி.வி. ராவ், விமானப் படையுடன் மோதினார். பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தளவாடக் கண்காட்சியில் ரஃபேல் விமானத்தை நிறுத்துவதற்கான இடத்தை ஒதுக்குவதற்கு விமானப்படை அதிகாரி (விங் கமாண்டர்) ஒருவர் லஞ்சம் கேட்டார் என்று ராவ் குற்றம் சாட்டினார்.
எரிச்சலடைந்த விமானப் படை, இந்தச் சம்பவம் பற்றி நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவிப்பதற்கு முன்பாகத் தனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று புகார் செய்தது. எதிர்காலத்தில் இந்திய விமானப் படையுடன் ராவ் தொடர்புகொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட விங் கமாண்டர் ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது பி.வி. ராவ், அதே பிரெஞ்சு நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான, தெற்கு தில்லியில் செயல்படும் பட்டியலிடப்படாத நிறுவனங்களில் ஒன்றான ‘டஸ்ஸால்ட் ஏர்கிராப்ட் சர்வீசஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
2011இல் இந்திய அரசு தனது தேர்வுப் பட்டியலை ரஃபேல், டைஃபூன் ஆகிய இரண்டு விமானங்களோடு சுருக்கியது. டஸ்ஸால்ட் நிறுவனமும் யூரோ ஃபைட்டர் கூட்டமைப்பும் தங்களது வணிக ஏற்பாடுகளைத் தொகுத்தளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து ரஃபேல் விமானத்திற்கு ஆதரவாக பிரெஞ்சு அரசின் அதிகாரிகளும், டைஃபூன் விமானத்திற்கு ஆதரவாக கூட்டமைப்பில் பிரிட்டன் ஒரு உறுப்பினர் என்ற முறையில் பிரிட்டிஷ் அரசின் அதிகாரிகளும் இந்தியாவுக்கு வந்து சென்றனர்.
அந்த ஆண்டு கோடையில், 52 மிராஜ்-2000 விமானங்களைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை இந்திய அரசு டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் செய்துகொண்டது. அதற்காக மொத்தம் 11 ஆயிரம் கோடி ரூபாய் (ஒவ்வொரு விமானத்துக்கும் சுமார் 450 லட்சம் டாலர்) ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இது பற்றி எழுதிய, பாதுகாப்புத் துறை விவகாரங்களில் வல்லுனரான கட்டுரையாளர் அஜய் சுக்லா, இந்த ஒப்பந்தத்திற்காக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள தொகை மிக அதிகம் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரத்தினர் கருதுவதாக குறிப்பிட்டிருந்தார். மிராஜ்-2000 விமானங்களுக்கான உதிரி பாகங்களுக்குக் கசக்கிப் பிழிந்து மிக அதிக விலை பெற்றதன் மூலம், டஸ்ஸால்ட் நிறுவனம் தங்களது மதிப்பில் தாழ்ந்துவிட்டது என்று படை விமானிகள் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டஸ்ஸால்ட் நிறுவனத்துக்குக் கிடைத்த வாய்ப்பு
2011 இறுதியில் பாதுகாப்பு அமைச்சகம் ரஃபேல், டைஃபூன் ஆகிய நிறுவனங்கள் அளித்திருந்த வணிக ஒப்பந்த மனுக்களைத் திறந்தது. அதற்கு அடுத்த ஆண்டு முற்பகுதியில் குறைந்த விலை கோரியிருப்பது டஸ்ஸால்ட் நிறுவனம்தான் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து வணிகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டியதுதான்.
அதுவரையில் சிரம தசையில் இருந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய ஊக்க மருந்தாக அமைந்தது. பிரெஞ்சு அதிபர்கூட, “இந்த நாளுக்காக நாங்கள் 30 ஆண்டுகள் காத்திருந்தோம்,” என்று அறிவித்தார். “அடிவாங்கிக் கொண்டிருந்த பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கும் அதன் பொருளாதாரக் கௌரவத்திற்கும் பெருமளவில் கைதூக்கி விடுவதாக இந்த ஒப்பந்தம் வந்திருக்கிறது,” என்று எழுதினார் ‘தி கார்டியன்’ கட்டுரையாளர் ஏஞ்ஜெலிக் கிறிஸாஃபிஸ்.
தனது மிராஜ்-2000 உற்பத்தியை நிறுத்திவிட்ட டஸ்ஸால்ட் நிறுவனம் ரஃபேல் உற்பத்தியை பராமரிப்பதற்கும் கூடப் போராடிக்கொண்டுதான் இருந்தது. சொந்த நாட்டு அரசிடமிருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் ஒப்பந்தங்கள் வரும் என்ற எதிர்பார்ப்புடன் மிகப் பெரிய பொருட்செலவில் ரஃபேல் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து ஒப்பந்த ஆணை எதுவும் வரவில்லை. ரஃபேல் விமானங்களை சோதித்துப் பார்த்திருந்த தென் கொரியா, மொராக்கோ, பிரேசில் ஆகிய நாடுகள் ஏற்கெனவே அவற்றை வேண்டாம் எனத் தள்ளுபடி செய்திருந்தன. ஆகவே ஏதாவது ஒரு வெளிநாடு முதல் முறையாக இந்த விமானங்களை வாங்கிக்கொள்ள முன்வராதா என்று கடும் தவத்தில் இருந்தது டஸ்ஸால்ட். இந்தியாவுடனான பேச்சுவார்த்தையைத் தனது முந்தைய நிலைப்பாடுகளை அந்த நிறுவனம் மாற்றிக்கொண்டதில் இதுவும்கூடத் தாக்கம் செலுத்தியிருக்கக்கூடும்.
ஆனால், குறைந்த விலை கேட்டிருப்பது டஸ்ஸால்ட் நிறுவனம்தான் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும், முறையான கொள்முதல் ஆணை வருவதற்கு மேலும் தாமதம் ஆனது. முதலில், இந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட நடைமுறை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரண்டு பேர் கேள்வி எழுப்பினர். தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர் விமானத்தை மதிப்பீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றார். மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினரான பாரதிய ஜனதா கட்சியின் யஷ்வந்த் சின்ஹா, ஆயுள் கால பராமரிப்புச் செலவு (லைஃப் சைக்கிள் காஸ்ட்) என்ற ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டிருப்பது பற்றி கேள்வி எழுப்பினார். ஒப்பீட்டளவில் இத்தகைய ஒப்பந்தங்களில் இது ஒரு புதிய அம்சம் என்பதால் எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கேகூட இது பற்றித் தெரியாமல் இருந்தது.
அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் ஏ.கே. அந்தோணி. ஒப்பந்தம் தொடர்பாக அப்போது எழுப்பப்பட்ட இந்த பிரச்சினைகள் குறித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பத்திரிகையாளருக்கு பேட்டியளித்த அவர், “ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் தாக்கல் செய்வதற்கு முன்பாக நான் விதிமுறைப்படி முதலில் நிதி ஒப்புதலுக்காக நிதியமைச்சகத்தைத்தான் நாடினேன். உடன்பாட்டில் உள்ள ஆயுள்கால பராமரிப்புச் செலவு என்ற அம்சம் தனக்கு முற்றிலும் புதியதாக இருப்பதால் அதை ஏற்க இயலாது என்று நிதி அமைச்சகம் கூறியது. இந்த அம்சம் தொடர்பாக பொறுப்புள்ள சில எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரிடமிருந்தும் விமர்சனங்கள் வந்தன,” என்று கூறினார்.
விமானப் படை கேட்டுக்கொண்டதால்தான் அந்த புதிய அம்சம் சேர்க்கப்பட்டது என்றும் அவர் கூறினார். “இந்தப் பிரச்சினை வந்ததைத் தொடர்ந்து கோப்புகளைத் திரும்பப் பெற முடிவு செய்தேன். ஆயுள் கால பராமரிப்பு செலவு பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகுதான் இறுதியாக அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டேன்,” என்றார் அந்தோணி.
பிரச்சினை தீர்க்கப்படுவதற்குப் பல மாதங்கள் பிடித்தன. 2012 ஜூலையில் பாதுகாப்பு அமைச்சகம் விமானங்கள் மதிப்பீட்டு நடைமுறைக்கு தனது ஒப்புதலை அளித்தது. அங்கேயிருந்து டஸ்ஸால்ட் நிர்வாகத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் பிரான்ஸ் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாகத் தலையிட்டனர். இருந்தாலும் அந்தப் பேச்சுவார்த்தையும் பல தடைகளைத் தாண்ட வேண்டியதாயிற்று.
இந்தியாவில் மறு முதலீடு செய்யும் தனது திட்டங்கள் பற்றிக் கூறிய டஸ்ஸால்ட் நிர்வாகம் முதலில் இங்கே அரசுத் துறையான எச்ஏஎல் நிறுவனம்தான் தனது முக்கியமான தயாரிப்புக் கூட்டாளியாக இருக்கும் என்று கூறிவந்தது. ஒப்பந்தம் கிடைத்த பிறகோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ரிலையன்ஸ் நிறுவனம் அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமானதாகும். பின்னர் டஸ்ஸால்ட் நிர்வாகம் 18 விமானங்களைத் தானே தயாரிப்பதற்கான ஒப்பந்தமும், தனது கண்காணிப்பில் எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்கும் 108 விமானங்களுக்கான ஒப்பந்தமும் தனித்தனியே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது. இந்திய அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
2014 பிப்ரவரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஏ.கே. அந்தோணி இறுதி ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் ஆனால் தனது அமைச்சகத்தின் வருடாந்தர பட்ஜெட் நிதி ஏற்கனவே காலியாகி விட்டது என்றும் கூறினார். அடுத்த நிதியாண்டில் மார்ச் மாதம் வரை அந்த ஒப்பந்தம் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனால் அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் வர இருந்த நிலையில் ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. 2014 மே மாதம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலிருந்து இறங்க மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது.
சாகர்
நன்றி: கேரவான்
தமிழில்: அ.குமரேசன்