புதிய ஆட்சி, புதிய ஒப்பந்தம்
மோடி பதவியேற்ற நாளிலிருந்து அவர் பாரிஸ் பயணம் மேற்கொண்ட நாள் வரையில் டஸ்ஸால்ட் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே பல ஆண்டுகளாக, பல்வேறு சிக்கல்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே தொடர்கின்றன என்றுதான் அரசு சொல்லிவந்தது. 2014 நவம்பர் வரையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதே போலத்தான் சொன்னார்.
ஒப்பந்த வாய்ப்பை இழந்த மற்ற நிறுவனங்கள் இந்தப் பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்படுவதை ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்தன. சில நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை மறுபரிசீலனை செய்யக் கேட்டுக்கொண்டன. யூரோ ஃபைட்டர் கூட்டமைப்பு தனது விமான விலையைக் குறைத்துக்கொள்ளவும், தொழில்நுட்பப் பகிர்வு, இந்தியாவிலேயே தயாரிப்பது போன்றவற்றில் தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவும் முன்வந்தது. ஆனாலும் அரசு ஒப்பந்த நடைமுறைகளில் உறுதியாக நின்றது.
மத்திய ஆட்சி மாறுவதற்கு முன்பேகூட, வணிகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே டஸ்ஸால்ட் நிறுவனம் முதலில் கூறியதைவிடப் பல மடங்கு விலையை அதிகரித்துக்கொண்டு போகிறது என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வந்தன. இது தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் எரிக் டிராப்பியர், 2015 பிப்ரவரியில், “எங்களது விலை அம்சம் முதல் நாளிலிருந்தே அப்படியேதான் இருக்கிறது,” என்று அறிவித்தார். ஒப்பந்தத்தின் கதி என்ன என்று கேட்கப்பட்ட கேள்விகளைத் தள்ளுபடி செய்த அவர் ஒப்பந்தம் முடிவுறும் தறுவாயில் இருக்கிறது என்றார். மோடியின் பாரிஸ் பயணத்திற்குச் சில வாரங்கள் முன்பு வரையில் அவர் பதவியில் இருந்தார்.
புதிய ஒப்பந்தம் குறித்து மோடி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அதுவரையில் குழப்பிக்கொண்டிருந்த அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், ஒப்பந்தத்தை இழுத்தடித்தது முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்று பரிகாசமாகப் பேசத் தொடங்கினார். தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவர், ஆயுள் காலப் பராமரிப்பு செலவுப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்ற முன்னாள் அமைச்சர் அந்தோணியின் நிலைப்பாட்டை விமர்சித்தார். அவருடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்தான் இது பற்றி முதலில் பிரச்சினையை கிளப்பியவர் என்பதை அவர் மறந்து விட்டார்.
அந்தோணியிடம் ஒரு பத்திரிகையாளர் இதுபற்றிக் கேட்டபோது அவர், “36 ரஃபேல் விமானங்களை வாங்குவது என்ற தற்போதைய உடன்பாட்டில், ஆயுள்காலப் பராமரிப்புச் செலவு என்ற பிரிவை இன்றைய அரசு விலக்கிவிட்டதா?” என்று திருப்பிக் கேட்டார். இதே கேள்வி நாடாளுமன்றத்தில் இரண்டு முறை எழுப்பப்பட்டது. அதற்கு பாஜக அரசு அளித்த பதில், பழைய பேச்சுவார்த்தை விவரங்களும் தற்போதைய ஒப்பந்த விவரங்களும் ஒப்பிட இயலாதவை என்பதுதான்.
தனியார் துறையின் பங்கேற்பு
முந்தைய முடிவுகளைச் செல்லாததாக்கிய மோடி அரசு அதன் பின் பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புகளில் தனியார் துறையினர் பங்கேற்புக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முயற்சிகளில் இறங்கியது. 2016இல், இந்தியப் பாதுகாப்புத் தளவாடத் தொழில்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் 49 சதவீதப் பங்குகளை வைத்துக்கொள்ள மோடி அரசு அனுமதித்தது. அதற்கு அதிகாரபூர்வ ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் அறிவித்தது. இதுதான் டஸ்ஸால்ட் நிர்வாகம் ரிலையன்ஸ் குழுமத்தோடு கூட்டுச் சேர வழிவகுத்தது. அதே ஆண்டில் பாதுகாப்புக் கொள்முதல் நடைமுறைகளில் மேலும் ஒரு திருத்தம் செய்யப்பட்டு, இங்கே மறுமுதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தளவாடங்களின் பொறியியல், வடிவமைப்பு, குறியீடு, பயிற்சி ஆகியவற்றுக்கான செலவுகளைச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. முன்பு இந்த அனுமதி தளவாடத் தயாரிப்பு, பராமரிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே என இருந்தது. அரசாங்க முக்கியப் பிரமுகர்கள் பயணத்திற்காக என அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டதில் நடந்த ஊழலைத் தொடர்ந்து இந்தச் செலவுகளுக்கான அனுமதியை முந்தைய அரசு விலக்கி வைத்திருந்தது.
2016ஆம் ஆண்டின் கொள்முதல் நடைமுறை ஆவணம் வெளியிடப்பட்டபோது, அதில் “போர்த்திறன் சார்ந்த கூட்டாளிகள் மற்றும் கூட்டு” என்பதான கொள்கைக்கு இடமளிக்கப்பட்டது. அது குறித்துத் தனி அறிவிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மோடி அரசின் மூளையில் உதித்த இந்தத் கொள்கை 2017இல் அறிவிக்கப்பட்டது. பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புகளில் கூட்டுச் சேரக்கூடிய இந்திய நிறுவனங்களையும் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒரே நேரத்தில் அரசு தேர்வு செய்ய வேண்டும் என்று அந்தக் கொள்கை கூறுகிறது. போர் விமானங்கள், நீர்மூழ்கிகள், ஹெலிகாப்டர்கள், தளவாட வாகனங்கள் ஆகிய நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்தங்களை இந்த “போர்த்திறன் சார்ந்த கூட்டு” என்ற ஏற்பாட்டின் கீழ் வரும் நிறுவனங்களுக்கு என அரசு ஒதுக்கியது.
இந்த ஏற்பாடு குறித்து 2018 ஜூலையில் கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு அமைச்சக நிதித்துறை ஆகியவை கவலை தெரிவித்தனவாம். போர்த்திறன் கூட்டாளிக் கொள்கை குறிப்பிட்ட நிறுவனங்கள் ஏகபோகமாக செல்வாக்கு செலுத்துவதற்கு இட்டுச்செல்லும் என்று இந்த அமைப்புகள் எச்சரித்தன என்று செய்திகள் கூறுகின்றன. ஆயினும் அதே மாதத்தில் இதற்குப் பாதுகாப்பு அமைச்சகம் தனது முறையான ஒப்புதலை அளித்தது.
இந்தக் கொள்கையால், மேற்படி நான்கு தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்த பொதுத்துறை நிறுவனங்கள் கழற்றிவிடப்பட்டன. மிகப் பெரிய அளவுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ள, அல்லது ஏற்கெனவே கையகப்படுத்தத் தொடங்கிவிட்ட பிரிவுகள் இவை. முன்பு, விமானப் படை சார்ந்த ஒவ்வொரு தயாரிப்பிலும் வெளிநாட்டு நிறுவனங்களின் முக்கியக் கூட்டாளியாக இருந்து வந்த எச்ஏஎல் நிறுவனம், தற்போதைய போர் விமானத் தயாரிப்புத் திட்டங்களில் பரிசீலிக்கக்கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்தியாவுக்கான ஆதாயத்தில் சமரசம்
2018 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் அறிக்கையளித்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் ஒப்பந்தத்தில் தொழில்நுட்பப் பகிர்வுக்கோ, இந்தியாவில் உரிமம் பெற்று அந்த விமானங்களைத் தயாரிப்பது பற்றியோ வலியுறுத்தப்படவில்லை என்று தெரிவித்தார். முந்தைய ஒப்பந்தங்களில் மையமான இடம் பெற்றிருந்த இந்த இரண்டு நிபந்தனைகளால், இவ்வளவு பெரிய கொள்முதலில் செலவு ஒன்றும் மிச்சமாகப்போவதில்லை என்றார் அவர். (1996இல் ரஷ்யாவிடமிருந்து 30 சு-30 ரக ஜெட் விமானங்களை வாங்கிக்கொள்வதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதில் எச்ஏஎல் நிறுவனத்துடன் சேர்ந்து உள்நாட்டில் உற்பத்தி செய்வது, தொழில்நுட்பப் பகிர்வு ஆகிய நிபந்தனைகள் இருந்தன.)
மோடி அரசு முந்தைய ஒப்பந்தத்தை ரத்துச் செய்ததன் மூலம், இந்தியாவுக்கான மிகப் பெரிய ஆதாயத்தை விட்டுக்கொடுத்துவிட்டது என்ற முடிவுக்குப் போகாமல் இருக்க முடியாது. ரஃபேல் விமானத்தை வழங்கத் தயாராக இருப்பதாக முதன் முதலில் டஸ்ஸால்ட் நிறுவனம் கூறியபோது, உலக அளவில் அது தனது விமானத்தின் தகுதியை நிரூபித்தாக வேண்டும், அதற்காக ஒரு வெளிநாட்டு ஒப்பந்தத்தை எப்படியாவது பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. அத்துடன் தனது போட்டியாளரான யூரோஃபைட்டர் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியாக வேண்டிய நிலைமையிலும் இருந்தது. அதற்காக எச்ஏஎல் நிறுவனத்துடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ளவும், கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவும் தயாராக இருந்தது. இதற்கான நிபந்தனைகளை ஏற்கெனவே இந்திய அரசு இறுதிப்படுத்தியிருந்தது. ஆனால் தனது சொந்த அரசுக்கு சாதகமான நிலைமையைத் தலைகீழாக மாற்றினார் மோடி.
எப்போது மற்ற நாடுகளின் நிறுவனங்களோடு பேச வேண்டியதில்லை, பிரான்ஸ் அரசுடன் மட்டும் நேரடிப் பேச்சு நடத்தினால் போதும் என்ற முடிவு எடுக்கப்பட்டதோ, அப்போதே இந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைப்பது உறுதி என்று டஸ்ஸால்ட் நிர்வாகத்திற்குத் தெரிந்துவிட்டது. போட்டிகளைப் பற்றிக் கவலைப்படாமல் புதிய விலையை நிர்ணயிக்க முடியும் என்றும் அதற்குத் தெரிந்துவிட்டது. இதே காலகட்டத்தில் கத்தார், எகிப்து ஆகிய நாடுகளிலிருந்தும் ரஃபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம் டஸ்ஸால்ட்டுக்குக் கிடைத்தது. இது அதற்கிருந்த நெருக்கடியை மேலும் தளர்த்தியது. இத்துடன் கூடுதல் ஆதாயமாக, அந்த நிறுவனம் ஏற்கத் தயங்கிய, ஆனால் இந்தியா உறுதியாக வலியுறுத்திய, இந்தியாவிலேயே ரஃபேல் விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை புதிய ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.
2016இல் இரு நாட்டு அரசுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, இந்திய சட்ட அமைச்சக அதிகாரிகள், தொழில் சார்ந்த பொறுப்பேற்பு அம்சங்கள் பலவீனமாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டியதாக செய்தி வந்தது. அது இந்தியாவுக்கு சுமையை ஏற்படுத்தி பிரான்ஸ்சுக்கு சாதகம் செய்வதாக இருக்கிறது என்று அவர்கள் கூறினர். ஒப்பந்தம் தொடர்பான பணப் பொறுப்பு எதையும் ஏற்க பிரான்ஸ் அரசு தயாராக இல்லை. ஒப்பந்த மீறல் ஏதேனும் நிகழுமானால் அதற்கு சட்டபூர்வமாகப் பொறுப்பேற்க வேண்டியது பிரெஞ்சு நிறுவனங்கள்தானே அன்றி அரசாங்கம் அல்ல என்று கறாராகக் கூறியது. தற்போதைய இறுதி உடன்பாட்டில் இந்த அம்சங்கள் தாக்குப்பிடித்து நிற்கின்றனவா என்பது தெரியவில்லை.
இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் சம்பந்தப்படுவது பற்றி அரசுக்கு எந்த அளவுக்குத் தெரியும், என்னென்ன அம்சங்கள் தெரியும் என்பதும் தெளிவாகவில்லை. 2015இல் செய்யப்பட்ட திருத்தம்தான் டஸ்ஸால்ட் நிர்வாகம் தனது இந்தியக் கூட்டாளி யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பதைத் தாமதப்படுத்துவதற்கு ஏதுவாக இருந்தது. இந்த விவகாரத்தில் அரசு உற்சாகத்தோடு கண்ணை மூடிக்கொண்டது என்பதையே இது காட்டுகிறது. பல்வேறு அம்சங்கள் தனக்குத் தெரியாது என்று இந்த அரசு தொடர்ந்து கூறிவருவதும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. 2018 பிப்ரவரியில்கூட பாதுகாப்பு அமைச்சகம், “36 ரஃபேல் விமானங்களுக்கான 2016ஆம் ஆண்டின் ஒப்பந்தத்திற்கான இந்தியக் கூட்டாளி யாரும் இது வரையில் டஸ்ஸால்ட் நிறுவனத்தால் தேர்வு செய்யப்படவில்லை,” என்றுதான் அறிவித்தது.
ராகுல் கேள்வியும் அம்பானியின் பதிலும்
இது பற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கு மறுப்புத் தெரிவித்து அனில் அம்பானி 2017 டிசம்பர் 12 அன்று ராகுலுக்குக் கடிதம் எழுதினார். “டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையேயான உடன்பாடு இரண்டு தனியார் வணிக நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட சுயேச்சையான உடன்பாடுதானேயன்றி இதில் அரசாங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை,” என்று அந்தக் கடிதம் கூறுகிறது. பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான நடைமுறைகளில் சிக்கல் மிகுந்த அதிகாரத் தள ஏற்பாடுகள் இருக்கிற நிலையில், இரண்டு நாடுகளின் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கிடையே உடன்பாடு ஏற்படுகிறபோது, அதில் அரசாங்கத்திற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது கபடத்தனமேயாகும். இப்படிச் சொல்லிவிட்டு அம்பானியால் எப்படி நழுவ முடிந்தது என்றால், 2015ஆம் ஆண்டுத் திருத்தத்தில் வெளிநாட்டு நிறுவனம் தனது இந்தியக் கூட்டாளியைத் தாமதமாக அறிவிக்க வழி செய்யப்பட்டதுதான். தனக்கு அது பற்றித் தெரியாது என்ற நம்ப முடியாத மறுப்பை அரசாங்கம் சொல்லிக்கொண்டிருப்பதற்கும் அதே திருத்தம்தான் வழி செய்தது.
ஆனால், இந்த ஆண்டுத் தொடக்கத்தில், விமானப் படை தலைமை அலுவலகத்திற்குத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நான் அனுப்பிய மனுவுக்கு அவர்களிடமிருந்து வந்துள்ள பதிலில், ரஃபேல் விமானங்களை வாங்கிக்கொள்வதற்கு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட அதே நாளில்தான் இந்தியக் கூட்டாளிக்கான உடன்பாடும் கையெழுத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகர்
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/business/india-gambles-defence-interests-reliance-group
தமிழில்: அ.குமரேசன்