
அனில் அம்பானி, டசால்ட் தலைவர் எரிக் ட்ராப்பர், நிதின் கட்கரி மற்றும் மராட்டிய முதல்வர் நிதின் பட்வானிஸ்.
புதிய ஆட்சி, புதிய ஒப்பந்தம்
2017 அக்டோபரில், நாக்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில், ஒரு தொழிற்சாலையைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை டஸ்ஸால்ட், ரிலையன்ஸ் இரு நிறுவனங்களும் சேர்ந்து நடத்தின. டஸ்ஸால்ட் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் அந்தத் தொழிற்சாலையை இயக்கப்போவது அதன் கூட்டு நிறுவனமான டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் என்றும், அதில் டஸ்ஸால்ட் ஏவியேசன் தயாரிப்பான லெகசி ஃபால்கன் 2000 ரக ஜெட் விமானங்களுக்கான பாகங்கள் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்தியாவில் மறு முதலீடு செய்வது என்ற ஆப்செட் கடமை நிறைவேற்றப்படுவதாகக் கணக்கு. ஆனால் இதிலே இந்தியாவின் சொந்த தளவாடத் தயாரிப்புத் திறனை வளர்ப்பதற்கான ஏற்பாடு எங்கே இருக்கிறது?
பதிலளிக்க மறுக்கும் நிறுவனங்கள்
இந்தியாவின் அந்தப் பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலைக்காக என ஒரே இடத்தில் அந்நிய நேரடி முதலீடாக இதுவரை இலலாத அளவுக்கு 100 மில்லியன் யூரோ (சுமார் 850 கோடி ரூபாய்) போடப்போவதாகவும் டஸ்ஸால்ட் அறிவித்தது. அந்தக் கூட்டு நிறுவனத்தில் அதைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிற அளவுக்கு அதிகப் பங்குகளைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் குரூப் தனது முதலீடு எவ்வளவு என்று இதுவரையில் அறிவிக்கவில்லை. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் குழுமத்தின் ஒரு துணை நிறுவனம் ரிலையன்ஸ் ஏர்போர்ட்ஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டெட். விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான அந்த நிறுவனத்தில் டஸ்ஸால்ட்டுக்கு 35 சதவீதப் பங்குகள் உள்ளன. அதிலேயும் டஸ்ஸால்ட் 8 மில்லியன் யூரோ (சுமார் 68 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசு ஐந்து விமான நிலையங்களைப் பராமரித்து இயக்குகிற ஒப்பந்தங்களை அந்த நிறுவனத்திற்கு அளித்திருக்கிறது. குறிப்பான ஆண்டுகள் எதையும் குறிப்பிடாமல், எதிர்காலத்தில் ரஃபேல், ஃபால்கன் விமானங்களின் இறுதிக் கட்டுமானத் தொழிற்சாலைகள் இந்தியாவில் ஏற்படுத்தப்படும் என்று டஸ்ஸால்ட் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியான தொழிற்சாலைகளில் பெரும்பாலும் உதிரிபாகங்களை இணைக்கிற வேலைகள்தான் நடக்கும் என்று உள்நாட்டுக் குழுமங்கள் கூறுகின்றன. நவீனத் தயாரிப்பு அல்லாத புதிய தொழில்நுட்பங்கள் எதுவும் தேவைப்படாத இத்தகைய தொழிற்சலைகளில் நடப்பது “மறையாணி முடுக்கும்” (ஸ்குரூ டிரைவிங்) வேலையே என்கிறார்கள் வல்லுநர்கள்.
இது தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை ரிலையன்ஸ், டஸ்ஸால்ட் நிர்வாகங்களுக்கு நான் அனுப்பினேன். ஒரு கேள்விக்குக்கூட அவர்களிடமிருந்து பதில் வரவில்லை.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இடம் என்ன?
அம்பானிக்கு நெருக்கமான முன்னாள் உயரதிகாரி ஒருவர், ரிலையன்ஸ் குரூப் நிறுவனங்களோடு செயல்பட்ட அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார். “அவர்கள் பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புக்கு லாயக்கானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களது மரபணு அதற்கானது அல்ல. அவர்களது பிரதானத் தொழில் ஈடுபாடு வணிகமும், நுகர்பொருள் தயாரிப்பும்தான்,” என்று அவர் கூறினார். இருந்தாலும் இப்போது பெரிய சூதாட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் போர்த்திறன் சார்ந்த தொழிலுக்கான திட்டத்தை முன்வைப்பதற்கான தொழில்நுட்பத் திறனும் இல்லை, அதற்கான விருப்பமும் இல்லை என்றார் அவர். “தயாரிப்புகளை வாங்கிக்கொள்வதற்கான ஆர்டர்கள் உடனடியாக வர வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஆர்டர்கள் வந்ததும் அவற்றின் அடிப்படையில் ஆப்செட் கூட்டாளி யார் என்று பார்க்கிறார்கள். தயாரிப்புக்கான ஏற்பாடுகளைக் கட்டுவதற்கு அந்த ஆப்செட் கூட்டாளியை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.
ரிலையன்ஸ் பங்கெடுப்பதால் நாட்டின் பாதுகாப்புத் தளவாடத் தொழிலுக்குப் புத்துணர்ச்சி கிடைத்திருப்பதாகச் சொல்வதெல்லாம் தவறான கணிப்பு என்றார் அந்த முன்னாள் அதிகாரி. “எல்லாவற்றையும் கன்ட்ரோல் பண்ணுவது டஸ்ஸால்ட்டுதான். எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே, தேசியக் கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது, அவர்களால் இங்கே தொழில் வருமானம் என்றால் வரும், சில பேருக்கு வேலை கிடைக்கும், வேலை வாய்ப்பு உருவாகும், சில தயாரிப்புகளும் நடக்கும். ஆனால் அநேகமாக எதுவும் ரிலையன்ஸ் கட்டுப்பாட்டில் நடக்காது. அவர்களும் லாபத்தில் தங்களுக்கான பங்கு வருகிறதா என்றுதான் பார்த்துக்கொண்டிருப்பார்கள், தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நாட்டின் பாதுகாப்புத் தளவாடத் தொழில் நிலவரம் இதுதான்,” என்றார் அவர்.
நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான விளையாட்டும் இதிலே இருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார்.
பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் நிலம் பிடிப்பதில் தோல்வியடைந்த பிறகுதான் நாக்பூரில் தொழிற்சாலையைக் கட்டுவது என்ற முடிவுக்கு டஸ்ஸால்ட்டும் ரிலையன்ஸ்சும் எப்படி வந்தார்கள். பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புகளில் ஈடுபடுகிறவர்கள் தொழிற்சாலை அமைக்க விரும்பித் தேர்ந்தெடுக்கிற இடங்கள் இவை. “முதலில் நிலத்தைக் கைப்பற்றுவது, அப்புறம் அந்த நிலத்தில் உட்கார்ந்துகொண்டு அடுத்த கட்ட விஷயங்கள் நடப்பதற்கான சரியான நேரத்திற்காகக் காத்திருப்பது என்கிற விளையாட்டு இது. ரிலையன்ஸ் செய்த முயற்சிகள் பெங்களூருவில் பலிக்கவில்லை, சந்திரபாபு நாயுடுவிடமும் எடுபடவில்லை. அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள்,” என்று சொன்னார் அந்த முன்னாள் உயரதிகாரி. “முதலீடு கொண்டுவருவதில் நீங்கள் சீரியஸாக இல்லை என்றால் நிலத்தைக் கையகப்படுத்துகிற ஏற்பாடோ, உங்களுக்கு நிலத்தைக் கொடுக்கிற ஏற்பாடோ கிடையாது என்று அவர்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.
நாகபுரியும் நிதின் கட்காரியும்
மேற்படி அடிக்கல் நாட்டு விழாவில் பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர், பாஜக தலைவர்கள் நிதின் கட்காரி, தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். நிதின் கட்காரி இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மட்டுமல்ல, நாக்பூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமாவார். தேவேந்திர பட்னாவிஸ் மஹாராஷ்டிரா முதலமைச்சர். அவரும் நாக்பூரைச் சேர்ந்தவர்தான். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அம்பானி, புதிய தொழிற்சாலை கட்டுவதற்கான நிலத்தை வழங்க மகாராஷ்டிரா அரசு முன்வந்த கதையைச் சொன்னார்.
“முதலில் இந்தத் தொழிற்சாலை ஏற்கெனவே விமானத் தொழில்கள் நன்கு நிறுவப்பட்டிருக்கிற பெங்களூருவிலோ ஹைதராபாத்திலோ கட்டப்படும் என்றுதான் எங்களது பிரெஞ்சுக் கூட்டாளிகள் நினைத்தார்கள். அந்த நகரங்களில் இடம் கிடைக்காவிட்டால் குஜராத்தில் தொழிற்சாலையைக் கட்டலாம் என்று நினைத்தார்கள், அதற்கான காரணம் வெளிப்படையாகத் தெரிந்ததுதான். ஆனால் நான் நாக்பூர்தான் என்றேன். நாக்பூருக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியவர் திருவாளர் நிதின் கட்காரிதான் என்பதை நான் இங்கே தெரிவித்தாக வேண்டும். நாக்பூரை விட்டுவிட்டு வேறு எங்காவது போனால் என்னை நாட்டை விட்டே வெளியேற்றிவிடுவதாகச் சொன்னார் அவர். நிதின் கட்காரி அவர்களின் உறுதி, ஈடுபாடு, தொலைநோக்கு ஆகியவற்றைப் பற்றியும், காலம் சென்ற எனது தந்தையாருடன் அவருக்கு இருந்த உறவையும் நான் நன்கு அறிவேன். ஆகவே அவர் நாக்பூருக்கு வரச் சொன்னபோது அதை மறுப்பது எனக்குக் கடினமாகிவிட்டது. ‘முதலமைச்சரிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்,’ என்று சொல்லி தப்பித்துக்கொண்டிருந்தேன். முதலமைச்சரைச் சென்று பார்த்தபோது அவர் எடுத்த எடுப்பிலேயே, ‘ஆக, நீங்கள் நாக்பூருக்கு வர முடிவு செய்துவிட்டீர்கள், அப்படித்தானே,’ என்று கேட்டார். நாக்பூருக்கு வரலாமா என்று நான் கேட்டுக்கொள்வதற்கான வாய்ப்பைக்கூட அவர் எனக்குத் தரவில்லை. ‘உங்களுடைய தேவை என்னவென்று சொல்லுங்கள், அத்தனையும் நிறைவேற்றப்படும்,’ என்று மட்டுமே முதலமைச்சர் என்னிடம் சொன்னார்,” என்று கூறினார் அம்பானி.
அந்த விழாவின் தடபுடலிலும் உற்சாகத்திலும் மறைக்கப்பட்டது என்னவென்றால், ஒதுக்கப்பட்ட நிலத்திற்கான தொகையை உரிய நேரத்தில் செலுத்தாமல் விட்டதற்காக அந்தக் குழுமத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது, மாநில அரசின் நெருக்குதலுக்குக் குழுமம் உள்ளானது என்ற உண்மைதான். அந்த நிலம், அரசுக்குச் சொந்தமான மகாராஷ்டிரா ஏர்போர்ட் டெவலப்மென்ட் கம்பெனியால் 2015ஆம் ஆண்டிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், தொகையை முழுமையாகச் செலுத்தி முடித்த பின், 2017இல்தான் அந்த நிலத்தைக் குழுமம் எடுத்துக்கொள்ள முடிந்தது. ஒதுக்கப்பட்ட நிலத்தை 289 ஹெக்டேரிலிருந்து 104 ஹெக்டேராகக் குறைத்துக்கொள்ளுமாறும் குழுமம் கேட்டுக்கொண்டது. அதற்கு 63 கோடி ரூபாய் கொடுத்தால் போதும்.
ரிலையன்சுக்கு வழங்கப்பட்ட சலுகை
அந்த நாட்களில் ரிலையன்ஸ் குரூப்பில் பணியாற்றியவரான அந்த உயரதிகாரி என்னிடம், இரண்டாவது தவணையாகிய 38 கோடி ரூபாயை அவர்களால் எப்படி உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் போனது என்று விவரித்தார். அந்தக் குழுமத்தின் நிதி நிலைமை இப்படி பலவீனமாக இருந்த போதிலும் மஹாராஷ்டிரா அரசு ஏன் அதற்கு ஆதரவளித்தது என்பதை தனக்குப் புரியவில்லை என்றார் அவர். வேறு எந்த மாநில அரசும் ரிலையன்ஸ் குழுமத்திற்கு இவ்வளவு பொறுமை காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2016இல், ரிலையன்ஸ் குரூப் மகாராஷ்டிராவுக்கு உரிய தொகையைச் செலுத்தத் தவறிய அதே ஆண்டில், ஆந்திராவில் ரூ.5,000 கோடி முதல் கட்ட முதலீட்டில் கப்பல் கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன. அந்த மாநிலத்திற்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முதலீட்டுடன் வருகிற தொழில்களில் ஒன்றாக அது சித்தரிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிலுக்கான செயலாக்கத் திட்டத்தை மாநில அரசுக்கு ரிலையன்ஸ் இன்னும் கொடுக்கவில்லை என்றும், தேவைப்பட்ட நிலத்திற்கான முன்தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றும் செய்திகள் தெரிவித்தன.
ரிலையன்ஸ்சுக்கு நிதியுதவி வழங்குவோர் யார் என்பதில் எச்சரிக்கையாக இருந்த சந்திரபாபு நாயுடு அரசு, மாநில முதலீட்டாளர் வாரியத்தின் பரிசீலனைக்கு நிறுவனத்தின் கோரிக்கையை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக ஒரு ஊடகத்திற்குத் தெரிவித்தது.
2018 ஜூலையில் ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த டஸ்ஸால்ட் தலைமைச் செயல் அலுவலர் டிராப்பியர், “ஒரு போட்டிச் சமநிலை அளவில்” இந்தியாவுக்கு எங்கள் தொழில்நுட்பத்தையும், தயாரிப்பு வசதியையும் கொடுப்பது என்றால், 200 ரஃபேல் விமானங்களுக்கான பெரிய ஆர்டர் தேவைப்படும்,” என்றார். அந்த பிரெஞ்சு நிறுவனம் இந்திய அரசுக்கு நிபந்தனைகள் விதிக்கிறது என்பதுதான் இதன் அர்த்தம். முந்தைய பேச்சுவார்த்தைகளிலிருந்து முற்றிலும் மாறிய நிலைமை இது. எச்ஏஎல் நிறுவனத்திற்குப் பதிலாக ரிலையன்ஸ் குரூப்புடன் இணைந்து செயல்பட முன்வந்தது எதற்காக என்றால், “எச்ஏஎல் வசம் ஏற்கெனவே பல ஒப்பந்தங்கள் நிரம்பியிருந்தன என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்பதால்தான் என்றார் டிராப்பியர். “நாங்கள் ரிலையன்சுடன் பேசினோம். இந்தியாவில் இப்படிப்பட்ட தொழிலை ஏற்படுத்துவதில் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். கடந்த காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்திருக்கிறார்கள், அவர்களது நிதித் திறனும் நன்றாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
எச்ஏஎல் தொடர்பான பொய்
ஆயினும், எச்ஏஎல் நிறுவனத்திடம் அப்படியொன்றும் ஒப்பந்தங்கள் நிரம்பி வழியவில்லை என்பது தெரியவருகிறது. 2017இல் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த எச்ஏஎல் தலைவர், “நிறுவனத்தின் தற்போதைய பணியாணைப் பதிவேடு ஊக்கமளிப்பதாக இல்லை,” என்றார். 2019 நிதியாண்டு முடிவுக்குள் இந்திய அரசுக்கு எச்ஏஎல் நிறுவனம் உரிமம் பெற்ற 36 சு-30 ரக விமானங்களை வழங்கியாக வேண்டும். அதற்குப் பிறகு தயார் நிலையில் இறக்கைகள் பொருத்தப்பட்ட விமானங்களுக்கான ஆணை எதுவும் இல்லை. ஒட்டு மொத்தத்தில் நிறுவனத்தின் கையில் உள்ள வணிக ஒப்பந்தங்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குத்தான் தாக்குப் பிடிக்கும் என்பது எச்ஏஎல் தலைவரின் மதிப்பீடு.
ரிலையன்ஸ் குழுமத்தின் சிறப்பான கடந்தகாலச் செயல்பாடு, அதன் நிதித் திறன் பற்றியெல்லாம் டிராப்பியர் கூறியது, உண்மை நிலவரத்திற்கு நேர் மாறானது.
சாகர்
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/business/india-gambles-defence-interests-reliance-group
தமிழில்: அ.குமரேசன்