கருணாநிதி அரசு சிறைக் கைதிகளுக்கு ஞாயிறு தோறும் கோழிக்கறி உணவு என்ற அறிவிப்பை வெளியிட்ட போது, பல்வேறு ஊடகங்களிலும், படித்த நடுத்தர வர்க்கம் மத்தியிலும், ‘சிறைக்கைதிகளுக்கு இப்படி சிக்கனெல்லாம் போட்டா அவன் எப்படி திருந்துவான்’ என்ற பேச்சு எழுந்தது. ‘சிறையில ஃபேனெல்லாம் கொடுத்துட்டாங்களாமே…. இப்படி வசதியா ஜெயில்ல இருந்தா எவன் தப்பு செய்ய பயப்படுவான்’ என்றும் பேச்சு எழுந்தது. விலங்குகளுக்கெல்லாம் நேயம் காட்டும் நாம், கைதிகளையும் மனிதர்களாக பார்க்க வேண்டும்.
சவுக்கின் சிறை அனுபவங்களிலில் இருந்தே தொடங்கலாம். 18 ஜுலை 2008, சவுக்கு சிறையில் அடைக்கப் பட்ட நாள். நீதிமன்ற நடுவர், சவுக்கை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டவுடன் புழல் சிறைக்கு சவுக்கு அழைத்துச் செல்லப் பட்டது.
சிறை என்பது ஒரு தனி உலகம். அந்த உலகத்தில் கைதிகள் தான் ராஜாக்கள். அங்கே ஆண்டிமுத்து ராஜாவாக இருந்தாலும், மற்ற கைதிகளை அட்ஜஸ்ட் செய்து தான் வாழ வேண்டும். அட்ஜஸ்ட் செய்து கொள்ளாத கைதிகளின் வாழ்வை நரகமாக்கி விடுவார்கள்.
நீங்கள் ஒரு தீவில் தனியாக விடப்படுகிறீர்கள். அங்கே வெளியுலகத் தொடர்பே கிடையாது. அந்தத் தீவில், உங்களுக்குப் அறவே பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்கிறீர்கள். ஒரு மாதத்துக்கு மேல் அந்தத் தீவில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், அந்தப் பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரரோடு பேசிப் பழகுவீர்களா இல்லையா ? அது போலத் தான் சிறையும். வெளியில் நாம் தினத்தந்தியில் படிக்கும், கோரமான ஆயுதங்களுடன் கைது செய்யப் படும் கொலைகாரர்களும் மனிதர்களே. ஒவ்வொருவருக்கும் கொலை செய்ய வெவ்வேறு சூழ்நிலைகள். ஆனால் அடிப்படையில் அத்தனை பேரும் மனிதர்கள் என்ற பார்வையோடு அவர்களை அணுக வேண்டும். அவ்வளவே.
சவுக்கு சிறை சென்றது, முதல் முறை என்பதால், புதிய இடமும், சவுக்கோடு வரிசையில் இருந்த கைதிகளையும் பார்த்ததும் பதட்டமும், அச்சமும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதிரி இருந்தார்கள். அனைவர் கையிலும், ப்ரெட் பாக்கெட், பேஸ்ட், ப்ரஷ் ஆகியவை தவறாமல் இருந்தன. முதல் நாள் சிறைக்கு வருபவர்களுக்கு, மாலை 4 மணி அளவில் உள்ளபடி, உணவு தயார் செய்யப் பட்டு விடும் என்பதால், அன்றைக்கு புதிய கைதிகளுக்கு உணவு இருக்காது.
முதலில் ஒவ்வொரு கைதிக்கும் தொகுதி ஒதுக்கப் படாது. அனைத்துக் கைதிகளும் பிணை நீக்கும் பிரிவு என்று அழைக்கப் படும் ஒரு பிரிவில் அடைக்கப் படுவார்கள். அந்தப் பிணி நீக்கும் பிரிவில் இருந்து, மறு நாள் மாலை கைதிகளின் குற்றத்திற்கேற்ப மாற்றப் படுவார்கள். உயிருக்கு ஆபத்து உள்ள கைதிகளை, உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைப்பார்கள்.
சவுக்கையும் அப்படித்தான் உயர்பாதுகாப்புப் பிரிவில் அடைத்தார்கள். மாலை 6 மணிக்கு கதவை அடைத்தால், மறு நாள் காலை 6 மணிக்குத் தான் திறப்பு. மாலை உணவை 6 மணிக்கு முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்தப் பிணி நீக்கும் பிரிவில், பல்வேறு தரப்பான கைதிகளைப் பார்க்கலாம். முதல் முறை சிறைக்கு வந்தவர்கள் பலரைப் பார்க்கலாம். அடிதடி வழக்கு, திருட்டு, கூலிக்கு கொலை செய்வது போன்ற வழக்கில் உள்ளே வந்தவர்களுக்கு, சிறை ஒரு பிரச்சினையே இல்லை. அவர்கள் தங்களின் வாழ்வில் பெரும்பாலான நாட்களை சிறையில் தான் கழிக்கிறார்கள் என்பதால், கவலையே பட மாட்டார்கள். ஆனால், வரதட்சிணைக் கொடுமை, ஈவ் டீசிங், போன்ற வழக்குகளில் உள்ளே வருபவர்கள், முதல் நாள் தொடங்கி மூன்று நாட்களுக்கு அழுத படி இருப்பார்கள்.
சிறை என்பதை உணர வைப்பதே உணவு தான். உணவைப் பார்த்தவுடன், மீண்டும் அழுகை வரும். கேரளாவில் பயன்படுத்துவது போன்ற குண்டு அரிசி. அதுவும் நன்கு குழைத்து வடிக்கப் பட்டிருக்கும். குழைந்த சாதத்தை டிபன் பாக்சில் போட்டு, கவிழ்த்து பெரிய ட்ரேக்களில் வைத்து ஒவ்வொரு ப்ளாக்காக தள்ளிக் கொண்டு வருவார்கள். வரிசையில் நின்று வாங்க வேண்டும். குழம்பு என்ற பெயரில் ஒரு திரவத்தை கொடுப்பார்கள். சாதாரணமாக நமது வீட்டில் சாம்பார் வைக்க 3 டம்ளர் தண்ணீர் ஊற்றுவோம். 3 க்கு பதிலாக 10 டம்ளர் ஊற்றினால் சாம்பார் எப்படி இருக்கும்… அதுதான் சிறை சாம்பார். பருப்பு மிக மிக மட்ட ரகமான பருப்பாக இருக்கும். அதனால் சாம்பார் கருப்பு நிறத்தில் இருக்கும். உணவை சிறை பாஷையில் ‘படி’ என்று சொல்லுவார்கள். தினப்படி என்ற பொருள் போன்று.
சிறையில் பீடிதான் கரன்சி. பீடி இருப்பவர்கள் சிறையையே வாங்கலாம் என்று சொல்லுவார்கள். பீடிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பீடி இல்லையென்றால் சிறையை நடத்த முடியாது. ஒரு முறை திடீரென்று சிறை நிர்வாகம் பயங்கர கெடுபிடியாக இருந்த போது, பீடி வரத்து குறைந்தது. அப்போது சிறைக்குள் ஒரு கட்டு பீடி 200 ரூபாய் என்றால் நம்புவீர்களா ? பீடி இல்லை என்றால் தட்டைக் கவிழ்த்து விடுவார்கள். ‘தட்டைக் கவிழ்ப்பது’ என்றால், சிறை வழக்கு மொழியில் உண்ணாவிரதம் என்று அர்த்தம். உண்ணாவிரதம் என்பது சிறையைப் பொறுத்தவரை மிக மிக தீவிரமான போராட்டம். உண்ணாவிரதம் என்றால், சிறை நிர்வாகம் நடுங்கும்.
16.08.2008 அன்று சிறைத் துறை தலைவராக இருந்த நட்ராஜிடம், சிறைக் கைதிகளுக்கான இசிஜி கருவியை வழங்கும் கனிமொழி…
என்னே காலத்தின் கொடுமை ?
வெளி உலகைப் போலவே சிறைக் கைதிகள் மத்தியிலும் அரசியல், வதந்தி, கிசு கிசு, எல்லாம் உண்டு. புதிதாக ஒரு கைதி சிறைக்கு வந்ததும் கேட்கும் முதல் கேள்வி “என்னா கேசு” என்பதுதான். ஒவ்வொருவருக்கும் பதில் சொல்ல வேண்டும். சவுக்கு உள்ளே சென்ற போது என்ன கேசு என்று கேட்டதற்கு, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு” என்று சொன்னதற்கு, “பாத்தா பட்ச்சவன் மாதிரி இருக்க ? நீ ஏன் சார் அட்த்தவன் போன ஒட்டுக் கேக்குற ?” என்று கேட்டார்கள் (ஜாபர் சேட் கவனிக்க) அவர்களிடம் என்னவென்று விளக்கிச் சொல்வது ?
இரண்டாம் நாள் சவுக்கை முக்கிய கைதிகளை வைக்கும் உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள ஒரு அறையில் அடைத்தார்கள். அந்த செல் உள்ளே சவுக்கு சென்ற போது, பயம் ஏற்படுத்தும் தோற்றம் கொண்ட இருவர் உள்ளே இருந்தார்கள். சவுக்குக்கும் உள்ளுர நடுக்கம் தான். முதல் நாள் அல்லவா ? முதலில் பயம் வந்தாலும், பிறகு, பாத்துக்கலாம், என்ன செய்து விடுவார்கள் என்ற துணிச்சலோடு அமர்ந்ததும், ‘என்னா சார் கேசு….’ என்று முடி நீளமாக வைத்திருந்தவர் கேட்டார். “தொலைபேசி ஒட்டுக் கேட்பு” என்றதும், ”அதுக்குல்லாமா அரெஸ்ட் பண்ணுவாங்க ?” என்று தனது வியப்பைத் தெரிவித்தார். பிறகு மற்ற விபரங்களை கேட்டறிந்தவர், ”இன்னா சார், இவ்ளா பெரிய போஸ்ட்ல இருந்துட்டு, இப்டி மாட்டிக்கிட்டீங்களே சார்” என்றார். ”நீங்கள் என்ன கேஸ்” என்று கேட்டதும், ”நான் கருப்புக் குல்லா சார் (அடிக்கடி சிறைக்கு வருபவர்) ரெண்டு மாசம் வெளில இருப்பேன், அப்பொறம் புட்ச்சு உள்ள போட்ருவாங்க… நான் வூடு பூந்து திருடுவேன் சார்” என்றார் சாதாரணமாக. ”ஏன் இப்படி செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு ”நம்ப லைப் இப்டி ஆய்டுச்சு சார். இன்னா பண்றது” மற்றவரைப் பற்றிக் கேட்டதும், அவரும் கருப்பு குல்லா என்றார். நீங்கள் என்ன செய்வீர்கள் என்றதற்கு, தனியாக வருபவர்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பது, செயின் அறுப்பது போன்ற அனைத்தும் செய்வேன் என்றார். அவன் அம்பத்தூர் பகுதியில் இருந்த ஐஸ் என்ற பெயருடைய ரவுடி. அவன் தாய் அரசுப் பள்ளியில் ஆசிரியை, தந்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க். அவர்கள் அதற்குப் பிறகு, 3 நாட்கள் சவுக்கோடு இருந்தார்கள். அந்த 3 நாட்களில் ஒரு முறை கூட, அந்த அறையை பெருக்க அனுமதிக்க வில்லை. பரவாயில்லை நான் பெருக்குகிறேன் என்றால், ”நீ கம்னு குந்து சார். பட்ச்சவன், ஏதோ கெட்ட நேரம். வந்துட்ட.. இத்தையெல்லாம் நாங்க பண்ணிக்குறோம் சார்” என்று ஒரு வேலையும் செய்ய விட வில்லை. அவர்களின் பாசம், மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது. இவர்களை எப்படி தவறாக நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.
அதற்குப் பிறகு சவுக்கு இருந்த அறைக்கு பல்வேறு நபர்கள் வந்து போனார்கள். கிண்டி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பிய ஒருவர், நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி பெண்கள் ஹாஸ்டல் பாத்ரூமில் எட்டிப் பார்த்த போலீஸ் காரர், கஞ்சா கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர், மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் என்று வந்து சென்றவர்கள் பலர்.
பெரிய ரவுடிகள் என்று ஊரே அஞ்சும் ரவுடிகள், பழகுவதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறார்கள் தெரியுமா ? அவர்கள் இன்றும் சவுக்கோடு தொடர்பில் இருக்கிறார்கள். அதில் ஒரு பெரிய ரவுடி சிறையில் இருக்கும் போது, ”சார் என்னை என்கவுண்டர் செய்வார்கள். என்கவுண்டரிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம். வெளியே வந்ததும் என்னைச் சந்தியுங்கள் என்று சொன்ன படி, 6 மாதங்கள் கழித்து, காவல்துறையினர், அவரை என்கவுண்டர் செய்யத் திட்டமிட்ட போது, அவரை நீதிமன்றத்தில் சரணடையச் சொல்லி, பத்திரிக்கைகளில் செய்தி வெளிவரச் செய்து, அவரின் உயிரைக் காப்பாற்றியதை சவுக்கு பெருமையோடு நினைவு கூர்கிறது. அவர் இன்று திருந்தி, எவ்வித சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடாமல், திருமணம் செய்து கொண்டு குழந்தையோடு வாழ்ந்து வருகிறார்.
இரண்டு மாதம் கழித்து சவுக்குக்கு ஜாமீன் கிடைத்த போது, உயர் பாதுகாப்புப் பிரிவில் அப்போது இருந்த 65 கைதிகளும் திரண்டு வந்து வழியனுப்பியதை சவுக்கு இந்நேரத்தில் நினைவு கூர்கிறது. அப்போது சிறை வார்டர்களும், கைதிகளும், திரும்பி வராதீர்கள் என்று சொன்ன போது, சவுக்கு, ஊழலை வெளிக் கொணர்வதற்காக மீண்டும் சிறைக்கு வருவதற்கு என்றுமே தயங்க மாட்டேன் என்றுதான் சொன்னது. அதைப் போலவே, மீண்டும் ஜாபர் சேட் சிறைக்கு அனுப்பத்தானே செய்தார் ?
சிறையில், உணவு, மின் விசிறி, நல்ல காற்றோட்டம் என அனைத்தும் இருந்தாலும், சிறை சிறைதான்.
சென்னை புதுப்பேட்டையில் உள்ள குடிசையில் வாழும் ஒரு நபர், இரவு 12 மணிக்கு போர் அடிக்கிறது, ஒரு பீடி அடிக்கலாம் என்று காலாற நடந்து சென்று பீடி அடிக்க முடியும். ஆனால் சிறையில் முடியுமா ? மாலை 6 மணிக்கு கதவடைத்தால், மறுநாள் காலை 6 மணி வரை பூட்டிய அறையில் தான் இருக்க வேண்டும். எங்கே போகலாம், எங்கே போகக் கூடாது என்பதை சிறை அதிகாரிகள் தான் தீர்மானிப்பார்கள். எந்த நேரம் வேண்டுமானாலும் அறைக்குள் வந்து சோதனையிடுவார்கள். உங்கள் ஆடைகளை களையச் சொல்லி சோதனை செய்யப் படுவீர்கள். பஞ்சு மெத்தை கொடுத்தாலும், சிறை சிறைதான்.
ஈழத் தமிழினம் சோறில்லாமல், கையிழந்து, காலிழந்து, உயிருக்கு அஞ்சி ஓடிக் கொண்டிருந்த போது, ஏசி காரில் பவனி வந்து, ஏசி அறையில் அமர்ந்துகொண்டு, போலிப் பாதிரியோடும், நக்கீரன் காமராஜோடும் முந்திரி பக்கோடாவைச் சாப்பிட்டுக் கொண்டு அதைப் பற்றி விவாதம் நடத்தினார் கனிமொழி. பதுங்கு குழிக்குள் மக்கள் கிடந்த போது, சென்னை சங்கமம் நடத்தி பவனி வந்தார் கனிமாழி.
இன்று திஹாரில் இருக்கிறார். முதல் நாள் இரவு அவருக்கு வெப்பத்தாலும், கொசுக்கடியாலும் தூங்க முடியவில்லையாம். கழிப்பறைக்கு மறைப்பு இல்லாததால் கஷ்டப் பட்டாராம். விடியற்காலை 2.30 மணிக்குத் தான் உறங்கச் சென்றாராம். காலை 5.30 மணிக்கு சிறை அதிகாரிகள் எழுப்பியதும், இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று கேட்டாராம். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டதாம்.
கனிமொழி அவர்களே…. அய்யன் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.
இதற்கு உங்க டாடி என்ன உரை எழுதியிருக்கிறார் தெரியுமா ?
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.
Bro உண்மையில் நீங்க சொல்லும் போது சுவரசியமாக இருக்கு ஆனால் பயமாகவும் உள்ளது.