ரிலயன்ஸ் குடும்பமும் ராணுவக் கொள்முதலும்
பெருந்தொழிலதிபர் திருபாய் அம்பானி 2002இல் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன்களான முகேஷ், அனில் இருவருக்குமிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் யார் பிடியில் என்ற மோதல் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த அந்த மோதலுக்குப் பின் 2006இல் அந்தப் பெரும் குழுமத்தின் தொலைத்தொடர்பு, மின்சாரம், இயற்கை வளம், நிதிச் சேவை ஆகியவை சார்ந்த நிறுவனங்களைக் கைப்பற்றிக்கொண்டு அனில் வெளியேறினார். தனது நிறுவனத்திற்கு ‘ரிலையன்ஸ் குரூப்’ என்று பெயர் சூட்டினார்.
அனில் ஏற்கெனவே பகட்டுப் பேர்வழி, முரட்டு ஆசாமி என்று பெயரெடுத்தவர். முன்னாள் பாலிவுட் நடிகையை அவர் திருமணம் செய்துகொண்டது இந்த விமர்சனத்தை மேலும் விசிறிவிட்டது. அவரது தந்தை பல ஆண்டுகள் இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்தார். இப்போது, தனது பொறுப்பில் ஒரு நிறுவனத்தை இயக்க வேண்டிய சூழல், தன்னைப் பற்றிய விமர்சனங்கள் தவறு என்று நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அவருக்கு அமைந்தது.
ஆட்டம் கண்ட அனில் சாம்ராஜ்யம்
தொடக்கத்தில் எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. 2008இல் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்திற்கான பங்குகளை வெளியிட்டபோது, சில நிமிடங்களிலேயே 3 பில்லியன் டாலர் (சுமார் 21,750 கோடி ரூபாய்) அளவுக்குப் பங்குகள் விற்றுத் தீர்ந்தன. ஆனால் 2014 நிதியாண்டு இறுதியில் ரிலையன்ஸ் குரூப்பின் கடன்கள் எகிறின. தனது சில நிறுவனங்களின் சொத்துகளை, சில நிறுவனங்களையேகூட அவர் விற்கத் தொடங்கினார்.
ரிலையன்ஸ் குரூப்பின் சிமென்ட் ஆலை ஒரு போட்டி நிறுவனத்திற்குச் சென்றது. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 21,000 கோடி ரூபாயாகச் சுருங்கியது. இது, பத்து ஆண்டுகளுக்கு முன் அதன் பங்குகள் முதல்முறையாகப் பொதுமக்களுக்கு விற்கப்பட்டபோது கிடைத்த தொகையைவிடக் குறைவு. ரிலையன்ஸ் பவர் 2017 இறுதியில், நாட்டின் மேற்குப் பகுதிகளுக்காகத் தொடங்கியிருந்த மின் கடத்துகை தொழிலையும், மும்பையில் நடத்திக்கொண்டிருந்த மின் உற்பத்தி – விநியோகத் தொழிலையும் நிறுத்திக்கொண்டது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாசன் நகரில் உள்ள தனது அனல் மின் நிலையத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலக்கரி அளவை அதிகரிக்கக் கோரி அண்மையில் நீதிமன்றத்தை ரிலையன்ஸ் பவர் நாடியிருக்கிறது (மூன்று மின் உற்பத்தி நிலையங்களுக்கான ஒப்பந்தங்கள் ரிலையன்ஸ் பவருக்குக் கிடைத்திருந்தன. அந்த மூன்றில் சாசன் நிலையம் மட்டுமே அவர்களாலேயே கட்டப்பட்டதாகும்). அதிக நிலக்கரியை வெட்டியெடுக்க அனுமதிக்காவிட்டால், பெரும் இழப்புகளை எதிர்கொள்ள நேரிடும், ஒருவேளை மின் நிலையத்தையே மூட வேண்டிய நிலைமைகூட ஏற்படும் என்று ரிலையன்ஸ் பவர் நீதிமன்றத்தில் வாதாடியது.
2017 ஜூனில் அவர்களது தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மட்டுமே ரூ.45,000 கோடி அளவுக்குக் கடனில் விழுந்தது. அதைத் தொடர்ந்து உலக அளவிலான கடன் நிலவர மதிப்பீட்டு அமைப்புகள் இந்நிறுவனத்தின் தர நிலையைக் கீழிறக்கின. நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. இதனை திவாலாகிவிட்ட நிறுவனமாக அறிவிக்க வேண்டும் என்று தேசிய குழுமச் சட்டத் தீர்ப்பாயத்திற்கு, வெளிநாட்டுக் கடன் நிதி நிறுவனமான சைனா டெவலப்மென்ட் பேங்க் வேண்டுகோள் விடுத்தது. நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பாக பெய்ஜிங் நகரில் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்துகள் தனது சகோதரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு விற்கப்படும் என்று அறிவித்தார் அனில் அம்பானி.
இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மற்ற கடன் நிறுவனங்கள், திவால் அறிவிப்புக்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தின. எனினும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் சில சொத்துகளை ஜியோவுக்கு விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் 2018 ஆகஸ்ட்டில் அனுமதியளித்தது. அப்படியும்கூட, அவர்களது கடனில் பாதியளவுக்கும் குறைவாகவே அந்த விற்பனையால் பணம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து விரட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
குடும்பப் பிணைப்பு?
“அனில் அம்பானியை முகேஷ் அம்பானி நேரடியாக ஆதரிக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்,” என்றார் அந்த முன்னாள் மூத்த அதிகாரி. “இதில் அவர்களது குடும்ப வியூகம் இருக்கிறது. 2012ஆம் ஆண்டில், 126 ஜெட் விமானங்களுக்கான போட்டியில் டஸ்ஸால்ட்டுதான் குறைந்த விலை கேட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டபோது முதலில் அதனுடன் கூட்டுச் சேரப் போவதாக அறிவித்தது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தான். பாதுகாப்பு அமைச்சகம் டஸ்ஸால்ட்டுக்கு ஒப்பந்தம் அளிக்க ஒப்புதல் அளித்த இரண்டே வாரங்களில் அதனுடன் முகேஷ் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். ஆனால் அதனுடன் சேர்ந்து தொழில் செய்யப்போவதில்லை என்று திடீரென்று அறிவிக்கிறார். அதற்கான காரணம் எதுவும் வெளியே சொல்லப்படவில்லை.
2016இல் அவருடைய தம்பி நுழைகிறார், டஸ்ஸால்ட்டின் இந்தியக் கூட்டாளியாகிறார். டஸ்ஸால்ட் கம்பெனி இவர்களுடன்தான் இருக்கிறது. எம்எம்ஆர்சிஏ (126 மிராஜ் ஜெட் விமானங்களுக்கான ஒப்பந்தம்) விவகாரத்தில் டஸ்ஸால்ட் செயல்பாடுகளை அவர்தான் (முகேஷ்) தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். திடீரென்று அவர் விலகிக்கொள்ள, இவர் (அனில்) நுழைகிறார். ஆக, ரிலையன்ஸ் ஆட்டத்தின் தொடர்ச்சிதான் இது,” என்றார் அவர்.
“அண்ணன், தம்பி இருவரும் ஒருவரையொருவர் எதிர்ப்பது போலக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்துதான் செயல்படுகிறார்கள்,” என்று அனிலுக்கு நெருக்கமான அந்த முன்னாள் அதிகாரி கூறினார்.
2015க்கு முன் பாதுகாப்புத் தளவாடத் தொழிலில் அனிலின் ரிலையன்ஸ் குரூப் அப்படியொன்றும் முதலீடு செய்ததில்லை. மோடியின் பாரிஸ் அறிவிப்புக்குப் பிறகுதான், தலைகுப்புற விழுந்துகொண்டிருந்த தனது நிறுவனத்தைத் தூக்கி நிறுத்துவதற்குப் போர்த் தளவாடத் தொழில் பெரிய அளவில் கைகொடுக்கும் என்ற சிந்தனைக்கு அவர் வருகிறார். ரிலையன்ஸ் குரூப்பின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய விசையாகப் பாதுகாப்புத் தளவாடத் தொழில் அமையும் என்று வெளிப்படையாகவே பேசினார் அனில். ரிலையன்ஸ் குரூப்பின் துணை நிறுவனமாகிய, ரிலையன்ஸ் டிஃபென்ஸ் பிரிவைத் தனது துணை நிறுவனமாக வைத்துள்ள ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் குழுமத்தின் தலைவரான அவர், 2016இல் பங்குதாரர்கள் முன்னிலையில் பேசியபோது, பாதுகாப்புத் துறையில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வாய்ப்புகள் இருப்பதைத் தன்னால் காண முடிகிறது என்றார்.
திறன் வளர்ப்பில் முனைப்பு இல்லை
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைத் தூக்கிக் காட்டுவதற்காக பாதுகாப்புத் தளவாடங்களில் நாடறிந்த வல்லுனர்கள் சிலர் சேர்க்கப்பட்டார்கள். விரைவிலேயே அவர்களில் சிலருக்கு இந்த நிறுவனத்திடம் தெளிவான தொலைநோக்குத் திட்டம் எதுவும் இல்லை என்பது புரியவந்தது. அவர்களில் ஒருவர் என்னிடம், “ஒரு நிறுவனத்திடம் தேவையான தொழில்நுட்பத் திறன் இல்லை என்கிறபோது, அதை வளர்த்துக்கொள்ள குறிப்பிட்ட திட்டத்தை எடுத்துக்கொள்வது, அதன் தொழில்நுட்ப அம்சங்களைப் புரிந்துகொள்வது, பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வது ஆகிய செயல்பாடுகள் மிகவும் முக்கியம். பிறகு அந்தத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு ஏராளமான முதலீடு செய்தாக வேண்டும்,” என்று கூறினார்.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் தனக்கு கிடைக்கும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொழில்நுட்பத்திறனை வளர்த்துக்கொள்வது என்பதற்கு மாறாக, தனது வணிகத்தை வளப்படுத்திக்கொள்வதற்கு வெளிநாட்டுக் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்வதில்தான் அக்கறை காட்டியது. வரவேற்பறையில் வைக்கப்படும் “வெற்றிக் கோப்பைகள் போல அலங்காரமாகக் காட்டிக்கொள்வதற்காகவே” தங்களை நியமித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது என்றார் ஒரு வல்லுநர். அதைப் புரிந்துகொண்ட கணத்திலேயே அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்கள்.
ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் குரூப்பிற்குக் கிடைத்த ஆப்செட் முதலீடுகூடத் தொழிலைப் பெரிய அளவில் கொண்டுசெல்வதற்குப் போதுமானதாக இல்லை. வேறு சில தளவாடத் தயாரிப்புத் தொழில் வாய்ப்புகள் அனில் அம்பானி நிறுவனத்துக்குக் கிடைத்த வழிமுறைகளைப் பார்க்கிறபோது, ரஃபேல் ஒப்பந்தம்போல அரசாங்க ஆதரவோடுதான் கிடைத்தன என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த ஒப்பந்தங்களுக்கும் போதுமான முதலீடுகள் வந்து சேரவில்லை. பாதுகாப்புத் துறைக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதியில் எத்தனை பங்கு அம்பானி குழுமத்திற்கு வந்து சேரும் என்ற கேள்வி எல்லோர் முன்பாகவும் நிற்கிறது. அதையெல்லாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள எந்த அளவுக்கு அந்தக் குழுமம் தாக்குப்பிடித்து நிலைத்திருக்கும் என்ற கேள்வியும்தான்.
ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கடைசியாகத் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தனக்கு மொத்தம் 18,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதன் மொத்த சொத்து மதிப்பு 24,000 கோடி ரூபாய் என்பதோடு இது ஒப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய கடன் சுமை இருக்கிறபோதிலும், மொத்த சொத்து மதிப்பைத் தாண்டி கடன் போய்விடாமல் இருக்கிற நான்கு அம்பானி நிறுவனங்களில் அதுவும் ஒன்று.
ரிலையன்ஸ் டிஃபன்ஸ் குடையின் கீழ் 13 துணை நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர். இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் கூட்டாளி இந்த ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர்தான். அதன் பங்குகளில் பெரும்பகுதி இதன் கையில்தான் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் பொதுப்பங்குச் சந்தைப் பட்டியலில் உள்ளவை அல்ல. ஆகவே இவை தங்களது நிதிநிலை அறிக்கைகளை வெளியிடுவதில்லை. ரிலையன்ஸ் நேவல் அன்ட் இன்ஜினீயரிங் என்ற நிறுவனமும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் கீழ் வருவதுதான். ரிலையன்ஸ் டிஃபன்ஸ் சிஸ்டம்ஸ் என்ற சிறப்பு நோக்க ஏற்பாட்டின் கீழ் ஏற்படுத்தப்பட்டது இது.
ரிலையன்ஸ்சின் கப்பல் கட்டுமானச் செயல்பாட்டிற்கான இந்த நிறுவனம் இந்தியக் கடற்படையிடமிருந்து பல ஒப்பந்தங்களை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கான பட்டியலில் இடம் பிடித்துவிட்டதாகவும், அந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் பாதுகாப்புத் தளவாட நிறுவனங்களில் பொதுப் பங்குச் சந்தைக்கு வந்த ஒரே நிறுவனம் இதுதான் என்பதால் தனது நிதிநிலை அறிக்கையையும் செயல்பாட்டு அறிக்கையையும் வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் இதற்கு உள்ளது. ஆகவே, ரிலையன்ஸ் குரூப்பின் பாதுகாப்புத் தளவாடத் தொழில்கள் என்ன நிலையில் உள்ளன, எப்படிச் செயல்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள நமக்குக் கிடைத்துள்ள நல்லதொரு வழி இதுதான்.
சாகர்
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/business/india-gambles-defence-interests-reliance-group
தமிழில்: அ.குமரேசன்
Koorai yeri kozhi pidikka theriyaadahavan vaanam yeri vaigundam ponanaam. Good for nothing Anil.
Kooai Teri Kozhikode pidikka theriyaadahavan vaanam Teri vaigundam ponanaam. Good for nothing Anil.