நீர்மூழ்கிகள் கொள்முதலும் ரிலயன்ஸும்
2014 டிசம்பர் 23 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அமைப்பாகிய பாதுகாப்புக் கொள்முதல் மன்றம், ரூ.80,000 கோடி அளவுக்கு வரும் என மதிப்பிடப்பட்டுள்ள, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட 6 நீர்மூழ்கிகளை வாங்குவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. சரியான விலை ஒப்பந்தப் புள்ளிப் போட்டியில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். பொருத்தமான இந்திய கப்பல் தளங்ககளைக் கண்டறிய ஒரு குழுவை அந்த மன்றம் அமைத்தது. தகுதி வாய்ந்த நிறுவனங்களையும் கப்பல் தளங்களையும் பரிந்துரைக்குமாறு அந்தக் குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்தார்.
இந்த நடைமுறையில் எந்தெந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன, ஒப்பந்தம் முடிவானதா இல்லையா என்பதெல்லாம் இன்னமும் பொதுவெளியில் தெரியவரவில்லை. இது தொடர்பாக, எந்தெந்த கப்பல் தளங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, அதற்குக் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன என்று கேட்டு 2018 பிப்ரவரியில் நான் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைச்சகத்திடம் மனு தாக்கல் செய்தேன். இன்று வரையில் எந்த பதிலுமில்லை.
நீர்மூழ்கிகள் கொள்முதலுக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு மூன்று நாட்கள் முன்பாகத்தான் ரிலையன்ஸ் டிஃபன்ன் சிஸ்டம் குழுமம் உருவாக்கப்படுகிறது. மூன்று மாதங்களில் அது, நாட்டின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரிய கப்பல் தளங்களில் ஒன்றாகிய பிப்பவவ் ஷிப்யார்ட் குழுமத்தின் பங்குகளில் பெரும்பகுதியை வாங்குகிறது. ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், பிப்பவவ் குழுமம் திவாலாகும் நிலைமைக்கு வந்திருந்தது என்பதுதான். பல முதலீட்டாளர்கள் அதன் பங்குகளை வாங்கிக்கொண்டு அதற்கு முட்டுக்கொடுக்கத் தயாராக இருந்தார்கள். ஆயினும் 2015 பிப்ரவரி வரையில் அவர்களில் யாரும் அதில் உடனடி ஆர்வம் காட்டவில்லை. 2015 மார்ச் மாதத்தில் அவர்கள், அடுத்த 6 மாதங்களில் அந்தக் குழுமத்தின் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள ரிலையன்ஸ் குரூப் முயல்கிறது என்று தெரிவித்தனர்.
பிப்பவவ் ஷிப்யார்டின் கடன்கள் 6,000 கோடி ரூபாயைத் தாண்டின. கடன்களுக்கான வட்டியைக் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு அந்தக் குழுமம் செலுத்தவில்லை. ஆனாலும் அதை நோக்கி முதலீட்டாளர்கள் ஏன் ஈர்க்கப்பட்டார்கள் என்றால், பிரெஞ்சுக்குச் சொந்தமான டீசிஎன்எஸ், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஜேஎஸ்சி ஜ்வியோஜ்டோக்கா ஆகிய கப்பல் கட்டுமான நிறுவனங்களோடு கூட்டு உடன்பாடுகளைச் செய்திருந்தது பிப்பவவ். இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியக் கடற்படைக்கான கப்பல்களைக் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் முன்னனுபவம் வாய்ந்தவை. ஏற்கெனவே தனது கையில் ஓரளவுக்கு இருந்த ஒப்பந்த ஆணைகளோடு கூடுதலாக, நிறுத்து மேடைகள் அல்லது எல்பிடி என்று அதிகாரபூர்வமாகக் குறிப்பிடப்படும் இரண்டு போர்க் கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுகிற முயற்சியில் பிப்பவவ் ஈடுபட்டிருந்தது. 2013இல் அதற்கான ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்தது.
நிர்வாகத்தைத் தனது கையில் எடுத்துக்கொள்ள ரிலையன்ஸ் முயன்றதன் பின்னணியில், பிப்பவவ் நிறுவனம் தனது கடன்களை “மறுகட்டுமானம்” செய்கிற முயற்சிகளைத் தொடங்கியது. கடன் பத்திரங்களைப் பங்குப் பத்திரங்களாக மாற்றுவது, அதாவது நிறுவனத்தின் சில பகுதிகளைக் கடன் வழங்கியோரிடம் ஒப்படைப்பது, கூடுதல் முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி பெறுவது என்ற முயற்சிகள் அவை.
கடன் மறுகட்டுமான முயற்சி என்பது கூர்மையான நிதிப் பற்றாக்குறைக்கான அறிகுறியேயாகும். இந்த நிலைக்கு வருகிற ஒரு நிறுவனத்தை, அந்த முயற்சியில் அது வெற்றி பெறுகிற வரையில், மிகுந்த எச்சரிக்கையோடுதான் எல்லோரும் அணுகுவார்கள். ஆனால் பிப்பவவ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் இந்தக் கடன் மறுகட்டுமான நடவடிக்கையால் புதிய வணிக வாய்ப்புகள் அலையலையாக வரத் தொடங்கின. இந்தப் புதிய வாய்ப்புகள் மோடியின் ரஷ்யப் பயணத்தோடு தற்செயலாக இணைந்துகொண்டதாகத் தெரிகிறது.
மோடியின் பயணமும் ரிலயன்ஸும்
இந்திய – ரஷ்ய அரசுகளுக்கிடையேயான உச்சி மாநாட்டிற்காக மோடி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தபோது, 2015 ஜூலையில், ரஷ்ய அரசு தனது ஜேஎஸ்சி ஜ்வியோஜ்டோக்கா நிறுவனத்தின் இந்தியக் கூட்டாளியாக பிப்பவவ் குழுமத்தைத் தேர்வு செய்துள்ளதாக அறிவித்தது. இந்தியக் கடற்படைக்குப் போர்க் கப்பல்கள் கட்டுகிற திட்டத்திற்கான கூட்டாளியாக பிப்பவவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அரசு கூறியது. இந்தியாவின் தேசியப் பங்குப் பரிமாற்ற நிறுவனம் (என்எஸ்இ) இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு பிப்பவவ் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டது. ஆனால் இது இரு நாட்டு அரசுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை என்றும், ஆகவே அந்த விவரங்கள் ரகசியமானவை என்றும் பிப்பவவ் கூறிவிட்டது. அதன் பின்னர், இந்திய நீர்மூழ்கிகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக ஜ்வியோஜ்டோக்காவுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாக என்எஸ்இ அமைப்புக்கு பிப்பவவ் தகவல் தெரிவித்தது.
பின்னர் டிசம்பரில் மோடி மறுபடியும் ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். போர்க் கப்பல் கட்டுமானத் திட்டத்தைக் குறிவைத்து ரிலையன்ஸ் டிஃபன்ஸ், ரஷ்யாவின் யுனைட்டெட் ஷிப்பில்டிங் கார்ப்பரேசன் இரு நிறுவனங்களும் விரைவில் கூட்டுத் தொழிலை அறிவிக்கவுள்ளன என்று இந்திய ஊடகங்களில் செய்தி வந்தது. அப்போதும் என்ஸ்இ அந்த உடன்பாடு குறித்த விவரங்களைக் கேட்டது. அப்போதும் பிப்பவவ் சொன்ன பதில், ”இந்திய அரசுக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையே நடந்த போர்த்திறன் தொடர்பான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதிதான் இந்தப் பேச்சுவார்த்தை,” என்பதேயாகும்.
டிசம்பர் இறுதியில் ரிலையன்ஸ் குரூப் வெளியிட்ட அறிவிப்பில், பிப்பவவ் கப்பல் தளத்தைத் தனது வசம் எடுத்துக்கொள்ளும் நடைமுறைகள் முடிவடைந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பெயர் முதலில் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் லிமிட்டெட் என்று மாற்றப்பட்டது. பின்னர் அது ரிலையன்ஸ் நேவல் அண்ட் இன்ஜினீயரிங் லிமிட்டெட் என்று மாற்றப்பட்டது. தேசிய பங்குப் பத்திரப் பரிமாற்ற நிறுவன அலுவலகத்தில் இது ‘ஆர்நேவல்’ என்ற வணிக அடையாளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருகும் கடன் சுமை
இந்தக் கட்டத்தில்தான் பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் நடைமுறைக்கான 2016ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட ஆவணத்தை அரசு வெளியிடுகிறது. போர்த்திறன் சார்ந்த தொழில்களில் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொள்வது தொடர்பான ஒரு அத்தியாயத்துடன் அந்த ஆவணம் வருகிறது. அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிற இந்தியத் தனியார் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து தொழில் செய்வதற்கு அனுமதியளிக்கிற பகுதி அது. அதற்கடுத்த ஆண்டு அரசு அந்தக் கொள்கையைப் பொதுவெளியில் வெளியிட்டு, நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்படும் என்று அறிவித்தது.
அதற்கு முன்பாகவே அம்பானி தனது ஆர்நேவல் பங்குதாரர்களிடம், போர்த்திறன் சார்ந்த தொழில் கூட்டாளி என்ற ஏற்பாட்டை ஏற்பதாகவும், புதிய நீர்மூழ்கிகளைக் கட்டுவதற்குத் தகுதி வாய்ந்தவையாக இரண்டு இந்திய தனியார் நிறுவனங்கள்தான் தேர்வு செய்யப்பட உள்ளன, அந்த இரண்டில் ஒன்று தனது நிறுவனம் என்று கூறினார். இதை உறுதிப்படுத்தும் ஊடகச் செய்திகளும் வந்தன. அத்துடன், அந்த இரண்டாவது தனியார் நிறுவனம் லார்சன் அண்ட் டூப்ரோ என்று அந்தச் செய்திகள் தெரிவித்தன. கடற்படைக்குத் தேவையான நீர்மூழ்கிகளைக் கட்டுவதில் ஏற்கெனவே ஈடுபட்டிருந்த மற்றொரு நிறுவனமான மாஸாகான் டாக் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை – அது அரசுக்குச் சொந்தமான நிறுவனம். இந்த இரண்டு நிறுவனங்கள்தான் நீர்மூழ்கி ஒப்பந்தத்தைப் பெறத் தகுதிவாய்ந்தவை என்று முடிவு செய்ததற்கான அடிப்படைகள் என்ன என்று நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் அரசு அந்த விவரங்களை இதுவரையில் வெளியிடவில்லை.
இறுதியாக ரிலையன்ஸ் குரூப், ஆர்நேவல் கடன் நிலையை மறுகட்டுமானம் செய்வதற்கும், கப்பல் தளத்தில் மீண்டும் நிதியை இறக்கிவிடுவதற்குமான திட்டம் ஒன்றை 2017 பிப்ரவரியில் அறிவித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கப்பல் தள நிறுவன பங்குதாரர்கள் அதில் மீண்டும் நிதியை இறக்குகிற திட்டத்தை அங்கீகரித்தார்கள். கடன் வழங்கியிருந்த சிலருக்கு ஒரே தடவையிலான தொகையாக ரூ.163 கோடி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு நிறுவனப் பங்குகள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆர்நேவல் நிறுவனத்திற்குக் கடன் வழங்கியிருந்த வங்கிகளின் – அவை அனைத்துமே அரசு வங்கிகள் என்பது கவனிக்கத்தக்கது – குழுவுக்குத் தலைமை தாங்கிய ஐடீபீஐ வங்கி – அதுவும் அரசுக்குச் சொந்தமானதுதான் – அந்த நிறுவனம் கடன் மறுகட்டுமானத்தை நிறுத்திக்கொள்ள அனுமதியளித்தது. இது, ஆர்நேவலின் கடன்கள் பெரிய அளவில் இருந்தபோதிலும் அதன் நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ள வழி செய்தது. ரிலையன்ஸ் குரூப் நிர்வாகத்தின் கீழ் வந்ததற்குப் பிறகும்கூட அது தொடர்ந்து இழப்புகள் பற்றிய தகவல்களையே வெளியிட்டுவந்தது. எல்லாமாகச் சேர்ந்த மொத்தக் கடன் தொடர்ந்து அதிகரித்துவந்தது. 2017 மார்ச் மாதத்தில் அதன் மொத்தக் கடன் சுமார் 9,000 கோடி ரூபாய்.
மாறும் அளவுகோல்கள்
நிலவரம் மேலும் பல விசித்திரக் கட்டங்களைச் சந்தித்தது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றொரு தனியார் கப்பல் கட்டுமான நிறுவனமான ஏபீஜி ஷிப்யார்ட் என்ற குழுமத்திற்கு ஏற்கெனவே, கடற்படைக் கப்பல்களுக்காக என ஒப்பந்த ஆணை அளித்திருந்தது. ஜூன் மாதம் அந்த ஆணையை அமைச்சகம் விலக்கிக்கொண்டது. அந்த நிறுவனத்தின் மோசமான நிதிநிலைமைதான் இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அமைச்சகம் கூறியது. ஆனால், அந்த ஆண்டு ஜனவரியில், கடன் நிலையை மறுகட்டமைப்புச் செய்துகொண்டிருந்த ஆர்நேவல் நிறுவனத்திற்கு, கடலோரக் காவல் படைக்கான கண்காணிப்புக் கப்பல்களைத் தயாரித்துக் கொடுப்பதற்கான மிகப் பெரிய ஒப்பந்த ஆணை. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்த ஒரு நிறுவனத்திற்குத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் கிடைத்திருக்க, அதே போன்ற நெருக்கடியில் இருந்த மற்றொரு நிறுவத்திற்குக் கிடைத்திருந்த ஆதாயமிக்க ஒப்பந்தங்கள், அதையே காரணம் காட்டி விலக்கிக்கொள்ளப்பட்டது.
கடற்படை ஏபீஜி ஷிப்யார்ட் ஒப்பந்தத்தை விலக்கிக்கொண்ட அதே மாதத்தில், நீர் நிலம் இரண்டிலும் பயன்படக்கூடிய எல்பிடீ போர்க் கப்பல்களைக் கட்டுவவதற்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகளை அளிக்குமாறு ஆர்நேவல், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்ற செய்தி வெளிவந்தது. 2013இல் முதலில் ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அரசு அழைப்பு விடுத்தபோது, இரண்டு வெவ்வேறு கப்பல் தளங்களில் நான்கு கப்பல்களைக் கட்ட வேண்டும் என்று கூறியிருந்தது. ஒரு தனியார் நிறுவனத்திடமோ அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமோ இரண்டு கப்பல்களைக் கட்டித் தருவதற்கு ஒப்பந்தம் அளிக்கப்படும், பின்னர் அந்த நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்ளும் அடிப்படையில் பொருத்தமான ஒரு அரசுத் துறை நிறுவனம் மீதியுள்ள இரண்டு கப்பல்களைத் தயாரிப்பதற்கான நியமன ஒப்பந்தம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது (கடற்படைத் திட்டங்களுக்கு இவ்வாறு நியமன ஒப்பந்த அடிப்படையில் தயாரிப்பதற்கு பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் நடைமுறை ஆவணம் அனுமதிக்கிறது).
முதல் இரண்டு கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்த நியமனத்தை முதலில் அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிட்டெட் நிறுவனத்திற்குத்தான் அரசு அளித்திருந்தது. மீதி இரண்டு கப்பல்களுக்கு பிப்பவவ் நிறுவனமும் மற்ற நிறுவனங்களும் போட்டியிட்டன. ஆனால் 2017இல் அரசு, நான்கு கப்பல்களுக்குமான ஆணைகளையுமே, புதிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரே நிறுவனத்திற்கு அளிப்பது என்று முடிவு செய்தது. இதற்காக இறுதிப்படுத்தப்பட்டவை இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே – ரிலையன்ஸ் டிஃபன்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ.
சாகர்
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/business/india-gambles-defence-interests-reliance-group
தமிழில்: அ.குமரேசன்