அலிகர் போலி என்கவுண்டர் கொலை குறித்து உண்மை அறியும் குழுவின் அறிக்கை
சில நாட்களுக்கு முன், உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் ஹர்தவுலியில், என்கவுண்டர் ஒன்றைப் படம் பிடிக்க யோகி ஆதித்யநாத் அரசு மீடியாவுக்கு அழைப்பு விடுத்தபோது, என்கவுண்டர் கொலை ஒன்று தலைப்புச் செய்தியானது.
மாநிலத்தில் கிட்டத்தட்ட அரசுக் கொள்கை போல ஆகிவிட்ட என்கவுண்டர் மரணங்கள் தொடர்பாக அரசு தன் வெளிப்படைத்தன்மையைக் காண்பிக்கும் முயற்சியாக மீடியாவுக்கான அழைப்பு அமைந்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல், மாநிலத்தில் அதிகரித்திருக்கும் என்கவுண்டர் கொலைகளின் நம்பகத்தன்மை தொடர்பாக எதிர்கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கேள்வி எழுப்பிவருகின்றன.
என்கவுண்டரை டிவியில் காண்பிப்பதன் மூலம், குற்றங்களை அடக்குவதில் தனது அரசு மற்றும் காவல் துறையின் அதிகாரத்தையும் வெளிப்படுத்த அரசு விரும்பியது. யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுண்டர் சம்பங்கள் நடைபெற்றுள்ளன. அலிகார் சம்பவம் என்கவுண்டர் பலியை 67ஆக உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு சம்பவத்திலும், ஆபத்தான கிரிமினல் கொல்லப்பட்டார் என்பதும் மாநில மக்களின் பொது நலனுக்காக அது மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்டாகீம், நவுஷத் ஆகியோர் தப்பியோடிய கிரிமினல்கள் என்று சொல்லப்பட்டது. ஒரு கொலை தொடர்பாகத் தேடப்பட்டவர்கள், தங்களைத் துரத்தி வந்த காவல் துறைக் குழுவைச் சுட முயன்றபோது அவர்களை கொல்ல வேண்டியதாயிற்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
என்கவுண்டர் கொலை குறித்த செய்தி சேகரிக்க மீடியாவுக்கு அழைப்பு விடுத்தது, வெளிப்படைத்தன்மையை உணர்த்துவதற்காக என்றாலும் இது மேலும் பல கேள்விகளையே எழுப்பியுள்ளது. மாநிலத்தில் முன்னதாக நடைபெற்ற என்கவுண்டர் கொலைகளில், பல சம்பவங்கள் மரணமடைந்த குடும்பத்தினர் சார்பில் தீவிரமாக மறுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து யுனைடெட் அகைன்ஸ்ட் ஹேட் (United Against Hate) அமைப்பு உண்மை கண்டறிய முயன்றது. செப்டம்பர் 27ஆம் தேதி யுனைடெட் அகைன்ஸ்ட் ஹேட் குழுவினர், பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர்களுடன் அலிகரில் உள்ள அட்ரோலி கிராமத்திற்குச் சென்றோம். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் நாங்கள் பேசினோம். காவல் துறை அதிகாரிகளிடம் பேச விரும்பினோம். ஆனால் அவர்கள் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட மறுத்ததோடு, பஜ்ரங்க் தள் ரவுடிகளுடன் சேர்ந்துகொண்டு எங்களை அச்சுறுத்தினர்.
உண்மை கண்டறியும் தினத்தில் எங்கள் குழு கண்டறிந்தவை:
1) மூஸ்டாகின் தாய் ரபீகின் மற்றும் மனைவி ஹீனாவை சந்தித்தோம். ஷபானாவின் இரண்டாவது மகன் சல்மானையும் ( 17) காவல் துறை அதே நாளில் விசாரணைக்கு அழைத்துச் சென்றது. இப்போது அவர் சிறையில் இருக்கிறார். நவுஷத்தின் தார் ஷாஹீனையும் சந்தித்தோம். மனநிலை பாதிக்கப்பட்ட நபிஸ் (23) விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார். அவரது தாய் ரவ்குவினாவையும் சந்தித்தோம். கைது நடந்த தினம் முதல் முஸ்டாகுவிமின் தந்தையைக் காணவில்லை. அவர் வீடு திரும்பவில்லை. அவரது போனையும் டிரேஸ் செய்ய முடியவில்லை.
2) மூன்று இளைஞர்களும் அருகே உள்ள கடைகள் அல்லது வீட்டில் உள்ள பட்டறைகளில் வேலை செய்வார்கள் எனக் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். முஸ்டாகுவிம் துணிக்கடையில் வேலை பார்த்தார். சல்மான், நவுஷத் ஆகியோர் துணிகள் தயாரிக்கும் உள்ளூர் தொழில்முனைவோரான ஹாஜி இம்ரானிடம் வேலை பார்த்ததனர். நபிஸ் வேலை பார்க்கவில்லை. செப்டம்பர் 16ஆம் தேதி அனைவரும் காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டனர். மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் எப்படி அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர். சில நாட்கள் முன் அருகே உள்ள சபேத்பூர் கிராமத்தில் நடைபெற்ற சாது ராமதாஸ் கொலை மற்றும் வேறு ஒரு தம்பதி கொலை தொடர்பாக இவர்கலைக் கைது செய்வதாகக் காவலர்கள் தெரிவித்தனர். ஒரு நாள் கழித்து காவல் துறை, முஸ்டாகுவினும் நவுஷத்தும் தப்பிச் சென்றுவிட்டதாக அவர்களுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
3) நான்கு நாட்கள் கழித்து, இரண்டு இளைஞர்களும் காயம் அடைந்து, மக்கான் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முஸ்டாகுவின் குடும்பத்திடம் காவல் துறை தெரிவித்தனர். அங்கு சென்று பார்க்குமாறு குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் பஸ் கட்டணம்கூட அளித்தனர். ஷபானாவும் ஹீனாவும் அங்கு சென்றபோது இளைஞர்களின் இறந்த உடலைத்தான் பார்க்க முடிந்தது. உடல் முழுவதும் கீறல்கள் இருந்ததாகவும், தொடையிலும் முகத்திலும் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்தனர். அவர்கள் தாடை உடைந்திருந்தது. அவர்கள் உடையில் இரத்தம் உரைந்து கிடந்தது.
4) உடல்களை ஒப்படைக்கக் காவல் துறை வெற்றுக் காகிதங்களில் அம்மாக்களின் கைரேகையை வாங்கிக்கொண்டது. ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகள் மற்றும் முஸ்டாகுவினின் நிக்கநாமாவையும் எடுத்துக்கொண்டனர். குடும்பத்தினர் எவ்விதமான அடையாள அட்டையும் இல்லாமல் இருக்கின்றனர்.
5) நவுஷத் மற்றும் முஸ்டாகுவினின் உடல்கள் எந்தவித சடங்கு அல்லது நமாஸ் இல்லாமல் எரிக்கப்பட்டன. குடும்பத்திற்கு இன்னமும் எப்.ஐ.ஆர் நகல் அல்லது போஸ்ட்மார்ட்டம் நகல் இன்னுமும் வழங்கப்படவில்லை.
6) இந்த இளைஞர்கள் அப்பாவிகள் என்றும் இதற்கு முன் குற்றங்கள் செய்ததில்லை என்றும் அக்கம்பக்கத்தவர்கள் தெரிவிக்கின்றனர். அக்கம்பக்கத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடம் பேசினோம். அந்த இளைஞர்கள் அருகே உள்ள கடைகளிலும் பட்டறைகளிலும் வேலை பார்த்ததாகத் தெரிவித்தனர். தினமும் வேலைக்குச் சென்று வீடு திரும்புவதைப் பார்த்துள்ளனர். அவர்கள் எந்த விதக் குற்ற நடவடிக்கையிலும் ஈடுபட்டுப் பார்த்ததில்லை என்றனர்.
7) இந்த என்கவுண்டர்கள் நடைபெற்ற பிறகு, அவர்கள் வீடுகள் முன் காவலர்கள் நிறுத்தப்பட்டு யாரிடம் பேச அனுமதிக்கப்பவில்லை என குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தவர்கள் தெரிவித்தனர். வீட்டிற்கு உணவு கொண்டுசெல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதால் குடும்பத்தினர் சில நாட்கள் சாப்பிடாமல் இருந்துள்ளனர். வயதான பெண்மணி ஒருவர் வீட்டிற்குள் சென்று பாதிக்கப்பட்ட அம்மாக்களுக்கு குரான் வாசிக்க விரும்பியபோதும் அவர் அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பெண்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற காவலர்கள், மீடியாவிடம் பேசக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். அவர்கள் மீடியாவிடம் பேசினால் விசாரணையில் இருக்கும் நவுஷத், சல்மான் ஆகியோரும் கொல்லப்படலாம் எனக் காவலர்கள் மிரட்டியுள்ளனர்.
8) செப்டம்பர் 16ஆம் தேதி இரவு 8.45க்குக் கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட டாக்டர் யாசினின் சகோதரர் ரியாசையும் சந்தித்தோம். அர்டோலி காவல் நிலைய அதிகாரி அவருடன் பேச விரும்புவதாக அழைத்துச்சென்றார். டாக்டர் இர்பான், தனது சொந்த பைக்கில் காவல் நிலையம் சென்றார். பைக் பின்சீட்டில் காவலர் ரகுராம் சிங் அமர்ந்திருந்தார். ஒரு மணிநேரம் ஆகியும் அவர் வராததால், ரியாஸ் அவரைத் தேடி கோட்வாலி சென்றார். காவல் நிலைய அதிகாரி அங்கு யாரும் வரவில்லை என மறுத்துவிட்டார். மூன்று நாட்கள் கழித்து, ரியாசிடம் அவரது சகோதரர் அலிகார் சிறையில் இருப்பதாகவும், சாது ராமதாஸ் கொலை தொடர்பாக 302ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
சகோதரர் ஏன் குறி வைக்கப்படுகிறார் எனக் கேட்டபோது, ஹாஜி இம்ரான் போல அவர்களும் வீட்டில் ஆடைகள் தயாரிக்கும் பட்டறை நடத்திவந்ததாக ரியாஸ் தெரிவித்தார். அன்றைய தினம், ஆடைகள் ஆர்டர் தொடர்பாக முஸ்டாகுவினிடம் பேசியிருக்கிறார். அந்த போன் அழைப்பு காரணமாக காவலர்கள் இந்த வழக்கில் தொடர்புபடுத்தியிருக்கலாம்.
9) அர்டோலி காவல் நிலையத்திற்கு நாங்கள் சென்றபோது, அதிகாரி பர்வேஷ் ராணா எந்த உரையாடலும் மேற்கொள்ளவில்லை என்றார். மிகவும் கடுமையாக நடந்துகொண்டவர், என்கவுண்டர் தொடர்பாக எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்தக் குடும்பங்கள் அடையாள அட்டை இல்லாத வெளியாட்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று கூறினார். எனினும் இந்த இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் எந்த வழக்கும் இல்லை என்று கூறினார். மற்ற காவல் நிலையங்களில் அவர்களுக்கு எதிராக வழக்குகள் இருப்பதாகக் கூறியவர் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மாநில சிறைச்சாலையில் பல கிரிமினல்கள் இருப்பதாகவும் இளைஞர்கள் அவர்களுடன் உறவு கொண்டவர்கள் என்று கூறினார். கிரிமினல்கள் மற்றும் இளைஞர்களிடம் டிஎன்.ஏ சோதனை செய்தால் கிரிமினல் தொடர்பு தெரிய வரும் என்றார்.
10) 10 நிமிடங்கள் நடந்த இந்த உரையாடலின்போது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து எங்களை மிரட்டத் துவங்கினர். அவர்கள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் காவலர்கள் மவுனமாக இருந்தனர். வசைகளை வீசியவர்கள், இந்த இளைஞர்கள் தீவிரவாதிகள் என்றும் எனவே கொல்லப்பட்டனர் என்றும் கூச்சலிட்டனர். அவர்களை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றனர். எங்களை மிரட்ட காவலர்கள் அவர்களை வரவழைத்துள்ளனர் எனத் தெளிவானது. பாதுகாப்பு இல்லை என உணர்ந்து அங்கிருந்து வந்துவிட்டோம். 200 பேர் காவல் நிலையத்தில் கூடி, ஜெய் ஸ்ரீராம், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே எனும் கோஷங்களை எழுப்பியதாகச் சிலர் கூறினர்.
11) சில நாட்கள் கழித்து, சமூக செயற்பாட்டாளர் மரியா சலிம் இதேபோல முற்றுகை இடப்பட்டுள்ளார். இது போன்ற மிரட்டல் செயல்களால் காவல் துறையினர் இந்த இளைஞர்களின் படுகொலை குறித்து யாரையும் விசாரிக்க அனுமதிக்கவில்லை. அவரது அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.
காவல் துறை மற்றும் மீடியாவின் பிரச்சாரம்
எங்கள் உண்மை அறியும் குழுவினர், நவுஷத் மற்றும் முஸ்டாகுவினின் அம்மாக்களைக் கடத்திச்சென்றதாக பஜ்ரங் தள் அமைப்பினர் குற்றம்சாட்டியிருப்பதை மறுநாள் நாளிதழ்களில் பார்த்துத் திகைத்தோம்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நடப்பு தலைவர் மஸ்கூர், முன்னாள் தலைவர் பவுசில் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருந்தது. பிடிஐயிடமிருந்து இந்தச் செய்தியைப் பெற்ற மீடியா தவறான தகவல்களைப் பரப்பத் துவங்கியது. ஏபீபி நியூஸ், நவோதயா டைம்ஸ், யுனைடெட் அகைன்ஸ்ட் ஹேட் அமைப்பின் 10 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டதாகப் பொய்ச் செய்தி வெளியிட்டது. பரபரப்பான பொய்ச் செய்திகள் வெளியிடுவதில் மற்ற மீடியாக்களும் பின் தங்கவில்லை. ஜன்சட்டா மற்றும் ஜாக்ரன், உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த உமர் காலித், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் இரண்டு தலைவர்களுடன், கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் அம்மாக்களைக் கடத்திச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது. அலிகர் என்கவுண்டருடன் ஜே.என்.யூ.வுக்கும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பு இருப்பதாக ஜீ நியூஸ் இப்போது ‘கண்டுபிடித்திருக்கிறது’.
இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுவதற்கு முன் ஊடக நண்பர்கள் ஏன் எங்களைத் தொடர்புகொண்டு தகவல்களைச் சரிபார்க்கவில்லை? அதன் செயல்களை விமர்சிபவர்கள் மீது அரசு இயந்திரம் பொய்ச் செய்திகளை பரப்புவது தொடர்பாக இது எங்கள் முதல் அனுபவமாக அமைந்தது. மேலும், மீடியாவின் ஒரு பகுதி, அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பதற்கு பதிலாகச் சூழல் பாழாகும் வகையில் செயல்படுகிறது. மீடியாவின் ஒரு பகுதி கேள்விகள் கேட்பதை நிறுத்துவிட்டு, இப்போது கேள்வி கேட்பவர்களை அச்சுறுத்தும் வகையில் பொய்ச் செய்திகளை வெளியிடுகின்றன. எங்களால் கடத்தப்பட்டதாக ஆதாரம் இல்லாமல் கூறப்படுவதை எதிரித்து ஷப்னாவும் ஷாஹீனும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதை மீடியாவுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
ரிஹாய் மஞ்ச் வெளியிட்ட உண்மை அறியும் அறிக்கையில், இந்தக் கொலையில் இளைஞர்கள் தொடர்புகொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் சாது ராமதாஸ் குடும்பம் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உபி காவல் துறைக்கான கேள்விகள்:
1) சாது ராமதாஸ் கொலையில் இந்த இளைஞர்கள் தொடர்புகொண்டிருந்தனரா? இவர்கள் பைக்கைத் திருடிச் சென்ற குற்றப் பின்னணி உள்ளவர்களா? தப்பியோடியதால் கொல்லப்பட்டனரா? எனில் ஏன் இத்தனை மாறுபட்ட தகவல்கள்?
2) காவல் துறை தற்காப்புக்காகச் சுட்டது என்றால், எப்படி மீடியா அழைக்கப்பட்டு நேரடி என்கவுண்டர் நிகழ்த்தப்பட்டது? தங்களை நோக்கிச் சுட்டதால்தான் தற்காப்புக்காகச் சுட நேர்ந்தது எனக் காவல் துறை கூறும் நிலையில் குறிப்பிட்ட மீடியாக்களுக்கு மட்டும் என்கவுண்டர் பற்றி எப்படி தெரிந்தது? இந்த இளைஞர்கள் சுடுவார்கள், காவலர்கள் தற்காப்புக்குச் சுடுவார்கள் எனக் காவல் துறைக்கு முன்னரே தெரிந்திருந்ததா? என்கவுண்டர் தொடர்பான மீடியா காட்சிகள் இது உண்மையா பொய்யா என உணர்த்தவில்லை. காவலர்கள் குறி பார்ப்பதை மட்டுமே காட்டுகிறது. எவ்வித மோதலும் நடைபெற்றதாகத் தெரிவில்லை.
3) போஸ்ட்மார்ட்டம் அறிக்கை, எப்.ஐ.ஆர். நகல் ஆகியவற்றைக் காவல் துறை குடும்பத்தினருக்கு ஏன் இன்னமும் வழங்கவில்லை?
4) நவுஷத் மற்றும் முஸ்டாகுவின் கொல்லப்பட்ட பிறகு காவலர்கள் அவர்கள் வீடுகளில் ரெய்டு செய்தது ஏன்? குடும்பத்தினரின் ஆதார் அட்டை மற்றும் பான்கார்டை ஏன் எடுத்துச் சென்றனர்?
5) காவல் துறை குடும்பத்தினரிடம் கூறியது போல, முஸ்டாகுவின் மற்றும் நவுஷத் விசாரணையிலிருந்து தப்பியது எப்படி? இரண்டு கிரிமினல்கள் தப்பிய பிறகு மீடியாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்கள் தப்பிச்சென்ற பிறகு கொலை செய்யப்படுவதற்கு முன் தேடப்படும் நோட்டீஸ் ஒட்டப்பட்டதா?
6) யாருடைய பைக் திருடப்பட்டது? இளைஞர்கள் தப்பிச்சென்ற திருட்டு பைக் தொடர்பாக எந்தக் காவல் நிலையத்திலாவது புகார் பதிவாகியுள்ளதா?
7) நேரடி வீடியோவில் காவலர்கள் சுடுவது தெரிகிறது. பதில் தாக்குதல் தொடர்பாக ஒலியோ காட்சியோ இல்லை. இதை என்கவுடண்டர் என எப்படி ஏற்பது?
8) அட்ரோலி காவல் நிலைய காவலர்கள் உண்மை அறியும் குழு மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவது ஏன்? காவல் நிலையம் முன் பஜ்ரங் தள் தொண்டர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? உபி காவல் துறை இந்திய அரசியல் சாசனத்திற்கு விசுவாசமாக உள்ளதா அல்லது வலதுசாரி இந்துதுவ அமைப்புக்கா?
காவல் துறை சொல்வதை மட்டும் வெளியிடாமல் இந்த வழக்கை ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொணறுமாறு மீடியாவை கேட்டுக்கொள்கிறோம். இந்த என்கவுண்டர் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். இறந்தவர்கள் திரும்பி வந்து தாங்கள் குற்றமற்ரவர்கள் என நிரூபிக்க முடியாது. தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு உபி காவல் துறைக்கும் யோகி அரசுக்கும் இருக்கிறது. நவுஷத், முஸ்டாகுவின் ஆகியோருக்காக நாங்கள் சட்டப்படி போராடுவோம்.