ரிலயன்ஸ் ஆர்-நேவலின் சிக்கலான பயணம்
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை நீண்ட காலமாகச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்குப் பயனுள்ள தீர்வு காண்பதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டதைத்தான் ‘பிராஜக்ட் 751’ திட்டத்தின் கதை காட்டுகிறது. முதலில் அரசுத் துறை நிறுவனங்களைக் கழற்றிவிட்டது, அப்புறம் ஆழமான கடன் பள்ளத்தில் விழுந்து கிடந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை அளிப்பதில் பிடிவாதமாக இருந்தது, பின்னர் ஒப்பந்தத்தை ஒரு அரசுத் துறை நிறுவனத்திடமே ஒப்படைத்தது. இந்தச் செயல்பாடுகளின் விளைவு என்னவென்றால் முக்கியமான, அவசரமான பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புக்கான ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டதுதான். இந்தச் சோதனையில், பெரிதாகப் பேசப்பட்ட போர்த்திறன் சார் கூட்டுக் கொள்கை தோல்வியடைந்தது.
ரஃபேல் ஒப்பந்த விவகாரம் வேறொரு கூர்மையான விசாணைக்கு உரியதாகிறது. இதில், பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனமும் இந்திய அரசும் ஏற்கெனவே பேசி முடித்த ஏற்பாட்டிற்கு ஏற்பக் கொள்முதல் கொள்கை மாற்றப்பட்டது. அரசுக்குச் சொந்தமான எச்ஏஎல் நிறுவனம் வாசலில் நிறுத்தப்பட்டது. தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கிற, வான்வெளித் தளவாடத் தயாரிப்புகளில் கொஞ்சம்ம் அனுபவமில்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாக முடிவெடுக்கப்பட்டது. இது எப்படி இந்தியாவின் பாதுகாப்புத் துறை தொழில் வளர்ச்சிக்கு உதவுமோ தெரியவில்லை.
அதிகார மட்டத்தில் நடந்த குழப்படிகள், அரசியல் மட்டத்திலான குற்றச்சாட்டுகள் எல்லாவற்றிற்கும் பிறகு மோடி அரசு, இதில் முன்பு நாடு எங்கே நின்றுகொண்டிருந்ததோ அதே இடத்திற்குத்தான் மறுபடியும் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இந்த அரசும் பொதுவாகப் போட்டித் திறன் இல்லாத அரசுத் துறை நிறுவனங்களைத்தான் பெரிதும் சார்ந்திருக்கிறது, தளவாட உற்பத்தியில் பெருமளவுக்குத் தனியார் நிறுவனங்களை இந்த அரசாலும் ஈர்க்க முடியவில்லை. தொழில்நுட்பத் தகுதி நிலை, வழக்கம்போல் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்வதற்கான நம்பகமான தொலைநோக்குத் திட்டம் எதுவும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
தளவாடத் தயாரிப்பும் தனியார் அவசரமும்
“பணம் பண்ணுகிற அவசரத்துடன்” இந்திய நிறுவனங்கள் பாதுகாப்புத் தளவாடத் துறைக்கு வருகின்றன என்று, குறிப்பாக விமானப் படைக்கான தயாரிப்புகளில் பல்லாண்டுகால அனுபவமுள்ள ஒருவர் என்னிடம் கூறினார். இதற்கான சான்றாக ரிலையன்ஸ் குரூப் நிறுவனத்தை அவர் சுட்டிக்காட்டினார். “பாதுகாப்புத் தளவாடம் போன்ற புதியதொரு களத்தில் வாய்ப்பைப் பெறுவது, அதில் தங்கள் தகுதியையும் திறனையும் வளர்த்துக்கொள்ளாமலே அதிபட்ச ஆதாயத்தை அடைய முயல்வது என்பதுதான் அவர்களது அணுகுமுறை…. அவர்களெல்லாம் வணிகக் கணக்குத் தணிக்கைகளில் வல்லுநர்கள். ஆகவேதான் அவர்கள் பணம் பண்ண முயல்கிறார்கள். சரக்குகளை வாங்கி விற்கிற வணிகத்துக்கு இது சரிப்படும். ஆனால் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு நீண்டகால இலக்குத் திட்டம் தேவை. அது இந்த ஆசாமிகளிடம் இல்லை என்பதுதான் பிரச்சினையே…” என்றார் அவர்.
தளவாடத் தயாரிப்பில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு காரணமாகிவிட முடியாதுதான். சிறிய நிறுவனங்களுக்கும் நடுத்தர நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுமானால், முன்னேறிய பாதுகாப்புத் தளவாட ஏற்பாடுகளை உருவாக்கும் திறன் இந்தியாவுக்கு உருவாகும். பிரச்சினை என்னவென்றால் இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதே இல்லை என்பதுதான் என்றார் இத்தகைய ஒரு நிறுவனத்தின் தலைவர். சிறப்புப் பாதுகாப்பு அமைப்புகளையும் துணைக் கருவிகளையும் தயாரிப்பதில் அனுபவமுள்ள நிறுவனம் அவருடையது. “அதிகார வலிமை இல்லாதவர்களுக்கு யாரும் எதுவும் தருவதில்லை,” என்றார் அவர்.
“பாதுகாப்புத் துறை தொழில்களுக்குப் பெரும் முதலீடுகள் செய்யப்படும், உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்றெல்லாம் பெரிதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனாலும் இன்று நான் எப்படித் தாக்குப்பிடித்து நிற்கிறேன் என்றால் ஏற்றுமதிகளால்தான்,” என்றார் அவர். “இந்திய அதிகாரிகளிடம் காரியம் ஆக வேண்டும் என்றால் பெரிய போராட்டமே நடத்தியாக வேண்டும். அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் – ஆம், எல்லா வகையிலும் கவனித்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகும் அவர்கள் பின்னாலேயே ஓட வேண்டும். ‘சார் சார் சார், முடிஞ்சுதா சார், கையெழுத்துப் போடுங்க சார்…’ இப்படி அதிகாரியிடம் கெஞ்சிக்கொண்டே இருக்க வேண்டும். அவரோ, ‘இல்லை, இப்ப எனக்கு மூட் இல்லை. கையெழுத்துப் போட மாட்டேன்,’ என்று சொல்லிவிடுவார். அது மட்டுமில்லை, உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கான விலைகளிலும் சேவைகளுக்கான கட்டணங்களிலும் மிகப் பெரிய தள்ளுபடி கொடுக்க வேண்டும். ஏன் தெரியுமா, அவையெல்லாம் இந்திய நிறுவனங்களாயிற்றே… ஒரு பெரிய அதிகாரி என்னிடம் ‘பாஸ், நீங்கள் அடைகிற ஆதாயத்தில் ஒரு பகுதி நாட்டுக்குப் போய்ச் சேருமென்று நீங்கள் காட்டத்தான் வேண்டும்,’ என்றே சொல்லியிருக்கிறார்,” என்றார் அந்த நிறுவனத் தலைவர்.
உள்நாட்டுத் தளவாட உற்பத்தி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிற மற்ற நாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். “அமெரிக்காவுக்குப் போய் அவர்களது பாதுகாப்புத் துறைக்கு உங்கள் தயாரிப்புகளில் எதையாவது விற்க முயன்று பாருங்கள். சாத்தியமே இல்லை. நீங்கள் அந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தால்தான் அது நடக்கும். இஸ்ரேலில் உள்நாட்டுத் தளவாட உற்பத்தியாளர்களின் பட்டியலே வைத்திருக்கிறார்கள். அங்கேயே கிடைக்கிற தளவாடங்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறார்கள். இந்திய அரசும், ‘இந்த பாகம் இந்தியாவிலேயே கிடைக்கிறது, வெளிநாட்டிலிருந்து வர வேண்டியதில்லை,’ என்று சொல்ல முடியும். ஒப்பந்தத்தில் அதையும் சேர்க்க வேண்டும்,” என்றார் அவர்.
சிறிய நிறுவனங்களையும் நடுத்தர நிறுவனங்களையும் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் தேவை என்பதை முதலில் குறிப்பிட்ட விமானப் படைத் தளவாட வல்லுநரும் ஒப்புக்கொண்டார். “ஏரோஸ்பேஸ் தொழில்களைப் பொறுத்தமட்டில் சிறு நிறுவனங்களும் நடுத்தர நிறுவனங்களும் மிக முக்கியமானவை. அந்த நிறுவனங்களை நீங்கள் மதிக்க வேண்டும், அவர்களோடு நல்ல தொழிலுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் உற்பத்தித் திறனைக் கட்டுகிறவர்கள் அவர்கள்தான்,” என்றார் அவர்.
இப்படிப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கக்கூடிய இன்ஜின்கள், ராடார்கள், ஆயுத அமைப்புகள், இதர சிறப்பு பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான சங்கிலித் தொடர் ஏற்பாட்டைச் செய்யாமல் எந்த நாடும் தனது சொந்த, முன்னேறிய, தளவாட உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது.
“அத்தகைய சங்கிலித் தொடர் ஏற்பாடு இல்லாத நிலையில், போர்த்திறன் சார் கூட்டாளிகள் என்ற கொள்கையே பயன்படாது. அது ஒரு முட்டாள்தனமான கொள்கை. போர்த்திறன் கூட்டாளியாக மாறுகிற தகுதி எந்தவொரு இந்திய நிறுவனத்திற்கும் கிடையாது… ஏரோஸ்பேஸ் தொழிலில் இந்த நிறுவனங்களுக்கு ஒரு அனுபவமும் இல்லை,” என்றும் அந்த வல்லுநர் குறிப்பிட்டார்.
இந்தக் களத்தில் ரிலயன்ஸ் நுழைந்தது எப்படி?
இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் எப்படி இந்தச் சிக்கலான தொழில் களத்தில் தன்னை மிக எளிதாகப் பொருத்திக்கொண்டது என்பது நீண்ட காலமாக அது அனுபவித்துவருகிற அரசியல் தொடர்பு பற்றிப் பேசுகிறது. “அனில் அம்பானி அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுவது உண்டு” என்று அவருடன் நெருக்கமாக பழகியவரான முன்னாள் அதிகாரி கூறினார். அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டங்களில் அடிக்கடி பிரதமர் மோடியின் பெயரை அனில் அம்பானி பயன்படுத்துவார். அதன் மூலம் பிரதமருடன் தனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்ற எண்ணத்தை எல்லோருக்கும் ஏற்படுத்த முயல்வார். அனில் அம்பானியைச் சுற்றியிருந்த அலுவலர்களுக்கு, எதையும் விலை கொடுத்து வாங்கலாம், எந்த அமைப்பையும் ஏற்படுத்தலாம், வர்த்தகத்தை நடத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனக் கூட்டுடன், 110 ஜெட் விமானங்களைத் தயாரிப்பதற்கான ஒரு போட்டியை அரசு அண்மையில் தொடங்கியது. போர்த்திறன் சார் கூப்பிட்டு கொள்கையில் இந்த ஜெட் ரகப் போர் விமானங்களும் வருகின்றன. ஆகவே இந்தியாவில் இத்திட்டத்தின் கூட்டாளியாகச் சேர்க்கக்கூடிய நிறுவனம் தனியார் துறையைச் சேர்ந்ததாகத்தான் இருக்கும் என்பது உறுதியாகிறது. இதில் ஸ்வீடன் நாட்டு ‘சாப்’ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்வதற்கான ஒப்பந்தத்தை மோடியின் நெடுங்கால கார்ப்பரேட் நண்பரான அதானி குழுமம் கண்டுபிடித்திருக்கிறது.
“பணபலம் இருக்கிறது என்பதற்காக நாளைக்கு அதானி குழுமத்தால் எந்த அனுபவப் பின்னணியும் இல்லாமல் இதில் ஈடுபட முடியும், போர் விமானத் தயாரிப்பாளராக மாற முடியும் என்றால் அது மடத்தனமானதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றார் அந்த முன்னாள் மூத்த அதிகாரி. “ஒரு வெளிநாட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபடுவது பொதுத் துறையான எச்ஏஎல் நிறுவனமாகத்தான் இருக்க வேண்டும். மற்ற தனியார் நிறுவனங்கள் அதனுடன் சேர்ந்துகொள்ளலாம். விமானத்தின் மையமான பாகங்களை இணைக்கிற வேலையும் முழுமையாக வேலை முடிந்த போர் விமானத்தைப் பறக்கவிட்டுச் சோதனை செய்கிற பொறுப்பும் எச்ஏஎல் நிறுவனத்திடம் இருக்க வேண்டும். இதர சிறிய நிறுவனங்களும் நடுத்தர நிறுவனங்களும் தேவையான பொருட்களை வழங்குவதில் உதவ முடியும்,” என்றார் அவர்.
“ஆனால் அரசு நிறுவனங்கள் சரியாகச் செல்ல பல விசயங்களைச் செய்தாக வேண்டும். காலமெல்லாம் அவர்கள் அரசாங்கத்தையே சார்ந்திருக்க முடியாது. தாங்கள் உற்பத்தி செய்யும் தளவாடங்களை விற்பனை செய்து கிடைக்கிற வருவாயிலிருந்து தங்களுக்கான ஊதியங்களை அவர்கள் பெற வேண்டுமே தவிர, அரசாங்கத்திடமிருந்து அல்ல,” என்றும் அவர் எச்சரித்தார்.
எச்ஏஎல்லின் எதிர்காலம்?
எச்ஏஎல் நிறுவனத்தின் எதிர்காலம் இப்போது நிச்சயமற்றதாகியுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்திலிருந்து கழற்றிவிடப்பட்ட அந்த நிறுவனம், புதிய 110 ஜெட் விமானங்களுக்கான போட்டியிலும் இறங்க முடியாமல் தடுக்கப்படலாம் என்ற நிலைமையில், அதற்குப் புதிய ஒப்பந்தங்களோ தொழில்நுட்பத் திறன்களோ வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. எச்ஏஎல் தயாரிக்க வேண்டிய தேஜாஸ் விமானத் திட்டம் இப்போது பகுதியளவிலான சேவை என்ற கட்டத்திற்கு வந்திருக்கிறது. உற்பத்திக்கு நிர்ணயிக்கப்படும் தேதிகளை எச்ஏஎல் தாண்டிக்கொண்டே இருக்கிறது. முழு உற்பத்தி இனிமேல்தான் தொடங்க வேண்டும். இப்படிப் பல பின்னடைவுகள் இருந்தபோதிலும், விமானப் படைக்கான தளவாடங்களைத் தயாரிப்பதில் அர்த்தமுள்ள அனுபவத்தைப் பெற்றிருக்கிற ஒரே இந்திய நிறுவனம் இதுதான். வேறு நம்பகமான மாற்று எதுவும் கண்ணுக்குப் புலப்படாத நிலையில், இந்த நிறுவனத்தையும் விட்டுவிடுவது தேச நலனுக்கு உகந்ததல்ல.
மாறாக, அதிக வணிக வாய்ப்புகள் கிடைக்கிற சூழல் வாய்த்திருப்பது ரிலையன்ஸ் குரூப் குழுமத்தின் விமானத் தளவாடத் தொழிலுக்குத்தான். இந்திய விமானப் படைக்குச் சண்டை விமானங்கள் மிகவும் தேவைப்படுகின்றன. அதன் தாக்குதல் விமானக் குழுக்களின் எண்ணிக்கை குறைவானதாகவே உள்ளது. தேஜாஸ் விமானங்கள் எப்போது தயாராகும் என்பதே தெரியவில்லை. பழைய தொழில்நுட்பங்களோடு இருக்கும் மிக்-21 விமானங்கள் நவீனத் தரநிலையிலிருந்து மட்டுமல்லாமேல் நிஜமாகவே வானத்திலிருந்தும் விழுந்துகொண்டிருக்கின்றன. தற்போது ஒப்பந்த ஆணை தரப்பட்டுள்ள 36 ரஃபேல் விமானங்கள் வந்து சேர்ந்தாலும், மொத்தம் 126 விமானங்கள் தேவை என்ற நிலையில் ஏற்படும் இடைவெளியை அதனால் ஈடுகட்ட முடியாது. தொடர்ந்து கூடுதல் ரஃபேல் விமானங்கள் விற்கப்படுமா என்பது குறித்து டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்தோ, வாங்கப்படுமா என்பது குறித்து இந்திய அரசிடமிருந்தோ எவ்விதக் குறிப்பும் வரவில்லை.
கடற்படைக்காக ரஃபேல் விமானங்கள் வாங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், அப்படி வாங்கப்படுவதானால் கடற்படையின் தேவைகளுக்கு ஏற்ப ரஃபேல் இருக்கிறதா என்பதற்கான களச் சோதனைகள் புதிதாக நடத்தப்பட்டாக வேண்டும். ஏற்கெனவே தேஜாஸ் விமானங்கள் கடற்படைக்கு ஒத்துவருமா என்ற சோதனைகள் நடத்தப்பட்டு, அதற்கான தகுதி இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஒருவேளை ரிலையன்ஸ் குரூப் தனது விமானப் படைத் தளவாடத் தயாரிப்புத் தொழிலைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுமானால், அதன் முன்னாள் மூத்த அதிகாரி என்னிடம் கூறியதுபோல, அதன் பின்னணியில் ஒருவர் மறைந்திருக்கக்கூடும் – அவர்தான் முகேஷ் அம்பானி.
வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் ரிலையன்ஸ் குரூப்பை மிகுந்த எச்சரிக்கையோடுதான் அணுகியிருக்கின்றன என்றார் அந்த முன்னாள் அதிகாரி. “வணிகத்தை வளர்த்துக்கொள்வதற்காகப் பல்வேறு நிறுவனங்களுடன் உடன்பாடு செய்துகொள்ளும் நோக்கத்துடன் ரிலையன்ஸ் குரூப் தனது பிரதிநிதிகளை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் அனுப்பியது. தரை மட்டத்தில் எதுவுமற்ற இந்தக் குழுமத்துடன் கூட்டுச் சேர்வது தங்களுடைய தொழிலுக்கு உதவுமா என்று அந்த நிறுவனங்கள் பரிசீலிக்கத்தான் செய்தன. பரிசீலனையின் முடிவில் அவற்றில் பல நிறுவனங்கள் இவர்களோடு சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. அப்படியானால், கடனில் மூழ்கியிருக்கிற, தொழிலில் எந்த முன்னனுபவமும் இல்லாத நிறுவனத்தைத் தனது கூட்டாளியாக பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் தேர்ந்தெடுத்தது எப்படி?
இக்கேள்விக்கு அவர் அளித்த பதில்: ”அதைத்தான் நாம் கண்டுபிடித்தாக வேண்டும்.”
சாகர்
நன்றி: கேரவான்
http://www.caravanmagazine.in/business/india-gambles-defence-interests-reliance-group
தமிழில்: அ.குமரேசன்