மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடக்கும் போர், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனம் ஆகியவற்றால் தூண்டப்படுவதாக அரசு உயரதிகாரி ஒருவர் தி வயர் இணைய இதழிடம் தெரிவித்தார்.
கடந்த 2 வாரங்களாக சிபிஐ இயக்குனர் அலோக் சர்மா மற்றும் இரண்டாம் நிலை அதிகாரியான ராகேஷ் அஸ்தனா இடையிலான மோதல் வெட்ட வெளிசமாகியிருக்கிறது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு (சிவிசி) எழுதப்பட்ட கடிதம் மீடியாவில் கசிய விடப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தலைவர் லாலு பிராசத்திற்கு எதிரான கிரிமினல் விசாரணையை மேற்கொள்ளத் தன்னை அனுமதிக்கவில்லை என அஸ்தனா, வர்மா மீது குற்றம்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் வர்மா, அஸ்தனாவின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார். அஸ்தனாவே ஆறு வழக்குகளின் விசாரணைப் பொருளாக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம், வர்மா இல்லாத நிலையில், அதிகாரிகளைச் சேர்த்துக்கொள்ள அஸ்தனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என சிவிசியிடம் சிபிஐ தெரிவித்தது.
ஆனால், இப்போது நாம் பார்ப்பது சிபிஐயில் ஏற்படும் அதிகார அல்லது ஆளுமை மோதல் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. அஸ்தனா மற்றும் வர்மா இடையிலான மோதலுக்கான வேர் இன்னும் ஆழமாகச் செல்கிறது.
வர்மாவுக்கு எப்போதுமே அஸ்தனாவுடன் மோதல் இருந்திருக்கிறது. அவர் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்படுவதை எதிர்த்திருக்கிறார் என்றாலும், சமீபத்திய மோதல் நிலக்கரி ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணையுடன் தொடர்பு கொண்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தக நிறுவனமான ராம்சரூப் லோ உத்யோக் நிறுவனத்திற்கு மொய்ரா- மதுஜோரி பகுதியில் நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்கியதில் மேற்கு வங்க அதிகாரியான பாஸ்கர் குல்பேயின் பங்கு குறித்து விசாரணை நடத்தும் கட்டத்தில் சிபிஐ இருக்கிறது. ஒதுக்கீடு நடந்த காலத்தில் குல்பே மேற்கு வங்க அரசுக்கான தொழில்துறை ஆலோசகராக இருந்தார்.
குல்பே ஒன்றும் சாதாரண அதிகாரி அல்ல. பிரதமர் அலுவலகச் செயலர் என்ற முறையில் அவர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலரான, பி.கே.மிஸ்ராவுடன் நெருக்கமாகச் செயல்படுபவர் மத்திய அதிகாரிகளின் நியமனம் மற்றும் மாற்றல்களை கவனிக்கிறார்.
ஜார்கண்ட் நிலக்கரி ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய நிலக்கரி செயலர் எச்.சி.குப்தா, குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால், குல்பேவையும் சேர்க்க வேண்டும் என சிபிஐ விசாரணைக் குழு தெரிவித்தது. 2017 டிசம்பரில் குப்தா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. “விசாரணை அதிகாரி முதல் மேலதிகாரிகள் வரை அனைவரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர். குல்பே குற்றவாளியாகச் சேர்க்கப்பட வேண்டும் எனக் கோப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது” என அதிகாரி ஒருவர் கூறினார்.
இருப்பினும், குல்பே குற்றவாளியாக அல்லாமல் சாட்சியாகச் சேர்க்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டை அஸ்தனா மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது. அபடிச் சேர்க்கப்படும் பட்சத்தில் அவர் வழக்கில் விசாரிக்கப்பட மாட்டார் என அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரதமர் அலுவலகத்தில் உள்ள மிஸ்ராவுக்கு நெருக்கமானவர் என்னும் நிலையில் அஸ்தனாவின் நிலைப்பாட்டில் வியப்பில்லை என சிபிஐயில் உள்ளவர்கள் கருதுகின்றனர்.
குஜராத்தைச் சேர்ந்த அதிகாரியான மிஸ்ரா மோடி அரசில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் சிபிஐ சிறப்பு இயக்குனராக அஸ்தனா நியமனம் தொடர்பாக சர்ச்சை வெடித்தபோது, அலோக் சர்மா எழுத்துபூர்வமாக இதற்கு மறுப்பு தெரிவிக்க இருப்பது தெளிவானது. இதையடுத்து, மிஸ்ரா, மத்திய விஜிலன்ஸ் கமிஷ்னர் கே.வி.சவுத்ரியை அழைத்து, அஸ்தனா நியமனத்தை உறுதி செய்யுமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது.
“மிஸ்ரா பல்வேறு விஷயங்களில் காபினெட் அமைச்சர்களுக்கும் உத்தரவிடுகிறார். அவர் சூப்பர் பிரதமர்போலச் செயல்படுகிறார். அவரது உத்தரவுகள் நிராகரிக்கப்படுவதில்லை” என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார். அஸ்தனா நியமன விவகாரத்தில் தலையீடு தொடர்பான தி வயர் கேள்விகளுக்கு மிஸ்ரா பதில் அளிக்கவில்லை.
எஃகு முதல் டெலிகாம் வரை பல துறைகளில் செயல்பட்டுவரும் வர்த்தக நிறுவனம் ஒன்றும் இதன் பின்னே உள்ளதாக சிபிஐயின் உள் வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன. “இந்த வர்த்தக நிறுவனம் பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவருக்கு நெருக்கமானது. சில பிரச்சினைகளில் அது சிபிஐ விசாரணைக்குட்பட்டு இருக்கிறது” என்றும் முன்னர் சிபிஐ அதிகாரி கூறினார்.
பிஎன்பி வங்கி மோசடியை விசாரிக்கும் சிபிஐ இணை இயக்குனர் ராஜீவ் சிங், விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது திடீரென்று மாற்றப்பட்டபோது, சிபிஐ விசாரணையில் வர்த்தக நிறுவனங்களின் தலையீடு வெளிச்சத்திற்கு வந்தது. அஸ்தனாவுக்கு ராஜீவ் சிங்குடன் நல்ல உறவு இல்லை என கூறப்படுகிறது.
வர்மாவுக்கு எதிரான அஸ்தனா புகாரை விசாரிக்கும் விஜிலன்ஸ் ஆணையரும் சர்ச்சைக்குரியவராக இருக்கிறார். முன்னாள் சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா டைரி ஊழலில் அவரது பெயர் அடிபட்டது. சவுத்ரி இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட பிறகு, பிரதமருடன் நெருக்கமான வர்த்தகரான நிகில் மர்சண்ட் அலுவலகத்தில் காணப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்கொன்று காமன் காஸ் எனும் என்ஜிஓவால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் வருமான வரித் துறையில் இருந்தபோது பிர்லா மற்றும் சகாரா குழும அதிகாரிகள் மீதான வருமான வரித் துறை புகார்களை விசாரிக்கத் தயங்கியதாகக் கூறப்படும் நிலையில் விஜிலன்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படிப் பொருந்தும் என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ரோகிணி சிங்
நன்றி; தி வயர்
https://thewire.in/government/behind-civil-war-in-cbi-concern-over-fate-of-top-pmo-official-linked-to-coal-probe