இந்த அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், இந்த அரசு செய்துள்ளவை மற்றும் தேசத்தின் மீது அவற்றின் தாக்கம் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன். அரசு மற்றும் அதன் பொருளாதாரக் கொள்கை மீது சந்தை அத்தனை நம்பிக்கையை வெளிப்படுத்தியராத ஒரு வார காலத்திற்குப் பின் இதை யோசிக்கிறோம். ரூபாய் அதன் வரலாற்றில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது, இன்னமும் பாதிப்புக்குள்ளாகிறது. பெட்ரோல் விலையும் உச்சத்தைத் தொட்டுள்ளது, மே மாதத்திற்குள் இன்னும் உயராது என்பதற்கு எந்த நிச்சயமும் இல்லை.
இந்த நாடு மற்றும் அதன் வளர்ச்சியில் கடந்த 20 ஆண்டுகளாக முதலீடு செய்துவரும் குஜராத்தி என்ற முறையில், பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சேதத்தை மற்ற முதலீட்டாளர்களைப் போலவே என்னால் பார்க்கவும் உணரவும் முடிகிறது.
இந்த அரசு பதிவியேற்பதற்கு முன், முந்தைய அரசின் கீழ் 10 ஆண்டுகளில் பொருளாதாரம் வளர்ந்ததைவிட இந்த 5 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துவிடவில்லை. வளர்ச்சி மெதுவாகியிருக்கிறது. நாம் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரம் எனச் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் நாம் மெதுவாகி இருப்பதைவிட சீனா மெதுவாக இருப்பதே இதற்குக் காரணம். நாம் மெதுவாகிவிட்டோம் என்பது மறுக்க முடியாதது.
சாதகமான அம்சம் என்று பார்த்தால், தனது ஆட்சிக் காலத்தில் பெரும்பாலான காலத்திற்குப் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருந்ததாக இந்த அரசு கூறிக்கொள்ளலாம். கறுப்புப் பணத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்ததாகவும் சொல்லிக்கொள்ளலாம். இந்தச் செயலால் பலன் விளைந்ததா என்பதை நாம் ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம்.
பொருளாதாரக் களத்தின் பின்னணி இது. மொத்தமாகப் பார்க்கும்போது, 2019 தேர்தல் பிரச்சாரத்திற்குத் தயாராகும் நிலையில் அரசு தனது பொருளாதாரச் சாதனைகளைச் சொல்லி மார்தட்டிக்கொள்ள முடியாது. வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தவரை இரு வேறு கருத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் இதற்கான சரியான தகவல் சேகரிப்பு இல்லை. இவற்றைச் சேகரிப்பதற்கான சுயேச்சையான வழிகளை பெற்றிருப்பவர்கள் வேலைவாய்ப்புச் சூழலும் உடலுழைப்பு நீங்கலான வேலைச் சந்தையில் நிரந்தர வேலையின் நிலையும் நன்றாக இல்லை என்கிறார்கள். முன்பை விட மேம்படவில்லை என்றும் சொல்கிறார்கள். அரசு பிரதமர் வாயிலாக இதற்கு மாறான கருத்தை முன்வைக்கிறது. ஆனால், பதிதார், ஜாட்கள், மராத்தியர்கள் ஆகிய விவசாயம் சார்ந்த சமூகத்தினர் நடத்தி வரும் இட ஒதுக்கீடு சார்ந்த போராட்டங்களைப் பார்த்தால், விவசாயத்திலிருந்து நவீனப் பொருளாதாரத்திற்கு மாறுவதற்கான போதிய வேலைவாய்ப்புகள் உருவாகிவிடவில்லை எனத் தெரியவரும்.
வெளிநாட்டுக் கொள்கையைப் பொருத்தவரை, நம்முடைய தாக்கம் நிலவும் பகுதியில் சீனா தலையிடுகிறது. நமக்கு முக்கியமான இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் பாகிஸ்தானில் சீனா தனது பொருளாதாரம் மற்றும் ராணுவ ஆற்றல் மூலம் ஊடுருவியிருக்கிறது. நம்முடைய அண்டை நாடுகளிடத்திலும், இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், தெற்காசியாவிலும் ஐந்து ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட நம்முடைய செல்வாக்கு குறைந்திருக்கிறது. துறை வல்லுனர்கள் யாரும் இதை மறுக்க மாட்டார்கள்.
அரசை விட மேம்பட்ட சக்திகளே இவை எல்லாவற்றுக்கும் காரணம் என நினைக்கிறேன். அரசால் சீனா தன் பலத்தைக் காட்டுவதைத் தடுத்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் சீனா இதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது. அது நம்மிடம் இல்லை.
அதேபோல, வேலைவாய்ப்புச் சூழல் அல்லது பெட்ரோல் விலை அல்லது ரூபாயின் மதிப்பு விஷயத்தில் அரசால் பெரிதாக எதுவும் செய்திருக்க முடியாது. ஒரு அரசால் செய்யக்கூடியவை மற்றும் செய்ய முடியாவதற்றுக்கு ஒரு வரம்பு இருக்கிறது.
ஆனால், என்னைப் பொறுத்தவரை வேறு எந்த அரசும் செய்யாத ஒன்றை இந்த அரசு செய்திருக்கிறது. அது நம்முடைய அரசியல் மற்றும் விவாதத்தில், ஒரே ஒரு சரியான பக்கம்தான் இருக்கிறது எனும் போக்கை நுழைத்திருப்பதுதான். ஒரே ஒரு பார்வைதான் தேசிய நலன் சார்ந்ததாக இருக்கிறது; அதற்கு எதிராக இருப்பவர்கள் துரோகிகள் அல்லது தேச நலனுக்கு எதிரானவர்கள் என்னும் கருத்து வலுப்பட்டுவருகிறது.
2014க்குப் பிறகு இந்தியா விவாதிக்கும் விதம் மாறுபட்டிருக்கிறது. கறுப்புப் பண விவகாரம், அகதிகள் பிரச்சினை அல்லது சிறுபான்மையினர் நலம் முதலான விவகாரங்களில் அரசு, தான் தேசிய நலனாக எதைப் பார்க்கிறதோ அந்த விதத்தில் இவற்றின் விவாத வெளியை வரையறுத்திருக்கிறது. இந்த வெளிக்குள் நீங்கள் வரவில்லை எனில் உங்கள் கருத்தை முன்வைப்பது இப்போது எளிதானது அல்ல.
ராணுவ ஆற்றலில் உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், ஒருபோதும் பயன்படுத்தப்படாத ராணுவத் தளவாடங்களில் அதிகப் பணம் போடுவதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில் (40 ஆண்டுகளுக்கு முன் நாம் கடைசியாக போர் விமானங்களை பயன்படுத்தினோம்) நீங்கள் உங்கள் நாட்டை வெறுக்கிறீர்கள் என்று பொருள். அண்டை நாடுகளுடன் நீங்கள் அமைதியை விரும்பினால் நீங்கள் ஒரு துரோகி.
இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதை நான் உணர்த்தவோ நிரூபிக்கவோ தேவையில்லை. நம் கண் முன் நிகழ்ந்துகொண்டிருப்பதைப் பார்ப்பவர்களுக்கு இது வெளிப்படையாகத் தெரிகிறது. நாம் நம்முடைய கிணற்றில் விஷம் கலந்துவிட்டு, நம்முடைய மக்களையே எதிரிகளாகப் பார்க்கிறோம். 2019க்குப் பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஒரு மாற்றம் நம்முடனேயே இருக்கப்போகிறது. நாம் நமக்குள் உறங்கிக்கொண்டிருந்த மோசமான தன்மையையும் துவேஷத்தையும் வெளியே கொண்டுவந்திருக்கிறோம். இந்த அரசு அதற்கான மூடியைத் திறக்க உதவியுள்ளது.
என்னைப் பொறுத்தவரை இந்த அரசின் பெரிய சாதனை இதுதான்.
ஆகார் பட்டேல்
நன்றி: நேஷனல் ஹெரால்ட்
https://www.nationalheraldindia.com/opinion/india-has-become-intolerant-to-the-voices-of-dissent-under-bjp-rule