நிகழ்கால பாசிஸத்தைப் புரிந்துகொள்ள அல்லது அங்கீகரிக்க இருக்கும் முக்கியத் தடை 1930களின் நினைவலைகளே. பாசிஸம் தற்போது இந்தியாவில் ஆட்சியில் இருப்பது சந்தேகமற்ற ஒரு உண்மை: ஆட்சியாளர்களை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸம் குறித்த தன் பாராட்டை ஒருபோதும் மறைத்ததில்லை. நாசிகள் ஆட்சியில் இருந்தபோது காணப்பட்ட நிலை போல தற்போது 100 சதவீதமான பாசிச அரசு அதிவேகத்தில் செயல்படவில்லை. இதனால் பாசிசத்தை ஏன் எதிர்க்க வேண்டுமெனப் பலர் கேட்கலாம். 1930களின் கண்ணாடி வழியே பார்த்தால், நாம் இதை எதிர்ப்பதுபோல் தெரியவில்லை.
தேசம் சார்ந்த நிதித் தலைநகரங்கள் பரஸ்பரம் தீவிரமான பகைமை கொண்டிர்ந்தபோது 1930களின் பாசிஸம் உருவானது; தற்போது உலகளாவிய / சர்வதேச நிதித் தலைநகரச் சூழலில் இத்தகைய எதிர்ப்புணர்வு இல்லை.
பாசிச அரசாகவே இருந்தாலும் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் குறைவாகவே இருக்கும். சுதந்திரமான எல்லை தாண்டிய நிதியோட்டம் இருக்கும் தற்போதைய காலகட்டத்தில் கடன் வாங்கி செலவழிக்கும் அரசின் செலவினம் பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்காமலே கூடப் போய்விடும். இதற்கு அமெரிக்கா மட்டும்தான் விதிவிலக்கு; ஏனெனில் உலகப் பணக்காரர்களால் இன்றுவரை அமெரிக்க டாலர் தங்கத்திற்கு நிகராகக் கருதப்படுகிறது.
இரண்டாவதாக, பாசிச உலகில் அதிகாரத்திற்காக நிகழும் உட்கட்சி சண்டையும் தற்போது நிகழவில்லை: உலகளாவிய நிதியமைப்பில் நாடுகள் பிளவுபடுவதை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
நிகழ்கால பாசிஸத்தின் நீடித்து நிலைக்கும் அபாயம்
எனவே, நிகழ்கால பாசிசமானது பாசிச அரசை நிலைநிறுத்தவும் முடியாமல் போரை எதிர்கொள்ளவும் முடியாத நிலையில் உள்ளது. ‘நிரந்தர பாசிச’ அரசாக இருந்துவிடுமோ என்ற அச்சமும் பலரிடம் தென்படுகிறது. மக்கள் பாசிச வலைக்குள் விழுந்துவிட, அதன் எதிரிகளோ கோழைத்தனமாக அதைக் காப்பியடிக்கும் (காங்கிரசின் ‘மென்மையான இந்துத்துவம்’ போல) நிலை உருவாகலாம்; எனவே, பாசிசத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு அதை எதிர்க்கும் பொருத்தமான வழிகளைக் கண்டறிந்தாக வேண்டும்.
1930களின் அடக்குமுறை மிகுந்த பாசிச அரசு போல இல்லாமல் இருந்தால் முதலில் சொன்னது நடக்கும் வாய்ப்பு அதிகம். இப்போது பாசிச அரசின் பல குணங்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. ‘நாட்டு நலனை’ மக்களின் நலனுக்கும் மேலானதாக முன்வைக்கும் கோஷம் (அனைவரும் கலந்துகொண்ட, யதேச்சாதிகாரத்துக்கு எதிரான, மக்கள் ஆதரித்த சுதந்திரப் போராட்டத்துக்கு இது முற்றிலும் எதிரானது), ‘தேசம்’ எது என வரையறுத்து, ‘தலைவர்’ யார் எனக் காட்டி, எதிர்ப்பவர்களை தேசத் துரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் காட்டும் போக்கும், எதிரிகளை அடித்து நொறுக்கும் போக்கும், சமூக வலைதளங்களில் கேலிசெய்யும் (ட்ரால்) போக்கும், மைனாரிட்டிகளை ‘உட்புற எதிரிகளாக’க் காட்டும் போக்கும் தற்போது அதிகம் காணப்படுகிறது. ‘அரசு அதிகாரமும் கார்பரேட் பலமும் சேர்ந்ததே பாசிஸம்’ என்று முசோலினி வரையறுத்ததை நாம் மறந்துவிட முடியாது.
பாசிசத்தால் ஜனநாயகமும் சுதந்திரமும் பாதிக்கப்படுவதுடன் இந்திய சாதிக் கட்டமைப்பிலும் மோசமான விளைவுகள் ஏற்படும். இதனால் நாம் முன்னேறாமல் சில நூற்றாண்டுகள் பின்னால் போகும் ஆபத்து நிச்சயம் உள்ளது.

பெனிட்டோ முஸ்ஸோலினியின் சிலை. பாசிசம் என்பது கார்ப்பரேட் மற்றும் அரசு இணைந்தது என்று முசோலினி கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாசிசம் தோன்றும் சூழல்கள்
வாக்குகள் சிதறுவதைத் தடுக்கும் எதிர்க்கட்சி ஒற்றுமை இதில் மிக முக்கியமான ஒன்றாகும். அத்தகையை ஒற்றுமையால் பாசிசத்தை அதிகாரத்திலிருந்து இறக்க முடியும் என்றாலும், பாசிசம் உருவாகும் சூழலை மாற்றுவது கடினம்.
கார்பரேட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் பாசிசவாதிகளின் ‘தேசம் முக்கியம்’ என்ற கோஷமும், மக்களிடம் ‘தியாகத்தை’க் கோரும் கோஷமும் வலுப்பெறுகின்றன. 19ஆவது நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இத்தகைய தேசியவாதம்தான் நகரரீதியான முதலாளித்துவத்தை வளர்த்துவிட்டது. உழைக்கும் மக்களின் பொருளாதார நிலை மோசமாகும் நிலையிலும் கார்ப்பரேட்டுகள் தமது வசதிக்காக இனம்சார்ந்த ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொண்டுவிடுகின்றனர்.
இந்நிலை மாறி 2019இல் இந்துத்துவ அரசைப் பதவியிறக்கம் செய்ய வேண்டுமானால், குறைந்தபட்சப் பொது செயல்திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் மட்டுமே அது முடியும். முஸ்லிம் இளைஞர்களைத் துன்புறுத்தும் UAPA சட்டத்தை நீக்குதல், கும்பல் வன்முறையைக் கட்டுப்படுத்துதல், ஊடகத்தினருக்கான குறைந்தபட்ச தார்மிக நெறிமுறைகளை உருவாக்குதல், அரசு தனக்கு எதிரானவர்களைப் பழிவாங்க சிபிஐ அமைப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிலையங்களில் இந்துத்துவ – பாசிசத் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.
பொதுக் குடியுரிமைக் கொள்கை
மேலும், உழைக்கும் மக்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்திப் பொதுக் குடியுரிமைக் கொள்கையை வலுவாக்க வேண்டும். அடிப்படை பொருளாதார உரிமைகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். உணவு, வேலைவாய்ப்பு, பொது நிதியுதவியுடன் நடத்தப்படும் தரமான சுகாதார நலம், கல்வி மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகை / ஊனமுற்றோர் நலன்கள் ஆகியவற்றுக்கான உரிமையில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது. இதற்கெல்லாம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%க்கு மேல் செலவு ஆகாது. சொத்து வரி முதலான வரிகளால் கிடைக்கும் வருமானத்தில் இதைச் செய்யலாம்.
உற்பத்திப் பொருட்களின் சந்தை விற்பனை, விவசாயிகளுக்கு லாபம் தருவது, குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்க உரிமைகளை வலுவாக ஆக்குவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். சாதி / மத / பாலின பேதமின்றி பொருளாதார உரிமைகள் மூலம் குடியுரிமையைப் பலமாக்கினால் அற்புதமான மாற்றம் உருவாகும். இதனால் தேசிய சுகாதாரச் சேவைகள் மேம்படுவதுடன் பெரிய அளவில் வேலைவாய்ப்பும் உண்டாகும்.
பாசிசத்தை முறியடிக்க எதிர்க்கட்சி ஒற்றுமை உண்டாக வேண்டுமென்பது தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை விடவும் மிகக் குழப்பமான ஒன்றாகும். இடதுசாரிகள் மனது வைத்தால்தான் இத்தகைய ஒற்றுமை உண்டாகும். அனைவரும் பாசிசத்தை எதிர்ப்பதும், பாசிசம் மூலம் அரசியல் பொருளாதாரம் பாதிக்கப் படுவதும், மக்களின் ஒற்றுமைக்காகவும் இடதுசாரிகள் இம்முயற்சியை முன்னெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
காலனியாதிக்க பாசிசம் ஒழிய கம்யூனிசம் காரணமாக இருந்தது. அதுபோல் கம்யூனிசம் மீண்டும் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முன்வந்து எதிர்க்கட்சி ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இது நடக்குமென நான் நிச்சயம் எதிர்பார்க்கிறேன். இதைச் செய்யத் தவறினால், இடதுசாரி இயக்கம் தன்னைத்தானே நொந்துகொள்ளும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
பிரபாத் பட்நாயக்
(பிரபாத் பட்நாயக் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்)
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/the-left-and-opposition-unity-how-fascism-can-be-defeated-in-2019
தமிழில்: சுப்ரபாலா