வெறுப்பு உமிழும் பேச்சைப் பற்றிய ஒரு அறிக்கையை 2017 மார்ச்சில் இந்திய சட்டக் கமிஷன் வெளியிட்டது. இத்தகைய பேச்சை வரையறுத்து கட்டுப்படுத்த இந்திய குற்றவியல் பிரிவில் போதுமான சட்டங்கள் இல்லாததால் இவ்வறிக்கை தேவைப்பட்டது. அறிக்கையில் இத்தகைய நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் நிருபர்களின் பொறுப்புகள் பற்றிய புகழ்பெற்ற ‘ஜெர்ஸில்ட் Vs டென்மார்க் (1994)’ வழக்கும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டென்மார்க் ரேடியோவுக்காக வேலை செய்த டென்மார்க் நிருபர் ஜென்ஸ் ஓலாஃப் ஜெர்ஸில்ட் 1985 ஜூலையில் ‘க்ரீன்ஜாக்கெட்ஸ்’ என்ற குழுவின் இளைஞர்களை நேர்காணல் செய்தார். ரேடியோவில் ஒளிபரப்பான அச்செய்தியில் சிறுபான்மையினர் மற்றும் அகதிகள் பற்றி அக்குழுவினர் தரக்குறைவாகத் திட்டியது இடம்பெற்றிருந்தது. ஜெர்ஸில்டும் செய்திப்பிரிவு தலைவர் லாஸி ஜென்செனும் இனரீதியான செய்தியைப் பரப்பியதாக தண்டனைக்கு உள்ளாகினர். செய்தியாளர்களின் பேச்சுரிமையை மீறியதாகக் கூறி இத்தீர்ப்பை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் (ECHR) நிராகரித்தது.
இதனடிப்படையில் இருக்கும் கேள்வி இதுதான்: வெறுப்பை உமிழும் தனிநபர் (அ) குழுவை ஒரு நிருபர் நேர்காணல் செய்யும்போது, இதை அவர் எடிட் செய்யலாமா / செய்யக் கூடாதா, இதற்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டுமா என்பதுதான். ECHRன் தீர்ப்பின் சாரம் இது:
“இனவெறி, சகிப்புத்தன்மையற்ற நிலை, கோபம் ஆகியவற்றின் மீது கவனத்தைக் கவரவே இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதே தவிர பிறரது உரிமைகளை அவமரியாதை செய்ய அல்ல. இச்சூழலில் பிறரது உரிமைகளை, சட்டபூர்வமானதாகவே இருந்தாலும், பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துவதால் அவ்வளவு உணர்வுபூர்வமாகக் கருதக்கூடாது.”
யூடியூப் செய்தி சேனலுக்குத் தடை
‘பல் பல் நியூஸ்’ என்ற பெயரில் ஒரு யூடியூப் செய்தி சேனலை நடத்திவரும் தில்லியைச் சார்ந்த தனிச்செய்தியாளர் குஷ்பூ அக்தருக்கு மேலே சொன்ன தீர்ப்பு முற்றிலும் பொருந்தும்.
சேனலில் ஒளிபரப்பான சில வீடியோக்கள் வெறுப்பு உமிழும் பேச்சு பற்றிய நெறிமுறைகளை மீறியதாகக் கூறி செப்டம்பர் 30 இரவு முதல் திடீரென இச்சேனலின் அக்கவுண்டை யூடியூப் ரத்துசெய்துவிட்டது. சேனலை 6.8 லட்சம் பேர் பார்த்து வந்ததாகவும் அதிலுள்ள 4500 வீடியோக்கள் இதுவரை 30 மில்லியன் தடவை பார்க்கப்பட்டுவிட்டதாகவும் அக்தர் கூறுகிறார்.
யூடியூபில் ‘பல் பல்’ வராததால், சர்ச்சைக்குரிய வீடியோவின் லிங்க்கை ஃபேஸ்புக் மூலம் ‘த வயர்’ இணைய இதழுக்கு அக்தர் அளித்தார். காவி உடை அணிந்த ஒருவர் வெறுப்புடன் “தொப்பி அணிந்தவர்களே, தாடி வைத்தவர்களே” என இஸ்லாமியர்களை விமர்சனம் செய்வது அதில் பதிவாகியிருந்தது. இத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் புகைப்படமும் வீடியோவில் தெரிய, அதில் வந்த செய்தியில் ‘வெறுப்பை அரசு எப்போது நிறுத்தும்?’ என்ற வார்த்தைகள் காட்டப்பட்டன. பின்வரும் வாசகங்களும்தான்:
“பிகார், தர்பங்காவில் எடுக்கப்பட்டது போல் வீடியோ தெரிகிறது. வெறுப்புமிழும் விமர்சனங்களை அரசு எப்போது முடிவுக்கு கொண்டுவரும்? தொப்பி, தாடி ஆகியவை இஸ்லாமியர்களை பயமுறுத்தும் முயற்சியே. இவர்களை காவல் துறை எப்போது கைது செய்யும்?”
வீடியோவை எடிட் செய்யாததால் யூடியூப் அக்கவுண்டை கேன்சல் செய்திருக்கலாம். ஆனால் மேற்சொன்ன தீர்ப்பின்படி, சேனலில் செய்தி வெளியிட்டது வெறுப்பின் தீவிரத்தைக் காட்டவே தவிர வெறுப்புணர்வைப் பரப்ப அல்லவே!
ECHR தீர்ப்பின்படி வெறுப்பு உமிழும் பேச்சை சேகரிக்கும் நிருபர்கள் விவரமான செய்தியை தரவேண்டிய அவசியமில்லை. ஜெர்ஸில்டும் குஷ்பூவும் ஒரேமாதிரியான நிலைப்பாடு எடுத்தவர்கள்தாம். தீர்ப்பில் கூறியபடி இத்தகைய நடவடிக்கைகள் நிகழாமல் தடுக்குமாறு அரசை செய்தி கேட்டுக்கொள்கிறது. அதனால் சேனல் வெறுப்பைப் பரப்புகிறது என்ற குற்றச்சாட்டுக்கு எவ்வித அடிப்படையுமில்லை.
த வயர் இதழிடம் பேசிய அக்தர் யூடியூபின் நடவடிக்கை தவறானது என்றும் தனிச்செய்தி நிருபர்களின் பலவீனத்தைக் காட்டுவதாகவும் கூறினார். “இதன் மூலம் என் பேச்சு சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது,” என்ற அக்தர், தான் ஒரு பத்திரிகையாளர் என்றும் தன் வேலை வெறுப்பைப் பரப்புவது அல்ல என்றும் யூடியூபுக்குப் பல மெயில்களில் விளக்கம் அளித்தார். தன்னுடைய பல்வேறு வீடியோக்களின் யூடியூப் இணைப்புகளையும் காட்டினார். தன்னை பத்திரிகையாளராக மட்டும் பார்த்து அதன் அடிப்படையில் வீடியோவை மதிப்பீடு செய்யும்படி அவர் கோரினார். மறுபரிசீலனை செய்த பின்னரும் வீடியோக்கள் நெறிமுறைகளை மீறியதாகவே இருப்பதாக யூட்யூப் பதிலளித்தது. அதன் பின் சேனலின் அக்கவுண்டை இதுவரை மீட்க முடியவில்லை.
யூடியூபின் பதில்
யூடியூப் அதிகாரிகளுடன் அக்டோபர் 4 அன்று ‘த வயர்’ தொடர்பு கொண்டது. பெயரை வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், மூன்று முறை வாய்ப்பு கொடுத்த பின்னரே சேனலின் அக்கவுண்டை நெறிமுறை மீறிய குற்றத்திற்காக கேன்சல் செய்ததாக கூறினார். காப்பிரைட் நெறிமுறைகளை மீறும் சேனல்களின் அக்கவுண்டும் கேன்சல் செய்யப்படுமாம். யூடியூபின் செயலை அவர் முழுமையாக ஆதரித்தார். பிற சேனல்கள் இதைவிட மோசமாகக் காட்டியும் தப்பித்துவிடுவதாக அக்தர் கூறியது பற்றிக் கேட்டபோது, யூடியூப் பாரபட்சமாக யாரையும் நடத்துவதிலை என்று அவர் தெரிவித்தார்.
சில மணிநேரங்களுக்குப் பின்னர் சேனலின் அக்கவுண்டுக்கு மீண்டும் உயிர் தரப்பட்டது. ‘பல் பல்’ சேனல் மீண்டும் யூடியூபில் வருகிறது. வீடியோ பற்றிய யூடியூபின் மதிப்பீடு மாறியதால் இப்படிச் செய்யப்பட்டதா அல்லது எதிர்மறை விளம்பரம் கிடைக்கக் கூடாது என்பதற்காகவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அக்தர் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்பதால், மேற்சொன்ன தீர்ப்பின் சட்டப் பகுதி இதற்கு பொருந்தாது. சில நாட்களுக்கே நீடித்தது என்றாலும், ‘பல் பல்’ சேனல் யூடியூபிடம் எதிர்கொண்ட ‘தண்டனை’ ஐரோப்பாவில் நடந்திருந்தால் மேற்சொன்ன தீர்ப்பிற்கு எதிரானதாகக் கருதப்பட்டிருக்கும்.
வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை என்பதால், யூடியூப் மூலம் வெறுப்பு உமிழும் பேச்சு வரலாமா என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை. யூடியூப் சாதாரண ஒரு இணையதளம் அல்ல; வீடியோ மார்க்கெட்டில் இதன் ஆதிக்கம் அலாதியானது. பத்திரிகையாளர்கள் வருவாய் ஈட்ட விரும்பினால், யூடியூப் மூலம் வீடியோக்களைப் பதிவேற்றம் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இதனால் யூடியூப் எதை அனுமதிக்கும் / அனுமதிக்காது என்பது பற்றி அரசும் நீதித்துறையும் வரையறுக்க வேண்டியது அவசியம். கம்பெனி என்ற முறையிலும் யூடியூபின் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள் நமது அரசியலமைப்புக்குட்பட்ட பேச்சு சுதந்திரத்தை மீறவே கூடாது.
கொடுமை என்னவென்றால், சில சமயம் அரசே யூடியூப் வீடியோக்கள் சிலவற்றைத் தனது அரசியல் / சுய லாபத்திற்காகக் கட்டுப்படுத்துகிறது.
2000ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, ‘இடையீட்டாளர்’ (intermediary) என்ற அந்தஸ்தில்தான் யூடியூப் வரும்.
“வேறொருவர் சார்பில் ஒரு பதிவைப் பெற்று, சேமித்து அல்லது ஒளிபரப்பி, அது தொடர்பான தகவல் தொடர்பு சேவையைத் தரும் தனிநபர், நெட்வொர்க் சேவை தருபவர்கள், இணையதளச் சேவை தருபவர்கள், சர்ச் எஞ்சின்கள், ஆல்லைன் பேமண்ட் இணையங்கள், ஆன்லைன் சந்தை, சைபர் கஃபேக்கள், ஆகியவை இடைத்தரகர் அல்லது இடையீட்டாளர் எனப்படுவர்.”
சட்டத்தின் பிரிவு 69A யூடியூப் பதிவுகளை அரசு கட்டுப்படுத்துவது எப்படி என்பதை விளக்குகிறது:
“மத்திய அரசோ அதன் அதிகாரிகளோ நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைக் காப்பாற்ற (அ) பிற நாடுகளுடனான நமது நட்புறவைக் காப்பாற்ற வேண்டுமென நினைத்தால், உபபிரிவு (2)-ல் சொல்லப்பட்டுள்ளதன்படி எந்த நிறுவனம் அல்லது தனிநபர்களும் இந்த வீடியோக்களை பார்க்காமல் தடுக்கும் உரிமையும், அது பகிர்வது, அனுப்பப்படுவது, தரப்படுவதைத் தடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.”
பல் பல் செய்தி சேனலைத் தடைசெய்ததற்கும் இந்திய அரசுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று அறிய எந்தத் தடயமும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருக்கும்.
வீடியோக்கள் விஷயத்தில் யூடியூபின் செயல்பாடுகள் மூடுமந்திரமாகவே உள்ளன என்பதும் கவலைக்குரியதுதான். மேலும், பாதிக்கப்பட்ட நபரோ சேனலோ நிறுவனமோ யூடியூப் ஊழியர்கள் அல்லது அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் வசதியும் இப்போது இல்லை; எல்லாத் தொடர்பும் மின்னஞ்சல் வழியாகத்தான்.
குறிப்பிட்ட ஒரு பதிவு தங்களது வழிகாட்டு நெறிமுறைகளை மீறுகிறது என்றி யூடியூப் குறிப்பிடும்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் உங்கள் உள்ளடக்கம் எங்கள் நெறிகளை மீறுகிறது என்று மட்டுமே சொல்கிறது. அது ஏன் என்று சொல்வதில்லை. உள்ளடக்கத்தை நீக்குதல், சேனலையே தடை செய்தல் ஆகியவற்றுக்கு எதிராக அப்பீல் செய்யும் உரிமை நிறுவனங்களுக்கு இருக்கிறது என்றாலும் அதை இணையத்தின் வழியாகவும் மின்னஞ்சலின் மூலமாகவும்தான் செய்ய முடியும். அத்தகைய ஆட்சேபம் தெரிவிக்கப்படும்போது யூடியூப் தன் முடிவை மறுபரிசீலனை செய்யும். அப்போதும் அந்த உள்ளடக்கம் தன் நெறிகளை மீறுவது என அது கருதினால் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அது பதிலளிக்காது. இதுதான் அக்தருக்கு நடந்தது.
யூடியூப் ஏன் தன் சேனலின் அக்கவுண்டை கேன்சல் செய்தது, ஏன் திரும்பவும் அதற்கு உயிர் கொடுத்தது என்பதெல்லாம் அக்தருக்கு எப்போதுமே தெரியவராது. அது மட்டுமல்ல. தனக்குத் தெரியவராத “அளவுகோல்க”ளின் அடிப்படையில் தான் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் முடக்கப்படுவோம் என்னும் அச்சத்திலேயே அவர் செயல்பட வேண்டியிருக்கும்.
கரன் திங்க்ரா
நன்றி: தி வயர்
https://thewire.in/rights/youtube-hate-speech-pal-pal-news
தமிழில்: சுப்ரபாலா