36 டசால்ட் ரபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் 8 பில்லியின்ன் யூரோ ஒப்பந்தம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நெருங்கிய நண்பரான தொழிலதிபர் அனில் அம்பானி மீதான ஊழல் புகார்களின் மையமாக மாறியிருக்கிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு, விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லாவிட்டாலும் கூட, விமானங்கள் பாகங்களை தயாரிப்பதற்கான உள்ளூர் பங்குதாரர் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் தடுமாறும் வர்த்தகத்தை காப்பாற்ற மோடியால் இந்தக் கூட்டு நிறுவனம் பரிசளிக்கப்படுவதாகக் கூறப்படுவது சிபிஐயிடம் அளிக்கப்பட்ட புகாரின் மையமாக அமைந்துள்ளது. இப்போது மீடியாபார்ட் வசம் கிடைத்துள்ள ஆவணத்தில், மூத்த அதிகாரி ஒருவர் போர் விமானங்கள் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான கட்டாய மற்றும் ஈடு செய்யும் விஷயமாக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் டசால்ட் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.
கால் லாஸ்கே மற்றும் அண்டன் ரவுகட்
அக்டோபர் 27, 2017 அன்று, இந்தியத் தொழிலதிபரான, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, நாக்பூர் நகரில், பிரான்சின் 36 ரபேல் போர் விமானங்கள் பாகங்களை தயாரிக்க உள்ள ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் பிளாரன்ஸ் பார்லியை இதமாகத் தழுவி வரவேற்றார். 2016இல் கையெழுத்தான 8 பில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தம் மூலம் பாரீஸ் இந்த விமானங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது.
பார்லியுடன், ரபேல் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் சி.இ.ஓ. எரிக் டிரேப்பியரும் உடன் இருந்தார்.
டசால்ட்டின் வர்த்தக விமானங்களையும் அசம்பிள் செய்ய இருந்த நாக்பூர் ஆலை, பிரான்ஸ் ஏரோஸ்பேஸ் குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இடையிலான கூட்டு முயற்சியாகும். உள்ளூர் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கான ஆப்செட் உற்பத்தி ஷரத்தின் கீழ், ரபேல் ஒப்பந்தத்தின் இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. விழாவுக்கு அடிக்கல் நாட்டிய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரு தரப்பிற்கும் பயன் அளிக்கும் தொழில்நுட்பக் கூட்டு என டசால்ட் – ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் கூட்டினைப் பாராட்டினார்.
ஆனால், மீடியாபார்டிற்கு கிடைத்துள்ள, டசால்ட்டின் உள்சுற்று ஆவணத்தின்படி, இந்த பிரான்ஸ் குழுமத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ரபேல் ஒப்பந்தத்திற்கான சமரசமாக இந்தக் கூட்டு நிறுவனம் அமைந்துள்ளதாகவும், ஒப்பந்தத்தைப் பெற டசால்ட் இதைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் கூறியதாகத் தெரிவிக்கிறது.
இதனிடையே நாக்பூர் அருகே அமைய இருந்த இந்த ஆலை கானல் நீராக ஆகிவிட்டது. ஏனெனில், இந்த ஆண்டு செயல்பாட்டைத் தொடங்கியிருக்க வேண்டிய இந்த ஆலை, இன்னமும் கட்டப்பாடாமலே இருக்கிறது. அங்கு வேர்ஹவுஸ் போன்ற ஒரு கட்டிடம் மற்றும் நிலப்பகுதி மட்டும்தான் இருக்கிறது (மீடியாபார்ட் அமர்த்திய பத்திரிகையாளர் அக்டோபர் 10இல் எடுத்த படத்தில் இதைக் காணலாம்). 2015 ஆகஸ்ட்டில், மகாராஷ்டிரா மாநிலத் துணை நிறுவனங்கள் உதவியுடன் ரிலையன்ஸ் நாக்பூர் மிஹான் விமானநிலையம் அருகே 119 ஹெக்டேர் நிலத்தை ரிலையன்ஸ் 7.5 மில்லியன் யூரோவுக்கு வாங்கியது.
இந்தக் கூட்டு நிறுவனத்தில் முறைகேடுகள் தொடர்பான விரிவான புகாரை சிபிஐயிடம் முன்னாள் அமைச்சரும், புகழ் பெற்ற் வழக்கறிஞருமான அருண் ஷோரி, வழக்கறிஞர் மற்றும் ஊழல் எதிர்ப்புச் செயற்பாட்டாளர் பிரஷாந்த் பூஷன், முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுடன் இணைந்து சமர்பித்தார். அக்டோபர் 4ஆம் தேதி அளிக்கப்பட்ட அந்தப் புகாரில், பிரதமர் நரேந்திரா மோடி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார், தனது கடமையை நேர்மையில்லாமல், தவறான வழியில் நிறைவேற்றியிருக்கிறார், என அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மோடியின் நீண்ட கால நண்பரும் நெருங்கிய சகாவுமான அனில் அம்பானி, தனது குழுமத்திற்குத் தவறான சாதகத்தைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன் அவரது குழுமம் திவாலாகும் நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் டசால்ட், அதன் சி.இ.ஓ. எரிக் டிரேப்பியர் ஆகியோர் இந்தப் புகாரில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகாரில் நாக்பூர் ஆலை பகுதியின் தோற்றத்தைக் குறிப்பிட்டு இந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “2018, செப்டம்பர் 29 அன்று எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில், 289 ஏக்கர் திருபாய் அம்பானி ஏரோஸ்பேஸ் பார்க்கில், டி.ஏ.ஆர்.எல் ஆலை வசதியை லென்ஸ் கொண்டு பார்க்க முடிகிறதா எனப் பாருங்கள்” என அவர்கள் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அக்டோபர் 4 புகார், இந்திய விமானப் படைக்குப் போர் விமானங்களை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட முயற்சியில், டசால்ட் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (எச்.ஏ.எல்) நிறுவனம் இடையே எட்டப்பட்ட பணிப் பகிர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய சதி செய்ததாகவும் மோடி மீது குற்றம்சாட்டியது. அப்போது, 2014இல் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுவதற்கு முன் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட, டசால்ட்டுடனான உத்தேச ஒப்பந்தம், இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள 126 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கானது. இதற்கு எச்.ஏ.எல் மற்றும் டசால்ட் 70 மற்றும் 30 சதவீத உற்பத்தி பங்கு கொண்டிருக்கும் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, முந்தைய ஒப்பந்தத்தைவிட இரு மடங்கு விலையில், 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மோடி செய்துகொள்கிறார். மோடி இறுதி செய்த ஒப்பந்தம், டசால்ட் நிறுவனத்துக்கும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பும் பின்பும் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை உருவாக்கிய ரிலையன்ஸ் குழுமத்திற்கு இடையே கூட்டுக்கு வழி செய்தது. இதில், விமானங்களுக்கான விலையான 8 பில்லியன் யூரோவில் 50 சதவீதத்தை உள்ளூர் தொழில் உற்பத்தியில் மறுமுதலீடு செய்வதாக டசால்ட் ஒப்புக்கொண்டது. இது ஆப்செட் ஒப்பந்தம் எனச் சொல்லப்படுகிறது, பாதுகாப்புத் துறையில் இது சகஜம். இதன் ஒரு பகுதியாக, 2017 அக்டோபரில் டசால்ட் தலைவர் எரிக் டிரேப்பியர் தனது நிறுவனம் நாக்பூர் ஆலையில் 100 மில்லியன் யூரோ முதலீடு செய்யும் என்றும் 2018இல் உற்பத்தி துவங்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், இந்திய எதிர்க்கட்சி எம்பிக்கள், இந்தியத் தணிக்கைத் துறை அதிகாரியிடம் (சிஏஜி) மோடி மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஹாலெண்டே இடையிலான 2016 ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை தேவை என மனு அளித்தனர். வேண்டியவர்களுக்குச் சலுகை, பொது நிதியில் முறைகேடு, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மற்றும் டசால்ட் ஏவியேஷன் சந்தை விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தனர்.
மீடியாபார்ட்டிடம் கிடைத்த, இங்கே விவரிக்கப்படும், டசால்ட் உள் ஆவணத்தின்படி, பிரெஞ்சு நிறுவனம் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் இடையிலான கூட்டு நிறுவனம், ரபேல் விமான விற்பனைக்கான சமரச ஈடாகும். இந்த ஆவணம், 2017, மே 11ஆம் தேதி, குழுமத்தின் இரண்டாவது செல்வாக்கு மிக்க அதிகாரியான, டசால்ட் ஏவியேஷனின் தலைமைச் செயல் அதிகாரி லீயிக் சேகாலான், நாக்பூரில் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் கூட்டு நிறுவனம் தொடர்பாக வழங்கிய காட்சி விளக்கத்தின் சுருக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தச் சுருக்கத்தின்படி, சேகலான், “ரபேல் இந்திய ஏற்றுமதி ஆர்டரை பெற இந்த சமரசத்திற்கு உடன்படுவது டசால்ட் ஏவியேஷனுக்குக் கட்டாயமானது” மற்றும் உடன்பட வேண்டியது எனக் கூறியுள்ளார்.
மீடியாபார்ட் தொடர்பு கொண்டபோது, இந்த விஷயம் குறித்துக் கருத்து தெரிவிக்க டசால்ட் ஏவியேஷன் மறுத்துவிட்டது.
கடந்த மாதம் வெளியான மீடியாபார்ட் நேர்காணலில், முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலெண்டே (இவர்தான் இந்தியாவுக்கான ரபேல் விமான விற்பனையை மேற்பார்வை பார்த்தவர்), ரிலையன்ஸ் குழுமம் உள்ளூர் பங்குதாரராக தேர்வு செய்யப்படுவது குறித்து, “இந்த விஷயத்தில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்ல. இந்தக் குழுமத்தைப் பரிந்துரை செய்தது இந்திய அரசு. டசால்ட் அம்பானியுடன் பேசியது. எங்களுக்கு எந்த தேர்வும் இல்லை. எங்களுக்கு அளிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டோம்” எனக் கூறியிருந்தார்.
‘எல்லோரையும் ஏமாற்ற மோடியும் அம்பானியும் இணைந்து செயல்பட்டனர்’
2015, ஏப்ரல் 10 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரிசில் ஹாலெண்டேவைச் சந்தித்த பிறகு, ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி இணையத் துவங்கினார். இந்தச் சந்திப்பில்தான் மோடி, டசால்ட்டுடனான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்தார்.
இந்த மாதம் சிபிஐயிடம் தாக்கம் செய்யப்பட்ட புகாரில், அருண் ஷோரி, பிரஷாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர், “பறக்கும் நிலையில் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்குவதற்காக, தனது பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தனது கடமையை நேரமையற்ற, தவறான வழியில் நிறைவேற்றி, தவறான சாதகத்தைத் திரு.மோடி பெற்றுக்கொண்டார். இந்தத் தவறான சாதகம், அவரது நெருங்கிய சகா மற்றும் நண்பர் அனில் அம்பானியால் பெற்றுக்கொள்ளப்பட்டது. அம்பானியை ஆப்செட் பங்குதாரராகத் தேர்வு செய்ய டசால்ட்டை மோடி நிர்பந்தித்தார். இதன் மூலம் அம்பானி, தவறான சாதகத்தைப் பெற்றுள்ளார், பெறுகிறார். அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பெறுவார். இந்தக் குற்றம் 2015 , ஏப்ரல் 10 அன்று நிகழ்ந்தாலும் அதோடு நிற்காமல் இது தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, 2016 ஜனவரியில் ஹாலெண்டே புதுதில்லிக்கு வருகை தந்தபோது, அப்போதைய பிரான்ஸ் அதிபரின் துணையான நடிகை ஜூலியா கேயெத் தயாரிக்கும் திரைப்படத்தைத் தனது குழுமம் இணைந்து தயாரிக்கும் என்னும் அறிக்கையை அனில் அம்பானி வெளியிட்டதை மீடியாபார்ட் கடந்த மாதம் செய்தியாக வெளியிட்டது. ஹாலெண்டே இந்தியத் தலைநகரில் வருகை தந்த அன்றைய தினமே, ஜனவரி 24ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. முதலில் 3 மில்லியன் யூரோவாக இருந்து பின்னர் 1.6 மில்லியன் யூரோவாகக் குறைக்கப்பட்ட, டு தி டாப் எனும் ஆங்கிலப் பெயர் கொண்ட இந்த படம் தொடர நிதி முக்கியமாக இருந்தது. எவரெஸ்ட் சிகரத்திலிருந்து கீழே இறங்கியபோது உயிரிழந்த பிரான்ஸ் பனிச்சறுக்கு வீரர் மார்கோ சிபிரிட் பற்றிய கதை இந்தப் படம்.
மீடியாபார்ட் கேள்வி எழுப்பியபோது, அம்பானி குழுமத்துடனான திரைப்பட ஒப்பந்தம் பற்றித் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், ரிலையன்ஸ் குழுமம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியதோடு, எனக்கு இந்தக் குழுமம் சலுகை காட்ட எந்தக் காரணமும் இல்லை. ஜூலி கேயெட் படத்துடன் எந்தத் தொடர்பும் இருப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என ஹாலெண்டே தெரிவித்தார்.

ஹாலெண்டே (இடது) அனில் அம்பானியுடன் 2017 ஜனவரியில் சந்திக்கும் ரிலையன்ஸ் மக்கள் தொடர்பு துறை புகைப்படம். ரிலையன்ஸ் குழுமம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என மீடியாபார்ட்டிடம் ஹாலெண்டே கூறினார்.
இந்தியாவுக்கான ரபேல் விமான விற்பனையில் ஹாலெண்டே முக்கியப் புள்ளியாகத் திகழ்ந்தார். 2015, ஏபரல் 10இல், பாரீசில் ஹாலெண்டேவைச் சந்தித்த பிறகு மோடி மொழிபெயர்ப்பாளர் மூலம் இந்தியில், “இந்தியாவுக்குப் பறக்கும் நிலையில் 36 ரபேல் விமானங்களை அளிக்க அதிபர் ஹாலெண்டேவைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்…. இது தொடர்பாக எங்கள் அதிகாரிகள் மேலும் பேச்சுவார்த்தை நடத்தி நிபந்தனைகளை வகுப்பார்கள்” எனக் கூறினார்.
ஷோரி, பூஷன், சின்ஹா ஆகியோர் சிபிஐயிடம் வழங்கிய புகாரில், பாரீசில் 2015 ஏப்ரலில் நடைபெற்ற விவாதம் குறித்துக் குறிப்பிடுகின்றனர்: “தன்னுடைய திட்டம் தொடர்பாக, இந்திய விமானப் படை, எச்.ஏ.எல்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்குக்கூட எதுவும் தெரியாமல் மோடி வைத்திருந்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்ஸில்கூட இல்லை. அப்போது இந்த ஒப்பந்தம் பற்றி அறியாத பாதுகாப்பு அமைச்சர் கோவாவில் மீன் கடையைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தார். இந்தச் சதி குறித்து அப்போது அறிந்திருந்த இருவர் மோடியும் அம்பானியும்தான்.”
பேச்சுவார்த்தைக்காக அம்பானி மோடியுடன் பாரீஸ் சென்றதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்: “குற்றம் நடந்த தினத்தின்று, இந்தச் சதியில் அங்கம் வகிக்கும் இருவரும் ஒரே இடத்தில் இருந்தனர். இந்தியாவின் பொது நலனைக் காப்பதைக் கடமையாகக் கொண்டவர்கள் அங்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தனர்”.
பாரீசில் ஏப்ரல் 10 சந்திப்பிற்கு முன், டசால்ட் ஏவியேஷன் சி.இ.ஓ. எரிக் டிரேப்பியர், 126 ரபேல் விமானங்கள்- முதலில் இந்திய அரசு வாங்க உத்தேசித்திருந்த எண்ணிக்கை, ஒப்பந்தம் தொடர்பாக எச்.ஏ.எல்.லுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். எனினும், 2015 ஜூனில், நிறுவனத்தின் புதிய வர்த்தக விமானம் தொடர்பான காட்சி விளக்கத்தின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், 36 ரபேல் விமானங்கள் எனக்கு ஏற்புடையதுதான்” என்றும், “எங்களுடைய உப ஒப்பந்தாரர்களைத் தேர்வு செய்வதில் நாங்கள் முன்னின்று செயல்படுவோம் என்றும் கூறினார். செயல்திறன் வாய்ந்தவர்களைத் தேர்வு செய்வோம்; அப்படி இல்லை எனில் அவர்களை மாற்றும் உரிமை இருக்கிறது. இது டெண்டரில் இல்லை” என்றும் கூறினார்.
செப்டம்பர் 21இல் டசால்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, ரிலையன்சுடனான ஆப்செட் ஒப்பந்தம் பாதுகாப்புக் கொள்முதல் செயல்முறை விதிமுறைகளின்படியானது. இந்தச் செயல்திட்டத்திற்குட்பட்டு, மேக் இன் இந்தியா கொள்கையின் கீழ் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது டசால்ட்டின் தேர்வு என்று, 2018 ஏப்ரல் 17இல் மிண்ட் இதழ் பேட்டியில் சி.இ.ஓ. எரிக் டிரேப்பியர் கூறியிருந்தார்.
முக்கிய விஷயம் என்னவெனில், பெரும் கடனில் உள்ள அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் பெரும்பாலும் தொலைத்தொடர்புத் துறையில் தொடர்புடையது. ஏரோநாட்டிக் மற்றும் பாதுகாப்பு துறையில் அறியப்படாதது. ரபேல் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு ஒரு மாதம் முன், அம்பானி குழுமம் இந்தியப் பாதுகாப்புத் துறை நிறுவனமான பிபாவாவ் டிபன்ஸ் அண்ட் இஞ்னியரிங் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியது. ரிலையன்ஸ் டிபென்ஸ் பிரிவு, 2015 ஏப்ரலில் மோடி பாரீஸ் செல்வதற்கு 12 நாட்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. அப்போதுதான் புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இந்த விஜயத்திற்கு 2 வாரங்கள் கழித்து, 2015, ஏப்ரல் 24இல் அம்பானி டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனப் பங்குதாரராக இருக்கப்போகும் ரிலையன்ஸ் ஏரோஸ்டக்ர்சர் லிட் நிறுவனத்தை அனில் அம்பானி நிறுவினார்.
“பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்து புதிய ஒப்பந்தத்தை டசால்ட்டிற்கு வழங்குவதை உறுதி செய்வதற்கு பதிலாக, ஆப்செட் மூலம் தவறான சாதகத்தை அளிக்குமாறு டசால்ட்டை மோடி நிர்பந்திதது தெள்ளத்தெளிவாகிறது” என ஷோரி, பூஷன், சின்ஹா ஆகியோர் குறிப்பிடுகின்றனர். “மோடி மற்றும் அனில் அம்பானி ஏற்கனவே திட்டமிட்ட முறையில் எல்லோருக்கும் எதுவும் தெரியாத வகையில் செயல்பட்டு, கடைசி நேரத்தில் மோடி தானே ஒப்பந்தத்தை மாற்றி, இதை ஒப்புக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால்… எனும் நிலையை, பிரான்ஸ் மற்றும் டசால்ட்டிற்கு ஏற்படுத்தினார்”.
36 விமாங்களை விற்பதற்கான அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் 2016 ஜனவரியில் ஹாலெண்டே மற்றும் மோடி இடையே கையெழுத்தானபோது, இந்த ஒப்பந்தத்தின் அனைத்து நிதி அம்சங்களும் தீர்மானிக்கப்படவில்லை. மேலும், ஒப்பந்ததின் 50 சதவீத மதிப்பை உள்ளூர் தொழில் கூட்டு மூலம் மறு முதலீடு செய்வது தொடர்பாக பாரீசில் தீர்மானிக்கப்பட்டது அந்த ஆண்டு செப்டம்பர் வரை நிகழவில்லை. அப்போதுதான், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ழான் ஒய்வஸ் லே டிரைன், தொழில்நுட்ப நிபந்தனைகள் தொடர்பாகக் கையெழுத்திட்டார்.
விற்பனை விலையில் பாதியை இந்தியாவில் மறு முதலீடு செய்வதை ஈடுகட்டுவதற்காகத்தான் டசால்ட் நிறுவனம் விமானங்களின் விலையை உயர்த்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. விமானம் ஒன்றுக்கான விலை, 118 மில்லியன் யூரோவிலிருந்து 188 மில்லியன் யூரோவாக அதிகரித்த்தாக ஷோரி, பூஷன், சின்ஹா ஆகியோர் கூறுகின்றனர்.
ரிலையன்சுடனான கூட்டு நிறுவனத்திற்குத் தீர்மானிக்கப்பட்டபோது, ரிலையன்ஸ் நிறுவனம் தனது புதிய தொழிலுக்கான அதிகாரபூர்வ உரிமத்தைக்கூடப் பெற்றிருக்கவில்லை. உரிமம் பெறப்பட்டபோது, அது ராணுவ ஹெலிகாப்டர்களைத் தயாரித்து, பழுது பார்ப்பதற்கானதாக இருந்தது என கூறும் ஷோரி, பூஷன், சின்ஹா, கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள டசால்ட் சிவிலியன் வர்த்தக விமானங்களை அசம்பிள் செய்வதை இது உள்ளடக்கியிருக்கவில்லை என்கின்றனர்.
அனில் அம்பானி, “எந்த விதமான பாதுகாப்புத் துறை பொருள் தயாரிப்பிலோ சேவையிலோ ஈடுபட்டிருக்கவில்லை. அவரிடம் இயந்திரங்கள் இல்லை. உற்பத்தி ஆலை இல்லை. ஆய்வுப் பிரிவு இல்லை. தொழில்நுட்ப ஆற்றல் இல்லை. பாதுகாப்புத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. மூலப் பொருட்களுக்கான வசதி இல்லை. இந்தக் கூட்டு நிறுவனங்களில் அவர் எந்த முதலீட்டையும் மேற்கொள்ளவில்லை. உதாரணமாக, ரிலைன்ஸ் ரபேல் டிபன்ஸ் சிஸ்டம்ஸ் லிட், இஸ்ரேலிய ரபேல் நிறுவனத்துடனான கூட்டாகும். இந்த நிறுவனத்தில் அனில் அம்பானியின் முதலீடு பூஜ்ஜியம். இந்தக் கூட்டு நிறுவனம் எதையும் தயாரிக்கவில்லை. இவை எல்லாம் டம்மி நிறுவனங்கள்” என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மீடியாபார்ட்டின் நேர்காணல் கோரிக்கைக்கு அனில் அம்பானி பதில் அளிக்கவில்லை..
கட்டுரை இணைப்பு : https://www.mediapart.fr/journal/international/101018/affaire-des-rafale-en-inde-un-nouveau-document-accable-dassault
மீடியாபார்ட் சுயேச்சையான பிரெஞ்சு புலனாய்வு மற்றும் கருத்து சார்ந்த இதழாகும். லே மாண்டே இதழின் முன்னாள் ஆசிரியர் எட்வி பிலினல் இதை 2008இல் நிறுவினார்.
Respected sir realy what happen between vairamuthu with cinmayee i belive BJP,RSS PLAYING BIG ROLE PLEASE GIVE SOME DETAILS
#PackupModi சீரியல் தொடர் மரண மாஸ் தலைவரே 👏👏