வியாழன் அன்று காலை, வருமான வரித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன், தொழிலதிபர் ராகவ் பாஹலின் தில்லி வீடு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுவிய குவிண்ட் இணைய செய்தி தளத்தின் நொய்டா அலுவலத்திலும் நுழைந்தனர். விரைவிலேயே பெங்களூருவில் உள்ள, ராவல் பாஹல் முதலீடு செய்த செய்தி தளமான தி நியூஸ் மினிட் அலுவலகத்திலும், அவர் நிறுவிய குவிண்டைப் என்னும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலும் அதிகாரிகள் நுழைந்தனர்.
அன்று வெகு நேரம் கழித்து, வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகளின் நடத்தை, குறிப்பாக அரசை விமர்சிக்கும் செய்தி தளத்தின் செய்தி அறைக்குள் நுழைந்தது பாஹல் மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, ஆம்னஸ்டி மற்றும் பத்திரிகையாளர் பாதுகாப்பிற்கான குழு ஆகிய அமைப்புகள் உறுப்புனர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியது.
“இன்று காலை நான் மும்பையில் இருந்த போது, ஒரு டஜன் வருமான வரித் துறை அதிகாரிகள் என வீடு மற்றும் தி குவிண்ட் அலுவலகத்தில் சர்வேக்காக வந்திருப்பதாகத் தெரிவிததனர்” என்று பாஹல் எடிட்டர்ஸ் கில்ட் அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். “நாங்கள் முறையாக வரி செலுத்தும் நிறுவனம். பொருத்தமான நிதி ஆவணங்கள் அனைத்தையும் அணுக வழி செய்வோம். இருப்பினும், எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி, திரு.யாதவ் என்பவரிடம் பேசி, தீவிர அல்லது முக்கிய இதழியல் தகவல்களைக் கொண்டிருக்கக்கூடிய, ஆவணம் அல்லது மெயிலைப் பார்க்க அல்லது அணுக வேண்டாம் என கூறினேன்”.
தில்லி, நொய்டா…
தி குவிண்டின் நொய்டா அலுவலகத்தில், 3 அல்லது 4 டொயோட்டோ காரில் ஒரு டஜன் அதிகாரிகள் (வருமான வரித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள்) காலை 8 மணி அளவில் வந்தனர், அவர்கள் சர்வே செய்யப்போவதாகத் தெரிவித்தனர் என்று சோதனை நடந்த இடத்தில் இருந்த, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார். கேள்வி கேட்ட ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, வருமான வரித் துறை சட்டம் 132ஆவது பிரிவின் கீழ் வாரண்ட் இருப்பதாகத் தெரிவித்தனர். விசாரிக்கப்படும் நபர்களின் அலுவலகத்தில் சோதனை நடத்தி, கணக்கு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்ய இந்தப் பிரிவு வழி செய்கிறது.
வருகை தந்தவுடன், அதிகாரிகள் ஆசிரியர் குழு ஊழியர்களிடம், நிறுவனத்தின் அளவு, அதன் செயல்பாடு, பணி நடக்கும் விதம், முதலீடு பற்றி ஏதேனும் தெரியுமா என்றெல்லாம் கேட்டனர். அந்த இடத்தில் இருந்த மனிதர், ஊழியர்களின் போன்களைக்கூட ஆய்வு செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும், ஆனால் அது முக்கியமா எனக் கேட்டபோது பின்வாங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். அதிகாரிகள் கணக்கு அதிகாரி வரும்வரை காத்திருந்து, கணக்குகளைச் சரி பார்ப்பதில் நேரத்தைச் செலவிட்டனர். ஆசிரியர் குழு தகவல் கொண்ட கம்ப்யூட்டர்கள் சிலவற்றையும் பார்த்தனர்.
அதிகாரிகள் சோதனைக்கான காரணத்தை மாற்றி மாற்றிக் கூறியதாக குவிண்ட் செய்தி வெளியிட்டது. முதலில் சர்வே செய்வதாகக் கூறிய அதிகாரிகள் அதன் பிறகு ஒரு தளத்தில் சர்வே இன்னொரு தளத்தில் சோதனை என கூறியுள்ளனர். சோதனை எனில் ஆவணங்களைப் பறிமுதல் செய்யலாம்.
இதனிடையே வருமான வரித் துறை அதிகார்கள் மற்றும் காவல் துறையினர், பாஹல் வீட்டிற்கு சென்றனர். அங்கு குவிண்டின் சிஇஓவும் பாஹலின் மனைவியுமான ரித்து கபூர் இருந்தார்.
பெங்களூரு
பெங்களூருவில், காலை 10 மணி அளவில், வருமான வரித் துறை அதிகாரிகள் 5 பேர், காவலர்கள் 3 பேர் கொண்ட குழுவினர் தி நியூஸ் மினிட் செய்தித் தளட்தின் அலுவலகத்திற்கு வந்தனர். குவிண்டின் தாய் நிறுவனமான குவினிடில்லியன் மீடியா இதில் பங்குகளைக் கொண்டுள்ளது. “குவிண்ட் அலுவலகத்தில் சர்வே நடப்பதாகவும், அந்நிறுவனம் எங்கள் அலுவலகத்தில் முதலீடு செய்துள்ளதால், எங்கள் கணக்குப் புத்தகங்கள் மற்றும் முதலீட்டைச் சரிபார்ப்பதாகத் தெரிவித்தனர்” என்கிறார் தி நியூஸ் மினிட் இணை நிறுவனரும் ஆசிரியருமான தான்யா ராஜேந்திரன்.
இணை நிறுவனர் விக்னேஷ் வெல்லோரிடம், வருமான வரித் துறைச் சட்டம் 133 (ஏ) பிரிவின் கூழ் ஒரு அறிவிப்பைக் காட்டியதாகவும் அவர் கூறுகிறார். குவிண்ட் சோதனை போல் அல்லாமல், இந்தப் பிரிவு, அதிகாரிகளுக்குக் குறைந்த அதிகாரத்தையே அளிக்கிறது. “எங்கள் இணையதளத்தின் காலைப் பதிப்பை வெளியிட வேண்டாம் என்றனர். ஆனால் காரணம் கேட்ட போது, செய்யலாம் என்றனர்” என்கிறார் தான்யா. இதழியல் பிரிவின் தொலைபேசிகள் அல்லது மெயில்களை எடுத்துச்செல்லவில்லை என்கிறார் அவர்.
‘மீடியாவுக்கு மிரட்டல்’
வருமான வரிச் சோதனையும் பாஹலின் கடிதமும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து எதிர்வினைகளை உண்டாக்கின. தி பிரிண்ட் நிறுவனர் மற்றும் எடிட்டர்ஸ் கில்ட் தலைவர் சேகர் குப்தா, இந்தச் சோதனை மிரட்டல்போலத் தோன்றுவதாகவும் அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார். மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், பாஹல் மற்றும் அவரது செய்தித் தளம் அரசை விமர்சிப்பதால்தான் இந்தச் சோதனை என்பதில் சந்தேகம் இல்லை என்றும், இது ஒரு அச்சுறுத்தலே என்றும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியும் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்தது. “அவர்கள் (பா.ஜ.க) சோதனை நடத்தி, தாக்குதல் நடத்தி, அடக்கப் பார்ப்பார்கள். அதுதான் அவர்கள் திட்டம். இந்த அரசு மீடியாவை அடக்கப் பார்க்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குவிண்டிடம் தெரிவித்தார்.
வியாழன் அன்று நண்பகல் அளவில் எடிட்டர்ஸ் கில்ட் ஒரு அறிக்கை வெளியிட்டது. “பொருத்தமான சட்டங்களின் கீழ் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அரசை விமர்சிப்பவர்களை மிரட்டும் நோக்கில செய்யப்படுகிறது எனத் தோன்றும் அளவுக்கு இதை பயன்படுத்தக்கூடாது”. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பிற்கான குழு, இந்தச் சோதனையை பத்திரிகைச் சுதந்திரம் மீதான தாக்குதல் என்று கூறியது. முக்கிய இதழியல் தகவல் கொண்ட போனில் இருந்து தகவல்களை நகலெடுக்க அதிகாரிகள் முயன்றதாகக் கூறப்படுவது குறித்தும் கவலை தெரிவித்தது.
‘வரி ஏய்ப்பு’
இதே நேரத்தில்தான், தன்னுடைய நிறுவனத்தின் பங்குகள் விற்பனயில் வரி ஏய்ப்பு செய்த புகார் தொடர்பாக பாஹல் உள்ளிட்ட நான்கு தொழிலதிபர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாக வருமான வரித் துறை அதிகார்கள் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
“இன்று வருமான வரித் துறை, ராகவ் பாஹல், கமல் லால்வானி, அனூப் ஜெயின் மற்றும் அபிமன்யூ சதுர்வேதி ஆகிய தொழிலதிபர்கள் அலுவலகங்களில் சோதனை நடத்தியதாக” வருமான வரித் துறை செய்தித் தொடர்பாளர் இந்துவிடம் தெரிவித்தார்.“பாஹலை பொருத்தவரை, குறிப்பிட்ட நிறுவன பங்குகளை விற்றதில் நீண்ட கால மூலதன ஆதாயம் தொடர்பாக ரூ. 100 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மற்றவர்கள் அதே நிறுவனப் பங்குகளில் பலன் பெற்றுள்ளனர். எனவே தான் நான்கு பேர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது” என்று அவர் கூறினார். அவர் எந்த நிறுவனத்தை சொல்கிறார் எனத் தெரியவில்லை.
அதிகாரிகள் தி நியூஸ் மினிட் அலுவகத்தில் இருந்து இரவும் 8.30க்கு வெளியேறினர். குவிண்டில் இரவு 10 மணிக்கு மேல் இருந்தனர்.
“ராகவ் பாஹல், ரித்து கபூர் மற்றும் குவிண்ட் சட்டப்படி வருமான வரித் துறை அதிகார்களுக்கு அளிக்க வேண்டிய தகவல்கள் விஷயத்தில் ஒத்துழைப்பு தருகின்றனர் ஆனால், பத்திரிகைச் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று சோதனை பற்றி குவிண்ட் இணையதளம் தெரிவித்தது. “சோதனை பற்றி அதிகார்கள் மாற்றி மாற்றித் தெரிவித்தது நம்பும்படி இல்லை மற்றும் எதிர்ப்பை நசுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது நடைபெறுகிறது என சந்தேகிக்க வைக்கிறது” என்றும் அது கூறுகிறது.
நன்றி: தி ஸ்க்ரால்
https://scroll.in/article/897932/income-tax-raids-on-raghav-bahl-quint-and-news-minute-raise-questions-of-media-intimidation