பெண்களுக்குத் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்துவதற்கு மிகுந்த துணிச்சல் தேவைப்படுகிறது என்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். “…அவர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்றால் அதற்குத் தைரியம் தேவை… வெளியே வரவும் பேசவும் தைரியம் பெற்றுள்ள அவர்களை, அதற்காகவே நான் ஆதரிக்கிறேன்…” என்றார் அவர்.
ஆனால், இவர் உட்பட மோடி அரசின் அமைச்சர்கள் யாரும் அரசாங்கத்தின் சார்பில் இவ்வாறு பேசியதாகத் தெரியவில்லை. மாறாக அரசாங்கத்தின் சார்பில் பேசுகிறவர் என்னவோ பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாதான். மௌன விரதம் இருக்கும் பிரதமரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவர்தான் வெளிப்படுத்துகிறார்.
மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஞாயிறு அன்றுதான் தில்லிக்குத் திரும்பி வந்தார். அவர் திரும்புவதற்கு முன்பே அமித் ஷா, வலைத் தளங்களில் செயல்படும் பெண்களும் சமூக ஊடகங்களில் எழுதும் பெண்களும் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றிய சந்தேகங்களை எழுப்பினார். “(அக்பர் மீதான) இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை நாங்கள் கண்டறிய வேண்டியுள்ளது. அந்தப் பதிவுகள் எவ்வளவு நம்பகமானவை என்பதையும், அவற்றைப் பதிவு செய்தவர்கள் எந்த அளவுக்கு நம்பகமானவர்கள் என்பதையும் நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. என் பெயரைப் பயன்படுத்திக்கூட நீங்கள் இப்படி ஏதாவது பதிவு போட முடியுமே,” என்றார் அவர்.
அமைச்சர் மேனகா காந்தி, “இந்தப் பதிவுகள் உண்மை என்றே நான் நினைக்கிறேன்,” என்று சொன்னார். அமித் ஷாவோ இந்தப் பதிவுகள் உண்மையானவையாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றார். “அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைப் பொறுத்தவரையில்… அரசாங்க அமைப்பு சரியாகச் செயல்படும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் மேனகா காந்தி. அரசாங்க அமைப்பு செயல்படத்தான் செய்தது – அக்பருக்கு ஆதரவாக!
அக்பரைத் தொடர்ந்து அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம், தொடர்ச்சியாகப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டவர் என்று குற்றம்சாட்டப்படுகிற, வலிமைமிக்க ஒருவருக்கு எதிராகப் பேச முன்வந்துள்ள பெண்களை மட்டுமல்ல, தனது அமைச்சர்களையும் எள்ளி நகையாடியிருக்கிறார் நரேந்திர மோடி. தன் மீது குற்றம் சாட்டியுள்ள பெண்களெல்லாம் பொய்யர்கள் என்று அக்பர் கூறுகிறார். அவருடன் ஒத்துப் போவதன் மூலம் நரேந்திர மோடி தனக்கும் பெண்கள் மீது, தனது அமைச்சர்கள் உட்பட, நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டியிருக்கிறார்.
இந்த அணுகுமுறை மூலம் நாட்டிற்கு நரேந்திர மோடி ஐயத்திற்கிடமின்றி விடுத்திருக்கிற செய்தி என்னவென்றால், பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் தாக்குவதும் பாஜக அரசுக்கு உகந்ததுதான் என்பதுதான். அப்படித் துன்புறுத்துவதும் தாக்குவதும் ஆணின் உரிமை, அது அந்த ஆண் மீது நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றச் செயலல்ல என்ற செய்தியையும் அவர் நாட்டுக்கு தெரிவித்திருக்கிறார். தானும் தனது அரசும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபருக்கு ஆதரவாகவும், அத்துமீறலுக்கு இலக்கான பெண்களுக்கு எதிராகவும் உறுதியாக நிற்பதைக் காட்டியிருக்கிறார்.
பாஜக ஆட்சியில் இந்தியா பெண்களுக்கான நாடாக இல்லை என்பதைக் காட்டியிருக்கிறார்.
அஞ்சலி மோடி
நன்றி: ஸ்க்ரால்.இன்
https://scroll.in/article/898286/by-allowing-akbar-to-stay-narendra-modi-indicates-that-india-under-bjp-is-no-country-for-women
தமிழில்: அ.குமரேசன்