‘வரி பயங்கரவாதம்’ – (Tax Terrorism) இது முன்பு காங்கிரஸ் கூட்டணி அரசை விமர்சிப்பதற்காக நரேந்திர மோடி, அருண் ஜேட்லி இருவரும் பயன்படுத்திய பதம். அந்தப் பயங்கரவாதம் இப்போது பாஜக அரசை விமர்சிக்கிறவர்கள் மீது ஏவப்படுகிறது என்று நம்புவதற்கான காரணங்கள் இருக்கின்றன.
அண்மையில் வருமான வரிச் சோதனைக்கு உள்ளான பத்திரிகையாளரும், பத்திரிகை ஆசிரியரும், பத்திரிகை நிறுவன உரிமையாளருமான ராகவ் பஹல் கொஞ்சம் ஆறுதல் அடைவதற்காக ஒரு நிகழ்வை நினைவுகூரலாம். பரபரப்பாகப் பேசப்பட்ட, அப்புறம் மறக்கப்பட்டுவிட்ட ஹசன் அலி கான் என்பவரது வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்ட கதைதான் அது. புனே நகரைச் சேர்ந்த அந்தத் தொழிலதிபரின் இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறை, அவர் வரி ஏய்ப்புச் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியது. அவர் மொத்தம் 34,000 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டும் என்றும் கூறியது. ஆனால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கில் தீர்ப்பளித்த நடுவர் மன்றம், அவர் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகை, அபராதத்துடன் சேர்த்து 3 கோடி ரூபாய்தான் என்று கூறியது!
ராகவ் பஹல் வீட்டிலும், அவரது ‘தி குயின்ட்’ என்ற வலைத்தளப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருக்கிற குயின்டிலியன் மீடியா லிமிட்டெட் நிறுவன அலுவலகத்திலும் சோதனைகள் நடத்திய வருமான வரித் துறையினர், அவர் அரசுக்குத் தர வேண்டிய வரித் தொகை என்று எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். சில ஆண்டுகள் கழிந்ததும் அந்தத் தொகை ஏற்கத்தக்க அளவுக்கு கீழே இறங்குவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
நீதிமன்றங்களிலும் வங்கிகளிலும் இதர பல அலுவலகங்களிலும் தாக்கல் செய்யப்படுகிற டிஜிட்டல் அச்சுப் படிவங்கள், ஆவணங்கள் காரணமாக வரி ஏய்ப்புகளைக் கண்டுபிடிப்பது இன்று இலகுவாகிக் கொண்டிருக்கிறது. செயல்திறன் மிக்க வரித்துறை ஏற்பாடுகள் உள்ள பெரும்பாலான நாடுகளில், நேரில் சென்று “சோதனை” நடத்துவது என்பது விதிவிலக்காகத்தான் நடக்கிறதேயன்றி, அதுவே ஒரு விதியாக நடப்பதில்லை. இப்படிப்பட்ட ஏய்ப்புகளைக் கண்டுபிடிக்கக்கூடிய சில வல்லுநர்கள் வரித் துறைகளில் இருந்தால் போதும்.
ஆனால், இந்தியாவில், ஏராளமான அதிகாரிகளின் படை காவல் துறையினரோடும் ஊடகக்காரர்களோடும் திடீர்ச் சோதனை நடத்தச் செல்கிறது. அதன் மூலம், சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறவரின் அண்டை வீட்டார்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட செய்தி கொண்டுசெல்லப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் ஊடகங்களில் கசியவிடப்படுகின்றன. நம்பகமற்ற, அனாமதேய வட்டாரத்தினரைப் பயன்படுத்தி மிகைப்படுத்தப்பட்ட, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத விவரங்கள் பரப்பப்படுகின்றன. ஆண்டுகள் கடக்கிறபோது அந்த விவரங்கள் மங்கிப்போய்விடும்.
இந்தியp பத்திரிகையாசிரியர்கள் அமைப்பு (எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா) நியாயமான கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசுக்கு இடைஞ்சலாக வந்துகொண்டிருக்கிற விவகாரங்களிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவும், விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்காகவுமே இந்தச் சோதனைகள் நடத்தப்படுகின்றன என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இந்த அமைப்பு கூறியிருக்கிறது. ராகவ் பஹல் அரசை வெளிப்படையாக விமர்சித்து வந்திருப்பவர். சொல்ல நினைத்த வார்த்தைகளை மென்று விழுங்காதவர். வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய ஒருவர், வரித் துறையினர் தன்னை வேட்டையாடக்கூடும் என்ற நியாயமான அச்சத்தில் இருக்கக்கூடிய ஒருவர் இப்படியெல்லாம் அரசை விமர்சிப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
வேடிக்கை என்னவென்றால், ‘வரி பயங்கரவாதம்’ என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியவர் நரேந்திர மோடிதான். 2014 ஜனவரியில், இந்திய வணிகம் மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) கூட்டத்தில் பேசிய அவர் இப்படிக் கூறினார். “நாட்டில் நிலவுகிற வரி பயங்கரவாதம் அபாயகரமானது. ஒவ்வொருவரும் திருடர்தான் என்ற நினைப்போடு யாரும் அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடியாது,” என்று அக்கூட்டத்தில் அறிவித்தார் மோடி. ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர் நாட்டின் பிரதமரானார்.
நிதியமைச்சராவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த அருண் ஜேட்லியும் இதே எண்ணத்தை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு நாட்டில் வரி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுவிட்டது என்று குற்றம் சாட்டினார் அவர். அவர்கள் பயன்படுத்திய இந்தப் பதம் இன்று வரையில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் ‘எக்கனாமிக் டைம்ஸ்’ பத்திரிகைக்குப் பேட்டியளித்த பொருளாதார வல்லுநர் டி. மோகன்தாஸ் பய் போன்ற, மோடி அரசின் வலுவான ஆதரவாளர்கள்கூட, பாஜக தலைமையிலான தேஜகூ ஆட்சியில் நாட்டில் ‘வரி பயங்கரவாதம்’ அதிகரித்துவிட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
பொருளாதார வல்லுநர்கள் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். மத்திய வருமான வரித் தீர்ப்பாயத்தில் 2014 மார்ச் மாத நிலவரப்படி நிலுவையில் இருந்த முறையீடுகள், வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.2.87 லட்சம் கோடி. 2018 மார்ச் மாதம் இந்தத் தொகை 6.11 லட்சம் கோடியாக எகிறிவிட்டது. நிறைவேற்ற முடியாத வசூல் இலக்குகளை அரசு நிர்ணயித்ததுதான் வழக்குகள் குவிந்ததற்குக் காரணம் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். கைது, வலுக்கட்டாய வசூல் போன்ற கெடுபிடி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பதால், வருமான வரித்துறையினர் எப்படியாவது வசூல் அளவுகளை அதிகரிக்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கெடுபிடிகளின் இன்னொரு வடிவம் அப்பட்டமாக வெளியே தெரிகிறது. ‘ரெய்டு’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் ‘ஆய்வுகள்’, ‘தேடல்கள்’ போன்ற நடவடிக்கைகள் பெருமளவுக்கு அரசியல் எதிரிகள் மீதும், ஒப்பீட்டளவில் சிறிய ஊடக நிறுவனங்கள் மீதும்தான் எடுக்கப்படுகின்றன. வரியைப் பொறுத்தவரையில் மிகப் பல மடங்கு தொகைகளை ஏய்க்கக்கூடிய நிலையில் இருக்கிற ‘குரோனி கேப்பிட்டலிஸ்ட்டுகள்’ (கூட்டுக் களவாணி முதலாளிகள்) மீது கை வைக்கப்படுவதில்லை என்று நன்றாகப் புலப்படுகிறது. மாறாக, சிறு தொழில் நிறுவனங்களும், சிறு வணிகக் குழுமங்களும்தான் வருமான வரித்துறையின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளுக்கு இலக்காகின்றன.
இன்னொரு விஷயம் – ஊடகத் துறை இன்று ஊழிப் பெருவெள்ளம் போன்ற மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. மிகப் பெரிய நிதியாதாரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் வருவாய் மிக மந்தமாகவே இருக்கிறது. இணைய வழி செயல்படும் டிஜிட்டல் ஊடகங்களைப் பொறுத்தவரையில், வாசகர்களைக் கட்டணம் செலுத்திப் படிக்கவைப்பதற்கும், தொழில் நிறுவனங்கள் தாராளமாக விளம்பரம் கொடுக்க வைப்பதற்கும் ஏற்றதொரு செயலூக்கமுள்ள வழிமுறையை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, ராகவ் பஹலின் டிஜிட்டல் ஊடக நிறுவனம் மிகப் பெரிய அளவில் வருமானம் ஈட்டிக்கொண்டிருப்பதாக அனுமானிப்பது மிகையான கற்பனைதான்.
ஒருவர் வரி ஏய்ப்புச் செய்கிறார் என்று வருமான வரித் துறைக்கு எப்படித் தெரிய வருகிறது? அவரது பணப் பரிமாற்றங்கள் மூலமாகத்தான் என்பது வெளிப்படை. அவர் ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பணம் சம்பாதிக்கிறார், அதற்கான வரியையும் செலுத்துகிறார், ஆனால் அதிலிருந்து அதிகமாகச் செலவழிக்கிறார், அதிகமாக முதலீடு செய்கிறார் என்றால், அவர் தனது வரிப் பொறுப்பிலிருந்து நழுவிவிட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. வங்கிப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பதற்கான எல்லா வசதிகளும் வருமான வரித் துறைக்கு இருக்கின்றன. பணம் எடுக்கப்படுவது, அது பயன்படுத்தப்படுவது, முதலீடு செய்யப்படுவது என எல்லாத் தகவல்களையும் இத்துறையால் பெற முடியும்.
துறைக்குத் தெரிவிக்கப்படாத தொகை சம்பந்தப்பட்டவரிடம் ரொக்கமாக இருக்கிறது என்று தெரியவந்தாலன்றி, ‘ஆய்வுகள்’ நடத்தவோ, ‘தேடல்கள்’ மேற்கொள்ளவோ வேண்டிய தேவையே இல்லை. வரி செலுத்துகிறவர் தனது வரவு செலவு கணக்குகளுக்கும், இதர விவரங்களுக்குமான பதிவேடுகளையும், வங்கி அறிக்கைகளையும் நேரில் வந்து தாக்கல் செய்யுமாறு சாதாரணமான முறையில் ஒரு அழைப்பாணை அனுப்பினாலே போதும்.
ஆனால், இந்த அரசுக்கு வேறு நோக்கங்கள் இருப்பதுதான் அப்பட்டமாகத் தெரிகிறதே!
உத்தம் சென்குப்தா
நன்றி: நேஷனல் ஹெரால்ட்
https://www.nationalheraldindia.com/media/is-raghav-bahl-paying-the-price-for-criticising-the-modi-government
தமிழில்: அ. குமரேசன்
நேஷனல் ஹெரால்ட்லருந்து காப்பி பண்ணும் போதே உன்னோட அருமை தெரிகிறது மோடியே மீண்டும் வருவார் , மோடியை ஆதரிப்போம்