ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக நடைபெற்றுவந்த பழைய பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு, 36 போர் விமானங்களை வாங்குவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு ஏற்படுத்தியிருக்கிற சர்ச்சைகள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிடாது என்று தோன்றுகிறது.
இது தொடர்பான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டுக் குழு நடத்தும் விசாரணை ஆதாரங்களை வெளிக் கொண்டுவரும் என்றும் அது நம்புகிறது.
தெளிவில்லாத, முரண்பாடான அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் அளவுக்கு அதிகமான எச்சரிக்கையோடு நாங்கள் செயல்பட்டிருக்கிறோம் என்று அரசாங்கம் காட்டிக்கொள்கிறது. ஆனால், அதன் அறிவிப்புகள் எல்லாமே மேலும் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்புவதாகவே இருக்கின்றன.
இந்த விவகாரத்தில் ஏற்பட்டிருக்கிற பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்றால் மூன்று கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.
ராணுவ விமானங்களை உற்பத்தி செய்கிற, பிரான்ஸ் நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் என்ற கம்பெனியோடு 126 விமானங்களை வாங்குவதற்காக இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தது. இதை ரத்து செய்துவிட்டு, 36 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்குமான ஒப்பந்தத்தின் மூலமாக வாங்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த ஏப்ரலில் பிரான்ஸ் நாட்டுக்கு அதிகாரபூர்வமான பயணத்தை மேற்கண்டபோது, அங்கே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கான அடிப்படை என்ன என்பது முதலாவது கேள்வி.
இந்திய விமானப் படையின் பழசாகிப்போன விமானங்களின் ஒரு பகுதியை மாற்றியமைப்பதற்காக 126 புதிய விமானங்களை வாங்குகிற நடைமுறைகள் 2000ஆம் ஆண்டில் தொடங்கின. நீண்ட கலந்துரையாடல்கள், விவாதங்கள்,பேச்சுவார்த்தைகள் நடந்தன. அவற்றின் அடிப்படையில் விமானங்களில் எப்படிப்பட்ட தொழில்நுட்பத் தேவைகள் இருக்க வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டது. அவற்றின் அடிப்படையில் தகவல் கோரிக்கை வெளியிடப்பட்டது.
உலகளாவிய வணிக ஒப்பந்தம் ஒன்றும் 2007இல் வெளியிடப்பட்டது. தேவையான 126 விமானங்களில் 18ஐ மட்டும் உடனே பறக்கிற நிலையில் வழங்கவேண்டும். மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் நிர்வகிப்படுகிற இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் 108 விமானங்களுக்கான உதிரி பாகங்களை வழங்க வேண்டும். படிப்படியாக உள்நாட்டு பாகங்களை அதிகரிக்கும் வகையில் உதிரிபாகங்களை இணைத்து இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இந்த விமானங்களை உருவாக்கி முடிக்கும் என்பதுதான் முன்பிருந்த நிலை.
ஆறு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் வந்தன. நான்கு ஆண்டுகளாக நிறுவனங்கள் பற்றிய தொழில்நுட்ப ஆய்வுகள் நடந்தன. இறுதியான பட்டியலில் ஈரோபைட்டர் டைபூன் மற்றும் ரஃபேல் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மிஞ்சி நின்றன. 2011இல் நிதி தொடர்பான ஆய்வுகளும் அவற்றுக்கான ஒப்பந்தப் புள்ளிகளும் வந்தன. முடிவில் ரஃபேல் விமானங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றைத் தயாரிக்கும் நிறுவனமான டஸ்ஸால்ட் நிறுவனத்தோடு 2012இல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன.
அதிகாரபூர்வமாக இந்திய விமானப் படையில் அனுமதிக்கப்பட்டுள்ள படைப் பிரிவுகளின் எண்ணிக்கை 42. அது 32 என்ற மட்டத்துக்குக் கீழிறங்கி பலம் குறைந்தது. அப்போதைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி முடிவு எடுக்காமல் இருந்தார். அதனால் நடைமுறைகள் நீண்டுகொண்டேயிருந்தன.
பேச்சுவார்த்தைகள் மோடி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டன. மோடியின் பிரான்ஸ் நாட்டுப் பயணத்தையொட்டிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றன என்பதை தெரியப்படுத்தின.
எந்த விளக்கமும் அளிக்காமல் புதிரான முறையில் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன. மோடி அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர் மனோகர் பரிக்கர். ‘இந்த முடிவு பற்றி எதுவும் தெரியாது’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
2015 மத்தியில் மோடியின் பிரான்ஸ் பயணம் நடந்தது, 126 போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக ரத்து செய்தது, பாதுகாப்புச் சாதனங்கள் வாங்கும் கவுன்சிலிலும் பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கமிட்டியிலும்தான் 36 போர் விமானங்களை வாங்குவது என்ற முடிவு இறுதிப்படுத்தப்பட்டது ஆகிய நிகழ்வுகள் பிரதமரின் பாரீஸ் அறிவிப்பு பற்றிய ஊகங்களைக் கிளப்புகின்றன.
இந்த விவகாரத்தில் ‘முடிவெடுத்த நடைமுறைகள்’ பற்றிய விவரங்களை இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான நீதிமன்றஅமர்வு கடந்த வாரத்தில் கோரியிருக்கிறது. அடுத்த விசாரணைக்கான தேதியான அக்டோபர் 31க்குள் ஒப்படைக்குமாறு கோரியிருக்கிறது.
ஒப்பந்தத்தில் ஏற்பட்ட மாற்றம்
போர் விமானங்கள் 2019க்கும் 2022க்கும் இடையில் ஒப்படைக்கப்படும். இதற்கிடையில் 110 போர் விமானங்களை சப்ளை செய்வதில் ஆர்வமுள்ளவர்களுக்கான அழைப்பை ஏப்ரல் 2018இல் அரசாங்கம் வெளியிட்டது. அவற்றில் 17 விமானங்களை உடனே பறக்கிற நிலையிலும் மற்றவை இந்தியாவில் உதிரிபாகங்களை இணைத்துத் தயாரிக்கிற நிலையிலும் தர வேண்டும் என்றது. அதில் ஒரு மாற்றம் இருந்தது. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மட்டும்தான் உதிரிபாகங்களை இணைத்துத் தயாரிக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. யார் வேண்டுமானாலும் அதைச் செய்யலாம் என்பதே மாற்றம்.
அதே ஆறு நிறுவனங்களிடமிருந்து அரசாங்கத்தின் அழைப்புக்கு பதில்கள் வந்திருக்கின்றன. இது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட்டது. விமானப் படையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்குத் தேவையான விமானங்கள் இந்தியாவின் சொந்த நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் விமானங்கள் மூலம் நிரப்பப்படாது என்பதுதான் அது. கால தாமதங்களாலும் உற்பத்திச் செலவு அதிகரிப்பாலும் தேஜாஸ் உள் நாட்டு விமானங்களின் தயாரிப்பு தள்ளாடிவருகிறது. தேஜாஸ் மார்க் 1 எனும் வகை விமானத்துக்கு 2006இல் 135 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதுவே 268 கோடியாக உயர்ந்துவிட்டது. தேஜாஸ் மார்க் 1 A எனும் வகைக்கு அதை வடிவமைக்கும் நிலையிலேயே 463 கோடிகள் விலையை நிர்ணயித்திருக்கிறது இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்.
இரண்டாவது கேள்வி விலைகள் தொடர்பானதாது. 126 போர் விமானங்களை வாங்குவதற்கான முந்தைய பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறவில்லை என்பதால் அவற்றுடனான நேரடியான ஒப்பீடு சரியானதல்ல. முந்தைய பேச்சுவார்த்தைகளில் ஆயுதங்களுக்கான கட்டமைப்புகளோ அல்லது செயல்திறன் உத்தரவாதங்களோ அல்லது மாற்று உதிரிபாகங்களோ இடம்பெறவில்லை.
இருந்தாலும், மோடி அரசாங்கம் சுயதிருப்தியோடு இருக்கிறது. போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடைபெற்றிருப்பதாக அது சாதித்த மனநிலையில் பேசுகிறது. அவை பற்றிய விவரங்களை அளிப்பதாகவும் அது உறுதியளித்தது. அதுவே அரசாங்கத்துக்குத் தீமையைக் கொண்டுவந்திருக்கிறது.
பாதுகாப்புத் துறையில் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தை அமலாக்குவதன் மூலம் கிடைக்கிற பணிகள் மூலம் ஏறத்தாழ 30,000 கோடி ரூபாய்களுக்கு வளர்ச்சி ஏற்படும் என்று அரசாங்கம் பெருமிதத்துடன் அறிவித்திருந்தது.
விலை விவகாரங்கள்
மேலோட்டமான விவரங்கள் கிடைப்பதை வைத்து பார்க்கும்போது ஒட்டுமொத்த ஒதுக்கீடு என்பது ஐரோப்பியக் கண்டத்தின் பெரும்பாலான நாடுகள் பயன்படுத்துகிற யூரோ எனும் பண மதிப்பில் 7.87 பில்லியன். (இந்திய மதிப்பில் நூறு கோடிகள்.) ஒரு யூரோ இந்திய ரூபாய் மதிப்பில் 73.88 ரூபாய். அதாவது இந்திய மதிப்பீட்டில் 59 ஆயிரம் கோடி ரூபாய்.
இந்தத் தொகையில் ராணுவ ஆயுதங்களுக்கான 710 மில்லியன் யூரோக்களும் இருக்கின்றன. இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் பாகங்களை இணைத்துத் தயாரித்த சுஹோய் – 30 போர் விமானத்துக்கான தற்போதைய செயல்திறன் உத்தரவாதம் 50 சதவீதம். ஆனால் தற்போதைய ஒப்பந்தத்தில் அதுவே 75 சதவீதமாக உள்ளது. உதிரி பாகங்களுக்கு 2.16 பில்லியன் யூரோக்கள்.
இதுதான் இந்தியாவுக்குத் தேவையான தனிச் சிறப்பான வசதிகளோடு தயாரிக்கப்பட்டிருக்கிற 36 போர் விமானங்களின் விலையை ஐந்து பில்லியன் யூரோக்களாக மாற்றியிருக்கிறது. (இந்திய மதிப்பில் 36,900 கோடி ரூபாய் அல்லது ஒரு விமானத்துக்கு 1025 கோடி ரூபாய்).
இருந்தாலும். பாதுகாப்புத் துறையின் மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ஒரு விமானத்துக்கு 670 கோடி என்று நிர்ணயித்தார். நாங்கள் ஒரு விமானத்துக்கு 526 கோடி ரூபாய் விலை நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்கிறது. ஆனால், யூரோவுக்கும் ரூபாய்க்குமான பரிமாற்ற விகிதம் பற்றி அது எதுவும் குறிப்பிடுவதில்லை.
பாதுகாக்கப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில் இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையில் 2008இல் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லி அதன் பின்னால் புகுந்துகொள்கிறது மத்திய அரசு.
அந்த ஒப்பந்தம் 2018இலிலும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியா தனது நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்க வேண்டும் என்றால் போர் விமானங்களின் விலைகள் பற்றிய பேச்சுவார்த்தை விவரங்களைப் பகிர்ந்துகொள்வதில் எந்த ஒரு ஆட்சேபமும் இல்லை என்று அறிவித்துவிட்டார் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன். எனவே, அந்த ஒப்பந்தத்தை இந்திய அரசு காரணமாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
ஆகையால், விமானத்தின் விலை பற்றி இந்திய அரசாங்கம் குழப்புவது சந்தேகங்களைத்தான் உருவாக்குகிறது.
51 சதவீதப் பங்குகளை ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் மூலதனம் போட்டும் 49 சதவீதப் பங்குகள் டஸ்ஸால்ட் குரூப் போட்டும் இணைந்து டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றன. அதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிற நிதி ஒதுக்கீடு தொடர்பானதுதான் மூன்றாவது கேள்வி.
காங்கிரஸ் 30,000 கோடி ரூபாய் கோரியிருந்தது. அந்தத் தொகையில் 10 சதவீதத்தை 30க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களோடு பல்வேறு ஒப்பந்தங்கள் போட்டு அதன் மூலம் விமானங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலை இருந்தது. எந்த இந்திய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் போடலாம் என்பது எங்களது விருப்பத் தேர்வாகத்தான் இருந்தது என்கிறார் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் ட்ராப்பியர்.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலன்டேவின் கூற்று இந்த விவகாரத்தில் முரண்பாடாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணையதளமான ‘மீடியா பார்ட்’ எனும் இணைய தளத்துக்கு பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலன்டே கடந்த செப்டம்பர் மாதத்தில் அளித்த நேர்காணலில், “இந்திய அரசாங்கம் ரிலையன்ஸ் நிறுவனத்தை முன்மொழிந்தது. பிரான்ஸ் நாட்டின் முன்பாக இந்த விவகாரத்தில் தேர்வு செய்துகொள்ள வேறெந்த வாய்ப்பும் இல்லை” என்றிருக்கிறார்.
ரிலையன்ஸ் உள்ளே வந்த கதை
இதே காலகட்டத்தில் நடைபெற்றிருக்கிற சம்பவங்களைக் கூடுதலாகப் பார்ப்போம். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் போவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகத்தான் ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் 2015 மார்ச்சில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஏப்ரல் 24 அன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 126 விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்ததற்கு சில வாரங்களுக்குப் பிறகு, இது தொடர்பான அரசின் விதிமுறைகள் ஆகஸ்ட் 2015இல் திருத்தப்பட்டிருக்கின்றன. ஒரு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக கைப்பற்றுகிறபோது ஒரு வெளிநாட்டு நிறுவனம், எந்த எந்த இந்திய நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து அந்தப் பணியைச் செய்யும் என்பதற்கான விவரங்களை தருகிற கடமையிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக அது தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்திய நிறுவனங்கள் பற்றிய தகுதிப் புள்ளிகள் கோரப்படுவது வரைக்கும் அல்லது கெடுவுக்கு ஒரு வருடம் முன்பாகவோ தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த நிலைபாடுதான், டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெடுக்கு இந்த ஒப்பந்தம் தொடர்பான பணிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று மற்றவர்கள் நம்ப வேண்டும் என்ற நிலையை அரசு எடுக்கிறது. ஆனால் அது உண்மையல்ல.
36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இரண்டு பாதுகாப்பு அமைச்சர்களால் 2016 செப்டம்பர் 23இல் கையொப்பம் இடப்பட்டது. அதே வருடத்தில் பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டதன் மூலம் தானாகக் கிடைத்த வழியின் மூலம் டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் அக்டோபர் 3 அன்று பதிவு செய்யப்பட்டது.
2017 அக்டோபரில் டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்துக்கான அடிக்கல் நாட்டுதல் நாக்பூரில் மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் நடந்தது.
ரஃபேல் விமானங்களுக்கான பாகங்களை டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோ ஸ்பேஸ் லிமிடெட் உற்பத்தி செய்யுமா அல்லது டஸ்ஸால்ட் நிறுவனத்தின் வணிக ஜெட் விமானங்களுக்கு உற்பத்தி செய்யுமா என்பதில் முரண்பாடான அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
மேலும், விமானத்துக்கான மொத்தத் தொகையான ரூபாய் 30,000 கோடி டஸ்ஸால்ட் நிறுவனத்தோடும் தால்ஸ், மற்றும் சப்ரான் நிறுவனங்களோடும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ஏர்பிரேம் மற்றும் சிஸ்டம்ஸ் இன்டக்ரேடரை டஸ்ஸால்ட் வழங்கும். இஞ்சின் மற்றும் லேண்டிங் கியரை சாப்ரான் வழங்கும். ராடார்கள், அவியோனிக்ஸ் ஆகியவற்றை தால்ஸ் வழங்கும்.
பாதுகாப்புத் துறை சான்றிதழ்களில் ரிலையன்ஸ் சப்சைடரிஸ் நிறுவனம் கிளட்ச்சுக்கு 2016- 17 காலகட்டத்தில் விருது பெற்றிருக்கிறது. ரஃபேல் விமானங்களில் அவை இடம் பெறுமா என்பது தெரியவில்லை. திடீர் சம்பவங்களில் ஒன்றாக பிரான்ஸ் முன்னாள் அதிபரின் அறிவிப்பு வந்திருக்கிறது. அது மேலும் இந்த சர்ச்சையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
ரஃபேல் ஒப்பந்தத்ம் வாங்கிய பலிகள்
இதில் பலியாகியிருப்பது நாட்டின் பாதுகாப்புதான். ஏனென்றால் 36 ரஃபேல் விமானங்களும் 123 தேஜாஸ் போர் விமானங்களும் வாங்குவதற்கும் மேலாகஒ புதிதாக விமானங்களை வாங்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் 2032இல் இந்திய விமானப்படையின் ஆற்றல் என்பது 23 படைக் குழுக்களாகக் குறையும் நிலை இருக்கிறது.
இந்த விவகாரத்தில் இரண்டாவது பலி “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற அரசின் திட்டம்தான். அதைப் பற்றி அதிகமாகப் பேசப்பட்டது. ஆனால், ரஃபேல் விஷயத்தில் அது முற்றிலுமாகக் கைவிடப்பட்டுள்லது.
மோடி அரசாங்கம் வெளிப்படைத் தன்மையோடும் நேர்மையாகவும் நடந்துகொண்டிருந்தால் மேற்கண்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கும். அப்படிச் செய்திருந்தால் இந்த பலிகளைத் தடுத்திருக்கலாம்.
நன்றி: தி இந்து
https://www.thehindu.com/opinion/lead/decoding-the-rafale-controversy/article25230283.ece
ராகேஷ் சூத், பிரான்ஸ் நாட்டுக்கான முன்னாள் தூதர், தொடர்புக்கு: rakeshsood2001@yahoo.com
தமிழாக்கம் . த.நீதிராஜன்