உலகின் மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறபோது, “ஒற்றுமைக்கான சிலை” என்ற திட்டத்தைத் தத்துவரீதியாக மக்களிடம் செல்லுபடியாக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி தனது கட்டமைப்பின் வழியாகவும் மாநில அரசாங்கங்கள் மூலமாகவும் ராப்பகலாகப் பணியாற்றிவந்தது.
சங்கப் பரிவாரங்களின் நீண்டகால அரசியல் குறிக்கோள்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது.
ஆனால், இந்த திட்டம் மக்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கத் தவறிவிட்டது. மோடியும் அவரது குழுவினரும் இந்த ஐடியா உருவாக்கப்பட்டதிலிருந்து எதையோ சாதித்துவிடப்போகிறோம் என்ற நிலையில் இருந்தனர்,
இதையொட்டி நாடு முழுவதும் மக்களிடம் பெரும் உற்சாகம் எழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குஜராத்தில்கூட அந்த உற்சாகம் இல்லை. படேலின் 143ஆவது பிறந்த நாளான அக்டோபர் 31 அன்று இந்த சிலை திறந்துவைக்கப்படும்போது பழங்குடிகள் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாக மிரட்டியிருந்தார்கள்.
காந்தி, நேருவுக்கு எதிராக படேல்?
இந்த ஒட்டுமொத்த திட்டமும் சங் பரிவாரத்தின் இன்னொரு நடவடிக்கை மட்டுமல்ல. இதில் வேறு திட்டங்களும் உள்ளன. படேலையும் அவரது வழிமுறையையும் தங்களுக்கானதாக உள்வாங்குவது, மோசமானவராக ஆர்எஸ்எஸ் சித்தரித்திருக்கிற நேருவுக்கும் குஜராத்திலிருந்து உருவான பெரும் தலைவரான காந்தியடிகளுக்கும் எதிராக இரும்பு மனிதர் படேலை நிறுத்துவது ஆகியவையும் அவர்கள் திட்டத்தில் அடங்கும்.
1980களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாஜக நடத்திய இயக்கத்துக்கும் சர்தார் படேலுக்கு சிலை உருவாக்குவதற்கான இயக்கத்துக்கும் இடையில் தனித்துவமான ஒற்றுமை இருப்பதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
“இரண்டு இயக்கங்களும் ஒரே மாதிரி நடந்திருக்கின்றன. இரண்டுக்கும் யாத்திரைகள் நடந்தன. அயோத்தி கோயிலுக்காகச் செங்கல்கள் சேகரிக்கப்பட்டதைப்போல இந்த முறை இந்தச் சிலைக்காக இரும்புத் துண்டுகள் நாடு முழுவதும் சேகரிக்கப்பட்டன.
கோயிலுக்காக எவ்வளவு பணம் வசூல் ஆனது, எவ்வளவு செங்கல்கள் சேகரிக்கப்பட்டன, என்பதில் தெளிவான விவரங்களை அவர்கள் எப்போதும் சொல்ல மாட்டார்கள். அதேபோல குஜராத் அதிகாரிகள் எத்தனை டன் இரும்பு சேகரிக்கப்பட்டது என்று தெரியப்படுத்தவே இல்லை. ஊடகங்களும் இரும்பு சேகரிப்பு இயக்கம் வெற்றியா தோல்வியா என்று விளக்குவதில் பெரிய தயக்கம் காட்டுவார்கள்” என்கிறார் அகமதாபாத்தைச் சேர்ந்த அரசியல் நோக்கர்.
“இரண்டு விவகாரங்களிலும் ஏதோ ஒன்றை உருவாக்குவதற்காக ஊதிப் பெரிதாக்குவார்கள். ஆனால் உண்மையில் வேறு ஒன்றை அழிப்பதில் போய் முடியும். நாங்கள் ராமர் கோயில் கட்டப்போகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால், அது பாப்ரி மசூதியை இடிப்பதில்போய் முடிந்தது. இந்த விவகாரத்திலும் படேலுக்கு சிலை எடுக்கிறோம் என்பது செய்தி. ஆனால், நேருவின் பிம்பத்தைச் சிதைப்பதும் காந்தியைவிடப் பெரிய தலைவராகப் படேலைக் காட்டுவதும்தான் உண்மையான செய்தி” என்கிறார் அவர்.
பிரபல சமூக விஞ்ஞானியும் எழுத்தாளருமான அச்யூட் யாக்னிக் “காந்தியைத் தவிர்த்து இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் மூன்று பெரும் தலைவர்கள் இருந்தார்கள். நேரு, படேல், சுபாஷ் சந்திரபோஸ். ஆர்எஸ்எஸ் காரர்கள் தற்போது செய்ய விரும்புவது படேலையும் போஸையும் தங்களது தலைவர்கள் போல உள்வாங்குவது, பிறகு அவர்களை நேருவுக்கு எதிராக நிறுத்துவது” என்கிறார்.
பாஜகவின் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கத்தைப் போலவே, படேலும் பாஜகவுக்கு முக்கியமானவர். ஜனசங்கம் 1951இல் பிறந்தது. சொல்லிக்கொள்ளும்படி அதற்கு எந்த சுதந்திரப் போராட்டத் தலைவரும் இல்லை என்கிறார் அவர்.
பாஜகவோ சங்க பரிவாரங்களோ அவர்களின் ஆதரவு தளமாக உள்ளவர்களிடம் படேலை ஒரு சர்வாதிகாரியாக முன்னிலைப்படுத்தியிருக்கின்றனர். ஜனநாயகவாதியாக அல்ல என்ற கணிப்பை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
562 மன்னராட்சிப் பிரதேசங்களை இந்தியாவோடு ஒருங்கிணைத்தார் என்று படேலைப் பற்றி பாஜக தூக்கிப் பிடித்துப் பேசுகிறது. ஆனால், படேல் மிக விசுவாசமாக காந்தியைப் பின்பற்றிய ஒரு சீடர். காந்தியின் தாக்கத்திலிருந்து அவர் ஒருபோதும் வெளியே வந்ததில்லை என்பதை யாரும் இன்று வெளிப்படுத்தவில்லை.
படேலை நாட்டின் முதல் பிரதமராகத் தேர்வு செய்திருந்தால் தற்போதைய காஷ்மீர் பிரச்சினை உள்பட இந்தியாவின் பல பிரச்சினைகள் தீர்ந்திருக்கும் என்று மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேசுகிறார்கள்.
“படேலின் அரசியல் மரியாதை படிப்படியாக வளர்ந்தது என்பதை இன்று நினைத்துப் பார்ப்பதில்லை. அவர் அகமதாபாத் மேயராக இருந்தார். அதன் பிறகு பர்தோலிக்குச் சென்றார். அவரது சகோதரர் விட்டல்பாய் படேல் மும்பையின் மேயராக இருந்தார்” என்கிறார் யாக்னிக்.
சிமன்பாய் படேல் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது வல்லபாய் படேலையும் அவரது பாணியையும் தங்களுடையதாக உள்வாங்குகிற அரசியல் பாணி உருவாகத் தொடங்கியது. அடுத்து பாஜக ஆளுங்கட்சியாக வந்தபிறகு 20 ஆண்டுகளாக அது வளர்ந்துவந்திருக்கிறது.
மக்களைக் கவராத மாபெரும் முயற்சி
இந்தச் சிலை பற்றிய திட்டத்தில் மக்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்குவதில் மோடி அரசாங்கமும் பாஜகவும் தோல்வியடைந்துவிட்டதுவிட்டதைப் பற்றிப் பேசுவோம். இமாச்சல் பிரதேசத்தில் ‘அதிசயங்கள் நிறைந்த இந்தியா’ எனும் சுற்றுலா மேம்பாட்டுக்கான ஒரு நிகழ்வில் ஒற்றுமைக்கான சிலையும் உயர்த்திப் பிடிக்கப்பட்டதை நான் கண்டேன்.
விளம்பரப்படுத்துகிற அம்சத்தைப் பொறுத்தவரை, சுற்றுலாவுக்கான இடம் அது என்பது சிறப்பானதே. ஆனால், ‘அதிசயங்கள் நிறைந்த இந்தியா’ என்ற இந்த விளம்பரக் காணொளி மோடியையும் விளம்பரப்படுத்துகிறது. இத்தகைய விளம்பரப் படம் இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
படேல் இல்லையென்றால் இன்றைய நவீன இந்தியா உருவாகியிருக்காது. குஜராத்தில் உள்ள ஊர்களுக்கு இடையே போகக்கூட விசா தேவைப்பட்டிருக்கும் என்று பாஜக சொல்கிற அதிகப்படியான பேச்சு அந்தப் படத்தில் இருக்கிறது.
மோடியையும் பாஜகவின் அரசியலையும் விளம்பரப்படுத்த அரசாங்கம், சுற்றுலாத் துறை விளம்பரப் படத்தை ஏன் பயன்படுத்துகிறது?
குஜராத்துக்கு உள்ளிருந்து இந்தத் திட்டத்துக்கு உருவாகியிருக்கிற எதிர்ப்பை ஒருவரால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா பதினைந்து நாட்களுக்கு முன்பாக, சர்தார் படேலுக்கான நினைவகம் ‘சட்ட விரோதம்’ என்றார். உள்ளூர் பழங்குடி மக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பினாலும் அரசாங்கம் அவற்றை மீறி இந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இந்த திட்டத்தால் வாக்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம் என்கிறார் அவர்.
படேலின் நினைவகத்தைச் சுற்றியிருக்கிற 72 கிராமங்களின் 5,000 குடும்பங்கள் அக்டோபர் 31 அன்று ஒரு நாள் பட்டினிப் போராட்டம் அறிவித்திருந்தன.
கட்டப்பட்ட சிலைக்காக 75000 பழங்குடி மக்களின் நிலம் 2979 கோடி செலவில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் அன்று வீட்டில் சமைக்காமல் பட்டினிப் போரட்டம் நடத்தினார்கள். குஜராத்தில் உள்ள கிழக்குப் பகுதியில் உள்ள பழங்குடிகளின் பாரம்பரியத்தில் அவர்கள் வீட்டில் சமைக்கவில்லை என்பது துக்கம் கொண்டாடுவதைக் குறிக்கும்.
பழங்குடிகளுக்கு நர்மதா ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நிலங்கள் வழங்கியிருப்பதாகவும் அவர்களுக்குப் போதுமான நிவாரணங்கள் வழங்கியிருப்பதாகவும் அவர்களின் போராட்டங்கள் அரசியல் நோக்கம் உடையவை என்றும் ஒரு மாற்றுக் கருத்தும் உள்ளது.
குஜராத் அரசாங்கம் பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கான விரிவு) சட்டம் 1996ஐ மீறியிருக்கிறது என்கிறார் சுரேஷ் மேத்தா. அந்தச் சட்டப்படி கிராம பஞ்சாயத்துகளுக்குத்தான் அத்தகைய அதிகாரம் உள்ளது.
மக்களின் கோபம்
கோபத்தோடு இருக்கிற மக்கள் அக்டோபர் 31 விழாவுக்கு வைத்திருக்கிற பேனர்களை சேதப்படுத்திவிடாமலிருப்பதற்காக காவல் துறையினர் அவற்றைக் காவல் காத்துவந்ததை வீடியோக்கள் காட்டுகின்றன.
சிலைத் திறப்பு விழாவை ஒட்டி, நர்மதா மாவட்டத்தின் கேவடியா பகுதி ராணுவப் பகுதியாக மாறிவிட்டது. அரசாங்கத்துக்குச் சங்கடம் தருகிற எந்தவொரு சம்பவமும் நடந்துவிடக் கூடாது என்று அதிகாரிகள் அவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள்.
இந்த விழா பற்றிய பேனர்களும் போஸ்டர்களும் பல இடங்களில் கிழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் கருப்பு சாயம் பூசப்பட்டும் இருக்கிற அனேக சம்பவங்கள் நடந்துள்ளன என்று விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரிய அளவில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறும் என்று அரசாங்கம் அஞ்சியதால் விழா மூடி மறைக்கப்பட்ட பாணியில் பாதுகாப்பாக நடைபெற்றது.
“அந்தப் பகுதி மக்களிடமிருந்து இத்தகைய பெரிய அளவிலான எதிர்ப்பு கிளம்பும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவே இல்லை. வளர்ச்சிக்காகவே இதையெல்லாம் செய்கிறோம் என்று பாஜக பேசுவதை மக்கள் ஏற்கவில்லை” என்கிறார் சமூக ஊழியர் ரோகித் பிரஜாபதி.
தங்களின் நிலம் உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்குகிற நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர். வகுப்பு வாத வன்முறை தலைவிரித்தாடியது பற்றி மக்கள் மறந்துவிடலாம். ஆனால் தங்கள் நிலம் பறிபோவதை அவர்களால் மறக்க முடியாது. சுற்றுச்சூழல் விவகாரங்களிலும் சமூகப் பிரச்சினைகளிலும் விவாதம் நடத்துவதற்கு ஏன் அரசாங்கம் பயப்படுகிறது என்கிறார் அவர்.
இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட ‘ஏக்தா யாத்திரா’ குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியால் ஆரம்பிக்கப்பட்டது. 562 சமஸ்தானங்களை சுதந்திர இந்தியாவோடு இணைத்த படேல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே அதன் நோக்கம். ஆனால், அதற்கு மிகவும் குறைவான மக்கள் ஆதரவுதான் கிடைத்திருக்கிறது.
60 ஏக்தா யாத்திரைகளை நடத்தி 10 ஆயிரம் கிராமங்களை அணுக வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டம். 2019 மக்களவைத் தேர்தலில் மக்களின் மனபோக்கை நிர்ணயிக்கிற கூட்டங்களாக இவை இருப்பதால் பாஜக அதைப் பற்றிக் கவலைப்படுகிறதா?
‘ஏக்தா யாத்திரா’ பயணங்களில் போதுமான மக்களைப் பங்கேற்கவைக்க முயற்சிக்காமல் ஆரம்பப் பள்ளிகளின் மாணவர்களை வைத்து கூட்டம் காட்டிவிட்ட மாவட்ட கலெக்டர்களை மாநில அரசாங்கம் நெருக்கிவருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
நர்மதா ஆற்றின் மீது உள்ள சாது தீவின் மீது கட்டப்பட்டுள்ள 182 மீட்டர் சிலையை அமைத்ததையும் அதனை பராமரிப்பதையும் மக்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர். 3000 கோடி ரூபாய் செலவழித்து இந்தத் திட்டத்தை ஏன் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
ராஜீவ் கண்ணா
தமிழாக்கம். த.நீதிராஜன்
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/bjp-sardar-patel-statue-of-unity-protests
குண்டன் மோடி தின்று விட்டு குசு விடத்தான் லாயக்கு . மோடிக்கும் இத்தாலியன் மாபியா சோனியாவுக்கும் இந்தியாவை பற்றி எந்த அக்கறையும் இல்லை. இருந்தால் மேட் இன் என்று சொல்லிவிட்டு சீனா செய்த சிலையை வெட்கமே இல்லாமல் திறந்து வைப்பானா. ரபேல் மூலம் அம்பானிக்கு பணம் வர வழி செய்வானா . சீனாவுக்கு டோக்லாமை தானம் கொடுத்துவிட்டு இந்திய வீரர்களை பாகிஸ்தான் தலை அறுப்பதை பார்த்து எல்லா ஓட்டைகளையும் மூடி பார்த்து கொண்டிருப்பானா