என்ன செய்து விட்டார் போலா நாத் ? மக்களின் வரிப்பணத்தை ஏய்த்து, பொதுத் துறை நிறுவனத்தின் பணத்தை பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ள, சிபிஐ குற்றவாளியிடம் சலுகை பெற்றுள்ளார். என்ன சலுகை என்ன குற்றம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அதற்கு முன், போலா நாத் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைப் பார்ப்போம். போலாநாத்துக்கும் சவுக்குக்கும் என்ன உறவு என்பதை “வெளியே போ” என்ற கட்டுரையில் சவுக்கு விரிவாக விளக்கியிருக்கிறது. இந்த போலாநாத், வட இந்தியர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். பல்வேறு பதவிகளை வகித்து, டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக பதவியேற்றார்.
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த போது பல்வேறு திருவிளையாடல்களை அரங்கேற்றியிருக்கிறார் போலா நாத். டாக்டர்.காந்திராஜன் என்று ஒருவர் கூடுதல் டிஜிபி இருக்கிறார். அவரைப் பற்றி எழுதினால் பல கண்றாவிக் கதைகள் வெளிவரும். இந்தக் கட்டுரை அவரைப் பற்றியது இல்லை என்பதால், அவருக்கும் போலாநாத்துக்கும் என்ன தொடர்பு என்பதோடு விட்டு விடுவோம்.
கோவை கமிஷனராக காந்திராஜன் இருந்த போது, பெண் விவகாரத்திலும், ஊழல் விவகாரத்திலும் சிக்குகிறார். இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்துகிறது. அந்த விசாரணையை நடத்திய சண்முகப்ப்ரியா என்ற கூடுதல் எஸ்பி, காந்திராஜன் மீதான, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதாக அறிக்கை ஒன்றை அளிக்கிறார். காந்திராஜனை காப்பாற்றும் பொருட்டு, போலாநாத், சண்முகப்ப்ரியாவிடம், குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று ஒரு அறிக்கையை அளிக்கச் சொல்லி அதன்படியே அவரும் அனுப்புகிறார். (சண்முகப்ரியா லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்க வேண்டாமா ?) அந்த அறிக்கையின் அடிப்படையில் காந்திராஜனுக்கு நற்சான்றிதழ் கொடுத்து, அவரை காப்பாற்றுகிறார் போலாநாத்.
உமாசங்கர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணையாவது, கருணாநிதியால் உத்தரவிடப் பட்டு நடத்தப் பட்டது. ஆனால், ஏ.கே.விஸ்வநாதன் மீதான விசாரணை, ஜாபர் சேட்டின் பழிவாங்கும் நோக்கத்தால் மட்டுமே தொடங்கப் பட்டது. இந்த விசாரணையின் இறுதியில், குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று, அந்த விசாரணையை நடத்திய டிஎஸ்பி முகம்மது இக்பால் அறிக்கை அளிக்கிறார். ஆனால், அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியாக இருந்த, ஜாபரின் அடிமை சுனில் குமார் மற்றும் போலா நாத் இருவரும் சேர்ந்து, விஸ்வநாதன் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இது ஜாபர் சேட்டை திருப்திப் படுத்த மட்டுமேயன்றி வேறு எதற்காகவும் இல்லை.
இது போல, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக செயல்பட்டதை விட, ஜாபர் சேட்டின் கைக்கூலியாக செயல்பட்டார் என்பதே பொருத்தம். லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கும் போது, மாதந்தோறும், 1 லட்ச ரூபாயை ரகசிய நிதியில் இருந்து கையாடல் செய்தார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
லத்திக்கா சரணை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதும், யாரைப் போடுவது என்று எழுந்த குழப்பத்தில் போலாநாத்துக்கு யோகம் அடித்தது. போலாநாத் டிஜிபியாக நியமிக்கப் பட்டார்.
டிஜிபி ஆகி, தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி வந்ததும், விடுப்பில் சென்றிருந்த லத்திக்கா சரண் திரும்பி வந்து, என் சீட்டைக் கொடுங்கள் என்று கேட்டார் போலாநாத். சாரி, தர முடியாது. அரசு ஆணை பெற்று வாருங்கள் என்று பதிலளித்தார் போலாநாத். பிறகு, தானே டிஜிபியாக தொடர வேண்டும் என்பதற்காக, தோட்டத்தில் காய்களை நகர்த்தினார். அதன் படி, போலாநாத்தை டிஜிபியாக தொடரச் செய்யுங்கள் என்று உத்தரவும் வந்தது. தவளை தன் வாயால் கெடும் அல்லவா ? அதைப் போலவே போலாநாத், தேர்தலை அமைதியாக நடத்தினேன் என்று எனக்கு ஏன் பாராட்டு விழா நடத்தக் கூடாது என்று, அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார். இந்த விவகாரம் தெரிந்ததும், மாற்றப் பட்டார்.
சரி, இப்போது என்ன தவறு செய்தார் போலாநாத். தேர்தல் முடிந்த ஏப்ரல் 13க்குப் பிறகு, போலாநாத்தின் மகள் திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. அந்த திருமண வரவேற்பு மகா தடபுடலாக நடந்தது. அந்த திருமண வரவேற்பில், எப்படியும் தில்லுமுல்லுகள் நடக்கும் என்று எதிர்ப்பார்த்து சவுக்கு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த போது, ஓடோடி வந்த காவல்துறையினர், ‘சார், ப்ரெஸ் அலோவ்டு இல்ல சார்’ என்றனர். பத்திரிக்கையாளர்களையோ, புகைப்படக்காரர்களையோ ஒருவரையும் அனுமதிக்காமல் அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
போலாநாத் அவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்றால், நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன ?
கன்னியாக்குமரி போக்குவரத்துக் கழக கண்காணிப்பு அதிகாரி, ஜாங்கிட்
உயர்நீதிமன்ற நீதிபதி சிவக்குமார்
போலாநாத்தின் மகள் அந்த நிகழ்ச்சியில் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார். அந்தக் காரின் பதிவு எண் TN 01 Z 3789. இந்த பென்ஸ் கார் அரிஹந்த் ஃபவுன்டேஷன் அன்டு பில்டர்ஸ், பழைய எண் 271, புதிய எண் 182, முதல் தளம், பூந்தமல்லி ஹைரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை என்ற முகவரியில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்பீர்கள்.
1997ம் ஆண்டு, அரிஹந்த் பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே ஒரு பிரம்மாண்டமான அபார்ட்மெண்ட்டை கட்டுகிறது. இதற்காக மத்திய அரசு நிறுவனமான ஹட்கோ வங்கியிடமிருந்து 17.30 கோடியை கடனாக பெறுகிறது. இதற்காக ஹட்கோ நிறுவனமும், அரிஹந்த் நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, 13 கால் ஆண்டுத் தவணைகளில் ஒரு தவணை 133 லட்சம் என்ற வீதத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். அந்த அபார்ட்மெண்டில் ஒரு ஃப்ளாட்டை விற்பதென்றால் கூட, ஹட்கோவிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். ஜுன் 99ல் முதல் தவணையை திருப்பிக் கொடுக்க வேண்டிய ஹட்கோ, அவகாசம் கேட்கிறது. ஒரு காலாண்டுக்கு 151 லட்சம் கட்ட வேண்டும் என்று தவணைகள் மாற்றி அமைக்கப் படுகின்றன. மீண்டும் அரிஹந்த் அவகாசம் கேட்க, மீண்டும் வழங்கப் படுகிறது. இறுதியாக நான்காவது முறையாக மீண்டும் அரிஹந்த் ஒரு தவணை 1.12 கோடி என்று மாற்றியமைக்கப் படுகிறது.
ஒரே ஒரு தவணை கட்டத் தவறினால் கூட, மொத்தக் கடனும் ரத்து செய்யப் பட வேண்டும் என்பதே அரிஹந்தோடு செய்து கொண்ட ஒப்பந்தம். மேலும், தவணை தவறினால், ஒரு தடையில்லா சான்று கூட வழங்கக் கூடாது. ஆனால், அரிஹந்த் பவுண்டேஷன், கடனையும் திருப்பிக் கொடுக்காமல், தடையில்லா சான்றும் பெறாமல், 127 ஃப்ளாட்டுகளை விற்று விட்டது. மொத்தம் 40 கோடிக்கு ஃப்ளாட்டுகளை விற்ற ஹட்கோ நிறுவனம், 19 கோடியை ஹட்கோவுக்கு கட்டி விட்டு மீதம் உள்ள தொகை அத்தனையையும் ஸ்வாஹா செய்து விட்டது. இதையடுத்து, சிபிஐ RC MA1 2003 A 0048 நாள் 29.10.2003 என்ற குற்ற எண்ணில் வழக்கு பதிவு செய்து, அரிஹந்த் நிறுவனத்தின் மீதும், ஹட்கோ அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தது. இப்போது இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அரிஹந்த் நிறுவனத்தின் மீதான அடுத்த வழக்கு அண்ணா சாலையில் உள்ள ஒரு கட்டிடம் தொடர்பானது. சென்னை அண்ணா சாலையில் 11 க்ரவுண்டுகள் இடத்தில் ஒரு வணிக வளாகத்தை அரிஹந்த் நிறுவனம் கட்டுகிறது. கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டு செப்டம்பர் 99ல், கட்டுமானப் பணி நிறைவடைந்ததாக சிஎம்டிஏ விலிருந்து தடையில்லா சான்றும் பெறப்படுகிறது. பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மதிப்புக்கு பத்திரப் பதிவு செய்தால், வருமான வரித் துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது விதி. இதையடுத்து தடையில்லா சான்று பெறுவதற்காக விண்ணப்பிக்கையில், நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்போது சேர்ந்து மொத்த விலை 26 கோடி என நிர்ணயம் செய்யப் படுகிறது. இதற்கான பத்திரப் பதிவுக் கட்டணம் 3 கோடியே 64 லட்சம். இந்த ஸ்டாம்ப் ட்யூட்டியை தவிர்ப்பதற்காக, அரிஹந்த் நிறுவனம், மொத்த இடத்தையும் ஸ்டெர்லிங் இன்ஃபோடெக் என்ற மென்பொருள் நிறுவனத்துக்கு விற்று விட்டதாக அக்டோபர் 99ல் ஒரு ஒப்பந்தம் போட்டு, தடையில்லா சான்று வேண்டி வருமான வரித் துறையிடம் விண்ணப்பிக்கிறது. கட்டிடத்தை ஆய்வு செய்த வருமாவ வரித் துறையினர், மொத்த மதிப்பு 27 கோடி என சான்றளிக்கின்றனர். 27 கோடிக்கு 4 கோடி ரூபாய் ஸ்டாம்ப் ட்யூட்டி வரும் என்பதை அறிந்த அரிஹந்த், நிலத்துக்கு தனியாகவும், கட்டிடத்துக்கு தனியாகவும் தடையில்லா சான்று கோருகிறது, அது வருமான வரித் துறையால் மறுக்கப் படுகிறது. தந்திரமாக அரிஹந்த் நிறுவனம், பத்திரப் பதிவுத் துறையில் கட்டிடத்தை தனியாகவும், நிலத்தை தனியாகவும் பதிவு செய்கின்றனர். இந்த நேரத்தில் வருமான வரித்துறையில் புதிய அதிகாரிகள் வருகின்றனர். வந்த புதிய அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு அரிஹந்த் நிறுவனம், தந்திரமாக, நிலத்தை தனியாகவும், கட்டிடத்தை தனியாகவும் பதிவு செய்து, ஸ்டாம்ப் ட்யூட்டி ஏய்ப்பு செய்ததாக, சிபிஐ குற்ற எண் RC 52 (A) 2003/CBI/ACB/Chennai நாள் 14.11.2003 என்ற குற்ற எண்ணில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த இரண்டு வழக்குகளிலும், அரிஹந்த் நிறுவனத்தின் முதலாளி கமால் லுனாவத் கைது செய்யப் பட்டார்.
இந்த இரண்டு வழக்குகளிலும் அரிஹந்த் நிறுவனம் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில் தான், இந்நிறுவனத்தின் பென்ஸ் காரை போலா நாத் தனது மகள் திருமண வரவேற்பிற்கு பயன்படுத்தியுள்ளார்.
இப்படிப் பட்ட ஒரு ஐபிஎஸ் அதிகாரி, லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக இருந்த பொழுது எப்படி செயல்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
போலாநாத்துக்கு மாதம் 1.5 லட்சம் சம்பளமாக மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப் படுகிறது. இது போக, ரகசிய நிதி என்று ஒரு பெரும் தொகையை மாதந்தோறும் எடுத்துப் பழக்கப் பட்ட கரங்கள் அவருடையது. காய்கறி வாங்க, மளிகை சாமான் வாங்க என்று, யாராவது ஒரு டிஎஸ்பி அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்வார்.
ரிசெப்ஷனில் உள்ள பெண் காவலர்கள்
இப்படி சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமேயில்லாமல் வாழ்க்கையை ஓட்டும் போலாநாத்துக்கு மகள் திருமணத்துக்கு செலவு செய்வதற்கு என்ன கேடு ? பென்ஸ் காரை வாடகைக்கு எடுத்தால், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ஆகுமா ? 20 ஆயிரம் என்றே வைத்துக் கொள்வோமே…. 20 ஆயிரம் கூட இல்லாத வகையில் போலா நாத் என்ன பிச்சையா எடுத்துக் கொண்டிருக்கிறார் ? காவல்துறையில் நேர்மையான எவ்வளவோ கான்ஸ்டபிள்களையும், ஹெட் கான்ஸ்டபிள்களையும் சவுக்கு பார்த்திருக்கிறது. மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் அவர்களிடம் இருக்கும் நேர்மை உணர்ச்சி போலாநாத்திடம் இல்லையே ? இந்த நபர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஆகியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இது மட்டுமல்ல…. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பந்தல், நாற்காலி போன்றவைகளை, காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் காண்ட்ராக்டர் ஒருவர் இலவசமாக செய்து கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதே போல, உணவு செலவாக, ஒரு நபருக்கு 600 ரூபாய் ஆகியிருக்கிறது. ஆனால் செலவுக் கணக்கு காட்டுவதற்காக ஒரு நபருக்கு வெறும் 60 ரூபாய் ஆனதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பின்னணிப் பாடகி சுசித்ரா மற்றும் பாடகர் மனோ ஆகிய இருவருக்கும் ஒரு பெரும் தொகை கொடுக்கப் பட்டிருக்கிறது. இதையும் போலாநாத் தனது சொந்தக் காசில் கொடுக்கவில்லை என்கிறார்கள்.
ஏன் இப்படிச் செய்தீர்கள் போலாநாத் ?
சாமி கும்பிட்டா போதாது போலாநாத்…!!!!! நேர்மையா இருக்கனும்
இப்படிப்பட்ட அதிகாரியான போலாநாத், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த போது 300 முதல் 1000 ரூபாய் என, லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் பலரை பொறி வைத்துப் பிடிக்க உத்தரவிட்டிருக்கிறார் என்பதை நினைக்கும் போது, மனது வேதனைப்படுகிறது. “படிச்சவன் சூதும் வாதும் பண்ணா, போவான் போவான்…. அய்யோன்னு போவான்” என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. போலாநாத்தும் அது போல போக வேண்டும்.