அரசாங்கத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகிறார்கள், அதில் இந்தியாவின் சட்டப்பூர்வ நிறுவனங்களைச் சீர்குலைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியை, குறிப்பாக சோனியா காந்தி ஏற்படுத்திய தேசிய ஆலோசனைக் குழுவைப் பல ஆண்டுகளாகக் குற்றம் சாட்டி வந்தது பாரதிய ஜனதா கட்சி. பாஜகவும் நரேந்திர மோடியும் மத்திய ஆட்சியதிகாரத்துக்கு வந்தால் இந்த நிறுவனங்கள் பாதுகாக்கப்படும், எப்படிச் செயல்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டதோ அப்படிச் செயல்பட வைக்கப்படும் என்பதாக இந்தக் குற்றச்சாட்டின் மூலம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஒரு வார கால நிகழ்வுகள், இதற்கு நேர்மாறாக நடந்திருப்பதைக் காட்டுகின்றன.
மத்தியப் புலனாய்வு நிறுவனத்தின் (சிபிஐ) செயல்பாட்டில் தலையிடுவதற்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) பயன்படுத்தப்படுகிறது (சிவிசி பயன்படுத்தப்படுகிற விதம் சட்டத்துக்குப் புறம்பானதாக இருக்கக்கூடும்). இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஒரு துணை ஆளுநர் தங்கள் நிறுவனத்தில் மத்திய அரசு தலையிட்டுக் குழப்புவது பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்.
சிபிஐ, ஆர்பிஐ விவகாரங்கள் ஒட்டுமொத்தக் கதையின் ஒரு சிறு துணுக்குதான் (ஆனால் அதிர்ச்சியளிக்கும் துணுக்கு). ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர், 2016இல் பணமதிப்பு ஒழிக்கப்பட்ட நடவடிக்கையின்போது பிறப்பிக்கப்பட்ட ஆணைகளைக் கண்டு மௌனமாகவே இருந்தார் என்று விமர்சிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ இயக்குநரோ, பிரதமர் நரேந்திர மோடியால் நியமிக்கப்பட்டவர் – அதுவும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டவர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விடச் சிறப்பான முறையில் இயங்க வைக்கப்படும் என்று வாக்களித்த இன்றைய ஆட்சியாளர்களால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்ட நிறுவனங்களை இங்கே வரிசையாகப் பார்ப்போம்:
சிபிஐக்குள் ஒரு அவல நாடகம்
சிபிஐ தலைமை இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் ஆஸ்தானா இருவருக்குடையேயான உள்சண்டை வெளியே வந்ததால் மட்டுமல்ல, இந்த விவகாரத்தில் இறுதியாக அரசு எப்படித் தலையிட்டது, கையாண்டது என்பதாலும் இந்நிறுவன விவகாரம் கவலையளிக்கிறது. அரசியல் நோக்கமுள்ள விசாரணைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனம் சிபிஐ மீது ஏற்கெனவே இருக்கிறது என்ற நிலையில், மேலும் அப்பட்டமாக சில அரசியல் உள்நோக்கப் புலனாய்வுகளை நடத்துவதற்கு ஆஸ்தானாவைப் பயன்படுத்த மத்திய அரசு முயன்றதால்தான் இந்த உள்மோதல் விவகாரமே வெடித்தது. பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படுகிறவர் இந்த ஆஸ்தானா.
“அரசியல் உள்நோக்கத்துடன் அரசாங்கம் அளிக்கக்கூடிய நிர்ப்பந்தங்கள் எதுவும் வெளிப்படையானதாகவோ, எழுத்துப்பூர்வமானதாகவே இருக்காது. ஆகப் பெரும்பாலும் அது மறைமுகமாகவே இருக்கும். அதற்குப் பணியாமலிருக்க மிகுந்த துணிச்சல் தேவை,” என்று உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறார் அலோக் வர்மா. தனக்குக் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
அலட்சியப்படுத்தப்படும் ஆர்பிஐயின் குரல்
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கடந்த அக்டோபர் 26 அன்று ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதன் முடிவில் அவர் கூறிய சொற்கள், மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளத் தக்க வகையில் இருந்தன. “மத்திய வங்கியின் சுயேச்சையான தன்மையை மதிக்காத அரசுகள் இப்போதோ அல்லது பின்னொரு நாளிலோ நிதிச் சந்தையின் கடுங்கோபத்திற்கு உள்ளாக நேரிடும். பொருளாதாரத்தைப் பற்றியெறியச் செய்ய நேரிடும். ஒரு முக்கியமான ஒழுங்காற்று நிறுவனத்தைச் சீர்குலைத்துவிட்டதற்காக வருந்தி நிற்க நேரிடும்,” என்றார் அவர். அவருடைய இந்தக் கருத்து திடுதிப்பென்று அந்தரத்திலிருந்து வந்ததல்ல.
கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய நிதியமைச்சகம், இந்தத் தலைமை வங்கியை, அது என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறதோ அதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தொடர்ச்சியாக உள்ளாக்கி வந்திருக்கிறது. சில நேரங்களில், முதலில் ரிசர்வ் வங்கியைக் கலந்தாலோசிக்காமலே புதிய நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. நீரவ் மோடி மோசடிக்கு இந்த மத்திய வங்கியின் மீது பழி போட்டது அமைச்சகம். பணப்பட்டுவாடா தொடர்பாக இந்த வங்கிக்கு உள்ள அதிகாரங்களைக் கைப்பற்றப் போவதாக அமைச்சகம் கூறியது. ஒரு கொள்கை மறு ஆய்வுக்கு முன்பாக, நிதிக் கொள்கைக் குழுவினருடன் அமைச்சக அதிகாரிகள் பேசுவார்கள் என்றும் அமைச்சகம் அறிவித்தது (அதெல்லாம் நடக்காது என்று சொல்லிவிட்டது வங்கி நிர்வாகம்).
இந்த நிகழ்வுப் போக்குகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன. ஏனென்றால், தற்போதைய ஆளுநர் உர்ஜித் படேல் பதவியேற்றபோது, படு மோசமான முடிவாகிய, மிக மோசமாகத் திட்டமிடப்பட்டதாகிய, நியாயப்படுத்தவியலாத பண மதிப்பு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான ஆணைகளை மத்திய அரசு பிறப்பித்தபோது, அதற்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிர்ப்பந்திக்கப்பட்டபோது, விருப்பமின்றி அதே நேரத்தில் எவ்வித எதிர்ப்புமின்றி அதற்கு உடன்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். பணிந்துபோகிறவர் என்று கருதப்படுகிற ஒரு ஆர்பிஐ ஆளுநரின் கீழ் பணியாற்றுகிற ஒரு அதிகாரி இப்போது இப்படி வெளிப்படையாகப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்று கருதுகிறார் என்றால், அரசாங்கத்தின் தலையீடு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது பற்றி அது எந்த அளவுக்குப் பேசுகிறது!
தேர்தல் ஆணையம்: சுயேச்சைத் தன்மை எங்கே?
தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்கான ஒரு ஏற்பாடாக தேர்தல் பத்திரங்களை வெளியிடப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் கட்சிகளின் நிதி வசூல் ஏற்பாடுகள் மிகவும் வெளிப்படையானதாக இருக்கும் என்று அரசு கூறியது. ஆனால் அது “ஒரு பிற்போக்கான நடவடிக்கை” என்று தேர்தல் ஆணையம் கூறியது. ஆயினும், விரைவிலேயே ஆணையம் தனது மனதை மாற்றிக்கொண்டு, அந்தப் பத்திரங்கள் “சரியான திசையில் அடியெடுத்துவைப்பதாக” இருக்கின்றன என்று கூறியது. இந்தத் திட்டம் பற்றிக் கருத்துக் கூறிய வல்லுநர்கள் எல்லோருமே இது வெளிப்படைத்தன்மைக்கு எதிரான தாக்குதலே என்று கூறிக்கொண்டிருந்தபோது ஆணையம் இவ்வாறு கூறியது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களின் செயல்பாடு பற்றிக் கேள்விகள் எழுந்தபோது, “தோல்வியடைகிறவர்களால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை ஏற்க முடியாதுதான்,” என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது தொடர்பான நிகழ்ச்சிப் போக்குகள் மிகவும் அதிர்ச்சி தருகின்றன. கடந்த அக்டோபரில், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சில மணி நேரங்கள் தாமதப்படுத்தப்பட்டது. அதற்குக் காரணம், தேர்தல்கால நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்குத் தோதாகவே இவ்வாறு தாமதிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.
2017இல் இதை விடவும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இமாசலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுக்கான தேர்தல்கள் வேறு வேறு தேதிகளில் நடைபெறும் என்று ஆணையம், எவ்வித விளக்கமுமின்றி, அறிவித்தது. குஜராத்தில் பாஜக ஆட்சியாளர்களுக்கு எதிரான உணர்வுகள் வளர்ந்திருந்த நிலையில், அதைத் தணிப்பதற்காகப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவிப்பதற்கு ஏதுவாக அந்த மாநிலத்திற்கான தேர்தலைத் தள்ளிப்போடும்படி மத்திய ஆட்சியாளர்கள் நிர்ப்பந்தித்ததாகப் பொதுவான கருத்து மேலோங்கியது. ஆணையத்தின் அந்த முடிவு பாரபட்சமானதாகத் தெரிந்தாலும்கூட, அவ்வளவு அப்பட்டமானதாகக் கூறிவிட இயலாதுதான். ஆனால், தனது செயல்களுக்கு ஆணையத்தால் உரிய விளக்கங்களை அளிக்க முடியவில்லை. இது, ஆணையத்தின் சுயேச்சைத் தன்மை தொடர்பான கேள்விகள் காரணமின்றி வந்துவிடவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன.
கலகலத்த நீதித்துறை
இவ்வாண்டு ஜனவரியில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து உயர்நிலை நீதிபதிகளில் நான்கு பேர், இதற்கு முன் நடந்திராத வகையில், செய்தியாளர்களைச் சந்தித்து ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று பேட்டியளித்தார்கள். அவர்களுடைய கோபத்தின் மைய இலக்காக இருந்தவர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. அவர் மீதான வழக்கில் தீர்ப்பளிக்கிற இடத்தில் அவரே உட்கார்ந்திருந்தார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அத்துடன், ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் பதவி உயர்வு பிரச்சனையை அவர் கையாண்ட விதம் தொடர்பான விமர்சனங்களும் இருந்தன. உத்தர்கண்ட் மாநில தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.எம். ஜோசப். அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது செல்லாது என்று 2016இல் தீர்ப்பளித்தவர் அவர். பாஜக-வுக்கு ஒரு பலத்த அடியாக வந்த தீர்ப்பு அது. உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு அளிப்பதற்கு அவருடைய பெயரை நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) பரிந்துரைத்திருந்தது. ஆனால், அது தொடர்பான கோப்பின் மீது உட்கார்ந்துகொண்டு மாதக்கணக்கில் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது மோடி அரசு.
ஒரு வழியாக ஜோசப் பெயரை அரசு ஏற்றுக்கொண்டது என்றாலும், அதில் அவரது பணிமூப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டது. நீதிபதி நியமனங்கள் நீதித்துறைக்கும் அரசுக்கும் இடையே இழுத்தடிக்கப்படுவது ஒரு முக்கியமான பிரச்சனைதான். 2015ல் உச்சநீதிமன்றம் மத்திய அரசு கொண்டுவந்த தேசிய நீதிபதிகள் நியமன மன்றத்தைத் தள்ளுபடி செய்தது. அந்த மன்றம் நீதிபதிகள் நியமன நடைமுறையை முற்றிலுமாக மாற்றியிருக்கும். தற்போதைய கொலீஜியம் நடைமுறையில் போதாமை உள்ளது என்று நீதித்துறை சார்ந்தவர்கள் உட்படப் பலரும் வாதிட்டிருக்கிறார்கள். ஆயினும், நீதிபதி ஜோசப் விவகாரத்தை அரசு எப்படிக் கையாண்டது என்பது, தற்போதைய நியமன நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவதில் அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. சிபிஐ சிறப்பு நீதிபதி பீ.எச்.லோயா மரணம் தொடர்பான சந்தேகங்களும் சூழ்ந்துள்ளன.
பொருளிழந்த மாநிலங்களவை
நாடாளுமன்றத்தில் ‘பண மசோதா’ என்பது, இந்தியாவின் தொகுப்பு நிதி சார்ந்த செலவினத்தோடு நேரடியாகத் தொடர்புள்ள ஒரு சட்ட முன்வரைவாகும். அதனைச் சட்டமாக்க வேண்டுமென்றால், மக்களவையில் மட்டும் அதை நிறைவேற்றினால் போதுமானது. அதாவது, பண மசோதாக்களை நாடாளுமன்ற மாநிலங்களவையை ஓரங்கட்டிவிட்டு நிறைவேற்ற முடியும். மாநிலங்களவையில் தற்போதைய நிலவரப்படி பாஜக-வுக்குப் பெரும்பான்மை பலமில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது. ஆகவே, மிகக் குறிப்பாக ஆதார் சட்டத்தை நிறைவேற்ற இந்த வழிமுறையைத்தான் அரசு கையாண்டது. இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த பெரும்பான்மைத் தீர்ப்பில், இதனை பண மசோதா என்று வகைப்படுத்தி நிறைவேற்றியது சரிதான் என்று கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து மாறுபட்டதாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், பண மசோதா என்ற பிரிவில் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது ‘அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான மோசடி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்புகளையும் சேர்ந்த வல்லுநர்கள், பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக வழக்குப் போடப்படுவதற்கு நிச்சயமாக வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். சட்டநுணுக்கங்கள் ஒருபுறமிருக்க, மாநிலங்களவையைப் புறக்கணித்துவிட்டு சட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு தயாராக இருக்கிறது என்பது, இந்திய அரசமைப்பு சாசனப்படியான ஒரு ஜனநாயக அமைப்பின் ஒரு முக்கிய அங்கத்தை இந்த அரசு எப்படிப் பார்க்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்லப்போனால், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அவை” மக்களவையைக் கேள்வி கேட்க முடியுமா” என்று கூட கேட்டார்.
இந்திய ராணுவம்: விளம்பர இலாகா?
நாட்டின் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கு முந்தைய ஆட்சியாளர்களை விடவும் பல மடங்கு தயாராக இருப்பவர், பாதுகாப்புப் படையினருக்காகக் குரல் கொடுப்பவர் என்ற வலுவான தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் நரேந்திர மோடி பிரதமரானார். 2016இல் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் “சர்ஜிகல் ஸ்டிரைக்” என்பதான துல்லியத் தாக்குதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, அந்தத் தோற்றம் உண்மையானதுதான் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த நடவடிக்கையால் என்ன முக்கியமான பயன் விளைந்தது என்ற கேள்விக்கு விடை கிடைத்தாகவில்லை, அது வேறு விவகாரம்.
அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அரசு தனது பிம்பத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்வதற்கு ஏற்ற வகையில் ராணுவத்தினரைப் பயன்படுத்தி வருகிறது. ராணுவ அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்புகளை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள். ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ பதிவுகள் மக்களிடையே பரப்ப அனுமதிக்கப்படுகிறது. ஓராண்டு தாமதமாக, ‘சர்ஜிகல் ஸ்டிரைக் தினம்’ என்று கொண்டாட ஆணையிடப்படுகிறது. அந்த ராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்தி ஆதாயம் அடைவதே அதன் நோக்கம்.
இப்படி ராணுவப் படையினரைத் தனது ‘மக்கள் தொடர்பு நோக்கங்களுக்கு’ (விளம்பர நோக்கங்களுக்கு) எனப் பயன்படுத்த அரசு முயன்று வந்துள்ளது என்றாலும், உண்மையிலேயே அவர்களை எப்படிக் கையாளுகிறது என்பது பற்றிய கேள்விகள் எழத்தான் செய்துள்ளன. 2018ம் ஆண்டின் ‘ராணுவ தின’ நிகழ்ச்சிகளில் பிரதமரோ இதர அமைச்சர்களோ கலந்துகொள்ளவில்லை. படைகளைக் காலத்திற்கு ஏற்பத் தரமுயர்த்துவதற்கு சராசரிக்கும் குறைவாகவே செலவிடப்படுகிறது. 2016இல் இரண்டு மூத்த அதிகாரிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் பிபின் ராவத். காஷ்மீரில் ஒரு இளைஞரை ராணுவத்தினர் மனிதக் கேடயமாகப் பயன்படுத்திய விவகாரத்தில் மத்திய அரசு வெட்கக்கேடான முறையில் எதிர்வினையாற்றியது.
இவை எல்லாமாகச் சேர்ந்து, இந்தியாவின் பாதுகாப்பை உண்மையாகவே மேம்படுத்துவதற்கு எதுவும் செய்யாமலே, ராணுவம் பற்றிய பிம்பத்தை அரசியலாக்கவும் ஆதாயமடையவும் முயற்சி நடப்பது தெளிவாகப் புலப்படுகிறது. 2017 நவம்பரில் பிபின் ராவத், “அரசியலிலிருந்து ராணுவத்தை ஒதுக்கிவைக்க வேண்டும்” என்று பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. விமானப் படைக்குக் கூடுதல் தேவை இருப்பினும் சில ஜெட் விமானங்களை மட்டும் மிக அதிகமான விலை கொடுத்து வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டதாக வந்துள்ள ரஃபேல் போர்விமான விவகாரங்கள், ராணுவம் தொடர்பாக இந்த அரசு சொன்னதெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகளே என்று காட்டுகின்றன.
நீர்த்துப்போன மத்திய தகவல் ஆணையம்
நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்வது என்ற முயற்சியில் மத்திய அரசு இறங்கியது. அந்தத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருக்குமானால், மத்திய தகவல் ஆணையர், மாநிலத் தகவல் ஆணையர் இருவரது “ஊதியங்கள், படிகள், இதர விதிமுறைகள் மற்றும் பணிநிலைகள்” ஆகியவற்றில் மாற்றம் செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசு தனது கையில் எடுத்துக்கொண்டிருக்கும். இதற்கான வரையறுக்கப்பட்ட ஏற்பாடுகள் ஏற்கெனவே இருக்கின்றன என்கிறபோது, இந்த முயற்சி தகவல் உரிமைச் சட்டத்தின் செயல்முறையை நீர்த்துப்போகச் செய்கிற திட்டவட்டமான முயற்சியே இது என்று சமூகச் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். அரசு அதை எப்படிச் செய்கிறது என்பதற்கான கண்கூடான காட்சிதான் இந்த முயற்சி.
ஏற்கெனவே அரசு தகவல் ஆணையத்தை, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் குறைவான ஆணையர்களைக் கொண்டுதான் நடத்திக்கொண்டிருக்கிறது. காலிப்பணியிடங்கள் பற்றி விளம்பரப்படுத்துவதைக்கூட மீண்டும் மீண்டும் தாமதப்படுத்தி வந்திருக்கிறது. சட்டத்தில் திருத்தம் செய்கிற முயற்சியைப் பிறகு அரசு கைவிட்டது என்றாலும், இந்த அணுகுமுறையை, தகவல் உரிமைச் சட்டத்தில் நேரடியாக எந்தத் திருத்தத்தையும் செய்யாமலே அதற்குக் குறுக்கே நிற்கிற ஒரு உத்தியாகத்தான் பலரும் பார்க்கிறார்கள்.
தள்ளாடும் பல்கலைக்கழக நிதி மானியக் குழு
கடந்த ஜூலையில், இன்னமும் நிறுவப்படாத ஜியோ உயர்கல்வி நிறுவனத்திற்கு, “மிகுசிறப்புக் கல்வி நிறுவனம்” என்று சான்றளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அவ்வாறு சான்றளிக்கிறபோது ஏராளமான சலுகைகள் நிறுவனத்திற்குக் கிடைக்கும். கல்விக் களத்தை மத்திய அரசு எப்படி மாற்றியமைக்க முயல்கிறது என்பதற்கான ஒரு சாட்சித் துளிதான் இந்த நடவடிக்கை. கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் பல்கலைக்கழக அமைப்பின் ஒழுங்காற்றுக்கும், நிதி வழங்கலுக்குமான உயர்நிலை நிறுவனமான பல்கலைக்கழக நிதி மானியக் குழு (யுஜிசி) சட்டத்தை விலக்கிக்கொள்ளப்போவதாக அரசு அறிவித்தது.
யுஜிசியை ஒழித்துவிட்டு அதன் இடத்தில் ஒரு புதிய ஒழுங்காற்று அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வரைவை அரசு வெளியிட்டது. அதன் மீது ஆசிரியர்களும் கொள்கை வல்லுநர்களும் இதில் அக்கறையுள்ள மற்றவர்களும் கருத்துக் கூறுவதற்கு பத்து நாட்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற, கல்வியாளர்கள் பணியாற்றுகிற, ஒரு தன்னாட்சி அமைப்பான யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிற நிறுவனமாகும். அத்துடன், பல்கலைக்கழகங்களின் தரத்தை முன்னேற்றுவதற்கான பணிகளையும் அது மேற்கொள்கிறது. தற்போது கொண்டுவரப்படுகிற புதிய சட்டமுன்வரைவு, அதில் கூறப்பட்டுள்ள உயர்கல்வி அமைப்புக்குப் பல்கலைக்கழகங்களின் தரத்தைக் கண்காணிக்கிற பொறுப்பை மட்டுமே அளிக்கிறது. நிதி ஒதுக்கீடு அதிகாரம் அமைச்சகத்திடம் இருக்கும். யுஜிசியில் குறைந்தது ஒரு தன்னாட்சி நிறுவனத்திற்கான, சுயேச்சையாக முடிவெடுக்கிற இயல்புகளாவது இருந்தன. அமைச்சகம்தான் நிதி ஒதுக்கீடு செய்யும் என்கிறபோது, அரசியல்வாதிகள் புகுந்துவிளையாடுவதற்கு வழி செய்யப்படுகிறது.
ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன்
நன்றி: ஸ்க்ரால்.இன்
தமிழில்: அ. குமரேசன்