ஒரு பக்கத்தில், ரஃபேல் போர் விமானத்திற்கான கூட்டு ஒப்பந்த விவகாரத்தில், வணிகத்துக்கு அப்பாற்பட்ட நோக்கங்கள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதில் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனமும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் நிறுவனமும் ஈடுபட்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில், இந்தக் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், 2017இல் பிரெஞ்சு நாட்டு நிறுவனம், அனில் அம்பானியின் வேறொரு நிறுவனத்தில் சுமார் 40 மில்லியன் யூரோ முதலீடு செய்துள்ளது. பிரான்சிலும் இந்தியாவிலும் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள சட்டபூர்வ வணிக ஒழுங்குமுறை ஆவணங்களிலிருந்து இது தெரியவருகிறது. நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த, கொஞ்சமும் வருவாய் இல்லாதிருந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற அம்பானி குரூப் நிறுவனத்திற்கு இதன் மூலம் ரூ.284 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. அம்பானி நிறுவனம் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் (ஆர்ஏடீஎல்) என்ற தனது துணை நிறுவனத்தின் பங்குகளை டஸ்ஸால்ட்டுக்கு விற்றதன் மூலம் இந்த ஆதாயத்தை அடைந்திருக்கிறது.
இந்த ஆர்ஏடீஎல் பங்கு மதிப்பீடு இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே எப்படி நடந்தது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. ஒப்பந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெறாத, சொற்ப வருவாய் மட்டுமே உள்ள அல்லது வருவாயே இல்லாத, டஸ்ஸால்ட்டின் மையமான தொழிலுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாத நிறுவனத்திடமிருந்து கணிசமான பங்குகளை எதற்காக டஸ்ஸால்ட் வாங்க வேண்டும்? அதுவும் தெளிவாகவில்லை.
முற்றிலும் தனது சொந்தத் துணை நிறுவனமான ஆர்ஏடீஎல் நிறுவனத்தின் 34.7% பங்குகளை டஸ்ஸால்ட் ஏவியேசனுக்கு 2017-18 நிதியாண்டில் விற்பனை செய்ததாக, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பொது ஆவணங்களில் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஏடீஏஜி குழுமத்தைச் சேர்ந்தது இந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (அனில் திருபாய் அம்பானி குழுமம் என்பதன் சுருக்கமே ஏடீஏஜி). பங்குகள் விற்கப்பட்டதன் விதிகள், நிபந்தனைகள் என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஒவ்வொன்றும் 10 ரூபாய் நேர்முக மதிப்புள்ள 24,83,923 பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் தனக்கு 284 கோடியே 19 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
2017 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் 10 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என்றும், 6 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது என்றும் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் (ஆர்ஏடீஎல்) தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2016 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் வருவாய் எதுவும் இல்லை, நட்டம் 9 லட்சம் ரூபாய்.
இந்த ஏர்போர்ட் நிறுவனத்திற்கு குழுமத்திற்குச் சொந்தமான துணை நிறுவனங்களுடன் பங்குத் தொடர்பு இருக்கிறது. அந்தத் துணை நிறுவனங்கள் பெரும்பாலானவை நட்டத்தில்தான் இயங்குகின்றன. 2009ல் மஹாராஷ்டிரா மாநில அரசால் 63 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்ட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள் அவை. அந்தத் திட்டங்களில் முன்னேற்றம் இல்லாததால், நிறுனத்திடம் ஒப்படைக்கப்பட்ட விமான நிலையங்களுக்கான ஒப்பந்தங்களை விலக்கிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் சிலரும் அமைச்சர்களும் தெரிவித்ததாக ‘பிசினஸ் ஸ்டேண்டர்டு’ பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த விமான நிலையங்களுக்கான பணி ஒப்பந்தங்களிலிருந்து விலகிக்கொள்ள நிறுவனமும் விரும்பியதாகக் கூறப்பட்டது. ஆனால், 2017இல் வந்த ஒரு செய்தி, நிறுவனம் தனது மனதை மாற்றிக்கொண்டுவிட்டது என்று தெரிவித்தது.
வேடிக்கை என்னவென்றால், ஆர்ஏடீஎல் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், விமான நிலையங்களுக்கான பணி ஆணைகளைத் திரும்பப்பெற தயாராகிக்கொண்டிருந்த மஹாராஷ்டிரா ஏர்போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் (எம்ஏடீசி), அதே ஆண்டில் இன்னொரு குழுமத்துக்கு 289 ஏக்கர் நிலத்தை வேகமாக ஒதுக்கீடு செய்தது.
டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்தின் 2017 ஆண்டறிக்கையில், ஆர்ஏடீஎல் நிறுவனத்தில் 34.7 சதவீதப் பங்குக் கூட்டு உட்பட, ‘பட்டியலில் வராத’ பங்குப் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “விமான நிலைய உள்கட்டுமானங்களை நிர்வகிப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் 35 சதவீதப் பங்குகளைப் பெற்றதன் மூலம், 2017ல், இந்தியாவில் நமது இருப்பை நாம் வலுப்படுத்தினோம்,” என்று அந்த ஆண்டறிக்கை கூறியது.
விநோதமான முறையில், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஏர்போர்ட்ஸ் ஆண்டறிக்கையில், டஸ்ஸால்ட் நிறுவனம் தற்போது 34.79% சாதாரணப் பங்குகளைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பங்குகளுடன் இணைக்கப்பட்ட விதிகள், உரிமைகள் பற்றிய பகுதி அந்த அறிக்கையில் காலியாக விடப்பட்டுள்ளது.
இந்தப் பங்குப் பரிமாற்றம் பற்றிய விவரம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆண்டறிக்கையில், ‘குறிப்பு 43’ என்ற தலைப்பில், விதிவிலக்கான அம்சங்கள் என்ற பிரிவின் கீழ் புதைக்கப்பட்டுள்ள தகவல்களுடன் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிட்., முதலீட்டு விற்பனை மூலம் கிடைத்த லாபம்” ரூ.284.19 கோடி என்று அதில் இருக்கிறது.
டஸ்ஸால்ட் அறிக்கையில், ஆர்ஏடீஎல் பத்திரங்களின் மொத்தப் புத்தக மதிப்பு 39,962,000 யூரோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, ரஃபேல் விமானங்களுக்காக ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டாக ஏற்படுத்திய டீஆர்ஏஎல் நிறுவனத்தின் பங்குப் புத்தக மதிப்பு வெறும் 962,000 யூரோ மட்டுமேயாகும். அது அதிகரிக்கக்கூடும் என்று அனுமானிக்கலாம்.
டஸ்ஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் எரிக் டிராப்பியர் அண்மையில் ‘எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அனில் அம்பானி குழுமத்துடனான கூட்டுத் தொழிலாகிய டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் 70 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதில் டஸ்ஸால்ட் பங்கு 49% மட்டுமே.
பிரான்ஸ்சில் டஸ்ஸால்ட் ஏவியேசன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், இந்தக் கூட்டு நிறுவனத்தில் தனது பங்காக 22 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதுடன், அதற்கு 4 மில்லியன் யூரோ – இந்தியப் பண மதிப்பில் சுமார் 32 கோடி ரூபாய் – கடனாகக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அந்தப் பணம் டீஆர்ஏஎல் கூட்டு நிறுவனத்தால், மிஹான் (நாக்பூரில் உள்ள பல்நோக்குப் பன்னாட்டு விமான நிலையம்) பகுதியில் உள்ள விமானங்கள் நிறுத்தக்கூடத்திற்காகச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என்று, அனில் அம்பானி குழும வட்டாரத்தினர் ‘தி வயர்’ செய்தியாளரிடம் தெரிவித்தனர். டிராப்பியர் தனது பேட்டியில் ஆர்ஏடீஎல் நிறுவனத்தின் 35% பங்குகளை வாங்குவதற்குச் செலவிடப்பட்ட பணம் பற்றி எதுவும் சொல்லவில்லை.
நிலம் கையகப்படுத்தப்பட்டது எப்படி?
பிரதமர் நரேந்திர மோடி 2015 ஏப்ரல் 10ல் ரஃபேல் ஒப்பந்தம் பற்றி அறிவித்தார். அதே ஆண்டு ஜூலையில் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனம், மஹாராஷ்டிரா ஏர்போர்ட் டெவலப்மென்ட் கவுன்சில் அமைப்பிடம், நாக்பூர் நகரின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மிஹான் பகுதியில் தனக்கு நிலம் ஒதுக்குமாறு விண்ணப்பிக்கிறது. அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதம், 63 கோடி ரூபாய்க்கு அங்கே 289 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது.
பின்னர் அந்த நிறுவனம், ஒதுக்கப்பட்ட நிலத்தில் 104 ஏக்கரை மட்டும் எடுத்துக்கொள்ளப்போவதாகக் கூறியது. 2015 ஆகஸ்ட்டிலேயே இந்த நில ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டாலும், அதற்காகத் தர வேண்டிய நிலுவைத்தொகையை, அதற்காகக் கெடு நிர்ணயிக்கப்பட்ட பல தேதிகளைத் தாண்டி, 2017 ஜூலை 13 அன்றுதான் ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர்ஸ் செலுத்தியது.
ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஏற்படுத்தப்பட்டது 2015 ஏப்ரல் 24ல் – பிரதமர் மோடி ரஃபேல் ஒப்பந்தம் பற்றி அறிவித்த 14 நாட்களில். போர் விமானங்கள் தயாரிப்புக்கான உரிமமும் பாதுகாப்பு அமைச்சகத்தால் அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இது அரசு உருவாக்கியுள்ள வழிகாட்டல் நெறிகளை மீறி நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் தாக்கல் செய்த 2017ம் ஆண்டுக்கான ஆவணம், அதற்கு ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரிடமிருந்து, உள் நிறுவனங்களுக்கிடையேயான வைப்புத்தொகையாக 89 கோடியே 45 லட்சம் ரூபாய் வந்ததைக் காட்டுகிறது. ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் 34.79% பங்குகளை டஸ்ஸால்ட் நிறுவனம் வாங்கிய அதே ஆண்டில் இந்த வைப்புத்தொகை வந்துள்ளது.
இந்த நிகழ்வுப் போக்குகளிலிருந்து, ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரிடமிருந்து பெறப்பட்ட பணத்தை, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்கான ரூ.38 கோடி நிலுவையைச் செலுத்துவதற்கு ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. ஓராண்டுக்கு மேலாக நிலுவையிலிருந்த தொகை அது. ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் ஆவணத்தில், நிறுவனத்தின் “மொத்த மதிப்பில் அரிமானம் ஏற்பட்டுள்ளது” என்றும், ஆனால் தனது முதலீட்டாளர்களிடமிருந்து போதுமான நிதியாதரவு வருகிறது என்பதால் நிறுவனம் தொடர்ந்து இயக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 2017 நிதியாண்டில் 13 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் தெரிவித்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில், 27 கோடி ரூபாய் நட்டம் என்று பதிவு செய்திருந்தது.
சிஎன்பீசி செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் பேட்டியளித்த எரிக் டிராப்பியர், அனில் அம்பானி குழுமத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் தனது இந்தியக் கூட்டாளியாகத் தேர்வு செய்ததற்குக் காரணம், விமான நிலையத்திற்கு அருகில் நிலம் வைத்திருப்பதுதான் என்று கூறினார். ஆனால், ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஒத்துழைப்பது தொடர்பாக டஸ்ஸால்ட்டுடன் ரிலையன்ஸ் குழுமம் ஒரு உடன்படிக்கைக்கு வந்தபிறகுதான் மஹாராஷ்டிரா மாநில அரசு அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
ரிலையன்ஸ் – டஸ்ஸால்ட் கூட்டு நிறுவனமான டஸ்ஸால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் 2017ல் முறைப்படி தொடங்கப்பட்டது என்றும், ஆனால் இதற்கான முயற்சிகள் 2015 ஏப்ரலிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் டஸ்ஸால்ட் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில் 2018 ஜூலை 12இல் டீஆர்ஏஎல் தாக்கல் செய்த நிலப் பங்களிப்பு உடன்படிக்கையில், ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர், டீஆர்ஏஎல், டஸ்ஸால்ட் ஏவியேசன் ஆகிய நிறுவனங்களுக்கிடையேயான ஒரு துணைக் குத்தகை உடன்படிக்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின்படி, கூட்டு நிறுவனமான டீஆர்ஏஎல், அதற்குக் குத்தகையாக வழங்கப்பட்ட 31 ஏக்கர் நிலத்திற்கான முனைமமாக (பிரீமியம்) 22 கோடியே 80 லட்சம் ரூபாயைச் செலுத்தும். இந்தக் கடன் தொகை, நிறுவனத்தின் 22 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளுக்கான “ரொக்கமில்லா பரிமாற்றம்” என்று மாற்றப்படும். ஆகவே, மஹராஷ்டிரா மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம், இந்தக் கூட்டு நிறுவனத்தில் ரிலையஸ்சின் பங்குத்தொகைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக டஸ்ஸால்ட் தனது பங்குத்தொகையாக 21 கோடியே 9 லட்சம் ரூபாயை ரொக்கமாகக் கொடுத்திருக்கிறது.
இந்த நிலக் குத்தகை பற்றியும், ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்துடன் டஸ்ஸால்ட்டுக்கு உள்ள விரிவான வணிக ஏற்பாடுகள் குறித்தும் தகவல்கள் தருமாறு டஸ்ஸால்ட், ரிலையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களிடமும் ‘தி வயர்’ சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் டஸ்ஸால்ட்டின் முதலீட்டுக்கான மதிப்பீடு பற்றிய தகவல்களும் கேட்கப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து வரும் பதில்களின்படி இக்கட்டுரை விரிவுபடுத்தப்படும்.
புதிய தகவல்: ‘தி வயர்’ செய்திக் கட்டுரை வெளியான 24 மணி நேரத்திற்கும் கூடுதலான காலத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு செய்தியறிக்கையில், ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமம் – டஸ்ஸால்ட் முதலீட்டிற்கும் ரஃபேல் ஒப்பந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. செய்திக் கட்டுரையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
ரோகிணி சிங், ரவி நாயர்
நன்றி: தி வயர்
https://thewire.in/political-economy/inactive-anil-ambani-company-made-rs-284-crore-profit-with-dassault-investment
தமிழில்: அ. குமரேசன்
But no reliable evidences from investigative journalists so far. Hopefully quality news agencies will bring out some clarity like The Hindu did in case of Bofors.
Very comprehensive and easy to understand