இந்த ஆண்டு கர்நாடகா இதை இரண்டாவது முறை செய்திருக்கிறது. 2018 மே தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒன்றாக சேர்ந்து குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுக்கொண்டது எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கான முதல் பங்களிப்பாகும். இந்த வாரம், கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் 5 இடங்களில் 4இல் வெற்றி பெற்றது இரண்டாவது பங்களிப்பாகும்.
உடனடித் தேவை
ஒருங்கிணைப்புக்கான எதிர்க்கட்சிகளின் தேடலில் அவசரத்தன்மை, உத்வேகம் மற்றும் சாத்தியமாகக்கூடிய நோக்கத்தை கர்நாடகா ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்று ஒரே குடையின் கீழ் அணி திரண்டால் அதைச் சந்தர்ப்பவாதம் என இனியும் யாரும் எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டப்போவதில்லை. மாறாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜக) அரசின் அரசியல் நோக்கிலான பணமதிப்பு நீக்க நடவடிக்கை, அவசரமாக ஜிஎஸ்டியை அமல் செய்தது, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்தத் தவறியது, இப்போது முளைத்துள்ள ரபேல் பிரச்சனை ஆகியவை காரணமாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது இயல்பானதாக ஆகியுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம், 2019 பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாகத் தீவிரத்தன்மை பெற்றுள்ளது. கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது எதிர்வரும் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றியைக் கைக்கு எட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளன.
காங்கிரஸ் + மதச்சார்பற்ற ஜனதா தள வெற்றி எல்லோரும் பார்க்கும் வகையில் உள்ளது. இதை விரைவாகச் செய்வது நல்லது. மாநிலத்தில் அண்மையில் தேர்தல் நடைபெற்ற 5 இடங்களில் 4இல் இந்தக் கூட்டல் கணக்கு பலன் அளித்திருக்கிறது. ஆனால் வாக்கு வித்தியாசம் இரு கட்சிகளின் தனிப்பட்ட வாக்குகளின் கூட்டுத்தொலகையைவிட அதிகம் உள்ளதையும் தேர்தல் உணர்த்துகிறது. காங்கிரஸ் + மதச்சாரபற்ற ஜனதா தளம் என்பது வெற்றி + பெரிய வாக்கு வித்தியாசம் என்பதை உணர்த்துகிறது. கர்நாடகாவில் பாஜகவின் முந்தைய ஆளும்கட்சிகான வாக்குகள் திசைமாறியிருப்பதையும் இது உணர்த்துகிறது. முடிவெடுக்க முடியாமல் இருந்தவர்கள் காங்கிரஸ் – மதச்சாரபற்ற ஜனதா தளம் பக்கம் தாவியதை இது உணர்த்துகிறது. இதே போக்கை வரும் தேர்தலிகளிலும் எதிர்பார்க்கலாம்.
எச்சரிக்கை தேவை
இங்குதான் இடர் உள்ளது. இதை ஆபத்து என்றும் சொல்லலாம். தேர்தலில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ள பெரிய அரசியல் கட்சி என்ன செய்யும்?
அந்தப் பெரிய கட்சி, தத்துவவாதியாக, அரசியல் தத்துவவாதியாக இருந்தால், “என்னுடைய நேரம் முடிவுக்கு வருவது போல தோன்றுகிறது. நான் மீண்டும் வெற்றி பெற போராட வேண்டும், ஆனால் தோல்வி வந்தால் அதையும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூற வேண்டும். ஆனால் இந்த கட்சி தத்துவ நோக்கம் கொண்டிருக்கவில்லை. அது உயிரி ரசாயனம் சொல்வதைச் செய்கிறது. தன் ஆயுதக் கூடையிலிருந்து துருப்பிடித்த பழைய ஆயுதத்தை எடுக்கிறது. மக்களைப் பிளவுபடுத்துதல் என்பதே அந்த ஆயுதம். ராமர் கோயில் கோஷத்தைப் புதுப்பிப்பது, பெயர் மாற்றும் அரசியலை (அலகபாத் – பிராயாகை, பைசாபாத் – அயோத்தி) முன்னெடுப்பது, சபரிமலை சனாதானிகளுக்குப் பெரிய அளவில ஆதரவு கொடுப்பது ஆகியவையும் இதில் அடங்கும். தீவிரவாத அமைப்புகள் ஆயுதங்களைப் பட்டை தீட்டிக்கொண்டிருக்கின்றன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
இந்த ஆயுதங்கள் பலன் அளிக்குமா? இவை பலன் தராது என நினைத்துக்கொள்ளக்கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் இல்லை. பிளவுபடுத்துதல் என்பது ஆபத்தான ஆயுதம், இது குறி தவறாமல் தன் இலக்கை அடிக்கும் எனும் கணிப்பில் செயல்பட்டாக வேண்டும். ஆக, இதை எப்படி எதிர்கொள்வது?
முதலில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் தீவிரமாக வேண்டும். கர்நாடகாவின் தெளிவான முடிவு எதிர்க்கட்சிகளுக்கான தூண்டுகோலாகும். இது முக்கியமானது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் காங்கிரஸ் உடன்பாடு செய்துகொள்வதற்குத் தாமதமாகிவிடவில்லை என நம்புகிறேன். அவர் வெறும் தலித் தலைவர் மட்டும் அல்ல. தவறுகள் மற்றும் தவறான காய் நகர்த்தல்களை மீறித் தான் ஒரு உறுதியான தலைவர் என்பதை உணர்த்தியிருக்கிறார். தனது தாக்கத்தை முடக்கக்கூடிய ஆற்றல் கொண்ட அரசியல் சக்தியை எதிர்த்து இப்போது அவர் போரிட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு உரிய மரியாதை அளித்து காங்கிரஸ் கட்சி தன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இதே போன்றவர்தான். அவரும் வெறும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் மட்டும் அல்ல. மத்திய அரசின் நிழலின் கீழ், அவர் தாக்குப்பிடித்திருப்பது அதிசயம் என்றே சொல்ல வேண்டும். ஜனநாயக உறுதியின் அதிசயம்.
இதேபோல, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்னாயக், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா ஆகியோருடனும் உடன்பாடு தேவை. இவர்கள் வெறும் காய்கள் அல்ல, சக்தி வாய்ந்த சதுரங்க ராஜாக்கள். சிதறும் பாஜக எதிர்ப்பு வாக்கு ஒவ்வொன்றும் பாஜகவுக்கான வாக்காகும்.
ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார்? நாம் தவிர்க்க முடியாத தேசத்தின் பிளவுபடும் அரசியலின் பிரதிபலிப்பாக அவர் இருக்கிறார். அவரும், சரத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்தபோது, ஜெயபிரகாஷ் நாராயணின் சீடர்களின் இயல்பாக ஒன்றிணைவாக அது அமைந்தது. பீகார் தலைவர் அடித்த பல்டியால் தீவிர அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சிக்கு இதை மறப்பது எளிதாக இருக்காது. என்றாலும், தனக்கான இடத்தை விட்டுக்கொடுக்காமலே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருடனான உறவைத் தொடர முடியும் என்றால், , காங்கிரசின் இளம் துருக்கியர்களின் பழைய சோஷியலிச ஜனநாயகவாதி மரபணு கொண்ட நிதீஷ் குமாருடன் இணைவதும் சாத்தியம்தான்.
இப்போதைக்கு அவருக்கும் காங்கிரசுக்கும் இடையே எந்தப் புரிதலும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், விரைவிலேயே மதச்சார்ப்பற்ற தன்மை எனும் கேள்வியின் அடிப்படையில் பாஜகவுடனான நிதிஷ் கூட்டணி முடிவுக்கு வரும் என நினைக்கிறேன். அந்த நாளுக்கு காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு இடையே ஒரு புரிதல் ஏற்படும் எனில், நேர் எதிர்க் கொள்கை கொண்டவர்களுடனும் காங்கிரஸுக்குப் புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜனநாயக ஒருங்கிணைப்பில் நாயுடு மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்குத் தலைவணங்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலினை நோக்கி அவர் செய்த சமிக்ஞைகள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் எனும் வழக்கிற்கு ஏற்ப இருக்கின்றன. இதை காங்கிரஸ் புத்திசாலித்தனமாக கவனிக்க வேண்டும்.
கேரளாவில்
2019இ ல் கேரளாவைக் குறிப்பாக கவனிக்க வேண்டும். கேரள சட்டமன்றத் தேர்தல் என்று வரும்போது, இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி நேர் எதிரானவையாகும். ஆனால், மக்களவையில் பாஜக – தேஜகூ கூட்டணியை எதிர்கொள்வது என்று வரும்போது, அதிக வேறுபாடு இல்லை. அதில் கேரள காங்கிரஸ் எம்பிகளும் இடதுசாரி எம்பிகளும் ஒன்றாக இருக்கின்றனர். ஆனால், சபரிமலை பிரச்சினைக்குப் பின் நிலைமை மாறிவிட்டது.
சபரிமலை பிரச்சினைக்கு முன் சாத்தியமில்லை என கருதப்பட்டது, இப்போது அவ்வாறு இல்லை என மாறியிருப்பதோடு, சாத்தியம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதாவது பாஜக எல்லா இடங்களிலும் போட்டியிடுவது, பல இடங்களில் கடும் போட்டியாக இருப்பது ஆகியவை நடந்துவிடக்கூடும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்திருக்கும்போது, அது எக்குத்தப்பான அதிர்ஷ்டத்தில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.
பாஜக ஆதரவாளர்களுக்கு நல்ல செய்தி இது என்றாலும், மற்றவர்களுக்கு பாதகமானது என்பதால், அவர்களின் தேர்தல் உத்தியில் மறு ஆய்வுக்கான தேவையை ஏற்படுத்தும். கேரளாவில் இப்போது, பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிர்ஸ் கூட்டணி அனுமதிக்க முடியாது. இடப் பகிர்வு ஏற்பட்டாக வேண்டும். காங்கிரஸ் நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, முன்முயற்சி எடுத்து கேரளாவில் இடதுசாரிகளை நோக்கிக் கை நீட்ட வேண்டும். இடதுசாரிகள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், வரலாற்றுத் தேவை காரணமாக இப்போது, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி போல, ஒன்றுக்கு ஒன்று தவிர்க்க இயலாத கட்சியாக உணர வேண்டும். சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத் ஆகியோர், நம் காலத்து சுந்தரய்யா, நம்பூத்ரிபாடாகச் செயல்பட்டு, இதை மறு உருவாக்கம் செய்ய வேண்டும்.
‘உடைந்த பாகங்களை இணைத்தல்”
தேர்தல் உத்திகள் ஒருபுறம் இருக்க, ஜனநாயக எதிர்க்கட்சிகளின் இப்போதைய தேவை, கூட்டணிக் கணக்குகளை கடந்த கொள்கை அல்ஜீப்ராவாகும். அல்-ஜபுர் என்றால் அரேபிய மொழியில் உடைந்த பகுதிகள் ஒன்றாவது. மக்களின் அடிமட்டத் தேவைகள் குறித்து, குறிப்பாக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தேவை குறித்து அவசர கவனம் செலுத்தியாக வேண்டும்.
தேஜகூ புராணக் கதைகளை பயன்படுத்தினால் எதிர்க்கட்சிகள் உண்மையான நோய்க்கூறுகளைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். அவர்களின் சமூக பொருளாதார பலவீனங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை விளக்கியாக வேண்டும். சர்வதேசத் தன்மையுடன் அவர்களுக்கு அளிப்படும் கவனச் சிதறல்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். இதுதான் இப்போது நடைபெறத் துவங்கியிருக்கிறது.
காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்து, விவசாயிகளுக்கு ஆதரவான, தொழிலாளர் வறுமை போக்கும் வகையிலான செயல்பாட்டில் கவனம் செலுத்தினால், பிரிவினைவாத சக்திகளையும், வெற்று கோஷங்களையும் முறியடித்து காங்கிரஸ் + கூட்டணிகள் என்றால் வெற்றி + பலன் எனும் நிலையை உண்டாக்கலாம்.
தங்கத் திருகாணிகளும் வைர கீல்களும் கொண்டு பூட்டப்பட்ட கதவுக்கான திறவுகோலாகத் தென்னகம் அமையலாம். குறைந்தது இன்னும் பத்தாண்டுகளுக்கு அது இந்தப் பங்கினை ஆற்றலாம்.
ஆனால் ஆட்சி மாற்றம் அல்லது தலைமை மாற்றத்தைவிட, புதிய அரசியல் சக்தி தேவை என்பதுதான் முக்கியம். இந்தியா அரசியலைக் கண்டு அலுத்துவிட்டது. அதற்குத் தேவை புதிய அரசியல்வாதிகள் அல்ல. புதிய அரசியல். பாஜக அல்லாத இந்தியா அல்ல, அச்சம் நீங்கிய, ஊழல் அற்ற இந்தியாதான் நமக்குத் தேவை.
கோபாலகிருஷ்ண காந்தி
கோபாலகிருஷ்ண காந்தி, முன்னாள் அரசு அதிகாரி, அரசியர் விமர்சகர், மற்றும் முன்னாள் ஆளுநர்.
நன்றி: தி இந்து
https://www.thehindu.com/opinion/lead/the-algebra-of-opposition-unity/article25457703.ece